Categories
Uncategorized ஷெண்பா

அத்தியாயம் – 5

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 5

‘ஹப்பா! வேலை முடிந்தது. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் தந்தையுடன் செலவிடலாம் என்ற உற்சாகத்துடன் வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் சுமித்ரா.

அவளது கேபினைத் தட்டி எட்டிப் பார்த்தான் கிஷோர்.

“வாங்க…” என்று எழுந்தாள்.

“டார்லிங்! கிளம்பிட்டியா?” என்றான்.

அவனை முறைத்தவள், “டார்லிங்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை முறை சொல்றது” என்றாள்.

“மனசுல இருக்கறது வார்த்தையா வருது. விடேன்” என்றவன், “ஒரு அவசரவேலை… டிசைனர்ஸ் கிளம்பிட்டாங்க. அதனால நீதான் கொஞ்சம் முடிச்சிக்கொடுக்கணும்” என்றான்.

“அரைமணி நேரத்துக்கு முன்னால வரைக்கும் உங்களோட தானே உட்கார்ந்து வேலை பார்த்துட்டிருந்தேன். அப்போ எதுவும் சொல்லாம வீட்டுக்குக் கிளம்பற நேரத்துக்குச் சொல்றீங்க” என்று சற்று காட்டமாகக் கேட்டவள், “நீங்க வேணா ஸ்கெட்சைக் கொடுங்க. நான் வீட்ல ஒர்க் பண்ணிட்டு கொடுக்கறேன்” என்று தழைந்த குரலில் சொன்னாள்.

“அதுக்கு நேரமிருந்தா நான் டிசைனர்ஸ்கிட்டயே கொடுத்திருப்பேனே. இது ரொம்ப அர்ஜெண்ட் டாலி! ப்ளீஸ்” என்று கெஞ்சலாகச் சொன்னவனை எதுவும் சொல்லமுடியவில்லை.

நியாயமாக, அவன் கம்பெனி முதலாளி. தான் அவனிடம் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு தொழிலாளி.

அவன் சொல்வதை மறுப்பது சரியல்ல என்று நினைத்தவள், “சரி. அப்பாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு செய்றேன்” என்றாள்.
“தேங்க்யூ… தேங்க்யூ…” என்றவன் கையிலிருந்த டிசைனை அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

வேகமாகச் செய்தாலும், முடிந்த அளவிற்கு சிறப்பாகவே வேலையை முடித்துக் கொடுத்தாள். அப்போதே மணி ஏழாகியிருந்தது. அலுவலகத்திலிருந்த அத்தனைப் பேரும் கிளம்பியிருந்தனர்.

இன்னைக்கு ஆட்டோதான் என்று நினைத்துக்கொண்டே டிசைனை அவனிடம் கொடுத்தாள்.

“சூப்பர் சுமி!” என்றவன் அதைத் தனது ப்ரீஃப்கேஸில் வைத்துக்கொண்டான்.

“நேரமாகிடுச்சி… அப்பா வெயிட் பண்ணுவாங்க. கிளம்பறேன்” என்றவளை, “நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்” என்றதும், அவளுக்கும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

ஆனால், கார் வீட்டிற்குச் செல்லவேண்டிய வழியில் செல்லாமல் வேறு பாதையில் செல்ல, அவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

“மதியானமே அங்கிள்கிட்ட டின்னருக்குக் கூட்டிட்டுப் போய்ட்டுப் பத்திரமா கொண்டுவந்து விடுறேன்னு சொல்லிட்டேன்” என்றவனை எரிச்சலுடன் பார்த்தாள்.

அவளது முகமாறுதலைக் கவனித்து காரை ஓரமாக நிறுத்தியவன், அவளைச் சமாதானம் செய்வதற்குள் படாதபாடு பட்டுவிட்டான். கடைசியில் எட்டரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறேன் என்று உறுதியளித்த பின்பே சற்று அமைதியானாள்.

ஆனாலும், ‘தந்தையை இப்படித் தனியாக விட்டுவிட்டோமே!’ என்ற கவலை மனதிற்குள் எழாமல் இல்லை.

நிச்சயம் முடிந்த நாள் முதலாக அவனது வெளிப்படையான அன்பு, அவளுக்கு ஒருவித சோர்வையே கொடுத்தது. அவனது அதீதமான பாசமும், அதனால் எழும் நிகழ்வுகளும் ஏனோ அவளுக்கு இரசிக்கவே இல்லை.

தனது எல்லா சுதந்திரங்களிலும், அவன் மூக்கை நுழைப்பதாகவே பட்டது. அதிலும், இந்தப் பத்து நாள்களாக தான் அவனுடன் முழுதாக பழகும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டியிருக்கிறது. ‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கைமரம் ஏறித்தான் ஆகவேண்டும்’ என்ற பழமொழி நினைவிற்கு வர, மனத்திற்குள் எழுந்த கசப்பை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், அவளது மனநிலையை அறியாமல் பாடலொன்றை முணுமுணுத்தபடி காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் கிஷோர். சாலையை வெறித்துக்கொண்டிருந்த சுமித்ராவின் நினைவுகள் வெகுநாள்களுக்குப் பின் தனது சிறுபிராயத்தை நோக்கி விரைந்தன.

சிறு வயதிலிருந்து குடும்ப நண்பர்களாக இருந்தாலும், கிஷோரின் குடும்பத்தினருடன் சுமித்ரா பெரிதாக ஈடுபாட்டுடன் இருந்ததில்லை. மந்த்ராவின் ஆடம்பரமும், மிதுனாவின் ஆரவாரமுமே அதற்குப் பெரும் காரணம்.

கேசவனின் எதிரில் மந்த்ரா அமைதியாக இருந்தாலும், தனிமையில் சுமித்ராவை குத்தலாக ஏதேனும் சொல்வார். விருந்துகளில் அவள் ஆசையாக ஏதாவது சாப்பிட்டாலும், பஞ்சப் பராரி என்ற வார்த்தையை அவர் உபயோகிக்க தவறியதே இல்லை.

பரம்பரைப் பரம்பரையாக வெள்ளித்தட்டிலே சாப்பிட்டு, பட்டுப் பீதாம்பரத்தையே உடுத்துபவருக்கு, ஒரு ப்ரொஃபசரின் சராசரி வருமானத்தில் கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கும் சுமித்ராவின் நடுத்தர வாழ்க்கைமுறை பஞ்சப்பராரியாகத் தான் தெரிந்தது.

‘அவருக்குச் சற்றும் சளைத்தவள் இல்லை நான்’ என்பதை மிதுனாவும் தனது செயல்களில் பகிரங்கமாக வெளிப்படுத்துவாள். ஆனால், ஆரம்பத்திலிருந்தே கிஷோருக்கு அவள்மீது தனிப்பிரியம் இருக்கத்தான் செய்தது.

அவள் எதிலும் ஒட்டாமல் தனியாக இருந்தாலும் கிஷோர், அவளை வலிய தன்னுடன் அழைத்துச் சென்று விளையாடுவான். தான் சாப்பிடும்போது, அவளையும் அழைத்துச் செல்வான். கங்காதரனிடமும் பாசமாக இருப்பான்.

‘ஒருவேளை தனது தந்தையின் மீது அவன் காட்டிய பாசம்தான் அவனைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்க வைத்ததோ!’ என்று தோன்றியது. ‘எது எப்படியோ! இனி, தனது வாழ்க்கையில் இவன்தானே எல்லாம்!’ என்று முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டாள் சுமித்ரா.

காரை அந்த ரெஸ்டாரண்டின் முன்பாக நிறுத்தினான் கிஷோர். காரின் குலுக்கலில் சுயநினைவிற்கு வந்தவள், தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

“கிஷோர்! என்னை எட்டரை மணிக்கெல்லாம் வீட்ல விட்டுடுறேன்னு சொன்னீங்க. இப்பவே மணி ஏழரை ஆகுது” என்று விழிகளை உருட்டினாள்.

அவளது அகன்ற விழிகளில் தன்னைத் தொலைத்தவனாக, குறும்புச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
“அங்கிள்கிட்டக் கூட பர்மிஷன் கிடைக்குமான்னு தவிச்சதில்லை. ஆனா, உன்னைச் சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வர்றதுதான் பெரிய இம்சை” என்று போலியாகச் சலித்துக்கொண்டான்.

“இம்சையா! அப்போ, எதுக்கு இந்த இம்சையைக் கூட்டிட்டு வர்றீங்க?” என்று காட்டத்துடன் கேட்டாள்.

“என் மனசைக் கவர்ந்த அழகான இம்சையாச்சே” அவன் கிறக்கத்துடன் சொல்ல, இவளுக்கு அலுப்பாக இருந்தது.

“ஹலோ! இப்போ நாம காரை விட்டு இறங்கப்போறோமா இல்ல, இப்படியே உட்கார்ந்திருக்கறதா உத்தேசமா?” என்றாள்.

“உன்கிட்ட பேசிட்டிருக்கும்போது நான் என்ன நினைக்கறேன்னு எனக்கே புரியமாட்டேன்னுது.”

“இப்படியேயிருந்தா பைத்தியம்தான் பிடிக்கும்.”

“ஏற்கெனவே, பிடிச்சிருச்சே” பெருமூச்சுடன் நெஞ்சை நீவிக் கொண்டான்.

அவனது செய்கை எரிச்சலையும் மீறி புன்னகைக்க வைத்தது.

முறுவலை மறைத்தபடி, “நான் சொன்னது, எனக்கு” என்றபடி நெற்றியில் புரண்ட கூந்தல் கற்றையை ஒதுக்கினாள்.

அவளது பிறை போன்ற நெற்றியில், ‘முத்தமிட வேண்டும்’ என்றெழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கினான்.

“இதுக்கு மேல ஏதாவது பேசினா நீ டென்ஷன் ஆகிடுவ. முதல்ல நீ இறங்கு” என்றவன் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வந்தான்.

ரெஸ்டரண்டின் கதவைத் திறந்தவன், “லேடீஸ் பர்ஸ்ட்!” என்றான்.

அவனை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே, அவள் உள்ளே சென்றாள்.

இன்று நேற்றல்ல எப்போதுமே தன்னுடன் இணைந்து வராமல், தனக்குப் பின்னால் வருவதையும், எதிரில் இருந்தால் தான் வரும்போது வைத்தகண் வாங்காமல் பார்ப்பதையும், அவள்தான் கவனித்துக் கொண்டிருக்கிறாளே. இன்று கேட்டுவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.

வெளியே சாதாரணமாகத் தெரிந்த ரெஸ்டாரண்ட், உள்ளே ஆழ்கடலைப் போலத் தெரிந்தது. அந்த அறை முழுவதும் கண்ணாடியால் ஆனது. வெளியே தண்ணீர் நிரப்பி அதில் வண்ண வண்ண மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. ‘ஹோட்டல் ரியல் பொஸைடன்’ என்று சரியான பெயர் வைத்திருப்பதாக நினைத்தவள், மெல்லப் புன்னகைத்தாள்.

“சூப்பராயிருக்கு!” என்றாள்.

“இதென்ன பிரமாதம்! கல்யாணத்துக்குப் பிறகு, உண்மைலயே ஆழ்கடல் ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போறேன். மால்தீவ்ஸ்ல… நம்ம ஹனிமூன் அங்கேதான்” என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.

“ஷ்!” என்றவள் வெட்கத்துடன் புன்னகைத்தாள்.

“சிரிச்சா எவ்ளோ பியூட்டியா இருக்க. இதை விட்டுட்டு, அப்பப்போ முறைச்சா எப்படி?” என்று பாவமாகச் சொன்னான்.

“ம், நீங்கதானே இப்படியெல்லாம் பார்க்காத, பேசாதன்னு சொன்னீங்க” என்று அவனை மடக்கினாள்.

“நான் சொன்னது, வேற மீனிங்; நீ சொல்றது வேற மீனிங்ல” என்றான்.

“என்ன மீனிங்கோ!” என்றவள், “நான் உங்களை ஒண்ணு கேட்பேன். மழுப்பாம உண்மையைச் சொல்லணும்” என்றாள்.

“தங்கள் சித்தம். என் பாக்கியம்” என்றான்.

தன் மனத்திலிருந்ததை அப்படியே அவனிடம் கேட்டாள்.

சற்று நெளிந்தவன், “தனியா கூட்டிட்டுப் போய் உதைக்கமாட்டேன்னு சொல்லு” என்றான்.

குறுகுறுவெனப் பார்த்தவள், “அப்படியென்ன சொல்லப்போறீங்க?” எனக் கேட்டாள்.
“அது… நீ அன்னம் மாதிரி அசைந்து நடந்து வர்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பார்த்துகிட்டே இருக்கணும் போலயிருக்கும். ஒரு வகைல உன்னை முதல்ல இரசிக்க ஆரம்பிச்சது உன் நடையைப் பார்த்துத்தான்” என்று மென்குரலில் சொல்லிமுடித்தான்.

அவளுக்குத் தலையிலடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தாலும், மறுபுறம் சிரிப்பாக வர, அதை மறைக்காமல் வெளிப்படுத்தவும் செய்தாள்.

அவளது கிண்கிணிச் சிரிப்பை, ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் கிஷோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *