Categories
Deepi On-Going Novels

அத்தியாயம் – 17

Free Download WordPress Themes and plugins.

கல்கி-17

இறுமாந்திருந்த இதயத்தின் லயம் இன்னுயிரானவளின் இதழ்கள் விரித்து இசைத்திட போகும் இனிய மொழிகளைக் கேட்டிட ஆவலுடன் காத்திருப்பதை உணர்ந்த கிருபாகரன், தானும் அவ்வாறே காத்திருப்பதாக சாம்பல் நிற வஸ்து மூலம் சங்கேத ஒலிகளை இதயத்திற்கு அனுப்பி பொறுமை காத்திட சொன்னான்.

அவனது காத்திருப்பிற்கு கிட்டிய பரிசாக கல்கி காயத்ரியின் கேள்வியில் முதலில் வாய்விட்டு சிரித்தாள்.”நீங்க கேட்ட கேள்வியே தப்பு ஆன்ட்டி…கிருபாவை பொறுத்தவரைக்கும் எதையுமே நேரடியா செய்வான்…

கேர்ள் ஃபிரண்ட்ஸ் வச்சிருந்தாலும் இந்நேரம் எல்லார் முன்னாடியும் கூட்டிட்டு வந்து இருப்பானே தவிர்த்து இப்படி பேரை மட்டும் சொல்லிட்டு திரிய மாட்டான்… அதோட பொண்ணுங்கள மதிக்கிறவன நான் எப்படி தப்பா நினைக்க முடியும்.

சோ எனக்கு தெரிஞ்சி இது ஏதாவது கார்ட்டூன் கேரக்டரோ,இல்லைனா வீடியோ கேம்ல வர்ற கேரக்டராகவே இருக்கலாம்… அதுவுமில்லாம உங்க பையன் நாலஞ்சு கேர்ள் ஃபிரண்ட்ஸ் வச்சுக்கிற அளவுக்கு ஒர்த் இல்லை… அந்தப் பொண்ணுங்க ஒரு விரலை நீட்டி பேசினாலே அந்த விரலை உடைச்சிட்டு வர்றவங்களுக்கு எப்படி கேர்ள் பிரண்ட் அமையும்?”, என்று கேட்டுவிட்டு மறுபடியும் சிரித்த கல்கி எதிர்பாராத நொடியில் கிருபாகரன் அவளைத் தாவி அணைத்திருந்தான்.

“டேய் கிருபா! நான் இங்க தான் டா இருக்கேன்”, என்று காயத்ரி அலறிய பின்னும் கல்கியை விலக விடாதவன் தன்னுடைய கை அணைப்பில் அவளை இறுக்கிப் பிடித்தவாறே “நான் சொன்னது கரெக்ட் ஆயிடுச்சா அம்மா? கல்கி என்னை எவ்வளவு கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கா பாருங்க”, என்று காயத்ரியிடம் பெருமையாக கூறியவன் “ஐ லவ் யூ பாவ்க்ஸ்”, என உரைத்துவிட்டு “நீங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சிட்டு சீக்கிரமா வாங்க”, என்றதுடன் வீட்டுக்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

அவனது ஓட்டத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மன நிலையில் உள்ளான் என்பது மற்ற இருவருக்கும் புரிந்தது. நின்று கொண்டிருந்த கல்கியை “உட்கார் கல்கி… உன்கிட்ட இன்னும் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு”, என்று அவளை அமர்த்திய காயத்ரி

“நீ சொன்ன மாதிரி மோனா (mouna) கேரக்டரும், எலிசா(Elisha) கேரக்டரும் கார்ட்டூனில் வர்றவங்க தான்… இந்த மோனா, எலிசா கேரக்டர்ஸ் எதையாவது சாதிக்கிற மாதிரி வர்றவங்க… நான் கல்யாணம் பண்ணி வந்தவுடனே வீட்டைப் பார்த்துக்கறதுல மட்டும்தான் கவனம் செலுத்தினேன்… தயாக்கு அவரோட பிசினஸ்ல இருந்த கவனம் வீட்டிலேயும் இருந்துச்சு…

கிருபா எனக்கு அஞ்சு வருஷம் கழிச்சு தான் பிறந்தான். அவன் பிறக்குறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் அத்தை அவங்களோட ஒட்டு மொத்த சொத்தையும் ரெண்டா பிரிச்சு ஒரு பாகத்தை எனக்கு கொடுத்தாங்க.கொடுக்கிறப்ப இதுல உனக்கு எந்த தொழில் மேல ஆர்வம் இருக்கோ அதை ஆரம்பி…

ஒரு பொண்ணா இருந்துகிட்டு எதுக்காகவும்,புருஷனா இருந்தாலும் அவங்கிட்ட கையேந்தக் கூடாது…உன்னோட சுய சம்பாத்தியம் காலத்துக்கும் உனக்கு இருக்கணும்… தொழிலில் லாப,நஷ்டம் முக்கியம் கிடையாது.உன்னோட தன்னம்பிக்கை மட்டும் தான் முக்கியம்… அப்படின்னு சொல்லி கொடுத்தாங்க.

அத்தை சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சது.இத்தனை நாள் வேஸ்ட் பண்ணதுக்கு இனிமே உருப்படியா ஏதாவது செய்யணும்னு இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன்… கிருபா பிறந்து ஒரு ஆறு மாசம் என்னால தொழில்ல சரியா கவனம் செலுத்த முடியல… ஆனால் தயா எப்பவும் போல அவர் பிசினஸ வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருந்தார்.

அதிலே எனக்கு ஒரு வகையான கோபம் வந்துச்சு… டெய்லி தயா கூட சண்டை போட ஆரம்பிச்சேன். உங்க பையனையும், உங்களையும் நான் பார்த்துக்கிட்டா போதும் அப்படின்னு நினைச்சு தான் நீங்க எந்த உதவியும் செய்யல…நீங்க இனிமே பையன பார்த்துக்கோங்க… நான் என் தொழிலை பாக்கணும். இதை நான் சொன்னப்ப தயா எதுவுமே பேசாம ஒத்துக்கிட்டார்.

அதுக்கு அடுத்து கிருபாவுக்கு ஆறு வயசு ஆகுற வரைக்கும் தயா தான் பாத்துகிட்டார்… நான் பிசினஸ்ல ஜெயிக்கணும்னு வெறியில எப்ப பாத்தாலும் ஓடிக்கிட்டே இருந்தேன். அதுக்காக தயா கிருபா கிட்ட என்னை பத்தி ஒரு நாளும் குறையா சொன்னது கிடையாது… இந்த மாதிரி கார்ட்டூன் கேரக்டர்ஸை காமிச்சி உங்க அம்மா மாதிரி சாதனை பண்றவங்க இவங்க அப்படிங்கறத அவனோட மனசுல ஆழமாக பதிய வச்சிட்டார்.

அதனால அவனுக்கும் கார்ட்டூன் பிடிச்ச அளவுக்கு அதுல சாதனை பண்ற பெண்கள் கேரக்டர்ச ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிருச்சி… நானும் ஒரு கட்டத்துல குடும்பத்தையும், பிசினஸையும் புரிஞ்சுகிட்டு நடக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் கிருபா இந்த கார்ட்டூன்ஸ் பார்க்கிறது நிறுத்த எவ்வளவோ முயற்சி பண்ணேன்…

ஆனால் இன்னிக்கு வரைக்கும் என்னால அது முடியல”, என்று கூறிய காயத்ரி கல்கியின் பதிலையோ, வேறு கேள்விகளையோ எதிர்பார்க்கவில்லை… உன்னிடம் நான் கூற வேண்டும் என நினைத்தேன், கூறிவிட்டேன் என்ற நிலையில் பேசிவிட்டு “உள்ளே போவோமா கல்கி?”, என்று கேட்டு அவளை உள்ளே அழைத்து கொண்டு வந்து விட்டார்.

கல்கியும்,காயத்ரியும் வீட்டினுள் நுழைந்த பொழுது பாட்டி கூறியது போன்றே அங்கு சிறு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கல்கி அமர்ந்ததும் “நாமளே எடுத்து போட்டுக்கலாம்”, என்று தயா கூறிக்கொண்டிருக்கும் பொழுதே கிருபாகரன் கல்கிக்கு பரிமாற ஆரம்பித்திருந்தான்.

கல்கியும் எந்தவித பிகுவும் செய்யாமல் அவனை அது எடுத்து வை, இது எடுத்து வை என்று ஏவிக் கொண்டிருந்தாள்.மற்றவர்கள் இதனை கண்டு சிரித்தாலும் எந்த வித கமெண்டும் அடிக்க வில்லை.ஆனால் இவற்றை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி மட்டும் சற்று நேரம் கழித்து

“சிகே கொஞ்சம் இங்க என்னோட ப்ளேட்டையும் கவனி”, என்று கூறியதும் அங்கிருந்த மிளகாய்த் துவையல் எடுத்து அவருக்கு பரிமாறிவிட்டு கல்கியின் அருகில் அமர்ந்துகொண்டான்.கிருபா அமர்ந்ததும் அவனுக்கு மட்டும் கேட்குமாறு “பரிமாற மட்டும் செஞ்ச… ஊட்டி விடலையா?”, என்று கேட்டு அவனை கடுப்பேற்றிய கிருபாவதியை முறைத்துவிட்டு அனைவருக்கும் கேட்குமாறு

“பிகே இன்னும் கொஞ்சம் மிளகாய் துவையல் வைக்கவா”,என்று சத்தமாக கேட்டான்.பாட்டி பதில் கூறும் முன்னர் கல்கி “அது என்ன பிகே? சிகே?”, என்று கேள்வி எழுப்பியதும் பாட்டி “பெரிய கிருபா, சின்ன கிருபா”, என்று தனது சட்டை காலரை தூக்கி விட்டவாறு கூறினார்.

ஆனால் கிருபாகரனோ “அதெல்லாம் இல்லை பாவ்க்ஸ்… பிசாசு கிருபான்னு நேரடியா சொல்ல முடியாமல் எங்க தாத்தா நான் பிறந்ததும் அடம்பிடிச்சு எனக்கு கிருபாகரன்ன்னு பேரு வச்சிட்டு பிகே,சிகே அப்படின்னு கூப்பிட ஆரம்பிச்சார்… பாட்டிக்கு முதல் தடவையே சந்தேகம் வந்து கேட்டதுக்கு ரெண்டு பேரையுமே ஒரே பெயரில் கூப்பிட விருப்பப்பட்டுதான் பெரிய கிருபா,சின்ன கிருபான்னு சுருக்கி சொல்றேன்னு எஸ்கேப் ஆயிட்டார் …

இவங்களும் நம்பிட்டாங்க”, என்று குழந்தைகளுக்கு கூறும் கதை போல் ஒரு கதை கூறியவன் கல்கியை பார்த்து தன் கண்களை சிமிட்டினான்.பாட்டி மற்றும் பேரனின் கால்வாரல்களுடன் சிறுவிருந்து பெருவிருந்து போல் களைகட்டியது.

அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் தயாவும்,கிருபாகரனும் பாத்திரங்களை எடுத்து சென்று கழுவ ஆரம்பித்தனர். அதனை வித்தியாசமாக பார்த்த கல்கியிடம் “நம்ம வீட்டில பாத்திரம் கழுவுறதற்கு காலையிலயும்,சாயங்காலமும் ஒருத்தவங்க வருவாங்க…

அவங்களுக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலமும்,சனி,ஞாயிறும் லீவு கொடுத்துடுவோம்… வீட்டுவேலை எல்லாத்தையும் நாங்களே ஷேர் பண்ணி செஞ்சுடுவோம்”, என்று காயத்ரி கூறியதில் அவர்களின் எளிமை கல்கிக்கு நன்றாக புரிந்தது.

கிருபாவும்,தயாவும் கிச்சனை கிளீன் செய்துவிட்டு வந்த பின்னர் இவர்களுடன் வந்து இணைந்து கொண்டனர்.பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே “எக்ஸ்க்யூஸ் மீ!”, என்று கூறிவிட்டு உள்ளே சென்ற பாட்டி சிறிது நேரத்திற்குப் பின்னர் கையில் ஒரு பரிசு பெட்டியுடன் வந்தார்.

அதனை கல்கியின் கையில் வைத்து “இதை நீ கண்டிப்பா ஏத்துக்கணும் கல்கி! உனக்காக நான் தேடிப்பிடிச்சு வாங்கிட்டு வந்தது”, என்று கூறியவரின் பரிசை மறுக்க விருப்பமில்லாமல் பெற்றுக்கொண்டவளை குறுகுறுவென்று பார்த்த கிருபாகரன் அவளது முக உணர்வுகளை தன்னுடைய அகத்தில் ஏற்றிக் கொள்ள முனைந்து கொண்டிருந்தான்.

“என்ன கிருபா? கல்கி முகத்தில் என்ன இருக்குன்னு இப்படி பாக்குற”, என்று அதனையும் மாட்டிவிட்ட பாட்டியை பிகே என்று முறைத்தான். இறுதியாக கல்கி விடைபெறும் முன்னர் பாட்டி

“கல்கி! நீ எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான்… யாரும் எதற்காகவும் உன்னை வற்புறுத்த
மாட்டாங்க… கிருபா உனக்கு தொந்தரவு கொடுத்தா கொஞ்சம் கூட யோசிக்காம நீயே அடிச்சாலும் சரி, இல்ல கம்ப்ளைன்ட் கொடுத்து லாடம் கட்ட வச்சாலும் சரி… என்னோட முழு சப்போர்ட் உனக்கு உண்டு…

நாளைக்கு காலைல நாங்க ரெண்டு பேரும் தெட்ஃபோா்ட்(Thetford) கிளம்பிடுவோம்… என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோ! எந்த நேரமா இருந்தாலும் நீ என்னைக் கூப்பிடலாம்”, என்று அவரது எண்ணைக் கொடுத்து கட்டி அணைத்து விடை கொடுத்தார்.

பாட்டி கூறியதைப் போன்றே காயத்ரியும் “நீ எது செஞ்சாலும் என்னோட முழு சப்போர்ட்டும் உனக்கு தான் கல்கி!”, என்று கூறியதும் கிருபாகரன் “யூ டூ புரூட்டஸ்”, என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான். அவனது இந்தப் பாவத்தில் அவனை தன் பக்கமாக திருப்பிய தயா “என்னோட சப்போர்ட்டும் கல்கிக்கு தான் மகனே!”, என்று கூறி அவ்விடத்தில் ஒரு சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

அவர்களுடன் இணைந்து சிரித்த கிருபாகரனை “என்ன சிகே நீயும் சிரிக்கிற?”, என்று பாட்டி வினவியதும் “கல்கியும்,நானும் வேற வேற இல்ல… அப்ப கல்கிக்கு சப்போர்ட் பண்றது எல்லாம் எனக்கு தானே!”, என்று அப்பொழுதும் கல்கியை நான் விட்டுத்தர மாட்டேன் என்பதை அனைவருக்கும் உணர்த்தினான். இப்பேச்சை மேலும் வளரவிடாமல் கல்கி “நான் கிளம்புகிறேன்”, என்று கிளம்ப தயாரானதும் கிருபா தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு

“வா! வா! நான் உன்னை விட்டுட்டு வர்றேன்”, என்று அவளது கையை பற்றியவாறு வெளியேறினான். “கிருபா உனக்கு கிறுக்கா புடிச்சிருக்கு? எப்ப பார்த்தாலும் கைய புடிச்சு இழுக்குற… கையை விடு”, என்று எரிச்சலுடன் கூறியவளிடம் “உன்னோட கைய முதல்தடவையா பிடிச்சப்பவே கடைசி வரைக்கும் விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்…

அதனால இந்த டயலாக் இனிமே சொல்லாத”, என்றவன் அவளது கையிலிருந்த பரிசுப் பெட்டியை தன் கையில் பிடுங்கி கொண்டதுடன் அவளது ஒரு விரலை மட்டும் பிடித்தவாறு நடக்க ஆரம்பித்தான்.

கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்தவன் இப்போது நடத்திக் கூட்டிக்கொண்டு போவதைப் பார்த்து இவள் முறைத்ததில் “கொஞ்சம் நடப்போம் கல்கி… சாப்பிட்டது செமிக்கும்.உன்னை விட்டுட்டு வர்றப்ப நான் ஆட்டோல வந்துடுறேன்”, என கிருபாகரன் கூறியதற்கு எவ்வித மறுப்பும் கூறாமல் கல்கியும் அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.

வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற பின்னர் கிருபாகரன் “கல்கி!நான் ஒரு விஷயம் கேட்கிறேன். அதுக்கு உன்னோட மனசுல இருக்கிற பதிலை நீ சொல்லணும்”, என்று உரைத்தவன் அவளது மற்ற விரல்களையும் இணைத்து தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டான்.

அவனது முஸ்தீபுகளை பார்த்து இதழ்க்கடையில் இளமுறுவலை இயற்றியவள் “பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னாலும் நீ கேட்காம இருக்கப் போறது இல்லை… அதனால கேட்டு தொலை”, என்று சம்மதம் அளித்தாள். அவள் வாய் மொழியைக் கேட்டு அடுத்த நொடியில் “கல்கி! வெளியிலே எல்லா ஆம்பளைங்களோடயும் நீ சாதாரணமா பேசினாலும் ஆண் வர்க்கத்தின் மேல ஏதோ வெறுப்பா இருக்கிற மாதிரி தெரியுது… அதாவது நீ ஆண்களோட பேசுவ…

ஆனால் உன்னோட மனசுக்குள்ள அவங்க கூட பேச பிடிக்காது… அதை உன்னோட உணர்வுகள் மூலமா கூட வெளிக்காட்ட மாட்ட… அதே மாதிரி அடிச்சா மட்டும் தான் நாம தைரியசாலியா இந்த உலகத்துக்கு முன்னாடி காட்டிக்க முடியும்னு நீ கொஞ்சம் இல்லை! இல்லை !ரொம்பவே அராத்து தனமா நடந்துக்குறயோனு எனக்கு தோணுது…

உன்னோட மனசுல அப்படி என்ன வெறுப்புனு நீ சொன்னாதான் என்னால தெரிஞ்சிக்க முடியும்… நான் கேட்டதெல்லாம் என்னோட கணிப்பு தானே தவிர்த்து அது தான் அப்படின்னு உறுதியா சொல்ல முடியாது… அதனாலதான் உன்கிட்ட நேரடியா கேட்கிறேன்”, என்று கிருபா கூறி முடித்த பொழுது தன்னுடைய விரல்களை பிடித்திருந்த அவனின் விரல்களை ஒடித்து விடுமளவுக்கு கல்கி இறுக்கினாள்.

அவளது இறுக்கத்திலேயே தன்னவளின் இதயத்தை ஆட்டுவிக்கும் வலியை உணர்ந்தவன் போன்று “கல்கி! உன்னை இவ்வளவு இறுக்கமா ஆக்குற விஷயத்தை நான் தெரிஞ்சிக்க விரும்பல…”, என்று கூறியவன் மேலே எதுவும் பேசாமல் அவளுடன் அமைதியாக நடந்து வந்தான்.

இருவரும் கிளம்பும் பொழுது இருந்த மனநிலை தலைகீழாக மாறி தங்களுக்குள் இறுகிப்போய் கல்கியின் அபார்ட்மெண்டை அடைந்தனர்.வாசலில் இருந்தவாறு திரும்ப யத்தனித்த கிருபாகரனை இம்முறை கல்கி கை பிடித்து இழுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி சென்றாள்.

கிருபாவும் எவ்வித மறுப்புமின்றி அவளுடன் சென்றான். வீட்டிற்குள் நுழைந்தவள் கிருபாவை “முதல் தடவையா என் வீட்டுக்குள்ள வர்ற… வலது காலை எடுத்து வச்சு வா!”, என்று அந்த இறுகிய சூழ்நிலையிலும் கெத்தாகவே உரைத்தாள். அவள் அவ்வாறு கூறியதும் அவளை வெளியே இழுத்தவன் அவளது வலது பாதத்தின் மேல் தனது இடது பாதத்தை வைத்து,கை இரண்டும் கோர்த்துக்கொண்டு வலது காலைவைத்து வீட்டினுள் வந்தான்.

கல்கியின் கையால் அடியை எதிர்பார்த்திருக்க அவளோ தனது காலினை கொண்டு கிருபாகரனின் காலை வாரிவிட்டு இருந்தாள். அவன் சுதாரித்து எழு முன்னர் “எழுந்து பேசாம உட்கார்ந்து நான் சொல்றத கேட்கிறதா இருந்தா மட்டும் இரு… இல்ல என் கூட வம்பு இழுக்க போறதா இருந்தா இங்கே இருந்து பால்கனிக்கு இழுத்துட்டுப் போயி உன்னை தள்ளி விட்டு விடுவேன்”, என்று கல்கி மிரட்டியதில்

“இவ பேசி முடிச்சதுக்கப்புறம் இப்ப தள்ளிவிட்டதற்கு காலை உடைக்காம போகக்கூடாது”, என்ற முடிவை மனதில் எடுத்துக்கொண்ட கிருபாகரன் அமைதியாக அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான்.

கிருபாகரன் அமரவும் கிச்சனுக்குள் சென்ற கல்கி ஒரு கிளாஸில் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்ததுடன் “குடிச்சிக்கிட்டே இரு… நான் வந்துடுறேன்”, என்று தன்னுடைய படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

நீரைக் குடிக்காமல் நீரில் இருந்த துரும்பை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த கிருபாகரன் கல்கி வரும் வரை அதனை எடுத்து போடாமல் அப்படியே வைத்திருந்தான்.அவனுக்கு ஏனோ கல்கி இதை வேண்டுமென்றே போட்டது போன்று தோன்றியது.

“என்ன கிருபா அந்தத் துரும்பை எடுத்து போட்டுட்டு தண்ணிய குடிக்க வேண்டியது தானே!”, என்று அவனது எண்ணத்தை உண்மையாககுவது போன்று இகழ்ச்சியான புன்னகையுடன் கல்கி கேட்டுக் கொண்டே அவன் முன் வந்தாள். அந்தத் துரும்பு சிறிது சிறிதாக கரைந்து தண்ணீர் முழுவதும் கலங்கலாக மாறியதால்தான் கிருபாகரன் குடிப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் கல்கி இவ்வாறு கூறியதும் “இந்த தண்ணியும், தூசும் வச்சி நீ என்ன சொல்ல நினைக்கிற கல்கி?அதை சொல்லு முதல்ல”, என்று அழுத்தமாக கேட்டதற்கு கல்கி அவனுக்கு எதிராக கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

“தண்ணியில கலந்த தூசு அதை அதை எடுத்துப் போட்டுட்டு குடிக்க முடியாத அளவுக்கு கலங்கலாக்கிடுச்சு…

அதை குடிக்க முடியாம நீ தயங்கிட்டு இருக்குற…அந்த தூசு மாதிரி தான் மனுஷங்களோட நாக்கால வந்த வார்த்தைகள் என்னோட மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு… அதை தூக்கி போட்டுட்டு வெறுப்பை விருப்பமா மாத்திக்க முடியுமா?”,என்று கல்கி ஆழ்ந்த குரலில் கேட்டதற்கு கிருபாகரனால் பதில் கூற முடிந்தாலும் அவளை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று எண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

கல்கியும் வேறு எதுவும் கூறாமல் சுவற்றை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். கிருபாகரனின் மொபைல் ஒலி எழுப்பி அங்கிருந்த அமைதியை அடக்கம் செய்ததில் எழுந்தவன் “ஓகே பாவ்க்ஸ்! டேக் ரெஸ்ட்… நான் ஊருக்குப் போயிட்டு ஒரு வாரத்தில் வந்துடுவேன்… அதுக்குள்ள நீ யோசிச்சி ஒரு முடிவு எடுத்து வை”, என்று கூறியவன் அவளை எழுப்பி ஆரத்தழுவி இருந்தான்.

அதில் உடல் விரைத்து நின்றவளது காதினுள் “தாபத்தின் தழுவல் தடம் மாறலாம்… தவிப்பின் தழுவல் தன்னையே உணரச் செய்யும்”, என்று உரைத்தவன் அவளது நெற்றியில் நீண்டதொரு அழுத்தத்தை பதித்துவிட்டு வெளியேறினான்.

கல்கி கூறிய வார்த்தைகள் கிருபாகரனை அவளது வாழ்வில் இருந்து வெளியேற்றுமா? இல்லை கிருபாகரன் கூறிய வார்த்தைகள் கல்கியை உணரச் செய்யுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *