Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 17

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் 17:

மறுநாள் காலை கல்யாணம் என்பதால் அங்கு வேலை செய்ய வந்த சிலர் அந்தாக்சரி ஆரம்பிக்க, வீட்டினரும் சிலர் இணைந்துக் கொண்டனர். அதில் கலந்து கொள்ளும் நாட்டமின்றி, தனிமையில் அமர்ந்திருந்த மஹதியை பார்த்த ஜெயந்தி, அந்த கூட்டத்திலிருந்து தனியே வந்து, அவள் முகத்தைப் பார்த்து “என்னடா” என்று வினவ,
“சங்கீத்தை பிரிந்து இரண்டுநாள் கூட ஆகல அத்தம்மா. அதுக்குள்ள மிஸ் பண்றேன்” என்று அவர் மடியில் தலை சாய்த்து படுத்தாள். உண்மையில் அவளுக்கு ஏதோ இனம்புரியா கவலை வந்தது. அதற்கு சங்கீத் தான் காரணமாக இருப்பான் என்று அவளாகவே காரணம் சொல்லிக் கொண்டாள்.
“அவன் எப்பவும் ஊருக்கு வரமாட்டேன்னு ஒரு ரீசன் வச்சிருப்பான். இப்போ யுனிவர்சிட்டி எக்ஸாம் வேற. கிளம்பிட்டேன்னு கால் பண்ணான். நாளைக்கு அவனோட சரிக்கு சரியா ஆட்டம் போடணும் தானே. போய் படு” என்று அழைத்தவரிடம், “நீயும் வா அத்தம்மா” என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள,
“அது சரி.இன்னைக்கு தூங்கினா கதை கந்தல் தான். நீ போய் தூங்குடி என் ராசாத்தி” என்று பேசிக் கொண்டே அறை வரைக்கும் வந்து ஸ்வாதி அறையின் கதவை தட்டினார். ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து தட்டியும் தூங்கவில்லை.
“நாங்க எல்லாம் அந்த காலத்துல கல்யாணம்ன்னா ஒருவாரத்துக்கு பயத்துல தூங்க மாட்டோம். நல்லவன் தானான்னு கவலை ஒரு பக்கம், பிறந்த வீட்டை விட்டு போறோமேன்னு கவலை ஒரு பக்கம்ன்னு…கீழே இந்த கத்து கத்துறப்ப இவளுக்கு எப்படி தூக்கம் வருதோ?” என்று மகளை கடிந்துக் கொண்டவரிடம்,
“விடுங்க அத்தம்மா. நான் கீழே வந்து படுத்துக்கிறேன்” என்றாள் தூக்க கலக்கத்திலேயே.
“கீழே ஆளுங்க வேலைப் பார்க்கிறாங்க.உன்னை தூங்கவிடமாட்டாங்கடா. நீ போய் கார்த்திக் ரூம்ல தூங்கு”
‘கார்த்திக்கா’ என்று தயங்கியவளிடம்,
“அவனும் அக்கா கல்யாணத்தை வச்சிக்கிட்டு நைட் தூங்க மாட்டான். துருவும் காலையில் தான் தூங்க வருவான். நான் சொல்லிக்கிறேன். போ” என்றார். இவள் தான் துருவ் பிரதீப் இதே அறையில் தான் தங்குவானா? என்று மேலும் தயங்கி நின்றாள்.
“வேணாம் அத்தம்மா” என்றவளுடன், “அவன் சும்மா வம்பிழுப்பாடா. அதுக்கு போய் பயந்துக்கிட்டு” என்று சொல்லும் போதே, அவளன்னை திலகா,
“அண்ணி, ஒன் அவர் தூங்கிட்டு வரேன்” என்று சொல்லியபடியே வரவும், இருவரையுமே கார்த்திக் அறைக்கு அனுப்பி விட்டு ஜெயந்தி வேலையைப் பார்க்க சென்று விட்டார். மஹதியும் தன் அன்னை இருக்கும் தைரியத்தில் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.
அந்த பெரிய கட்டிலில் இவள் ஒருபுறமும், திலகா ஒருபுறமும் உறங்க இவள் விழித்தபடி, கோடைகாலத்தில் மெதுவாக சுழலும் மின்விசிறியை பார்த்திருந்தாள். ஸ்வாதி அறையில் ஏசி இருக்கும். ‘இங்கே துருவ் தங்கியிருந்தால் நிச்சயமாக ஏ.சி.இருந்திருக்கும்’ என்று எப்படியோ தேடி ஏ.சியை ஆன் செய்து விட்டாள்
பின் சிறிது நேரத்திலேயே குளிரவும், இழுத்து போர்த்தி நன்றாக உறங்கி விட்டாள். காலையில் எழுந்ததும், சங்கீத் வந்திருப்பானே’ என்று ஓடிவர, அவனை சுற்றி நின்று ஜெயந்தியும், திலகாவும் திட்டிக் கொண்டிருந்தனர்.

கதவை திறந்து தன் தங்கையை காண ஆவலுடன் ஓடி வந்த அவனை வரவேற்க ஆளின்றி நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாளே என்று கதவை வேகமாக தட்டினான்.
ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். அந்த அறையில் இருந்து வெளியே வந்தது துருவ்.
“ஹோ சாரி! நான் என் தங்கையை தேடிவந்தேன்” என்று ஸ்வாதியின் அறைக்கு செல்ல, அவளோ இப்போது தான் வருவதா என்று கடிந்து கொள்ள, அவளிடம் பேசிவிட்டு,மஹதி எங்கே என்று வினவினான்.
“தெரியலயே. இங்கே வரலயே” என்றதும், மீண்டும் போய் திலகா முன் நிற்க, கார்த்திக் ரூம்ல தான்டா தூங்கிட்டு இருக்கா.. ஏஸியை அதிகமா வச்சிட்டு நடுங்கிட்டு இருந்தா. நல்லா போர்த்திவிட்டு தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு, ஏதோ ஒரு பொருளை குறிப்பிட்டு,
“அண்ணி! மண்டபதுக்கு அனுப்பீட்டீங்களா” என்றார். இவர்கள் வேலை செய்வதை பார்த்து விட்டு, மீண்டும் மாடியேறி மேலே வந்தான் சங்கீத். கார்த்திக் அறையில் தட்ட போக, அது அவசியமின்றி திறந்துக் கொண்டது. உள்ளே அந்த பெரிய கட்டிலில் துருவ் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான்.
இவள் எங்கே சென்றிருப்பாள்? என்று சலிப்புடன் கண்களை சுற்றி வந்தவன், திடீரென்று திகைத்து துருவ் அருகில் இருந்த போர்வையை சற்று விலக்கி பார்த்தான். அங்கே, மஹதி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, இவனுக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை. துருவ் அருகே சென்றவன், “டேய்” என்று, நன்றாக உறங்கியவன் முகத்தில் ஒரு குத்துவிட்டான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த துருவ், அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தான். இரவு முழுவதும் தூங்காமல் இருந்தவனுக்கு முற்றிலும் தூக்கம் கலையவில்லை. கண்களை தேய்த்து அவன் கண்ணை திறக்க முயற்சித்த அடுத்த நிமிடத்தில் மீண்டும் ஒரு குத்துவிட,
அதேநேரத்தில் தன் சகோதரி மகள் திருமணத்திற்காக வந்த அன்பரசி, ஜெயந்தியிடம் நலம் விசாரித்து விட்டு, மகன் துருவ் பிரதீப் சிங்கை தேடி மேலே வந்தார். சங்கீத் தன் மகனை அடிப்பதைப் பார்த்து விட்டு,
“டேய் யார்டா நீ? ஏன் என் பையனை அடிக்கிற?” என்று ஆவேசமாக உள்ளே நுழைந்தார்.
“நீங்க தான் இந்த தறுதலை பெற்றவங்களா? இவன் பண்ணி வச்சிருக்க வேலையை பாருங்க” என்று அருகில் படுத்திருந்த தன் தங்கையை காட்டினான். இவ்வளவு நேரமும் ஏதோ போர்வை இருக்கிறது என்று நினைத்திருந்த அன்பரசிக்கு, சங்கீத் சொல்லவும் தான் போர்வைக்குள் இருந்த உருவம் புலப்பட, ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி தன் வாயை பொத்தி, அதை வெளிக்காட்டாமல் கலக்கத்துடன் துருவை பார்க்க, அவனுக்கு இன்னும் அருகில் ஒரு உருவம் இருப்பது புலப்படவில்லை. கதவை திறந்து போட்டு படுக்கவும் கல்யாண வீட்டில் ஏதாவது திருடு போய்விட்டதோ, என்று யோசிக்க ஆரம்பித்து,
“இப்ப என்னாச்சு மா” என்றான் கூலாக.
“என்னாச்சா?” என்று அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்தவர், “இது ஒண்ணும் அமெரிக்கா இல்லடா. சேந்தமங்கலம்” என்று சொன்னவர், தன் முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்கும் போது தான், தான் செய்த விபரீதத்தை உணர்ந்தான்.
திலகா மூன்று மணிக்கு எழுந்து, வெளி தாழ்ப்பாளை போட்டு விட்டு செல்லவும், ஐந்து மணிக்கு மொட்டை மாடியில் இருந்து கீழே வந்த துருவ், கார்த்திக் வெளியே சென்றிருக்கான் என்றெண்ணிக் கொண்டு, படுக்கையில் வந்து விழுந்து விட்டான். ஒட்டடை குச்சி போல் இருந்தவள் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி படுத்திருந்ததால், அவனுக்கு மஹதி படுத்திருந்தது தெரிந்திருக்கவும் இல்லை. திருமண வீடாக இருப்பதால் ஏதாவது வைத்திருப்பார்கள் என்று நினைத்து ஒரு ஓரமாக படுத்துக் கொண்டான்.
சங்கீத் தோன்றிய வார்த்தைகளால் அவனை வறுத்துக் கொண்டிருக்க, அன்பரசியோ தலையில் அடித்து அடித்து அழுதுக் கொண்டிருந்தார். இருவரையும் மாறி மாறி பார்த்தவன், எதுவும் பேசாமல் தன் துணிமணிகளை எடுத்து டிராவல் பேக்கில் அனைத்தையும் திணித்து விட்டு, சங்கீத்தை காண்பித்து,
“அவனை விடுங்க. உங்களுக்கு என்னை தெரியாதா?” என்றுக் கேட்டு விட்டு, அவரின் அதிர்ந்த முகத்தை கண்டுக் கொள்ளாமல் வெளியேறி விட்டான். இந்த ரணகளத்திலும், குதுகலமான கனவுகளுடன் உறங்கி கொண்டிருந்தாள் மஹதி.
மண்டபத்திற்கு தேவையான பொருட்களை சரிப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தி, கையில் பையுடன் வந்தவனை பார்த்து விட்டு,
“அம்மாவை பார்க்கலயா துருவ்” என்றார். அவரிடம் பதில் சொல்லாமல் வெளியேற போனவன், பின் திரும்பி வந்து, “ஸ்வாதிட்ட சாரி சொல்லிடுங்கம்மா” என்று அவர் அழைக்க, அழைக்க நிற்காமல் சென்று விட்டான்.
சற்று நேரத்திலேயே பின்னாலேயே ஓடிவந்த அன்பரசியிடம் என்னவென்று வினவ, அவர் அழுதுக் கொண்டே நடந்ததை சொல்லிவிட்டு, “நான் போய் அவனைப் பார்க்கிறேன்” என்று ஓட்டமும் நடையுமாக விரைந்தார்.
ஜெயந்தி அதிர்ச்சியில் நிற்க, அன்பரசி பேசியதை அரைகுறையாய் கேட்ட திலகாவும் அதிர்ச்சியுடன், “ஹய்யோ மஹதி” என்று ஓலமிட்டு, தன் மகளை காண செல்ல முற்பட,
“ஏய் திலகா. ஒண்ணும் நடக்கல” என்று திலகாவின் வாயை மூடி, “இது கல்யாண வீடு. நம்ம மூச்சு விட்டாலும் நம்ம பொண்ணுக்குதான் கெட்ட பெயர். பேசாம இரு” என்றபோது,
“நான் அப்பவே சொன்னேனே அண்ணி. அந்த ஓடுகாலி மகனையெல்லாம் வீட்டில் சேர்க்காதீங்கன்னு” என்று ஜெயந்தியின் தோளில் குலுங்கி அழ,
“போதும் நிறுத்துங்க” என்றார் அன்பரசி. எதையோ மறந்து விட்டு எடுக்க வந்தவர் திலகாவின் பேச்சில் கோபமுற சொன்னார்.
“அன்பு சண்டை வேணாம்டா” என்று ஜெயந்தி அவர் கையை பிடிக்க,
“இன்னும் எத்தனை நாளைக்கு அக்கா இப்படி சொல்வாங்க? அவனும் தெரியாமல் தான் ..” என்று மேலும் அழுகை வர பாதியிலேயே நிறுத்தி விட்டார். அப்போது ஸ்வாதி மேலிருந்து,
“அம்மா! நான் குளிச்சிட்டேன். யாராவது குளிக்கணும்ன்னா இந்த பாத்ரூம்க்கு வர சொல்லுங்க” என்று சத்தமாக சொல்ல, தன் மகளின் திருமணத்தில் இப்படி நடக்கிறதே என்று சோகத்தை வெளிப்படுத்தியவாறு அவர் பார்க்க, திலகாதான், ஸ்வாதியின் சந்தோஷம் தங்களால் கெட்டுவிடக்கூடாது என்று முன்னே வந்து, “நீ போய் தலையை காய வைடா. வரேன்” என்று அனுப்ப முற்படும் போது,
“அன்பு சித்தி!” என்று ஆர்ப்பரித்தவள், “எப்போ வந்தீங்க?” என்றாள் குதூகலமாக.
விரக்தி கலந்த சிரிப்பை அவளறியாமல் உதிர்த்து விட்டு, ஸ்வாதியிடன் கடமைக்கு சென்று பேசினார் அன்பரசி.
சங்கீத் வந்ததும், திலகா மஹதியை பற்றிக் கேட்க,
“பாம் வெடிச்சா கூட தூங்குவா போல” என்று திட்ட,
“அவளுக்கு தெரிய வேணாம். சின்ன பொண்ணுடா” என்று திலகா சொன்னபோதே, ஜெயந்தி சங்கீத்தை திட்ட, வெளியில் பூட்டி விட்டு வந்து விட்டு யாரிடமும் சொல்லாமல் விட்ட திலகாவோ தன் தவறை அறியாமல்,ஜெயந்தியிடம் தன் மகனுக்காக பரிந்துக் கொண்டு வந்தார்.
“மஹதிக்கு ஒண்ணுன்னா இவன்தான் பார்க்கணும்” என்று.
ஜெயந்திக்கு துருவ் இன்னொரு மகன் போல். தன் மகனின்றி மகளின் திருமணம் நடக்கிறதே என்ற கவலை இருந்தாலும், ஸ்வாதி திருமணமும் மாப்பிள்ளை வீட்டாரும் நன்றாக அமைந்ததில் சற்று ஆறுதலாக இருந்தது.
திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே, “ஒரு வாரமா லீவ் போட்டேன் , நிறைய வேலை இருக்கு. நாங்க கிளம்புறோம் அண்ணி” என்று சிடுசிடுத்த முகத்தோடு திலகா வந்து நிற்க,
“பசங்களுக்கு லீவுதானே விட்டுட்டு போலாமே.” சொல்லி முடிப்பதற்குள்,
“போதும் அண்ணி ஒருவாரம் இருந்ததற்கு எங்களுக்கு கிடைத்தது போதும்” என்று சொல்லிவிட்டு, பின் அன்பரசி மேல் உள்ள கோபத்தை இவர் மேல் எதற்கு காட்டிக் கொண்டு என்று நினைத்த திலகா,
“உங்க தம்பி இரண்டு நாள் இருப்பார். நாங்க போறோம். ஸ்வாதி சென்னையில் தானே ஃப்ளைட் ஏறுவா. அப்போ பார்க்கலாம் அண்ணி” என்று தன் பிள்ளைகளை கிளப்ப தயாரனார். ஜெயந்தியும், அந்த பக்கம் அழுதுக் கொண்டே போன அன்பரசியையும், இந்த பக்கம் முறுக்கிக் கொண்டு செல்லும் திலகாவையும் நிறுத்தி வைக்க வழி தெரியாது செய்வதறியாது நின்றார்.
மேளசத்தங்களுக்கு இடையேயும், பரப்பரப்பான பந்தியிலும், இளைஞர்களுக்கு மத்தியிலும், கார்த்திக்கு அருகிலும், வரவேற்பறையிலும், அமர்ந்திருந்தவர்களிலும் துருவை தேடி தேடி கண்கள் சலித்து விட, கடைசியாக வீடு வந்ததும்,நேரே மொட்டை மாடிக்கு சென்றுதான் பார்த்தாள். இரவு முழுவதும் இங்குதான் இருந்திருப்பான். இப்போது வந்து அந்த இடத்தைப் பார்த்தால், அது என்ன கூகுளில் தேடியா சொல்லும்?

திலகா மட்டும் கிளம்பினால் கூட மறுத்திருப்பாள். ஆனால் ஆருயிர் அண்ணன் சங்கீத்தும் அல்லவா கூட செல்கிறான். அதனால் வேறு வழியின்றி கிளம்பி விட்டாள். அன்று நடந்தது அவளுக்கு தெரியவில்லை. ஆதலால், அந்த கோடை விடுமுறை நன்றாகவே கழிந்தது. விடுமுறை முடிந்து ரிசல்ட் எல்லாம் வந்ததும்,
“நான் விசுவல் ஆர்ட்ஸ் படிக்க போறேன்” என்று மஹதி சொல்லும் வரை.
ஒட்டுமொத்த குடும்பமும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்து, அவன் படித்ததையே படிக்கிறாள் என்றால் என்ன நடந்தது? என்று ஆளாளுக்கு குழம்பி தவிக்க,
“உன் இன்ஜினியரிங் கட் ஆஃப்க்கு நல்ல காலேஜ்ல கிடைக்குமே”
“விசிவல் ஆர்ட்ஸ்ன்னா ஸ்கோப் இருக்குமா?”என்று செந்திலில் ஆரம்பித்து, நேற்று திருமணமான சின்ன பெண் ஸ்வாதி வரை யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை அவள்.
சங்கீத் தான், “நான் பேசி பார்த்துட்டேன். அவ மனசுல ஒண்ணுமில்லம்மா..நிஜமாகவே கோர்ஸ்ல ஆசைப்பட்டுதான் கேட்கிறா.. நம்ம ஏதாவது சொல்ல போய் ஆப்போசிட் ரியாக்ஷன் ஆகிடும். அவ இஷ்டபடி எதுவோ படிக்கட்டும்” என்று தீர்ப்பு சொல்லிவிட, அனைவரும் உடன்பட்டனர்.
அவள் மனம் தடுமாறி விடக்கூடாது என்று அதன் பின் திலகாவும், சங்கீத்தும் அவளுடைய உற்ற நண்பனுக்கு இணையாகினர்.
இவளுக்கும் எந்த தடுமாற்றமும் இல்லை. அவனை சந்தித்தது கூட நினைவடுக்கின் மூலைக்கு சென்று விட்டு புது நண்பர்கள், படிப்பு என்று பிஸியாக இருந்தாள். டெல்லியில் மேற்படிப்புக்கு சேரும் வரை.

உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன்
-(இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *