Categories
On-Going Novels Yuvanika

அத்தியாயம் -14

Free Download WordPress Themes and plugins.

காதல்பனி 14

இரவு கணவனும் மனைவியும் நடத்திய ஊடல் நாடகத்திற்குப் பின் தாமதமாக உறங்கியதால் மறுநாள் பொழுது விடிந்து வெகுநேரம் கழித்துத்தான் சாரா கண்விழித்தாள். நேரமாகி விட்டதால் பதறியடித்து எழுந்தவள் அஷ்வத்தைப் பார்க்க, இவளுக்கு முன்பே எழுந்து குளித்து அவன் தயாராகிக் கீழே இருப்பதை உணர்ந்தவள் தானும் தயாராகிக் கீழே வந்தாள்.

சிறிது நேரத்திலேயே டாக்டர் வந்து பொம்மியின் காலைப் பார்த்து பிளாஸ்டிக் சர்ஜரி வேண்டாம் என்ற பிறகு தான் அஷ்வத்தால் நிம்மதியாக இருக்க முடிந்தது.

ஒரு வார காலத்தில் சாராவுக்குக் கால்கள் சரியாகி விட இத்தனை நாளில் என்ன தான் கணவன் சகஜமாக இருந்தாலும் தனிமையில் முகம் கசந்து போய் அவன் யோசனையிலே இருப்பதைப் பார்த்தவள் அதிலும் தாத்தாவுக்குத் தெரியாமல் கணவன் அதை மறைப்பதைப் பார்த்தவளின் உள்ளமோ உருகி விட்டது.

கணவன் எதை நினைத்துத் துன்பப் படுகிறான் என்று அறிந்தவள் அவன் மனதில் இருக்கும் சஞ்சலத்தைப் போக்க நினைத்துத் தன் உடல் சரியான உடன் அவனை அழைத்துச் சென்று அவன் தாத்தா வளர்ந்த அநாதை இல்லத்தைக் காட்டி அதை அவர் இன்று வரை நடத்தி வருவதாகக் கூறியவள் இனி இது அவன் பொறுப்பு என்றவள் பின் முன்பு ஒருமுறை இந்த ஊருக்குள் மதக் கலவரம் நடக்க ஓரே ரத்தக்காடாக இருந்த ஊரையும் மனிதர்களையும் நல்வழிப் படுத்தியது தாத்தா தான் என்றவள்

ஒருமுறை ஊருக்குள் மழை இல்லாமல் வானம் பார்த்த பூமியாக ஊரே வறண்டு போக அதனால் விவசாயிகள் தற்கொலையில் செத்து மடிய பக்கத்து மாவட்டத்தில் இருந்து தர வேண்டிய தண்ணீர் தராமல் போக மிச்சம் இருக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்ற நினைத்தவர் ஒரு தலைவனாக முன்னிருந்து அரசாங்கத்திடம் போராடி அந்த நீரை அவர் பெற்றுத் தர அதற்கு அவர் அடைந்த அசிங்க அவமானம் இழந்த இழப்புகள் என்று தான் கேள்விப்பட்டதை அனைத்தையும் சொன்னவள்

“அதன் பிறகு முழுக்க அரசாங்கத்தை நம்பி இருக்காமல் ஊரில் உள்ள அனைவரையும் திரட்டி அங்கங்கே குளம் குட்டை என்று வெட்டச் செய்தவர் மழை நீரை மக்கள் எப்படி எல்லாம் சேகரிக்க வேண்டும் என்ற வழி வகைகளையும் கற்றுக் கொடுத்தார். ஆனா அந்த நேரத்துல மட்டும் தாத்தா சுயநலமா தன் வாழ்க்கைய மட்டும் நினைத்து இருந்தார்னா இன்று இந்த ஊர் இவ்வளவு வளம் பெற்று இருக்காது” என்று அவள் சொல்லத் தன் மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்று அறிந்தவனோ மவுனம் காத்தான்.

அவள் எவ்வளவு எடுத்துரைத்தும் அவன் மனதில் ஏதோ ஒன்று அவனை சகஜ நிலையில் இருக்கவிடாமல் செய்து கொண்டு தான் இருந்தது. அதை அறிந்த அவன் மனையாள் அதையும் போக்கித் தான் தீருவேன் என்ற பிடிவாதத்துடன் இருக்க அதற்கும் நேரம் வந்தது.

ஒருமுறை தாத்தா வீட்டில் இல்லாத பொழுது அஷ்வத்தும் சாராவும் மட்டும் இருக்கும் நேரத்தில் ஒரு வயதானவர் தன் மூன்று வயது பேரனுடன் அவர்கள் வீட்டிற்கு வர அவரைப் பார்க்கும் போதே தெரிந்தது வசதி வாய்ப்பில் மிகவும் ஏழ்மையானவர் என்று. அஷ்வத் அவர்களை உள்ளே கூப்பிட்டு என்ன ஏது என்று கேட்க முதலில் தாத்தாவைக் கேட்டுத் தயங்கியவர் அஷ்வத்தின் பேச்சாலும் அணுகுமுறையாலும் தெளிந்து பிறகு என்னவென்று சொல்ல ஆரம்பித்தார் அவர்.

ஏழ்மையான குடும்பத்திலும் கீழ்ஜாதியில் இருந்து வந்தவரான இவருடைய ஒரே மகன் மேல்ஜாதிப் பெண்ணை விரும்ப அது தெரிந்து பெண் வீட்டார் எதிர்க்க அதில் இருவரும் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கண்ணுக்குத் தெரியாமல் வாழ, அதனால் இவரும் இவர் மனைவியுமே தலை மறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.

எங்கோ வாழ்ந்த அந்த காதலர்களுக்கும் ஆண் குழந்தை பிறந்த பிறகே அந்தப் பெண்ணின் குடும்பத்தார் கண்ணில் இவர்கள் சிக்கி விட, தன் மகள் என்றும் பார்க்காமல் அவளைக் கொன்றதோடு நில்லாமல் தன் மருமகனையும் பேரனையும் அவள் தந்தை கொல்ல வர அதில் தன் மகன் கத்திக் குத்துப் பெற்று உயிர் பிழைத்துத் தப்பித்துத் தன்னிடம் தன் பேரனை கொண்டு வந்து சேர்த்ததாகவும் அதன் பிறகு தன் மகன் உயிருடன் இல்லை என்றவர்

இன்று தன் பேரனின் உயிருக்காகவும் அவன் எதிர்கால வாழ்வுக்காவும் அந்த அரக்கர்களிடம் தன் மனைவியின் உயிரை பணயம் வைத்து இன்று தானும் தப்பித்து வந்ததாகக் கூறியவர் பின் அமைதி காக்க

அவரே மேற்கொண்டு சொல்லட்டும் என்று அஷ்வத்தும் அமைதி காக்க இதையெல்லாம் அங்கிருந்து கேட்ட பொம்மியோ அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டவள்

“சரி.. அதுக்கு இப்போ என்ன சொல்ல வரீங்க? அதுக்கு இங்க ஏன் வந்து இருக்கீங்க?” என்று முகத்தில் அடித்தார் போல் அவள் கேட்கவும், அந்தப் பெரியவரோ ஏதோ சொல்ல வந்து பின் அமைதியாகி விட அஷ்வதோ தன் மனைவியை வேற்று ஆட்கள் முன் திட்ட மனம் வராமல் ஓர் கண்டிக்கும் பார்வையை அவளிடம் செலுத்த அவன் பார்வையை அலட்சியம் செய்தவள்

“சொல்லுங்க.. இப்போ எதுக்கு இதெல்லாம் எங்க கிட்ட சொல்றிங்க? இதுல நாங்க என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க? எங்க தாத்தா மூலமா உங்க மகனையும் மருமகளையும் கொன்னவங்கள உள்ள தள்ளணும்னு பார்க்குறீங்களா? அதெல்லாம் எங்களால் செய்ய முடியாது” என அவள் நறுக்குத் தெறித்தார் போல் பேச

“அப்படி எதுவும் எனக்கு வேணா தாயி! அவங்க எல்லாம் பெரிய இடம். அப்படிப் பட்டவங்கள எல்லாம் எதிர்த்துப் போராட என் உடம்பிலையும் வலு இல்ல மனசுலையும் தெம்பு இல்ல. இதெல்லாம் விட நான் பணம் இல்லாத ஏழை மா. ஏழைகளுக்கு நியாயம் என்னைக்குக் கிடைச்சிருக்கு சொல்லு! எனக்கு வேற ஒரு உதவி செய்யணும்..” என்றவர் சற்றுத் தயங்கி மீண்டும் மவுனம் காக்கவும்

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஐயா!” என்று அஷ்வத் அவரிடம் கேட்கவும்

“நான் இப்போ உங்க தாத்தா கிட்ட கேட்க வந்தது எல்லாம் இது ஒண்ணு தான் தம்பி, எந்த மேல்ஜாதிப் பொண்ணக் கல்யாணம் பண்ணதால என் பையனையும் என் மருமகளையும் கொன்னாங்களோ அவங்களுக்கு எதிரா இன்று கீழ்ஜாதில பிறந்த என் வம்சமான என் பேரன் வாழணும். என் வம்சம் தழைக்கணும். அதுக்காகத்தான் இவன ஐயா நடத்துற காப்பகத்துல விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா ஐயா கிட்ட சிலது சொல்லணும்னு நினைத்து தான் இங்க வந்தேன். இப்போ உங்க கிட்ட சொன்னாலும் ஐயா கிட்ட சொன்னதுக்கு சமம் தானே அதனால உங்க கிட்டையே சொல்லிடுறேன்.

இவனக் கொல்ல அந்த அரக்கக் கூட்டம் எப்படியாவது வரும். அதனால என் பேரனை இங்கே வைத்திருக்காம ஏதோ ஒரு தேசத்துல யாரோ முகம் தெரியாதவங்க குழந்தைக்காக ஏங்கி நிற்கறவங்களுக்கு என் பேரனைத் தத்துக் கொடுத்திடுங்கையா. அவன் உயிருக்காக மட்டும் இதைச் சொல்லலை. என் பேரன் எங்கு இருந்தாலும் ஒரு குடும்பமா இருப்பானே என்ற ஆசையிலும் சுயநலத்திலும் தான் இதைக் கேட்டுக்கிறேன்” என்று நைந்த குரலில் சொல்லி அவர் பேரனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட

“நீங்க இப்படி செய்யுறதுனால உங்க பேரனுக்கு நீங்க எவ்வளவு பெரிய துரோகம் செய்றீங்கனு தெரியுமா?” என்று உடனே சாரா கேட்க

“இதுல என்ன மா துரோகம் இருக்கு?”

“பின்ன? அப்பா அம்மா தான் அவனுக்கு இல்ல. தாத்தா வான உங்க மூலமா அவனுக்குக் கிடைக்க வேண்டிய பாசத்தைக் கொடுக்காம போனா எப்படி? அப்போ அது துரோகம் இல்லையா?”

“அவன் என் கிட்ட இருந்தா தான் அவன் உயிருக்கே ஆபத்தாச்சே!”

“அவன் உயிருக்கு ஆபத்து என்றதால தான் நீங்க இதை செய்றீங்க. ஆனா நாளைக்கு உங்க பேரன் வளர்ந்து வந்து உங்க தியாகத்தையும் பாசத்தையும் புரிஞ்சிக்காம அன்னைக்கே என்னை அவங்க கிட்ட சாக விட்டு இருக்கலாமே! ஏன் இப்படி என்னை அநாதையா வளர விட்டீங்கனு கேட்டு உங்களை வெறுத்து ஒதுக்கினா என்ன பண்ணுவீங்க?”

“அப்படி ஒருக்காலும் என் பேரன் நினைக்க மாட்டான். இப்படி சூழ்நிலைக் கைதியா நான் நின்று என் உயிரே பிரியற நிலையில தான் இதைச் செய்தேனு அவன் புரிஞ்சிப்பான். அப்படியே என்னை வெறுத்தாலும் பரவாயில்ல. அவன் எங்கேயோ உயிரோட நல்லா இருப்பான் இல்ல? எனக்கு அது போதும் தாயி”

“நீங்க சொல்லுறது எதுவும் சரி வராது. வேணாம்.. நீங்க உங்க பேரனை இங்கிருந்து கூட்டிட்டுப் போங்க” என்று சாரா முடிவாக சொல்லி விட

அஷ்வத்தோ அந்தக் குழந்தையை எங்கு எப்படி பாதுகாப்பாக வளர்க்கலாம் என்றும் தனக்குத் தெரிந்த குழந்தை இல்லாத வெளிநாட்டுத் தம்பதியிடம் தத்துக் கொடுத்து வளர்க்கச் சொல்லலாமா இல்லை தான் நடத்தும் ஹோமிலேயே வளர்க்கலாமா என்று பலவாறு அவன் யோசித்துக் கொண்டிருக்க மனைவி சொன்னது எதையும் அவன் காதில் வாங்காததால் அவர் குழந்தையுடன் வெளியே செல்வதைப் பார்த்தவன்

“நில்லுங்க ஐயா! நீங்க சொல்ற மாதிரி உங்க பேரன் வளர்வதுக்கு நான் பொறுப்பு. அதுவும் அவன் உயிருக்கு ஆபத்து வராத இடமா பார்த்து வெளிநாட்டுல அவன் வளர நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க பேரனை இங்கே விட்டுட்டு போங்க” என்று அவன் அவருக்குத் தைரியம் சொல்ல, அவரோ பொம்மியை தயக்கத்துடன் ஒரு பார்வை பார்க்கவும் உடனே அஷ்வத்

“பொம்மி! போ போய் அவர் கிட்டயிருந்து அந்தக் குழந்தையை வாங்கு” என்று மனைவிக்கு கட்டளை இடவும் 

கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவள் அந்தக் குழந்தையை வாங்க அந்தப் பெரியவரோ சந்தோஷத்தில் பேரனை நீட்டியவர் பின் தன்னிடமே அவனை இறுக்கிக் கொண்டு அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தவர்

“இந்த தாத்தாவ நீ ஒரு நாள் புரிஞ்சிக்குவே டா” என்றவர் அவனை பொம்மியிடம் கொடுத்து விட்டுத் திரும்பியும் பார்க்காமல் அந்த இடத்தை விட்டுக் கண்ணீருடன் சென்றார் அந்த பெரியவர்.

அவர் சென்றதும் மனைவிடம் திரும்பியவன் அவள் குழந்தையை வேலையாட்களிடம் கொடுத்து விட்டு மேலே தங்கள் அறைக்குப் போவதைப் பார்த்தவனோ பின்னோடே இவனும் சென்று

“என்ன ஆச்சு உனக்கு? ஏன் அந்தக் குழந்தையைக் கூட்டிட்டு போகச் சொன்ன?” என்று மனைவியைக் கேட்க

“பின்ன.. வேற என்ன செய்யச் சொல்லுறீங்க? தாத்தாவையும் பேரனையும் பிரித்த பாவம் நமக்கு வேணாமேனு நினைச்சேன். அதுவும் இல்லாம நாளைக்கு அந்த பையன் வளர்ந்து இப்படி நமக்குத் தாத்தா துரோகம் செய்துட்டாருனு வருந்த மாட்டானா இல்ல அவரை தான் வெறுக்க மாட்டானா அப்புறம்….” அவள் முடிக்கக் கூட இல்லை

“நீ சொல்ற மாதிரி எல்லாம் செய்ய மாட்டான். அவன் உயிருக்காகத் தான் தன் தாத்தா இப்படி செய்தார் என்றதை அவனும் புரிஞ்சிக்குவான்”

“அந்த தாத்தாவுக்கு நீங்க சப்போர்ட்டா? அப்ப அவர் செய்யுறது துரோகம் இல்லைனு சொல்லுறீங்களா?” என்று மனைவி கூர்மையுடன் கேட்கவும்

“பின்ன இல்லையா? அவன் உயிரைக் காப்பாற்ற அவர் செய்யும் இந்த செயல் எப்படி துரோகமாகும்?” என்று அவனிடமிருந்து அம்பென வார்த்தைகள் வரவும், கணவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க மனம் வராமல் அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றவளோ 

“அப்போ ஏன் மச்சான் உங்க தாத்தா செய்தத மட்டும் துரோகம்னு நினைக்கிறீங்க? அவரும் இதைத் தானே செய்தார். நீங்க என்ன தான் அவர் கிட்ட அன்பா பேசி அவருக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்துச் செய்தாலும் எங்க கிட்ட எல்லாம் சகஜமா இருந்தாலும் நீங்க மட்டும் ஏன் மச்சான் இன்னும் பழசையே நினைத்து உள்ளுக்குள்ளே மறுகுறீங்க? அப்படி உங்கள என்னால பார்க்க முடியல….” மேற்கொண்டு எதையும் சொல்ல விடாமல் அவளைப் பின்புறமாக இறுக்கி அணைத்திருந்தான் அவள் கணவன்.

தன் வார்த்தைகளைக் கொண்டு தன்னையே மடக்கியத் தன் மனைவியை உள்ளுக்குள் மெச்சியவன் அதை விட ஒரு தாயைப் போல் தன் முகம் அறிந்து தன் மன உளைச்சலைப் போக்க நினைத்தவளின் தோளில் தன் முகம் புதைத்தவனோ 

“நீ என் அம்மாவா டா?!” என்று தொண்டை அடைக்கக் கரகரத்த குரலில் தன் உயிரே வதைப்படும் வேதனையைக் குரலில் கேட்டவன் கூடவே சூடான கண்ணீரை அவள் தோளில் நனைக்கவும் துடிதுடித்துப் போனாள் பொம்மி. அதை விட இதுவரை தன்னைத் தன் கணவன் ஒரு பொருட்டாவே எண்ணியதில்லையே என்று அவள் நினைத்ததற்கு மாறாக தன்னைக் கணவன் தன் தாய் இடத்தில் வைத்திருப்பதை உணர்ந்தவள் திரும்பி அவன் முகம் தாங்கி அவன் கண்ணீரைத் துடைத்து விட்டவள் அவனை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்து தன் மடி தாங்க, தன் கோபம் வருத்தம் என அனைத்தையும் அவள் வருடலிலும் அவள் மடி சாய்தலிலும் தன் மனப் போராட்டங்கள் அனைத்தையும் தொலைத்தான் அவன்.

அதன் பிறகும் பழைய விஷயங்கள் அவனுக்கு ஞாபகம் வராமல் இல்லை. அப்படியே வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் முன்பு இழந்ததற்கும் சேர்த்து இப்போது சுற்றி இருப்பவர்களுடன் வாழ நினைத்தான் அஷ்வத்.

வாழ்க்கை அதன் போக்கில் செல்ல இப்போதெல்லாம் ஊர் விஷயமாக இருந்தாலும் சரி தாத்தா நடத்தி வரும் எந்த ஒரு பொது விஷயமாக இருந்தாலும் சரி அஷ்வத்தே முன்னிருந்தான். அந்த அனுபவங்கள் அனைத்தும் அவனனுடைய மன மாற்றத்துக்கு வழி வகை செய்தது.

ஒருமுறை சற்றுத் தூரத்து உறவினர் வீட்டில் பிறந்த குழந்தையைத் தொட்டிலில் இட்டு பெயர் சூட்டும் விசேஷத்திற்கு பொம்மியும் சின்னாவும் சென்றிருக்க, விழா முடிந்த பிறகும் அந்தக் குழந்தையைப் பொம்மி விடாமல் வைத்திருக்க அதை ஒரு சில பெருசுகள் மறைமுகப் பேச்சுப் பேசினாலும் கண்டு கொள்ளாமல் பொம்மியிடமே விட்டிருந்தாள் அந்தக் குழந்தையின் தாய். அழகாக தங்கச்சிலை என இருந்த அந்தப் பெண் குழந்தை தூங்கிய பிறகு கூட பொம்மி தன் மடியில் வைத்திருக்கவும் அதைப் பார்த்த அந்தக் குழந்தையின் தாய்

“ஏன் அண்ணா, இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் குழந்தையப் பெத்துக்காம தள்ளிப் போடப் போறீங்க? எனக்கு என்னமோ மதனி குழந்தையை வைத்திருக்கிறதப் பார்த்தா அவங்களுக்கு இப்பவே பெத்துக்க எண்ணம் தான் போல! நீங்க தான் தள்ளிப் போடுறீங்களோ?!” என்று அஷ்வத்திடம் துடுக்காக கேட்க, திடீர் என்று இப்படிக் கேட்டதில் அவனுக்கே என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவன் மனைவியைப் பார்க்க அவளுக்கும் வாய் திறந்து பதில் சொல்ல முடியாத நிலை தான்!

முன்பு எப்படியோ! ஆனால் இப்படி பால் சதையுடன் அழகாக குண்டு கன்னங்களுடன் இருக்கும் குழந்தையைப் பார்த்ததிலிருந்து அந்தப் பெண் சொல்வது போல் பொம்மிக்குள் ஒரு இனம் புரியாத மாற்றம் தான் மனதில். ‘இப்படி ஒரு குழந்தையை நாம் எப்போது சுமப்போம்?’ என்ற ஏக்கம் தான் அவளுக்கும் தோன்றியது.

அந்த ஏக்கம் மனைவியின் முகத்திலும் கண்ணிலும் வழிவதைப் பார்த்தவன் அதன் பிறகு ஒரு வினாடி கூடத் தன் பார்வையை விலக்காமல் அவளையே விழுங்குவது போல் அவன் பார்த்திருக்க, கணவனின் பார்வையைப் பார்த்தவளோ இன்னும் தடுமாறிப் போனாள் பொம்மி. அண்ணனின் விழுங்கும் பார்வையும் அதற்கு மதனியின் தடுமாற்றத்தையும் பார்த்த அந்தப் பெண்ணோ 

“என்ன மதனி, அண்ணன் உங்களைப் பார்க்கிற பார்வையப் பார்த்தா இன்னைக்கே குழந்தைக்கு அச்சாணி போட்டுடுவீங்க போல!” என்று பொம்மியின் காதில் ரகசியமாய் சொல்ல, வெட்கத்தில் முகம் சிவந்தவளோ கணவனை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் இன்னும் தடுமாறிப் போனாள் பொம்மி.

அங்கிருந்து காரில் வீட்டுக்கு வந்து இங்கேயும் அதே கண்ணாமூச்சி தொடர, இரவு வெகுநேரம் கடந்து அவன் தூங்கின பிறகே இவள் மேலே தங்கள் அறைக்கு வந்தவள் கதவுக்கு தாழ்பாள் போட்டு விட்டு அவள் திரும்பும் நேரம் விளக்கை போட்டு விட்டு சட்டென்று அவளைத் தன் தலைக்கு மேலே தூக்கியிருந்தான் அஷ்வத்.

கணவன் தூங்கியிருப்பான் என்று நினைத்தவள் இப்படி அவன் தாக்குதலில் தடுமாறிப் பின் தன் கால் கொலுசும் கை வளையலும் சிணுங்க அவன் முடியை வலிக்காமல் தன் இரு கைகளால் பற்றியவள்

“என்னங்க இது விளையாட்டு? என்னைக் கீழே விடுங்க..” என்று அவள் சிணுங்க அப்போது பார்த்து அவள் புடவை விலக கிடைத்த இடைவேளையில் அவள் வெற்று வயிற்றில் தன் முகத்தை வைத்து இப்படியும் அப்படியுமாக புரட்டியவனோ இறுதியாக ஒர் முத்தத்தை அவள் வயிற்றுக் குழியில் பதிக்கவும் தன் சிணுங்களைக் கை விட்டு மொத்தமாக அவனிடம் அடங்கிப் போனாள் பொம்மி.

ஓர் முத்தத்திலேயே மனைவியின் மனநிலையை அறிந்தவனோ சின்னச் சிரிப்புடன் அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி தன் முத்தத்தால் அவள் முகமெங்கும் ஓவியம் தீட்டியவன் சட்டென்று கீழிறங்கி தன்னவள் வயிற்றிலேயே மீண்டும் முகம் புதைத்து நீண்ட ஆழ்ந்த முத்திரை ஒன்றை வைக்கவும்

மேல் கொண்டு நடக்கப் போவதை உணர்ந்தவளோ “மச்சான் வெளிச்சமா இருக்கு பாருங்க..” என்று அவனிடம் மிகவும் பலவீனமான குரலில் நினைவு படுத்த, சட்டென்று நிமிர்ந்தவனோ

“வெளிச்சம் இருந்தா என்ன டி?” என்று கேட்க வெட்கத்துடனும் ஒருவித எதிர்பார்ப்புடனும் பொம்மியோ விழிகளை மூடிக் கொள்ளவும், அவள் விழிகள் இரண்டின் மேலும் தன் இதழ் பதித்தவன்

“இன்னைக்கு எதுவும் நடக்காது பேசாம தூங்கு” என்று சொல்லி அவள் தலை கோதி விட

‘ஐயையோ! இவர் திரும்பவும் என்னை ஒதுக்க ஆரம்பிச்சிட்டாரோ?!’ என்று யோசித்தவள் கணவனின் வார்த்தையில் கலவரத்துடன் அவன் முகம் பார்க்கவும்

“அடியேய்.. எதுக்கு இந்த பயம்? நான் இன்னைக்குத் தான் வேண்டாம்னு சொன்னேன். எப்பவுமே வேண்டாம்னு சொல்லலையே? இன்னும் இரண்டு நாள்ல பாரீஸ்ல நமக்கு ரிசப்ஷன் பார்ட்டி வைத்திருக்கேன். அது முடிச்சிட்டு நேரா நம்ம ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போறோம். அங்கே வைத்துத் தான் நம்ப வாழ்க்கையே நாம ஆரம்பிக்கப் போகிறோம்” என்று அவன் முடிக்க

தான் ஒன்று நினைத்து கலங்கியதை தன்னவன் வேறு விதமாக எடுத்துக் கொண்டாலும் அதை வெளிப்படுத்தாமல் ‘பின்ன எதுக்கு டா இப்படி எல்லாம் பண்ணின?’ என்று கண்களால் கேட்டவள் செல்லக் கண்டிப்புடன் அவன் தலையில் வலிக்காமல் கொட்ட, அவள் கேள்வியை அறிந்து வாய் விட்டுச் சிரித்தவனோ

“காலையில் இருந்து ஒரு மார்க்கமாவே பார்க்குறியா அதான் சும்மா உன்னைச் சீண்டிப் பார்க்கலாம்னு தான் டி.. உண்மையிலே உனக்கும் விருப்பம் இருக்கானு கன்பர்ம் பண்ணிக்கத் தான்..” என்றவன் “அப்பறம் என்ன சொன்ன? வெளிச்சமா இருக்கா? அங்கே ஹனிமூன் வந்து பாரு.. நமக்கான உலகமாய் நம்ம காட்டேஜ்ல இரவு பகல் நேரங்காலம் இல்லாம மழை வெயில் குளிர்னு எந்த காலநிலையையும் பொருட்படுத்தாம இன்னும் சொல்லப் போனா வெளியுலகத்துல என்ன நடக்குதுனே தெரியாத அளவுக்கு நீயும் நானும் ஓருடல் ஈருயிர் அளவுக்குத் தனிமையில இருக்கப் போறோம். அப்ப அங்க எதுக்குமே நீ எந்த மறுப்புமே சொல்லக் கூடாது நான் கொடுக்கற டிரஸ்ஸ போட்டுகிட்டு நான்..”

சட்டென அவன் வாயைத் தன் விரலால் அவள் மூடவும் கண்ணில் குறும்பு வழிய அவள் விரல்களை வலிக்காமல் கடித்தவனோ

“இன்னைக்குப் பார் உன் மச்சான் முத்தத்தாலே உன்னைப் பாடாய் படுத்தப் போறேன்” என்று காதல் வழிய சொன்னவனோ உண்மையிலேயே மனைவியை முத்தத்தால் முக்குளிக்கத் தான் வைத்தான் அஷ்வத்.

தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு தான் சொன்ன மாதிரியே தன் மனையாளைப் பாரீஸ் அழைத்துச் சென்றவனோ, அங்கு தன் நண்பன் ஸ்டீவிடமும் அவன் குடும்பத்தாரிடமும் தன் மனைவியை அறிமுகப்படுத்தியவன் அவர்களுடன் ஒரு நாளை சந்தோஷத்துடன் செலவழிக்க அவர்கள் ஆசைப்படி நீச்சல்குளம் சென்று குழந்தைகளுடன் இறங்கி ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளமிட்டு அந்நாளை சந்தோஷமாகக் கழித்தார்கள்.

அஷ்வத் ஏற்பாடு செய்திருந்த ரிசப்ஷன் நாளும் இனிதே விடிய தன் நண்பர்களுக்கும் தொழில் துறையினர் அனைவருக்கும் தன் மனைவியைச் சிரித்த முகமாக அறிமுகப் படுத்தியவன் அப்போது கூட்டத்தில் ஒருவனின் முகத்தைப் பார்த்த போது மட்டும் சற்றுத் தடுமாறியவனோ மனைவியின் தோள் மேலிருந்து பட்டனெ தன் கையை எடுத்து விட்டு கூட்டத்தைச் சகஜமாக எதிர் கொள்வது போல் அவன் இருக்க மேடை ஏறி அவனிடம் வந்த அந்த புதியவனோ அஷ்வத்திடம்

“என்ன ஏ கே.. எப்படி இருக்க? எனக்கு சொல்லாமலே ரகசிமா கல்யாணம் எல்லாம் பண்ணி கிட்ட போல நீ! இருந்தாலும் நான் வந்துட்டேன் பார்த்தியா?” என்று கேட்டவன் பின் சாராவிடம் “ வணக்கம் சகோதரி என் பெயர் சூர்யா! உன் கணவனோட உயிர் நண்பன்” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் அவன்.

அதன் பிறகு விழா முடியும் வரை பேருக்காக மனைவியிடம் பேசியவனோ வீட்டுக்கு வந்த பிறகு அந்தப் பேச்சுமே இல்லாமல் அவளிடமிருந்து ஒதுங்கி விட, கணவனின் ஒதுக்கத்தை சரி வர உணராமல் தூங்கி எழுந்தவளோ நேரத்தைப் பார்க்க அதுவோ இவர்கள் இந்நேரம் விமானத்தில் சுவிட்சர்லாந்தை நோக்கிப் பறக்க வேண்டியதைக் காட்ட ‘ஐயோ! பட்டப்பகல்ல இவ்வளவு நேரமா தூங்கிட்டோம்? அவர் வேற இன்று நைட்டே சுவிட்சர்லாந்துல இருக்கணும்னு சொன்னாரே?!’ என்று கணவனைக் காணாமல் சுற்றும் முற்றும் தேடியவள் பின் இறுதியாக அவன் கெஸ்ட் ரூமில் தனக்கு முதுகு காட்டி நிற்பதைப் பார்த்தவள் உள்ளே சென்று அவனைப் பின்புறமாக அணைத்து 

“சாரி மச்சான்.. டயர்ட்ல தூங்கிட்டேன். நீங்களாவது எழுப்பி இருக்கலாம் இல்ல? இப்போ நாம வேற ஃப்ளைட் அரேன்ஜ் பண்ண முடியாதா? அங்க போன பிறகு உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லணும்னு இருக்கேன்?” என்று அவன் தோள் சாய்ந்து கொஞ்ச, அணைத்த அவள் கைகளைத் தன்னிடமிருந்து விலக்கியவனோ

“எங்கே?” என்று அவள் முகம் பார்க்காமல் ஒற்றை வார்த்தையாக அவன் கேட்க, அவன் முன் வந்து நின்றவளோ சின்னச் சிரிப்புடன் அவன் முகம் பார்க்காமல்

“நீங்க சொன்ன சுவிட்சர்லாந்துக்குத் தான்” என்று சொல்ல

“அதெல்லாம் போக வேணாம்”

“ஏன்?” என்று அவள் அவன் முகம் பார்க்க, அவள் முகத்தை நேருக்கு நேர் கண்டவனோ ஒருவித இறுகிய தன்மையுடன்

“எனக்கு உடம்பு சரியில்ல பொம்மி. நாம போக வேணாம்” என்று அவன் கூற

“அச்சோ! என்னங்க என்ன ஆச்சு உடம்புக்கு? என்ன பண்ணுது?” என்று அவள் பதற

“ஒண்ணும் இல்ல.. லேசா தலைவலி தான்”

“நான் வேணும்னா தலை பிடித்து விடவா? என்று கேட்டவள் அவனை நெருங்க, அவளை விட்டு ஓர் அடி பின்னே நகர்ந்தவனோ 

“அதெல்லாம் வேண்டாம்.. லேசான வலி தான்”

“அப்ப இருங்க.. சூடா டீ போட்டு எடுத்துட்டு வரேன். அதைக் குடிச்சா தலை வலி போகும்” என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் ஓடிப் போய் டீ போட்டு எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்து இருந்தவன் முன் பதட்டததுடன் கொடுக்க ஏதோ நினைவில் அவன் வாங்க இருவர் கையிலும் இல்லாமல் அந்த டீ கப்போ அவன் மேல் சரிந்து சூடான டீ கொட்டி விட 

“ஐயோ! சாரிங்க சாரிங்க.. சூடா கொட்டிடுச்சே!” என்றவள் “அந்த டீ ஷர்ட்டைக் கழட்டுங்க” என்று சொல்ல

“ஒண்ணும் கழட்ட வேணாம்.. நீ போ முதல்ல” என்று அஷ்வத் சிடுசிடுக்க

“நீங்க கழட்டுங்க நான் அதை அலசிப் போடுறேன்” என்று பொம்மி பிடிவாதம் செய்ய

“அது தான் வேணாம்னு சொல்றேன் இல்ல? நீ போ நான் அலசிக்கிறேன்” என்று அவன் மீண்டும் காட்டமாகப் பேச, அப்போதும் அவள் அங்கேயே நிற்கவும்

“அதான் உன்னைப் போனு சொல்றேன் இல்ல? போ டி..” என்று அவன் கொஞ்சம் பதட்டத்துடன் டென்ஷன் ஆகிக் கத்தவும்

‘இவர் ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி டென்ஷன் ஆகிறார்?’ என்று அவள் யோசிக்கும் போதே பதட்டத்தில் அவனையும் மீறி முகம் வியர்க்க அவன் கைகள் நடுக்கத்துடன் அவன் நெஞ்சுப் பகுதியை இறுக்கி இறுக்கிப் பிடிப்பதைப் பார்த்தவளோ

‘இவர் உடம்புக்கு ஏதோ பிரச்சினையோ? எங்க நான் அதை தெரிஞ்சிக்கப் போறேனு தான் இப்படி எல்லாம் பதட்டப் படுறாரோ?’ என்று நினைத்தவள், உடனே அவனை நெருங்கி

“நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம் நானே செய்றேன்” என்றவள் அவன் டீ ஷர்ட்டின் பட்டனைக் கழற்றுவதற்காகக் சட்டையில் கை வைக்க

“வேண்டாம்!..” என்ற கூக்குரலுடன் அவள் கையைத் தட்டி விட்டவனோ அதே வேகத்துடன் அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான் அஷ்வத். அவள் கண் கலங்கி அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கவும்

“உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாது? போடினு தானே சொல்றேன்? பிறகு ஏன் நிற்கற? போடி இங்கிருந்து!” என்று மறுபடியும் அவன் கர்ஜிக்க, வாங்கிய அடியைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் அவள் அப்படியே அசராமல் நிற்கவும், மனைவியின் முகத்தில் ஒருவித பிடிவாதத்தைப் பார்த்தவன் 

“நான் சொல்றது கேட்காம இன்னும் ஏன் டி இங்கேயே நிற்கிற? என் வீட்டை விட்டுப் போ டி!” என்று அவன் நிதானமே இல்லாமல் வார்த்தைகளை நெருப்பெனக் கொட்ட, அவளோ மிகவும் நிதானமாக

“நான் ஏன் போகனும்? இது என் வீடு. நான் இங்கே தான் இருப்பேன்” என்றவள் அதே இடத்திலேயே கால் மாற்றி நிற்கவும்

“என் வீடு எப்படி டி உன் வீடு ஆக முடியும்?”

“ஏன்னா நான் உங்க மனைவி நீங்க என் கணவன். அதனால இது என் வீடு தான்”

“உன்னைத் தான் நான் என் மனைவியாவே ஏத்துக்கலையே! பிறகு நீ எப்படி என் மனைவி ஆக முடியும்?” என்று அவன் சீறிப் பாய, அவள் எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கவும்

“சரி இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்க. நீ இங்கே இருக்கக் கூடாது. உன் கிட்ட பேசவோ ஏன் உன் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கலை. அதனால என்னை விட்டு இந்த வீட்டை விட்டு என் வாழ்க்கைய விட்டுப் போ டி” என்று அவன் வார்த்தைகளைக் கத்தி என வீச

“ அப்போ எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணீங்க?” என்று சாரா அமைதியாகக் கேட்க

“அது தான் நான் முன்னாடியே சொல்லி இருக்கேனே, எனக்குத் தேவையானது உன் கிட்ட இருக்குனு! உன் விழிகளுக்காகத் தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்பவும் எனக்கு அது தான் வேணும்”

“ஓ… அப்படியா? அப்போ நான் உயிரோட இருக்கும் போதே உங்களுக்குச் சொந்தமான இந்த விழிகளை உங்க கிட்டவே கொடுத்திட்டு உங்கள விட்டு நான் போய்டவா?”

“அம்மா தாயே.. முதல்ல அதை செய் டி!”

“நீங்க எதைக் கேட்குறீங்கனு தெரிஞ்சி தான் கேட்குறீங்களா?”

“ஆமாம் தெரிஞ்சி தான் கேட்கிறேன்”

“அப்போ அதற்கான நேரம் காலம் வரும்போது சொல்லி அனுப்புறேன், வந்து வாங்கிக்கங்க” என்றவள் 
“இப்போ நான் போறவ என்ன ஆனாலும் என்ன நடந்தாலும் திரும்ப நான் இங்க வருவேனு மட்டும் நினைக்காதிங்க. குட் பாய் மிஸ்டர் அஷ்வத் கென்டிரிக்!” என்றவள் அவனைத் திரும்பியும் பாராமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினாள் சாரா.

“நானும் உன்னைத் தேடி வரவே மாட்டேன் போ டி” என்றவன் கண்ணில் நீர் மல்க எதிலிருந்தோ தப்பித்தவன் போல் அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான் அஷ்வத்.

மனைவியைத் தேடி வரவே மாட்டேன் என்றவன் அடுத்த நாளே அவளைத் தேடி தஞ்சாவூர் வந்து அவள் முன் தங்களுக்கான விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளைக் கையெழுத்துப் போடச் சொல்ல, எந்தச் சலனமும் இல்லாமல் அதை வாங்கியவள் கூடவே அவன் நீட்டிய பேனாவை வாங்கி கையெழுத்து இட்டாள் இந்தச் சின்னாவின் பொம்மி!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *