Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் – 12

Free Download WordPress Themes and plugins.

காதல்பனி 12

ஒரு வாரம் கழித்துத் தான் திரும்ப வருவேன் என்று சொல்லி விட்டுச் சென்றவன் எந்த வித முன் அறிவிப்புமின்றி நான்காவது நாளே வந்து நின்றான் அஷ்வத் வெளி வாசலிலேயே அமர்ந்திருந்த தாத்தாவிடம் பேசி நலம் விசாரித்த பின்பு பொம்மியைத் தேடிப் பார்த்தவன் அவள் எங்கும் இல்லை என்றவுடன் அவள் மொபைலுக்கு அழைக்க முழு அழைப்பும் போனதே தவிர அவள் எடுக்கவேயில்லை. அதில் எரிச்சலுற்றவன் திரும்ப தாத்தாவிடமே வந்து

“எங்க தாத்தா அவ?” என்று கேட்க, சேரில் அமர்ந்தபடியே சற்றுக் கண் அயர்ந்து இருந்தவர் திடீர் என்று அவன் குரலில் கண் விழித்து அவன் என்ன கேட்டான் என்பது புரியாமல் விழிக்க

“அவ தான் தாத்தா! என் பொண்டாட்டி எங்க?” என்று அவன் சற்றுக் குரலை உயர்த்தி மறுபடியும் கேட்கவும்

“பொம்மியா? அந்தப் புள்ள காட்டுப் பக்கம் இல்ல போய் இருக்கு! மருந்தோட தாக்கத்தால நான் தான் உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன்”

“சரி, அப்போ நான் அங்கேயே போய் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி அவன் அங்கு இருந்து போக எத்தனிக்கவும்

“இப்போ தானே சின்னா வந்த? குளிச்சிட்டு சாப்பிடு. அதற்குள்ள பொம்மி வந்திடுவா”

“அதெல்லாம் என் பொண்டாட்டி வந்த பிறகே செய்துக்கிறேன்” என்று நில்லாமல் அவருக்குப் பதில் கொடுத்த படியே சென்று மறைந்தான் அஷ்வத்.

தாத்தாவுக்கோ சிறு நிம்மதி! ‘வந்த உடனே மனைவியைத் தேடுகிறானே? அப்போ இவர்களுக்குள்ள இருந்த பிரச்சனை தீர்ந்துடிச்சினு தானே அர்த்தம்’ என்று நினைத்தார் அவர்.

சாராவோ அங்கே சமாதி முன் சோகப் பதுமை என நின்றிருக்க அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் பக்கத்தில் போய் இவன் நிற்க.

ஏதோ உந்துதலில் திரும்பிப் பார்த்தவள் கனவில் வந்த அவன் பிம்பமோ என்று நினைத்து எதுவும் பேசாமல் மறுபடியும் திரும்பிக் கொண்டவள் சாமாதியைத் தொட்டு வணங்க அவனும் அதே போல் செய்யவும் அதில் கலைந்தவள்

“மச்சான் வந்துட்டீங்களா?” என்ற கூவலுடன் அவனை அணைத்துக் கொள்ள, வெகு நாள் கழித்து அவள் அழைத்த மச்சான் என்ற அழைப்பில் சிலிர்த்தவன்

“இது கனவு இல்ல நான் நிஜம் தான் டி கண்மணி!” என்றவன் அவளை ஆரத் தழுவிக் கொண்டான் அவள் கணவன்.

“ஆமா உன் போன் எங்க? உனக்கு எத்தனை தடவை நான் கால் பண்றது?”

“எனக்கு யார் போன் பண்ணப் போறாங்க? அதான் மொபைல சைலண்ட்ல போட்டு வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். அதுவும் இல்லாம நீங்க இன்னைக்கு வர்றது எனக்குத் தெரியாதே!” என்று அவள் மழலையாய் மிழல

“ம்ம்ம்… ஐ மிஸ் யூ டி! நீ என்ன மிஸ் பண்ணியா?” என்று அவன் கேட்க

“ம்ம்ம்….” என்றவள் தன் பலம் கொண்ட மட்டும் அவனை ஆரத் தழுவவும்

“இவ்வளவு தானா உன் மிஸ் யூ?” என்று கேட்டவன் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணனு இப்போ காட்டுறேன் பாரு” என்றவன் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளை இறுக்க அணைத்தவன் இந்த மூணு நாளும் உன்னைப் பார்க்காம நான் தவிச்சிப் போய்ட்டேன் தெரியுமா? உன்னை எப்போ பார்ப்போம்னு இருந்துச்சு. சதா உன் ஞாபகம் தான்! ஆனா நீ என்னை நினைச்சிருக்கவே மாட்ட இல்லடி? என்று அவன் குறைபடவும்

‘நானா நினைக்கலை? நீங்க இந்த மூணு நாள் தான் தவிச்சீங்க. நான் எத்தனை வருஷமா உங்க வருகைக்காகத் தவிச்சிப் போய் காத்துகிட்டு இருக்கேன்னு தெரியுமா?’ என்று மனதுக்குள் நினைத்தவள் ஏக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்கவும், அவள் விழி வீச்சில் தன் வசம் இழந்தவனோ

“இப்படி எல்லாம் பார்க்காத டி. அப்புறம் அன்று மாதிரி உன் உதடு என் கிட்ட படாத பாடுபடும்” என்று அவன் கண் சிமிட்டிக் கெஞ்சவும், வெட்கத்துடன் அவன் மார்பிலேயே தலை சாய்த்தாள் சாரா. இருவருக்குள்ளும் நெருக்கம் இல்லை என்றாலும் ஏதோ பேச்சிலும் சீண்டலிலும் சிரிப்பிலும் நாட்கள் சென்றன.

இதற்கிடையில் புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வைக்க என்று அவர் மாமாவுக்காக முறை செய்ய வேலுச்சாமி தாத்தா சாராவையும் அஷ்வத்தையும் அழைக்க, அஷ்வத்தோ புதிதாக ஓர் உறவு வருகிறதே என்ற எண்ணத்தில் கிளம்ப சாராவோ வேறு வழியில்லாமல் தாத்தாவுக்காக கிளம்பிச் சென்றாள்.

வேலுச்சாமி தாத்தா வீடோ திருச்சி நகருக்குள் ஏதோ ஒரு கிராமம் என்பதால் இருவரும் நான்கு நாட்கள் சற்று நிதானமாகத் தங்கி வர வேண்டும் என்று தாத்தா கட்டளை இட்டு விட அவர் உடலும் சற்றுத் தேறி இருந்ததாலும் அஸ்வத் தாத்தாவுக்காக இந்தியா வந்து இங்கேயே இருந்து சாராவைக் கல்யாணம் செய்ததினால் முன்பு போல் அஸ்வத் மேல் வேலுச்சாமி தாத்தா கோபம் காட்டாததால் இருவரையும் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து அதை செயல் படுத்தியும் விட்டார் சக்ரவர்த்தி தாத்தா.

சரியாக வேலுச்சாமி தாத்தா அஸ்வத் சாராவுடன் அவர் வீட்டு வாசலில் வர அதே நேரம் வாசல் முற்றத்தில் சேரில் அமர்ந்திருந்த அவர் மனைவியோ கார் வந்து நின்றதையும் அதிலிருந்த அஸ்வத் சாரா தன் கணவனையும் பார்த்தவர் என்னமோ அவர்கள் யாரையும் பார்க்காத மாதிரி அங்கிருந்த வேலையாட்களிடம்

அடியேய் செல்வி அறிவிருக்குதா டி உனக்கு? நாட்டாம ஊட்டு நாயி சந்தனக்காட்டில் ஏறுதேன்னு வண்ணான் ஊட்டு நாய் வெள்ளாவில ஏறுச்சாம்…. அந்த கதையால இருக்கு..ம்க்கும் பசு மாட்டுத் தொழுவத்துல கட்டிப் போட வேண்டிய கன்னுக் குட்டிய இப்படிக் கட்டிப் போடாம விட்டு வச்சிருக்கியே, பாரு அது என்ன பண்ணுதுன்னு! ரோட்டுல போற நாய் கிட்டேயும் சாக்கடையில உருளுற பன்னிக் குட்டி கிட்டேயும் சிநேகம் வச்சிகிட்டு ஜோடி போட்டுட்டுத் திரியுது! ஏன் நாயேன்னா எட்டி மூக்கை நக்குமாம். அதை அதை வைக்க வேண்டிய இடத்துல வைக்கலனா நம்ம கவுரத மருவாதி தான் போகும். எல்லாம் என் வீட்டு மனுஷன சொல்லணும். பஞ்சம் பிழைக்க வந்ததுங்களுக்கெல்லாம் ஊருக்குள்ள தங்க இடம் தந்தாரு பாரு, அதான் அதுங்க புள்ளைங்கள்ல இருந்து அதுங்க வளர்க்குறவங்க வரை இப்படி சகட்டு மேனிக்குத் திரியுதுங்க.

இந்தா செல்வி, கன்னுக் குட்டிய நான் வீட்டு வழியா புடிச்சிட்டு வந்து பின் பக்கமா தரேன். நீ பின் பக்கமா வந்து என் கிட்ட இருந்து வாங்கிட்டுப் போய் தொழுவத்துல கட்டு. அதுக்கு முன்னாடி இந்த நாய வெளி வாசல்ல கட்டு. அப்படியே அந்தப் பன்னிய அடிச்சித் துரத்தி விடு” என்று தன் பெருத்த உடலை சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறிய படி அவர் கத்திக் கொண்டிருக்கவும்

காரிலிருந்து இறங்கிய அஸ்வத் இதைக் கேட்டுச் சாதாரணமாக இருக்க சாராவுக்கு உடலும் முகமும் கூசி சிவந்து போக, அவர் கணவரோ 

“ஏன் டி வள்ளியம்மா! உனக்கு தான் சத்தம் போட்டு பேசினா உடம்புக்கு ஆகாது இல்ல, பிறகு ஏன் டி கத்துற? அந்த மூணும் குழந்தைங்க மாதிரி ஒண்ணா விளையாடிகிட்டு இருக்குங்க. அதுங்களப் பிரிக்கச் சொல்ற! செல்வி, அதெல்லாம் கட்டிப் போட வேணாம். மூணையும் ஓட்டிகிட்டுப் போய் தொழுவத்துல விடு. அதுங்க அங்க விளையாடட்டும்” என்று அதிகார தோரணையில் பேசியவர் “இவளுக்கு இவ உடம்பத் தூக்கிட்டு நடக்கறதே கஷ்டமா, இதுல கன்னுக் குட்டிய இழுத்துகிட்டுப் போறாளாம் போக்கத்தவ!” என்று முணுமுணுத்துவிட்டு 

“அதை விட இங்க வந்து பாரு, நம்ம சக்கரவர்த்தி மாமா வீட்டுப் பேரனும் பேத்தியும் வந்து இருக்காங்க” என்று அவர் தன் மனைவியை அழைக்கவும்

“அதான் என் பெருத்த ஒடம்ப வச்சிகிட்டு என்னால நடக்க முடியலன்னு நீங்களே சொல்லிட்டீங்க இல்ல? நான் எழுந்து வந்து வரவேற்காம போனா அஸ்வத் தம்பி ஒன்றும் நெனைச்சுக்காது. வாங்க தம்பி வாங்க! சீமையில இருந்து வந்த தம்பி நீங்க தானா? உன் தாத்தா எப்படி இருக்காரு? உன் கல்யாணத்துக்கு நான் வரல. இதான் நீ கட்டிக்கிட்டவளா? ஏன் தம்பி ராசா கணக்கா இருக்கற நீங்க சீமையில பார்க்காத பொண்ணா? இவள…. “ என்றவர் வார்த்தையை மாற்றி “இந்த ஊர் பொண்ண கட்டிக்கிட்டிங்க” என்று அந்தப் பெண்மணி கேலி பேசவும்

“ஏன் இல்ல? இந்த உலகத்துல இருக்குற எல்லா நாட்டு அழகிகளையும் பார்த்து மட்டும் இல்ல பழகியும் இருக்கேன். ஆனா எனக்கான உலக அழகியும் நான் விரும்பறவளும் என்னையே ஆளப் போற பட்டத்து ராணி இங்க தான இருக்கா!” என்று அவருக்கு அதிகாரமாக பதில் சொன்னதோடு மட்டுமில்லாமல் வலது கையால் தன் மனைவியை இழுத்துத் தன்னோடு அவன் அணைக்கவும், அவன் பேச்சையும் செயலையும் பார்த்த வள்ளியம்மா ‘இவன் கிட்ட அதிரடியா பேசினா சரி வராது கொஞ்சம் குழைந்து தான் போகணும்’ என்று நினைத்தவள்

“ஹி… ஹி…. நான் பொதுவா சொன்னேன் அஷ்வத் தம்பி. உனக்கு ஏத்த ராஜாத்தி நம்ம சாரா தான்னு எனக்குத் தெரியாதா இல்ல நான் தான் மறந்திடுவேனா? நீங்க இரண்டு பேரும் இங்க இருக்குற வரைக்கும் உங்க பட்டத்து ராணிய நான் எப்படி கவனிச்சிக்கிறேனு உன் உலக அழகி மனைவி பொம்மி பார்க்கத் தான போறா”என்று அவனுக்கு கேட்கும் படி சொன்னவர்

‘அரசன் குடுமியையும் அம்பட்டன் புடிப்பான்! உன் பட்டத்து ராணி குடுமியும் இந்த வள்ளியம்மா கையில தான்’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டே அவர் தழைந்து போக, கணவனின் பேச்சில் உள்ளம் குளிர அவனிடம் ஒட்டி நின்ற சாரா அந்தப் பாட்டியின் பேச்சில் விதிர் விதிர்த்துப் போய் அவரைப் பார்க்க

“கிராமத்து ஆட்களைப் பற்றி எனக்குத் தெரியாதா பாட்டி? மனசுல எதையும் வச்சிக்காம எதுவா இருந்தாலும் எதார்த்தமா பேசுவிங்க. அதனால நான் பெருசா எடுத்துக்கல. ஆனா நான் எதார்த்தமா சொல்லல. முழு மனசா உணர்ந்து என் பொம்மி எனக்குக் கிடைச்சத வச்சி தான் சொன்னேன்” என்று அவன் விளக்கம் கொடுக்க

“அட என்ன டி நீ? வந்தவங்கள வாசல்லயே நிக்க வெச்சிப் பேசிக்கிட்டு! நீ வா தம்பி உள்ள” என்று வேலுச்சாமி தாத்தா அவர்கள் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து உள்ளே அழைத்துச் சென்று விட அதனுடன் முடிந்தது அவர்கள் உரையாடல்.

வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடமே வேலுச்சாமி தாத்தா சில நிலங்களையும் ஆட்களையும் பார்க்க என்று அஷ்வத்தை வெளியே அழைத்துச் சென்றவர் மதியம் உணவுக்கு தான் அவனை வீட்டிற்கு அழைத்து வர காலையில் இவர்கள் அனைவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டதால் மதியம் இவர்களுக்கு விருந்து வீட்டிலேயே தயாராகி இருந்தது.

அவர்கள் இருவரும் உணவுக்கு வந்த நேரம் தாத்தாவைத் தேடி யாரோ ஒருசிலர் வந்து அவரை மட்டும் வெளியே அழைத்துச் சென்று விட இவனை மட்டும் உணவு மேடையில் அமர வைத்த பாட்டி வேலையாள் மூலம் அவனுக்கு உணவு பரிமாற ஏற்பாடு செய்ய. வந்ததிலிருந்து தன் மனைவியைக் கண்ணில் காணாமல் தேடியவன் சரி உணவு பரிமாறவாது அவள் வருவாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்க அங்கு வேலையாளைப் பார்த்தவன்

“பொம்மி எங்க? நீங்க போய்ட்டு அவள அனுப்புங்க” என்று சொல்ல

“இல்லங்க ஐயா! அவங்க ஏதோ கொஞ்சம் வேலையா வெளியே போய் இருக்காங்க. அதான் பெரியாத்தா என்ன உங்களுக்குப் பரிமாறச் சொன்னாங்க” என்று அவள் இழுக்கவும் 

“எங்க போய் இருக்கா? என் கிட்ட சொல்லாம! சரி அவ வரட்டும். அவ வந்த பிறகே நான் சாப்டுக்கறேன்”

‘அச்சோ! பெரியாத்தா இதைக் கேட்டா திட்டுவாங்களே! அந்த பொம்மி பொண்ணு இப்போ எப்படி வரும்? அதைத் தான் வேலை செய்ய மிளகாய் குடோனுக்கு அனுப்பி இருக்காங்களே! இப்போ என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியலையே?’ என்று வேலை செய்யும் அந்தப் பெண் கையைப் பிசைந்து கொண்டு நின்றவள் அஷ்வத் உணவு மேஜையை விட்டு எழுந்திருக்கவும்

“ஐயா… ஐயா… கொஞ்சம் இருங்கையா. அம்மா எங்க போய் இருக்காங்கனு தெரியல. இதோ பெரியாத்தா கிட்ட கேட்டு கையோட கூட்டிட்டு வரேன். அது வரை நீங்க சாப்பிட்டு இருங்க. உங்களுக்குப் பரிமாறின பொறவு நான் போறேன்” என்று அவள் சொல்லவும்

“இல்ல.. எனக்கு எதுவும் வேணாம். முதல்ல அவ வரட்டும் அப்பறம் நான் சாப்பிட்டுக்கிறேன் என்று அவன் கறாராகச் சொல்லவும் உடனே அவள் ஓடிப் போய் பாட்டியிடம் என்ன சொன்னாளோ உடனே அவரோ தன் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனிடம் ஓடி வந்தவர் 

“அஷ்வத் தம்பி, உட்காருங்க உட்காருங்க! நான் பரிமாறுறேன். அந்தக் கழுதைக்கு உங்க ஞாபகம் எங்க இருக்கு? புருஷன்காரன் வருவானே நம்ம கையால சாப்பாடு பரிமாறி பக்கத்துலயிருந்து பார்த்துக்கிடலாம்னு இல்லாம இங்க அவ வயசு சினேகிதிங்களப் பார்க்கவும் அரட்டை அடிக்கவும் போய்ட்டா. நாம போய் இப்போ கூப்பிட முடியுமா? அது நல்லா தான் இருக்குமா? 

வயசு பொண்ணுங்க நாளு பேரு ஒண்ணு சேர்ந்தா அவ்வளவு சீக்கிரமாவா வருவாளுங்க? அந்தப் பொண்ணு பொழுது சாய்ந்த பிறகு தான் தம்பி வரும். அதனால நீங்க சாப்பிட வாங்க. அந்தக் கழுதைக்காக நீங்க ஏன் பசியா இருக்கீங்க? ஐயர் வர்றவரைக்கும் அமாவாசை காத்திருக்குமா சொல்லுங்க” என்று அவர் நீட்டி முழங்கி அவனுக்குப் பரிந்து பேசுவது போல் சாராவை அவர் மறை முகமாகக் குற்றம் சாட்டவும்

“இருக்கட்டும் பாட்டி, அவ மெதுவாவே வரட்டும். அவங்க சிநேதிகளை எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சி இல்ல? அதனால அவ போனதுல என்ன தப்பு இருக்கு? அவ எப்ப வராளோ வரட்டும். அவ வந்த பிறகே எவ்வளவு நேரம் ஆனாலும் நான் சாப்டுக்கிறேன். என் மனைவி கையால பரிமாறி நான் சாப்டா தான் பாட்டி எனக்கு திருப்தியா இருக்கும்” என்று அவன் மனைவிக்குப் பரிந்து பேசியது மட்டுமில்லாமல் அவள் வந்தால் தான் பச்சைத் தண்ணி என்றாலும் குடிப்பேன் என்ற ரீதியில் அவன் பேசிவிட்டு அமர்ந்து விடவும்

அதைப் பார்த்த வள்ளியம்மா பாட்டிக்கு ஒரு பக்கம் கோபமாகவும் இன்னொரு பக்கம் பகீர் என்றும் இருந்தது. கோபம் ஏனென்றால் இவ்வளவு சொல்லியும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் மனைவிக்கு ஜிங்குஜா போடுகிறானே என்றது தான் அது. பயம் எதற்கென்றால் தாத்தாவும் அஷ்வத்தும் வெளியே போன பிறகு சாராவைப் படுத்தி எடுக்க வேண்டும் என்ற முடிவில் அவளை மிளகாய்களை மூட்டைப் பிடிக்க வேலையாட்களில் வேலையாளாக வேலை செய்ய சாராவை அவர் மிளகாய் மண்டிக்கு அனுப்பியிருந்தார். 

அதை இங்கு அஷ்வத்திடமோ இல்லை தன் கணவனிடமோ அவர் சொல்ல முடியுமா? அவள் இங்கில்லை என்பதை மறைக்கத்தான் தன் கணவனை வெளியே அனுப்பினது. அஷ்வத்திடம் ஏதாவது பொய் சொல்லி சமாளித்து விடலாம் என்று அவர் நினைத்தது. ஆனால் அஷ்வத் மனைவி மனைவி என்று உருகோ உருகு என்று உருகி மேலும் இவர் பேச்சு எதையும் காதில் வாங்காமல் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்கவும் உள்ளுக்குள் அவனை வசை பாடியவர் இப்போது இவனுக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் தன் கணவனிடம் இன்று முழுக்கத் திட்டு வாங்க வேண்டியிருக்கும் என்று நினைத்தவர் வேண்டா வெறுப்பாக வேலையாளிடம் கண்ணைக் காட்டியவர் 

“இந்தா செல்வி! போ போய் அந்த பொம்மி பொண்ணக் கூட்டிகிட்டு வா. அவ புருஷன் சாப்பிடாம உட்கார்ந்து இருக்கானு சொல்லி கூட்டிகிட்டு வா. அப்பவாது அந்த பொண்ணுக்கு புருஷன் ஞாபகம் இருக்கானு பார்ப்போம்” என்று பொடி வைத்துப் பேசி வேலையாளை அனுப்பியவர் 

“மணி மூணு ஆகுது. அவ வயிறு முட்ட சாப்டு இருப்பா. இது தெரியாம இந்தப் புள்ள இப்படிப் பசி பட்டினியா அவளுக்காகக் காத்து கிடக்கு” என்று வாய் விட்டுப் புலம்பியவர் 

“இதோ வந்திடுவா தம்பி. இங்கையே உட்கார்ந்து இருங்க. சித்த எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு இதோ வரேன்” என்று அவர் சென்று விட.

அவர் சாராவை ஏத்திவிட்டுப் பேசியதில் அஷ்வத்துக்கு சிறிதும் பாட்டி மீது சந்தேகமோ தன் மனைவி மேல் கோபமோ வரவில்லை. தன் மனைவி எங்கே அவளை இப்போதே காண வேண்டும் என்ற ஆசை தான் அவனுக்கு அதிகமானது. அவன் தன் மனைவியையே நினைத்துக் கொண்டு அமர்ந்து இருக்க 

“என்னங்க இன்னும் சாப்பிடாம என்ன பண்றீங்க?” என்று அந்த அறையின் வாசலில் சாராவின் குரல் கேட்கவும், நிமிர்ந்து அவளைப் பார்த்த அஷ்வத் அவள் கோலத்தைக் கண்டு அதிர்ந்து இருக்கையை விட்டு எழுந்தே விட்டவன் 

“என்ன டி என்ன ஆச்சி? ஏன் இப்படி இருக்க? என்ன டி கோலம் இது!” என்ற கூவலுடன் அவன் அவளிடம் நெருங்கவும்

“ஐயோ! கிட்ட வராதிங்க.. அங்கேயே நில்லுங்க” என்று அவனுக்கு மேல் கூவியவள் அப்போது தான் தான் செய்த தவறை உணர்ந்தாள் சாரா. 

காலையில் பாட்டி அவளை உருட்டி மிரட்டி மிளகாய் மண்டிக்கு அனுப்பி வைக்க அங்கே போனவள் தான் அணிந்திருந்த சாதாரண புடவையின் மேல் ஆண்கள் போடும் முழுக்கை சட்டையை அணிந்து தலையில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு தரம் பிரித்து வந்த காய்ந்த மிளகாய்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுடன் சேர்ந்து சாக்குப் பையில் அடைத்து மூட்டை பிடிக்க ஆரம்பித்தாள் சாரா. 

இது ஒன்றும் அவளுக்குத் தெரியாததோ இல்லை செய்யாத வேலையோ இல்லை. அவள் சின்ன வயதில் இருந்தே இதெல்லாம் செய்து தான் இருக்கிறாள். ஆனால் இடையில் இப்போது ஏற்பட்ட சில மாற்றத்தால் அவள் வெளி நாடு போக வேண்டி இருந்ததால் இந்த வேலைகளைச் செய்யாமல் கொஞ்சம் இடைவேளை விட்டு இருந்ததால் இப்போது இந்த வேலைகளைச் செய்ய அவளுக்குச் சிரமமாக இருக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேலை செய்தவள் தன் கணவனின் தகுதியையும் பேரையும் புகழையும் எண்ணி துக்கம் நெஞ்சடைக்க வேலை செய்து கொண்டிருந்தவள். 

அந்த நேரத்தில் தான் வேலைக்காரப் பெண் அஷ்வத் சாப்பிடாமல் இருப்பதாகவும் அதனால் பாட்டி கூப்பிடுவதாக வந்து சொல்லவும் கணவன் சாப்பிட வில்லை என்ற எண்ணத்தில் பாட்டியின் கோபத்தை அலட்சியம் செய்தவள் வேலைகளை அப்படியே போட்டு விட்டு கழுத்தில் வியர்வை வடிய முகத்தில் எண்ணை பிசு பிசுப்பு மின்ன கையிலும் முகத்திலும் கழுத்திலும் மிளகாயின் எரிச்சலுடன் அதை விட உடல் முழுக்க மிளகாயின் நெடியுடன் கணவனிடம் வந்து நின்றாள் பொம்மி. அந்த கோலத்தை பார்த்து தான் அஷ்வத் அப்படி கேட்டது அதற்கு அவள் பதறி விலகவும் கண்ணில் கூர்மையுடன் அவன் அவளைப் பார்க்க 

“என் மேல எல்லாம் மிளகாய் நெடிங்க. அது உங்களுக்கு ஒத்துக்காதேனு தான் நான் விலகினேன்” என்று அவள் தான் விலகியதற்கு விளக்கம் கொடுக்கவும் 

“மிளகாய் நெடியா? அது ஏன் உன் மேல வருது?” என்று அவன் கண்களைச் சுருக்கிக் கேட்கவும் 

“அது வந்து.. மிளகாய் மண்டிக்குப் போய் இருந்தேன் இல்ல? அதான்..” என்று அவள் குரல் தந்தி அடிக்கவும் 

“மிளகாய் மண்டியா? அங்க எதுக்கு நீ போன? நீ உன் பிரண்ட்ஸ பார்க்க இல்ல போனதா பாட்டி சொன்னாங்க!” 

“பாட்டி பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவள் அட அந்த பிரண்ட்ஸ் எல்லாம் மிளகாய் மண்டியில தானங்க வேலை செய்றாங்க? அப்போ அவங்களப் பார்க்க அங்க தானங்க போகனும் போனா சும்மா இருக்க முடியுமா அப்படியே அவங்களுக்கு உதவியா அவங்க கூட சேர்ந்து மிளகாய்யை மூட்டை கட்டறதுல உதவியா வேலை செய்துட்டு வந்தேன். ஏன், உங்க மனைவி இப்படி ஒரு வேலை செய்யறதால உங்களுக்கு அசிங்கமாவோ அவமானமாவோ கவுரவ குறைச்சலாவோ இருக்கா என்ன?” என்று அவள் அவன் கண்ணைப் பார்த்துக் கேட்கவும் 

“அட ச்ச.. இதுல என்ன டி இருக்கு? என் மனைவி என்ன ஊர் கதை பேசினாளா இல்ல ஊரைத் தான் ஏமாற்றினாளா? உழைச்சா தான? எந்த வேலை செய்து உழைத்தாலும் தப்பு இல்ல” என்று அவன் சொல்லும் போதே அவனையும் மீறி அவன் குரல் கனிந்து போய் ஒலிக்கவும், அவன் குரலிலும் அவன் சொன்ன வார்த்தையிலும் உள்ளம் குளிர்ந்தவளின் கண்கள் தன்னையும் மீறி கலங்கி விட அதை கணவனிடம் இருந்து மறைத்தவள் 

“சரி நீங்க போய் சாப்பிடுங்க. நான் செல்வி அக்கா கிட்ட சொல்லி பரிமாறச் சொல்றேன்” என்று அவள் சொல்லவும் 

“நீ சாப்டியா?” 

எங்கே காலையிலிருந்து அவள் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லையே! பிறகு எப்படி சாப்பிட? இதைச் சொன்னால் கணவன் கோபப் படுவான் என்று அறிந்தவள் 

“ம்ம்ம்… நான் போன உடனே பிரண்ட் வீட்டுல கொஞ்சம் சாப்டேன்” என்று அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் அவள் தலை குனிந்து சொல்லவும், அவள் சொல்வது பொய் என்று உணர்ந்தவனோ 

“சரி அப்போ நீ போய் வேலைய கண்டினியூ பண்ணு. அது முடிஞ்சி எப்போ நீ வந்து உன் கையால பரிமாறுவாயோ அப்போ நான் சாப்பிட்டுக்கிறேன் என்று சொன்னவன் சென்று ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து விட, அவன் பின்னே சென்றவள்

“பிளீஸ்! நான் சொல்றதக் கேளுங்க. செல்வி அக்காவப் பரிமாறச் சொல்றேன் சாப்பிடுங்க. நீங்க ஏங்க பசியா இருக்கீங்க?” என்று அவள் கெஞ்ச 

நீ சொல்வது எதுவும் என் காதில் விழவில்லை என்பது போல் கைகளை தன் மார்பில் கட்டியவனோ உதட்டை அழுத்த மூடி முகத்தில் ஒரு பிடிவாதத்துடன் கண்களை மூடி ஸோஃபாவில் பின்புறமாக தலை சாய்த்து அவன் அமர்ந்து விட

கணவனிடம் நின்று நின்று பார்த்தவள் அவன் கொஞ்சம் கூட அசரவில்லை என்றதும் கண்ணில் நீர் வழிய அங்கிருந்து சென்றவள் தலை குளித்து வேறு புடவை கட்டி புத்தம் புது பூவாக அவன் முன் வந்து நின்றவள் 

“சாப்பிட வாங்க” என்று அழைக்க 

அப்போதும் அவன் தன் கண்களைத் திறக்காமல் அவள் சொன்னதைக் காதிலேயே வாங்காதவன் போல் அமர்ந்து இருக்க, அதைப் பார்த்தவள் எப்படி பிடிவாதம் பாரு குழந்தை மாதிரி என்று கணவனின் பிடிவாதத்தை உதட்டில் சிறு சிரிப்புடன் ரசித்தவள் அவனை நெருங்கி அவன் தலை முடியைக் கோதி 

“ஏ.கே போதும் பிடிவாதம், வாங்க சாப்பிட. சரி உங்க பொண்டாட்டியே பரிமாறுறேன் வாங்க” என்று அவன் தாடையைப் பிடித்து அவள் கெஞ்சவும் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவன் தலை குளித்து முடியை முன்புறமாக போட்டு அதிலிருந்து ஈரம் சொட்டச் சொட்டத் தன் முன் ஓர் ரவிவர்மா ஓவியமென நின்றிருந்த.

தன் மனைவியின் அழகை கண்களால் அவன் பருகிக் கொண்டிருக்க அவள் குனிந்த படி நின்று அவன் தாடையைப் பிடித்ததில் அவள் கூந்தலோ முன்பக்கமாகச் சரிந்து அவன் முகத்தருகில் நர்த்தனம் ஆட அதிலிருந்து உருண்டோடி வழிந்த நீரோ சொட்டுச் சொட்டாகச் சரியாக அவன் நெஞ்சில் விழ அதன் ஈரமோ அவன் ஆடையையும் மீறி அவன் நெஞ்சில் இறங்கி அவனைக் குளிர்விக்க ஒருவித கிறக்கத்துடனே அவனோ அவளைப் பார்த்து இருக்கவும், பெண்ணவளோ அவன் பார்வையில் சிவந்து போய் 

“என்னங்க அப்படிப் பார்க்குறீங்க?” என்று மயக்கும் குரலில் அவள் கேட்க, உதடுகளை அதிகம் பிரிக்காமல் மொட்டெனப் பிரித்து அவள் கேட்ட விதத்தில் தன்னுள் ஒரு மாற்றத்தை உணர்ந்தவனோ சட்டென அவள் உதடுகளைத் தன் ஆள் காட்டி விரலால் வருடி விட அதில் அவளோ தன் கண்கள் மூடி அந்த இன்பத்தை அனுபவிக்க 

அதே நேரம் எங்கோ பாத்திரம் விழ அந்த சத்தத்தில் இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தையும் செயலையும் உணர்ந்து தங்கள் ஏகாந்த நிலையிலிருந்து வெளியே வர அதில் தெளிந்த சாரா ஓட்டமும் நடையுமாக சாப்பாட்டு அறையை நோக்கி சென்றவள் அவனுக்கு உணவை எடுத்து வைக்கவும் அவள் பின்னேயே வந்த அஷ்வத் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் தனக்காக உணவைப் பரிமாறும் மனைவியைப் பார்த்தவன் 

“ஏன் பொம்மி என்ன தான் அவசரம் என்றாலும் இப்படி சோப்பு நுரையெல்லாம் அப்படியே இருக்குற மாதிரியா குளிச்சிட்டு வருவ?”

‘ஐயோ! அப்படியேவா வந்துடோம்’? என்று அவனை பார்த்து கேட்டவள் கூடவே தன் கழுத்து கை கால் என்று ஆராயவும் 

“அதுலயும் அவசரத்துல துணி துவைக்கற சோப்பு போட்டா குளிச்சிட்டு வருவ?” என்று அவன் மறுபடியும் ஒரு துள்ளலான குரலில் சொல்லவும், இதுவரை நிஜம் என்று நம்பியவள் அவன் குரலின் பேதத்தை உணர்ந்து 

“என்னது துணி சோப்பா?!” என்று நம்பாத குரலில் கேட்டு அவள் மறுபடியும் உதடு குவிக்கவும் 

“ஆமாம் ஆமாம்! எனக்கு என்னமோ அப்படித் தான் இருக்கு. நீ வேணா என் கிட்ட வாயேன் உன்னக் கட்டிப் பிடிச்சி வாசம் பார்த்துச் சொல்றேன்” என்று மயக்கும் குரலில் சொன்னவன் தன் ஆள் காட்டி விரலை நீட்டி மறுபடியும் அவள் உதட்டின் வரி வடிவத்தை வருடியவன் 

“அதிலும் நான் சொன்ன சோப்பு நுரை இங்க தான் இருக்கு” என்று அவன் சொல்லவும் அவன் செயலில் உடலில் மின்சாரம் பாய, அவன் கையைக் கெட்டியாகப் பிடித்தவள் 

“என்னங்க இது விளையாட்டு? பிளீஸ் சாப்பிடுங்க” என்று அவள் கொஞ்சும் கிளியாய் மிழையவும் 

“அதுக்கு முதல்ல நீ என் கைய விட்டா தான டி நான் சாப்பிட முடியும்?” என்று ஒரு வித சிரிப்புடன் அவன் சொல்லவும் அதில் பட்டென அவன் கையை உதறி விட்டு அவள் சற்றுத் தூர விலகி நிற்கவும் அவள் செயலில் வாய் விட்டுச் சிரித்தவனோ 

“நீயும் உட்கார் பொம்மி சாப்பிடலாம்” என்று அழைக்க 

“இல்ல நீங்க சாப்பிடுங்க. நான் பிறகு சாப்டுறேன்” என்று சொல்லிக் கொண்டே அவள் பரிமாற, அவள் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவனோ அவள் எழ முடியாத அளவுக்கு அவளைத் தன் மடியில் அமர வைத்து 

“நீ எல்லாம் அப்புறம் தனியா ஒண்ணும் சாப்பிட வேணாம். இப்பவே சாப்பிடு” என்றவன் அவளுக்குத் தட்டில் உள்ள உணவைப் பிசைந்து ஊட்டி விட ஒரு வினாடி அவன் முகத்தையே பார்த்தவள் பின் எந்த வித மறுப்பும் சொல்லாமல் அவன் கொடுத்த உணவை வாங்கிக் கொள்ள அதன் பின் அவளை மடியில் அமர வைத்த படியே அவனும் சாப்பிட்டு முடிக்க. 

இதெல்லாம் பார்த்த பாட்டிக்குத் தான் வயிறு தீ பந்தமாக எரிந்தது. 

‘இவனையும் இவளையும் இங்கேயிருந்து போறதுக்குள்ள பிரிச்சி ஆளுக்கொரு திசையா அனுப்பி விடலாம்னு நான் நினைச்சா இதுங்க என்னமா கொஞ்சிக் குலாவுதுங்க! ஏன் டி எனக்கு சாப்பாடு கொடுக்காம போனனு இவன் கோபப் படுவான்னு பார்த்தா என்னமா மடிமேல உட்கார வச்சி ஊட்டி விடறான்! இவனை எல்லாம் என்ன செய்ய? அப்பாவுக்குத் தப்பாம இல்ல இந்தப் பையன் பொறந்திருக்கான்! இருக்கட்டும் இருக்கட்டும்.. இவன் அப்பனும் ஆத்தாவும் வாழாமப் போன மாதிரியே இவனும் வாழாமப் போக நான் சீக்கிரமே வழி பண்றேன்!’ என்று அந்தப் பாட்டி மனதில் சூளுரைக்க 

சாப்பிட்டு முடித்த உடனே மறுபடியும் சாரா மிளகாய் மண்டிக்குச் செல்ல நினைக்க அவளைப் போக விடாமல் தடுத்தவன் அவள் உடல் அசந்து போய் இருப்பதைப் பார்த்ததாலே அவளைத் தூங்கி ரெஸ்ட் எடுக்கச் சொன்னவன் பின் மாலை அவளை எழுப்பி வெளியே கிளம்பச் சொல்ல ரொம்ப நாள் கழித்து இன்று அவள் செய்த வேலையால் எழுந்திருக்க முடியாமல் அசதியில் படுத்திருந்தவளிடம் வந்த அஷ்வத் 

“என்ன பொம்மி நான் சொல்லிகிட்டே இருக்கேன் எழுந்திருக்காம படுத்துகிட்டே இருக்க! ம்ம்ம்ம்.. சீக்கிரம் கிளம்பு அப்ப தான் இருட்டுறதுக்குள்ள மலை மேல ஏறி இந்த திருச்சி நகரின் அழகை இரவு விளக்கு வெளிச்சத்துல பார்க்க முடியும்” என்று அவன் படபட வென்று சொல்லவும் 

“என்னது இப்போ நாம மலை மேல ஏறப் போறோமா? உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கா? அதுவும் இன்னைக்கேவா? வேணாங்க.. நாம இன்னோர் நாள் போலாமே! இன்னைக்கு வேண்டாங்க” என்று அவள் மறுக்க 

“அதெல்லாம் முடியாது. நான் சொன்னது சொன்னது தான்! இந்த ஊர்ல என்ன ஸ்பெஷல்னு நான் நெட்ல போட்டுப் பார்த்தப்ப நிறைய இடத்தை விட இந்த இடம் தான் என்னைக் கவர்ந்தது. அதான் உடனே போகணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று சொன்னவன் மேற்கொண்டு அவளைப் பேச விடாமல் குளிக்கச் சென்று விட

சாராவுக்கும் ஆசை தான் மலை மேல் ஏறி இந்த நகரின் அழகை ரசிக்க! ஆனால் இன்று வந்ததிலிருந்து கொஞ்சம் கூட உட்காராமல் அவள் நின்றபடியே வேலை பார்த்ததில் அவள் கால்கள் இரண்டும் வலி எடுத்த படி இருக்க இப்போது அவளால் எப்படி அத்தனைப் படிகள் ஏற முடியும்? 

‘எழுந்து நின்றாலே கால்கள் இரண்டும் நடுங்குதே இப்போ இதை இவர் கிட்ட எப்படி சொல்றது?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கவும் குளியல் அறையிலிருந்து வெளியே வந்த அஷ்வத் அவள் இப்போதும் படுத்திருப்பதைப் பார்த்தவன் 

“என்ன பொம்மி நான் இவ்வளவு சொல்லியும் இன்னும் எழுந்திருக்காமல் படுத்துகிட்டே இருக்க?” என்று ஓர் அதட்டலுடன் கேட்கவும் வேறு வழியில்லாமல் எழுந்து குளித்துக் கிளம்பினாள் சாரா. அங்கே போனதும் தாயுமானவர் சந்நிதி வரை கூட அவளை ஏற விடவில்லை அஷ்வத். தன் கையில் அவளைக் குழந்தை என ஏந்தியவன் 

“நீ எவ்வளவு டயர்டா இருக்கேனு எனக்குத் தெரியும். ஆனா நீ உள்ளவே அடைந்து இருந்தா இன்னும் டயர்டா இருக்கும்னு தான் பிடிவாதமா வெளியே அழைத்து வந்தேன். இந்த மலைப்பகுதிக்கு வந்தால் உனக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்னு தான். நீ ஒண்ணும் நடக்க வேணாம். நானே உன்னைத் தூக்கிக்கிட்டுப் போறேன்” என்று சொன்னவன் அதன் படியே அவளை ஏந்திக் கொண்டு முதல் படியில் காலை வைக்க. அவன் தூக்கியதும் பதறித் துடித்த சாரா 

“என்னங்க இது பொது இடத்துல வந்து இப்படி எல்லாம் நடந்துக்குறீங்க? முதல்ல என்னை இறக்கி விடுங்க. நான் நடந்தே வரேன்” என்று அவள் பிடிவாதமாக மறுக்கவும், அதை விட பிடிவாதத்துடன் 

“என்ன டி நான் என்ன எங்க நாடு மாதிரி பொது இடத்துல வச்சி உனக்கு என்ன லிப் டூ லிப் கிஸ்ஸா கொடுத்தேன்? என் மனைவியால நடக்க முடியாது. அதனால தூக்கினேன் அவ்வளவு தானே? இதே மாதிரி நீ ரொம்ப பண்ண இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன அந்த லிப் டூ லிப் கிஸ்ஸ நான் உனக்கு கொடுத்துடுவேன். யார் சுற்றி இருக்காங்கனு எல்லாம் பார்க்க மாட்டேன்” என்று அவளை மிரட்டியவன் உண்மையாகவே முத்தம் கொடுப்பதற்காக அவள் முகம் நோக்கி குனியவும்

“அச்சசோ!” என்று தன் கையால் வாய் மூடியவள் இனிமே நான் எதுவும் பேச மாட்டேன் என்பது போல் தலையை ஆட்டியவள் அதன் படியே பேசாமல் இருக்க. என்ன தான் கணவன் விடாப்பிடியாகத் தூக்கி வருவது ஒரு வகையில் மனதில் கோபமாக இருந்தாலும் ஒரு தாய் போல் தன் முகம் பார்த்துத் தன் உடல் வேதனைகளை அறிந்து கொள்ளும் கணவன் தனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள் சாரா.

அவனின் செயலையும் தோற்றத்தையும் கண்டு சிலர் அவர்களை உற்றுப் பார்த்தும் இன்னும் சிலர் ‘பொண்ணு மசக்கையா இருக்கா போல! அதான் அவ புருஷன் தூக்கிகிட்டுப் போறான்’ என்றெல்லாம் சொல்லவும் சாராவுக்கு வெட்கத்துடன் கூடிய சந்தோஷம் மனதில். 

மேலே சென்று விநாயகரைத் தரிசித்துப் பிறகு அங்கிருந்து காவேரியை ரசித்தவர்கள் சிலு சிலுவென்று காற்று உடலிலும் முகத்திலிலும் மோத இருட்டில் சிறு சிறு வெளிச்சத்தில் எறும்பு போல ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளை ரசித்தவர்கள் பின் அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் கிளம்ப இப்போதும் அஷ்வத் அவளை நடக்க விடவேயில்லை.

இருவரும் சிரித்த முகமாக வீடு வந்ததில் வேலுச்சாமி தாத்தா சந்தோஷப் பட வழக்கம் போல வள்ளியம்மா பாட்டி கருவிக் கொண்டே ஒதுங்கிச் சென்றார்.

இங்கு இருவருக்கும் ஒரே அறை என்பதால் எங்கு படுப்பது என்ற தயக்கத்தில் சாரா நின்றிருக்க அப்படி எந்த வித தயக்கமும் இல்லாமல் கட்டிலில் படுத்த அஷ்வத் 

“என்ன பொம்மி கால் வலிக்குதுனு சொல்லிட்டு நின்னுகிட்டே இருக்க? வா வந்து படு” என்று சொல்ல 

“இல்ல நான் வேணும்னா கீழேயே படுத்துக்கவா?”

“ஏன் எதற்கு?” 

“……” அவள் மவுனமாக இருக்கவும் 

அவள் முகத்தில் சில குழப்பங்களைப் பார்த்தவன் எழுந்து கட்டிலில் அமர்ந்து 

“இங்க பாரு டி, நீ என் மனைவி நான் உன் கணவன்.கணவனுக்கான உரிமை தெரிந்து தான் நான் உன் கழுத்துல தாலி கட்டினேன். தாலின்னா என்ன கணவன்னா என்ன தெரியாத அளவுக்கு நான் ஒண்ணும் சின்னத்தம்பி பிரபு இல்ல! எனக்கான உரிமையும் கடமையும் காதலும் என்னனு எனக்கு நல்லாவே தெரியும். 

ஆனா இப்போ எதுவும் வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்னு தான் நான் அமைதியா இருக்கேன். ஆனா நீ நான் ஏதோ உன்னைப் பிடிக்காம வேற வழி இல்லாம உன்னைக் கல்யாணம் பண்ணி பேருக்குனு சிரிச்சிப் பேசறேனு நீ பாட்டுக்கு ஏதோ முட்டாள் தனமா யோசிச்சிகிட்டு இருக்காத. இதுவரை யோசிச்சிருந்தா அதை மறந்திடு. அதே மாதிரி இனிமே யோசிக்காத அளவுக்கு அதைத் தூக்கித் தூரப் போடற வழியைப் பாரு. 

மீறி நான் யோசிப்பேன்னு நீ பிடிவாதமா இருந்து யோசிச்சா உன்னைக் கொன்னே போட்டுடுவேன் சொல்லிட்டேன்” என்று அவளுக்குக் கோபமாக விளக்கம் கொடுத்தவன் அதே கோபத்துடன் கட்டிலில் படுத்து கையை நெற்றியில் வைத்துத் தன் முகத்தை மறைத்த படி கண்களை மூடிக் கொள்ள

‘அட நம்ம புருஷனுக்கு சின்னத்தம்பி பிரபு கூட தெரிஞ்சிருக்கே!’ என்று அந்த நேரத்திலும் மனதில் அவனுக்குக் கவுண்டர் கொடுத்தவள் ‘இதை எல்லாம் கொஞ்சம் சிரிச்சிகிட்டே சொன்னா தான் என்னவாம் இவர்?’ என்று முணுமுணுத்துக் கொண்ட சாரா பேசாமல் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக் கொள்ள 

மனைவியை அணைத்துக் கொண்டு படுக்க அஷ்வத்துக்கும் ஆசை தான். எங்கே நாம் அதைச் செய்யப் போக மனைவி மறுபடியும் நான் ஏதோ வேண்டா வெறுப்பாக செய்வதாக நினைப்பாளோ என்று நினைத்துப் பேசாமல் படுத்துத் தூங்கிப் போனான் அவன். 

சற்று நேரம் தான் தூங்கியிருப்பான் அவன். அதன் பிறகு சாராவோ குழந்தை என கை கால்களைப் பரப்பி ரங்க ராட்டினம் சுற்ற ஆரம்பிக்க முதலில் தூக்கத்தில் அவளுக்கு என்னமோ ஏதோ என்று நினைத்தவன் பின் அவள் செய்கையில் சிரிப்பு வர அவள் சுழலும் இடங்களுக்கு ஏற்க அவளுக்கு இடம் விட்டு இவனும் கட்டிலிலேயே படுக்க

அப்போதும் அவன் மனையாள் சும்மா இல்லாமல் தன் இரண்டு கால் பாதங்களையும் தூக்கி அவன் முகத்திலும் கழுத்திலும் போட அதில் முழுமையாக தூக்கம் கலைந்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க மல்லாக்க படுத்து இருந்தவள் கட்டிலின் விளிம்பில் தலை கீழே தொங்க அவள் படுத்திருந்த கோலத்தைப் பார்த்தவன் மனதில் பயம் சூழ அவளைத் தூக்கிச் சரியான வாக்கில் படுக்க வைத்தவன் 

“இவ செய்யற சாகசத்தப் பார்த்தா அந்த ஸ்பைடர் மேனே தோற்றுடுவான் போலிருக்கே!” என்று வாய் விட்டு அவன் புலம்ப

“ம்ம்ம்… ஆமா மச்சான்” என்று அவள் பதில் கொடுக்கவும் ‘இவள் முழித்துத் தான் இருக்கிறாளோ?’ என்று ஒரு வினாடி அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன் அவள் உண்மையாவே தூக்கத்திலேயே அவனுக்குப் பதில் கொடுக்கவும் வாய் விட்டுச் சிரித்தவன் 

“என் செல்ல பொம்மி, என் மனசை உன் நினைவுகளால வலை பின்றதுல நீ ஸ்பைடர் உமன் தான் டி” என்று காதல் வழியும் குரலில் சொன்னவன் அவள் நெற்றி முடியை ஒதுக்கி அங்கு இதழ் பதித்தவன் தன் மனைவிக்காக அந்த முழுக் கட்டிலையும் விட்டுவிட்டு முதல் முறையாக அவன் தரையில் துணி விரித்துப் படுத்துத் தூங்க முயற்சிக்க, அப்போதும் உங்களை விடுவேனா என்று அவன் மனையாளோ சற்று நேரத்திற்கெல்லாம் உருண்டு புரண்டு அவன் மேலேயே தொபுக்கடீர் என்று விழ, அதிலிருந்து அவன் மீள்வதற்குள் திடீர் என்று சாராவே 

“ஸ்…. ஆ…. ஐயோ பாட்டி, வலிக்குது பாட்டி! அடிக்காதிங்க” என்று அவள் பிதற்ற ஆரம்பிக்கவும், ஒரு பதற்றத்துடன் அவன் அவள் பேசுவதைக் கேட்க ஆரம்பிக்க 

“ஐயோ அம்மா வலிக்குதே! நான் பாட்டினு சொல்ல மாட்டேன். இங்கிலீஷ் படிச்ச வேலைக்காரி தான் நான். அதனால நான் உங்கள மேடம்னே சொல்றேன். இல்ல இல்ல இது எதையுமே நான் ரெண்டு தாத்தா கிட்டேயும் சொல்ல மாட்டேன்.

நான் இன்னைக்கு அவரோட வந்திருக்கேன். இப்போ போய் வேலைக்குப் போகச் சொன்னா அது அவருக்குத் தன்மானப் பிரச்சனை இல்லையா? அச்சோ நான் வேலைக்குப் போறேன். கால் வலிக்குது உங்க கையில இருக்குற குச்சியக் கீழ போடுங்க” 

இப்படி எல்லாம் தங்கு தடையின்றி ஏதேதோ வார்த்தைகளைச் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறியவள் இறுதியாகக் கண்ணில் கண்ணீர் வழிய 

“ஏன் மச்சான் என்னை இங்க கூட்டிகிட்டு வந்தீங்க? இந்த பாட்டி என்னை எப்போதுமே எப்படி எல்லாம் பாடாப்படுத்தும் தெரியுமா? என்னால தாத்தா கிட்ட எதுவும் சொல்ல முடியாது. இப்போ உங்க கிட்ட கூட சொல்ல முடியல. கால்ல பச்சைக் குச்சியால எப்படி அடிச்சாங்க தெரியுமா? இப்பவும் வலிக்குது மச்சான் காலு. எனக்கு தான் யாருமே இல்லையே இதை எல்லாம் சொல்ல!” என்று அவள் தேம்ப, அவளைத் தன்னிடமிருந்து புரட்டிக் கீழே படுக்க வைத்தவன் 

“நான் இருக்கேன் டி கண்ணம்மா உனக்கு” என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன் உடல் அசதியில் இப்போதும் அவள் தூக்கக் கலக்கத்தில் தான் உளறுகிறாள் என்பதை அறிந்தவன் எழுந்து அவள் பாதமருகில் அமர்ந்து அவள் பாதங்களைத் தூக்கித் தன் மடி மீது வைத்து ஆடைகளை விலக்கி ஆராய அவள் கால்களிலோ அங்கங்கே ரத்தம் கட்டிப் போய் இருந்தது. எதுவும் பேசாமல் தன் மனதுக்குள்ளேயே எரிமலையென குமுறியவன் இதமாக அவள் கால்களை வருடிப் பிடித்து விட 

“ம்ம்ம்… அப்படி தான் ஆத்தா! இன்னும் கொஞ்சம் பிடிச்சி விடேன்” என்ற கெஞ்சலுடன் கணவன் பிடித்து விடும் இதத்திலேயே எந்த முணுமுணுப்பும் இல்லாமல் தூங்கிப் போனாள் சாரா. 

ஆனால் அவனோ தூங்காமல் விடிய விடிய அவளுக்குக் கால் பிடித்து விட்டவன் விடியும் நேரம் மனைவியைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தவனோ தானும் எதையும் அறியாதவன் போல அவளுடனேயே படுத்திருக்க 

இரவு நடந்தது எதையும் அறியாத சாரா காலையில் எழுந்துத் தன் வேலைகளைப் பார்க்கச் சென்று விட, அவள் அந்த அறையை விட்டுச் செல்லும் வரை தூங்குவது போல் படுத்திருந்த அஷ்வத்தோ ஏதோ யோசனையிலேயே இருந்தவன் பின் எழுந்துத் தன் வேலைகளை முடித்துக் கொண்டு பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் தனக்கு வெளியே வேலை இருப்பதாக சாராவிடம் மட்டும் சொல்லியவன் அவள் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டான் அஷ்வத் .

இரவெல்லாம் தூங்காதது போல் கண்கள் சிவந்து போய் வெளியே செல்லும் கணவனையே பார்த்துக் கொண்டிருந்த சாராவிடம் வந்த பாட்டி. 

“என்ன டி என்ன? இப்போ தான் ஏதோ புருஷன புதுசா பார்க்கற மாதிரி பார்த்துகிட்டு இருக்க! போ போய்.. உள்ள வேலையப் பாரு” என்று அவளை விரட்ட, சாராவோ மவுனமாய் சமையல் கட்டுக்குள் செல்ல அவள் பின்னோடே வந்த பாட்டி 

“ஐயோ…. ஐயோ… ஐயோ… என்னடி மாய்மாலம் செய்த? என்னமா உன் புருஷன் உருகுறான்! அப்படியே உன்னை உள்ளங்கையில வச்சித் தாங்குறான்! கொஞ்சறது என்ன மடியில உட்கார வச்சி ஊட்டி விடறது என்ன? இதை எல்லாம் நான் என்னனு சொல்ல? அவன் தான் அப்படி இருக்கானா உனக்கு எங்கடி போச்சு அறிவு?

காக்கா கான்னு கத்துச்சாம் அழலனு ஆம்படையானக் கட்டிக்கிட்டாளாம்! அந்த மாதிரி இல்ல நீ அவனக் கட்டிக்கிட்டு நடுக் கூடத்துல நின்ன!” என்று அவர் அவளை வசை பாட, இப்போதும் சாரா எதுவும் பேசாமல் சமையலுக்கான காய்கறிகளை வெட்டிக் கொண்டிருக்க 

“ஆம ஆத்த கெடுத்துச்சாம் ஊம ஊரை கெடுத்துச்சாம்! அந்த மாதிரி எதையும் பேசாம ஊமையா இருந்தே நீ எல்லாத்தையும் சாதிச்சிட்ட டி! 

“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டின மாதிரி எங்கிருந்தோ வந்த வேலைக்கார நாயி நீ இன்னைக்கு அந்த சக்கரவர்த்தி கிட்ட இருந்து எங்களப் பிரிச்சிட்ட இல்ல?” 

“……” இப்போதும் சாரா மவுனமாக இருக்க 

“எங்களப் பிரிச்சது கூட பரவாயில்ல டி. கடைசியில எங்கேயோ இருந்த இந்த கடன்காரனக் கொண்டு வந்து சேர்த்துட்ட இல்ல? அதைத் தான் டி என்னால ஜீரணிக்க முடியல” 

இப்போதும் சாரா எதுவும் பேசாமல் அடுப்பில் கடாய் வைத்து வடைக்கு எண்ணையை ஊற்றியவள் பின் மவுனமாக மற்ற வேலைகளைப் பார்க்க 

இப்போது தான் எதைச் சொன்னாலும் பேசாமல் இருக்கும் இவள் தான் நேற்று இவள் கணவனிடம் கொஞ்சி கெஞ்சிப் பேசியதைத் தூர இருந்து பார்த்தவர் இன்னும் அதை மனதில் வைத்துக் கொண்டு

“என்ன டி வேலைக்கார நாயே உனக்கு ரொம்பத் தான் துளிர் விட்டுப் போச்சா. என் கிட்ட வாங்கின அடி எல்லாம் மறந்து போச்சா? நான் இருக்கும் போதே என்னமா சிரிச்சி சிரிச்சி அவன் கிட்ட பேசுற! நேற்று மதியத்துக்கு மேல மறுபடியும் வேலைக்குப் போகாம அவன் கூட ஊர் சுற்ற வெளியே கிளம்பிட்ட இல்ல நீ?” என்றவர் ஓங்கி அவள் முதுகில் ஒன்று வைக்க 

“ஸ்…. அம்மா!” என்று சாரா வலியால் வாய் விட்டு முனங்கவும் 

“ அடியாத்தீ முத்தத்து முருங்கைப் பூ முதுகிலே விழுந்து முதுகெல்லாம் வலிச்சதாம். அப்படி இல்ல இருக்கு! நான் சும்மா ஒரு தட்டு தட்டினதுக்கு வலிச்ச மாதிரி என்னமா நடிக்கிற” என்று சொன்னவர் மீண்டும் அவள் வலது தோள் பட்டையைத் தட்டி விட அவளோ எண்ணெய்யில் இருந்த வடையை எடுக்கும் நேரம் அவர் அப்படிச் செய்யவே எண்ணெய்த் தளும்பி தரையிலும் அவள் காலிலும் கொட்டி விட சாராவோ எரிச்சலால்

”ஐயோ! அம்மா..” என்று அலறவும்
ஒரு வினாடி அவள் காலில் கொட்டிய எண்ணெயால் அவள் அலறுவதை கேட்டு திகைத்தவர் மறுநொடியே

“என்ன டி அம்மா? இது என்ன உன் அப்பன் வீட்டுப் பணம்னு நெனச்சியா? கொஞ்சம் கூட வேலையில் கவனமே இல்ல. எங்க எந்த நேரமும் புத்திய புல் மேய விட்டா இப்படித் தான் நடக்கும். 

நல்ல வேளை நான் உனக்குப் பின்னாடி தூர நின்னுகிட்டு இருந்தேன். இல்லனா என் மேலையும் கொட்டியிருக்கும். கடன்காரி கடன்காரி.. அது அதுங்கள வைக்க வேண்டிய இடத்துல வச்சி இருக்கனும். நாயக் குளிப்பாட்டி நடு வீட்….”

“போதும் வாய மூடுங்க. இதுக்கு மேல என் மனைவிய பத்தி ஒரு வார்த்தை சொன்னீங்க, மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை!” என்று அந்த அறையின் வாசலில் ஓங்கி ஒலித்தது அஷ்வத்தின் குரல். 

‘இவன் எப்போ வந்தான்?!’ என்று அவர் வாய் பிளந்து பார்த்து இருக்க, கணவன் தன்னை நெருங்கவும் எங்கே கணவன் சுடு எண்ணெய்யில் கால் வைத்துவிடுவானோ என்று பயந்த சாரா 

“மச்சான் கிட்ட வராதிங்க. எனக்கு ஒண்ணும் இல்ல” என்று அவனைத் தடுக்க 

“அதெல்லாம் எனக்குத் தெரியும் டி” என்றவன் கொட்டியிருந்த எண்ணெய்யில் கால் படாமல் சுற்றி வந்து அலேக்காக அவளைத் தூக்கி ஹாலில் உள்ள ஸோஃபாவில் அமர வைத்தவன் உடனே தன் கைப்பேசியில் அவன் தாத்தாவுக்கு அழைத்துத்

“தாத்தா, பொம்மி காலில் எண்ணெய் கொட்டிடுச்சி. இப்போ எதுவும் கேட்காதிங்க. உடனே டாக்டருக்குப் போன் பண்ணி இங்கே வரச் சொல்லுங்க. அதுக்குள்ள நான் அவளுக்கு ஏதாவது ஃபர்ஸ்ட் எய்ட் பண்றேன்” என்று சொல்லி வைத்தவன் அதே வேகத்துடன் ஃபிரிஜ்ஜைத் திறந்து ஐஸ் கட்டியைத் தேடியவன் அது இல்லாமல் போகவும் அங்கு உள்ளே அரைத்து வைத்திருந்த இட்லி மாவை வெளியே எடுத்துத் தன் கைகளால் வாரி வாரி அவள் பாதத்தில் பூசி விட, அதைப் பார்த்த பாட்டியோ 

“டேய்… டேய்.. டேய்… கடன்காரா ஏன் டா எங்க வீட்டு அரிசிய எல்லாம் இப்படி வீண் ஆக்குற? அதுவும் இந்த அனாதைக் குட்டிக்காக!” என்று பாட்டி கூப்பாடு போட 

“வாய மூடுங்க. யார் அனாதை? அவளுக்குத் தாலி கட்டின புருஷன் குத்துக் கல்லாட்டாம் நான் நல்லா தான் இருக்கேன். அதெல்லாம் விட அவளைக் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துகிட்ட அவ தாத்தா கூட இன்னும் உயிரோட தான் இருக்கார். பிறகு எப்படி அவ அனாதை ஆவா? 

இப்ப என்ன உங்க வீட்டு எண்ணெய் கொட்டிடுச்சி அவ்வளவு தானே? அதுக்கு எவ்வளவு காசுன்னு சொல்லுங்க. உங்க காசை விட லட்சமாக கோடியாக உங்களுக்குத் திருப்பித் தந்துடறேன். ஆனா அதுக்காக இன்னோர் தடவை என் மனைவிய அனாதைனோ வேலைக்காரினோ சொன்ன… அவன் முடிக்கக் கூட இல்லை

“தரித்திரம் தரித்திரம்.. மூதேவி மூதேவி.. இது என் வீட்டுக்கு வந்த நேரம் எண்ணெய வேற கொட்டிடுச்சி. இன்னும் என்ன என்ன கஷ்டத்தை எல்லாம் நாங்க அனுபவிக்கப் போறோமோ தெரியல! இதுல இந்த வேலைக்காரி அனாதை நாய நாங்க வேலைக்காரினும் அனாதை…” பாட்டியும் முழுமையாகச் சொல்லி கூட முடிக்கவில்லை. அதற்குள் அஷ்வத் 

“ஏய்..” என்ற கூச்சலுடன் அங்கிருந்த ஓர் மர நாற்காலியைத் தூக்கியவன் அருகிலிருந்த அலங்கார ஷெல்ஃபின் கண்ணாடிக் கதவில் ஓங்கி அடிக்க அந்தக் கண்ணாடியோ சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறியது. 

“ஒரு பொம்பளைனு தான் நான் உங்கள சும்மா விடறேன். இப்போ நீங்க பேசின வார்த்தையை வேற யார்னா உங்க வயசு ஒத்த ஆண் மட்டும் பேசி இருந்தா இங்க நடக்கறதே வேற மாதிரி இருக்கும் சொல்லிட்டேன். அதனால உங்க வாய மூடிட்டு சும்மா இருங்க. 

இல்ல அந்தக் கண்ணாடி நொருங்கின மாதிரி நீங்களும் என் கையால நொருங்கித் தான் போகணும்னு ஆசைனா அதுக்கும் நான் தயார் தான்” என்றவன் தன் டி ஷர்டின் கையை சுருக்கி கொண்டு அவர் முன் ஓர் எட்டு எடுத்து வைக்கவும், சாரா “மச்சான்” என்று அவனை அழைத்த நேரம் 

“என்ன அஷ்வத் என்ன ஆச்சி?” என்று கேட்டுக் கொண்டே வேலுச்சாமி தாத்தா உள்ளே வர, தன் வீட்டு வேலையாட்கள் முன்னாள் தன்னை அசிங்கப் படுத்தியது மட்டும் இல்லாமல் தன்னை அடிக்கவும் கை ஓங்கிக் கொண்டு வந்த அவனை சும்மா விடக் கூடாது என்ற எண்ணத்தில் வாயைத் திறக்க நினைத்தவர் உண்மையாவே அவன் அடித்து விடுவானோ என்ற எண்ணத்தில் பயந்து போய் வாயை மூட அதே நேரம் தன் கணவனைப் பார்த்தவர் இப்போது அஸ்வத் தன்னை அடிக்க முடியாது என்ற தைரியத்தில் 

“என்ன டா சும்மா குதிக்கிற? யாரும் இல்லாத அனாதையா உன் தாத்தா வீட்டுக்கு வேலைக்கு வந்தவ தான இவ? இன்னும் சொல்லப் போனா என் வீட்டு மாட்டுத் தொழுவத்துல கூட கட்டிப் போட லாயக்கு இல்லாதவ டா இவ. நீ சொல்றியே அவ தாத்தானு அவரு உன் தாத்தா டா முட்டாள். உன் அப்பா கார்த்திகேயனைப் பெத்தவரு டா அவரு. நீ வாழ வேண்டிய வாழ்க்கை அவர்கிட்டயிருந்து நீ பெற வேண்டிய அன்பு பாசம் எல்லாத்தையும் இந்த அனாதை நாய் அனுபவிச்சிட்டு இருக்கு. இது தெரியாம பேசுறான் கிறுக்குப் பய. உண்மையிலே உனக்குச் சூடு சுரணை இருந்தா உன் இடத்தையே பறிச்சிகிட்டு இன்னைக்கு வாழ்வாங்கு வாழ்வு வாழற இவள அடிச்சுத் துரத்து டா…” 

“பளார்…” என்று ஓர் அறை விழ அந்த நேரத்திலும் எங்கே அஷ்வத் தன்னை அடித்து விட்டானோ என்று பாட்டி பயந்து போய் பார்த்தவர், அடித்தது தன் கணவர் என்றதும் அவர் பேசாமல் இருந்து விட 

“இதுக்கும் மேல ஒரு வார்த்தை பேசின இங்கு ஒரு கொலை விழும் சொல்லிட்டேன்” என்றவர் “அஷ்வத் தம்பி இந்தப் பிரச்சனையை இதோட விடுங்க. நாம போய் பொம்மியப் பார்க்கலாம். 

“இல்ல தாத்தா” என்று ஒரு கை தூக்கி அவரைத் தடுத்தவன் “அவங்க சொன்னது எல்லாம் உண்மையா? அதாவது பொம்மியைப் பற்றியும் என் அப்பாவைப் பற்றியும்..” என்று ஈட்டியென அவன் வார்த்தைகள் வெளி வர 

“தம்பி.. அது வந்து தம்பி.. இப்போ எதுக்கு அது?” என்று அவர் மென்று விழுங்கவும்

“எனக்கு இப்பவே தெரிந்து ஆகணும்” 

“ஆமாம்! ஆனா அதுல இன்னும் கொஞ்சம் விஷயங்கள் இருக்கு” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே வெளியே டாக்டரின் கார் வந்து நிற்கவும் அவர் அதோடு பேச்சை நிறுத்திக் கொள்ள. 

“பொம்மி எப்படி இருந்தாலும் அவ என் மனைவி தான். எதுக்காவும் எந்த விஷயத்துக்காகவும் என் மனைவிய நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அஷ்வத் கடித்த பற்களுக்கு இடையே ஒவ்வொரு வார்த்தையையும் ஆணி அடித்தாற் போல் சொல்லவும் இதுவரை மனதில் பெரும் சஞ்சலத்துடன் இருந்த சாரா கணவனின் வார்த்தையில் சற்று அமைதியாக. பின் மருத்துவர் வந்து அவளுக்கானதை எல்லாம் பார்த்துச் சென்றதும்

“இவ நேற்றே தூக்கத்துல உளறினா தாத்தா. நாம வீட்டில இல்லாதப்போ பச்சைக் குச்சியால காலில் அடிச்சி இருக்காங்க. இவ என் கிட்ட எதுவுமே சொல்லாம மறைச்சது மட்டுமில்லாம நான் கூப்பிடதும் வெளிய வந்திருக்கா. வந்தும் என் கிட்ட சொல்லல. தூக்கத்துல உளறினதப் பார்த்து நானா தான் அவ காலைப் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் ரத்தம் கட்டி வீங்கிப் போய் இருந்துச்சி. அப்பவே முடிவு பண்ணேன் பொம்மிகிட்டையோ இவங்ககிட்டையோ எதுவும் கேட்கக் கூடாது கையும் களவுமாகத் தான் பிடிக்கனும்னு. 

அதான் வெளியே போய் கொஞ்ச நேரத்துல வரலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணி வச்சிட்டாங்க. இவ அலறலைக் கேட்டு நான் உள்ள வர்றதுகுள்ள என் பொம்மிய என்னவெல்லாம் பேசிட்டாங்க இவங்க. இப்பவும் இவங்க பேச்ச நான் நம்பத் தயாரா இல்லை. நீ சொல்லு பொம்மி அவங்க சொன்னது எல்லாம் உண்மையா?’ என்று அவன் தன் மனைவியைப் பார்த்துக் கேட்க, அவளோ கணவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் ஆமாம் என்று தலை ஆட்டவும் 

“நீ ஏன் டி இதற்குத் தலை குனியற? அப்பா அம்மா பணம் காசுன்னு எதுவும் இல்லாம பிறந்து ஒருத்தவங்க வீட்டுல வேலை செய்யறது என்ன அவ்வளவு பாவமா இல்லை கொலைக் குத்தமா? அப்படினா அம்மா இருந்தும் யாரும் இல்லாம வளர்ந்த நானும் அனாதை தான் டி. 

இன்னைக்கு வேர்ல்டு ஃபேமஸ் போட்டோ ஃகிராப்பரா இருக்குற நான் ஒரு அடி மட்டத்து ஆண் மகனா எவ்வளவு கஷ்டத்தையும் அசிங்க அவமானத்தையும் தாங்கி எப்படிப் பட்ட வேலையையும் செய்து வந்து இருப்பேன்னு யோசிச்சிப் பாரு. உன் புருஷனும் ஒரு காலத்துல வேலைக்காரன் தான் டி” என்றவன் பாட்டியிடம்

“உங்களுக்கு எல்லாம் வேலைக்காரியா இருந்தவ தான் இப்போ பல கோடிக்கு அதிபதி. அவ கூப்பிட்டா அவளுக்கு கையைக் கட்டி வேலை செய்ய எத்தனை ஆயிரம் பேர் காத்து இருக்காங்க தெரியுமா?” என்றவன் தாத்தாவிடம் திரும்பி

“இனி நாங்க ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது தாத்தா. சோ நாங்க இப்பவே கிளம்பறோம். நீங்க எப்போ வேணாலும் எங்க வீட்டுக்கு வாங்க போங்க பேசுங்க. ஆனா என் மனைவியை மதிக்காத யாரும் என் வீட்டுக்கு வரக் கூடாது” என்று சொன்னவன் அவர் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் தன் பொருட்களை எடுத்து வைத்து அவன் கிளம்ப சாராவுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை. 

‘முன்பு பார்க்கும் போது எல்லாம் என்னிடம் வெறுப்பை உமிழ்ந்தவரா இவர்? ஏதோ அவருடைய தேவைக்காக என்னைக் கல்யாணம் பண்ணவரா இன்று யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்காம இருக்கார்? அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம அடிக்கப் போகிற அளவுக்கு!’ என்று அவள் பல வாறு யோசித்து கொண்டு நிற்க 

அவளைத் தூக்கி காரில் அமர வைத்து அவனும் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய கார் தஞ்சாவூரில் இருக்கும் அவன் தாத்தா வான சக்கரவர்த்தி வீட்டை நோக்கி பறந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *