Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 21

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் 21:

சங்கீத் பிரச்சனைக்கு பின் இன்றுதான் திலகாவின் முகத்தில் மலர்ச்சியைப் பார்க்கிறாள். இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையாக வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றெண்ணினாள் மஹதி. மௌனமாகவே தன் சம்மதத்தை தெரிவித்து விட்டு, அன்னை கொடுத்த புதுப்புடவையில் தன்னை அலங்கரித்து விட்டு அனைவரும் குழுமியிருந்த ஹாலுக்கு வந்தாள்.
“பாட்டி காலில் விழுந்து கும்பிடும்மா” என்ற அன்னையில் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து பாட்டியின் ஆசீர்வாதத்திற்கு பின் எழுந்த போது,
“மாப்பிள்ளையை கொஞ்சம் நிமிர்ந்துப் பார்.. நம்மளை பார்க்க மாட்டாளான்னு ஏக்கமா பார்க்கிறார்” என்று ஸ்வாதி சொன்னதும் நிமிர்ந்தவள் பார்வையில் விழுந்தது துருவ் பிரதீப். அவன் அன்னையுடன் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தான்.
ஸ்வாதி என்ன செய்கிறாள் என்று திரும்புவதற்குள்… அவள் “துருவ்!!!!” என்றுக் கத்தியபடி அவனருகே சென்றாள். துருவ் பார்வையும் இவள் மீதே இருந்தது. அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியாமல் அவள் திரும்ப முற்படும் போது, “மஹதி!!!!” என்ற அவள் தந்தையின் குரல் வாசலில் இருந்துக் கேட்டது.
விருந்தினர்களுடன் அளாவிக் கொண்டிருந்தவர்,
“உன் ஆஃபீஸ்ல இருந்துடா” என்று சொல்ல, அங்கே பூங்கொத்துடன் ஒருவன் நின்றிருந்தான். அலுவலகத்தில் சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு இதுபோல் வாழ்த்து செய்திகள் வீடு தேடி வருவது வழக்கம் தான். ஏற்கனவே இருமுறை வந்திருப்பதால், வீட்டினர் அனைவரும் அவள் வேலை திறமையைப் பற்றி பெண் பார்க்க வந்திருந்தவர்களிடம் கூறி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவளுக்கு மட்டும் குழப்பமாக இருந்தது. நான்கு மாதங்களாக அலுவலகத்திற்கு செல்லாதவர்களுக்கு எப்படி அனுப்புவார்கள்? என்று யோசித்தப்படியே வாசலை நோக்கி செல்ல ஆரம்பித்தாள். ஒரே நொடியில் அவளிடம் கொடுத்து விட்டு வந்தவன் கிளம்பி விட, உள்ளே இருந்த வாழ்த்து அட்டையை எடுத்தாள்.
Thanks for everything
அவனே தான். தன்னை கண்டுபிடித்து விட்டான். என்ற அவன் புறம் திரும்பிய போது அவனும் அவளை மட்டுமே பார்த்திருந்தான். இருவருமே தங்கள் காதலை பரிமாறி கொள்ளாமலேயே ஒருவர் மனதை இன்னொருவர் நன்கு அறிந்து கொண்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. வீடே சந்தோஷத்தில் குழுமியிருக்க,. தன் மனதிற்கு பிடித்தவன் வந்து நாளை முதல் வரிசையில் அமர்ந்து திருமண நாளன்று நின்றால்? என்னால் இவனை எந்த தயக்கமும் இல்லாமல் தாலிக் கட்டிக் கொள்ள முடியுமா?
அதுவும் அவன் பின்னாலேயே சுற்றி சுற்றி நானும் உன்னை விரும்புகிறேன்.. அடுத்த அடியை நீதான் வைக்கணும் என்று எவ்வளவோ விஷயங்களில் புரியவைத்தும், இன்று மனதை மாற்ற முயற்சிக்கும் போது வந்து நின்றால்? என்ன செய்வது?
“என்னடா?” என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்த அவள் தந்தை கேட்க, சட்டென்று அந்த கார்டை மறைத்தவள், பூங்கொத்தை மட்டும் தந்தையிடம் நீட்டினாள்.
இவள் மறைக்க முற்பட்டதையும், இருவரின் பார்வையையும் பார்த்த சங்கீத், வாழ்த்து அட்டைக்காக கையை நீட்டினான். ஆம் சங்கீத்தை திலகா இன்றுதான் வீட்டுக்கு அழைத்துள்ளார்.
எந்த தயக்கமுமின்றி சங்கீத்திடம் கொடுத்தாள். துருவ் தான் முறைத்தான். இன்று வீட்டில் அனைவரும் இருப்பர் என்று தெரிந்தே இப்படி கார்டு அனுப்பினால் என்ன செய்வது? என்பது போல் இருந்தது இவளது பார்வை.
சங்கீத் வாழ்த்து அட்டையைப் பார்த்தான். நிமிர்ந்து இருவரையும் சந்தேக கண்ணோடு பார்த்தான். பின் எதுவும் பேசாமல் மாப்பிள்ளை வீட்டாரின் அருகில் அமர்ந்து விட்டான்.
எல்லாவற்றையும் யோசித்து தன் தங்கையையே சிறிது நேரம் பார்த்தான். இவர்கள் எல்லாம் ஹாலில் இருக்க அவள் மட்டும் அதே பெரிய ஹாலின் மற்றொரு மூலையில் இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தாள். அவள் முகத்தில் எந்த குழப்பமும் இல்லாமல், அவள் கையில் இருந்த சிற்றுண்டியை காலி செய்தாள்.
“எல்லாருக்கும் பிபி ஏத்திட்டு கூலா இருக்கிறதே இவ வேலை” என்று முணுமுணுத்த சங்கீத்,வந்திருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தான்.
அந்த கூட்டத்தில் இருந்து துருவ் மட்டும் தனியே வந்து, அவள் இருந்த டேபிளின் எதிரே அமர, மஹதி மற்ற அனைவரையும் பார்த்தாள். அவரவர் பேச்சு மும்முரத்தில் இருக்க, மாப்பிள்ளை என்று சொல்லப்பட்டவன் அடிக்கடி இவளைப் பார்த்தான்.
“அவங்க எல்லாம் போகட்டும். நாம் பேசிக்கலாம்” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள்.
“என்ன பேசணும்? நான் ஜஸ்ட் விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்” என்றதும்,
“அப்படியா பாஸ்??? வாய் மட்டும் தான் அப்படி சொல்லுது” என்று கொஞ்சமும் அசராமல் புன்னகையுடன் அவள் சொல்லவும், யாருமறியாமல் அவள் கையை பற்றி, மூடியிருந்த விரல்களை ஒவ்வொன்றாக பிரித்தவன்,
“சரி, என் கண் என்னெல்லாம் சொன்னதோ அதையெல்லாம் சொல்லு” என்று ஹஸ்கி குரலில் சொன்னான்.
“நீ எதுவும் சொல்லவே மாட்ட இல்ல?” என்று கோபமாகச் சொன்னவள், எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தாள்.
சின்க்கில் தண்ணீரை திறந்து முகத்தில் தண்ணீரை அடித்து, வாய்க்குள்ளேயே அவனை வறுத்துக் கொண்டிருந்த போது, எதிரே கைகளை கட்டியபடி நின்றிருந்தான். அவளும் அவனை போலவே கைகளை கட்டியபடி நின்று,
“நீ அடிக்கடி கேட்ப இல்ல. டூ யூ லவ் மீ மஹதி? அப்படீன்னு… எனக்கு எந்த கேள்வியும் இல்ல. உனக்கு என்னை பிடிச்சிருக்கு. நீ என்னை லவ் பண்ற. பட் உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டம் இல்ல” என்று நிறுத்தியவள், அவன் அமைதியான புன்னகையைப் பார்த்து, மேலும் கோபமடைந்தவளாக,
“எனக்கு கல்யாண பேச்சு நடந்தால் மட்டும் ஓடி வருவ. நாளைக்கே என்னை யாரோ மாதிரி ட்ரீட் பண்ணுவ.போதும்” என்று, கடைசி வார்த்தையை மிக அழுத்தமாக சொல்ல, புன்னகையுடன் அமைதியாக நின்றிருந்தான்.
சங்கீத் உள்ளே வரவும்,திகைத்த மஹதி, பின் தண்ணீர் க்ளாஸை துருவிடம் நீட்டி,
“தண்ணீர் கேட்டு வந்தார்” என்று சமாளிக்க முயற்சித்தாள். ஆனால் துருவ் பிரதீப்போ அவள் நீட்டிய க்ளாஸை வாங்காமல், அதே போஸிலேயே நின்று அவளை கூர்மையான விழிகளால் நோக்கியவன்,
“நான் என் மஹாவிடம் பேச மட்டும் தான் வந்தேன்” என்று சொல்லி வெளியேற முயன்ற போது, சங்கீத்திடம் திரும்பிய மஹதி,
“எனக்கு அந்த பையனை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குன்னு அம்மாவிடம் சொல்லு சங்கீத்” என்றவள் பார்வை துருவ் மீதே இருக்க, அவன் வழக்கமான குட்டிப் புன்னகையுடன் வெளியேறினான் என்றால் சங்கீத் மேலும் அதிர்ச்சியடைந்தான்.

“வெளியில என்ன நடக்குது தெரியுமா?” என்ற கேள்வியுடன். அனைத்தும் புரிந்தாலும் இவ்வளவு நாள் தவிக்க விட்டதாலோ என்னவோ இவளுக்கும் ஈகோ தலைதூக்க,
“இந்த மாதிரி மண்ணுளியோட ஒருநாள் இருக்க முடியாது” என்று வெளியேறி அவள் அறைக்குள் செல்ல முயல, “நீ வந்தவன் முகத்தைக் கூட பார்க்கல டி” என்றான் அவளை பின் தொடர்ந்த சங்கீத்.
நடக்கும் கூத்துகளையெல்லாம், அமைதியாக வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த துருவை ஒன்று வைக்கலாம் என்று தோன்றியது.
.
“நாங்க எல்லோரிடமும் கலந்து பேசி சொல்றோம்” என்று திலகா சொல்லவும் அதை ஏற்றுக் கொள்வது போல் அவர்கள் வெளியேற, அங்கே ஒரு நிசப்தம் நிலவியது.
அன்பரசி எழுந்து நின்று, இந்த மாதிரி தருணத்தில் தானும் மஹதியைப் பெண் கேட்டதற்காக, அங்கிருந்த அனைவர்களிடமும் கண்கள் கலங்க மன்னிப்பும் கோரினார்.
துருவ் வேகமாக வந்து, “வேண்டாம் அம்மா. எனக்காக எதுவும் கேட்க வேண்டாம்” என்று கையைப் பிடித்துக் கொண்டான்.
திலகாவைப் பார்த்து, “சாரி ஆன்ட்டி” என்று வெளியேறினான்.
சற்று நேரம் கழித்து கீழே இறங்கி வந்த மஹதிக்கு,
“துருவ், என் பையன் திலகா. என் மகனுக்கு உன் மகளை கொடுப்பியா” என்று ஜெயந்தி கேட்டது காதில் விழுந்தது. திலகா தன் மகளையே பார்த்து அமைதியாக இருந்தார். செந்தில், அன்பரசியும் எனக்கு சகோதரி தான் என்று உடனேயே சம்மதித்து விட்டார். திலகாவை தான் அனைவரும் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர்.
மஹதி, இந்த பேச்சில் எல்லாம் கலந்துக் கொள்ளாமல், சங்கீத்தை அழைத்து தனியாக வந்தாள்.
“என்னை எங்கேயாவது கூட்டிட்டு போ. விட்டால் அழுதிருவேன். பட் அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியல” என்று அவன் தோளில் சாய்ந்தாள்.
“இந்த ஈகோ ரொம்ப நாள் நிலைத்து இருக்காது மஹதி. இங்கே இருந்து யோசி” என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியதுடன்,
“நீ அவன் சைடும் யோசிக்கணும். ஏழுவருஷமா அவன் அன்பரசி அத்தையோடவும் பேசல. வீட்டுக்கும் போகல. ஏதோ ஒரு வகையில் நாமளும் காரணமாகிட்டோம். அத்தையும் மகன் சொன்னதும் அடுத்த ஃப்ளைட்ல ஓடி வராங்க. இப்படி ஒரு குடும்பத்தை விடுறதுக்கு ஒரு அண்ணனா எனக்கு மனசு வரல” என்று உள்ளே சென்று சாவியுடன் வந்தவன்,
“நீயே ஒரு ரவுண்ட் போயிட்டு வா. அப்புறம் வந்து சொல்லு” என்று இரு சக்கர வாகனத்தில் ஸ்டான்ட் எடுத்து திருப்பியும் கொடுத்தான்.
“அவள் சென்றதும் உள்ளே வந்தவனிடம் திலகா,
“ஏ!! அவளை வண்டியை எடுக்க விடுறதில்ல. நீ ஏன் கீ கொடுத்த?” என்று பதறவும்,
“அதெல்லாம் கேர்ஃபுல்லா வருவா மா” என்று சோஃபாவில் அமர்ந்தவன், ஜெயந்திக்கு கண்ஜாடை காட்டி, துருவ் பிரதீப்க்காக பேச சொன்னான்.

எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல்,வண்டியை செலுத்தியவளுக்கு,
“நான் என் மஹாக்கிட்ட பேச தான் வந்தேன்” என்ற துருவ் குரல் மிக அருகில் ஒலிப்பது போல இருக்க, ‘என் மஹா வா?’ என்றவளுக்கு தன்னையுமறியாமல் புன்னகை அரும்ப, அதே நேரம் கவனமின்மையால் வண்டி தடுமாற, ஓரமாக சென்று நிறுத்தினாள்.
மாலை நேர தெரு விளக்குகளின் ஒளியில் ஸ்கூட்டியில் சாய்ந்து தனியே நின்றிருந்தவள், காலையில் இருந்து நடந்தவை மட்டும் அல்லாமல், அவனின் பார்வையில் கலந்திருந்த காதல், அலுவலகத்தில் திட்டினாலும், அவள் மேல் காட்டிய அக்கறை, எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைத்து, தன் உள்ளங்கையை மூடி. மூடி திறந்து புன்னகையுடன் நின்றிருந்தாள்.
தன் அருகே கார் நிற்கவும் நிமிர்ந்து பார்க்க, ஓட்டுநர் இருக்கையில் துருவும் அருகில் அன்பரசியும் அமர்ந்திருந்தனர்.
“உன்னை ஸ்வாதி மேரேஜ்ல கேம்ல பார்த்தப்பவே, என் மகனின் மனசை பற்றி தெரிந்து கொண்டேன்மா” என்றார் அன்பரசி. துருவ் பிரதீப்பை கவனமாக தவிர்த்து அன்பரசியை மட்டும் பார்த்து புன்னகைத்தாள்.
சில நொடிகளிலேயே அன்பரசியிடம் தலையசைத்து விடைபெற்று வண்டியை எடுத்து, தன் வீட்டின் தெருவிலிருந்து மெயின் ரோட்டிற்கு வந்து விட்டாள். அவனும் விடாமல் அவளை பின் தொடர்ந்தான்.

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா – (கவிஞர் கபிலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *