Categories
On-Going Novels Rajeswari Sivakumar

அத்தியாயம் – 18

Free Download WordPress Themes and plugins.

எபி 18
“இதோ.. இப்ப தவிக்கறீங்க பாருங்க, இந்த தவிப்புக்கு தான் நான் அப்பல்லாம் எதையும் சொல்லல, உங்ககிட்ட சண்டை பிடிக்கல. தெரியாம ஒரு தப்ப செய்துட்டு, அதனால பாதிக்கப்பட்ட என்னைவிட நீங்க அதிகமா வருந்திட்டு இருக்கும் போது நான் எப்படி உங்களை திட்டமுடியும்? உங்ககிட்ட கத்த முடியும்?”
“அன்னைக்கு என்கிட்ட வீட்டு சாவிய கொடுக்காததுக்கு, நீங்க பட்டகஷ்டத்தை கண்ணுல பார்த்த பிறகும் நான் எப்படி உங்ககிட்ட கோபப்பட முடியும்? கல்யாணத்துக்கு நீங்க என்னை வேணும்னேவா லேட்டா கூட்டிட்டு போனீங்க?உங்களுக்கு திடீர்னு வேலை வந்ததால தானே அப்படி செய்தீங்க?அப்பவும் என்னை ரெண்டு நாள் முன்னாடியே எங்க அம்மா கூட அனுப்பாம தப்பு செய்துட்டேன்னு எத்தனை தடவை உங்களை நீங்களே குறை சொல்லி,எவ்வளவு தூரம் வருத்தப்பட்டீங்க. அதேபோலத்தானே அந்த பணம் விஷயமும். ஏற்கனவே தப்பு செய்துட்டோம்னு கில்டியா பீல் பண்ணிட்டு இருக்கறவங்ககிட்ட போய் எப்படி சண்ட பிடிக்கமுடிய்ம்?” என அவள் நியாயம் கேட்டதும் வாயடைத்துப்போனான் ஹரி.
‘கொஞ்ச நேரம் முன்னாடி ஊருக்கு நானும் கூட வருவேன்,இல்லன்னா நீங்களும் போகாதீங்கன்னு சின்னபிள்ளத்தனமா அடம்பிடித்தவள் இவள்தானா?’ என்ற சந்தேகம் இவனுக்கு வந்தது.
கோபம்,கொஞ்சல்,அநியாயம்,அடம்,அடாவடி,அத்துமீறல்… இதெல்லாம் எப்போது எப்படி செய்யவேண்டுமென புரிதல் தம்பதியருக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அவர்களை ஒன்றும் செய்யாது!
“இவ்வளவு பொறுப்பா பேசற நீ ஈர டவலை பெட்ல போட்டதுக்கு ஏன் சண்ட பிடிக்கற? உன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸை பார்கலன்னா அப்படி திட்டற லக்ஸ்?” என அப்பாவியாய் ஹரிக் கேட்டதும்,
“முன்னாடி நீங்க செய்த தப்பெல்லாம் ஒரே ஒரு தடவை உங்களுக்கு தெரியாம உங்களை மீறி நீங்க செய்தது. அப்படி தெரியாம செய்ததுக்கு நீங்க பீல் பண்ணி, அடுத்து முறை அப்படி ஒன்னு நடக்காம பார்த்துகிட்டீங்க.”
“ஆனா இப்ப சொன்னது… நான் டெய்லி கழுதையா கத்தியும் காதுல வாங்காம அதையே திரும்ப திரும்ப செய்யறதுமில்லாம அப்படி பண்ணதுக்கு பீல் பண்ணி ஒரு ஸாரி கூட சொல்லறது இல்ல.அப்புறம் நீங்க காலையில எழுந்த உடனே கையில போனை தூக்குறீங்க தானே? ஊரில் இருக்கறவங்களுக்கும் எல்லாம் குட்மார்னிங், சூப்பர், வாவ், சொல்லி கமண்ட் பண்ண தெரியுதில்ல? அப்படியே நம்ம பொண்டாட்டி என்ன செய்து வச்சிருக்கான்னு பார்த்து, அதுக்கு ஒரு ஸ்மைலிய தட்டிவிட்டா கொறஞ்சியா போய்டுவீங்க? நான் என்ன உங்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லாம போயிட்டேனா? இந்த சின்ன சின்ன விஷயங்களை நான் என்னோட ஹஸ்பன்ட் கிட்ட இருந்து எதிர்பார்க்கறது என்ன தப்பா?அப்படி என் எதிர்பார்ப்பை வாயத்திறந்து சொல்லியும் அதை நிறைவேத்தாம தினமும் சொதப்பி வைக்கிற உங்கள நான் திட்டாம கொஞ்சுவனா?” எனக் கோபமாக கேட்டாள்.
மனதுக்கு பிடித்தவரிடமிருந்து பெரியதாக தான் எதிர்பார்க்கவேண்டுமென ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா என்ன? லூசுத்தனங்களும்,அல்பத்தனங்களுக்கும் அன்புக்குரியவரிடமே வெளிப்படுகின்றன.
அடிப்பாவி! சண்டப்பிடிக்க இவளுக்கு கிடச்ச அல்பமான காரணத்தைப் பாரேன்!’ எண்ணியவன் அதை வெளியே சொல்ல பயந்து,“அப்ப… என்னப் பண்ணா நீ கொஞ்சுவ லக்ஸ்?” என ஜொள்ளிக் கொண்டே கேட்டான்.
“இப்ப நீங்க ஊருக்கு கிளம்பாம என்கூடவே இருந்தா!” என கண்ணடித்து அவள் சொன்னாள்.
‘இவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படி அழும்பு பண்றியே.. உன்னை என்ன பண்றது?’ என பார்வையால் இவன் கேட்க,
‘என்ன வேணா பண்ணிக்கோ!’ என பதில் பார்வைப் பார்த்தாள்.
‘இப்படியே இருந்துவிட கூடாதா…’ என மனம் எண்ணினாலும் நேரம் அதற்கு துணை நிற்கவேண்டுமே! தனது இன்றைய ஆகாய பயணம் இன்னும் அந்தரத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த ஹரி, “லக்ஸ் சோப்பு! இன்னும் நான் என்னப்பண்ணட்டும்னு நீ சொல்லவேயில்ல. சொல்லு. நான் இப்ப என்ன செய்யனும்னு நீதான் சொல்லனும். நீ என்ன சொன்னாலும் நான் அதை அப்படியே செய்யறேன்” என்றான்.
கர்வம், கவுரவம், நான் என்ற அகங்காரம்… இதையெல்லாம் விடுத்து முழுமொத்தமாய் தன் துணையிடம் சரணடைவது என்பது வெற்றிக்கு மெனக்கெடாமல் அதை அப்படியே முழுதாய் அனுபவிப்பது.இந்த சூட்சமத்தை அறிந்தவர்கள் ‘வாழ்க்கையை வாழ்கிறார்கள்!’ அறியாதவர்கள் அதை தண்டனையாய் அனுபவிக்கிறார்கள். எது வேண்டும் என தெரிந்தெடுக்கும் உரிமை அவரவர் கையில் ஆண்டவன் கொடுத்துவிட்டான்.தெளிந்த தேர்வு தெவிட்டாத இன்பத்தைத் தரும்.
என்ன சொல்ல முடியும்? போகாதே என சொல்லவும் முடியாது, நானும் வரட்டுமா? என கேட்கவும் முடியாது திணறியவள் இறுதியில், அவனின் மார்பில் சாய்ந்து கண்ணீர் குரலில் “என்ன சொல்லட்டும்?” எனக்கேட்டாள்.
அவளின் முகத்தை நிமிர்த்தி அதை துடைத்தவனோ,”அச்சோ… என்னோட ‘சில்க்’குட்டிடா நீ!” என்றான்.
அவனின் சில்க் கவனத்தை இந்த கொஞ்சல் கொஞ்சம் திசை திருப்ப, “என்ன சில்க்?” என இவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு கேட்டாள்
“சாஃப்ட் சில்க்!அப்படியே பொழுதுக்கும் அணைச்சிட்டு இருக்கனும்ன்னு தோணற அளவுக்கு சாஃப்ட்!” என சொன்னதை செயலில் கட்டினான் ஹரி.
“ம்ஹும்… இல்ல, நீங்க சும்மா சொல்றீங்க.அப்படி இருக்கனும்னு நினைக்கறவங்க எப்படி விட்டுட்டு போவாங்க?” என அவள் அதிலேயே நின்றாள்.
“இப்ப இப்படி அடம் பண்றவ,முதலிலேயே நாம ரெண்டு பேரும் சேர்ந்தே கிளம்பலாம்னு சொல்லி இருக்கலாம்ல லக்ஸ்!” தாங்கமுடியாது மீண்டும் கேட்டான்.
“அப்ப… சொன்னா நீங்க ஆபிஸில் பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கனும்… அது உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.ஒரு ட்வென்டி டேஸ் தானே ஈஸியா அட்ஜஸ்ட் பண்ணிடலாம்னு நினச்சேன்.ஆனா… நாள் நெருங்க… நெருங்க,என்னால நார்மலா இருக்க முடியலை.அதுவும் இன்னைக்கு காலையில இருந்து ஒரே அழுகை அழுகையா வருது.என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியலை!அதான்…” என இழுத்தாள்.
‘இவனுக்கும் இதே மனநிலை தானே இருந்தது.என்ன… இவன் அறிவாளி…புத்திசாலி…நாலும் தெரிந்த வல்லவன்’!அதனால் இவனுக்கு அது முன்கூட்டியே தெரிந்துவிட்டது.இவனின் லக்ஸ் சோப்பு… வயசிலும்,அறிவிலும் அனுபவத்திலும்… இவனை விட கொஞ்சம் குட்டி! அதான்… ‘லேட் பிக்கப்’ என மனதினுள் நினைத்த ஹரி,
“எனக்கும் சேம் பீல் பேபி!” என வாயை விட்டு மீண்டும் வம்பில் மாட்டினான்.
“அப்ப போகாதீங்க…இல்ல என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க!” என பிரியா மீண்டும் ஆரம்பிக்க,
“என்னது…. மறுபடியும் மொதல்ல இருந்தா….!?” என அலறினான் ஹரி.

இருபத்தியிரண்டாம் நாள் அதிகாலை….
ஷோல்டர் பாகை மாட்டிக்கொண்டு,டிசர்ட்,ஜீன்ஸ் போட்டு ‘அல்ட்ராமாடர்ன்’ நங்கையாக வந்துக்கொண்டிருந்த பிரியாவை தொலைவிலிருந்தே பார்த்துவிட்ட ஹரி,”இன்டர்நேஷனல் லக்ஸ்!’ என முணுமுணுத்து, மெல்லியதாய் விசிலடித்தான்.
அவனை தொலைவிலேயே பார்த்தவள் பூவாய் மலர்ந்து சிரிக்க நினைக்கும் போதே எதையோ கண்ணில் கண்டு கடுப்பானாள்.
தன்னருகே வந்தும் நிற்காமல் அப்படியே நடந்து செல்பவளை,”லக்ஸ் பேபி! எப்படிடா இருக்க?மாமனை ரொம்ப மிஸ் பண்ணியாடா சோப்பு!”என அவளை கண்ணால் விழுங்கிக்கொண்டே, பாய்ந்து அவள் கையைப் பிடித்து கேட்க,
அதற்கு அவள்,“ஹேய்… யார் நீங்க? உங்களை இதுக்கு முன் நான் பார்த்ததே இல்ல! சும்மா போயிட்டிருக்கற என்னை கையப் பிடிச்சி இழுக்கறீங்க!” எனக் கடுப்பாக சொல்லி,தன்னை பிடித்து நிறுத்திய அவன் கையை விலக்கி, நிற்காமல் வேகமாக நடந்துக்கொண்டே இருந்தாள்.
“ஹோய் லக்ஸ் என்ன விளையாட்டுடா இது.நான் உனக்காக எவ்வளவு நேரமா காத்துட்டு இருக்கேன்.நீ என்னைக் கண்டுக்காம போற!” என சொல்லிக்கொண்டே அவளுடன் நடந்தவனை திரும்பியும் பார்க்காது பிரியா போய்க்கொண்டே இருந்தாள்.
‘ராட்சஷி! அன்னைக்கு மாஞ்சி மாஞ்சி அழுததென்ன… இன்னைக்கு என்னை சட்டைப்பண்ணாம போறதென்ன….இவளை ரிசீவ் பண்ண நடுராத்திரியில இருந்து நான் இங்க காத்துட்டு இருந்தா… என்னைக் கண்டுக்காம போறதப்பாரேன்! என மனதினுள் புலம்பிக்கொண்டே தன் மனைவியை தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் சட்டையில் ‘ஷாக்’ அடித்தது. அப்படியே நின்றுவிட்டான்.
‘அய்யோ! அவசரத்துல என்னக் காரியம் பண்ணிட்ட-டா ஹரி! இப்ப இவளை எப்படி மரம் இறக்க போற?’ தலையில் கையை வைத்துக்கொண்டான்.
ஒரு வழியாய் அப்படி இப்படி அவனின் லக்ஸிடமிருந்து தனியாக பயணப்பட அனுமதிவாங்கிவிட்டான் ஹரி.அன்று காலையில் கூட ‘லக்ஸ விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்?’ எனக் கவலைப்பட்டவன், இப்போது, ‘நான் இல்லாம என் சோப்பு எப்படி இருக்கும்?’ எனக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டான். எதுக்காவது கவலைப்படறதே இவனுக்கு வேலையா போச்சு.
அன்று அங்கிருந்து ஊருக்கு கிளம்பும்போது, ‘என்னை ஏர்போர்ட்டில் ரிசீவ் செய்ய வரும்போது, நாம ரெண்டுப்பேரும் சேர்ந்து ஒன்னா வாங்கின அந்த டிசர்ட் போட்டுட்டு வரனும்,நானும் அதைத்தான் போட்டுட்டு வருவேன்.இதை திரும்ப இனி நான் சொல்லவே மாட்டேன், நான் வர அன்னைக்கு நீங்க இது நியாபகம் இல்லாம அந்த டிசர்ட் போட்டிருக்கலைன்னா நான் வந்த ஃப்ளைட்டிலேயே அப்படியே ஊருக்கு திரும்ப வந்துடுவேன்!’ பிரியா சொன்னது நியாபகம் வரவேண்டிய நேரத்தில் வராது, இப்போது வந்து அவனை மிரட்டியது.
அன்னைக்கு அப்படி வாய்கிழிய,தன் நெஞ்சை தொட்டுக்காட்டி,’இங்க எழுதிவச்சியிருக்கேன். இந்த ஜென்மத்துக்கு இல்ல, அடுத்த ஜென்மத்துக்கு கூட இது மறக்காது!’ என ஜம்பம் பண்ணிவிட்டு, இன்று கிளம்பும் அவசரத்தில் கைக்கு கிடைத்த ஒரு டிசர்ட்டை மாட்டிக்கொண்டு வந்து, வசமாய் பிரியாவிடம் மாட்டிக்கொண்டான் ஹரி.பாவம்!
‘ஏற்கனவே இருபத்தொருநாள் இவளை விட்டுட்டு இருந்ததுக்கு… இருபத்தொரு மாசம் உனக்கு தண்ணிக்காட்டப் போறேன்னு போனில் பயம் காட்டிட்டு இருந்தா. இப்ப இது வேற கூட சேர்ந்தா… இங்க இருக்க போகும் மூனு வருஷமும் நீ பிரமச்சாரி தானா? ஹரி… பாரினுக்கு வந்தும் உனக்கு ‘ஹனிமூன்’ இல்லடா. ’தனிமூன்’தான்!’ என அவனுள் இருந்த பிரியாவின் சரண் வேறு வெறுப்பேற்ற,
அதில் அரண்டவன், “லக்ஸ்!சோப்பு! மாமா இருட்டுல தூக்க கலக்கத்துல எதையோ தப்பா செய்துட்டேன்-டா!” என உளறிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான் ஹரி.
இதற்குமேலும் நாம் அவனுடன் போய் அவன் அடிப்படுவதைப் பார்க்கவேண்டுமா என்ன?அவனுக்கு அதெல்லாம் கூச்சமா இருக்தாது.ஆனா நமக்கு இருக்குமே. அதனால நாம இங்கேயே,அடியோ உதையோ ஏதோ ஒன்னு, ‘பதினாறு பெற்று பெருவாழ்வு’ வாழ வாழ்த்தி,அவனிடமிருந்தும் அவன் லக்ஸிடமிருந்தும் விடைப் பெறுவோம்!
வாழ்க வளமுடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *