Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 11

Free Download WordPress Themes and plugins.

எபி 11
பெரியவர்களின் துணை இல்லாது தம்பதியினர் மட்டுமே தங்களின் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அந்நாள் மிகவும் இனியதாகவே அவர்களுக்கு சென்றது.அந்நாள் மட்டுமன்று, அதை தொடர்ந்துவந்த அனைத்து நாட்களுமே இனிதாகவே சென்றது. அப்படி செல்ல ஹரியின் பங்கு அதிகமாக இருந்தது.
தனியாக தன்னால் எல்லா பொறுப்புக்களையும் சரிவர செய்யமுடியுமா? என மிரண்டுக்கொண்டிருந்த பிரியாவை அப்படி எதையும் தனியாக செய்யவிடவில்லை ஹரி.எங்கும் எதிலும் அவன் அவளுடனே இருந்தான்.
அவள் எங்கிருந்தாலும் அங்கு, அவளுக்கு துணையாக அவனும் இருந்தான்.ஏற்கனவே அவ்வீட்டில் எது-எது எங்கெங்கே இருக்கிறது என்பதை இரு வீட்டு பெரியவர்களும் அவளுக்கு சொல்லி,சில முக்கியமான வேலைகளையும் சமையலையும் அவளுக்கு பழக்கி இருந்தார்கள்தான்.
அவர்கள் சொன்னவிதம், ‘இதெல்லாம் ஒரு மனைவியின் கடமை, இதையெல்லாம் அவள் கட்டாயமாக செய்யத்தான் வேண்டும், அவள் இப்படிதான் இருக்கவேண்டும்!’ என்ற விதத்தில் இருந்தது.
ஆனால் ஹரி சொன்னவிதமோ, ‘நீயும் நானும் சமம், இங்கு நான் உன்னைவிட ஒரு படி மேல் என்ற எந்த விதிமுறையும் இல்லை, நாம் இரண்டுப் பேரும் ஈக்வல் பார்ட்னர்ஸ்’ என்ற விதமாக இருந்தது.
எல்லாவற்றிலும், வீட்டு வேலைகளில் கூட ‘உன்னால முடிந்ததை நீ செய், என்னால முடிந்ததை நான் செய்யறேன். சிலசமயம் நம்ம ரெண்டு பேராலும் முடியாத போது, யாரும் எதையும் செய்யாம விட்டுடலாம்!’ என அவன் சொன்னது, அவனை அப்படியே கண்ணெடுக்காமல் சைட் அடிக்க வைத்தது.
அவள் பார்த்தவரை அவளின் பெற்றோர்களாகட்டும், ஹரியின் பெற்றோர்களாகட்டும் இருவருமே மனமொத்த தம்பதிகள்தான். ஆனால் அவளின் அப்பாவோ மாமனாரோ அவர்களின் மனைவி, பாத்திரம் தேய்க்கும் போது இவர்கள் அங்கே நின்றுக்கொண்டு அதை கழுவி கொடுத்திருப்பார்களா?
அவர்கள் மனைவியர் தனியாக சமைக்கும் போது அவளுக்கு காய் நறுக்கி கூட தரவேண்டாம், அவளின் அருகில் துணையாய் நின்றுக்கொண்டு எதையாவது பேசிக்கொண்டிருத்திருப்பார்களா?
துவைத்த துணிகளை உலர்த்து போதும், உலர்த்தியத்தை எடுக்கும் போதும் உதவி செய்யவில்லை என்றாலும் கூடவே ஒரு பேச்சுதுணைக்கு சென்று இருந்திருப்பார்களா?
‘மனைவி அங்கே தனியே வேலை செய்துக்கொண்டிருக்க, ஹாலில் டிவியையோ போனையோ நாம் நொண்டிக்கொண்டிருக்கிறோமே’ என அவர்கள் எப்போதாவது உள்ளம் குறுகுறுத்திருப்பார்களா?அவர்கள் தான் அப்படி நினைக்கவில்லை,அவர்களின் துணைவியராவது அக்குறுகுறுப்பை அவர்களிடம் எதிர்பார்த்திருந்திருப்பார்களா!
தன் தந்தையிடமும் மாமனாரிடமும் கனவில் கூட காணமுடியாத காட்சிகளை இங்கு ஹரி பிரியாவிற்கு கண்கூடாக காட்டிக் கொண்டிருந்தான். அவனின் இந்த அக்கறையான செயல்களுக்காகவே அடங்காத அவனின் வாயை கூட ‘போனால் போகிறது, பொறுத்துக்கொள்ளலாம்!’ என முடிவிற்கு ஒரே நாளில் வந்திருந்தாள் பிரியா.
இதைப்போன்ற கணவனின் சிறுசிறு அனுசரணையான செயல்கள்தானே, ஆண்டாண்டுகளாக அம்மாவின் வீட்டில் ஆனந்தமாக இருந்த பெண்களை, மணம் முடிந்த ஆறே மாதத்தில், அரைநாள் கூட அங்கே நிம்மதியாக இருக்கவிடாது செய்துவிடுகிறது.
இன்று மட்டுமன்று இனிவரும் நாள்களில் கூட, ‘இவ்வளவு சீக்கிரம் ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்?’ என்ற எண்ணத்தை இவன் தனக்கு வரவிடமாட்டான் என்ற நம்பிக்கையை பிரியாவிற்கு கொடுத்திருந்தான் ஹரி. நம்பிக்கை! அதுதானே எல்லா உறவுகளுக்கும் அடிப்படை!
இருவரின் பொழுதுகளும் புதுமணத்தம்பதிகளுக்கே உரிய வகையில் கழியவில்லை என்றாலும் மிக இனிதாகவே கழிந்தது.எப்போதாவது பிரியா கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தால் ஹரியே அவளை அழைத்துக்கொண்டு போய் கூட்டி வந்தான்.வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதாகட்டும் இருவரில் யாருக்காவது ஏதாவது தேவையானது வாங்கவேண்டியிருந்தாலும் இருவருமே சேர்ந்து ஷாப்பிங் சென்றுவந்தனர்.ஆக மொத்தத்தில் ஏறக்குறைய இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தனர்.
அதற்காக இருவரும் ஆதர்ஷ தம்பதியினராய் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள் என பெருமைப்பட்டு கொள்ளும்படி எல்லாம் இவர்கள் இருந்துவிடவில்லை.
‘ஹரி பிரியா ஜோடி ஈருடல் ஓருயிர் போலவா, இல்லை வள்ளுவனும் வாசுகியையும் போலவா… அதுவும் இல்லை என்றால், ‘நீ வடக்கேன்றால் நான் தெற்கு!’ என்றா… இதில் எதில் இவர்களின் ஜோடியை சேர்ப்பது?’ என பார்ப்பவர்கள் மட்டுமல்ல, இந்த ஜோடிகளே குழம்பிப் போய்தான் இருந்தனர்.
பல சமயம் ஹரி படுமட்டமாக சொதப்பிவைத்து, ‘இதற்கு கண்டிப்பாக பிரியா கோபித்துக்கொள்வாள், அவளிடமிருந்து தனக்கு திட்டு நிச்சயம்!’ என இவன் எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் போது அவள், இதெல்லாம் ஒன்னும் பெரிய விசயமே இல்லை என அவனின் அந்த சொதப்பலை அப்படியே தூசாக தட்டிவிட்டு போவாள்.
சிலசமயம் எதற்கு திட்டுகிறாள், ஏன் தன்னிடம் கோபம் கொள்கிறாள் என தெரியாது அவனின் மூளையை, அவன் போட்டு கசக்கிய கசக்கலில் அது ட்ரைவாஷ் போகவேண்டிய நிலைக்கும் சென்றது.
அரைநாள் அங்க மூடிய கதவுக்கு வெளியே காக்க வைத்தபோது வராத கோபம், இவளுக்கு ஈர டவலை பெட்டில் போடும்போது ஏன் வருது? ராட்சஸி! அதுக்கு போய் என்னமா கத்தறா!
அவங்க சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னாடியே ஊருக்கு போகமுடியாம இவனுக்கு ஆபீஸில் வேலை வந்து, அன்னைக்கு காலையில அவசர அவசரமா ஓடிப்போய் ஓடிவந்தபோது, ’வேலையில் இதெல்லாம் சகஜம் தானே!’ சொல்லி அதுக்கு பெருசா ஒன்னும் சொல்லாதவ, வாட்சப்ல இவ போட்ட ஸ்டேடஸ்க்கு கமண்ட் பண்ணலைன்னா காது ஜவ்வு கிழிந்து போகும் அளவுக்கு கத்தறா! இவளை புரிஞ்சிக்க முடியலையே! என பாவமாய் ஹரி புலம்பியதை கேட்டக்கூட ஆளில்லை.
ஆக மொத்தத்தில் பிரியா ஹரியை, ‘எப்போது எப்படி இவள் ரியாக்ட் செய்வாள்?’ என அறியமுடியாத ஒரு நிலையிலேயே வைத்திருந்தாள். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ஒரு சிறந்த மனைவியாய் தேர்ச்சி பெற்றிருந்தாள் பிரியா.அறியாபிள்ளையான ஹரிதான் ஏகப்பட்ட ‘ஹரியர்’ வைத்துக் கொண்டிருந்தான்.
இப்படியே அல்லாடல்களுடன் ஹரி,பிரியாவுக்கு கல்யாணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. இருவருக்குள்ளும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி ஊடலும் இல்லை… கூடலும் இல்லை. ஆனால் அழகான ஒரு நெருக்கம் வந்திருந்தது.
ஹரி பிரியாவின் அருகாமைக்கு அடிமையாகிப் போயிருந்தான். ‘அவளுக்கும் அப்படியா…!’ என அறிந்துகொள்ள அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக தோல்வியையே தழுவியது.
அன்று ஹரி பிரியா இருவருக்கும் வேலை ஏதும் இல்லாததால் இருவரும் ஒன்றாக அமர்ந்து லேப்டாப்பில் ஹரியின் பேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும் போது,அவனை டாக் செய்து இருந்த ஒரு போஸ்ட்டைப் பார்த்து அதிர்ந்தான் ஹரி.
அதில் ஒரு வருடம் முன்பு அலுவலகத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ஹரியின் நண்பன், ‘கல்யாண வாழ்க்கையில் வெற்றிகரமாக முப்பத்தொறாவது நாளில் அடியெடுத்து வைக்கும் என் நண்பனுக்கு பரிசு!’ என இவனின் ஒரு மாத கல்யாண நாளை கொண்டாடும் விதமாக ஷேர் பண்ணியிருந்தான்.அதில் ஹரியுடன் வேலை செய்யும் ஒரு வடக்கிந்திய பெண் மிகநெருக்கமாக அவனின் தோளில் கைப்போட்டு நின்றுக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்த ஹரி ‘பிரியா தன்னை தவறாக எடுத்துக்கொண்டுவிட்டால்…’ என பயந்து, வேண்டுமென்றே தன்னை மாட்டிவிட எண்ணி, பரிசுக்கொடுத்த நண்பனை பலியிட கொலைவெறியில் இருந்தான்.
சாதாரண கணவன் மனைவி போல வாழ்ந்துக்கொண்டிருந்தால், தன்னை தன் குணத்தை எண்ணத்தை அவளுக்கு உணர்த்தி இருந்திருக்கலாம். அப்படி இருந்தால் இதை பார்த்து ‘பிரியா என்னை சந்தேகப்படுவாளோ?’ என ஹரி பயந்திருக்கமாட்டான்.ஆனால் இவர்கள் கணவன் மனைவியாக வாழாத இந்நிலையில் ‘தன்னைப் பற்றி அவள் தவறாக நினைத்தால், என்ன சொல்லி அவளுக்கு தன்னை புரியவைப்பது?’என ஹரி குழம்பிப்போனான்.
அந்த போட்டோவை பார்த்து அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது…! என இவன் நோட்டமிட, அங்கு சண்டை சந்தேகம்… இப்படி ஏதும் வருவதற்கான அறிகுறி ஏதுமில்லை.’என்னைக்குதான் இவ சரியா ரியாக்ட் பண்ணியிருக்கா?’ என கடுப்பானவன், இதற்குமேல் அவளின் ரியாக்ஷனுக்கு காத்திருக்காமல் ஹரியே தன்னிலைவிளக்கம் தர,
“லக்ஸ்! இந்த பொண்ணு நார்த் இந்தியன்-டா. அவளுக்கு நம்ம கல்ச்சர் அவ்வளவா தெரியாது!” எனத்தொடங்கினான்.
“அதுக்கு நான் என்னப் பண்ணனும்?” என கேட்டு ஒருப் புரியாத பார்வைப் பார்த்தாள் பிரியா.
அதேப் பார்வையை ஹரியும் அவளை நோக்கி செலுத்தி,”நீ ஏதும் தப்பா நினச்சிக்கலையா?” எனக் கேட்டான்.
“அவங்களுக்கு நம்ம கல்ச்சர் தெரியாததுக்கெல்லாம் நான் ஏன் தப்பா நினைச்சிக்கனும்?”
‘இப்படி குண்டக்கமண்டக்க பேசி, இவ நம்மல பைத்தியம் ஆக்காம விடமாட்டா போல!’ எரிச்சல்ப் பட்டவன்,
“அவ என்கூட நெருக்கமா என்மேல கை போட்டுட்டு நிக்கறதை பாத்து உனக்கு என்மேல ஏதும் கோபம், இல்ல சந்தேகம் ஏதும் வரலையா? அந்த போட்டோல இருந்த மத்தவங்களைப்போல தான் அவளும் எனக்கு ஜஸ்ட் ஒரு பிரெண்ட். அவ்வளவுதான். அதுக்கு மேல ஒண்ணுமில்ல” என்று விளக்கிக்கொண்டிருந்தவன் அவளின் அனல் பார்வையில் திகைத்தான்.
“என்னை எப்படி நீங்க இவ்வளவு கேவலமா நினைக்கலாம்?”
திடீரென இவள் இப்படி சண்டைக்கு ஏன் வருகிறாள் என சத்தியமாக ஹரிக்கு புரியவில்லை.
“நான் என்ன… எப்போ உன்னை கேவலமா நினச்சேன்?” விட்டா அழுதிடும் நிலைக்கு போனவனாய் ஹரிக் கேட்டான்.
“அப்படி நினைச்சதால தானே இப்படி பேசறீங்க!”
“அடியேய் லக்ஸ் சோப்பு! சும்மா சும்மா காண்டாக்காம சொல்ல நினைக்கறதை ஒழுங்கா சொல்லு!” பல்லைக்கடித்தான்.
“என்ன… இப்ப இப்படி கோபமா கத்தினா நீங்க பண்ணது ஒன்னும் இல்லைன்னு ஆகிடுமா? இல்ல நீங்க கத்துறதைப் பார்த்து நான் பயந்து வாய மூடிட்டு போய்டுவேனா?” என சிங்கமாய் சிலிர்த்தவளைப் பார்த்து,
“லக்ஸ்! என்னால முடியல! ஏன் நீ கோபப்படறன்னு சொல்லிட்டு கோபப்படு சோப்பு!” என கெஞ்சினான்.
“ம்ம்ம்… உங்களை பத்தி எனக்கு தெரியாதா?அதை நீங்க விளக்கி வேற சொல்லனுமா? சும்மா உங்க பக்கத்துல யார் நின்னாலும் உங்களை தப்பாதான் நினைச்சி நான் சந்தேகப்படுவேன்னு நீங்க எப்படி என்னை நினைக்கலாம்? என்னோட நினைப்பெல்லாம் என்ன அவ்வளவு மட்டமாவா இருக்கும்? என்னை பத்தி எப்படி நீங்க இப்படி நினைக்கலாம்? இதான் நீங்க என்னை புரிஞ்சிவச்சிட்டிருக்கும் அழகா?” எனப் படபடவென பொரிந்தவள் லேப்டாப்பை அவன் மடியிலேயே பொத்தென்று போட்டுவிட்டு, அவர்களின் அறைக்கு சென்று கதவடைத்துக்கொண்டாள்.
பொண்டாட்டி தன்னை தப்பா நினைச்சி, சண்டைப்போடக்கூடாதுன்னு இவன் ஒரு விளக்கம் கொடுக்க போய், அதே விளக்கத்தாலேயே அவ இவனை, ‘என்னை எப்படி நீங்க தப்பா நினைக்கலாம்?’ எனக் கேட்டு, சண்டப்போட்டுகிட்டு போனா இவன் நிலைமை இப்ப எப்படி இருக்கும்?
‘என் பொண்டாட்டி என்னை நல்லா புரிந்து வச்சியிருக்கா?’ என சந்தோஷப்படுவதா?’ இல்ல… ‘நம்ம பக்கத்துல ஒரு பொண்ணு ஓட்டிகிட்டு நிக்கறதைப் பார்த்தும் இவளுக்கு கடுப்பு வரலையே, நம்ம மேல இவளுக்கு ஒரு இது… இல்லையா?’ என ஆராய்ச்சியில் இறங்குவதா? இல்ல… ‘கோச்சிட்டு போனவளை என்ன செய்து சமாதானப்படுத்தலாம்?’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருங்குவதா? எதை செய்யலாம்? யோசனையில் இறங்கினான் ஹரி.
எதுக்கு,ஏன்,எப்படி,எப்போ… ‘எது நடந்தாலும் அது நன்றாகவே நடந்தது!’ இந்த ‘சம்சார வாழ்க்கையின் தாரக மந்திரம்’ இன்னும் ஹரிக்கு புரியவில்லை.இதைபோல இன்னும் சிலபல அடிகள் பலமாக விழுந்தால் வைகை பாடம் அவனுக்கு புரிந்துவிடும். அதுவரை… அச்சோ… பாவம் ஹரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *