Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 13

Free Download WordPress Themes and plugins.

எபி 13
‘ஹரி பிரியாவை உயிராய் சுமக்கிறான்!’ என்பதை இந்த ஒரு மாதத்தில் அவன் நன்கு புரிந்திருந்தான்.ஆனால் அவள்… இவனை எப்படி நினைக்கிறாள்… என்பதுதான் ஹரிக்கு தெரியவில்லை.
இவனுக்கு அவளிடம் எந்தக் குறையும் இல்லை. இவனை அவள் மிக அழகாக புரிந்து வைத்திருந்தாள்.இவனை அவள் படுகஷுவலாக ஹாண்டில் செய்தாள். இக்கட்டான நிலமையைக்கூட எந்த ஒரு மெனக்கேடலுமின்றி சாமர்த்தியமாக சமாளித்தாள்.ஆனாலும்… ஏதோ ஒன்று… அவளிடமிருந்து இவனுக்கு…. குறைவதைப்போல ஹரிக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது.அது என்ன என்பது தான் தெரியவில்லை.
இவன் வம்பிழுத்தால்…அவளும் வாயடிக்கிறாள். அணைத்தால் அதில் அடங்குகிறாள்… இவனை அக்கறையாய் பார்த்துக்கொள்கிறாள்… இப்படி எல்லா விதத்திலும் அவள் சரியாதான் இருந்தாலும்… அவள்… அவனிடம் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ளவில்லையோ… என இவனுக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது.
அவளின் அம்மா இங்கிருந்த போது,’பிரியா அவளுக்கு பிடிச்சவங்ககிட்ட ரொம்ப உரிமை எடுத்து,பயங்கரமா அடம் பிடிப்பா.அவங்க இவ கூடவே இருக்கனும்,இவளுக்கு எல்லாத்தையும் அவங்க பாத்து பாத்து செய்யனும்,இவளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கனும்… இப்படி ரொம்ப எதிர்ப்பார்ப்பா ஹரி.அவ அப்படி உங்ககிட்ட நடந்துகிட்டா… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… அவ இன்னும் சின்னபொண்ணுதானே! போக போக சரியாயிடுவா.நீங்க அவளை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க!’ என சொன்னது,இப்போதிருக்கும் இவனின் ‘லக்ஸ் பேபி’க்கு பொருந்துவதைப்போல் தெரியவில்லை.
ஏனெனில்… எதற்கும் பிரியா ஹரியிடம் அடம் பிடிக்கவுமில்லை…. சண்டை போடவுமில்லை.அவன் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அவள் செயல்படுவது… அவளுக்கு இவனைப் பிடித்தமில்லாமல்.,கல்யாணம் செய்துவைத்த கட்டாயத்தால் இவனிடம் ஒரு மாதிரி செயற்கைத்தனமாய் இருப்பதாய் தோன்றியது.
இவனின் இந்த எண்ணம் சரியே என்பதைப்போல அவர்களுக்கிடையே ஒரு நிகழ்வு நடந்தது.
அன்று குளித்துவிட்டு வந்த ஹரி அறையில் பிரியா போனில் எதையோ நொண்டிக்கொண்டிருந்ததை பார்த்ததும் அவளை சீண்டும் பொருட்டு மெதுவாக அவள் பின் சென்று,அவள் தோளின் வழியே தலையை நீட்டி, அவள் முகத்தருகே போய், தன் தலையில் இருந்த தண்ணீரை கைக் கொண்டு சிலுப்ப,அதுப் பிரியாவின் முகத்தில் பட்டு,அவளை சிலிர்க்கவைத்தது.
அவளின் கன்னத்தில் வந்த சிலிர்ப்பை ஆசையாக ஒருக் கையில் தடவிக்கொண்டே,”பட்டுகுட்டி-டா நீ” எனக் கொஞ்சி மறுகையால் அணைத்தான்.
இதைப்போன்ற அணைப்புக்களும்,கொஞ்சல்களும் அவர்களுக்குள் மிக சகஜமாகிப் போயிருந்தது.அதனால் அணைத்தவனின் மேல் மொத்தமாக சாயந்த பிரியா,”எதுக்கு இப்ப பட்டு?” என ஒய்யாரமாய்க் கேட்டாள்.
“இந்த பட்டு எதுக்குன்னா… தண்ணிபட்டதும் சிலுத்துக்கற உன்னோட இந்த ஸ்கின்னா பாத்து வந்தது.”என இவன் கொஞ்சிகொண்டிருக்கும் போது, அவனின் அலுவலகத்தில் இருந்து, அவர்கள் இருவருக்கும் ‘விசா’ ரெடியாகி விட்டதாகவும்,டிக்கெட் எப்போது போடலமேன கேட்டு போன் வந்து ஹரியை திகைக்க வைத்தது.
முதலில் இவர்கள் கிளம்புவதாக முடிவெடுத்த தினத்தில், பிரியாவால் கிளம்பமுடியாத சூழ்நிலை இப்போது உருவாகியிருந்தது.வழக்கத்துக்கு மாறாக சென்னையில் பெய்த கடும் மழையால் அவளின் கடைசி இரண்டு கல்லூரித்தேர்வுகள், இவர்களின் பயண நாளுக்கு பதினைந்து நாட்களுக்கு பிறகே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால்… ஹரி இன்னும் சிறிது நாட்கள் கழித்து ‘ஆன்சைட்’ செல்ல அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவளின் தேர்வுகள் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே கிளம்புவதா… இல்லை தான் முதலிலும்,பிரியா அவளின் தேர்வுகளை முடித்தும், வருவதா… என்பதை முடிவெடுக்கும் பொறுப்பை, பிரியாவிடம் கொடுத்திருந்தான்.அதற்கு அவள் சட்டென்று அளித்த பதிலில் இவன் மனதில் அடிவாங்கினான்.
“நீங்க உங்க ஆபீஸில் ஆல்ரெடி கிளம்பற டேட்டை இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களே… இப்ப போய் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சிக் கிளம்பறேன்னு எக்ஸ்க்யூஸ் கேட்டா நல்லாவா இருக்கும்?அதனால நீங்க முதலில் கிளம்பிடுங்க.நான் எக்ஸாம் முடிச்சிட்டு வரேன்.அதில் எனக்கொன்னும் பிரச்சனை இல்லை! எப்படியும் ஒரு ட்வென்டி டேஸ்ல நான் அங்க வந்துடுவேன். நான் இங்க மானேஜ் பண்ணிக்கறேன். நீங்க கவலைப்படாம கிளம்புங்க!”என்று அவள் பொறுப்பாய் பெரிய மனுஷியாய் சொன்னதைக் கேட்ட ஹரி,’தன் மனைவி எவ்வளவு பொறுப்பாய் எல்லாவிஷயத்தையும் புரிந்துக்கொண்டு நடக்கிறாள்!’ என எண்ணி நியாயப்படி பெருமைதான் பட்டிருக்கவேண்டும்.
ஆனால்… அவன் எதையோ இழந்ததைப்போல உணர்ந்தான்.திருமணம் முடிந்த இருமாதங்கள் கூட முடியாத நிலையில் இருபது நாள் பிரிவு… என்பதை ‘தான்’ கொடுமையாக உணர்வதைப் போல இவள் உணரவில்லையா?
‘அவ்வளவு நாள்…. நான் தூங்கி எழும்பொழுது இந்த முகம் கண்ணுக்கு முன்னாடி இல்லன்னா… அந்த நாள் எப்படி எனக்கு நல்லா போகும்! நான் நினைச்சபோது இவகிட்ட பேசமுடியலைன்னா… என்னோட பகல் எப்படி போகும்?அவ்வளவு நாள் இவ என் பக்கத்துல இல்லைன்னா… என்னால நைட் எப்படி தூங்க முடியும்? இருபது நாள்…. இவ இல்லாம நான் எப்படி இருக்கபோறேன்!’என எண்ணி… எண்ணி உடைந்துப்போனான் ஹரி.
அவளே இப்படி சொல்லும் போது,’இல்ல நான் உன்கூடவே இருந்து உன்னை கூட்டிட்டே போறேன்!’னு சொல்லவும் முடியாம,’நான் இல்லாம நீ இருபது நாள் தனியா இருந்துடுவியா?’னு கேட்கவும் முடியாம தவித்துப்போனான்.
முதலில் எப்படியும் ‘நாம் இருவரும் சேர்ந்தே போகலாம்’ என்றுதான் பிரியா சொல்வாள் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த ஹரி,அதனால் அலுவலகத்தில் தன் பயணத்தை என்ன சொல்லி தள்ளிப்போடலாம்… என யோசித்துக்கொண்டிருக்க,அவளின் இந்த பதில் அவனை நிலைக்குலைய செய்தது.’என்னோட லக்ஸ் என்னைவிட்டுட்டு அவ்வளவு நாள் இருந்துடுவாளா…?!’
அதற்குபின் வந்த நாட்களில் ஹரியிடம் அவனின் துள்ளல் கொஞ்சம் குறைந்துதான் போனது.வெளி ஊருக்கு போகும் போது, என்னதான் கையேடு சார்ஜர் எடுத்துவைத்தாலும்,வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் நாம், செல்லை ஃபுல் சார்ஜ் செய்வோமே… அதைப்போல கிளம்புவதற்கு நாட்கள் நெருங்க நெருங்க,ஹரி தன் ‘லக்ஸ்சோப்’பிடம் சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தான்.அவள் என்ன வேலை எங்கிருந்து செய்தாலும்,படிக்கும் போது கூட அவளை ஒட்டிக்கொண்டு அலைந்தான்.
பிரியா,முதலில் இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாலும் பின் அவளுமே… அவனைப்போலவே நடந்துக்கொண்டாள். இப்படியே நாட்கள் செல்ல ஹரி கிளம்பும் நாளும் நெருங்கி வந்துக்கொண்டிருந்தது.
அன்று உறவினர்களின் திருமணத்தில் சந்தித்துக்கொண்ட ஹரி,பிரியா பெற்றோர்கள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் வாழ்க்கையை எப்படி சிறப்பாக நடத்தி செல்கிறார்கள்’ எனப் பெருமை பேசிக்கொண்டிருந்த போது பிரியா தன்னன்னையை பேசியில் அழைத்தாள். இருவரும் அன்றைய நிகழ்ச்சிகளை பேசி கொண்டிருக்கும்போது, பிரியாவின் தோழிக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வரப்போவதாக அவள் சொன்னாள்.
மேலும் அதற்கு நண்பர்கள் கூடி, செய்ய போகும் ஏற்பாடுகளைப்பற்றி அவள் சொல்ல, இவர் அந்த செலவிற்கு ‘மணி ட்ரான்ஸ்பர்’ செய்யட்டுமா? எனக்கேட்க, தேவை என்றால் கேட்பதாக அவள் சொல்லி, பேசியில் பேச்சை முடித்தாள்.
இது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் அதை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த மல்லிகாவினால் அதை அப்படி எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
‘இந்த ஹரிப் பையன் கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கவேயில்லை! அவன் என்ன அவனோட பொண்டாட்டிக்கு செலவுக்கு கூட பணம் தரமாட்டானா? ‘என் பையன் உங்க பொண்ணை பத்திரமா பார்த்துப்பான்னு’ நான் சொன்னதை நம்பிதானே இவங்க படிச்சிட்டு இருக்கும் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. இந்த தடிமாடு என்ன இப்படி பண்ணி வச்சியிருக்கான்!’ என மனதில் ஹரியை தாளித்துக்கொண்டிருந்தவர், அதை அவனின் தலையில் கொட்டும் நல்ல நேரத்திற்கு காத்துக் கொண்டிருந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் அந்த நேரம் அவரிடம் வந்துசேர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *