Categories
Rajeswari Sivakumar Uncategorized

அத்தியாயம் – 5

Free Download WordPress Themes and plugins.

எபி 5
பூக்களால் அலங்கரிக்கப்பட்டு முதலிரவு அறைக்கே உண்டான விசேஷ அலங்காரம் ஏதுமின்றி சாதாரணமாக இருந்தது அந்த அறையும்,அங்கிருந்த கட்டிலும்.அதற்கு ஹரிதான் காரணம்.அவன் தான் இப்போதைக்கு அந்த காமெடி சீன்களை எல்லாம் அரங்கேற்ற வேண்டாமென சொல்லி தடுத்திருந்தான்.
அப்படி அவன் சொன்னது இருவரின் பெற்றோருக்கும் சரியாகப் படவே,அவர்களில் வாழ்க்கையை எப்படி…எப்போது ஆரம்பிப்பது என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என எண்ணி ஹரியின் போக்குக்கே விட்டுவிட்டனர்.
அவன் என்னதான் சொன்னாலும் முறையென்ற ஒன்று உண்டுதானே!அதனால் அவனிருக்கும் அறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரியா,கட்டிலில் அமர்ந்து கைபேசியை நொண்டிக்கொண்டிருந்த ஹரியின் முன் வந்து நின்றாள்.
வந்து ஐந்து நிமிடங்கள் சென்றபின்பும் ஒன்றும் பேசாது, அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த அவளை பார்க்கும் போது ஹரிக்கு, ஆசிரியரிடம் தண்டனையை எதிர்ப்பார்த்து காத்து நிற்கும் மாணவியை போலவே தெரிந்தது.அதனால் வந்த புன்னகையை முகத்திலேந்தி,
“ஹலோ மேடம்! நான் என்னதான் அவ்வ்வ்வளவு அழகுன்னாலும் இப்படியா கண்கொட்டாம என்னையே பார்த்துகிட்டு நிக்கறது! எனக்கு ஒரே ஷையா இருக்குது!” என்று ஓவராக வெட்கப்பட்டான்.
கண்டநாள் முதல் இன்றுவரை அவனை புரிந்து கொள்ளமுடியாமல் விழிபிதுங்கி நின்ற பிரியா இப்போதும் அப்படியே நின்றாள்.
விழி வெளியே வந்துவிழுந்துவிடுவதை போல விழித்து கொண்டிருந்த பிரியாவை பார்த்ததும் அடக்க நினைத்தும் முடியாமல் அட்டகாசமாய் சிரித்தான் ஹரி.
“லக்ஸ்… மீ… என்ன ஆச்சு?” என இவன் கேட்டதும் சற்று தெளிந்த பிரியா அவனை முறைத்து,
“என்னை பிரியான்னு சொல்லுங்க!” என்றாள்.
அதற்கும் சிரித்த ஹரி,”அப்ப நீ என்னை ‘அத்தான்’னு சொல்றியா?” என்றான்.
இவன் எதுக்கு இப்ப இப்படி சொல்கிறான்… எனப் புரியாது பார்த்த ப்ரியாவிடம்,
“நான் ஆசைப்பட்டபடி உன்னால சொல்லமுடியாதில்ல, அதைப் போலத் தான் உன்னாசைப்படி எல்லாம் நான் உன்னைக் கூப்பிட முடியாது. எனக்கு இந்த ‘லக்ஸ்…மீ’ தான் பிடிச்சியிருக்கு. நான் அப்படிதான் உன்னை கூப்பிடுவேன்!” என சட்டமாக சொன்னான்.
அவனின் வம்படியால் கடுப்பான பிரியா,”அப்ப நானும் எனக்கு பிடிச்ச மாதிரி உங்களை கூப்பிடலாமா…?” எனக் கேட்க,
அவள் எங்கு வருகிறாள் என அறிந்த ஹரி,”ம். கூப்பிட்டுக்கோ! ஆடு,மாடு,நாய்,பேய், கழுதை… இதுக்கெல்லாம் பொண்டாட்டியா இருக்க உனக்கே… அப்ஜக்சன் இல்லாத போது… எனக்கென்னமா வந்தது!” என கூலாக சொன்னான்.
தான் நினைத்ததை கண்டுபிடித்ததோடல்லாமல்,அதை அசால்டாக செயல்படுத்தவிடாது தடுத்த ஹரியின் வாய்சாமார்த்தியத்தில் இவள் அசந்து போய் நின்றாள்.
“வாங்க.. மேடம்! வந்து உட்காருங்க.இதுக்கே இப்படி அசந்து போய் லுக்கு விட்டா மாமன்கிட்ட இருக்கும் மொத்த திறமையையும் பார்த்தா மயக்கம் போட்டு விழுந்துடுவீங்க போல இருக்கே!” என தன் பெருமையை பேசியதோடல்லாமல், அவளை தன் அருகில் அமரும்படி சைகை செய்தான்.
அவனின் சைகையை பார்த்து பொம்மைபோல நடந்துவந்து அருகமர்ந்த பிரியாவை பார்த்த ஹரி அவள் தன்னிடம் வாயாடினாலும் சூழ்நிலையின் தாக்கத்தால் இறுக்கமாக இருப்பதை உணர்ந்தான்.
இனி தன் வாழ்க்கை இவள்தான் என்பதில் ஐயம் சிறிதுமின்றி இவன் தெளிந்துவிடான்.’அத்தெளிவை அவளுக்கு கொடுப்பது தன் கடமை!’என எண்ணிய ஹரி, அதை நிறைவேற்றும் வேலையில் இறங்கினான்.
“லக்ஸ்… ஹேய் அப்படிப் பாக்காதப்பா! எனக்கு இந்த பெயர் ரொம்ப பிடிச்சியிருக்கு. நீ லக்ஸ் சோப்பு போல செம்ம லுக்கா இருக்கியா…, அப்புறம் அந்த சோப்பு விளம்பரத்துல வர ஆக்ட்ரஸ் போல அசத்தலா வேற இருக்கியா… அதனால அந்த பெயர்தான் உனக்கு செட்டாகுது. சோ நான் உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன். இனி நான் அப்படி கூப்பிடும்போது இந்த மாதிரி நீ சும்மா சும்மா லுக்கு விட்டா… மாமன் மயங்கி போய் சொல்ல வந்தத மறந்துடுவேன்.சோ நான் பேசவரும் போது நோ சைட் ஓகே!” என அட்டகாசம் செய்தான்.
நெடுநாள் பழகிய பிரெண்டை போல ஹரி தன்னிடம் பேசுவதை நம்ப முடியாது பிரியா தடுமாறி நின்றாள். இதில் அவளின் குற்றம் ஒன்றும் இல்லையே.
முதலில் கல்யாணத்தில் விருப்பமில்லை என்றான்…. பின்பு ‘உன்னை பிடித்திருக்கிறது!’ என்றான்… பிறகு ‘நாம் இருவரும் சேர்ந்து கல்யாணத்தை நிறுத்திவிடலாம்!’ என்றான்… அதன் பிறகு ஒன்றும் செய்யாமல் தாலியைக் கட்டி தன் வீட்டில் வந்து உட்கார்ந்துக்கொண்டு சட்டம் பேசிக்கொண்டிருக்கிறான்! இவனின் நிஜ முகம்தான் எது? முகத்தின் சொந்தக்காரனை தவிர யாரால் இதற்கு பதிலளிக்க முடியும்!
தான் இவ்வளவு கலாட்டா செய்தும் ஏதும் பேசாது தன்னையே கண்ணில் கலக்கத்துடன் பார்த்துக்கொன்டிருக்கும் பிரியாவை கண்டு தன் விளையாட்டை கைவிட்டு ஹரி, ”என்ன-டா! என்னத் தெரியனும் உனக்கு? என்னக்கேட்கனும்ன்னு நினைக்கறியோ அதை தைரியமா என்கிட்ட இப்ப இல்ல… எப்பவும் நீ கேட்கலாம்! அதுக்கு உனக்கு முழு உரிமை இருக்கு!” என்றான்.
இப்போதும் ஹரியின் உரிமைப் பேச்சில் குழம்பினாலும் அவனிடம் தான் கேட்க எண்ணியதை தைரியமாக,”ஏன் நீங்க கல்யாணத்தை நிறுத்தலை?”என்றதும், அவன் இடையே ஏதோ சொல்ல வரவும்,”ப்ளீஸ்… ஈவ்னிங் சொன்னதை போல கிண்டலா ஏதும் சொல்லாதீங்க.உங்களுக்கு வேணும்னா வாழ்க்கை விளையாட்டா இருக்கலாம். பட் எனக்கு அப்படி இல்லை.”
“எனக்கு முதல்ல கல்யாணம் இப்ப வேணுமான்னு ஒரு குழப்பம், அப்புறம் அதனால் வரும் பொறுப்புக்களை எல்லாம் என்னால சரியாய் ஹான்டில் பண்ணமுடியுமான்னு ஒரு பயம்,இது எல்லாத்துக்கும் மேல இனி எப்போதும் என்னோட இருக்கப்போகும் கணவர் என்னைப் பிடிச்சிதான் கல்யாணம் பண்ணாரா… இல்ல அவங்க அம்மா சொன்னாங்கன்னு செய்துகிட்டாரான்னு ஒரு தயக்கம்…”
“இப்படி நான் போராடிட்டு இருக்கும் போது இங்க வந்ததுல இருந்து நீங்க என்கிட்ட விளையாட்டா என்னென்னமோ பேசறதை எல்லாம் பாக்கும் போது உண்மையா சொல்றேன்… எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என தன் பயத்தை கண்களில் காட்டியவள்,
“நீங்க கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லியும் நான் அதை நிறுத்தலைன்னு என்மேல கோபமா இருக்கீங்களோ…?அதனால என்னை ஏதாவது இந்த சினிமா,கதையிலேல்லாம் வருவதை போல பழிவாங்கப்போறீங்களோ…?இனி என்னோட வாழ்க்கை எப்படி போகப் போகுது!’ இப்படி ஏதேதோ எண்ணமெல்லாம் வந்து எனக்கு ரொம்ப பயமா இருக்கு!” எனத் தெளிவாக தன் எண்ணங்களை சொல்லி முடித்தாள்.
குழப்பம்,பயம் இருந்தாலும் தன் கலக்கத்தை தெளிவாக சொன்னவளைக் காண ஹரிக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது. இதைத்தானே… இந்த தெளிவைத் தானே தனக்கு வரப்போகிறவளிடம் அவன் எதிர்ப்பார்த்தது!
தான் எதிர்ப்பார்த்தது தனக்கு கிடைத்துவிட்டது என தான் மகிழ்ச்சியாய் இருப்பதைப்போல இவளும் அப்படி இருக்கவேண்டாமா! தன்னுடன் இணைந்த முதல் நாளே அவள் தன்னைப் பற்றிய குழப்பத்தில் இருப்பதை விரும்பாத ஹரி, முன்பு ஏன் அப்படி நடந்துக்கொண்டான்… என்பதை அவளுக்கு விளக்க ஆரம்பித்தான்.
“ஹேய்…லக்ஸ் பேபி! நீ உன்னோட மாமனை ‘ஆன்ட்டி ஹீரோ’ ரேஞ்சுக்கெல்லாம் ஓவரா பில்டப் பண்ணிகாதம்மா! நான் உன்னோட ‘ரொமாண்டிக் ஹீரோ!’ அதுவும் உன்கூட மட்டும் தான் ‘டுயட் பர்ஃபாமான்ஸ்’ பண்ணுவேன்னு சபதம் எடுத்திருக்கும் ‘கலியுகராமன்’. என்னைபோய் நீ பழி வாங்கப்போறியான்னு கேட்டுடியே பேபி… கேட்டுடியே!” என முதலில் தான் அவளுக்கு யாராக இருக்க ஆசைப்படுகிறான் என்பதை சொன்னான்.அதைகேட்டவளின் உதட்டில், தானாக புன்னைகை வந்துஒட்டிக்கொண்டது. அதைப்பார்த்தவன்,
“சின்ன வயசுல இருந்தே எனக்கு என்ன வேணும்னு எங்கம்மா எனக்காக பாத்து பாத்து செய்வாங்க.அப்ப பெரியவிஷயமா தெரியாதது,நான் வளர்ந்ததும் அவங்க ஏதோ என்னை ‘டாமினேட்’ பண்ணுவதைபோல தோண ஆரம்பிச்சது.அதனால அவங்க எது சொன்னாலும் அதை கேட்காம அவங்களை எதிர்த்து பேசி,அவங்களை அல்லாட விடறது என்னோட வழக்கமாயிட்டது.”
“நம்ம கல்யானவிஷயமும் அப்படித்தான் லக்ஸ்! முதலில் உண்மையாகவே எனக்கு இப்ப கல்யாணம் பண்ண விருப்பமில்லை. ஆன்சைட் வேலை முடித்து, இங்க வந்து செட்டில் ஆனதும் பண்ணிக்கலாம்ன்னு தான் ப்ளான்.ஆனா அம்மா என்னை கேட்காம அவசரமா நம்ம கல்யாணத்தை பிக்ஸ் பண்ணவே என்னோட ஈகோவ அவங்க சீண்டிவிட்டதை போல ஒரு எண்ணம்.”
“அதான் இங்க வந்து கல்யாணத்தை நிறுத்தனும்ன்ற எண்ணத்தில் வந்தேன்.ஆனா இங்க வந்து உன்னைபார்த்ததும் அந்த எண்ணம் மாறிப் போச்சு.’ஏன் இப்ப பண்ணிக்கிட்டா என்ன?’ன்னு எனக்கே தோண ஆரம்பிச்சிடுச்சு.அப்புறம் உன்கிட்ட பேசினதும் உனக்கு அவ்வளவா விருப்பம் இல்லைன்னு தெரிந்ததும் ‘சரி… ரெண்டு பேருக்கும் பிடிக்கலை,சோ நிறுத்திடலாம்’ன்னு நினைக்கும் போதே நான் எதையோ மிஸ் பண்ணப்போறேன்னு எனக்கு பீல் ஆக ஆரம்பிச்சது.”
“அதற்கேற்றார்போல நம்ம விருப்பத்தை ஏதும் கேட்காம அவங்க கல்யாணத்தை நடத்த மேற்கொண்டு ப்ளான் பண்ணதும், நான் ரொம்ப நிம்மதியா பீல் பண்ணேன்.ஆனா அங்க நான் பண்ண தப்பு என்னன்னா… நான் நினைத்ததை உன்கிட்ட சொல்லி உன்னோட குழப்பத்தை தெளிய வைக்காம விட்டது தான்.பட்டு நகை எடுக்க நானும் வந்திருந்தேன்னா உனக்கு என்மேல இப்படி ஒரு பயம் வந்திருக்காதுல்ல? தப்பு பண்ணிட்டேன்டா.ஸாரி!”
“உன்னை ரொம்ப பிடிச்சுபோனதாலதான்,உன்னை மிஸ் பண்ண விரும்பாம தான் இப்ப கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைன்னாலும் கல்யாணத்திற்கு நான் சம்மதித்தேன் லக்ஸ் பேபி!” என அவளுக்கு நீண்ட விளக்கத்தை தந்து,அவளின் பயத்தை போக்க நினைத்தான்.
அவனின் நீண்ட விளக்கம் கேட்டவள்‘அப்பாடா!’ என நிம்மதியாய் உணர்ந்தாள்.என்னதான் திருமணத்தில் இப்போதைக்கு ஆர்வமோ,ஆசையோ இல்லை என்றாலும் ‘தன்னுடைய கணவனுக்கு தான் பிடித்தவளாக இருக்கவேண்டும்!’ என்ற எண்ணம் எல்லா பெண்களுக்கும் பொதுவானது தானே!அவ்வெண்ணம் இவளுக்கும் இருக்கும் தானே?
“என்ன ‘லக்ஸ்-மீ’! நான் சொன்னதெல்லாம் புரிந்ததா? இனி என்னோட காலம் முழுவதுக்கும் எனக்கு நீ மட்டும் தான்.இதை நான் எப்பவோ பீல் பண்ணிட்டேன்.’உன்னை உயிரா நினைக்கிறேன்… உன்னை என் கண்ணுகுள்ள வச்சிப் பார்த்துப்பேன்…’ இப்படி எல்லாம் என்னால சொல்லவும் முடியாது,சொன்னதை செய்யவும் முடியாது.ஆனா… ‘நான் இல்லாம உன்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது!’ என்ற பீல்லை நிச்சயமா உனக்கு என்னால கொடுக்க முடியும். அதை அப்படியே உன்னை என்கிட்ட சொல்ல வைக்கவும் முடியும்!” என்று சவாலாக சொன்னான்.
அவனின் விளக்கத்தால் வந்த தெளிவுடன், சவாலை புன்னகையுடன் ஏற்ற பிரியா,” நானும் பாக்கறேன், எப்படி என்னை சொல்ல வைக்கபோறீங்கன்னு.” என்றாள்.
“பாரு!பாரு… நல்லா பாரு. இந்த நிமிஷத்துல இருந்து,என்னை நீ நல்லா ஒரு ஐந்து நிமிஷம் கண்ணசைக்காம பார்த்தாலே, என்னோட அழகுல மயங்கி… இப்பவே சொல்லிடுவ!” என அலட்டலுடன் ஹரி சொல்ல,
“ஓவர் கான்ஃபிடென்ஸ்! சரியான ‘செல்ப்டப்பா!’ என சிரித்தாள்.
“அது அப்படி இல்ல லக்ஸ்! இது சுயவிளம்பரம்! அதாவது.. ‘நமக்கு நாமே’ திட்டம். பெரிய பெரிய மல்டி நேஷனல் கம்பனி எல்லாம் அவங்களை பத்தி ‘அட்வர்டைஸ்’ பண்ணிக்கறதில்லையா…? தேர்தல்ல பெரிய பெரிய கட்சிகள் கூட அவங்கள பத்தி பெருமை பேசிக்குது. அதை போல தான் பேபி இதுவும். நம்மை பத்தி நாம தானே நாலு நல்ல விஷயத்தை எடுத்து சொல்லனும்! அப்பதானே மத்தவங்களுக்கு நம்மை பத்தி தெரியும்!” என இவன் வாய் ஓயாமல் பேசுவதை,அவள் வாயை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வாவ்… பேபி! இப்பவே என்னை பாக்க ஆரம்பிச்சாச்சா…! சூப்பர். நான் கூட உன்னை கவுக்க ஒரு ஒன் வீக் தேவைப்படும்ன்னு நினச்சேன்… ஆனா நீ மாமன் கிட்ட ஒரே நாளில் கவுந்திட்டியே… பேபி!” என ஹரி கலாய்க்க ஆரம்பித்ததும் ஆத்திரமாய் அவனை முறைத்த பிரியா,
”எனக்கு தூக்கம் வருது!” என்றாள் ஒரு முறைப்புடன்.
“தூங்கும்மா! தூங்கறதுக்கு கூடவா என்கிட்ட ‘பெர்மிஷன்’ கேப்ப? ஓஓஓ… பேபின்னு சொல்றதால நான் உன்னை தாலாட்டி, தூங்க பண்ணணும்னு ஆசைப்படறியா… அப்படி ஏதாவது ஆசை இருந்தா சொல்லு பேபி! சிறப்பா செய்திடலாம்!” என மேலும் வம்பிழுத்த ஹரியை ‘இவன் வாயை என்னப் பண்ணி மூடறது!’ என பிரியா பார்த்தாள்.
“ம்ஹும்… நோ.. பேபி! நோ… நாட் நவ்! அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்.இப்பவே அப்படியெல்லாம் யோசிக்காதே! எனக்கு வெக்கமா வருது” என சொல்லிக்கொண்டே தன் சட்டையின் நுனியை இவன் திருக,
‘அடப்பாவி! சும்மா பாத்ததற்கு வேறெதையோ கற்பனை பண்ணிக்கிட்டு என்னை கலவரப்படுத்தறானே…இவன் கிட்ட நான் மாட்டிகிட்டு என்னப் பாடுபடப்போறேனோ..’ என பிரியா திருதிருத்தாள்.
அவளின் முழியைப் பார்த்து சிரித்த ஹரி,”லக்ஸ் பேபி! நீ என்கிட்ட இல்ல,நான் தான் உன்கிட்ட வசமா மாட்டிகிட்டு பாடாபட்டுட்டு இருக்கேன்! போக போக அது உனக்கே தெரியவரும்! பார்த்த முதல் பார்வையிலேயே என்னை தடுமாறவைத்தவள் நீதான்… நீமட்டும்தான்!” என தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தவனை ஒன்றும் புரியாத பார்வைப் பார்த்த பிரியாவிடம்,உனக்கு கவிதை பிடிக்குமா?” என சம்மந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டான்.
‘எதுக்கு கேட்கிறான்…’ என யோசித்தபோதும், பிடிக்கும் என தலையாட்டினாள்.
வேண்டாமென விலகிப்போக இருந்தவனை,
ஒரே விழிவீச்சில் விலைப் பேசியவளே…
பண்டமாற்றுமுறை உனக்கு பழக்கமில்லையா?
ஏய்த்துவிட்டாள்…’ என்ற பழி வராதிருக்க,
எடுத்த என்னிதயத்திற்கு இணையாய்
உன் இதயத்தைக் கொடுத்துவிடு!
”என்னடா நான் சொல்ல வரது இப்பவும் உனக்கு புரியலையா?” எனக்கேட்டான்.
அதற்கு இல்லை என தலையாட்டியவளிடம்,
“வெறும் வார்த்தையில சொன்னாலும் புரியலை, கவிதை வரியில சொன்னாலும் புரியலை. வேற எப்படி புரிய வைக்கிறது?” என அவளை குறும்புப்பார்வை பார்த்துவைத்தான்.
அதில் அரண்டுப்போனவள், “ம்ம்ம்… இப்ப, இப்ப புரியுது!” என அவசரமாக சொன்னாள்.
அவளின் அவசர பதிலில் ஒரு மார்கமான பார்வைப் பார்த்து,“என்ன.. என்ன புரியுது லக்ஸ்?” என ஹரிக் கேட்க,
“நீங்க ஸ்கூல் ‘தமிழ் மீடியம்’ல படிச்சீங்கன்னு நல்லா புரியுது!” என ‘யுரேகா’ பாணியில் இவள் சொன்னதை, அவன் ஜொள்ளு விட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
‘இவ நமக்கு மேல நக்கல் பார்ட்டியா இருப்பா போல இருக்கே! ஹும்… அது நமக்கு நல்லதில்லையே… கொஞ்சம் மிரட்டி விடனும்’ என முடிவெடுத்து ஹரி “ம்ம்ம்… நான் சொல்லவந்தது இதில்லையே! லக்ஸ் பேபிக்கு தியரி புரியலைப் போல… நாம பிராக்டிகலா புரிய வைக்கவேண்டியதுதான்…” என சொல்லிக்கொண்டு அவளருகில்நெருங்க, அவள் மிரண்டுப்போய் பார்த்தாள்.
அப்பார்வையில் அப்படியே ‘ஹால்ட்’ ஆன ஹரி,’”ஊரையே கழுவி ஊத்தறவன் நான்! நீ என்னையே கலாய்க்கறியா? அதான் சும்மா மிரட்ட பக்கம் வந்தேன். அதுக்குள்ள நீ என்ன இப்படி பயந்துட்ட! நான் உனக்கு பிடிக்காத, உன்னோட அனுமதி இல்லாத எதையும்… எப்பவும் செய்யமாட்டேன்.இதை நீ என்னைக்கும் மறக்கவே கூடாது!” என மிக மென்மையாய் சொன்னவன்,
“நாம ரெண்டு பேரும் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி தானே கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம். அதையே இப்போவும் ப்ரோசீட் பண்ணலாம்.நமக்குள்ள நல்ல புரிதல் வரவரைக்கும் நாம எல்லாத்துக்கும் வெயிட் பண்ணுவோம். சோ…நீ வேற எதைப்பத்தியும் யோசிக்காம, நிம்மதியா தூங்கு. நம்மை பற்றி நாம தெரிந்துகொள்ள நமக்கு நிறையா டைம் இருக்கு. அதனால எல்லாத்தையும் நிதானமா யோசிச்சு செயல்ல காட்டுவோம். ஓகேவா பேபி!” என்றான்.
அவன் சொல்லவருவது புரிந்ததற்கு அடையாளமாய் பிரியா முகம் தெளிந்த ஒரு மலர்ச்சி புன்னகையுடன் தலையாட்டினாள். அம்மலர்ச்சி புன்னகை ஹரியின் முகத்திலும் மலர்ச்சியைக் கொண்டுவந்தது.
அறைக்குள் வந்த போது இருந்த பயம்,கலக்கம் எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது பிரியாவுக்கு.அதை சாமர்த்தியமாக செய்திருந்தான் அவளின் கணவன்.
எதிர்க்காலத்தைப்பற்றிய அவளின் பயம் போய், அதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் நிலைக்கு சில மணி நேரத்திலேயே வந்திருந்தாள் இவள்.’இவனோடு என்னால் காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்கமுடியும்’ என்ற நம்பிக்கையை இவளுக்கு தந்திருந்தான் ஹரி.அந்த நம்பிக்கையில் நிம்மதியாக கண்ணயர்ந்தாள் பிரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *