Categories
Uncategorized

ஃபேஸ்புக்கும் பெர்ஷனலும்

Free Download WordPress Themes and plugins.

ஃபேஸ்புக்கும் பெர்ஷனலும்

FACEBOOK FACEBOOK
GOTTA CHECK MY FACEBOOK
GOTTA TAKE ANOTHER LOOK
NOTHING NEW
I AM HOOKED
WHAT TO DO
HIT REFRESH

FACEBOOK FACEBOOK
GOTTA CHECK MY FACEBOOK
GOTTA CREEP ON ALL MY FRIENDS
EVERY DAY
THERE’S NO END
IT’S THE FACEBOOK WAY

LIKE A POST
POKE A FRIEND,, ,,,,,,,,,,
FRIEND REQUEST

என்ற வரிகளை கத்திக் கொண்டிருந்த பெர்ஷனலின் முன்னே ” ஐய்!என்னை பத்திதான் பாடுறியா?”, என்றவாறு வந்து குதித்தது ஃபேஸ்புக்.

தன் முன்னே குதித்த ஃபேஸ்புக்கை பார்த்த பெர்சனல் “என்னை ஒரு நிமிஷம் கூட பெர்சனல் ஸ்பேஸ் கொடுத்து நிம்மதியா இருக்க விட மாட்டியா?”, என அலுத்துக் கொண்டது.

“இதோ பாருடா! இவங்க ஃபேஸ்புக்ல தும்முறதை கூட ஐ ஆம் தும்மிங் அப்படின்னு போஸ்ட் போட்டு பலவிதமான எமோஜி வாங்குவாங்களாம்… நாம வந்து ஒரு வார்த்தை கேட்டவுடனே ஃபேஸ்புக்கால் என்னுடைய பெர்சனல் ஸ்பேஸ் கெட்டதுன்னு அதுக்கு ஒரு போஸ்ட் போடுவாங்களாம். என்ன ஒரு கொடுமையான உலகம்”, என பெர்சனலை பார்த்து ஃபேஸ்புக் தன் நாடியில் கையை வைத்து நொடித்துக் கொண்டது.

தான் பேசிய பேச்சுக்கு பெர்சனல் ஏதாவது பதில் தரும் என்று சிறிதுநேரம் எதிர்பார்த்த ஃபேஸ்புக் எவ்வித ரியாக்சனும் இல்லாமல் போக “என்னாச்சு? ஏன் இவ்வளவு சோகமா இருக்க?”, என அக்கறையுடன் வினவியது.

ஃபேஸ்புக்கின் கேள்வியில் அதனை முறைத்த பெர்சனல் “இதோ! இப்ப சொல்றியே எல்லாத்தையும் நான் வந்து உன் தலையில கொட்டுவேன். அதுக்காக ஏகப்பட்ட ஏமோஜி அப்படின்னு சொல்லிட்டு அதுதான் எனக்கு கடுப்பாகுது”, என கோபத்தில் கத்தியது. “பேபி!இதுல கத்துறதுக்கு என்ன இருக்கு? சொல்லப் போனா நீ போன வாரம் சுத்தி வெச்சு உடைக்கிற மாதிரி செஞ்சு இட்லி போட்டோ போட்டப்ப நான் உனக்கு எம்புட்டு லைக் வாங்கி தந்தேன்…

அதுல எத்தனை ஹாஹாஹா எமோஜி வந்துச்சு. அதை பார்த்து நீ சந்தோஷப்பட்டதானே!”, என ஆறுதல் அளிக்கும் விதமாக பெர்சனலின் தோளில் ஃபேஸ்புக் கையை போட்டது.

“ஓ! என்னுடைய இட்லியை நான் கஷ்டப்பட்டு உடைச்சது அவங்களுக்கெல்லாம் சிரிப்ப கெளப்பி விட்டிருச்சு. அது எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா?”, என பெர்சனல் மீண்டும் குமுறியது. “எல்லாத்தையும் என்கிட்ட கொட்டவேண்டியது. பிறகு அதுக்கு அவங்க இப்படி போட்டுட்டாங்க, இவங்க இப்படி போட்டுட்டாங்கன்னு என் உசுரையே எடுக்க வேண்டியது”, என தன்னுடைய மைண்ட் வாய்ஸில் புலம்பிக்கொண்ட ஃபேஸ்புக் அது வெளியே தெரியாத வண்ணமாக தன்னுடைய முகத்தை சோகமாக வைத்துக் கொண்டது.

“அப்படி இல்லை பேபி! நீ போட்டதைப் பார்த்து ஐயோ நம்ம வீட்ல பரவாயில்லை ஓரளவு நல்ல சமையல் கிடைக்குது அப்படின்னு அவங்க எல்லாம் சந்தோஷப்பட்டாங்க. அந்த சந்தோசத்தைதான் ஸ்மைலி போட்டு உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டாங்க”, என பெர்சனலை சமாதானப்படுத்திய ஃபேஸ்புக் “இதுக்கே மார்க் கிட்ட சொல்லி நம்மளோட மதிப்பு மவுசை இன்னும் ஏத்தி விடனும்”, என்று தன்னுடைய ரிமைண்டர் டைரியில் நோட் செய்துகொண்டது.

ஃபேஸ்புக் செய்த சமாதானத்தில் பெரிதாக மனதை திருப்தி படுத்திக் கொள்ளாத பெர்சனல் “அது என்னமோ! உன்னை தலைமுழுகி விடணும்னு நானும் பலவகையில் யோசிக்கிறேன்”, என உரைத்ததும் ஃபேஸ்புக் உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டது.

“இப்ப என்னத்தை சொல்லிட்டேன்னு நீ சிரிக்குற?”, என்ற பெர்சனலின் கோபத்தில் “கொஞ்சம் பொறு சிரிச்சி முடிச்சிட்டு வர்றேன்”, என மீண்டும் தன்னுடைய சிரிக்கும் வேலையை தொடர்ந்த ஃபேஸ்புக் ஏறத்தாழ 15 நிமிடங்கள் கழித்தே நிமிர்ந்து அமர்ந்தது. “இப்ப நீ மனசுல நெனச்சதை இன்னும் பத்தே செகண்ட்ல என்னோட மூஞ்சியிலே வந்துதான் எழுதுவ… அதை நினைச்சுதான் எனக்கு ஒரே சிப்பு சிப்பா வந்துச்சு”, என மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட்டது.

ஃபேஸ்புக் கூறியது உண்மையானாலும் அதனை ஏற்றுக்கொள்ள பெர்சனலின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஃபேஸ்புக்கை எதிர்த்துப் பேசும் நோக்கத்துடன் “நான் கடைசியா போட்டுட்டு போறதுக்காக வரேன். நிறைய பேர் என்னை காணோம்னு தேடுவாங்க இல்லை அதுக்காகதான்”, என ஒப்புக்கு சப்பாகக் கூறி வைத்தது.

“பிறகு ஏன் போனவாரம் யாருக்கும் புரியாத மாதிரி ஒரு போஸ்ட் போட்ட?”, என ஃபேஸ்புக் வினவிய உடன் “அவங்க என்கிட்ட ஒரு மாதிரி பேசிட்டு இன்னொருத்தர்கிட்ட போய் வேற மாதிரி பேசி இருக்காங்க. அதனாலதான் அப்படி போட்டேன்”, என பெர்சனல் தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தது.

“அவங்களை மாதிரியே எல்லாரும் பேசுறாங்கன்னா என்ன பண்ணுவ?”, என்ற அடுத்த கேள்வி வந்தவுடன் “நான் உன்னை விட்டு போறேன் அப்படிங்கிறதனால நீ என்னை பல வழியில் குழப்பி இதே ஃபேஸ்புக்ல குடி வைக்குறதுக்காக முயற்சி பண்ற”, என பெர்சனல் ஃபேஸ்புக்கை நோக்கி குற்றம் சாட்டியது.

“நான் இருக்க வைக்கலைனாலும் நீ உடனே கிளம்பிடுவியா? அதெல்லாம் கிளம்ப மாட்ட… போனவாரம் உன் வீட்டு டிரைனேஜ் அடைச்சிடுச்சுங்குறது முதல்கொண்டு உலகத்துக்கே தெரிவிச்ச ஆளுதானே நீ! நீயாவது என்னை விட்டுட்டு இருக்கிறதாவது?”, என ஃபேஸ்புக் வீர வசனம் பேசியது.

ஃபேஸ்புக்கின் வீர வசனத்தை கேட்ட பெர்சனல் தன்னுடைய முகத்தை தூக்கி வைத்துக்கொண்டதும் உண்மையை சொன்னா உலகம் ஒத்துக்காது என நொந்து கொண்ட ஃபேஸ்புக் “இப்ப என்ன ரீசனுக்காக நீ என்னை விட்டுட்டு போகணும்னு துடிக்கிற. போகப்போறேன்னு அடிக்கடி போறேன் போறேன்னு சொல்லிட்டு பிலிம் காட்டாம உருப்படியா போனாலாச்சும் நான் நிம்மதியா இருப்பேன். என்ன விஷயம்னு சொல்லித் தொலை”, எனக் கதை கேட்கும் ஆர்வத்துடன் பெர்சனல் முன்னே அமர்ந்து கொண்டது.

“நான் போன வாரம் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி எல்லாரும் லைக் போட்டாங்களே ஒரு போட்டோ, அது உனக்கு ஞாபகம் இருக்கா?”, என பெர்சனல் கேட்டவுடன் ஃபேஸ்புக் “அந்தக் கருமத்தை நான்தானே என் மூஞ்சில வாங்கிகிட்டு உலகம் எல்லாத்துக்கும் காட்சிப்படுத்தி ஆகா ஓகோன்னு நீ பலவித ஆப் யூஸ் பண்ணி டச்சப் எல்லாம் பண்ணி போட்ட போட்டோவுக்கு புகழ் ஏத்தி விட்டேன்… அந்த கொடுமைக்கு இப்ப என்ன வந்துச்சு?”, என ஆதங்கத்துடன் கேட்டது.

“அந்தப் போட்டோவை நிறைய பேர் டவுன்லோட் பண்ணி வச்சிருக்காங்க”, என பெர்சனல் அலுத்துக் கொண்டதும் “அவங்க டவுன்லோட் பண்ணுவாங்கன்னு தெரியாமதான் நீ போட்டோவை போட்ட… இதை நான் நம்பணும்”, என முகத்தில் அடித்தது போல் கேட்டது. “அப்புறம் என்ன என்ன கருமம் எல்லாம் இருக்கோ எல்லாத்தையும் சொல்லி தொலை”, என மேலும் பேச தூண்டிய ஃபேஸ்புக்கை பெர்சனல் கொலைவெறியுடன் நோக்கியது.

“முன்னபின்ன தெரியாதவங்க எல்லாம் நான் கொடுத்த டீடெயில்ஸ், அப்பப்ப நான் போட்ட போஸ்ட் வச்சிக்கிட்டு என்கிட்ட இன்பாக்ஸில் வந்து பேசுறாங்க… பேசுனா பிளாக் பண்ணிட்டு போ. அதை எதுக்கு என்னையே விட்டுப் போறேன்னு சொல்ற”, என அந்த பந்தையும் ஃபேஸ்புக் பவுண்டரிக்கு அடித்து தள்ளியது. இதில் கோபமான பெர்சனல் “நீ கொஞ்சம் நகர்ந்து வழி விடுறியா? நான் ஃபேஸ்புக்கை விட்டுப் போறேன்னு இப்ப போஸ்ட் போடனும்”, என முறுக்கிக் கொண்டது. தன் தலையில் அடித்துக் கொண்ட ஃபேஸ்புக் “நான் கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு நீ போஸ்ட் போடு”, என மிகத் தீவிரத்துடன் உரைத்தது.

சரி என்ற பெர்சனல் ஃபேஸ்புக்கின் முகத்தை பார்த்தவாறு திரும்பி அமர்ந்ததும் தன்னுடைய கேள்விக்கணைகளை ஃபேஸ்புக் ஆரம்பித்தது. “நீ செஞ்ச இட்லி மோசமா இருந்தா அதை உன்னோட ஃபேஸ்புக் பேஜில் போடணும்னு உனக்கு யார் சொல்லி கொடுத்தாங்க?”, என்ற முதல் கேள்வியை வீசியது. “அது எனக்கு போடணும்னு தோணுச்சு… அதான் போட்டேன்”, என்ற பதில் வந்தவுடன் அடுத்த கேள்வி அம்பாக சீறிப் பாய்ந்தது.

” ஃபேஸ்புக் வச்சிருந்தா உன்னோட போட்டோவை போடணும்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா?”, என்றதும் இல்லை என மெல்லிய குரலில் அடுத்த பதில் வந்தது. “உன்னோட சொந்த விஷயத்தை எல்லாம் உன் இஷ்டத்துக்கு கொட்டிட்டு அது எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சுன்னு நீ புலம்புறது உனக்கு சரின்னு படுதா?”, என்ற கேள்விக்கு பெர்சனலிடம் எவ்வித பதிலும் இல்லை.

அதன் பதிலை எதிர் பார்க்காமலேயே ஃபேஸ்புக் அடுத்த கேள்வியை கேட்டது. “ஃபேஸ்புக் அப்படின்னா என்ன அர்த்தம்? அதை கொஞ்சம் சொல்லு”, என்றதும் முகபுத்தகம் என பெர்சனல் தெளிவாக பதில் உரைத்தது. “இங்கிலீஷ்ல என்ன அர்த்தம் வரும்? அதே அர்த்தம்தானே வரும்”, என ஃபேஸ்புக்கே கேள்வியையும் கேட்டு பதிலையும் சரி பாா்த்துக்கொண்டது. ஆமாம் என்று தலையசப்பை பெற்றவுடன் “ரொம்பத் தெளிவா முகப்புத்தகம் அப்படின்னு ஏன் கொடுத்து இருக்காங்கன்னு தெரியுமா? இது பவுடர் போட்டு மேக்கப் பண்ணி வச்சிருக்கிற முகத்தை மட்டும்தான் காமிக்கிற புத்தகம். அழுக்கோ, அழகோ, ஆத்திரமோ, அமைதியோ அதையெல்லாம் அடக்கி வச்சிருக்கிற நம்ம அகத்தை இந்த புத்தகத்தில் காமிக்கவும் கூடாது… அடுத்தவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவும் கூடாது. அதனாலதான் பொதுப்படையான வெளி விஷயங்களை மட்டுமே பேசணும்.

எங்கோ நடக்கிற ஒரு விஷயத்துக்கு நீ ஒரு போஸ்ட் போட்டுட்டு போனவுடனே உன்னோட கடமை முடிஞ்சு போகாது. அது வெளி உலகத்துக்கான உன்னோட போலி பிம்பம் மட்டுமே! உன் மனசுக்குள்ள இருக்கிற அந்த உண்மையான பிம்பத்தை நீ எப்படி வெளியில காட்டுகிறது இல்லையோ, அதே மாதிரிதான் எல்லாரும் இருப்பாங்க. இப்ப ஃபேஸ்புக்கை விட்டு நீ போக போறது உறுதியாய் இருந்துச்சுன்னா காலைல கண்ணைத் திறப்பதற்கு முன்னாடியே என் மூஞ்சில முழிக்காம ஒரு பத்து நிமிஷம் உன்னால இருக்க முடியுமான்னு நீ முயற்சி பண்ணி பாரு”, என்ற ஃபேஸ்புக் இறுதியாக பெர்சனலை பார்த்து “அகத்தை எனக்கு அடிமையாக்காமல் என்னோட முகத்தில முழிக்கிற திறமை உனக்கு இருந்துச்சுன்னா தேவையில்லாம நீயும் புலம்பத் தேவையில்லை… நானும் புத்தி சொல்ல தேவையில்லை”, என்றவாறு சென்றது அடுத்த பத்து நிமிடங்களில் பெர்சனல் பதிந்த “ஃபேஸ்புக்கும் பெர்சனலும்” என்ற பதிவினை பார்த்து தன் தலையில் நங்கு நங்கென்று கொட்டிக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *