Categories
Shenba Uncategorized

அத்தியாயம் – 1

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் —1

பூங்காவில் இங்குமங்குமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை, ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சுமித்ரா.

அதிலும், சற்று பெரிய குழந்தைகளுக்கு இணையாக நின்று கைதட்டியபடி தனது குட்டிப் பாதத்தால் நிலத்தில் தட்டித் தட்டி நடனமாடிய சிறுகுழந்தையின் நடனத்தை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் சுமித்ரா.

முக்கியமாகப் பேசவேண்டுமென அவளைத் தன்னுடன் அழைத்து வந்திருந்த கிஷோரின் பேச்சை அவள் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.

குறுநகையுடன், இமைக்காமல் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவளை அசுவாரசியத்துடன் பார்த்தான் கிஷோர்.

லேசான எரிச்சலுடன், “ஹேய் சுமி! எந்த உலகத்திலிருக்க நீ?” என அவளது தோளில் தட்டினான்.

“ம்ம்… என்ன கிஷோர்? கூப்பிட்டீங்களா…” என்றபடி சுதாரித்துத் திரும்பினாள் சுமி.

“அது சரி. நான் கிஷோர்னாவது உனக்கு நினைவிருக்கே, அதுவரைக்கும் சந்தோஷம்” என்றான் கடுப்புடன்.

“சாரிப்பா! அந்தக் குட்டிக் குழந்தையைப் பார்த்துட்டே இருந்தேனா நீங்க சொன்னதைக் கவனிக்கவேயில்லை. பாருங்களேன்… அந்தக் குட்டிக் குட்டிப் பாதத்தைத் தட்டித்தட்டி எவ்வளவு அழகா ஆடிட்டிருக்கு. இப்போதான் நடக்கவே ஆரம்பித்திருக்கும் போல….” என்று விழிகள் மலரச் சொன்னாள் சுமித்ரா.

புன்னகையுடன் குழந்தையைப் பற்றிப் பேசும்போது, அவளும் சிறு குழந்தையாக மாறியிருப்பதைக் கண்ட கிஷோருக்கு அழுவதா, சிரிப்பதா என்றே புரியவில்லை!

‘எவ்வளவு ஆசையுடன் என் மனத்திலிருப்பதை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்து அழைத்து வந்தேன். இவளோ, யாரோ குழந்தைகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறாள்’ என்று மனத்திற்குள் புலம்பிக்கொண்டான்.

அவனுடைய முகமாறுதலைக் கண்டதுமே, அவனது எண்ணவோட்டத்தை அறிந்து சங்கடத்துடன் பார்த்தாள்.

“நாம வந்து முழுசா அரைமணி நேரமாகுது சுமி! நாளைக்கு நமக்கு என்கேஜ்மென்ட். அதுக்கு முன்னால உன்கிட்ட மனசு விட்டுப் பேசணும்னு கூட்டிட்டு வந்தேன்” என்றவனது குரலில் அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது.

“அதான், சாரி சொல்லிட்டேனே கிஷோர்!” விழிகள் இடுங்கக் கெஞ்சலாகச் சொன்னவளைக் கோபித்துக் கொள்ள இயலாமல் அமைதியாக இருந்தான்.

“சரி விடு” என்றவன், மெல்ல அவளை நெருங்கி அமர்ந்தான்.

அவனது கள்ளத்தனத்தைப் புரிந்து கொண்டவள், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

அதுவரையிருந்த அவனுடைய இயல்பு மாறி ஒருவித பரபரப்பு உருவானது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க கால் மேல் கால் போட்டு லேசாக அசைத்தபடி, அங்கும் இங்கும் பார்த்தான்.
ஓரவிழியால் அவனது செய்கைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சுமித்ராவிற்கு, வந்த சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

‘சொதப்பாதடா கிஷோர்!’ என்று தனக்கே சொல்லிக்கொண்டவன், தலையைக் கோதிக்கொண்டான்.

மெல்லத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு தொண்டையைச் செருமினான்.

“இந்த சூட் உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு சுமி!” என்றவனைத் தனது நீள்விழிகளால் குறுகுறுப்புடன் பார்த்தவள், கலகலவென நகைத்தாள்.

‘போச்சுடா!’ என்பதைப் போல தலையைக் கோதிக்கொண்டவன், பரிதாபமாக அவளைப் பார்த்தான்.

“சொதப்பிட்டேன் இல்ல…” எனக் கேட்டவனை, புன்னகையுடன் பார்த்தாள்.

இல்லை என்பதைப் போலத் தலையை அசைத்தவள், “இத்தனை வருஷத்தில் புது கிஷோரைப் பார்க்கறேன்” என்றாள்.

சமாளிப்பாகச் சிரித்தவன், “என்ன செய்றது… எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், இந்தக் காதல்ல கொஞ்சம் தடுமாறித்தான் போயிடுவான் போல…” என்றான்.

அவள் எதுவும் சொல்லாமல் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

“இஃப் யூ டோண்ட் மைண்ட்… உன் கையைப் பிடிச்சிக்கட்டுமா…” எனக் கேட்டுக்கொண்டே, அவளது இடது கரத்தைத் தனது கைகளுக்குள் சிறைபிடித்துக் கொண்டான்.

இத்தனை நாள்களில் அவனது ஸ்பரிசம் தராத ஏதோவொரு மாற்றத்தை இப்போது உணர்ந்தாள்.

இதுநாள் வரையில் குடும்ப நண்பன் என்ற முறையிலேயே அவனுடன் பழகியிருந்தவளுக்கு, இந்தக் குறுகுறுப்பு புதியதொரு உணர்வாக இருந்தது.

‘நண்பன் என்ற எல்லையைக் கடந்து, தன்னுடைய வாழ்க்கைத் துணையாக காலமெல்லாம் உடன் வரப்போகும் உறவு தந்த உரிமையினால் வந்த மாற்றமா!’ எனப் புரியாமல் உள்ளுக்குள் தவித்தாள்.

தனது ஸ்பரிசத்தால் அவளிடம் விளைந்த மெல்லிய நடுக்கத்தை இரசித்தவனாக, “நாளைக்கு எங்கேஜ்மென்ட்டை வச்சிட்டு இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாது தான். இருந்தாலும், நான் கேட்கறதுக்கு நீ ஓபனா பதில் சொல்லணும் சுமி!” என்றான்.

“ம்ம்…” என்றாள்.

அவள் தலையை அசைத்தபோது சேர்ந்து அசைந்த காதணியைப் பார்த்து இரசித்தபடி, “என்னை உனக்குப் பிடிச்சிருக்குதானே?” என்று கேட்டான்.

அவள் கிளுக்கெனச் சிரிக்க, “பைத்தியக்காரத்தனமாதான் தெரியும்… பட், உன் வாயால நீ சம்மதம்னு சொல்றதைக் கேட்கணும்னு ரொம்ப ஆசையா வந்திருக்கேன் சுமி!” என்றான்.

“உங்களைப் பிடிக்காமலா கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்” என்றவளது கன்னங்கள் தன்னையறியாமல் செந்நிறத்தைப் பூசிக்கொண்டன.

“தேங்க்ஸ் சுமி! சின்ன வயசுலயிருந்தே உன்மேல எனக்கு ஈடுபாடிருந்தது. அது எப்போ காதலா மாறுச்சின்னு எனக்கே தெரியல. ஆனா, அதைச் சொல்ல இப்போதான் எனக்குத் தைரியம் வந்திருக்கு” என்றான்.

“இப்பவாவது வந்ததே…” என்றாள் சிரிப்போடு.

“அதைச் சொல்லு. இந்த மேட்டரை எங்க அம்மாகிட்ட சொல்றதுக்குள்ள நான் பட்டப் பாடு எனக்குத் தான் தெரியும்…” என்றவனை அன்புடன் பார்த்தாள்.

கிஷோரின் அன்னையைப் பற்றி அவளறியாததா!

“ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்ன அம்மாகிட்ட எப்படியோ திக்கித் திணறி என்னோட காதலைச் சொல்லிட்டேன். உள்ளுக்குள்ள பயம்தான். ஆனா, எவ்ளோ நாளைக்கு என் மனசுக்குள்ளயே நான் லவ் பண்றது?” என்றவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தாள்.
“புரியுது புரியுது. உன்கிட்ட சொல்லாம அம்மாகிட்ட சொன்னதை நினைச்சித்தானே சிரிக்கிற. இந்த இடத்துல உன்னோட சம்மதத்தைவிட எனக்கு அம்மாவோட சம்மதம் ரொம்ப அவசியமா இருந்த்து சுமி! எனக்கு நீயும் வேணும். அம்மாவும் வேணும்” என்றான்.

அவள் எவ்விதபாவனையையும் வெளிப்படுத்தாமல், அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஊருக்குக் கிளம்பறவரைக்கும், அம்மா எதுவுமே பேசல. சரி விஷயத்தை அவங்க காதில் போட்டாச்சுங்கற நிம்மதியோட ஊருக்குப் போயிட்டேன். ஊர்லயிருந்து திரும்பி வந்தபோதுகூட கொஞ்சம் சங்கடத்தோட தான் வந்தேன். பட், காலை ஏர்போர்ட்லயிருந்து வெளியே வந்தா அம்மா எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க.

அதுவே எனக்குப் பெரிய ஷாக்னா, நம்ம எங்கேஜ்மென்ட் இன்விடேஷனைப் பார்த்ததும்… அதுவும் நாளைக்கு என்கேஜ்மெண்ட் என்றதும் எனக்கு எப்படியிருந்திருக்கும். யூ நோ சுமி! அந்தநேரம் என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை” சொல்லும் போதே கிஷோரின் முகம் அவன் காதலை வெளிப்படையாக காட்டியது.

“என்னோட காதலை உன்கிட்ட நேரடியாக சொல்லமுடியாமல் போச்சேன்னு ஒரு வருத்தம் இருந்தது. எல்லாம் நல்லதுக்குன்னு மனசைத் தேத்திக்கிறேன். ஆனாலும், உன்கிட்ட இப்பவாவது பேசணும்னு தோணினதால தான் அங்கிள்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி உன்னைத் தனியாக கூட்டிட்டு வந்தேன்” என்றான்.

மூன்று வருடங்களாக அவர்களது பரம்பரைத் தொழிலான டெக்ஸ்டைல்ஸ் பிசினஸை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருப்பவன் கிஷோர். இந்த இருபத்தி எட்டு வயதிலும், தனது அன்னையின் வார்த்தையை மீறி அவன் எதுவுமே செய்தறியாதவன்.

கிஷோர் ஊருக்குக் கிளம்பிச் சென்ற இரண்டாம் நாள் கேஷவ்நாத் அங்கிளும், மந்த்ரா ஆன்ட்டியும் தங்கள் வீட்டிற்கு வந்ததே அவளுக்கு மிகப் பெரிய ஆச்சரியமென்றால், தன்னை அவர்கள் வீட்டிற்கு மருமகளாக்கிக் கொள்ள விரும்புவதாகக் கூறியதை, அவளால் நம்பவே முடியவில்லை.
‘ஒருவேளை, தங்களது ஒரே மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தாலேயே, சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் அவர் சம்மந்தம் செய்துகொள்ள முடிவெடுத்தாரோ’ என்று இப்போது அவளுக்குத் தோன்றியது.

“என் மனசுல இருக்கறதை நான் சொல்லிட்டேன். என்னை மாதிரியே உன் மனசுலயும் ஏதாவது அபிப்பிராயம் இருந்ததா!” என்று ஆர்வத்துடன் கேட்டவனை, நிதானமாகப் பார்த்தாள்.

ஆழமூச்செடுத்தவள், “நான் எல்லாவற்றையும் நேரடியாக பேசிடுவேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால, என் மனதிலிருப்பதை அப்படியே சொல்றேன் கிஷோர். நீங்க என்னைத் தவறா நினைக்கக்கூடாது” என்றவள், அவனது கண்களை நேராகப் பார்த்தாள்.

அவளது இந்தப் பதிலே அவனுக்கு விஷயத்தை யூகித்துவிட ஏதுவாகயிருக்க, மனத்தில் எழுந்த ஏமாற்றம் அவனது முகத்தில் பிரதிபலித்தது.
“அங்கிளும், ஆன்ட்டியும் வந்து பேசிட்டுப் போனதும், அப்பா என்னோட விருப்பத்தைக் கேட்டாங்க. அந்தநேரத்துல எனக்கு உங்களை மறுக்க ஒரு சின்னக் காரணம்கூட கிடைக்கல. சரின்னு சொல்லிவிட்டேன். இந்த நிமிஷம் வரைக்கும் கிஷோரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனா, இது காதலா இல்ல ஈர்ப்பான்னு என்னால புரிஞ்சிக்க முடியல கிஷோர்!”

அதுவரை வளவளத்துக் கொண்டிருந்தவன் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவளும், அந்த அமைதியைக் கலைக்க விரும்பாதவளாக மௌனமாக இருந்தாள்.

“நான் லவ் பண்ணா, நீயும் என்னை லவ் பண்ணணும்னு கட்டாயம் இல்லையே. கல்யாணத்துக்குப் பிறகு  எப்படியும் லவ் பண்ணத்தானே போற…” என்று சமாளிப்பாகச் சொன்னான்.

”உங்களுக்குக் கோபமில்லையே…”

“கோபம்னு சொல்லமுடியாது. ஆனா, வருத்தமிருக்கு” என்றான்.

“என் மனசுல இருக்கறதைத்தான் சொன்னேன் கிஷோர்!”

“புரியுது. ஆனா…” என்றவன் சொல்லவந்ததைப் பாதியிலேயே நிறுத்தினான்.
அதன்பிறகு வந்த சில நிமிடங்கள் இருவருக்குமே அவஸ்தையாகக் கழிந்தன.

சற்றுநேரத்திற்கெல்லாம் சமாதானமாகி வந்தவன், “உன்னோட எம்.பி.ஏ கோர்ஸ் முடிய எவ்ளோ நாளிருக்கு?” எனக் கேட்டான்.

“இன்னும் ஒன் மந்த் இருக்கு” என்றாள்.

‘ஓ!’ எனக் கேட்டுக்கொண்டவன், பொதுவாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“மே பீ… நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், நாம ஜெய்பூர்ல மூணு நாலு வருஷம் இருக்க வேண்டியிருக்கும்” என்றவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

“அப்போ, அப்பா…” என்று தவிப்புடன் கேட்டாள்.

“பார்க்கலாம் சுமி! கொஞ்ச நாளைக்குத் தானே… நாம இல்லனாலும், என்னோட அப்பா இங்கே தானே இருக்கார். அவர் அங்கிளைப் பார்த்துப்பார்” என்றான்.

“இல்ல கிஷோர்… அம்மாவோட டெத்துக்கு அப்புறம் அப்பா ரொம்பவே தளர்ந்து போயிட்டாங்க. இதுல ஆஸ்துமா பிராப்ளம் வேற. என்ன இருந்தாலும், நான் பார்த்துக்கறது மாதிரி வராதில்ல…” என்றாள் கவலையுடன்.

முறைப்பதைப் போல அவளைப் பார்த்தவன் சட்டென தனது பார்வையை மாற்றிக் கொண்டான்.

“அவர் உனக்கு மட்டும்தான் அப்பாவா! எனக்கு மாமனார் இல்லயா…? எல்லாத்துக்கும் வொர்ரி பண்ணிக்காதே. கிளம்பு மணி ஏழாகுது. நாம வெளியே டின்னரை முடிச்சிகிட்டு, உன்னை வீட்ல டிராப் பண்ணிட்டுக் கிளம்பணும்” என்றவன் அவள் ஏதோ சொல்லவந்ததை யூகித்ததைப் போல, “அங்கிளை நான் ஹோட்டலுக்கு வரச்சொல்லிடுறேன் போதுமா!” என்றான்.

அவனது பதிலில் சமாதானமடைந்தவளாக, தலையை ஆட்டினாள்.

ஆனாலும், மனத்திற்குள் இனம்புரியா ஏதோ ஒரு உணர்வு பயத்தைத் தோற்றுவித்தது. அது எதனால் என்று அவளுக்குப் புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *