Categories
Rajeswari Sivakumar Uncategorized

அத்தியாயம் – 3

Free Download WordPress Themes and plugins.

எபி 3
பெண்பார்க்கும் படலத்திற்காக அந்த ஹாலில் கூடியிருந்த அனைவரும் அவரவர் பேச்சில் கவனமாக இருக்க, ஹரியோ ‘பெண்ணிடம் என்ன சொல்லி கல்யாணத்தை நிறுத்துவது…!’ என்ற யோசனையில் கவனமாக இருந்தான்.
அப்போது பாட்டி, “மல்லிகா! பொண்ணை வரச் சொல்லலாமா?” எனக் கேட்டதும், அதற்கு அனைவரின் சம்மதமும் கிடைத்து, பிரியா அவர்களின் முன் நிற்க வைக்கபட்டாள்.
பெண்ணை நேர்ப்பார்வை பார்த்த ஹரி, ‘ஷாக்’ அடித்ததைபோல அதிர்ந்து, பட்டென்று திரும்பி தன் அன்னையை பார்த்தான்.அவன் பார்வையை எதிர்ப்பார்த்தே அவரும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
அன்னை தன்னை அளவெடுப்பதை கண்டு கடுப்பான ஹரி,‘நல்லா பாக்கறதை பாரேன்! மல்லி மேடம்! ஏகப்பட்ட திமிர் எக்கச்சக்கமா இருக்கு உங்களுக்கு. ஹும்… இருக்காதா பின்ன! எனக்கு என்னப் பிடிக்குங்கறது நான் சொல்லாமலே தெரிஞ்சிவச்சிட்டிருக்கிற மமதையில அப்படிதானே பாப்பீங்க!
அது எப்படி… உங்களுக்கு என்னோட விருப்பம் இப்படித்தான் இருக்கும்னு சரியா தெரியுது! இந்த விஷயம் மட்டும் எனக்கு எப்பவும் புரியவே மாட்டேங்குது!’ என மனதினுள் புலம்பினான்.
அன்னையின் தேர்வில் குறை ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்ற போதிலும் அவர் தன்னை கேட்காது முடிவெடுத்த ஆத்திரத்தில், ‘பொண்ணு பார்க்கறதுக்கு அழகா என்னோட டேஸ்ட்க்கு மேட்ச்சா இருந்துட்டா மட்டும் போதுமா!’என இவன் மனம் நினைக்க,’ம்ம்ம்… உன் இத்துப்போன மூஞ்சிக்கு இன்னும் வேற என்ன வேணும்!’ என அதே மனம் ‘சேம்சைடு’ கோல் அடித்தது.
’குணம்…மணம் இதெல்லாம் எப்படின்னு தெரியவேணாமா?’ என அசிங்கபட்டும் அடங்காது அடுத்த கேள்வியை அவன் மனம் கேட்க, ’இதையெல்லாம் பொண்ணுகிட்ட பழகிப்பாத்து தெரிஞ்சிக்கட்டுமா?’ன்னு உன்னோட அம்மாகிட்ட கேட்டுதான் பாரேன்!’ என அதே மனம் போட்டுவாங்க, ‘ஆஹாங்…! எதுக்கு எங்கம்மா என்னை கொன்னு போடறதுக்கா?’ என அலறினான்.
பெண்ணை கண்ணால் பார்த்ததும் ஹரியின் ‘திருமணத்தை நிறுத்தியே தீருவேன்!’ என்ற எண்ணம் சென்னைக்கு அடிக்கடி வரும் புயலை போல வலுவிழந்து பலகீனப்பட்டுவிட்டது. இருந்தும் அவனின் ஈகோ அவனை உசுப்பேற்ற, ’அது எப்படி…எனக்கு பிடிச்ச மாதிரி பெண்ணை கண்ணுலக் காட்டிட்டா… உடனே நான் கல்யாணம் பண்ணிப்பேனா மல்லி மேடம்! கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கே இன்ஃபர்மேஷனா தரீங்க? இருங்க, பொண்ணையே கல்யாணத்தை நிறுத்த வைக்கிறேன்!’ என சபதமெடுத்து அதற்கான சந்தர்ப்பத்திற்க்கு காத்திருந்தான்.
அதற்கேற்றார் போல ‘பையனும் பெண்ணும் பேசிக்கறதா இருந்தா பேசிக்கிடட்டும்’ என்று ஒருவர் சொல்ல, ஹரியும் ப்ரியாவும் தனியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனித்து விடப்பட்ட இருவரில் யார் என்ன பேசுவது எனத்தெரியாது சிறிது நேரம் மௌனமாய் இருந்தவர்களில் ஹரி முதலில் பேசத்தொடங்கினான்.
“உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?” என்ற இவனின் கேள்விக்கு
“தெரியலை!” என்ற அவளின் பதிலில் இவன் ‘என்ன பதில்டா இது?’ என திகைத்தான்.
ஹரியின் திகைப்பை பார்த்தவள்,”இன்னும் நான் காலேஜ் கூட முடிக்கலை. இதுக்குள்ள கல்யாணம்… வேணுமா…? எனக்கு சரியா முடிவெடுக்க தெரியலை. வீட்டில் எல்லோரும் சொன்னதற்கு சரின்னு தலையாட்டினேன்” என்று உள்ளதை உள்ளபடி உரைத்தாள்.
அவள் கூறியதை கேட்ட ஹரி, ‘அப்பாடா! இப்பதான் ஸ்கூல் முடிச்ச சின்ன பொண்ணோன்னு பயந்துட்டே இருந்தேன். பரவாயில்ல… காலேஜுக்கு போற பொண்ணுன்னா கொஞ்சம் பெரியவளா…எனக்கு மேச்சிங்கா,படிச்சவளா தான் இருப்பா! என்னதான் பட்டிக்காடுன்னாலும் பட்டதாரியா தானே இருக்கா! ரெண்டுப்பேரும் சேர்ந்து நின்னா ஜோடிப்பொருத்தம் கூட ரொம்ப நல்லாதான் இருக்கும்!’ என மிகமுக்கியமான! விஷயத்தை எண்ணிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு தெரியாமலே அவன் பிரியாவை திருமணம் செய்ய தயாராகிக்கொண்டிருந்தான்.
அவனின் எண்ணத்தை அறியாத பிரியா,”உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?” என மெதுவாக கேட்க,
அதில் தன் எண்ணத்திலிருந்து வெளியே வந்த ஹரி,”எனக்கு கல்யாணம்… இன்னும் ஒரு ரெண்டு,மூனு வருஷம் கழிச்சிப்பண்ணா பெட்டரா இருக்கும்னு ஒரு பீல்.அம்மாவோட வற்புறுத்தலால தான் இப்ப இங்க வந்தேன். ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு” என்றான் முதல் முறையாக தன் அன்னையன்றி வேறொருவரிடம் தன் மனதை திறப்பதை அறியாமலே!
இப்போது அவனின் பதிலில் திகைப்பது இவளின் முறையானது! இவர் என்னதான் சொல்ல வரார்?என்னைப் பிடிச்சியிருக்கு… ஆனா இப்ப கல்யாணம் வேணாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்!’ என இவள் குழம்ப, இதே குழப்பத்திலேயே தான் திருமணம்வரை தன்னை ஹரி வைத்திருக்கபோகிறான் என பிரியா அப்போது அறியவில்லை!
அடுத்து, ‘இருவரின் எண்ணமும் ஒரே பாதையில் பயணிப்பதால் நாம் சேர்ந்தே திட்டமிட்டு திருமணத்தை நிறுத்திவிடலாம்’ என ஹரி சொன்னதை கேட்ட பிரியாவிற்கு மேலும் கண்ணைக்கட்டியது!
‘இப்பதானே பிடிச்சியிருக்குன்னு சொன்னார்!அப்புறம் ஏன் கல்யாணத்தை நிறுத்தனும்?’என இவள் யோசித்துக்கொண்டிருக்க,
“நம்ம ரெண்டுபேருக்கும் அப்படி ஒன்னும் ஒருத்தர் மேல் மற்றொருத்தருக்கு விருப்பம் இருக்கற மாதிரி தெரியலை!இந்த அவசர கல்யாணத்தில் நமக்கு உடன்பாடும் இல்லை!”
“அதனால இதை நிறுத்தறது ரொம்ப ஈஸி! நாம இப்ப வெளிய போனதும்,’உங்க ரெண்டுபேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சியிருக்கா?’ன்னு கேப்பாங்க!அப்ப நாம ரெண்டு பேரும் சேர்ந்து இல்லைன்னு சொல்லிட்டா மேட்டர் சால்வ் ஆகிடும்” என ஹரி தன்னுடைய மாஸ்டர் ப்ளானை சொன்னதும்,இவளுக்கும் கல்யாணம் பண்ணிக்கொண்டு காலேஜ் போகவேண்டிய தர்மசங்கடத்திலிருந்து விடுதலை.எனவே பிரியா ஒருமார்கமாய் ஓகேவேன தலையாட்டினாள்.
அவளின் உடனடி தலையாட்டலை பார்த்த ஹரிக்கு எங்கோ லேசாக வலிப்பதை போல இருந்தது.அது ஏன்..! என்றுதான் அவனுக்கு தெரியவில்லை.அது எப்போது அவனுக்கு தெரிகிறதோ அப்போது அவன் இவளை வசப்படுத்த தீயாய் வேலைசெய்ய தொடங்கிடுவான்!
‘ஏன் என்னை பார்ததும் இவளுக்கு ஒரு மண்ணும் தோணலை…?’ எனக் கடுப்புடன் இவன் எண்ணும் போதே… ‘ச்சீ… சின்ன பொண்ணு! பாவம் அதுக்கு எப்படி அப்படி தோணும்!’ என்ற எண்ணமும் கூடவே தோன்றியது.
‘இவ தான் சின்ன பொண்ணு! அதான் ஒன்னும் தோணலை… ஆனா நான் ஏன் ‘இவதான் வேணும்’னு நினைக்கல? என்ற நினைப்பும் உடனே வர, இல்லையே… எனக்கு இவளை ரொம்ப பிடிச்சியிருக்கு! இப்ப வேணாம்னு சொல்லிட்டா.. ‘மிஸ் பண்ணிட்டு அப்புறம் வருத்தபடுவேன்’னு உள்ள ஒன்னு சொல்லிட்டே இருக்கே… அதுக்கு என்ன அர்த்தம்! இப்ப வெளியப்போய் ‘இவளை பிடிக்கலை’ன்னு என்னால சொல்லமுடியுமா?’ என குழப்பத்துடனே பிரியாவுடன் வெளியே வந்தான்.
மணப்பெண்ணிடம் நல்லவிதமாய் பேசி, கல்யாணத்தை நிறுத்த எண்ணமிட்டு வந்த ஹரி, இப்போது குழப்பமான மனநிலையில் இருப்பதோடல்லாமல், பிரியாவையும் அதே மனநிலைக்கு கொண்டுவந்திருந்தான்.
பெற்றோரிடம் வந்த இருவரும்,‘தங்களின் சம்மதத்தை அவர்கள் கேட்பார்கள்…!’ என எதிர்பார்த்திருக்க, ’போனீங்களா… பேசினீங்களா… அவ்வளவுதான் மேட்டர் முடிந்தது!’ என்ற நினைப்பில் இருந்த இவர்களின் பெற்றோர்களோ… இவர்களிடம் எதையும் கேட்காமல் ‘அடுத்து என்ன?’ என்று பேசத்தொடங்கிவிட்டனர்.
‘ஷப்பா..!நல்ல வேளை ஒன்னையும் கேக்கலை!’ என்ற ஆசுவாச மனநிலையில் ஹரி இதை ஏற்க,ப்ரியாவோ… ‘எப்படி இதை ஏற்க!’ என விழித்து ஹரியைப் பார்த்தாள்.
தன்னைப் பார்ப்பவளை பார்த்தவனுக்கும் அவளிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை! இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றிருந்தனர்.
அவர்களைப்போல காலம் நின்ற நிலையிலேயே நின்றுவிடுமா என்ன! அது தன் கடமையை திறம்படசெய்து, நிச்சயித்த கல்யாண நாளை கொண்டுவந்துவிட்டது.
அப்படியே அவர்களின் திருமணமும் இதோ இனிதே நிறைந்தேறியும் விட்டது.அந்த சந்தோஷத்தில் பெற்றோர்கள் ‘அப்பாடா!’ என நிம்மதிப் பெரும்மூச்சைவிட்டு ‘அக்காடா’ என்றமர,
இங்கே மணமக்களோ… ’இந்த திருமணத்தை பற்றிய ப்ரியாவின் மனநிலை எப்படியிருக்கிறது…?’ என்றறிய ஹரியும்,’முதலில் திருமணத்தை நிறுத்த சம்மதித்துவிட்டு,இப்போது அதை செய்துக்கொண்டிருக்கும் தன்னை பற்றி ஹரி என்ன நினைக்கிறான்!’ என்றறிய பிரியாவும் ஆவலுடனே ‘தங்களுக்கு எப்போது தனிமை கிடைக்கும்!’ என எதிர்பார்த்திருந்தனர்.
எப்படியோ இருவரும் தங்களையறியாமலேயே திருமணத்தில் தங்களின் விருப்பத்தைவிட தங்களின் துணையின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருந்தனர்.
திருமணத்திற்கு பிறகு நடக்கவேண்டிய சடங்குகள் அதுபாட்டிற்கு நீண்டுக்கொண்டே இருக்க,அதை எந்த ஒரு ஆர்வமுமின்றி மணமக்கள் கடமையே என செய்துக் கொண்டிருந்தனர்.
இப்போது ஹரிக்கு ‘திருமணம் வேண்டாம்!’ என்ற எண்ணம் மாறி,பிரியாவின் மேல் ஒரு ‘எண்ணம்’ வந்திருந்தது. தன்னிடம் வந்த மாற்றம் அவளிடமும் தெரிகிறதா… என இவன் அவளை ஆராய்ச்சிப் பார்வைப் பார்க்க,அவள் ‘என்ன நினைக்கிறாள்…?’ என்பதை அவளின் முகத்தை பார்த்தறிய அவனுக்கு அனுபவம் இன்னும் வரவில்லை.அது எப்போது அவனுக்கு வரும்? இல்லை… வரவே வராதா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *