Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 1

Free Download WordPress Themes and plugins.

எபி 1
‘கெட்டிமேளம் கெட்டிமேளம்…’ என்ற குரலுடன் மேளச்சத்தமும் இணைந்து, இருமனதை இணைத்துவைக்கும் முயற்சியை இனிதே துவங்கியது.
சென்னையில் இருக்கும் அந்த பிரபலமான திருமண மண்டபத்தில் நிறைந்திருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, மகிழ்ச்சியும், எதிர்காலத்தை பற்றிய இன்பமான எதிர்பார்ப்பும் நிறைந்திருக்க வேண்டியவர்களோ…. ‘எந்நிலையில் இருக்கிறார்கள்?’ என்பதை அவர்களாலே அறியமுடியவில்லை.
அவர்கள் இருவரும் தங்களுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா என்பதை அறிய முயற்சித்துக்கொண்டிருக்கும் போதே அவர்களின் திருமணம் நடந்தேறிவிட்டது.ஏன் இவர்களின் மனநிலை இப்படி இருக்கிறது!?
மணமகன்… ‘ஹரி!’ என்று நெருக்கமானவர்களால் அழைக்கப்படும் ஹரிசரண், தற்கால இளையதலைமுறையின் வார்ப்பு. பெற்றோர் சொல்வது சரியாக,தனக்கு பிடித்ததாக இருந்தாலுமே அதை முதலில் ஏற்காது,எதிர்த்து பேசி, அட்டகாசம் செய்து, அடம்பிடித்து, அவர்களை ஒருவழியாக்கி, இறுதியில் போனால் போகிறது… என்று ஏற்றுக்கொள்பவன்.
பெற்றோரிடமிருந்து கட்டுபாட்டை அல்ல… வெறும் கண்காணிப்பை மட்டுமே விரும்புபவன். அதற்காக அவர்களிடம் பாசமில்லாதவன் என்றெல்லாம் இல்லை. ‘நல்லவன் பாதி… கெட்டவன் பாதி!’ கலந்து செய்த இக்காலத்து கலவை இவன்.
சென்னையில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில், படிக்கும் போதே ‘ப்ளேஸ்மென்ட்‘ஆனாவன்.வேலையின் பொருட்டு இவன் சென்னையிலும், இவனின் பெற்றோர் அவர்களின் சொந்த ஊரிலும் வசித்துவந்தனர். வேலையில் சேர்ந்து இரண்டாண்டுகள் முடியவிருக்கும் நிலையில்,அவனுக்கு பதவி உயர்வோடு, மூன்றாண்டுகள் ‘ஆன்சைட்’க்கு போகவேண்டிய சூழ்நிலை வந்தது.அந்த சூழ்நிலை தான் அவனின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது.
ஹரியின் அம்மா மல்லிகா,அவனின் கட்டுக்கடங்கா விருப்புக்கும் வெறுப்புக்கும் சொந்தக்காரர்.கணவருக்கும் மகனுக்கும் இடையே சிக்கி சின்னா பின்னமாகும் பாவப்பட்ட ஜீவன்! மகனின் தேவையை… விருப்பத்தை, அவன் அறியும் முன்பே அறிந்து, அதை அவன் கேட்கும் முன்பே அவனுக்கு கொடுப்பவர். இதனாலேயே அவனின் ஏகஎரிச்சலுக்கு ஆளாபவர்.
இப்போது இவர்,மகன் வெளிநாட்டிற்கு போனால் மூன்று வருடம் கழித்து தான் வருவான் என்பதால், அவனுக்கு ‘கல்யாணயோகம் எப்போது வருகிறது?’ என்பதை அறிய அவனின் ஜாதகத்தை தூசிதட்டி எடுக்க,அவனின் ஜாதக கட்டத்தில் இருந்த குரு, ஹரியை ஆசையாய் பார்த்து ‘ஐ லைக் யூ…!’என சொல்லி சிரித்து, தன்னாட்டத்தை இனிதே தொடங்கினார்.
ஹரிக்கு ‘குருதிசை’ வந்துவிட்டதாகவும், இப்போது அவனுக்கு கல்யாணம் செய்யாவிட்டால்…அவனின் ‘முப்பத்தைந்தாவது வயதில் தான் மீண்டும் திருமணயோகம் வரும்’ எனவும் ஜோதிடர் ஒரு குண்டை போட, கதிகலங்கிய மல்லிம்மா, மகன் இன்னும் மூன்று மாதத்தில் வெளிநாடு செல்லவிருப்பதால், அதற்குள் அவனுக்கு ‘திருமணத்தை முடித்துவிட்டு தான் மறுவேலை!’ என உறுதி எடுத்து களத்தில் இறங்கினார்…
அக்களத்தில் தான் அவர்களின் தொலைதூரத்து சொந்தமான ‘லக்ஷ்மி பிரியா’ அவரின் கண்ணில் சிக்கினாள். கல்லுரி படிப்பின் இறுதி செமஸ்டரில் இருப்பவள்.’மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும்!’ என்ற ஆசைதான் இவளின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கப் போகிறது.
பொதுவாக கல்யாண வீடுகளில் கூடும் சொந்தங்கள் மணமக்களை வாழ்த்துகிறார்களோ இல்லையோ… வம்பு பேச்சை நன்றாகவே வளர்ப்பார்கள். அப்படி வளர்ந்த பேச்சில் தான், மல்லிகாவும், சரளாவும்… சரளா லக்ஷ்மிபிரியாவின் அன்னை, தங்களின் பிள்ளைகளின் திருமணத்தை பேசி முடிவு செய்தார்கள்.
இருவருக்கும் தற்சமயம் தங்கள் மக்களுக்கு திருமணம் செய்விக்கும் எண்ணம் சிறிதும் இல்லையென்றாலும் சூழ்நிலை அப்படி அமைய,அதற்கு உண்டான சாதகபாதகங்களை அலசி ஆராய ஆரம்பித்தனர்.
ஹரி… ‘விளையாட்டுப்பையனை போல இருந்தாலும் மிகவும் பொறுப்பானவன்,அவனின் பொறுப்பில் இருப்பவர்களை மிகவும் பொறுப்பாய் பார்த்துக்கொள்பவன்.அவனை நம்பி யாராகயிருந்தாலும் தங்கள் பெண்ணை தாராளாகதிருமணம் செய்து தருவார்கள்….’ என மல்லிம்மா தன் மகனின் புகழ் பாட,
பிரியா… பொறுப்பானவளைபோல தெரிந்தாலும் இன்னும் வயதுக்கு உண்டான பக்குவம் இல்லாதவள்.அவளின் வயதும் மணமுடிக்க தோதானதாக இல்லை.அதனால் அவளுக்கு இன்னும் ஒரு மூன்று ஆண்டுகள் கழித்தே திருமணம் செய்ய இருப்பதாக சரளா தன் எண்ணத்தை கூறினார்.
‘வசதியான இடம் கைவிட்டு போகக் கூடாது!’ என்பதற்காக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல்,உண்மையை மறைக்காது சொன்ன அவரின் குணம் மல்லிம்மாவுக்கு பிடித்து போகவே எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடிக்க எண்ணினார்.
இப்போது தங்கள் மக்களுக்கு திருமணம் செய்வித்தால்,,தன் மகனுக்கு, தன்னாசைப்படியே குருபலன் போவதற்குள் திருமணம் முடித்தாற் போலவும் இருக்கும். பிரியாவுக்கு,அவளின் ‘பாரினில் மேற்படிப்பு படிக்கவேண்டும்!’ என்ற ஆசையும் நிறைவேறினாற் போலவும் இருக்கும்.அப்படியே ஒருவருக்கொருவர் துணையாக சேர்ந்திருந்தாற்போலும் இருக்கும்! என்று நிதர்சனத்தை மல்லிகா சரளாவுக்கு எடுத்து சொல்ல,சரளாவுக்கும் அவர் சொல்வது சரியாகப் படவே அவரும் மல்லிம்மாவின் சம்மந்தத்திற்க்கு சம்மதித்தார்.
அதன் பின் பொருத்தம் பார்ப்பது,பெண் பார்க்க,புடவை எடுக்க நாள் பார்ப்பது, திருமணத்திற்கு நாள் குறிப்பது… இப்படிப்பட்ட விஷயங்களில் கவனத்தை செலுத்திய இவர்கள்…. மிகமுக்கியமாக கவனிக்க, கருத்துக்கேட்ட வேண்டியவர்களை கணக்கில் கொள்ளவில்லை! எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகே விழா நாயகர்களுக்கு, தகவல் அறிவிக்கப்பட்டது.அதை கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
“ம்மா… என்னமா நினச்சிட்டிருக்க! நாளைக்கு எனக்கு பொண்ணு பாக்கபோறதை, பக்கத்து வீட்டு பையனுக்கு பொண்ணு பாக்கபோறதை போல காஷுவலா இப்ப வந்து சொல்ற! இதுக்கு தானா ஒரு வாரமா என்னை வரச் சொல்லி தொல்லை பண்ணிட்டு இருந்த? முதலில் என்கிட்ட ‘பொண்ணு பாக்கட்டா…’ன்னு ‘பர்மிஷன்’ கேட்காம, நீயே எல்லாத்தையும் முடிச்சிட்டு கடைசியில வந்து இன்பர்மேஷன் தர! இதெல்லாம் நல்லாவே இல்ல-ம்மா!” என எகிறி குதித்துக் கொண்டிருந்த ஹரியை ‘இதெல்லாம் எனக்கு சாதாரணம்!’ என அசல்டாய் பார்த்த மல்லிகா,
“நீ இருக்கும் பிஸில,எல்லாத்துக்கும் உன்கிட்ட கேட்டுட்டு இருக்க முடியுமா ஹரி? அதான் உன்னை தொல்லை பண்ண வேணாமேன்னு அம்மாவே எல்லா கஷ்டமான வேலைகளையும் பாத்துட்டு உன்னை ‘ஆன்டைம்’க்கு அட்டன்டன்ஸ் போட வரச் சொன்னேன்-டா! எப்படி அம்மாவோட பர்பாமன்ஸ்!” எனப் பெருமையாய் கேட்டார்.
முன்கூட்டியே இந்த விஷயத்தை சொல்லி இருந்தால், அவன் எதையாவது சொல்லி தட்டிக்கழிப்பான் என்பது தான் இவருக்கு தெரியுமே! ‘முதலில் மறுத்தாலும்,பெண்ணைப்பற்றிய விவரங்களை கேட்டு,நாளை அவளைப் பார்த்து பேசிய பிறகு, மகன் தன் முடிவை ஏற்றுக்கொள்வான்!’என்ற நம்பிக்கை இருந்ததால் மல்லியும் அவனை எளிதாக கையாண்டார்.
அவரின் பேச்சால் கடுப்பான ஹரி,”அப்ப என்னை தொல்லை பண்ணாம தாலியையும் நீயே கட்டிடு!” என எரிந்து விழுந்தவனை அசராதுப் பார்த்தவர்,.
“அது ரொம்ப சிம்பிள் வேலைங்கறதால தான்-டா அம்மா அதை மட்டும் உனக்குன்னு ஒதுக்கிவச்சேன்! இந்த பொண்ணு பாக்கறது கூட சும்மாதான்-டா! பாவம் கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு பெண்ணை கண்ணுல காட்டனுமேன்ற ‘ஃபார்மாலிட்டிக்காகத்தான்! சோ நீ நாளைக்கு அங்க ஜஸ்ட் ஒரு விசிட் பண்ணிட்டா அடுத்த மாசம் நடக்க இருக்கும் கல்யாணத்துக்கு பத்திரிகை அடிச்சி, கொடுக்க சரியா இருக்கும்!” என தெளிவாக தன் திட்டத்தை விளக்கினார் மல்லிகா.
“என்னது… அடுத்த மாசம் கல்யாணமா! அதையும் நீயே முடிவு பண்ணிட்டியா? இதெல்லாம் நடக்க முதலில் எனக்கு பொண்ணை பிடிக்க வேணாமா-மா!”
“அதெல்லாம் பிடிக்கும்-டா! உனக்கு எது.. எப்படிப் பிடிக்கும்றது கூடவா எனக்கு தெரியாது!”
“சரிம்மா… பிடிக்கறது… பிடிக்காதது இதெல்லாம் ரெண்டாம்பட்சம். இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா எனக்கு கல்யாணம் பண்ணனும்! ம்ம்ம்…உனக்கு ஏதாவது வாயில நுழையாத நோயின்னு டாக்டர் சொல்லிட்டாங்களா?அதான் என்னை பலிகொடுக்க ரெடியாயிட்டியா…!” என நக்கலாய் ஹரி கேட்டதும்.
பக்கத்திலிருந்தவனின் கையில் பட்டென்று அடித்து,“எரும! காலத்துக்கும் இருக்க போற கல்யாண போட்டோவிலும், வீடியோவிலும் புள்ளை ‘அரைமண்டயா’ முடியெல்லாம் கொட்டி கேவலாமா இருக்க கூடாதுன்னு நினைச்ச எனக்கே நாள் குறிக்கிறா?” என இவர் எகிறவும்
“என்னம்மா சொல்ற? ஒன்னும் புரியலை!” என்று ஹரி பம்மியவுடன், கிடைத்த வாய்ப்பை சாமார்த்தியமாக ‘கேட்ச்’ பண்ணி, ‘யூஸ்’ பண்ணிக்கொண்டார் மல்லிகா.
அடுத்துவந்த அரை மணி நேரத்தில், அவனின் ஜாதக பெருமை உரைக்கப்பட்டு, இந்த அவசர கல்யாணத்தின் அவசியம் அவனுக்கு புரிய வைக்கப்பட்டு,நாளை பெண்பார்க்கும் படலத்திற்கு தலையாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அவனை தள்ளிவிட்டார் மல்லிகா.
தன்னை இந்த இக்கட்டான நிலைமைக்கு கொண்டுவந்தவரை கொஞ்சமேனும் கலங்கவைக்க எண்ணியவன்,
“ம்மா! உன் இஷ்டத்துக்கு கல்யாணத்தை பிக்ஸ் பண்ணி பத்திரிகை கொடுக்கற அளவுக்கு வந்துட்டியே, நான் உனக்கு தெரியாம யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்து, அதை இப்ப வந்து உன்கிட்ட சொல்லி, நீ செலக்ட் செய்த பொண்ணை பார்க்க நாளைக்கு உன்கூட வரமாட்டேன்னு சொன்னா என்னம்மா பண்ணியிருப்ப?” என சோகமான மர்மக்கதையை தன் அன்னையிடம் ஓட்டினான்.
‘கழுத்துல கத்திய வச்சி கல்யாணத்துக்கு சம்மதமா வாங்கற? அய்யோ! இப்படி ஏதாவது இருக்குமோன்னு நல்லா தவிச்சாதான் இனி இப்படி பண்ணமாட்ட!’ என எண்ணி ஹரி அம்மாவின் பதிலை ஆர்வமாக எதிர்பார்க்க,
“மொசப்புடிக்கற நாய மூஞ்சியப் பார்த்தாலே தெரியும் ஹரி!” என பட்டென்று சொல்லி அவனை அடக்கி ஒடுக்கி ஓரமாய் அமர வைத்துவிட்டார்.
இந்த மானபங்கம் தேவையா ஹரி உனக்கு?
தன் ஜம்பம் இவரிடம் பலிக்காது என்பதை நன்கறிந்த ஹரி, அதை வேறிடத்தில் காட்ட நினைத்தது தான் அவனின் வாழ்க்கையில் சிக்கலை கொண்டுவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *