Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 17

Free Download WordPress Themes and plugins.

எபி 17
என்னசொன்னாலும் காதில் வாங்காது தான் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்த பிரியாவை, இதற்குமேல் தன்னால் தனியாக சமாளிக்க முடியாது என உணர்ந்த ஹரி அவளை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு ஹாலுக்கு சென்றான்.
அங்கே இருந்த நால்வரும் நெடுநேரமாய் உள்ளிருந்து ஏதோ சத்தம் வந்துக்கொண்டிருந்ததால், இவர்களின் அறைக்கதவைதான் கலவரமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
“மா.. என்ன சொன்னாலும் காதுலயே வாங்காம அவ சொன்னதையே சொல்லிட்டு இருக்காமா. என்னால முடியலை. நீங்களாவது இவளுக்கு புரிய வைங்க.” என ஹரி அவளை மல்லிகாவின் அருகில்விட்டு, கடுப்புடன் சொன்னதும்,
மாமாவிடம் சொன்னால்தான் தன் காரியம் ஆகும் எனக் கணக்கிட்டு, “மாமா… அப்ப நான் ஏதோ தெரியாம, தனியா இருந்துப்பேன்னு சொல்லிட்டேன். அதை மனசுல வச்சிக்கிட்டு இப்ப என்னை அவங்களோட கூட்டிட்டு போகமாட்டேங்கறாங்க, பாருங்க மாமா” என பிரியா கண்ணில் நீர் தளும்ப ஹரியின் தந்தையிடம் சென்று புகார் செய்தாள்.
கண்ணில் கண்ணீரோடு மருமகள் பேசவும், அதை தாங்காத அவர், ”டேய்… என்னடா ரொம்ப பிகு பண்ற! குழந்தை தான் ‘அப்ப தெரியாம சொல்லிட்டேன்… இப்ப கூட வரேன்னு’ சொல்லுதில்ல… ஒழுங்கு மரியாதையா அவளையும் கூட்டிட்டு போ… இல்லையா நீயும் போகாம இங்கயே இரு.ஆபீஸில் ரொம்ப தொல்லை பண்ணா வேலைய விட்டுட்டு அவளை கூட்டிட்டு ஊர் வந்து சேர்!” என நாட்டாமையாய் பஞ்சாயத்து செய்தார்.
அவரின் பேச்சைக்கேட்டு டென்ஷன் ஆன ஹரி,”உங்களுக்கும் எனக்கும் நம்ம உயிரை எடுக்கன்னு நல்லா வந்து கிடைச்சிருக்காங்க பாருங்க ரெண்டு பேர்…!” என தன் அன்னையின் காதைக்கடித்தான். அதற்கு பதிலாய் ஒரு பரிதாமான ‘லுக்’கை அவர் கொடுத்தார்.
தந்தை இப்படி சொன்னபிறகு, தாயிடம் பேசுவது வேஸ்ட் என அறிந்த ஹரி,”ஆன்ட்டி… நீங்களாவது சொல்லிப் புரியவைங்களேன் உங்க பொண்ணுக்கு!” என சலிப்பாய் சரளாவைப் பார்த்து சொல்ல,
தன் அன்னையிடம் பஞ்சாயத்து போனால் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்காது என்பதை அறிந்த பிரியா,“இப்ப என்ன… என்னை உங்ககூட கூட்டிட்டு போகமாட்டீங்க! அவ்வளவுதானே! அதுக்கு எதுக்கு எல்லார்கிட்டையும் சப்போர்ட்டுக்கு போயிட்டிருக்கீங்க? நான் உங்க கூட வரல. போதுமா?.இப்போ இல்ல… எப்போவும் வரலை! இப்ப உங்களுக்கு சந்தோஷமா?” என அவனிடம் சொல்லி தங்களின் அறைக்கு வேகமாய் சென்று மறைய, ஹரி தன் தலையில் கைவைத்து அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்.
“ஹரி… பிரியாவை ஏன்டா இப்படி அழவைக்கற? நீ ஒன்னும் அவளை உன்கூட கூட்டிக்கொண்டு போகவேண்டாம் போடா! நாங்க எங்க கூட கூட்டிட்டு போறோம்.மூனு வருஷம் கழிச்சி வந்து நீ கால்ல விழுந்தாலும் அவளை உன்கூட நான் அனுப்ப மாட்டேன்!” என அவனின் அப்பா கோபமாக கத்த,
‘அய்யோ…இவர் வேற குறுக்கால காமெடி பண்ணிட்டிருக்கார்!’ என நினைத்த ஹரி,அவரை ஒன்றும்செய்ய முடியாத கோபத்தில் அவனின் அம்மாவை முறைத்தான்.
மகனின் கோபத்திற்கு ஆளான மல்லிகா,”ஏங்க அவனே பிரியாவை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கான்! நீங்க வேற அவனை போட்டு தொல்லைப்படுத்தினா பாவம் அவன் என்ன செய்வான்?கொஞ்ச நேரம் சும்மா இருங்க. அவங்க ரெண்டுப்பேரும் பேசிக்கட்டும்.” என அவனின் துணைக்கு வந்தார்.
அப்போது அவனிடம் வந்த பிரியாவின் பெற்றோர் அவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது… எனத்தெரியாது சிறிது நேரம் தவித்தனர்.பிறகு ஒரு வழியாக சரளா,
“ஹரி!அவ எப்பவும் இப்படிதான்.இங்க அவ தனியா ஹாஸ்டலில் இருக்கவேண்டிய கட்டாயம் வந்தபோது,முதலில் ‘நான் தனியா இருந்துப்பேன்… நான் எல்லாத்தையும் பாத்துப்பேன்’னு ஜம்பமா சொன்னவள்,நாங்க ஊருக்கு கிளம்பும் நாள் வரும் போது,அவங்க அப்பாவை மட்டும் தனியா ஊருக்கு போக சொல்லி,என்னை அவ கூட இங்கேயே இருக்க சொல்லி ஒரே அழுகை.ஷப்பா… அப்ப அவளை சமாளிக்க ஒரு முழு நாள் தேவைப்பட்டது.”
“அவளோட வாய்தான் ‘நான் சமாளிச்சுப்பேன்”னு சொல்லும். ஆனா அவளால புடிச்சவங்களை விட்டு கொஞ்ச நாள் கூட தனியா இருக்க முடியாது. நாங்க உங்க அவசர கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு இதுவும் ஒரு காரணம்.பாரினில் அவளால தனியா வருஷக்கணக்கா எல்லாம் இருக்க முடியாது.”
இப்ப கூட அவ முதலில் உங்களை தனியா போக எப்படி சம்மதிச்சான்னு எனக்கு சந்தேகம் வரவே தான் அன்னைக்கு ‘அவ ஓகே சொல்லிட்டாளா…!’னு திரும்ப திரும்ப கேட்டேன். நீங்க ‘ஆமாம்’னு சொன்னதும்… ‘பரவால்ல…நம்ம பொண்ணு வளர்ந்துட்டான்னு சந்தோஷப்பட்டேன். ஆனா… இப்ப இப்படி பண்ணுவான்னு நானும் எதிர்பார்க்கலை.”
“நாம இப்ப என்ன சொன்னாலும் அவ காது கொடுத்துகேட்க மாட்டா!நீங்க அவகிட்ட ஒன்னும் சொல்லாம கிளம்புங்க.ஒரு ரெண்டு நாள் இப்படியே இருந்துட்டு அப்புறம் நார்மலுக்கு வந்துடுவா!” என அவளின் வழக்கத்தை சொன்னார்.
அவளை இங்கே அழவைத்துவிட்டு இவனால் எப்படி கிளம்ப முடியும்! தங்களின் இந்த ‘இருபது நாள் பிரிவு’ அவளை பாதிக்கவில்லை என இவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவளைவிட்டு செல்ல அவனால் முடியவில்லை. இப்போது இவ்வளவு தூரம் அவள் மனதை தெரிந்துக்கொண்ட பிறகு,அவளை வருந்த வைத்துவிட்டு சென்றுவிட முடிந்திடுமா இவனால்?
சர்வநிச்சயமாக முடியாது! என உணர்ந்த ஹரி,அங்கே அவனை சுற்றி இருப்பவர்களை ஒருமுறை பார்த்து, பெருமூச்சைவிட்டு உள்ளே சென்றான்.
‘பொண்டாட்டி அட்ஜஸ்ட் பண்ணாலும் ஏன் அடம் பிடிக்க மாட்டேன்றா!’ இப்படி கவலையா இருக்கு. அடம் பிடிச்சாலும் ‘ஏன் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேன்றா!’ அப்படி கஷ்டமா இருக்கு. என்ன மாதிரி ‘டிசைன்’ஐ மைன்ட்ல வச்சி புருஷன்களை படைச்சானோ… அந்த கடவுள்!
உள்ளே ஒரு கையால் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் கண்ணைதுடைத்துக்கொண்டிருந்த பிரியாவிடம் வேகமாக சென்ற ஹரி, ”லக்ஸ்!குட்டி… இப்ப எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?பாரு உன்னோட கண்ணு,மூக்கு,மூஞ்சி எல்லாம் எப்படி சிவந்துப்போச்சு! அழதாடா குட்டி!” என்றதும்,
“நீங்கதான் என்னைவிட்டுட்டு தனியா போகபோறேன்னு சொன்னீங்க இல்ல?அதனாலதான் அழறேன்…அப்படித்தான் அழுவேன்!அப்புறம் சாப்பிடவும் மாட்டேன்!”என தான் அடுத்தடுத்து செய்யப்போவதை அழுகுரலில் அடுக்கினாள்.
இதுவரை ‘அப்பாடக்கர் ஆளுடா!’ என பிரியாவை எண்ணிக் கொண்டிருந்த ஹரி, இப்போது, ‘என்னோட பேபி, லக்ஸ் சோப்பு இல்ல,பேபி சோப்பு!’ என செல்லம் கொஞ்சினான். என்னபட்டாலும் இவன் திருந்தறதாக் காணோம்!
‘நான் சொன்னதை செய்வேன்’ என்று அக்குரல் அச்சுறுத்த,”லக்ஸ் சோப்பு இப்ப நல்லபுள்ளையா மாமா சொல்றதை ஒழுங்கா கேளுங்க.எக்ஸாம் எழுதாம நீ இன்னைக்கே கிளம்பிவரது எல்லாம் சரிப்படாது… இரு… நான் முழுசா பேசிமுடிச்சதும் நீ சொல்ல வேண்டியதை சொல்லு, இப்ப குறுக்கால பேசாத. அதனால நான் இப்ப என்னோட ஹையர் அஃபிஷியலை அப்ரோச் பண்ணி என்னோட ஜர்னிய ஒரு ட்வென்டி டேஸ் டிலே பண்ணமுடியுமான்னு கேட்கனும்… என்னக் கேட்கட்டுமா?”என்றான்.
‘கடைசிநாள் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, இப்போது போய் நான் இன்று போகவில்லை என சொல்வது சரிவருமா? அப்படி சொல்ல ஏதாவது வலுவான காரணம் இருக்கவேண்டாமா?என்னக்காரணம் சொல்லுவான்? ‘என் மனைவி என்னை தனியாக போகவிடமாட்டேன்றா’ என்றா? தன்னால் அவன் அலுவலகத்தில் அசிங்கப்படுவதா…?’ என எண்ணிய பிரியா,”வேணாம்… அது நல்லா இருக்காது”என உள்ளே போன குரலில் சொன்னாள்.
“அப்ப வேற என்னதான் பண்றது? நீயே சொல்லு. நீ என்ன சொன்னாலும் நான் அதை அப்படியே செய்யறேன்.”என்றவனுக்கு, ‘என்ன சொல்ல…?’ என விழித்தவள்,
“ம்ஹும்! எல்லாத்தையும் நானே தான் சொல்லனுமா?உங்களுக்கு தானா எதுவும் தோணாதா?” என இவள் சிடுசிடுத்தாள்.
அவளின் சிடுசிடுப்பு கூட இவனுக்கு சிணுங்கலாய் தெரிய,”ஆமாம். எல்லாத்தையும் என்னோட லக்ஸ்தான் சொல்லனும்.ஏன்னா அவ தான் என்னைய விட அறிவாளி! எவ்வளவு பெரிய பிரச்சனைன்னாலும் அதுக்கெல்லாம் எந்த ஒரு பிரச்சனையும் பண்ணாம அசால்ட்டா அதை எல்லாம் ஹாண்டில் பண்ணுவா!” என சொல்லிக்கொண்டு அவளை இழுத்து இறுக்கிக்கொண்டான்.
“அப்போ எந்த பிரச்சனையும் பண்ணாம,உங்களை புரிந்து நடந்துகிட்டது ஒரு குத்தமா? அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட்டா? இனி பாருங்க எல்லாத்துக்கும் உங்ககிட்ட சண்டைப்போடறேன்” என மூக்கை சுருக்கி கேட்டவளின் அழகில் மயங்கியவன்,
சுருக்கிய மூக்கை லேசாக ஒரு செல்லக்கடி கடித்து,”எப்படி லக்ஸ் சண்டைப்போடுவ? ரெஸ்ட்லிங்ல இப்போ நம்ம நாட்டு லேடீஸ் நல்லா ஷைன் ஆகறாங்க.நீ கூட அதை கத்து வச்சியிருக்கியா?அப்படிதான் என்கிட்ட சண்டைப்போடபோறியா?” என விஷமமாய்க்கேட்டு கண்ணடித்தான்.
‘எவ்வளவு சீரியஸ்ஸா நான் பேசிட்டு இருக்கேன்.இப்ப வந்து இவன் எதைக்கேட்கிறான் பாரேன்!’ என எண்ணி பல்லைக்கடித்தவள்,”நோ டைவர்ஷன்! கேட்டதுக்கு பதில் வேணும்!” என காட்டமாய் சொன்னாள்.
“என்னக்கேட்ட?”
“ம்ம்ம்… எல்லாப் பிரச்சனையிலும் உங்க இடத்திலிருந்து யோசிச்சது தப்பா?” எனஅழுத்தமாய் இவள் கேட்டதும்,
“தப்புன்னு சொல்லல லக்ஸ்! உனக்கு என்னைவிட மெச்சுரிட்டி அதிகம்னு நான் நம்பினேன். அடிக்கடி நான் சறுக்குற போதெல்லாம் நீ அதை பெருசா எடுத்துக்காம,ரொம்ப சாதரணமா நடந்துகிட்டதால இப்போதும் உனக்கு இந்த கொஞ்ச நான் பிரிவு பெருசா தோணலைன்னு நினச்சேன்” என்றான்.
“எதைவச்சி, எந்த விஷயத்தை பார்த்து நீங்க இப்படி நினைச்சீங்க?”
“எல்லா விஷயத்திலும் தான். அன்னைக்கு உன்னை நான் வெளிய ரொம்ப நேரமா காக்க வைத்தேனே.. அதுக்கு நீ என்னை ஒன்னுமே சொல்லலையே! காச்சு மூச்சுன்னு கத்தி சண்டைப் பிடிக்க வேணாம், அட்லீஸ்ட் ஒரு வார்த்தையாவது நீ கோபமா கேட்டிருக்கலாமே.”
“அப்புறம் உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வர சொல்லி உங்க வீட்டில் எல்லோரும் அவ்வளவு தூரம் சொல்லியும் நான் அன்னைக்கு மார்னிங் தான் கூட்டிப்போனேன், நீ அதுக்கும் ஒன்னும் சொல்லலையே! அடுத்து போனவாரம் நான் அந்த காசு விஷயத்துக்கு உன்கிட்ட கத்தினேனே… அப்பகூட நீ என்னை ஒன்னும் சொல்லலை.இப்படி எல்லாத்துக்கும் பெருசா நீ ரிஆக்ட் பண்ணாததால இது உன்னோட நேச்சர்னு நான் நினச்சேன்” என இது நாள் வரை அவளைப்பற்றி அவன் நினைத்து வந்ததை இன்று சொல்லிவிட்டான்.
அதைக்கேட்டவள் சிறிது நேரம் மௌனமாக இருக்கவும்அவள் தன் மேல் கோபம் கொள்ள வாய்ப்பில்லை, வருத்தம் கொண்டுவிட்டாளோ என எண்ணிய ஹரி,”ஹேய் லக்ஸ், நான் உன்னை எதுவும் தப்பா சொல்லல” என தவிப்பாய் சொல்லி, ஹரி அவளை அணைத்துக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *