Categories
Uncategorized ஷெண்பா

அத்தியாயம் – 4

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 4
“ஐ டோண்ட் ஹேவ் எனி எக்ஸ்ப்ளனேஷன்ஸ்… உங்களையெல்லாம் நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கோம். நீங்க என்னன்னா… கார்கோல போற ஸ்டாக்குக்கு இன்ஷியூரன்ஸ் அமௌண்ட் போடச்சொன்னா… இப்படி உண்மை விளம்பி மாதிரி, இருக்கற அமௌண்ட்டுக்கு அப்படியே போட்டிருக்கீங்க…” கோபத்துடன் கையிலிருந்த ஃபைலை டேபிள் மீது வீசினான் விஜயமித்ரன்.

“நானும் கவனிக்காமவிட்டிருந்தா இப்படியே கன்ஸைன்மெண்டை அனுப்பியிருப்பீங்க இல்ல…” என்றவனை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

“இது அந்த நாட்டுக்குப் போய் இறங்கினதும் இருநூறு பர்சண்ட், முன்னூறு பர்சண்டுக்கும் கஸ்டம்ஸ் டியூட்டி போடுவான். அப்புறம், நம்ம புது ப்ராடெக்ட நஷ்டத்துக்கு வித்துட்டு வரணும். நம்மளோட டார்கெட் அந்த ஊர் மார்க்கெட் தான்.

மெல்ல மெல்ல நாம காலை ஊனியதுக்குப் பிறகு, விலையை ஏத்தினாலும் பிரச்சனை இருக்காது. ஆனா, விக்கிற விலைக்குக் கொஞ்சமும் குறையாம நம்ம பிராடெக்டோட க்வாலிட்டியும் இருக்கணும்” கோபத்துடன் ஆரம்பித்தவன், நிதானமாக பிசினஸ் சூட்சுமத்தைச் சொல்லி முடித்தான்.

“சாரி சார்! இனி, இப்படிக் கவனக்குறைவா எதுவும் நடக்காது” என்று அங்கிருந்தவர்கள் சொன்ன பிறகே, சற்று சமாதானமானான்.

“ஓகே… இன்ஷியூரஸ் அமௌண்ட் ப்ளேஸ் பண்ணி கன்சைன்மெண்டை கிளியர் பண்ணி அனுப்புங்க…” என்றவன் அத்தனை வேலைகளும் முடியும்வரை குடோனிலேயே இருந்தான்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அவன் மதிய உணவிற்கு வந்து அமர்ந்த போது மணி நான்காகியிருந்தது.

விஜய்மித்ரன் ஜெய்பூரில் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸில் கோலோச்சிக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனமான காஞ்சிராம் (kanchiram) டிசைனர்ஸின் மேனேஜிங் டைரக்டர்.

சரியாக ஒருவருடத்திற்கு முன்பு தான் குர்காவுனில் ஆயத்த ஆடையகம் ஒன்றை நிறுவினான். ஆறே மாதத்தில் ஏற்றுமதி ஆடையக தொழில் நிறுவனங்களில் தன்னைப் பற்றி பேச வைத்தான்.

மூன்று தலைமுறைகளாக வட இந்தியாவின் பிரஜையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், தமிழ் மண்ணிற்கே உரிய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கடைபிடிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன்.

இருபத்தி எட்டு வயதாகியும், திருமணம் செய்துகொள் என்று அவனை நச்சரிக்காத சிவராமன், வித்யாவதியின் சீமந்தப் புத்திரன். இதில் அவனுக்குப் பெருமையும் உண்டு.

வேலை நேரத்தில் தெரியாத பசி இப்போது தனது வேலையைக் காட்ட, கையைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தவன் தனது செல்லை எடுத்தான்.

வழக்கம் போல அவனது அன்னையிடமிருந்து மூன்று மிஸ்டு கால்களும், தங்கையிடமிருந்து ஒரு குறுஞ்செய்தியும் அவனுக்காகக் காத்திருந்தன.

குறுஞ்செய்தியைப் படித்தவன் புன்னகைத்துக்கொண்டே போனை சைலண்ட் மோடிலிருந்து நார்மல் மோடிற்கு மாற்றினான்.

*************
“காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர்…
கண்ணுக்குள் நீதான்; கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால், நெஞ்சுக்குள் நீதான்”
காதில் ஹெட்போனுடன் கண்களை மூடி அமர்ந்திருந்த விஜயேந்திரன் உருகி உருகிப் பாடிக்கொண்டிருந்தான்.

எதிரில் திவானில் அமர்ந்திருந்த பவித்ரா, அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னானதோ ஏதானதோ சொல் சொல்…” அவன் உச்சஸ்தானியில் கத்த, பொறுமையிழந்து மடியிலிருந்த ரெக்கார்ட் நோட்டை மூடி பக்கத்தில் வைத்தாள்.

வேகமாக எழுந்து அவனருகில் வந்தவள், “டேய் இந்தர்! இப்போ நீ இந்தக் காட்டுக்கத்தலை நிறுத்தறியா இல்லயா…” என்றபடி அவனது காதிலிருந்த ஹெட்போனைப் பிடுங்கினாள்.

“எவ அவ…” என்றபடி கண்களைத் திறந்தவன், தலைவிரி கோலமாக கோபத்துடன் எதிரில் நின்றிருந்த தங்கையைப் பார்த்தான்.
“என்ன, இன்னைக்கு மேக்அப் போட மறந்துட்டியா? போய் முதல்ல போடு… எல்லோரும் என்னை மாதிரி தைரியசாலியா இருக்கமாட்டாங்க” என்றவன் ஹெட்போனை மீண்டும் காதில் சொருகினான்.

“டேய்! அண்ணன்னு பார்க்கமாட்டேன்… கொலைவெறியாகிடுவேன்” என்று பற்களைக் கடித்தவள், “ப்ளீஸ்டா! நாளைக்கு நான் ரெக்கார்ட் சப்மிட் பண்ணணும். என் உயிரை எடுக்காம பேசாம இரு. உன் ரூமுக்குப் போய்க் கதவை மூடிகிட்டு பாடுறங்கற பேர்ல கத்து, கதறு என்ன வேணா பண்ணேன்…” என்றாள் கெஞ்சலாக.

“என்னது கத்துறேனா? என்ன பாட்டு… என்ன லிரிக்ஸு, என்ன மாதிரி சிங்கர்… எதுவுமே தெரியாம…” என்றவன் வார்த்தைகள் கிடைக்காமல் வாயை முணுமுணுத்தவன், “ஆஹ்… கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை” என்றான்.

“ம், உன் மூஞ்சி. நான் கழுதைன்னா, நீ அண்ணன் கழுதைதானேடா!” என்றாள் கடுப்புடன்.

“ஏய்! வேணாம். என் வாயைக் கிளறாதே…” என்று குரலை உயர்த்தியவன், மெயின் கேட் திறக்கும் சப்தம் கேட்டதும், மாடியிலிருந்து எட்டிப் பார்த்தான்.

“ஆஹ்! பிதாஜி…” என்றவன் ஒரு காதில் தொங்கிக் கொண்டிருந்த ஹெட்போனை வேகமாக உருவி, பாக்கெட்டினுள்ளே திணித்தான்.

“இருடா! உன்னை அப்பாகிட்டயே போட்டுக்கொடுக்குறேன்” என்றவள், வேகமாக படியை நோக்கி நடந்தாள்.

“ஏய் பாவி!” என்றான் சப்தமாக.

சட்டென திரும்பி முறைத்தவள், “இதையும் சொல்றேன் இரு…” என்றபடி கீழே ஓடினாள்.
‘இந்த நாக்கு இருக்கே சமயத்துல காலவாரும்…’ என நினைத்துக்கொண்டு, “ஏய் பவி! செல்லம்…” என்றழைத்தவன், “பிசாசு! என்ன ஓட்டம் ஓடுது…” எனத் திட்டிக்கொண்டே அவளுக்குப் பின்னாலேயே ஓடினான்.

“அப்…பா!” என்று பவித்ரா அழைக்கும் முன்பே, “அப்பா! அண்ணா போன் பண்ணானா?” என்று முந்திக் கொண்டு கேட்டான் விஜயேந்திரன்.

‘உன்னை எனக்குத் தெரியாதாடா!’ என்பதைப் போன்ற பார்வையுடன், மகனைப் பார்த்தார் சிவராமன்.
“பேச்சை மாத்தறான்ப்பா… இவன் என்ன பண்ணான் தெரியுமா?” என்று முன்னால் வந்தாள் பவித்ரா.

“ஹப்பா! ஆரம்பிச்சாச்சா ரெண்டு பேரும். அவன் அதைப் பண்ணான்; இவள் இதைப் பண்ணாள்னு ரெண்டு பேரும் வந்தீங்க அவ்ளோதான்” என்ற மிரட்டலுடன் சோஃபாவில் அமர்ந்தார் வித்யாவதி.
தங்கையைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தபடி அன்னையின் அருகில் சென்று அமர்ந்தான்.

“ஷாப்பிங் முடிஞ்சுதாம்மா?” அக்கறையுடன் கேட்டான்.

“அதெல்லாம் இருக்கட்டும். உன் அண்ணன் பிஸ்னஸ் வேலையா இந்த ஊருக்கும், அந்த ஊருக்கும் அலையா அலையறான். அவனுக்கு ஹெல்பா போய்க் கம்பெனியைக் கவனிக்கலாமில்ல. இருபத்தி மூணு வயசாகுது. இன்னும் கொஞ்சமும் பொறுப்பு வரலைனா என்ன பண்றது?” சலிப்புடன் சொன்னார் சிவராமன்.

“கேட்டா… அண்ணாதான் கொஞ்ச நாளைக்கு ஃப்ரீயா இருக்கச் சொன்னான்னு கதை சொல்வான்ப்பா!” என்றபடி தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள்.

தந்தைக்குத் தெரியாமல், தங்கையைப் பார்த்துக் கண்களை உருட்டிக் காட்டினான்.

“அப்பா முறைக்கிறான்ப்பா!” என்று அவள் குற்றம் சொல்ல, “இல்லப்பா!” என்றான்.

அதற்குள் தொலைபேசி ஒலிக்க சிவராமனின் கவனம் அங்கே சென்றதும், எக்கி தங்கையின் மண்டையிலேயே குட்டினான் விஜயேந்திரன்.

“ஆஹ்!” என்று தலையைத் தடவிக்கொண்டாள் பவித்ரா.

“சொல்லுப்பா மித்ரன்! வேலையெல்லாம் முடிஞ்சதா?” கனிவுடன் மகனிடம் விசாரித்தவர், சற்றுநேரம் பேசிவிட்டு மனைவியிடம் போனைக் கொடுத்தார்.

“கண்ணா சாப்டியாப்பா?” என்ற அன்னையின் விசாரிப்பில் மனம் குளிர்ந்து போனான் மித்ரன்.

“ஆச்சும்மா! கொஞ்சம் வேலை பிஸி…”

“நீ போனை சைலண்ட்ல போட்டிருந்ததுமே தெரிஞ்சிகிட்டேன். வேலை டென்ஷன் இருக்கத்தான் செய்யும். நீ நேரத்துக்கு சாப்பிடு” என்றார்.

“சரிம்மா” என்று சிரித்தான்.

“எத்தனை மணிக்கு ஃப்ளைட்?”

“எட்டு மணிக்குமா. இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பிடுவேன்மா!”

“சரிப்பா! அஹமதாபாத் போய் சேர்ந்ததும் நைட் எந்த நேரமாயிருந்தாலும் எனக்குப் போன் பண்ணு. காலேஜ் அலுமினிக்கு உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வராங்களா?”

“வராங்கம்மா. முக்கியமா கங்காதரன் சாரைப் பார்க்கணும்னு தான் எல்லோரும் இருக்கற வேலையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டுக் கிளம்பறோம்” என்றான்.

“சரிப்பா! சாரை நாங்களும் விசாரிச்சோம்னு சொல்லு” என்றார்.

“கண்டிப்பா சொல்றேம்மா! குட்டி ராட்சஷி எங்கே?”

“இதோ இருக்கா… கொடுக்கறேன்” என்றவர், “தாத்தாவுக்குப் பேசிட்டியா?” எனக் கேட்டார்.

“இல்லம்மா! அடுத்து தாத்தாவுக்குத் தான் பேசணும். தாத்தா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரலையா?” எனக் கேட்டான்.

“அவர் இன்னும் உதய்பூர் வீட்லயிருந்தே கிளம்பல. அநேகமா, இன்னைக்கு அங்கேயே தங்கினாலும் தங்கிடலாம்னு நினைக்கிறேன். இல்லனா, இந்த நேரத்துக்கு அவர் கிளம்பி வந்திருப்பாரே. எங்களுக்குத் தான் இந்த வயசான காலத்துல அவரைத் தனியா விட பயமாயிருக்கு” எனச் சற்று கவலையுடன் சொன்னார் வித்யாவதி.

“ம், என்று கேட்டுக்கொண்டவன், “சரிம்மா நான் அவர்கிட்ட பேசறேன். தாத்தாவைப் பத்தித் தான் நமக்குத் தெரியுமே! அவர் சமாளிச்சிக்குவார். நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க” என்று சமாதானம் சொன்ன மகனிடம் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு மகளிடம் போனைக் கொடுத்தார்.

“ஹாய் அண்ணா! ஒரு வாரத்துக்கு உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என்று பாசமழை பொழிந்தாள்.

நகைத்தவன். “உன்னைப் போரடிக்காம வச்சிக்கத்தான், இந்தர் இருக்கானே… பொழுது போயிடாது உனக்கு” என்றான்.
“அவனைப் பத்திப் பேசாதீங்க. எல்லாம் உங்களாலதான். பாட்டுப் பாடுறேங்கற பேர்ல எங்க கழுத்தையெல்லாம் கத்தியே இல்லாம அறுக்கறான்” என்று அழாத குறையாகச் சொன்னாள்.
“ஹா ஹா… இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க… உன்னைக் கல்யாணம் செய்து அனுப்பிடுறோம். அப்புறம், நீ நிம்மதியா இருக்கலாம்” என்றான்.

“இந்தக் கதையெல்லாம் வேணாம். நான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேனே படிச்சீங்களா?”

”மெசேஜா… படிக்கலையே” என்று வேண்டுமென்றே சொன்னான்.

“ஓஹ் அப்போ நானே சொல்லிடுறேன். இந்த முறையாவது எங்க அண்ணன் கண்ணுக்கு எங்க அண்ணியைக் காட்டிடுன்னு கணேஷ்ஜீக்கு வேண்டிகிட்டிருக்கேன். நூத்தியெட்டு மோதகம் நானே செய்து, சாமிக்குப் படைக்கிறேன்னு லஞ்சம் கூட ஃபிக்ஸ் பண்ணிட்டேன்” என்று தீவிர பாவனையுடன் அவள் சொல்லியதைக் கேட்டு சிரித்தான் மித்ரன்.

“உன் கையால செய்து படைக்கிறியா? அப்போ விளங்கிடும். அதுக்காகவே இந்தப் பிரார்த்தனையை பிள்ளையார் பரிசீலனை பண்ணமாட்டாரே” என்று பின்னாலிருந்து குரல் கொடுத்தான் இந்தர்.

வாய்விட்டு நகைத்த மித்ரன், “ஹேய்! அவன் வெளியே எங்கேயும் போகலையா?” எனக் கேட்டான்.

“அப்படியே போயிட்டாலும்…” என்று நொடித்துக் கொண்டவள், போனை ஸ்பீக்கர் மோடிற்கு மாற்றினாள்.

“என்ன ப்ரோ! நீங்க ஊருக்குக் கிளம்பறதால போன் பண்ணுவீங்கன்னு தெரியும். அதான் வீட்லயே இருக்கேன்” என்றான் இந்தர்.

“சரிடா, நம்பிட்டேன். நீ ரொம்ப நல்லவன்தான்.”

“தப்பாச் சொல்லாதீங்க ப்ரோ! ரொம்ப ரொம்ப நல்லவன்னு சொல்லுங்க” என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.

“போதும்டா உன் பெருமை. நான் இல்லாதப்ப அப்பாகூட ஃபேக்டரிக்குப் போய் கொஞ்சநேரம் வாட்ச் பண்ணிட்டு வா” என்றான் கட்டளையாக.

“ஹும்! அப்பப்போ இப்படிக் கொஞ்சம் பிட்டுப் போடத்தெரியாம நல்லவனாவே இருக்கறதால தான், நம்மள மதிக்கவே மாட்டேங்கறாங்க” என்று வாய்விட்டுப் புலம்பினான்.
மனதிற்குள் சிரித்துக்கொண்ட மித்ரன், “டேய் நல்லவனே! எனக்கு டைம் ஆகுது. சொன்னதைக் கொஞ்சம் காதிலே ஏத்திக்கோ. என்ன!” என்றான்.

“டோண்ட் வொர்ரி. நான் பார்த்துக்கறேன். ஹேப்பி ஜர்னி!” என்றான் இந்தர்.

“தேங்க்யூடா! ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கால் பண்றேன்” என்று போனை அணைத்தான் மித்ரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *