Categories
On-Going Novels Sudha Ravi Uncategorized

அத்தியாயம் – 3

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 3

தினமும் சண்டையும் வம்புமாக சென்று கொண்டிருந்தன நாட்கள் ஹர்ஷாவிற்கு. ஹரிணியுடனான உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவனைக் கண்டாலே வேண்டுமென்றே முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். அவன் பார்க்காத நேரங்களில் அவனை பார்த்துக் கொண்டிருப்பது போல் உணர்ந்தான். அவள் மனதில் என்ன இருக்கிறது என்று புரியாமல் மண்டை காய்ந்து போனான்.

இதன் நடுவே இருமுறை அவனது தந்தை அவனை வந்து பார்த்துவிட்டுச் சென்றார். என்னவோ தந்தை மிகவும் உடல் மெலிந்து இருப்பது போல் ஒரு எண்ணம் தோன்றியது அவனுக்கு. அன்னையிடம் தான் அவனுக்கு நெருக்கம் அதிகம். தந்தை ஏதாவது கூறினால் அதற்கு எதிர்பதமாகவே செய்து பழக்கம்.

கல்லூரியில் கல்சுரல்ஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருந்தது. திவாகரும், சேகரும் வழக்கம் போல் எதிலும் கலந்து கொள்ளாமல் தங்களது பாட புத்தகங்களோடு சுற்றிக் கொண்டிருக்க, ஹர்ஷா தான் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக குண்டைப் போட்டான்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனவர்கள் அவனை கெஞ்சி, கொஞ்சி அதிலிருந்து விலகச் செய்தனர். ஹரிணி நடனமாடப் போவதாக அறிந்த ஹர்ஷா கனவில் மிதக்கத் தொடங்கினான். தினமும் பல்வேறு விதமான பாடல்களை கவனித்து இதற்கு ஆடுவாளோ, அதற்கு ஆடுவாளோ என்றெண்ணி கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.

தினமும் அதற்க்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் எந்தப் பாட்டிற்கு ஆடப் போகிறார்கள் என்று வெளியே தெரியாமால் இருந்தது.

ஒருநாள் கல்லூரிக்கு சென்றவளை வழி மறித்து “அம்முலு நீ எந்த பாட்டுக்கு ஆடப் போற?” என்றான்.

அவன் வழிமறித்ததில் கடுப்பானவள் “அது தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற?” என்றாள் இடக்காக.

அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே “சொல்லு அம்முலு…நீ சொன்னா தினமும் கனவில் நீ அந்தப் பாட்டுக்கு ஆடுறதை பார்ப்பேன்” என்றான்.

அவன் சொன்னதில் டென்ஷன் ஆனவள் ஒற்றை விரலைக் காட்டி “என்ன விளையாடுறியா? அதென்ன அம்முலு? இந்த மாதிரி கூப்பிடுற வேலையை எல்லாம் வேற எவ கிட்டேயாவதுக்கு வச்சுக்கோ” என்று சிலிர்த்து எழுந்தாள்.

அவளது கோபத்தை லட்சியம் பண்ணாது “சொல்லு அம்முலு” என்றான்.

“ச்சே” என்று அலுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பிரம்ம பிரயத்தனம் செய்தும் அவள் என்ன பாடலுக்கு ஆடுகிறாள் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

அவனாகவே ஒரு சில பாடல்களை தேர்வு செய்து இதற்குத் தான் ஆடுவாள் என்று முடிவு செய்து திவாகரையும், சேகரையும் படுத்தி எடுத்தான்.

“டேய் திவா! பொண்ணுன்னா அது ஹனி தாண்டா! அவ நடக்கும் போதே டான்ஸ் ஆடுற மாதிரி இருக்கும். ஆடினா கேட்கவே வேண்டாம்” என்றான்.

திவகரோ தலையில் அடித்துக் கொண்டு “என்னால முடியல-டா! இவன் பண்ற இம்சையைத் தாங்க முடியல” என்று சேகரிடம் புலம்பினான்.

அவன் எதிர்பார்த்த நாளும் வந்தது. அன்று சீக்கிரமே எழுந்து இருவருக்கும் முன்பு குளித்து முடித்து புது சட்டை அணிந்து கொண்டு அவர்கள் வரும் முன்பே ஆடிட்டோரியத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.

திவாகரும், சேகரும் அவனுக்காக கூட சென்றமர்ந்தனர். அவர்கள் இருவருக்கும் படிப்பைத் தவிர இதிலெல்லாம் விருப்பம் இல்லை என்றாலும் ஹர்ஷா திட்டி தீர்ப்பான் என்பதற்காக வந்திருந்தனர்.

ஒவ்வொரு நிகழ்ச்சியாக முடிய, முடிய எப்போது வருவாள் என்கிற பதட்டத்திலேயே அமர்ந்திருந்தான்.

தேவதை போல் அலங்காரத்தில் வரப் போகும் அவளை தரிசிக்க ஆர்வமாக இருந்தான்.

அவளது குழு நடனத்திற்கான அறிவிப்பு வர, திரை இழுத்து மூடப்பட்டது. ஹர்ஷா சீட்டின் நுனிக்கு வந்தான். அவனது செயல்களை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் திவாகரும், சேகரும்.

திரை இழுக்கப்பட்டு மேடை இருளாக இருந்தது. ஆடப் போகிறவர்கள் நிற்பது நிழலாகத் தெரிந்தது.

அவர்கள் ஆடுவதற்கான இசை போடப்பட்டதும் சற்றுக் குழப்பத்துடன் திரும்பி நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் இருவருக்கும் அவள் ஆடப் போகும் பாடல் புரிந்து சிரிப்பு வரத் தொடங்கியது. அவனோ குழப்பத்துடன் திரும்பி மேடையைப் பார்க்க, அங்கே நின்றிருந்தவளைக் கண்டதும் நெஞ்சு வலியே வந்தது அவனுக்கு.

                          ஹே  ஒத்த சொல்லால என் உசிர எடுத்து வச்சுகிட்டா

                              ரெட்டைக் கண்ணால என்ன தின்னாடா

                     பச்சைத் தண்ணிப் போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சு

                                   நித்தம் குடிச்சு என்னைக் கொன்னாடா

என்று அவள் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆடியதைப் பார்த்ததும் அவனுக்கு ரத்த அழுத்தம் ஏறியது. தாங்க முடியாமல் சீட்டில் எழுந்தவனை மாணவர்களின் குரல் பிடித்து அமர வைத்தது. அவளின் குழு ஆடுவதைப் பார்த்து அரங்கமே ஆடியது. ஹர்ஷாவின் முகம் நேரம் ஆக-ஆக கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது. பொறுத்துக் கொள்ள முடியாமல் அவசரமாக எழுந்து அரங்கத்தை விட்டு வெளியேறினான்.

அவனது முகத்தை பார்த்தே பிடித்தமின்மையை உணர்ந்து கொண்ட திவாகரும், சேகரும் அடித்து பிடித்துக் கொண்டே அவன் பின்னே ஓடி வந்தனர்.

வெளியில் வந்து ஆத்திரத்துடன் அங்குமிங்கும் நடந்தவன் “இவளுக்கு வேற பாட்டே கிடைக்கலையாடா?” என்றான்.

இருவரும் அவனை மௌனமாக பார்த்துக் கொண்டே நின்றவர்களின் மனதில் ‘இவன் போய் ஹரிணியிடம் என்ன பேசப் போறானோ? அந்தப் பொண்ணு பாவம் அழப் போகுது’ என்று பயந்து போய் நின்றிருந்தனர்.

முகம் கடுகடுவென இருக்க “இன்னைக்கு பேசுற பேச்சில் இனிமே இந்த மாதிரி பாட்டுக்கு அவ ஆடவே கூடாது” என்றான்.

அப்போது அரங்கத்தை விட்டு வெளியே வந்த சந்தோஷ் அங்கே ஹர்ஷா நிற்பதைக் கண்டதும் உற்சாகமாகி “மச்சி! என்னா டான்ஸ்-டா. சும்மா சொல்லக் கூடாது பின்னிட்டாளுங்க. அதிலும் அவளுங்க போட்டிருந்த டிரஸ் சான்சே இல்ல” என்று கிண்டலடித்துக் கொண்டு சென்றான்.

அதைக் கேட்டதும் மேலும் எரிமலையாக பொங்கியவன் அவனை நோக்கி செல்ல, அதற்குள் சுதாரித்துக் கொண்ட திவாகரும், சேகரும் அவனைப் பிடித்து இழுத்தனர்.

மூவரும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் நேரம் “எக்ஸ்கியூஸ்மீ! கொஞ்சம் வழியை விடுறீங்களா?” என்று குரல் கேட்டதும் சடாரென்று திரும்பினான்.

அங்கு இடுப்பில் லுங்கியுடனும், மேலே ஷர்ட் அணிந்து தலையில் விக்கும், முகத்தில் வரையப்பட்ட மீசையுடனும் நின்றிருந்தாள் அவனது ஹனி.

நண்பர்கள் இருவருக்கும் அவள் நின்றிருந்த கோலம் சிரிப்பை வரவழைக்க, அதை அடக்க முடியாமல் தவித்தனர். ஹர்ஷாவோ கொதிகலனாக மாறி “ஏய்! இதென்ன டிரஸ் மாத்தாம இங்கே வந்து நிற்கிற” என்றான்.

“ஹாஸ்டலுக்குப் போய் மாத்திக்கிறோம். கொஞ்சம் வழியை விடு” என்றாள் கடுப்புடன்.

மாணவர்கள் அனைவரின் பார்வையும் அவளை தொட்டுச் செல்வதைக் கண்டு கடுப்பாகி “உனக்கு ஆடுறதுக்கு வேற பாட்டே கிடைக்கலையா?” என்று சள்ளென்று விழுந்தான்.

அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து “ஏன் இந்த பாட்டுக்கென்ன?” என்றாள்.

“அழகா பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிட்டு ஆடுற மாதிரி பாட்டே கிடைக்கலையா உனக்கு?”

அதைக் கேட்டதும் டென்ஷனான ஹரிணி லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போவது போல் “நான் என் இஷ்டத்துக்கு எனக்குப் பிடிச்ச பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். இதுல உனக்கென்ன வந்தது?” என்று எகிறினாள்.

அவளது செயலைக் கண்டு அதிர்ந்தவன் மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களை சுவாரசியமாக பார்ப்பதைக் கவனித்து விட்டு இவளிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்றெண்ணி நண்பர்களை அழைத்துக் கொண்டு அவளை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தான்.

சிறிது தூரம் சென்றவன் திரும்பி வந்து அவள் காதில் “அடியே! லுங்கியை கீழ இறக்கி விடுடி! பயபுள்ளைங்க மொத்தமும் உன் காலை தான் பார்த்துகிட்டு இருக்கானுங்க” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று சென்றான்.

அவன் கூறியதைக் கேட்டு விக்கித்து நின்றவள் தன்னைச் சுற்றிலும் கண்களை சுழல விட்டாள். ஒரு சில மாணவர்கள் கண்டும் காணாதது போல் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றனர். அதைக் கண்டதும் அவசரமாக லுங்கியை இறக்கி விட்டு ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மனமோ அவனை தாளித்து கொண்டிருந்தது. ‘இவன் அடங்கவே மாட்டான். நல்லா வாயிலேயே நாலு அப்பு அப்பனும்’ என்றெண்ணிக் கொண்டு சென்றாள்.

அவனோ ஹாஸ்டல் வாயிலுக்குச் சென்று திரும்பி பார்த்தவன் அவள் லுங்கியை இறக்கிவிட்டு செல்வதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டு சென்றான்.

அதுவரை அவள் ஆடிய நடனத்தின் மீதிருந்த கோபமெல்லாம் குறைந்து மனதினுள் மெல்லிய சாரல் வீச ஆரம்பித்தது.

அந்த இனிமையுடனே வந்தவனைப் பார்த்து திவாகரும், சேகரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“ஏன் மச்சான் உனக்கு இந்த பாலச்சந்தர் கதாநாயகியைத் தெரியுமா? அடக்க ஒடுக்கமா புடவை கட்டி பூ வச்சுகிட்டு” என்று அவன் முடிக்கும் முன் அவன் மீது பாய்ந்த ஹர்ஷா “ஆமாம்-டா! எனக்கு அப்படி இருந்தா தான் பிடிக்கும்னு சொன்னேன் தான். ஆனா, இவ இப்படி லங்கிணி மாதிரி இருப்பான்னு யாருக்குத் தெரியும்?” என்றான் கடுப்புடன்.

அதற்கு சேகரோ “விடு மச்சான்…வாழ்க்கையில் நாம நினைக்கிற மாதிரி எல்லாம் நடக்காது” என்றான்.

“அப்படி எல்லாம் இல்லடா. அவ கூட சுத்துறாளுங்களே அவளுங்க தான் இந்த பாட்டுக்கு ஆட சொல்லியிருப்பாளுங்க” என்றான் விடாகொண்டனாக.

சேகரும்,திவாகரும் அவன் சொன்னதைக் கேட்டு சத்தமாக சிரித்து “அப்போ உன் ஹனிக்கு வாயில விரலை வச்சா கூட கடிக்கத் தெரியாத பாப்பான்னு சொல்ற” என்றார்கள்.

“ஆமாம்-டா! அவ நல்ல பொண்ணு தான்” என்றான்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “அப்படியா ஹர்ஷா? உனக்கு நம்பிக்கை இருந்தா சரி தான்” என்றவன் “நாளைக்கு பத்து மணிக்கு மெர்சல் படத்துக்கு போகலாமாடா?” என்றான் திவாகர்.

அவனை உலக அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்து “என் காதையே என்னால நம்ப முடியல-டா. செகண்ட் ஷோ போறதுக்கு கூப்பிட்டாலே மூக்கால அழுவ. நீ கிளாஸ் கட் பண்ணிட்டு படத்துக்கு போகலாம்னு சொல்ற?” என்றான் அதிர்ச்சியாக.

இப்போது ஹர்ஷாவை அதிசயமாக பார்ப்பது திவாகரின் வேலையாகிப் போனது.

“ஏன்டா நேத்து சார் நாளைக்கு கிளாஸ் எதுவும் கிடையாதுன்னு சொன்னாரே.. நீயும் அங்க தானே இருந்த இப்போ அதிர்ச்சியா கேட்குற” என்றான்.

அதற்கு அலட்டிக் கொள்ளாமல் “அதுவா மச்சி என் உடல் மட்டும் தான் கிளாஸில் இருந்துது. என் மனசு ஹனியோட கிளாஸில் இருந்துதுடா” என்றான்.

இருவரும் அவன் சொன்னதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டனர்.

சேகரோ “அந்த கிளாசையாவது ஒழுங்கா கவனிச்சியாடா?” என்றான் கிண்டலாக.

“மச்..இல்ல மச்சான். என் ஹனி இருக்கும் போது அவளை விட்டுட்டு மற்றதை ஏன் கவனிக்கிறேன்” என்று அவர்களுக்கு மேலும் பல்பு கொடுத்தான்.

இருவர் மனதிலும் இவன் சரி வர மாட்டான் என்று எண்ணிக் கொண்டார்கள்.

அதற்குள் சேகர் “மச்சான் உனக்கு அரியர் ஏறிகிட்டே போகுதுடா. இந்த வருஷமாவது குறைக்கப் பாருடா” என்றான் ஹர்ஷாவிடம்.

சப்பணம் கொட்டி அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து “மச்..பண்றேண்டா” என்று அலுத்துக் கொண்டான்.

அவன் அருகில் சென்றமர்ந்த சேகர் “மச்சான் அப்பா பாவம்-டா. மளிகை கடை வச்சு கஷ்டப்பட்டு உன்னை படிக்க வச்சிட்டு இருக்கார். கொஞ்சமாவது பொறுப்பை உணர்ந்து படிடா. உனக்கு கீழே தம்பி வேற இருக்கான்” என்றான்.

அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டு “பெருசுங்க மாதிரி அறுக்காதடா. எல்லாம் எனக்குத் தெரியும்” என்றவன் குப்புற படுத்து குறட்டை விட ஆரம்பித்தான்.

அவனைப் பார்த்து நண்பர்கள் இருவரும் வருத்ததுடன் பார்வையை பரிமாறிக் கொண்டனர்

மறுநாள் பேசிக் கொண்டபடி மூவரும் கிளம்பி படத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் கல்லூரி மாணவர்கள் தான் எங்கும் நிறைந்திருந்தனர். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு மூவரும் தங்கள் இருக்கையில் சென்றமர்ந்தனர்.

கையில் இருந்த பாப்கார்னை கொறித்துக் கொண்டே அங்கிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா. திடீரென்று ஓரிடத்தில் பார்வை நிலைத்தது. அங்கு தனது தோழிகளோடு சீட்டைத் தேடிக் கொண்டு நின்றிருந்தாள் ஹரிணி.

கருப்பு ஜீன்சும், ஹாப் வைட் ஷார்ட் குர்தா அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் ஒன்றும் அணிந்து கொண்டு வந்திருந்தாள். மனதிற்குள் ‘இவளுக்கு எது போட்டாலும் நல்லா தான் இருக்கு’ என்று புகழ்ந்து கொண்டான்.

படம் ஆரம்பிக்க, விளக்குகள் அனைக்கப்பட்டது. அவனது பார்வை திரையைத் தீண்டியதை விட, அவளைத் தான் தீண்டி சென்றது. திரையில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருக்க அவள் தோழிகளிடம் வளவளத்துக் கொண்டிருந்தாள்.

விளம்பரங்கள் முடிந்து படம் ஆரம்பமானது. பெயர்கள் எல்லாம் போடப்பட்டு முடிந்தவுடன் விஜய் வரும் காட்சியைக் கண்டதும் முதல் விசில் சீறிப் பாய்ந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் அதிர்ச்சியில் நிலைக் குத்தி நின்றது.

விஜய் வரும் ஒவ்வொரு இடங்களுக்கும் விசில் அடித்து எகிறி குதித்து ஆடினாள். அவளைப் போலவே ஆங்காங்கே மாணவர்கள் ஆடினாலும்,  பெண்களில் இவளைத் தவிர எவரும் ஆடவில்லை.

அவளது தோழிகள் அவளை இழுத்து உட்கார வைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆடிக் கொண்டே இருந்தாள்.

இருட்டில் நண்பனின் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்த திவாகரும், சேகரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அதிர்ச்சி ஒருபுறம், ஆத்திரம் ஒருபுறம் எழ அமர்ந்திருந்தான். இடைவேளை வரை அமைதியாக இருந்தவன் “நான் கிளம்புறேன்-டா. தலைவலிக்குது எனக்கு” என்று திரையரங்கத்தை விட்டு வெளியேறினான்.

அவளும் பாப்கார்ன் வாங்க வெளியே வந்தவள் இவர்களைப் பார்த்ததும் அருகே வந்து “என்ன திவா அதிசயமா இருக்கு? நீங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு வந்துருக்கீங்க?” என்றாள்.

அவர்களோ நண்பனின் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டு பயந்து “ம்ம்..ஆமாம் போர் அடிச்சுது வந்தோம்” என்றார்கள் மெல்லிய குரலில்.

அவளோ அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் “படம் செமையா இருக்கில்ல” என்றாள்.

இருவருக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஆடு திருடிய கள்வனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு தலையை மட்டும் அசைத்தார்கள்.

அதற்குள் பொறுமையை இழந்த ஹர்ஷா “டேய்! வரப் போறீங்களா? இல்ல நான் மட்டும் போகட்டுமா?” என்றான்.

அப்போது தான் அவனைப் பார்ப்பது போல் பார்த்தவள் “ஏன் ஹர்ஷா படம் பிடிக்கலையா? அவங்களுக்கு பிடிச்சிருக்கு போல இருக்கே. அவங்களை ஏன் கம்பெல் பண்றீங்க?” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டு மேலும் கடுப்பானவன் இருவரையும் ஒருபார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் தங்களை விட்டுவிட்டு போவதைக் கண்டதும் பதறிப் போன இருவரும் அவளிடம் தலையசைத்துவிட்டு அவன் பின்னே ஓடினர்.

அவன் போவதையே பார்திருந்தவள் ‘சண்டைக்காரா! என் மேல உள்ள கோபத்தை அவனுங்க கிட்ட காட்டுறியா’ என்று கள்ளச் சிரிப்புடன் தனது தோழிகளை நோக்கிச் சென்றாள்.

திரையரங்கத்திலிருந்து சென்றவனோ எவரிடமும் பேசாது அறையில் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். நண்பர்களும் அவனிடம் பேசுவதற்கு இது தருணமல்ல என்று ஒதுங்கி இருந்தார்கள்.

சுமார் ஒருமணி நேரம் வரை அப்படியே படுத்திருந்தவன் சடாரென்று எழுந்து வெளியே சென்றான். இருவரும் அவன் செல்லும் வேகத்தைக் கண்டு யோசனையுடன் அமர்ந்திருந்தனர்.

நேரே சென்று கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு அவளின் வரவிற்காக காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடியே கையில் ஒரு புத்தகத்துடன் லைப்ரரிக்கு செல்ல வந்து கொண்டிருந்தாள் ஹரிணி.

இப்போது சாதாரண காட்டன் சுடிதார் அணிந்திருந்தாள்.

அவள் அவனை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல முயல், முன்னே சென்று வழிமறித்தான்.

அதைக் கண்டு எரிச்சலுடன் “வர வர உன்னோட இம்சைக்கு அளவே இல்லாம போச்சு ஹர்ஷா” என்றாள்.

அவனோ தீவிரமான முகபாவத்துடன் “ஏண்டி உனக்கு வெட்கமே இல்லையா? தியேட்டர்ல அவ்வளவு பேருக்கு முன்னாடி ஆடிட்டு இருக்க?” என்றான்.

அவன் தன்னை ‘டி’ போட்டு அழைத்ததில் எரிச்சலுற்றவள் “எதுக்கு வெட்கப்படனும்? எனக்கு ஆடனும்னு தோனுச்சு ஆடினேன்” என்றாள்.

“உனக்கு அறிவே கிடையாதாடி?” என்றவனை இடைமறித்து “என்ன சும்மா சும்மா ‘டி’ போட்டு பேசுற? நீ ‘டி’ போட்டா நானும் ‘டா’ போட்டு பேச வேண்டி வரும்” என்றாள் மிரட்டலாக.

“இங்கே பாரு! ஒரு பொண்ணு மாதிரி நடந்துக்க உனக்கு தெரியவே தெரியாதா?” என்றான் தன்னுடைய கருத்திலேயே நின்று கொண்டு.

அவனது கேள்வியில் கடுப்பானவள் கைகளைக் கட்டிக் கொண்டு நன்றாக நிமிர்ந்து நின்று “அப்படின்னா? பொம்பள புள்ள எப்படி நடந்துக்கணும்னு டிக்ஷனரியில போட்டு இருக்கா மிஸ்டர். ஹர்ஷா?” என்றாள் நக்கலாக.

அவனோ எரிச்சலடைந்து “விதண்டாவாதமா பேசாதே” என்றான்.

“எது விதண்டாவாதம்? இல்ல தெரியாம தான் கேட்குறேன் பொண்ணுங்களை எப்போதும் இப்படி சொல்லிட்டே இருக்கீங்களே…ஆம்பளைங்க இப்படித்தான் நடக்கனும்னு நாங்க சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா?” என்று எகிறினாள்.

அவள் தான் சொன்னதைக் கேட்காமல் மேலும் மேலும் பேசிக் கொண்டே போவதை பார்த்து “முதல்ல இப்படி மறுத்து மறுத்து பேசுறதை நிறுத்து” என்றான்.

அவளோ “நான் எப்படி இருக்கணும்னு நான் தான் முடிவெடுக்கணும். எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்தா அதை செய்யுறதுக்கு எவனோட அனுமதியும் எனக்குத் தேவையில்ல” என்றாள் அழுத்தமாக.

அதைக் கேட்டதும் கையை ஓங்கிக் கொண்டு சென்றவனின் கண்களைப் பார்த்து “அடிச்சிடுவியா நீ!  எங்க அடி பார்ப்போம்” என்றாள் சண்டைக் கோழியாக.

அவளது திமிரை அவனறியாமல் மனம் ரசித்தது. அதனால் ஓங்கிய கையை கீழே போட்டவன் “அது அப்படியில்ல அம்முலு…சில விஷயம் நமக்கு பிடிச்சிருந்தாலும் இடம், பொருள் ஏவல் பார்த்து நடந்துக்கணும்” என்றான்.

அவன் தனது கோபத்தை குறைத்துக் கொண்டு பேசுவதைக் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டு “அப்படிங்களா சார்? சரி நீங்க சொல்றதை எல்லாம் ஒத்துகிறேன். உங்க கிட்ட ஒன்னே ஒன்னு கேட்கட்டுமா?” என்றாள் நக்கலாக.

அவள் விழிகளை ஆராய்ந்து கொண்டே “ம்ம்..கேளேன்” என்றான்.

“எனக்கு இவ்வளவு அறிவுரை சொல்றீங்களே…நீங்க ஏன் ஒருநாளாவது சண்டை போடாம இருக்கக் கூடாது?” என்றாள்.

அவள் அப்படிக் கேட்டதும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற “அதை சொல்ல நீ யாரு?” என்றான் கடுப்புடன்.

“அதையே தான் நானும் கேட்கிறேன். எனக்கு அறிவுரை சொல்ல நீங்க யாரு?” என்று கேட்டு புருவத்தை உயர்த்தினாள்.

அவளது கேள்வியைக் கண்டு மண்டை காய்ந்து போய் “உன் மனசைக் கேட்டு பாரு நான் யாருன்னு சொல்லும்” என்றான்.

‘வாடி வா! நானா என் வாயால சொல்ல மாட்டேன்! என்று அவனை மனதிற்குள் தாளித்துக் கொண்டே “அதுதாங்க இப்படியொரு கேள்வியை கேட்குது” என்று மேலும் அவனை சீண்டினாள்.

அவளது பதிலில் பொறுமை இழந்தவன் ‘பார்த்துடுவோம் டி! நீயா நான்னான்னு!’ என்று கருவிக் கொண்டு “சொல்றதை சொல்லிட்டேன் எக்கேடும் கெட்டுப் போ” என்று கூறி திரும்பி நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *