Categories
Shenba Uncategorized

அத்தியாயம் – 2

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 2

பிரபல டெக்ஸ்டைல் நிறுவனத்தின் உரிமையாளர் கேசவநாத், மந்த்ரா தேவியின் இளைய மகன் கிஷோருக்கும், பேராசிரியர் கங்காதரனின் ஒரே மகள் சுமித்ராவிற்கும், பெரியோர்களின் ஆசியுடன் சுற்றமும், நட்பும் வாழ்த்த தாம்பூலம் மாற்றித் திருமணத்திற்கு நாள் குறித்தனர்.

நிச்சயதார்த்த புடவையில் வந்த சுமித்ராவின் மென்விரலில் கிஷோர் மோதிரமிட, அதுவரை நண்பர்களாகயிருந்த கேசவநாத்தும், கங்காதரனும் சம்மந்திகளாகத் தங்களது மகிழ்ச்சியைக் கைகுலுக்கித் தெரிவித்துக்கொண்டனர்.

அனைவரது முகமும் புன்னகையில் மலர்ந்திருக்க, ஒரு ஜோடிக் கண்களில் மட்டும் ஆற்றாமையும், எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

வருங்கால மருமகனின் தோளைத் தட்டி அணைத்த கங்காதரன், தன்னுடன் பணியாற்றிய பேராசிரியர்களை கிஷோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவனும் இன்முகத்துடன் அவர்களிடம் பேசினாலும், இடையிடையே அவனது கண்கள் சுமித்ராவையே நாடிச் சென்றன.

விருந்து முடிந்து அனைவரும் கிளம்பும்நேரம் கிஷோர், சுமித்ராவின் அறைக்கு வந்தான்.

“உனக்கு, இந்தப் புடவை ரொம்ப அழகாயிருக்கு சுமி!”

“தேங்க்ஸ்!” என்றவள் கன்னங்கள் சிவக்க பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.
அவளது கன்னத்தில் பதியத் துடித்த உதடுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டவன், “நீ எப்பவும் போல என் கண்ணைப் பார்த்துப் பேசும்மா. இப்படி வெட்கப்பட்டா எனக்கு என்னென்னவோ தோணுது. கல்யாணத்த வேற, ஆறு மாதம் தள்ளி வச்சிட்டாங்க” என கடைசி வாக்கியத்தை மட்டும் ரகசிய குரலில் புலம்பியவன், நாணத்துடன் புன்னகைத்தவளைப் பார்த்து உல்லாசமாகச் சிரித்தான்.

தன் பாக்கெட்டில் வைத்திருந்த கவரை எடுத்து அவளிடம் கொடுத்தான். ஆவலுடன் பிரித்துப் படித்தவள், மலர்ந்த குவளைக் கண்களால் அவனைப் பார்த்தாள்.

“நாளையிலிருந்து நீ நம்ம மந்த்ரா டெக்ஸ்டைல்ஸோட சீப் டிசைனர். நம்ம எங்கேஜ்மென்ட் கிஃப்ட். நாளைக்குக் காலைல ஒன்பதரை மணிக்கெல்லாம் ரெடியாகிடு. கார் அனுப்பறேன்… ஆபீஸ் வந்துடு” என்றான்.

“இதை நான் எதிர்பார்க்கவே இல்லை கிஷோர்! ரொம்பத் தேங்க்ஸ்.”

“தேங்க்ஸா… அதெல்லாம் நாட் அலௌட். நாளையிலிருந்து கல்யாண நாள் வரைக்கும் ஒருநாள் கூட லீவ் போடாம, தினம் எனக்குத் தரிசனம் கொடுக்கணும்”

“சண்டே என்ன பண்ணுவீங்க?”

“சண்டே உனக்கும், எனக்கும் மட்டும் ஸ்பெஷல் டியூட்டி. அவசரமா முடிக்கவேண்டிய வேலை, முக்கியமான பெரிய ப்ராஜெக்ட் பற்றிப் பேசணும், இப்படி எக்ஸட்ரா, எக்ஸட்ரா… சொல்லி வரவச்சிடுவேன் இல்ல” என்றபடி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.

அவனுக்குப் பழிப்பு காட்டியபோதும் மனம் முழுதும் சந்தோஷமாகவே இருந்தது.

உள்ளே வரும்போதே கதவைத் தட்டிவிட்டு வரவேண்டுமென்ற அடிப்படை நாகரீகம்கூட இல்லாமல், இருவரின் தனிமையிலும் உத்தரவின்றி மூக்கை நுழைக்க வந்தவளது பார்வை அறை ஜன்னலைத் தாண்டி சிட்டவுட்டில் சிரிப்புடன் பழிப்பு காட்டிய சுமியும், அவளைக் காதல் பார்வை பார்த்தபடி நின்றிருந்த கிஷோரையும் கண்டதும் உடல் முழுதும் எரிந்தது.

“கிஷோர் நீ இங்கேதான் இருக்கியா?” என்றபடி செயற்கைப் புன்னகையுடன் வந்தாள் அவனது மூத்தச் சகோதரி மிதுனா.

“சரியான கரடி!” எனத் தெளிவாக முணுமுணுத்தான் அவன்.

“இதென்ன லெட்டர்” என்றவள் பட்டென சுமியின் கையிலிருந்த பேப்பரை பிடுங்கினாள்.

சுமி திகைப்புடன் அவளைப் பார்க்க, கிஷோரோ எரிச்சலின் உச்சத்திலிருந்தான்.

அவன் கோபத்தில் வாயைத் திறக்கும் முன், “என்னடா இது? இவளை நம்ம கம்பெனில வேலைக்குச் சேர்த்திருக்க. அதுவும் சீஃப் டிசைனர்” என்றவளது குரலில் எரிச்சல் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

“எதுக்கு இப்போ அலர்ற? அதற்கு முழுத்தகுதியும் சுமிக்கு இருக்கு” என்றான் கடுப்புடன்.

சமாளிப்புடன், “அதைத்தான்டா நானும் சொல்றேன். வருங்கால முதலாளியம்மாவைப் போய் ஒரு வேலைக்காரியா சேர்த்திருக்கியே?” என வேலைக்காரியில் அழுத்தத்தையும் குரலில் அலட்சியத்தையும் சேர்த்துப் பகன்றாள்.

மலர்ந்திருந்த தாமரையை ஒத்திருந்த சுமியின் முகம், அனிச்சம் மலராக வாடியது.

அதைக் கண்ட கிஷோர், “நீ எதுக்காக இங்கே வந்த? முதல்ல வெளியே போ” என்றான் ஆத்திரத்துடன்.

“கிஷோர்! கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அவனது கரத்தைப் பற்றினாள் சுமித்ரா.

“நான்தான் கண்ணா உன்னைக் கூப்பிடச் சொன்னேன். கிளம்பணுமே” என்றவர் மகளின் புறமாக திரும்பினார்.

“மிது! உனக்கு இன்னும் யார்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியறதேயில்ல” என அதிராதக் குரலில் கடிந்து கொண்டார்.

“சுமித்ரா! நாங்க கிளம்பட்டுமா? நாளைக்கு என் பையனை ரொம்பக் காக்க வைக்காம, ஆஃபிஸுக்கு வந்திடு என்ன?” என மருமகளின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தார்.

வருங்கால மாமியாரின் பேச்சை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தவள், அவரது வார்த்தைக்கு தலையை மட்டும் அசைத்தாள்.

“சீக்கிரம் வா கிஷோர்” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு வெளியேறினார் மந்த்ரா.

***************

“என் வயிறெல்லாம் எரியுது. சிரிச்சி சிரிச்சே என் தம்பியைக் கவுத்துட்டா. எப்படிம்மா நீ இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்ச? நம்ம குடும்பம் எங்கே! அந்தப் புரொஃபசர் குடும்பம் எங்கே? நான் நீன்னு வரிசையில் வரும் பொண்ணையெல்லாம் விட்டுட்டு, ஒரு பஞ்சப்பராரி குடும்பத்தைப் பார்த்தீங்க பாருங்க” என மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க தன் மனத்திலிருந்ததைக் கொட்டித் தீர்த்தாள் மிதுனா.

“பேசி முடிச்சிட்டியா? இந்த மந்த்ரா எது செய்தாலும், அதில் ஒரு காரணம் இருக்கும். உனக்குப் புரியாது. என்னோட கணக்கு என்னைக்குமே தப்பாகாது. பெரும்பாலானப் பணக்கார வீட்டுப் பொண்ணுங்க எந்த மாதிரியிருக்கும்னு உன்னைப் பார்த்தாலே தெரியும். வெளியில் போய்த் தேடணுமா?” என்ற அன்னையை முறைத்தாள் மிதுனா.

“அங்க சுத்தி இங்க சுத்தி என் தலைலயே கைவைக்கிறியாம்மா?” என்று கடுகடுத்தாள்.

பார்வையாலேயே மகளை அடக்கியவர், “சுமியை எனக்குச் சின்ன வயசுலயிருந்து தெரியும். அம்மா இல்லாமல் வளந்தாலும், கங்காதரனோட வளர்ப்பு நிச்சயம் சோடை போகாது. வசதி வாய்ப்புல வேணா குறைவா இருக்கலாம். ஆனா, வரப்போகும் வசதியும், வாய்ப்பும் ரொம்ப ரொம்ப அதிகம்” என்ற அன்னையைப் புரியாமல் பார்த்தாள் மிதுனா.

“சொல்றதைத் தெளிவா சொல்லும்மா!”

“உனக்குத் தெரியாதில்ல… சுமியோட அம்மா கோட்டீஸ்வரன் வீட்டு வாரிசு. கங்காதரனைக் காதலிச்சு வீட்டை எதிர்த்துக் கல்யாணம் செய்துகிட்டா. கல்யாணமாகி ரெண்டே வருஷத்தில் சுமி பிறந்ததும் இறந்துட்டா. அவள் உயிரோடு இல்லைங்கறதே சமீபத்துல தான் அவளோட அப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கு.

உடனே, பேத்தி மேலே பாசம் பொங்கி வழிய ஆரம்பிச்சிடுச்சி. தன் பேர்லயிருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கும், பாங்கில் இருக்கும் பணம், அவர் பெயரில் இருக்கும் ஷேர் என எல்லாவற்றையும் பேத்தியோட பேருக்கு மாற்றி எழுதிட்டார். இதுக்கெல்லாம் அவர் விலையா கேட்டது தன்னோட மகளோட மறு உருவமாக இருக்கும் பேத்தி” என்றார்.

“அப்படின்னா, இவளை மட்டும் அவரோட கூட்டிட்டுப் போகணும்னு கேட்கறாரா? இவளுக்கு வந்த வாழ்வைப் பார்த்தியாம்மா!” ஆதங்கத்துடன் கேட்டாள் மிதுனா.

“ஆனா, கங்காதரன் முடியாதுன்னு பிடிவாதமா இருக்கார். சுமிக்கு அம்மாவோட அப்பான்னு தாத்தா மேல பாசமும் இருக்கு. இத்தனை நாளா தன்னோட அப்பாவையும், அம்மாவையும் ஏத்துக்காதவர், இன்னைக்குப் பேத்தி மேல பாசம்னு வந்து நிக்குறவர் மேல கோபமும் இருக்கு.

அவளைப் பார்க்கணும்னு அழைச்சிட்டு வரச்சொன்ன வக்கீல்கிட்ட அவரைப் பார்க்க விருப்பமில்லன்னு சொல்லி அனுப்பிட்டா. கங்காதரனும் ஒரு முறையாவது அவரைப் பார்த்துப் பேசிட்டுவாம்மான்னு சொல்லியும், இவள் அசைஞ்சே கொடுக்கல.

ஒருமுறை இவளோட போனுக்கு அவர் பேசினபோது, பெத்தப் பொண்ணையே தூக்கியெறிஞ்ச உங்களுக்குப் பேத்திமேல மட்டும் இந்தப் பாசம் எத்தனை நாளைக்கு இருக்கும்னு கேட்டு இனி, போன் செய்து என்னைத் தொல்லை பண்ணாதீங்கன்னு கடுமையாவே சொல்லிட்டாளாம்” என்றார்.
“ச்சே! பணத்தோட அருமை தெரியாத ஜென்மங்களுக்குத்தான் பணம் வலிய போய்ச் சேருது…” என நொடித்துக் கொண்டாள் மிதுனா.

“அதென்னவோ உண்மைதான்… இவளை எப்படியாவது வழிக்குக் கொண்டுவரணும்னா… அவள் நம்ம கண்ட்ரோலுக்கு வரணும். அந்தநேரத்துலதான் கிஷோர் அவளைக் காதலிக்கறதா சொன்னான். இந்த கங்காதரனுக்கும் ஆஸ்துமா ப்ராப்ளம் இருக்கு.

எப்படியிருந்தாலும் தாத்தா சொத்து பேத்திக்குத் தானே. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு கணக்குப் போட்டேன். மறுப்பே சொல்லாமல் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திட்டேன்.”

“எவ்ளோ பெரிய வேலை செய்திருக்கமா நீ. உனக்கு இந்தத் தகவலை யார் சொன்னது? ஏதாவது தப்பான நியூசா இருந்தா…?” எனக் கேள்வி எழுப்பினாள்.

“நிச்சயமா இல்ல. நம்ம வக்கீலோட வைஃப் என்னோடு லேடீஸ் கிளப்புக்கு வருவாங்க இல்லையா… அவங்கதான் இத்தனையையும் சொன்னாங்க. அவங்க வீட்டுக்காரரோட சீனியர்தான் எதேச்சையா இதைச் சொல்லியிருக்கார்.”

“அப்பாவுக்கு இதெல்லாம்….?”

“எதுவும் தெரியாது. உன் தொணதொணப்பு தாங்காமதான் உன்கிட்டயே சொன்னேன்.”

“இதுவும் நல்லதுக்குத்தாம்மா. சுமி மாதிரி ஒருத்தியிருந்தாதான் எனக்கும் நல்லது. நான் இங்கே வந்து டேரா போடமுடியும். நான் சொல்லும் வேலையையும் வாயைத் திறக்காமல் செய்வா. கூடவே, அவ அப்பன் மேலயும் கொஞ்சம் அக்கறையிருக்கறா மாதிரி நடிச்சா போதும். நம்ம காலையே சுத்திச் சுத்தி வருவா. அப்புறம் நம்ம இராஜ்ஜியம் தான். கிஷோரை நம்ம வழிக்குக் கொண்டு வர்றது ஒண்ணும் பெரிய விஷயமில்லயே” என்று அலட்சியத்துடன் சிரித்தாள்.

“ம்ம்… சுத்திச் சுத்தி வருவா… நாய் மாதிரி. ஆனா, குலைக்கத் தெரியாத, கடிக்கத் தெரியாத நாய்” என மந்த்ராவின் ஆங்காரமானப் பேச்சு அந்த அறை முழுதும் எதிரொலித்தது.
பாவம், சுமித்ராவைத் தாங்கள் தவறாக எடைபோட்டுவிட்டோம் என்பதை இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.

காலத்தின் சூழலில் அவரவர் கேள்விகளுக்கு, பதிலறிந்து கொள்ளக்கூடிய நேரம் வரும். சிலருக்கு அது வரம்.

சிலருக்கு….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *