Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 14

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 14

ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிதானமாக எழுந்து குளித்துவிட்டு, அமர்ந்திருந்தாள் சுமித்ரா.

சோஃபாவின் பின்பக்கத்தில் ஈரக்கூந்தலை படறவிட்டபடி, கால்களை டீபாயின் மீது நீட்டிக்கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

தாளிடாமல் மூடியிருந்த கதவு மெல்லத் திறப்பதை அறியாமல் சாய்ந்திருந்தவளின் அருகில் மெல்லக் குனிந்தது அந்த உருவம்.

கழுத்தருகில் சூடான மூச்சுக்காற்று பட்டதும் கண்களைத் திறந்த சுமி, பதறிப் போய் எழுந்து நின்றாள்.

அடுத்த நொடியே விழிகள் மின்ன, “நீத்து!” என்றபடி தோழியை அணைத்துக் கொண்டாள் சுமித்ரா.

“ரொம்ப பயந்துட்டியோ?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் அவள்.

“எருமை! சத்தமே இல்லாம கிட்டவந்து முகத்தைக் காட்டினா, பயப்படாம என்ன பண்ணுவாங்க? ஒரு நிமிஷம் பகீர்னு ஆகிடுச்சி” என்றபடி இரண்டு போடு போட்டாள்.

“ஹேய்! காலங்கார்த்தால உன்னைப் பார்க்க ஆசையா வந்திருக்கேன். இப்படி அடிக்கிற” எனப் போலியாகக் கோபித்துக்கொண்டாள் நீத்து.

“சாரி சாரி! உட்காரு” என்றவள், “எப்போ பரோடாலயிருந்து வந்த? தனியா வந்திருக்க… உன் ஹப்பி வரலையா?” எனக் கேட்டுக்கொண்டே தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

“ரெண்டு பேரும்தான் வந்தோம். ஒரு வேலையிருக்கு முடிச்சிகிட்டு வரேன்னு என்னை இறக்கி விட்டுட்டுப் போயிருக்கார். அப்பா எப்படியிருக்காங்க? ஹெல்த் நல்லாயிருக்கா? இப்போ வேலைக்குப் போகலயில்ல…” என்று வரிசையாக விசாரித்தாள்.

“நல்லாயிருக்காங்க நீத்து! அட்டாக்குக்குப் பின்னால, எனக்கு அப்பாவை வேலைக்கு அனுப்ப விருப்பமில்ல. ஈவ்னிங்ல பசங்க சிலர் டியூஷனுக்கு வருவாங்க. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு சண்டே இல்லயா… அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் பார்க்ல மீட் பண்ணி பேசிக்குவாங்க. ஒன்பது மணிக்கு வந்துடுவாங்க” என்றாள்.

“ஓஹ் நைஸ்!”

“ம், அப்புறம் சொல்லு… நீ என்ன திடீர்னு இந்தப் பக்கம்?”

“அண்ணாவுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. உன்னை இன்வைட் பண்ணத்தான் வந்தேன்” என்றாள்.

“வாவ்! ஒரு வழியா உங்க அண்ணா கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டாங்களா?” எனச் சிரித்தாள்.
“இல்லனா அவனை யார் விட்டது?” என்று புன்னகைத்த நீத்து, “ஆமா, உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருப்பானே… கிஷோர் அவன் எப்படியிருக்கான்?” என்று கேட்டாள்.

“ம்ம்… நல்லாயிருக்கார்” என்றாள்.

“என்னடி அவனுக்கு இவ்ளோ மரியாதை…” என அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்தார் கங்காதரன்.

பரஸ்பரம் விசாரித்துக் கொண்டவர்கள், பொதுவாக பேச ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்திலேயே அவளது கணவன் வந்துவிட, திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்தனர்.

“அங்கிள் நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும். பஸ் அரேஞ்ச் பண்ணியிருக்கு. சனிக்கிழமை மதியானம் கிளம்பினா, மறுநாள் ஈவ்னிங் ரிசப்ஷன் முடிஞ்சதும் கிளம்பி வந்திடலாம்” என்றாள்.

“அன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கும்மா. நான் சுமியை அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

அவள் எவ்வளவோ சொல்லியும், சுமியை மட்டும் அனுப்பி வைக்கிறேன் என்றே பிடிவாதமாக இருந்தார் கங்காதரன்.

அவர்கள் கிளம்பும் நேரம் கார் வரை வந்த சுமித்ரா, “சாரி நீத்து! அப்பாவை விட்டுட்டு என்னால வரமுடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்க” என்றாள்.

“என்னடி விளையாடுறியா? உனக்காகத்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். நீ வரலன்னா என் ஹப்பி என்னைக் காய்ச்சி எடுத்திடுவார். நீதான் ஃப்ரெண்ட் ஃப்ரெண்டுன்னு உயிரை விடுற. அவங்களுக்கெல்லாம் உன் நினைப்பே இல்லன்னு பேசியே என்னைக் கொன்னுடுவார். அதனால, நீ வர்ற” என்றாள்.

“இல்ல நீத்து! அப்பாவோட ஹெல்த்…”

“யேய்! என்ன ஒரேடியா உருகுற. அங்கிள் நல்லாயிருக்கார். நீ சும்மா அதையே சொல்லிச் சொல்லி ஒண்ணுமில்லாதவரை நோயாளியா நினைக்கவச்சிடாதே. புரியுதா?” என்றாள் கண்டிப்புடன்.

“இதுவரைக்கும் அப்பாவை விட்டுட்டு நான் எங்கேயுமே வந்ததில்ல…” என்றாள்.

“ஹேய் அவர் சின்னக்குழந்தை இல்ல. மிஞ்சி மிஞ்சிப் போனா ஒன்றரை நாள் தனியா இருக்கப் போறாங்க. டெல்லியிலிருந்து சங்கீதாவும், பெங்களூரிலிருந்து வன்யாவும் வரேன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு வாட்ஸ் அப்-லதான் இன்விடேஷன் அனுப்பினேன். எத்தனை வருஷம் கழிச்சி நாமெல்லாம் மீட் பண்ணப்போறோம்.” என்றாள் நீத்து.

அவளுக்குமே தோழிகளைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையிருந்தாலும், சற்று யோசனையாகவும் இருந்தது.

“ஓகேப்பா! வரப்பார்க்கறேன்” என்றாள்.

“இந்தச் சாக்கெல்லாம் எனக்கு வேணாம். நான் உன்னை மட்டும்தான் நேர்ல வந்து இன்வைட் பண்ணியிருகேன். சோ, உனக்கு நோ எக்ஸ்க்யூஸ்… பை” என்றவள் கிளம்ப, யோசனையுடன் வீட்டிற்குள் வந்தாள் சுமித்ரா.

*****************
“ப்ரோ…!” என்றழைத்தபடி மித்ரனின் அறைக்குள் நுழைந்தான் இந்தர்.

பெட்டியில் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த மித்ரன் திரும்பிப் பார்த்தான்.

“என்ன ப்ரோ? நேத்துத்தான் குர்காவுன்லயிருந்து வந்தீங்க… இன்னைக்கே கிளம்பறீங்களா?” எனக் கேட்டான்.

“ஒரு வெட்டிங் ரிசப்ஷனுக்காகக் கிளம்பிட்டிருக்கேன்” என்றான் மித்ரன்.

“ஓஹ்! வேர்?”

“பரோடா!”

“பரோடாவா?” என்றவனுக்கு மூளைக்குள் மின்னலடித்தது.

“என்ன ப்ரோ! இப்பல்லாம் அடிக்கடி அந்தப் பக்கம் போய் வர்றா மாதிரியிருக்கு” என்றான் விஷமத்துடன்.

உடைகளை அடுக்கியபடி முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்தான் மித்ரன்.
நிமிர்ந்து, “அதுல உனக்கென்ன கஷ்டம்?” எனக் கேட்டான்.

“ம்ம், எனக்கென்ன கஷ்டம்? இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னால, அஹமதாபாத் வரைக்கும் போய்ட்டு வந்தீங்க. இப்போ பரோடா…”

“அது, காலேஜ் அலுமினிக்காக. இது, ஃப்ரெண்டோட மேரேஜ் ரிசப்ஷன்” என்றான்.

“இருந்தாலும், ரெண்டும் பக்கத்துப் பக்கத்துல வருதே…” என்றான்.

இடுப்பில் கையை வைத்தபடி தம்பியைப் பார்த்தவன், “அதுக்கும் இதுக்கும் கிட்டதட்ட நூற்றி இருபது கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்” என்றான்.

“ஓ! கார்ல ஒரு ஒன் அவர்ல போய்டலாமில்ல…” என்று தீவிர முகபாவத்துடன் கேட்டான்.

கழுத்தைத் தடவியபடி திரும்பியவன், “இப்போ எதுக்கு இந்தக் குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்டுட்டிருக்க? உனக்கு என்ன தெரியணும்?” என்றான்.

“நான் உங்களைச் சந்தேகப்பட்டுக் கேட்கறேன்னு நினைச்சிட்டீங்களா ப்ரோ! சேச்சே… அடிக்கடி அந்த ஏரியாவிலேயே இப்போல்லாம் வேலை வருதே… அதுதான், கொஞ்சம் புரியாத புதிராயிருக்கு.”

அருகில் வந்து அவனது தோளில் கையைப் போட்டவன், “தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் மூளையைக் கசக்காம, அப்பாவுக்குப் பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்ணு. தொழிலைக் கத்துக்கோ. நீ கேட்ட எக்ஸ்க்யூஸ், இன்னும் ரெண்டே மாசத்துல முடியுது. இதுவரை என்ஜாய் பண்ணது போதும். கம்பெனிக்கு வர்றதுக்கு ரெடியாகிக்க” என்றான் நிதானமாக.

‘மனசுல தோணின சந்தேகத்தைக் கேட்டது குற்றமா!’ என எண்ணிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தான் இந்தர்.

வார்ட்ரோபை மூடியபடி, “என்னடா, சொன்னதுக்கு சரின்னு ஒரு வார்த்தை வாயிலிருந்து வரல. அதுக்குக்கூட கஷ்டமாயிருக்கா?” எனக் கேட்டான் மித்ரன்.

“அதான், நீங்களே சொல்லிட்டீங்களே. இனி அப்பீல் ஏது?” என்று பெருமூச்சு விட்டான்.

சகோதரனின் ஆதங்கத்தைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக்கொண்டே, தனது வேலையில் முனைப்பாக இருந்தான் மித்ரன்.
“அப்புறம் என்னைக்கு ரிட்டர்ன்?”

“நைட் ரிசப்ஷன் முடிஞ்சதும். இல்லன்னா, மார்னிங் தான் கிளம்பணும்” என்றான்.

“இந்த இல்லன்னா…க்கு என்ன மீனிங்ன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்றவனை ஆழ்ந்த பார்வை பார்த்தான்.

“ப்ளைட் கிடைக்கறதைப் பொறுத்து” என்றான் அழுத்தமாக.

“ஓ..கே ப்..ரோ! கல்யாணத்துக்குக் கிளம்பற நேரம், எதுக்கு டென்ஷனாகிகிட்டு. நீங்க கிளம்புங்க” என்றான்.

“நான் டென்ஷனாகல… இப்போ நீதான் ஆஃபிஸ் வரணுமேன்னு கடுப்புலயிருக்க” என்றவன், ஷோல்டர் பேகை எடுத்துத் தோளில் குறுக்காக மாட்டிக்கொண்டான்.

கட்டில் மீதிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து ஜெர்க்கினின் உள்பாக்கெட்டில் வைத்தபடி, “ஓகே ரெண்டு நாள்ல வந்துடுவேன். டேக் கேர்” என்று தம்பியின் தோளில் தட்டிவிட்டு நகர்ந்தவன் சட்டென நின்றான்.

“இந்தர்… உன்னோட பேச்சைக் கொஞ்சம் குறைச்சிக்க. எப்பவும் நாம பேசறதைவிட, அடுத்தவங்களைப் பேசவச்சி அவங்களைப் பத்தி புரிஞ்சிக்க ட்ரை பண்றது நல்லது” என்றான்.

‘இந்த அவமானம் உனக்குத் தேவையா’ எனக் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்திடம் கேட்டுக்கொண்டான் இந்தர்.

******************

“நல்லவேளை சுமி! நீ கல்யாணத்துக்கு வந்துட்ட. இந்த ரெண்டு லூசுங்களும் கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லிட்டு, ரிசப்ஷனுக்கு வந்து நிக்குதுங்க” என்றபடி உச்சிவகிட்டில் குங்குமத்தை வைத்துக்கொண்டிருந்தாள் நீத்து.

“அதுக்காவது வந்தோமேன்னு சந்தோஷப்படு. எங்க வீட்ல இருக்கறதுங்களை சமாளிச்சிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது” என்ற வன்யா, “சுமி! இந்தச் சோளியோட நாட்டைப் போடேன்” என்றபடி சுமித்ராவின் எதிரில் வந்து நின்றாள்.

சங்கீதா, நீத்துவின் காதில் ஏதோ கிசுகிசுக்க, இருவரும் அடக்கமட்டாமல் சிரித்தனர்.
“ஏய்! எருமைங்களா… என்ன சொல்லிச் சிரிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். அடங்குங்க. பாவம் சுமி டார்லிங்! புரியாம முழிக்கிறா” என்று கலகலத்தாள் வன்யா.

“நான் வேணா சுமிக்கு விளக்கமா சொல்றேன்” என்ற சங்கீதா, சுமித்ராவை நோக்கிச் செல்ல, மற்ற தோழிகள் கலகலவென நகைத்தனர்.

“ஏய்! என்கிட்ட அடிவாங்காதே. நீ ஏதோ சென்சார் விஷயம் சொல்லப் போறேன்னு தெரியுது. பேசாம போயிடு” என்று போலியாக மிரட்டினாள் சுமித்ரா.

“ஹேய்! மிரட்டுறதுன்னா ஸ்ட்ராங்கா மிரட்டணும். இப்படிச் சிரிப்பை அடக்கிக்கிட்டு மிரட்டக்கூடாது” என்றாள் சங்கீதா.

“அதானே… ஆனா, சுமிகூட வளர்ந்துட்டாடீ. அதான் சிரிக்கிறா” என்ற வன்யாவின் மீது அங்கிருந்த தலையணையை தூக்கி அடித்தாள் சுமித்ரா.

“பின்னே, இன்னும் ரெண்டு மாசத்துல மிசஸ்.கிஷோர் ஆகப்போறாளே. இன்னும் புரியலைனா எப்படி?” என்று சிரித்தாள் நீத்து.

மூவரும் ஏதாவது சொல்லிக்கொண்டிருங்கள் என்பதைப் போல எதையும் காதில் வாங்காமல் வளையலை கையில் அடுக்கிக்கொண்டிருந்தாள் சுமி.

“பார்த்தியா நம்ம சுமிமாதிரி ஒரு நல்ல பொண்ணைப் பார்க்கவே முடியாது. எவ்வளது பவ்யமா இருக்கா…” என வேண்டுமென்றே அவளைச் சீண்டினாள் சங்கீதா.

“ராட்சஷிங்களா! பேசாம கிளம்புங்க…” என்றவள், சேலையை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள் சுமித்ரா.

“சுமி! ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுடீ…” என்ற சங்கீதாவை முறைத்தவள், “இனியும் ஏதாவது பேசினா, அடிதான் வாங்குவ” என்றவள் முறைத்தபடி உள் அறைக்கு நகர்ந்தாள்.

சங்கீதாவும், வன்யாவும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, “போதும்டீ அவளை ரொம்ப ஓட்டாதீங்க. வெளியில போனதும் இப்படி ஏதாவது கிண்டலடிச்சி என்னையும் சீண்டி வைக்காதீங்க. என் மாமியார் வீட்ல பார்த்தா அவ்வளவு தான்” என்ற நீத்து புடவை முந்தியை இழுத்துச் சொருகிக் கொண்டு, “சுமி ரெடியானதும் மூணு பேரும் பின்னால கார்டனுக்கு வந்துடுங்க” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

குங்கும நிறத்தில் பொன்நிற வேலைப்பாட்டுடன் இருந்த டஸர் சில்க் புடவையில் பாந்தமாக வந்து நின்றாள் சுமித்ரா.

“வாவ்! கலக்கற சுமி! இன்னைக்கு எத்தனைப் பேரோட கண்ணு உன் மேலன்னு தெரியல” என்று மயங்கிச் சரிவதைப் போல நடித்தாள் வன்யா.

“ஆமாம் ஆமாம். அதுக்கு முன்னாடி அவள் ஏற்கெனவே எங்கேஜ்டுன்னு சொல்லிடுவோமா…” என்று இரகசியம் போலக் கேட்டாள் சங்கீதா.

“நீங்க ரெண்டு பேரும் இப்படியே பேசிட்டிருங்க… உங்க பக்கத்துலயே நான் வரப்போறதில்ல” என்று கடுகடுத்தாள் சுமித்ரா.

“ஓகே பேபி! வாவா, மணி ஏழாகப் போகுது” என்றபடி கதவைப் பூட்டினாள் வன்யா.

மூவருமாக ரிசப்ஷன் நடக்கவிருக்கும் ஹோட்டலில் பின்பக்கத்திலிருந்த கார்டனுக்குச் சென்றனர்.

லேசாக வெளிச்சம் குறைந்த அந்தநேரத்தில் மின்விளக்குகள் கண்ணைப் பறிக்க, ஒரு சொர்க்கலோகம் போலிருந்தது அவ்விடம். மூவரும் ஒரு இடம் பார்த்து அமர்ந்தனர்.

வந்திருந்தவர்களில் தொன்னூற்றொன்பது சதவீதத்தினர் பெரும் செல்வவந்தர்கள் என்பது அவர்களது நடையுடை பாவனையிலேயே தெரிந்தது. எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் தலையசைப்பும், கைக்குலுக்கலுமாக சுற்றி வந்தவர்களைப் பார்த்தவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

அதிலும், தன்னிடம் இத்தனை நேரம் ஓயாமல் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த நீத்து, அமைதியாக வந்தவர்களை வரவேற்றுப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து நகைத்தாள்.

“என்னடி! சொன்னா நாங்களும் சிரிப்போமில்ல” என்றாள் வன்யா.

தான் பார்த்ததைச் சொல்லிச் சிரித்தவள், “இப்படி உள்ளே ஒரு வாழ்க்கை வெளியே ஒரு வாழ்க்கைதான் பணக்கார வாழ்க்கை போல…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மணமக்கள் மேடைக்கு வந்து சேர்ந்தனர்.

அதுவரை அமைதியாக இருந்த அந்த இடம், இளமைப் பட்டாளம் சூழச்சூழ ஆரவாரத்திலும், ஆட்டம் பட்டத்திலும் களைகட்ட ஆரம்பித்தது.

“நீ சொன்னது தப்பாகிடுச்சி சுமி! இங்கே பாரு இவங்க பண்ற அட்டகாசத்தை” என்றாள் சங்கீதா.
மூவரும் ஒருபக்கமாக அமர்ந்தபடி நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர்.

வெல்கம் டிரிங்குடன் அங்கு வந்த நீத்து, தோழிகளுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டு சற்றுநேரம் அவர்களருகில் அமர்ந்தாள்.

“ஹப்பா! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கணும். இந்தக் கும்பலெல்லாம் இருக்கும் வரைதான் நான் இங்கே உட்காரமுடியும்” என்றவள், நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.

பெரிய எல்.இ.டி திரையில் தெரிந்த கல்யாண கலாட்டாக்களை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுமித்ராவின் விழிகள் சட்டென அழகாக விரிந்தன.

ஒரு கையில் பூங்கொத்துடனும் மறுகையை பாக்கெட்டில் விட்டபடி, யாருடனோ சிரித்துப் பேசியபடி வந்துகொண்டிருந்தான் விஜய்மித்ரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *