Categories
Rajeswari Sivakumar Uncategorized

அத்தியாயம் – 4

Free Download WordPress Themes and plugins.

எபி 4
ஒருவழியாக திருமணம் நல்லபடியாக முடிந்து வந்தவர்களெல்லாம் திருப்தியாக விருந்துண்டு,மனநிறைவுடன் மண்டபத்தைவிட்டு மகிழ்ச்சியுடனே சென்றனர்.
அதன் பின் மண்டபத்தை காலி செய்து கிளம்பிய மணமக்களும் அவர்களின் குடும்பமும் முதலில் வந்தவாசிக்கு, மாப்பிளையின் பூர்வீக வீட்டிற்கு சென்று திரும்ப மாலையாகிவிட்டது.
காரில் பயணித்து வரும் போது ‘இப்பவே செம்ம டயர்ட்டா இருக்கு. இன்னும் வத்தலகுண்டுக்கு போகறதுக்குள்ள நான் நூடுல்ஸ் ஆயிடுவேனே…!’ என ஹரி நொந்துக்கொண்டிருக்கும் போதே கார் ஒரு குட்டி பங்களாவின் முன் நின்றது.’யார் வீடுடா இது!இன்னும் இங்கவேற பால்பழம் சாப்பிட்டுபோகனுமா?’ என சலித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கினான்.
அவன் உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே… அது பிரியாவின் வீடுதான் என்பதையும், அங்கே தான் அவர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு தங்கப் போகிறார்கள் என்பதையும் அவன் அறிந்துக் கொண்டான்.
சிறிது நேரம் அவனை,அங்கிருந்த அறைக்கு சென்று ரெஸ்ட் எடுக்க பிரியாவின் தந்தை சொல்ல, அவரிடம் ஒரு நன்றிப் பார்வையை செலுத்திவிட்டு உள்ளே சென்றான் ஹரி.
அவன் சென்ற அடுத்த நிமிடத்தில் அங்கு வந்த பிரியா,”உங்களுக்கு ஏதாவது வேணுமா?” எனத் தயக்கத்துடன் விசாரித்தாள்.
பெண் பார்க்க போனபோது பேசியதோடு சரி. அதன் பின் ஹரி பிரியாவிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அது என்ன எடுக்கவில்லைன்னு இழுக்கறது! எப்படி அவனால பேசமுடியும்? ரெண்டுப் பேரு பேசிக்கனும்னா ஒன்னு அவங்க நேர்ல சந்திக்கனும். கல்யாணப்பட்டு, நகை இதெல்லாம் எடுக்கும் போதும் அவன் வேலைக் காரணமாக அவனால் வரமுடியவில்லை.அதனால நேரடி பேச்சுவார்த்தைக்கு இங்க வழியில்லாம போச்சி. அடுத்து போன்ல கூட பேசிக்கலாம். ஆனா அதுக்கு போன் நம்பர் தெரிந்திருக்கனுமே. அதுதான் ஹரிக்கு தெரியாதே!
.அனைத்துக்கும் ஹரியை கலந்துக்கொள்ள சொல்லி தொல்லை செய்தால் அவன் முறுக்கிக்கொண்டால் என்ன செய்வது? என அஞ்சிய மல்லிம்மாவும் அவனை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை
.’எதை, எப்படி,என்ன கலர், எந்த டிசைன் இதையெல்லாம் இவங்க அவங்களுக்குள்ள பேசி முடிவெடுத்திருப்பாங்க. இப்ப இருக்கும் பசங்க தங்களுக்குள்ள நிச்சயம் முடிந்தப்பிறகும் பேசிக்காமையா இருப்பாங்க?அவன் எல்லாம் பிரியாகிட்ட பக்காவா பேசிட்டு இருப்பான்.அதனால தான் அங்க அவனும் அசட்டையா இருக்கான், அவன் இப்படி எல்லாத்துக்கும் வராதபோதும் இங்க பிரியாவும் மூஞ்சிய தூக்கி வச்சிக்காம நார்மலா இருக்கா. இந்த ஹரி கழுதை தான் எத்தனாச்சே! வாயாலேயே வடை சுட்டிருப்பான்.அதை இந்த அப்பாவி குட்டியும் ஆன்னு வாயத்திறந்து பார்த்திருக்கும்!’ என மல்லிம்மா தன் மகனின் சாமார்த்தியத்தை மனதில் எண்ணி பூரித்துப்போனார்.
உலக வரலாற்றில் முதல் முறையாக மருமகள, அப்பாவின்னு சொல்ற அப்பாவி மாமியார் மல்லிம்மாவா தான் இருப்பாங்க!
அந்த வீராதிவீரன் அவகிட்ட போன் நம்பரை வாங்கவே இல்லை, இந்த அழகுல எங்க இருந்து பேசறது? ஆனாலும் மல்லிம்மாக்கு அவங்க புள்ள மேல இம்புட்டு ஓவர் கான்ஃபிடென்ட் இருக்க கூடாதுப்பா!
பின்னாடி அவ நம்பர் தெரியாததால இந்த புள்ள முழிபிதுங்கி நிக்க போறது இந்த அம்மாக்கு தெரிந்தா என்னப் பண்ணுவாங்க?
பிரியா தன்னிடம் பேச தயங்குவதை பார்த்த ஹரி,”இல்ல, ஒன்னும் வேணாம்! நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கவேண்டியது தானே?” என சாதரணமாக பேசி அவளை பேச்சில் இணைத்தான்.
அப்போதும் அவள் ஒன்றும் பேசாது அவனை நிமிர்ந்து பார்ப்பதும், பின் தலைகுனிவதுமாய் இருக்க….
பொறுமை இழந்த ஹரி,”என்கிட்ட எதையாவது கேட்கனுமா?” எனப் பொறுமையாக கேட்க,
அதற்கு ஆமாம் என தலையாட்டிய பிரியா,”ஏன் நீங்க கல்யாணத்தை நிறுத்தவே இல்லை?” எனக் கேட்டு ஹரியை திகைக்க வைத்தாள்.
‘எனக்கு ஷாக் கொடுக்கறதே இவளுக்கு வேலையா போச்சு! வாய திறந்தாலே என்னை ஆஃப் பண்ணிடறா! என்ன இவ நான் கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு ஆசையா காத்துட்டு இருந்தாளா?இப்படி இவ ஏதாவது விபரீதமா ஆசைப்படுவான்னு தெரிந்து தான் நான் எதுக்கும் இவ பக்கம் தலைய காட்டாம தலைமறைவா இருந்தேன்.அப்படியும் இப்ப வந்து இப்படி கேட்டா நான் என்ன செய்றது?’ என கோபம் கொண்ட ஹரி,
“நான் ஏன் கல்யாணத்தை நிறுத்தனும்?உனக்கு பிடிக்கலைன்னா நீதானே அதை நிறுத்தியிருக்கனும்!” என்றான்.
அவனின் பதிலில் குழம்பிய பிரியா,”இல்ல… அன்னைக்கு உங்களுக்கு பிடிக்கலைன்னு சொன்னீங்கல்ல,அப்புறம் ஏன் நிறுத்தலை?” என்றாள்.
அவளின் குழப்பமுகத்தைப்பார்த்து “அன்னைக்கு நான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லவே இல்லையே!” என விஷமமாய் ஹரி சொல்ல,
அவனின் பேச்சால் விளைந்த கோபத்தை முகத்தில் காட்டி, ”கல்யாணம்… இப்ப… பண்ணிக்க… பிடிக்கலை….ன்னு சொன்னீங்க தானே!” என ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தத்தை கொடுத்து கேட்டாள் பிரியா!
அவளின் கோபத்தை ரசித்துக்கொண்டே ஹரி,”ஆமாம்… கல்யாணம்… இப்ப… பண்ணிக்க… பிடிக்கலை….ஆனா உன்னை… ரொம்ப… பிடிச்சியிருக்கு…ன்னு சொன்னேன் தானே!” என்று அவளைப்போலவே சொன்னான்.
‘மூஞ்சிய பாரு மூஞ்சுறு! அன்னைக்கு கல்யாணத்தை நிறுத்தனும்னு தலைக்கீழா நின்னுட்டு, இன்னைகென்னமோ காதல் மன்னன் ரேஞ்சுக்கு கதை அளக்குது!’
அதற்குமேல் அங்கிருக்க முடியாது, விலுக்கென்று எழுந்து பிரியா வெளியே செல்ல, அதை பார்த்து மனம்விட்டு சிரித்தான் ஹரி.அதுவரை அவனுக்கு இருந்த களைப்பு அவனைவிட்டு போய் புத்துணர்ச்சியாய் உணர்ந்தான்.
சிறிது நேரம் சென்றதும் வெளியே வந்தவனை வரவேற்று, தன்னருகில் அமரவைத்துக்கொண்ட தனம் பாட்டி, சற்று தொலைவில் இருந்த தன் பேத்தியை,”லக்ஷ்மி… தம்பிக்கு ஏதாவது வேணுமான்னு கேட்காம அங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என அழைக்க,
அங்கிருந்தே அவரை கனல் கக்கும் விழியால் முறைத்த பேத்தி அவ்விடம் விட்டு மறைய,அதை ஆச்சரியமாய் பார்த்த ஹரி, “ஏன் பாட்டி அவ உங்களை அப்படி முறைச்சிக்கிட்டு போறா?” எனக் கேட்டான்.
அவனின் கேள்வியால் வந்த சிரிப்புடன் “அந்தம்மாக்கு ‘நான் ‘லக்ஷ்மி’ன்னு கூப்பிடறது பிடிக்காது.அதுவும் உங்க முன்னாடி இப்ப அப்படி கூப்பிட்டேன்ல அதான் சிலுத்துக்கிட்டு போறா!” என்றார்.
‘ஓஓஒ… மேடம்க்கு அப்படிக் கூப்பிட்டா பிடிக்காதா! அப்ப இனி அவங்களை அப்படியே கூப்பிட்டிடலாம்!’ என நினைத்த ஹரி, ”எனக்கும் ‘லக்ஷ்மி’ தான் ரொம்ப பிடிச்சியிருக்கு பாட்டி. நல்லா மங்களகரமா இருக்கு! நானும் இனி அப்படியே கூப்பிடறேன்!” என சிரித்துக்கொண்டே சொன்னதை கேட்டதும்.ஏற்கனவே அவனின் அடக்கம்,அழகு, பெரியவர்களிடம் பேசும் விதம் எல்லாம் பார்த்து அவன் பக்கம் லேசாக சாய்ந்திருந்த பாட்டி இப்போது மொத்தமாய் சாய்ந்துவிட்டார்.அப்போதே அவனிடம் தன் பேத்தியை பற்றி சொல்லவேண்டியதை சொல்ல நினைத்த அவர்,
“ஹரி! அவளுக்கு இன்னும் படிப்பு ஒரு மூனுமாசம் இருக்குப்பா! அவ அதை நல்லபடியா முடிக்க நீதான் உதவனும்.” என்றார்
‘ஹோ… அப்ப மேடம் என்கூட சென்னைக்கு வர மாட்டாங்களா? இங்கேயே இருந்து படிப்பை முடிக்க போறாங்களா? அப்ப ஃபாரின் போகும்போதுதான் கூட வருவாங்களோ? அப்படி என்ன அப்பாடக்கர் படிப்பை இந்த மேடம் படிக்கறாங்க!’ என நக்கலாய் நினைத்ததை மறைத்து பாட்டியிடம்,
“அந்த மூனுமாசமும் அவ எங்க இருக்கனும்னு நினைக்கிறாளோ அங்கேயே இருந்து படிக்கட்டும் பாட்டி! எனக்கொன்னும் பிரச்சனை இல்லை. நான் எந்த தொல்லையும் பண்ணமாட்டேன்.” என பெருந்தன்மையாய் ‘பெரியமனுஷன்’ ஹரி சொன்னான்.,
அதைக்கேட்ட பாட்டி, பிரியா இப்போது ஹாஸ்டலில் தங்கிப்படித்துகொண்டிருப்பதை போல இனியும் அப்படியே இருக்க சொல்கிறான் எனத்தவறாக நினைத்து, ’கல்யாணம் பண்ணியும் பொண்டாட்டி படிப்பு கெடக்கூடாதுன்னு இப்படி சொல்றான்.எவ்வளவு நல்ல மனசு பாரேன் இந்த பையனுக்கு!’ என அகமகிழ்ந்துப் போனார்.
“அதெல்லாம் வேணாம்ப்பா! அவ உங்க வீட்டில இருந்தே காலேஜுக்கு போயிட்டு வரட்டும்.” என்று சொன்னதும்,’சென்னையில இருந்து டெய்லியும் வத்தலகுண்டுக்கு போயிட்டு வரமுடியுமா?’ என இவன் அதிசயித்துக்கொண்டிருக்கும் போதே…
பாட்டி அடுத்து சொன்ன, ”.உங்க வீட்டில இருந்தும் காலேஜு பக்கம் தானே! அவ ஆறுமாசமா தானே ஹாஸ்டலில் இருக்கா.அதுக்கு முன்னாடி வரைக்கும் இங்க இருந்துதானே போயிட்டிருந்தா.அதனால அவளுக்கு இங்க வழியெல்லாம் நல்லா தெரியும்!” என்றதை கேட்டதும் முதலில் ஒன்றும் புரியாது விழித்தான்.
பிறகு,அவரிடம் மேற்கொண்டு பேச்சை வளர்த்து, பிரியாவின் ஊர் வத்தலகுண்டு இல்லை என்பதையும்,அவளின் அப்பாவிற்கு ட்ரான்ஸ்பர் ஆறு மாதம் முன் கிடைத்ததால், அந்த ஊருக்கு மாறியிருக்கிறார்கள் என்பதையும்,அவள் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான் என்பதையும் அறிந்துக் கொண்டான்.
‘சென்னையில பிறந்து வளர்ந்தவள போய் நான் ‘பட்டிக்காடு’ன்னு எவ்வளவு கேவலமா மனசுக்குள்ள கிண்டல் பண்ணிட்டிருந்தேன்!’ என நொந்தான்.
அவனின் நினைப்பு எதையும் அறியாத பாட்டி, “அப்புறம் அவ உன்கூட வெளிநாட்டுக்கு வந்துட்டா அங்கயும் மேல்படிப்பு படிக்க நீதான்ப்பா ஏற்பாடு பண்ணிக்கொடுக்கனும்.அது அவளோட ரொம்பநாள் ஆசைப்பா.” என்று அவரின் அடுத்த கோரிக்கையை வைத்தார்.
‘இப்ப என்ன படிக்கறான்னே தெரியல!இதுல மேற்படிப்புக்கு நான் எங்க ஏற்பாடு பண்றது’ என மனதினுள் நினைத்த ஹரி, “கண்டிப்பா செய்றேன் பாட்டி.அது என்னோட கடமை!” எனக் கூறி பாட்டியின் மொத்த அன்புக்கும் பாத்திரமானான்.
‘இப்போது பிரியா என்னப்படிக்கிறாள் என்பதை யாரைகேட்டால் அறிந்துக்கொள்ளலாம்…’ என யோசித்த ஹரியின் நினைவில் அவனன்னை வந்தார்.’
இந்த அம்மாக்கு இது தெரிந்து என்கிட்ட சொல்லாம விளையாடினாங்களா… இல்ல அவங்களும் இதை சரியா விசாரிக்கலையா? இல்ல… இருக்காதே..! மல்லிம்மா அப்படி எதையும் அரைகுறையா செய்யமாட்டாங்களே…!’ என யோசித்துக்கொண்டே தன் அன்னையிடம் சென்று,
ம்மா… ப்ரியாக்கு சொந்த ஊரு வத்தலகுண்டு இல்லையாம்.!” என்று ஏதோ பெரிய ரகசியத்தை தன் தாயிடம் பகிர்ந்துக்கொள்ளும் தொனியில் சொன்னான்.
அப்படி சொன்னவனை அரைலூசைப் பார்ப்பதைப்போல பார்த்து,“உனக்கு சொன்னதே நான் தானேடா.அதை ஏன் என்கிட்ட இப்ப திருப்பி சொல்ற?’ எனப் புரியாது மகனை கேட்க,
“ம்மா! நீ எப்பம்மா சொன்ன? பொண்ணு ஊரு ‘வத்தலகுண்டு’ன்னு ஒரு குண்டைதான் நீ எந்தலையில போட்ட.” என்று ஹரி எரிச்சல்பட்டான்.
“அன்னிக்கு வத்தலகுண்டுக்கு பொண்ணு பாக்க போகனும்ன்னு நான் சொன்னதும், நீ அரண்டுப்போய் ‘என்னது…!’ன்னு கேட்டியேடா.அப்ப பொண்ணைப் பத்தி எல்லாத்தையும் சொன்னேனே… அதை நீ கேட்கவேயில்லையா!” என அவனை விசாரிக்க,
இப்போது இவன் என்ன சொல்வான். எதை சொல்வான்! இவன் ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வைத்திருப்பது இப்போது இவனுக்கு நன்றாக தெரிகிறது.அதையெல்லாம் என்ன,எப்படி செய்து இவன் சரிசெய்ய முடியும்?
‘முடியுமா..?’. என்ற கேள்விக்கே இடமில்லை முடியும்! முடிய வேண்டும்! அதுவும் ஃபாரினுக்கு கிளம்புவதற்குள் எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும்!’ என முடிவெடுத்த ஹரி,
“இல்ல-ம்மா! அப்ப சரியா கவனிக்கலை.இப்ப அவளைப் பத்தி, அவ படிப்பை பத்தி எல்லாத்தையும் சொல்லேன்.எனக்கு என்னமோ அவளைப்பற்றிய எல்லாத்தையும் தெரிந்துக்கனும்னு ஆசையா இருக்கு!” என்றதும்,அவனை உற்றுப்பார்த்தார் மல்லிகா.
’அப்ப பிரியா இவன் கிட்ட எதையும் சொல்லலையா…? பாவம் அதுவே வாயில்லா பூச்சு! அதை எங்க இவன் பேசவிட்டிருக்க போறான்! இவன் தான் வாயத்திறந்தா எதிர்க்க இருக்கறவங்கள பேசவே விடமாட்டானே! எப்படியோ இவன் தேவையில்லாது பிடிச்சி தொங்கிட்டிருந்த பிடிவாதத்தை விட்டு, மனம் தெளிந்துட்டான்! இனி அவன் வாழ்க்கையை அவனே பார்த்துக்குவான்!’ என மகிழ்ந்து தன் மருமகளை பற்றி பெருமை பேசத் தொடங்கினார்.
கிண்டியில் உள்ள பல்கலைகழகத்தில்,அவரின் மருமகள் பி.ஆர்க். படிப்பதாகவும், அவள் தான் அந்த பிரிவில் டாப்பர் என்றும் சொன்னதோடு விடாமல்,அடுத்து “அவ” என்று ஆரம்பித்து சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற பெண்கள் பள்ளியின் பெயரை சொல்லி அங்க படிக்கும் போது ஸ்கூல் டாப்பரா வந்ததாகவும், இப்போதும் மேற்படிப்புக்காக பாதி ‘ஸ்காலர்ஷிப்’ கிடைத்திருப்பதாகவும் சொல்லி பூரித்துப்போனார்.
‘ஆ…ஹா! பார்ட்டி நிஜமாவே ‘அப்பாடக்கர்’ தான்டா! நம்மைவிட கில்லியா இருப்பா போல இருக்கே! அய்யோ… எனக்குன்னு எங்கம்மா ஒரு முத்தை தேடித்தேடிக் கண்டுபிடிச்சிக்கொடுத்தா… நான் அதன் அருமை தெரியாம செய்து வச்ச சொதப்பல் எல்லாத்தையும் சரிபண்றதுக்குள்ள எனக்கு முப்பத்தஞ்சு வயசாயிடும் போல இருக்கே!’
‘அய்யோ… ஹரி…!உன்னோட ஜாதகம் நிஜம்தான் போலிருக்குடா! அடக்கடவுளே…! எங்கம்மா அவசர அவசரமா கல்யாணம் பண்ணது வேஸ்ட்டா போய்டுமா? நான் செய்த சிக்கலை எப்படி சரிபண்ணன்னு யோசிச்சே என்னோட எனெர்ஜி எல்லாம் தீர்ந்துடும் போல இருக்கு!இதுல நான் எங்க பஸ்ட் நைட்..ஹனிமூன்னு செலிப்ரேட் பண்றது!‘ எனத்தனக்குள்ளே புலம்பிக்கொண்டிருந்தான் ஹரி.
இவனின் புலம்பலை பொறுக்காத மாலை பின்னங்கால் பிடரியில் பட ஓடி மறைய, இதேதையும் அறியாத இரவோ அமர்களமாய் வந்திறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *