Categories
Uncategorized ஷெண்பா

அத்தியாயம் – 3

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 3

காலை நேரத்தில் நவீனமும், பாரம்பரியமும் பின்னிப் பிணைந்த பழம்பெரும் நகரமான அகமதாபாத் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.

முதல் நாள் அலுவலகம் செல்லும் ஆர்வத்துடன் தயாராகி வந்தாள் சுமித்ரா.
“அம்மாவைக் கும்பிட்டுக்கோம்மா! மொபைல் எடுத்துகிட்டியா? எக்ஸ்ட்ரா பணம் எப்பவும் தனியா வச்சிக்க. உனக்குப் புரியாததை மத்தவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்க” என்ற தந்தையை வாஞ்சையுடன் பார்த்தாள் சுமித்ரா.

முறுவலுடன், “சரிங்கப்பா!” என்றாள்.

“அப்புறம்… அது நம்ம கிஷோரோட கம்பெனியா இருந்தாலும், எதையும் எதிர்பார்க்காதே. இதையெல்லாம் நான் சொல்லவேண்டியது இல்ல… இருந்தாலும்…” என்று தயங்கிய தந்தையின் கரத்தைப் பாசத்துடன் பற்றிக் கொண்டாள்.

“நீங்க எதுக்கு சொல்றீங்கன்னு புரியுதுப்பா! நான் கவனமா இருந்துக்கறேன்” என்ற மகளை திருப்தியுடன் பார்த்தார் கங்காதரன்.

“என்னம்மா காலைலயே புரொஃபசர் தன்னோட லெக்சரை ஆரம்பிச்சிட்டானா?” என கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் கேஷவ்நாத்.

“வாங்க அங்கிள்!” என்றாள் சுமித்ரா.

“வாடா! என்ன இன்னைக்கு கம்பெனிக்குப் போகாம மட்டமா?” கேட்டுக்கொண்டே நண்பனின் தோளில் கைபோட்டபடி சோஃபாவில் அமர்ந்தார் கங்காதரன்.

“மட்டமா! உன் தங்கச்சி என்னை ஓடவிட்டுடுவா…” என்று சிரித்தவர், “இன்னைக்கு என் மருமக ஆஃபிஸ்ல ஜாயின் பண்றா இல்லயா… என் அம்மாவுக்கு மட்டும் டிரைவர் வேலை பார்க்கறியே என் வருங்கால மனைவியையும் கூட்டிட்டு வான்னு என் மகனோட ஆர்டர்.” என்றார்.

அவர் சிரித்துக்கொண்டே சொன்னபோதும், சுமித்ராவிற்குச் சங்கடமாக இருந்தது.

“ஹய்யோ… சாரி அங்கிள்! என்னால உங்களுக்குச் சிரமம்” தவிப்புடன் சொன்னாள்.

“நீ எதுக்குடா சங்கடப்படுற? எங்க வீட்டுக் கிரஹலக்‌ஷ்மிடா நீ! என் செல்லப் பொண்ணுடா… உனக்கு நான் காரோட்டக்கூடாதா?” என்றார்.
கங்காதரன் மாமனார், மருமகளின் பாசப் பிணைப்பைப் பார்த்து இரசித்துச் சிரித்தார்.

“உங்க அப்பன் கண்ணு போட்டுட்டே இருக்கான். வா நாம சீக்கிரம் கிளம்புவோம்” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவரது கைப்பேசி ஒலித்தது.

“அவன்தான்” என்று இரகசியக் குரலில் சொன்னவர் போனை ஆன்செய்து, “ஆஹ்… இதோ கிளம்பிட்டேன் கிஷோர்!” எனப் பேசிக்கொண்டே, அவளைக் கிளம்பி வரும்படி செய்கை செய்துகொண்டே காரை நோக்கி நடந்தார்.

“கிளம்பறேன்ப்பா! ஃபுல்காவும், தால் ஃபரையும் கேஸரோல்ல வச்சிருக்கேன் சாப்ட்டுக்கோங்க. நான் லஞ்ச் டைம்ல கால் பண்றேன்ப்பா!” என்றவள் விடைபெற்றுக் கிளம்பினாள்.

கேசவனுடன் பேசிக்கொண்டே வந்ததில், அஹமதாபாத்திலிருந்த நரோடாவிலிருந்த அலுவலகத்தை வந்தடைய ஆன அரைமணி நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு.

அலுவலகத்தின் பின்பக்கமாகச் சென்று காரை நிறுத்திய கேசவன், அமைதியாக வா என்பதைப் போன்று செய்கை செய்தார்.

“குட்டிப் போட்ட பூனை இப்படியும் அப்படியுமா நடக்குமாமே பார்த்திருக்கியா?” என அவளைக் கேட்டார்.

“இல்லயே மாமா!” என்று கடமையாக பதில் சொன்னாள் அவள்.

“அப்போ, அங்கே பாரு…” என்று கிசுகிசுத்தார்.

முன்வாசல் வராண்டாவில் வாசலைப் பார்த்துக்கொண்டு பரபரப்புடன் நின்றுகொண்டிருந்த கிஷோரைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

“பாவம் அங்கிள் அவர் வெயிட் பண்றார் போலாமே…” என மகனின் அவஸ்தையை இரசித்துச் சிரித்த கேசவனிடம் சொன்னாள்.

“ம், மருமகளே நீ இங்கேயே நில்லு நான் சொல்லும்வரை உன் தலையைக் காட்டக்கூடாது” என்று கட்டளையாகச் சொல்லிவிட்டு மகனை நோக்கிச் சென்றார்.

“கிஷோர்! நீ இன்னும் ஆஃபிஸ் உள்ளேகூட போகாம இங்கேயே நின்னுட்டிருக்கியா?” எனக் கேட்டுக்கொண்டே அவனது கையிலிருந்த ப்ரீஃப்கேஸைப் பார்த்தார்.

“சுமிக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்ப்பா!” என்றவன் அப்போதுதான் நினைவு வந்தவனாக, “ஆமா, நீங்க எங்கே உள்ளேயிருந்து வரீங்க? சுமி எங்கே?” என்று படபடத்தான்.

“நாங்க வந்து பத்து நிமிஷமாச்சு. அவளை உள்ளே உட்கார வச்சிட்டு உன்னைக் காணோமேன்னு பார்க்க வந்தேன்…” என்றார்.

சந்தேகத்துடன் அவரைப் பார்த்தவன் ஒருமுறை சுற்றிலும் கண்களைச் சுழலவிட்டான்.

“என்னடா?”

“இல்ல, நான் வரும்போது உங்க கார் இங்கே இல்லையே…” எனக் கேட்டான்.

அவரும் சமாளிப்பாக, “நான் பேக் எண்ட்ரன்ஸ் வழியா வந்தேன்” என்றார்.

அவர் சொல்லச் சொல்ல, கிஷோரின் முகம் அஷ்டகோணலாகியது.

கடுப்புடன், “என்னப்பா நீங்க! காரியத்தையே கெடுத்தீங்க போங்க. சுமி நம்ம கம்பெனிக்கு முதன்முதல்ல வரும்போது அவளை வெல்கம் பண்ணணும்னு எவ்ளோ ஆசையா இருந்தேன்” என்ற மகனைச் சிரிப்புடன் பார்த்தார்.

மூன்று ஆண்டுகளாக தனியொருவனாக கம்பெனியைப் பொறுப்பெடுத்து நடத்திக் கொண்டிருப்பவன், சிறுகுழந்தையாக மாறி கோபித்துக் கொள்வதைக் கண்டு ரசித்துச் சிரித்தார்.

“இன்னமும் குழந்தையாவே இருக்கேடா கண்ணா! சுமியும் நானும் இப்போதான் வந்தோம்” என்றவர், “மருமகளே சீக்கிரமா வந்து உன் தரிசனத்தைக் கொடு…” என்றார்.

தந்தையின் வார்த்தைகள் உற்சாகத்தைக் கொடுக்க, தூணின் மறைவிலிருந்து வெளியில் வந்த சுமித்ராவை புன்னகையுடன் எதிர்கொண்டான்.

“வா சுமி!” என்றவன் அவளை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று முக்கியமான அலுவலர்களை அறிமுகம் செய்துவைத்தான்.

பின்பு அவளது கேபினுக்கு அழைத்துச் சென்றான்.

தன்னுடைய வாழ்த்தைச் சொன்ன கேஷவ்நாத், “கிஷோர் எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. கிளம்பறேன்” என்றவர், மகனின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

சிரித்துக்கொண்டே தலையைக் கோதிக்கொண்டவன் அவளெதிரில் டேபிள் மீது சாய்ந்தபடி அமர்ந்தான்.

சுமித்ரா இருக்கையிலிருந்து எழ முயல, “ஹேய்! நீ உட்காரு” என்றவன் டேபிள் மீதிருந்த ஸ்வீட்பாக்ஸை எடுத்து, “ஸ்வீட் எடுத்துக்கோ சுமி!” என்றான்.

“எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்றீங்க கிஷோர்! எனக்கு ஒரு மாதிரியிருக்கு…” என்று கிசுகிசுத்தவள், “மாமாவை எதுக்கு என்னைக் கூட்டிட்டு வர அனுப்பினீங்க. பாவம் அவர்… எனக்காக அவர் வண்டி ஓட்டணுமா? நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா?” எனக் கேட்டாள்.

“பின்னே, கிஷோரோட ஃபியான்சினா சும்மாவா… இந்தத் தொழில் சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாளப் போற மகாராஜாவோட, மகாராணியாச்சே நீ!” என்று சிரித்தான்.

”ம்க்கும்” என்று கிண்டலாகச் சொன்னவள், “நாளைலயிருந்து நான் நம்ம ஆஃபிஸ் கேப்லதான் வருவேன்” என்று கண்டிப்புடன் சொன்னாள்.

“என்ன விளையாடுறியா?”

“ஆமாம் அதுக்குத் தான் ஆஃபிஸுக்கு வந்திருக்கேன் பாருங்க…” என்று முணுமுணுத்தவள், “இதுக்கு சம்மதம்னா நான் வேலைக்கு வரேன். இல்லன்னா…” என்றவளை வேகமாக இடைமறித்தான்.

“ஹேய்! என்ன பிளாக்மெயில் பண்ற?”

“சீரியஸாவே சொல்றேன். மாமாவை காலைல வந்து பிக் அப் பண்ணச் சொல்றது. ஈவ்னிங் டிராப் பண்றேன்னு சொல்றதெல்லாம் இருக்கக்கூடாது. அதெல்லாம் கல்யாணத்துப் பிறகு தான். இப்போதைக்கு நான் சுமித்ரா கங்காதரனாக தான் இருப்பேன். புரிஞ்சதா…” என்றாள் கண்டிப்புடன்.

அவளை முறைத்துக்கொண்டே எழுந்தவன் இருகரங்களையும் பக்கவாட்டில் உயர்த்தி தோள்களைக் குலுக்கிக்கொண்டு, “முடிவு பண்ணிட்ட இனி என்ன சமாதானம் சொன்னாலும் கேட்கப்போறதில்ல. அப்புறம் என்ன? நடத்து நடத்து” என்றான் எரிச்சலுடன்.

“இதெல்லாம் கல்யாணம் ஆகறவரைக்கும் தானே…” என்றபடி அவனருகில் வந்து நின்றாள்.

கனிவான அவளது பார்வையும், குழைந்த குரலும் மையெழுதாமலே கருத்தடர்ந்த இமைகளும் அவனிடன் கொஞ்சிப் பேச, மெல்ல தனது இறுக்கம் களைந்து புன்னகைத்தான்.

“இப்படிப் பார்த்துப் பார்த்தே என்னை உன் கைக்குள்ள பொத்தி வச்சிகிட்டா…” என்றவன், “ஆனா, இன்னைக்கு ஈவ்னிங் உனக்கு ஒரு சின்ன பார்ட்டி கொடுக்கலாம்னு டேபிள்ளாம் புக் பண்ணிட்டேன். இதுக்கு மட்டும் உன்னோட ரெஸ்ட்ரிக்‌ஷனைக் கொஞ்சம் தளர்த்திக்கலாம் இல்ல…” என்றான்.

போலியாக அவனை முறைத்தவள், “சரி, ஆனா…” என்றவளை முந்திக்கொண்டு, “மாமாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்” என்றவனை விழிவிரியப் பார்த்தாள்.

“பார்வையெல்லாம் அப்புறம். இப்போதைக்கு ஒரு சின்ன ஸ்மைல் ப்ளீஸ்…” என்றவனைப் பார்த்துக் கலகலவென நகைத்தாள்.

“ஹப்பா! தப்பிச்சேன்…” என்று நிம்மதியாக மூச்சுவிட்டான்.

அந்த உயர்தர ஹோட்டலிற்கு அழைத்துச் சென்றான். வெய்ட்டர் கொண்டுவந்து வைத்த மெனு கார்டை அவள் கையிலெடுக்க, சட்டென பறித்தான் கிஷோர்.

“இது என்னோட ட்ரீர். சோ, நான்தான் ஆர்டர் கொடுப்பேன்” என்றவனை அமைதியாகப் பார்த்தாள்.

அவன் வரிசையாக அடுக்கிய உணவு வகைகளில் பாதி அவளுக்கு என்னவென்று கூட தெரியவில்லை.

“எதுக்குக் கிஷோர் இவ்ளோ டிஷ்ஷஸ்?”

“ஷ்! சாப்பிட மட்டும்தான் நீ வாயைத் திறக்கணும்” என்றான்.

பரிமாற வந்த வெய்ட்டரை அனுப்பிவிட்டு அவனே, அவளுக்குப் பரிமாறினான்.

இனிப்பை எடுத்தவன், அவளது வாயருகில் கொண்டு செல்ல, சுமி தயக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“எதுவும் சொல்லிடாதே சுமி… ப்ளீஸ்! இந்த ஸ்வீட்டோட டேஸ்ட் நம்ம நாக்குலயே தங்கிடுறது மாதிரி, நம்ம லைஃப் எப்பவும் இனிப்பாவே இருக்கணும்” என்றான்.

மெலிதாக முறுவலித்தவள் அவன் கொடுத்த இனிப்பை வாங்கிக்கொண்டாள்.
மலர்ந்த முகத்துடன் கிஷோர் வளவளத்துக்கொண்டே உண்ண ஆரம்பித்தான்.
அப்போதுதான் சுமித்ரா தனக்குப் பின்னால் யாரையோ எட்டிப்பார்ப்பதும், இவனிடம் பேசிக்கொண்டே உண்ணுவதையும் கவனித்தவன், “ஹேய்! யாரைப் பார்க்கற? தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?” எனக் கேட்டுக்கொண்டே திரும்ப முயன்றான்.

“கிஷோர் திரும்பாதீங்க…” என அவன் தாடையைப் பிடித்துத் திரும்பிப் பார்க்காமல் தடுத்தாள்.

அவன் சட்டென அவளது கரத்தை கன்னத்திலேயே அழுத்திக்கொள்ள, “ச்சூ… கி..ஷோர்” என்றவள் கையை வேகமாக இழுத்துக்கொண்டாள்.

அவளது அவஸ்தையை ரசித்தவன், அந்த ஸ்பரிசத்தால் எழுந்த சந்தோஷத்தையும் சேர்த்தே அனுபவித்தான்.

அதே மனநிலையுடன், “பின்னால யார் இருக்கா சுமி?” என்று கேட்டான்.

“ம்” என்று போலியாக முறைத்தவள், “ஒரு பொண்ணு…” என்றவள், “கிஷோர் அவள் இங்கே தான் வர்றா…” என்று அவள் சொல்லிமுடிக்கவும் அந்தப் பெண் அங்கே வந்து சேரவும் சரியாக இருந்தது.

அவன் அவளை நிமிர்ந்து பார்க்க, “நீ கிஷோர் தானே” என்றாள் அந்தப் பெண்.

“ஆமாம். நீங்… ஹேய்! ஆரூஷி…” என்றபடி எழுந்தவனை, “கிஷோர்!” என்று அவள் அணைத்துக் கொண்டாள்.

சட்டென அவளை விலக்கியவன், “உட்காரு…” என்று வழிவிட்டவன் சுமித்ராவைப் பார்த்தான்

அவளும் ஒருவித ஆர்வத்துடன் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அப்புறம், எப்படியிருக்க கிஷோர்?” என்றவள் கண்கள் இடுங்கச் சுமித்ராவைப் பார்த்தாள்.

“இவங்க…” என்று இழுத்தபடி அவனைப் பார்த்தாள்.

“ம்ம், கண்டுபிடியேன்” என்று அவளுக்குச் சவால்விட்டான்.

“உன்னோட பேமலி ஃப்ரெண்ட் சுமித்ரா!” என்றவளைப் பார்த்துத் தலையாட்டிச் சிரித்தான்.

“அடப்பாவி! உன்னோட லவ்ல நீ இவ்ளோ சீரியஸா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல…” என்றவள், சுமித்ராவின் பக்கமாகத் திரும்பினாள்.

“என்ன சுமி குழப்பமா இருக்கா. இவன் காலேஜ்ல படிக்கும்போது எப்போப்பாரு சுமி சுமின்னு உன்னைப் பத்தியே பேசிட்டிருப்பான். ஒரு லெவல்ல இவனைப் பார்த்தாலே நாங்கல்லாம் ஓட ஆரம்பிச்சோம்னா பார்த்துக்கோயேன்…” என்று கலகலத்தாள்.

சுமித்ராவின் உள்ளத்தில் பெருமிதமும், அன்பும் போட்டியிட அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
இருதோள்களையும் உயர்த்திப் புன்னகைத்தான்.

வந்தவள் அவனுடைய நம்பரை வாங்கிக்கொண்டு, இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு மீண்டும் அவனை லேசாக அணைத்து விடைபெற்றுக் கிளம்பினாள்.

புன்னகைத்தபடியே அமர்ந்தவள், கிஷோரைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன சார்? பார்வை ஏதோ கேள்வி கேட்குது?” என்றாள்.

“ம், உன் எதிர்ல ஒருத்தி என்னை உரிமையா கட்டிப்பிடிச்சிகிட்டா. என்கிட்ட சிரிக்கச் சிரிக்கப் பேசறா. இதையெல்லாம் பார்த்து உனக்குக் கோபம் வரலையா?” எனக் கேட்டான்.

“எதுக்குக் கோபப்படணும்? அவள் உங்களோட படிச்சவ. ஃப்ரெண்ட்ஸ்… இதுல கோபப்படவும், பொறாமைப்படவும் என்ன இருக்கு? விகல்பம் இல்லாத நட்பை கொச்சைப்படுத்த நான் விரும்பல” என்றாள்.

“இதே உன்னோட இடத்துல நான் இருந்திருந்தா என்ன செய்திருப்பேன் தெரியுமா?” என்று கேட்டவனது முகம் இறுகியிருந்தது.

சுமித்ரா அவனது மாற்றத்திற்குக் காரணம் புரியாமல், சிறு பயத்துடன் பார்த்தாள்.

“உன்னை மாதிரி என்னால பிராட் மைண்டா யோசிக்கவோ, நடந்துக்கவோ முடியாது சுமி! என் முன்னால் உன்னை எவனாவது பார்த்தான் தீர்ந்தது அவன் கதை” என முகம் இறுகச் சொன்னவனைத் திகைப்புடன் பார்த்தாள்.
திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தவள், “இதுக்குப் பேர் காதல் இல்ல. பொசசிவ்னெஸ்…” என்றாள்.

“உன் பாஷைல என் காதலுக்குப் பேர் பொசசிவ்னெஸ்சாவே இருந்திட்டு போகட்டும். உன் விஷயத்தில் நான் ரொம்பவே பொசசிவ்தான்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவனை, ஒருவித பயத்துடனேயே பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *