Categories
On-Going Novels

அத்தியாயம் – 19

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 19

மாறன் தன்னிடம் கூறியதை அன்னையிடம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தான் தீபக்.

“நாமளே பார்த்தா கூட அவளுக்கு இப்படி ஒருவனை தேர்ந்தெடுக்க முடியுமான்னு தெரியலம்மா. அவன் குடும்பமே ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க”.

“அவளுக்கு இனியாவது வாழ்க்கையில் ஒட்டுதல் வரட்டும் தீபக்”.

“அவன் பேசி பேசியே கொண்டு வந்துடுவான் அம்மா” என்றான் சிரிப்புடன்.

“அவர் நம்ம மௌனியை கல்யாணம் பண்ணிக்க போறவர். அவன் இவன்னு பேசாதே. நீங்க எல்லாம் கம்மியா பேசிட்டு அவர் பேசுறதை கேலி பண்ணாதீங்க” என்றார் கண்டிப்பான குரலில்.

தீபக்கோ மனதில் ‘அவனைப் பத்தி தெரியாம சொல்றீங்கம்மா” என்றான்.

“எல்லாம் தெரியும். என்ன இருந்தாலும் நம்ம மௌனி மாப்பிள்ளை இல்லையா. அதனால மரியாதை கொடு” என்றார்.

“சரிம்மா”

கார்த்தியின் வீட்டிலோ அனைவரும் சேர்ந்தமர்ந்து தீபக் வீட்டில்  பேசியதைப் பற்றி பேசிக்  கொண்டிருந்தனர்.

காந்தியிடம் “என் தங்கச்சி கிட்ட சொல்லணுமில்ல” என்றார் மாறன்.

“எதுக்குப்பா? உங்க தங்கச்சி வந்து ஏழரையை இழுத்து விடவா?”

“கார்த்தி! அத்தையைப் பத்தி தப்பா பேசாதே” என்றார் அதட்டலாக காந்தி.

“உண்மையை சொன்னா ஒத்துக்க மாட்டீங்களே! அத்தை கிட்ட இப்போ சொல்லாதீங்க. உடனே நானும் தீபக் வீட்டுக்கு வரேன்னு சொல்வாங்க. அங்க வந்து மௌனிக்கு யாரும்மில்லன்னு பேசி ஏதாவது பிரச்னையை கிளப்புவாங்க”.

அவன் சொன்னதைக் கேட்டதும் அமைதியாக கணவரைப் பார்த்தார் காந்தி.

“என்னடா இப்படி சொல்லிட்ட?” என்றார் மாறன் அதிர்ச்சியுடன்.

“எத்தனை வருஷம் ஆனாலும் உங்க பாசமலரை எதாவது சொன்னா வலிக்குமே. இது தான் அப்பா நடக்கும். மௌனியை ஏதாவது பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றான் கோபமாக.

“சர் விடு! இப்போ சொல்ல வேண்டாம்.  கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கிறப்ப  அவ கிட்ட சொல்லிக்கலாம்” என்றார்.

அன்னையிடம் திரும்பியவன் “அம்மா! நீங்க கல்யாணத்தப்ப சும்மா கெத்தா வரணும். தி பேமஸ் ஆர்ஜே கார்த்திக்கோட அம்மா. பந்தாவா வாங்க” என்றான்.

“முந்தாநேத்து நம்ம பக்கத்துல இருக்கிற சூப்பர் மார்கெட்டில் சாமானை டோர் டெலிவெரி பண்ணிடுங்கன்னு சொன்னேன். வீடு எங்கேன்னு கேட்டான். தி பேமஸ் ஆர்ஜே கார்த்திக் வீடுன்னு சொன்னேன். மேலையும் கீழையும் பார்த்து வீட்டு நம்பரை சொல்லுங்க சார்ன்னு சொல்லிட்டாண்டா. ஆனா நீ என்னவோ இந்த உலகத்துக்கே உன்னை தெரிஞ்ச மாதிரி பீலா விடுற” என்றார் மாறன் கடுப்பாக.

அதைக் கேட்டதும் கடுப்பானவன் “அப்பா! நீங்க என்னை வேணும்னே ரொம்ப இன்சல்ட் பண்றீங்க. என்னோட புகழை கண்டு உங்களுக்கு பொறாமை”.

அவர்கள் இருவரும் பேசுவதை கவனித்த காந்திமதி “செய்ய வேண்டியதை விட்டுட்டு அப்பாவும், பிள்ளையும் ஏதேதோ பேசுங்க” என்று கடுப்படித்தார்.

காந்தி அப்படிக் கூறியதும் அவரைப் பார்த்து அமர்ந்தவன் “சொல்லுங்கம்மா நான் என்ன பண்ணனும்? என் செல்லத்துக்கு புடவை வாங்கனுமா? நகை வாங்கனுமா? என்ன பண்ணனும் சொல்லுங்க?” என்றான்.

அவனை முறைத்தவர் “நான் சொல்றதை கேட்பியா?” என்றார்.

“சொல்லுங்கள் தாயே”

“கல்யாணம் முடிகிறவரை உன்னோட அளப்பரையை கொஞ்சம் அடக்கி வாசிக்கணும். நீ வேற ஒன்னும் பண்ண வேண்டாம். எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்” என்று பெரிய பல்பாக கொடுத்தார்.

காந்தி சொன்னதைக் கேட்ட மாறன் சத்தமாக சிரிக்கத் தொடங்க, கார்த்தியோ அன்னையை பரிதாபமாக பார்த்து “ஒரு ஆர்ஜேவை அவன் குடும்பமே கேவலமா பேசுது. இது உனக்கு தேவையா? இனி, நீங்களா கூப்பிட்டு பேசுற வரை நான் பேச மாட்டேன்” என்று சபதமிட்டு விட்டு அங்கிருந்து தனதறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டான்.

அதைக் கண்டு பயந்து போன காந்தி “என்னங்க அவன் கோவிச்சுகிட்டானா?” என்றார்.

மாறனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “நீ வேற அதெல்லாம் சாதாரண மனுஷங்களுக்கு. இவன் அதெல்லாம் கண்டுக்க  மாட்டான்” என்று எழுந்து கொண்டார்.

அவர் சொன்னாலும் காந்தி மனதிற்குள் குழப்பம் சூழ எழுந்தார். மனைவியின் முகத்தைப் பார்த்து புரிந்து கொண்ட மாறன் அவர் தோள்களைப் பற்றி சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றார்.

தனதறைக்குள் நுழைந்த கார்த்தியோ முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்தான். அவனுக்குள் பல விதமான யோசனைகள் ஓடியது. மறுப்பாக இப்படியும் அப்படியும் தலையசைத்து பலமாக சிந்தித்தான். பின்னர் அலைபேசியை எடுத்து வெறித்துப் பார்த்தான்.

சற்று நேர யோசனைக்குப் பின் அலைபேசியை இயக்கி மௌனிகாவை அழைத்தான். அந்த நேரத்தில் அவனிடமிருந்து கால் வரவும் ஏதோ அவசரம் என்றெண்ணி எடுத்தாள்.

“ஹலோ”

“க்கும்ம்…”

“ஹலோ…கார்த்தி”

“வெரி குட்! என்னோட கனைப்பை கூட உன்னால கண்டு பிடிக்க முடியுது மௌனி”.

அவன் சொன்னதை கேட்டு போனை எடுத்து பார்த்தவள் எரிச்சலுடன் “உங்க நம்பரில் இருந்து கால் வருது. நீங்க கனைக்காம உங்க வீட்டு நாயா கனைக்கும்”.

“பார் யுவர் இன்பார்மேஷன் எங்க வீட்டில் நாய் இல்ல மௌனி”.

“அது தான் நீங்க இருக்கீங்களே”

“ஹாஹா…என்னோட சேர்ந்து நீ கூட நல்லா பேச கத்துகிட்டே “ என்றவனை கடுப்புடன் தடுத்தவள் “இந்த நேரத்துக்கு எதுக்கு கால் பண்ணுனீங்க?” என்றாள்.

“நம்ம கல்யாணத்துக்கு அம்மாவே புடவை எல்லாம் செலக்ட் பண்ணிடுவாங்க. ஆனா ஸ்பெஷல் அகேஷனுக்கு என்ன வாங்குறதுன்னு முடிவு பண்ண வேண்டாமா? அதுக்கு தான் கூப்பிட்டேன்”.

ஏற்கனவே அவனால் எழுந்த எரிச்சலில் “ஒண்ணுமே வேண்டாம்” என்றாள்.

“செல்லம் நிஜமாவா சொல்ற? நானும் அதையே தான் நினைச்சேன். ஆனா இதை எப்படி அம்மா கிட்ட சொல்றது?” என்றான் கொஞ்சலான குரலில்.

“என்ன பேசுறீங்க? புரியுற மாதிரி பேசுங்க”

“மிஸ். ஈஎன்டி நீயெல்லாம் என்னத்தை படிச்சு. நம்ம பார்ஸ்ட் நைட்டுக்கு அம்மா புடவை வாங்க சொல்வாங்களே அதை முன்னமே நாம ப்ளான் பண்ணுவோம்னு கேட்டேன். ஆனா நீ ரொம்ப விவரமா இருக்கடா செல்லம்” என்றான் கிறங்கும் குரலில்.

அதுவரை அவன் என்னவோ பேசுகிறான் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் அவனது பேச்சைக் கேட்டு அதிர்ந்து “கார்த்தி! இன்னைக்கு நிறைய பேஷண்ட்ஸ் என்னால வெட்டியா கடலை போட முடியாது. ப்ளீஸ்! தூக்கம் வருது” என்று கூறி அவனிடம் கேட்காமல் போனை கட் செய்து விட்டாள்.

போனையே வெறித்துக் கொண்டிருந்தவன் ‘உன்னைப் பார்த்தா எல்லோருக்கும் எப்படிடா தெரியுது. சொந்த வீட்டுல அப்பா அம்மா கூட மதிக்க மாட்டேன்றாங்க. கட்டிக்க போறவ என்னடான்னா வெட்டி அரட்டை அடிக்க முடியாதுன்னு போனை கட் பண்றா. உங்களுக்கெல்லாம் இந்த கார்த்தி யாருன்னு காட்டுறேன்’ என்று சபதமிட்டுக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.

மறுநாள் காலையில் எழுந்ததும் காலைகடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் யாரிடமும் எதுவும் பேசாது பேப்பரை எடுத்துக் கொண்டு அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டான். மகன் வந்ததை பார்த்த காந்தி காப்பியத் தயாரித்து அவன் கையில் கொடுத்தார். வழக்கமாக காபியை குடிப்பதற்குள் அன்னையிடம் வளவளத்து, தந்தையிடம் ஆயிரம் கதைகள் பேசி முடித்திருப்பான். ஆனால் அன்றோ ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அனைத்து வேலைகளையும் செய்து விட்டு ஆபிசிற்கு கிளம்பி சென்றான்.

மகனால் ஒரு நாளைக்கு மேல் இப்படி இருக்க முடியாது என்றெண்ணி அவனிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக அவனது நடத்தையை ஆராய்ந்து கொண்டிருந்தனர். இதன் நடுவே திருமண வேலைகள் ஒருபுறம் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாளில் மாறிவிடுவான் என்று எதிர்பார்த்து இருக்க, அவனோ கொஞ்சமும் மாற்றம் இல்லாது அமைதியாகவே இருந்தான். அவன் பேசுவது தான் குறைந்ததே தவிர பாட்டு சத்தமோ, டிவி சத்தமோ குறையவில்லை.

மாறன் தம்பதிகளிடம் மட்டுமல்ல மௌனியிடமும் அப்படியே இருந்தான். வழக்கமாக அவனிடமிருந்து வரும் போன் கால்களோ, நேரடியாக வருவதோ எதுவும் இல்லாமல் அவள் வெறுமையாக உணரத் தொடங்கினாள். அவனது திடீர் மாற்றம் அவளை குழப்பியது. ஒருவேளை அவனுக்கு தனது மௌனம் பிடிக்கவில்லையோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.

புடவை வாங்கும் அன்று கூட அதிகம் பேசாமல் தனக்கு விருப்பமானதை அவளிடம் தெரிவித்து விட்டு ஒதுங்கிக் கொண்டான். இவற்றை எல்லாம் எண்ணி எண்ணி அவளுக்கு தலைவலி வந்தது.

அன்று அவளைப் பார்க்க தீபக் வந்திருக்க, அவனிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள்.

“நானும் கவனிச்சேன் மௌனி. உன் கிட்ட மட்டுமில்ல எல்லோர் கிட்டேயுமே அவன் கம்மியா தான் பேசுறான். என்ன விஷயம்னு அவன் பேரன்ட்ஸ் கிட்ட பேசி பார்க்கிறேன்” என்றான்.

மௌனியிடம் சொல்லிவிட்டு நேரே மாறன் தம்பதியை சந்திக்க அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.

“வாப்பா தீபக்” என்று வரவேற்றார் காந்தி.

சிறிது நேரம் நல விசாரிப்புகள் முடிந்து திருமண வேலைகளைப் பற்றி பேசியவர்கள் இறுதியாக கார்த்திக்கிடம் வந்து நின்றனர்.

“அங்கிள் கார்த்திக்கு என்னாச்சு? சரியா பேசவே மாட்டேன்றாரே?”

காந்தியும், மாறனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “பெரிய விஷயமெல்லாம் ஒன்னுமில்லப்பா. கல்யாணம் வரை அளப்பரையை அடக்கி வாசின்னு இவ சொல்லிட்டா. அதுல கோவிச்சுகிட்டு இப்படி நடந்துகிறான்” என்றார் மாறன்.

அவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வர, “மௌனி கிட்டேயும் சரியா பேசுறது இல்லையாம் மாமா” என்றான்.

நெற்றியைத் தேய்த்துக் கொண்டவர் தீபக்கை நிமிர்ந்து பார்த்து “மருமகளை இந்த பீரியடை என்ஜாய் பண்ண சொல்லு. அவன் பேச ஆரம்பிச்சிட்டா நிறுத்த மாட்டான். எப்படியும் கல்யாணம் முடியும் வரை தான் இப்படி இருப்பான். அப்புறம் மறுபடியும் ஆரம்பிச்சிடுவான்” என்றார் சளைக்காமல்.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்தவன் “சான்சே இல்ல அங்கிள். உங்க கிட்ட இருந்து தான் கார்த்திக்கு இப்படியொரு கூலான பீகேவியர் வந்திருக்கு” என்று கூறி எழுந்து கொண்டான்.

தீபக் அங்கே வந்ததுமே அவன் பின்னோடு வந்திருந்த கார்த்திக்கு அவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்டிருந்தான். தந்தை தன்னை பற்றி கூறியதில் கடுப்பாகி போனவன் ‘இவருக்கு இருக்கிற அதுப்பை பாரேன். எல்லாம் காந்தி சமைச்சு போட்டு கொலஸ்ட்ராலை ஏத்தி விட்டிருக்கு’ என்று தந்தையை கழுவி ஊற்றிக் கொண்டே ஒன்றும் தெரியாதவன் போல உள்ளே வந்தான்.

அவனைப் பார்த்ததும் வாயை இறுக மூடிக் கொண்ட மாறன் அமைதியாக இருந்தார்.

தீபக்கைப் பார்த்து “வா மச்சான்” என்றழைத்து விட்டு சோபாவில் சென்றமர்ந்தான்.

“கல்யாண விஷயமா அத்தை மாமா கிட்ட பேசிட்டு போக வந்தேன் மாப்பிள்ளை. நான் வந்து நேரமாச்சு கிளம்புறேன்”.

“ம்ம்..சரி மச்சான்”.

அவர்களிடம் எதுவும் பேசாது தனதறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டான்.

திருமணத்திற்கு முதல்நாள் வரை தன்னுடைய நடத்தையில் சிறிதும் மாற்றமில்லாது அப்படியே இருந்தான். மாறன் தம்பதியருக்கு மகனின் இந்த பரிமாணம் சோர்வை அளித்தது. பிறந்ததில் இருந்தே எந்நேரம் ஸ்பீக்கரை கட்டிக் கொண்டு அலைந்தவன் திடீரென்று ஊமையாகி போனது போல இருந்தது.

அவன் வளவளத்துக் கொண்டிருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமாக இருப்பது போல எண்ணம் தோன்றியது. மௌனியும் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தாள். அவனிடம் தானாகச் சென்று எப்படி பேசுவது என்று புரியாமல் இருந்தாள். ஆனால் மாறன் தம்பதியோ மண்டபத்திற்கு கிளம்பும் முன் மகனின் அறைக்குச் சென்று நின்றனர்.

தாய், தந்தை இருவரையும் பார்த்ததும் “என்னம்மா?” என்றான்.

காந்தி முன்னே சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டு “என்னை மன்னிச்சிடு கார்த்தி. நான் தெரியாம சொல்லிட்டேன். உன்னோட அளப்பரையை நிறுத்திக்கோன்னு” என்றார்.

அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவன் “அம்மா! நீங்க சொன்னதுனால நான் பேசாம இல்ல. எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு. என்னால தான் உங்களுக்கு காதுல பிரச்சனை  வந்ததுன்னு. அதானால தான் என் பேச்சைக் குறைச்சுகிட்டேன்” என்றான்.

மாறனோ மகனை நம்பாமல் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

காந்தி நெகிழ்ந்து போய் அவன் கன்னங்களை வருடி “அதெல்லாம் இல்லப்பா. என் நேரம் அப்படி ஆகிடுச்சு” என்றார்.

மாறனோ அவனை விடாது “நீ சொல்றதை நம்புறேன்னே வச்சுக்குவோம். மருமக கிட்ட ஏன் பேசாம இருந்த?” என்றார் சந்தேகமாக.

அவரை முறைத்தவன் அன்னையிடம் “இவரை எப்படிம்மா இத்தனை வருஷம் வச்சு குப்பை கொட்டுனீங்க?” என்றான் கேலியாக.

“டேய்! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?”

காந்தியின் தோளில் சாய்ந்தபடி “உங்க புருஷனுக்கு விவஸ்தையே இல்லை மிசர்ஸ் மாறன். சின்னஞ்சிறுசுங்ககுள்ள ஆயிரம் இருக்கும். அதை எல்லாம் இவர் கிட்ட சொல்லிட்டு இருப்பாங்களா என்ன?” என்றான் கிண்டலாக.

அவன் சொன்னதைக் கேட்டு கணவரை முறைத்த காந்தி “உங்களை! வாங்க நீங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.

அன்னை, தந்தையிடம் இயல்பாக பேசியதில் மனதிலிருந்த அழுத்தம் விலக, பழைய ஆர்ஜே கார்த்தியாக திரும்பி இருந்தான்.

மண்டபத்திற்கு கிளம்ப அலங்காரம் செய்யத் தொடங்கியவன் தனது மொபைலை இயக்கி தனது விருப்பப் பாடலை போட்டு விட்டு தயாரானான்.

ரா! நாம பீச்சு பக்கம் போத்தாம்

ஒரு டப்பாங்குத்து வேஸ்தாம்

நீ என்னுடைய ரவுடி பேபி!

சுதா ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *