Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 13

Free Download WordPress Themes and plugins.

கல்கி – 13

உயிரினுள் உலவும் மூச்சாக, தன் உள்ளத்துள் உதைத்து கொண்டிருப்பவளின் நினைவுகளுடன் இரு நாட்களை மிகவும் இலகுவாக கடத்திய கிருபாகரனுக்குத் திங்கள் காலை மிகவும் ஆரவாரத்துடனே விடிந்தது.

ஞாயிறன்று இரவு மிகவும் தாமதமாக வந்து உறங்கியவனை எழுப்பி விட அவனதறைக்குள் நுழைந்த காயத்ரி, “தயா…! இங்க சீக்கிரம் வாங்க”, என்று கூச்சலிட்டாா். காயத்ரியின் கூச்சலில் பதறியடித்து மேலே வந்த தயா கண்டதோ தாயின் மடியில் படுத்து கொண்டு கையால் காற்றில் கிறுக்கிக் கொண்டிருந்த கிருபாகரனை தான்….

“என்னாச்சு காயூ? எதுக்காக அப்படிக் கத்துன?”, என்று கேட்ட தயாவை முறைத்துவிட்டு, “நான் உங்க சீமந்த புத்திரனை எழுப்ப வந்தப்ப கால் உடையல அப்படினு தனியா புலம்பிட்டு இருந்தான்… அதான் கூட சேர்ந்து புலம்புறதுக்கு உங்களை கூப்பிட்டேன்… நீங்க திருவாரூர் தோ் மாதிரி ஆடி அசைஞ்சு வரதுக்கு முன்னாடி என்னை இழுத்து பிடிச்சு
உட்கார வச்சு கிறுக்கிகிட்டு இருக்கான்…”

என்று கொலைவெறியுடன் கூறிய காயத்ரியிடமிருந்து தான் தப்பிக்கும் பொருட்டு, ” கண்ணா…! என்ன பண்ற இதென்ன காலையிலேயே அம்மாவை டென்ஷன் செய்ற பழக்கம்?” என்று சற்று அதட்டல் தொனியில் கூறிய தயாவை, “ரொம்ப கெட்ட கனவுப்பா அதனால் தான் எழுந்து காலை பாா்த்துகிட்டு இருந்தேன்… அந்நேரம் அம்மா வரவும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குறேன்…இது ஒரு தப்பா?”, என்று கதையளந்த கிருபாகரனிடம், “அப்படி என்ன கனவு கண்ணா?”, என இப்பொழுது காயத்ரி ஆா்வமாகக் கேட்டார்.

“எனக்கும், பாவ்க்ஸ்க்கும் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் ஒரு நாள் அப்பா போன் பண்ணி எலீசா வந்துட்டானு சொல்றாா்… நானும் அவசரம் அவசரமா கிளம்பி ரூமை விட்டு வெளியே போகக் கால் வைக்குற வரைக்கும் அமைதியா இருந்த கல்கி, ‘எங்க போற கிருபா’னு கேட்டா…

நானும் மறைக்கனும் அப்படிங்கிற எண்ணமில்லாம எலீசாவை பாா்க்கப்போறேனு சொல்லிட்டு அடுத்த ஸ்டெப் வச்சதும் இன்னொரு காலுல ஒரு கட்டையை வச்சு போட்டுட்டா… அதுல ப்ராக்சா் (Fracture) ஆன மாதிரி வந்த கனவோட பாதிப்பை தான் நீங்க பாா்த்தீங்கம்மா…” என்று கிருபாகரன் கூறி முடிக்கவும் காயத்ரி வாய் விட்டு சிாிக்க, தயா பேஸ்தடித்துப் போய் நின்றிருந்தாா்.

“தயா…! குற்றம் செய்றவங்களை விட செய்ய தூண்டி விடுறவங்களுக்கு தான் தண்டனை அதிகம் தெரியுமா?”, என்ற காயத்ரியின் கால் வாரல்களுடன் அவ்வீட்டின் காலை நேரம் மிகவும் மகிழ்ச்சியுடன் களைகட்டியது.

அதே மகிழ்ச்சியுடன் அலுவலகம் கிளம்பியவனுக்கு அங்கே தனக்கு முன்னரே வேலையில் ஆழ்ந்திருந்த கல்கியை கண்டு அவனது இதழ்களில் அழகிய புன்னகை பூத்தது.

அன்றையக் காலைப் பொழுது கலகம் ஏதுமின்றி கடந்திட மதிய உணவு இடைவேளைக்கு பின் வந்த ஒரு மின்னஞ்சல் கல்கி, கிருபாகரன் இருவரையும் சந்திக்கச் செய்தது. அதுவரை அவனை பாா்த்திட விரும்பாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தவளை இந்த மெயில் அவனை கண்டிடும் நிா்பந்தத்தை ஏற்படுத்தியதை வெறுத்தவளாக கிருபாகரனை காண அவனது அறையை நோக்கிச் சென்ற கல்கியின் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருந்தன.

கல்கியின் நிலையை போன்றே கிருபாகரனும் அனல் வீசும் பார்வையைத் தான் எதிரிலிருந்த லேப்டாப்பில் செலுத்திக் கொண்டிருந்தான். கல்கி உள்ளே நுழைந்ததை கூட உணராமல் இருந்தவனிடம், “கிருபா…! என்ன நடந்துச்சு? அவங்க சொல்ற மாதிரி நடக்குறதுக்கான வாய்ப்பே இல்லை”, என்று கல்கி கோபமாக உரைத்ததில் தெளிந்தவன் அவளை அமருமாறு கூறினான்.

“நேத்து நைட் நடந்துருக்குனு சொல்லிருக்காங்க கல்கி… பட் நமக்கு மெயில் அனுப்புனது இப்பதான்… இதுல என்ன இருக்குனு தெரியாம நாம அவங்க கண்டிஷன்ஸ் எதையும் ஏத்துக்க தேவையில்லை… நாம ரெண்டு பேரும் இன்னிக்கு ஈவினிங் பிளைட்ல காஜ்ஜியர்( Khajjiar இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஓா் அழகிய நகரம்) கிளம்புறோம்…

இதுக்கு முன்னாடி இருக்குற ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துக்கோ… நான் நம்மளோட லீகல் அட்வைஸரை டெல்லியிலே இருந்து அங்க கிளம்பச் சொல்லிட்டேன்… உண்மை தெரிஞ்சதுக்கப்புறம் பார்த்துக்கலாம்”, என்று கூறிய கிருபாகரனின் குரலில் இருந்த கோபம் கல்கிக்கு நன்கு புரிந்தது.

“ஓகே கிருபா!”, என்று கிளம்ப முனைந்தவளை, “கல்கி! வீட்டுக்குப் போய் தேவையான டிரஸ் எல்லாம் எடுத்துகிட்டு ஏர்போர்ட் வந்துடு… அதுக்குதான் டைம் சரியா இருக்கும்”, என்றவன் தன்னுடைய மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேச ஆரம்பித்தான்.

அவனையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த கல்கி தன்னுடைய கேபின்க்கு வந்து பேகை எடுத்து கொண்டு கிருபாகரன் கூறியதை செயல்படுத்தக் கிளம்பினாள். வீட்டிற்கு வந்து ஏர்போர்ட்டிற்கு கிளம்பிச் சென்றவள் அங்கு கிருபாகரனை கண்டு சற்று ஆச்சரியமடைந்தாள். ஆனால் அவனது முகத்தில் ஓடிய எரிச்சலில் எதுவும் பேசாமல் அவனது அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

பிளைட்டிற்கு செல்லும் வரை மிகவும் தீவிரமாக போனில் பேசிக் கொண்டிருந்த கிருபாகரன் தங்களுக்கான இருக்கையை தேடி அமரும் பொழுது கல்கியே அவனுக்கு பிடித்தமான ஜன்னலோர இருக்கையை விட்டு தந்தாள். “தேங்க்ஸ் கல்கி”, என்றதோடு, “இப்பவே கொஞ்சம் தூங்கிக்கோ கல்கி… நாம ரீச் ஆனதும் நிறைய வேலை இருக்கும்… ஒழுங்கா ரெஸ்ட் எடுக்க முடியாது”, என்ற கிருபாகரனின் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிந்ததால் கல்கியும் கண்களை மூடி உறங்க முயற்சி செய்தாள். என்ன முயன்றாலும் உறக்கம் என்பது துளியளவும் எட்டி பார்க்காமல் போன காரணத்தினால் கண்களை திறந்து கிருபாவை பார்த்திட அவனோ ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

வேலைக்கு சேர்ந்த இத்தனை மாதங்களில் கிருபாகரன் இவ்வாறு இருந்தால் அடுத்து அவனிடம் சிக்குபவா்கள் அடி வாங்காமல் தப்புவதில்லை என்பதை கல்கி நன்கு உணா்ந்திருந்தாள்.

இருந்தாலும் கிருபாகரனின் இந்நிலையை விரும்பிடாத கல்கி, “கிருபா…! இதுக்காக நீ ஏன் டல்லா இருக்க? அவனுங்க கண்டிப்பா ஏதோ கோல்மால் செஞ்சிருக்கானுங்க… அதை மட்டும் நாம கண்டுபிடிச்சா போதும்… என்று வழக்கமில்லாத வழக்கமாக ஆறுதலுரைத்தாள்.

“நான் அதையெல்லாம் யோசிக்கல பாவ்க்ஸ்… இந்த காஜ்ஜியா்க்கு தான் நம்மளோட மூணாவது குழந்தை பிறந்த பிறகு ஒரு சாா்ட் ஹனிமூன் வர பிளான் பண்ணியிருந்தேன்… இவனுங்க இப்ப செஞ்ச வேலையால நான் இன்னொரு இடம் கண்டுபிடிக்கனும்”, என்று கூறியவனை எதுவும் செய்யாமல் திரும்பிய கல்கிக்கு இதழோரத்தில் இளநகை தோன்றியது.

கல்கியின் புன்னகையை கண்டவன், “பப்பு…! இப்படியெல்லாம் சிரிச்சா பாவா கண்ட்ரோலை இழந்துடுவேன்.. பின்விளைவுகளுக்கு நீ என்னை அடிக்கக் கூடாது… அதனால சிரிக்காம ஏன் சிரிச்ச அப்படினு சொல்லிடு”, என்று கிருபாகரன் கூறியதற்கு அவனை பார்த்து அதே சிரிப்புடன்,

“ஒரு பொண்டாட்டிக்கே இங்கே வழியில்லையாம்… இதுல ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம் காலொடிஞ்சவனுக்கு”, என்று கூறிய கல்கி அவனுக்கு அடுத்த ஆப்பைக் கூறும் முன் தன்னுடைய கையினால் அவளது வாயை மூடினான்.

ஆனால் கல்கியோ அவனது கையை எடுத்து விட்டதுடன், “அதெப்படி கிருபா? உங்களோட அடுத்த கேள்விக்கு நான் பதில் சொல்லாம விடுறது? பின்விளைவுகளுக்கு நான் அடிக்கலாம் மாட்டேன்… அறுத்துடுவேன்”, என்று என்று கழுத்தைச் செய்கையால் காட்டிட கிருபாவின் முகம் ஆயிரம் வோல்ட்ஸ் பல்பாக மின்னியது.

அது ஏனென்று கேட்டு அவனின் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல், “இப்ப போற இடத்துல பிரச்சினையை ஈஸியா சமாளிச்சுடலாமா கிருபா?”, என யோசனையுடன் கேட்டாள்.

“அவனுங்க மொள்ளமாரித்தனம் செஞ்சா, பிசினெஸ்ல இருக்குற நாம அதை விட கேடியா இருப்போம்னு அவன் மறந்துட்டான்… அவன் எப்படி இந்த ஏமாத்து வேலையை செஞ்சான் அப்படிங்கிறதை கண்டுபிடிக்கதான் நாம போறோம்… சோ அதை பத்தி கவலைப்படாதே”, என்று மிகவும் எளிதாக கூறிய கிருபாகரனின் குரலில் சமாதானமடைந்த கல்கி இப்பொழுது நிம்மதியாக கண்களை மூடி உறங்கத் தொடங்கினாள்.

விமானம் காங்ரா(Gangra) ஏர்போர்ட்டை அடைந்து தரை இறங்கும் வரை கல்கியின் உறக்கத்தை கலைத்திடாதவன், அனைவரும் இறங்கிய பின்னரே அவளை எழுப்பி அழைத்து வந்தான். அவர்கள் காங்ராவை அடைந்த பொழுதே இருட்ட ஆரம்பித்திருந்தது.

ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிரைவர் காருடன் காத்திருந்தார். “கல்கி! இங்க இருந்து காஜ்ஜியர் போக மூணு மணி நேரமாகும்… போற வழியிலேயே சாப்பிட்டு போகலாமா? இல்லை அங்கே போய் சாப்பிடுவோமா?”, என்று கிருபாகரன் கேட்டதற்கு “சாப்பிட்டே போவோம் கிருபா!”, என்று கல்கி மிகவும் சாந்தமாக பதிலளித்தாள்.

உடனே ஏர்போர்ட்டிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றவன் ரொட்டியுடன் மத்ராவும்(Madra) வேண்டும் என்று கூறினான். ஆர்டர் எடுத்தவர் நகர்ந்ததும், “மத்ரா அப்படினா என்னது?”, என்றாள் கல்கி.

“கொண்டைக்கடலையை தயிர் கறியில் சமைக்கிறதுதான் மத்ரா…. ஊறவச்ச கடலையை ஏலக்காய், கிராம்பு, கருப்பு ஏலக்காய், கிராம்பு பொடி, சீரகம், புளி, மஞ்சள் பொடி எல்லாத்தையும் தயிரோட சேர்த்து கை விடாம சின்ன தீயில் வைச்சு கிண்டிகிட்டே இருக்கனும்…. அதுல போடுற வாசனை பொருட்களோடு உப்பும் சேர்த்துக்கனும்…. இந்த மாதிரி சமைக்கிறதுதான் பஹடி(Pahadi) அதாவது உண்மையான மலை சுவை நிறைந்த உணவு அப்படினு சொல்லுவாங்க”, என்று கிருபாகரன் கூறிய செய்முறையை செய்து கொண்டு வந்து வைத்திருந்ததை எடுத்து சாப்பிட்ட கல்கிக்கு அதன் சுவை நாவின் நாளங்களை எழுப்பி இரண்டு ரொட்டியை அதிகமாக உள்ளே தள்ள செய்தது.

சாப்பிட்டு முடித்ததும் பயணத்தை தொடங்கிய பொழுது டிரைவர் அருகில் அமராமல் தன்னருகில் வந்தமர்ந்த கிருபாகரனை புருவம் நெறிய பார்த்தவள் ஏதும் கூறாமல் தன்னுடைய ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு பாடல்களை கேட்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் தன்னுடைய காதிலிருந்து ஹெட்செட் உருவப்படுவதை உணர்ந்து கண்களை திறந்தவள் கிருபாகரன் அந்த பாடலை கேட்டு முகம் சுளிப்பதை பார்த்து கண்களில் கனலை ஏற்ற தயாரானாள்.

அவனும் அதனை புரிந்தவனாக எதுவும் டிரைவர் முன்பு பேசிட விரும்பாமல் தன்னுடைய ஐ பேடை எடுத்து அதிலிருந்த பாடல்களை அவளுக்காக ஒலிக்க விட்டதுடன் கண்களை மூடிக் கொண்டான்.

அவ்வாறு கண்களை மூடிய பொழுது கல்கியின் தலையை இழுத்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டதோடு, அவளது கைகளை எடுத்து தன்னுடைய ஒரு கையால் பிடித்தும் கொண்டான். கைகளில் அவன் தந்த அழுத்தத்தை தாண்டிய ஒரு பாதுகாப்புணர்வு அவனது தோளில் இருந்து தலையை நிமிர்த்தவோ, கையை உருவிடவோ கல்கியை அனுமதிக்கவில்லை.

அவர்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்து டிரைவர்க்கு கிருபாகரன் பணம் தந்த பொழுது, “ஆப் சுந்தர் ஜோடி ஹைன் சாப்”, என்றுக் கூறிவிட்டு சென்றதில் கிருபாகரன் வாய்விட்டு சிரித்ததோடு, “கல்கி! அவன் நாம ரெண்டு பேரும் அழகான ஜோடின்னு சொல்லிட்டு போறான்”, என்றதோடு அவளது முகத்தை பார்க்க அதில் முதல்முறையாக கண்கள் கலங்கிய நிலையில் இருந்த கல்கி அவனுக்கு தென்பட்டாள்.

ஏன்? எதற்கு? என்றுக் கேட்டு அவளை வேதனைப்படுத்த விரும்பாமல் தங்களுக்கென்று புக் செய்திருந்த ரெசார்ட்டிற்கு அழைத்துச் சென்றான். அது இரு அறைகள் ஒரு மினி கிட்சேன், ஒரு ஹால், ஒரே ஒரு குளியலறை கொண்ட குடிலாக இருந்தது.

கல்கி எதையோ எண்ணி மனதிற்குள் குமைகிறாள் என்பது புரிந்தவனாக அவளது அறைக்குள் அழைத்துச் சென்றவன், நெற்றியில் அழுத்தமான முத்தமொன்றை பதித்து கட்டிலில் அமர வைத்து, “பப்புக்குட்டி… எதுவும் யோசிக்காமல் தூங்கு, காலையிலே நிறைய வேலை இருக்கு… குட் நைட்”, என்று கூறிவிட்டு அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

கிருபாகரன் விட்டுச் சென்ற பின் சிறிது நேரம் தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருந்தவள் அப்படியே படுத்துவிட்டாள். மறுநாள் கிருபாகரன் வந்து கதவு தட்டியதும் அப்படியே எழுந்து வந்தவள் அவன் தயாராகி இருப்பதை பார்த்து, “வெய்ட் கரன்… இன்னும் டென் மினிட்ஸ்ல நான் ரெடி ஆயிடுறேன்”, என்று கூறியதோடு தன்னுடைய உடைகளை அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

கிருபாகரன் தான் கல்கி விளித்த கரனில் மகிழ்ச்சியுடன் கலந்த அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். அவள் குளிக்க சென்றிருந்ததால் குடிலுக்கு வெளியில் வந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தவனின் முன்பு அடுத்த பத்தாவது நிமிடத்தில் ரெடியாகி வந்து நின்றவளை அப்பொழுதே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கிருபாகரனுக்கு தலை விரித்தாடியது.

இருப்பினும் கடமை அழைத்ததில் பிரச்சினையின் மூலகாரணமான இடத்திற்கு சென்றனர். அங்கே சென்ற பொழுது இவர்களது லீகல் அட்வைஸருடன் பத்துப் பேர் புடை சூழ ஒருவன் அமர்ந்திருந்தான். கிருபா சென்று அமர்ந்ததும் சம்பிரதாய அறிமுகப்படலத்திற்கு பின், “என்ன பிரச்சினை?”, என்று கிருபாகரன் கேட்டான்.

“அதான் மெயில் அனுப்பியிருந்தோமே!”, என்று கூறியவனை, “ராம் தாகூர்… திரும்ப ஒரு தடவை சொல்லுங்க”, என்று அழுத்தமாக ஆணையிட்டான்.

“நேத்து திடீர்னு காலையில மூணு மணிபோல கட்டிடம் தூள் தூளா இடிஞ்சு விழுந்துடுச்சு… வாங்கி ஒரு வருசத்துல இடிஞ்சுடுச்சுனு வாங்குனவன்கிட்ட கேட்டா, நான் நிலத்தை ஆராய்ச்சி செஞ்சு தான் கட்டுனேன்… ஆராய்ச்சி செஞ்சவங்களும், கட்டுனவங்களும் ஒரே கம்பெனினு உங்களை கைகாட்டுனான்…

அவன் சொன்னதும் எனக்கு தெரிஞ்சுடுச்சு… நீங்க ஆராய்ச்சினு சொல்லி பணம் பறிச்சதோட, தரமில்லாத பொருளை வச்சு கட்டடம் எழுப்பிருக்கீங்க… அதான் தாக்கு பிடிக்கலை… நான் இதுல போட்ட முதலீட்டோட, நீங்க ஏமாத்துனத்துக்கும் சேர்த்து நஷ்ட ஈடா அம்பது கோடி தந்துடுங்க…

உங்க மேல வழக்கு போடாம மன்னிச்சு விட்டுடுறேன்”, என்று அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கிருபாகரன் கல்கியின் புறம் திரும்பி, “கல்கி! உங்க டீமை கூட்டிட்டு போய் செக் பண்ணுங்க”, என்று அவளிடம் உரைத்து விட்டு அமைதியாகி விட்டான்.

“என்னது ஒரு பொண்ணு செக் பண்ணி காசு தர போறியா?”, என்று எகிறிய தாகூரை கல்கி முறைப்பதை பார்த்தவன், அவளை போகுமாறு சைகை செய்துவிட்டு, “அவங்ககிட்ட உன்னோட வாய் திறந்து நீ ஏதாவது பேசுனா, அடுத்த வார்த்தை பேச உயிரோட விடமாட்டாங்க…

அப்படி அவங்க உன்னை போட்டுத் தள்ளி பிரச்சினை எதுவும் வந்துச்சுனா, கிருபாகரன் கல்கியாகிய நான் அதை ஒண்ணுமே இல்லாம செஞ்சுடுவேன்… சோ எங்க வேலை முடியுற வரைக்கும் அமைதியா உட்கார்… இல்லை உன்னை ஒரேடியா தூங்க வச்சுடுவேன்”, என்று சிரித்துக்கொண்டே கிருபாகரன் மிரட்டியதில் தாகூரும் அவனது அல்லக்கைகளும் அமைதியாகி விட்டனர்.

இந்த கட்டடத்தை கட்டியவன் மதராஸி, அதனால் பிரச்சினை செய்தால் பணம் கிடைக்கும் என்றெண்ணியவர்கள் கிருபாகரனைப் பற்றி அறியாமல் அவர்களே அவனிடம் மாட்டிக்கொண்டனர்.

அன்றைய நாளும், அதற்கடுத்து வந்த ஒரு வாரமும் அவ்விடத்தை கல்கி தன் ஆராய்ச்சி புத்தியோடு மட்டுமின்றி, புலனாய்வு புத்தியோடும் சல்லடையாக சலித்ததில் அவர்களுக்குச் சாதகமான விஷயத்தை கண்டறிந்துவிட்டாள்.

அவளறிந்ததை வைத்து கிருபாகரனும் சில பல வேலைகள் செய்து தாகூரை உள்ளே தள்ளியதோடு, அவனது மேல் மோசடி வழக்கும் தொடர்ந்துவிட்டான். அனைத்து பிரச்சினைகளும் முடிந்து ஊருக்கு செல்லும் நாளிற்கு முந்தைய இரவில் இருவரும் குடிலில் அமர்ந்து பாலருந்தி கொண்டிருக்கும் பொழுது கிருபாகரன் வேகமாகத் தன்னறைக்குள் சென்று அங்கிருந்த கிடாரை எடுத்து வந்தமர்ந்தான். கல்கி பார்த்து கொண்டிருக்கும் பொழுதே அவளது கண்களை பார்த்தவாறே,

I’m lookin’ for a place to go so I can be all alone
From thoughts and memories
So that when the music plays I don’t go back to the days
When love was you and me

Oh, oh moja droga jacie kocham
Means that I love you so
Moja droga jacie kocham
More than you’ll ever know
Kocham ciebie calem serce
Love you with all my heart
Return and always be
My melody of love

என்று பாபி வின்டனின் வரிகளை இசையாக மீட்டியதோடு இனிய குரலிலும் பாடினான்.

பாடி முடித்த கையோடு கல்கியின் முன் வந்து மண்டியிட்டவன், “நான் இப்ப சுவாசிக்குற இந்த சுவாசம் சுருங்கி, ரத்தமெல்லாம் சுண்டுனதுக்கப்புறமும், உன்னோட சுண்டுவிரலை பிடிச்சுக்கிட்டு இந்த உலகத்தோடு ஒவ்வொரு மூலைக்கும் போய், இயற்கையை ரசிக்கிறப்ப, அதுக்கு போட்டியா இருக்குற உன்னோட மனசோட அழகை ஆராதிக்கனும் பாவ்க்ஸ்”, என்று உள்ளம் உருக்கும் குரலில் கூறியவன் தரையில் அமர்ந்தவாறு அவளது மடியில் தலை சாய்த்திருந்தான்.

மடி சாய்ந்தவனை மணவாளனாக்கிடுவாளா? மனம் குமைந்திட காரணம் கூறி மனதை உடைத்திடுவாளா?

சுவாசம்
சுருதி சேர்ந்திட
சுந்தர இதயத்தின்
சிறைக்கதவு

சிதறிடும் நாளெதுவோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *