Categories
Uncategorized ஷெண்பா

அத்தியாயம் – 6

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 6

காரிலிருந்து இறங்கிய சுமித்ரா, “சரி, கிஷோர் மண்டே பார்க்கலாம்” என்று புன்னகைத்தாள்.

“என்னை இப்படியே அனுப்பிடலாம்னு பார்க்கறியா? காரை ஓரமா நிறுத்திட்டு வரேன். நீ உள்ளே போ” என்றான்.

அவள் தன்னை முறைப்பதைக் கண்டு, “ஹேய்! உண்மையா இப்போ எந்த உள்நோக்கத்தோடயும் சொல்லல” என்றான்.

சற்று சமாதானமானவள், பின்னாலேயே அடிமேல் அடிவைத்து வீட்டை நோக்கி நடந்தாள்.

“சுமி!” என்றவன் கலகலவென நகைக்க, ஒரே ஓட்டமாக ஓடினாள்.

காலிங்பெல்லை அழுத்தியவள் தந்தையை எதிர்பார்த்து காத்திருக்க, கதவைத் திறந்தவனைப் பார்த்துத் திகைத்தாள். தயக்கத்துடன் உள்ளே நுழைந்தவளது விழிகள் தந்தையைத் தேடின.

வியப்பில் புருவங்கள் மேலேற அவளைப் பார்த்தவன், திருதிருவென விழித்தவளைப் பார்த்து முறுவலித்தான்.

“என்ன மேடம்! நல்லாயிருக்கீங்களா?” என விசாரித்தான்.

அவனது முகமும், குரலும் பரிச்சயமாக இருந்தாலும், அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. “ம்” எனத் தலையை அசைத்தாள்.

“இன்னும் நீ மாறவே இல்லையா? எல்லாத்துக்கும் இதே தலையாட்டல் தானா!” எனச் சிரித்தான் விஜய்மித்ரன்.

‘இத்தனை உரிமையுடன் பேசும், இவன் யார்?’ என அவனைப் பற்றி அறிந்துகொள்ளும் பரபரப்புடன், “அப்…பா..!” என்றாள்.

உள் அறையிலிருந்து வந்த கங்காதரன், “கடைசியில நான் தோத்துப் போயிட்டேனா” சிரித்துக்கொண்டே கேட்டார்.

தன் அருகில் வந்து நின்ற மகளிடன், “எட்டு வருஷம் கழிச்சி பார்த்தாலும், உன்னை அடையாளம் கண்டுபிடிச்சிடுவான்னு நான் சொன்னேன். முடியாது சார்ன்னு அவன் சொன்னான். கடைசியில என் ஸ்டூடண்ட்கிட்ட நான் தோத்துப் போயிட்டேன்” என்றார் கங்காதரன்.

“நம்ம மேலேயும் தப்பிருக்கு சார்! மித்ராவுக்கு நாம ஒரு க்ளூவாவது கொடுத்திருக்கணும்” என்றான் அவன்.

அதுவரை மூளையின் எங்கோ ஒரு மூளையில் ஒளிந்திருந்த அவனது நினைவுகள், மித்ரா என்ற விளிப்பில் முன்னோக்கி விரைந்து வந்து அவனை அடையாளம் காட்டியது.

கண்கள் பளபளக்க, “வி..ஜ.ய்! விஜய்மித்ரன்!” என்று சிரித்தாள்.

“பார்த்தியா மித்ரன்! என் பொண்ணு அவ்ளோ சீக்கிரம் யாரையும் மறக்கமாட்டான்னு சொன்னேன் இல்ல” என்று சிரித்தார்.

சிரிப்புடன், “சார்! நான் க்ளூ கொடுத்தேன்” என்றான்.

“ஆமாம், உங்களைப் பார்த்துப் பேசியே வருஷக்கணக்காகுது. இதுல திடீர்னு முன்னால வந்து நின்னா, யாருக்கு அடையாளம் தெரியும்?” என்று புன்னகைத்தாள்.

போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தபடி உள்ளே வந்த கிஷோர், மித்ரனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சுமித்ராவைக் கண்கள் இடுங்கப் பார்த்தான்.

அவனைக் கவனித்துவிட்ட கங்காதரன், “வாப்பா கிஷோர்!” என்றழைத்தார்.

“ஹலோ அங்கிள்!” என்றவனது பார்வை மித்ரனின் மீதே இருந்தது.

நட்புறவுடன் பார்த்த மித்ரன், கிஷோரின் ஆராயும் பார்வையைக் கண்டதும் அவனைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“மித்ரன்! இந்த வீட்டோட வருங்கால மாப்பிள்ளை கிஷோர்!” என்று அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

“வாழ்த்துகள்!” என்று கையை நீட்டினான் மித்ரன்.

பட்டும்படாமலும் அவனது கரத்தைப் பிடித்துக் குலுக்கியவனது மொபைல் ஒலிக்க, “எக்ஸ்க்யூஸ்மீ!” என்றவன், எழுந்து சென்று பேசினான்.

“சரிப்பா! சரிப்பா!” என்று கேட்டுக்கொண்டவன், “அங்கிள்! அப்பா பேசணுமாம்” என்று போனை அவரிடம் கொடுத்தான்.

“இதோ வந்திடுறேன்” என்றபடி சுமி சமையலறைக்குச் செல்ல, கிஷோரும் அவளுக்குப் பின்னாலேயே சென்றான்.

இதையெல்லாம், கவனித்தும் கவனிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.

“சுமி! யார் இவன்?” என்றான்.

தண்ணீரைக் குடித்துவிட்டு, “அப்பாவோட ஸ்டூடண்ட்…” என்றாள்.

“அவனுக்கு இங்கே என்ன வேலை?” என எரிச்சலுடன் கேட்டான்.

“அப்பாவைப் பார்க்க வந்திருக்கார்” என்றாள் இலகுவாக.

“இந்த நேரத்துக்கு எதுக்கு இங்கே இருக்கான்?” என்று கேட்டவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“என்ன பேசறீங்க? அவர் தனியா உட்கார்ந்திருக்கார். நீங்க போங்க…” என்றவள் அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் தனது அறைக்குச் சென்றாள்.

“சுமி! சுமி!” என்றவன் தான் அழைத்தும் காதில் விழாதது போலச் செல்பவளைப் பார்த்துக் கோபத்துடன் சமையலறை மேடை மீது குத்தினான்.

“கிஷோர் இந்தாப்பா!” என்று மொபைலை அவனிடம் நீட்டியவர், “நாளைக்கு நாம நாலு பேரும் டின்னருக்குப் போகலாம்னு சொன்னான். எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. அதனால நீங்க மூணு பேரும் போய்ட்டு வந்திடுங்க. உன் அப்பாகிட்டயும் சொல்லிட்டேன்” என்றார்.

“சரி அங்கிள்” என்றான்.

“அப்புறம், ஏதோ முக்கியமான வேலையாம்… உன்னை உடனே கிளம்பி வரச்சொன்னான்” என்றார்.

‘இதற்குமேல் இங்கிருக்க முடியாது’ எனப் புரிந்துகொண்டவனாக, “சரி அங்கிள்! கிளம்பறேன்” என்றவன், அறையிலிருந்து வந்த சுமியிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அவன் கிளம்பிய பிறகு, “நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சாப்பா?” எனக் கேட்டாள்.

“இன்னும் இல்லடா” என்றார் கங்காதரன்.

“நான் பார்ட்டியில் சாப்டுட்டு தான் வந்தேன். சார் வராததால அவங்களைப் பார்க்க வந்தேன். நேரமாகுது நானும் கிளம்பறேன்” என்றான் மித்ரன்.
“அப்போ, அப்பா வந்திருந்தா நீங்க இந்தப் பக்கமே வந்திருக்கமாட்டீங்க” என்றாள்.

“ம்…” என்று இழுத்தவன், “அது உண்மைதான்” எனச் சிரித்தான்.

“அப்போ, பார்மாலிட்டிக்குத் தான் நான் வரும் வரைக்கும் இருந்திருக்கீங்க” என அவனிடம் கேட்டாள்.

சற்று யோசித்தவன், “இப்போ இதுக்கு உண்மையான பதிலைச் சொல்லணுமா! இல்ல உன்னை சாட்டிஸ்ஃபை பண்ணப் பொய்ச் சொல்லணுமா!” என்றான்.

“பார்த்தீங்களாப்பா! உங்க அருமை ஸ்டூடண்டை…” என்று தந்தையிடம் புகார் வாசித்தாள்.

வாய்விட்டு நகைத்த கங்காதரன், “உன்னைக் கலாட்டா பண்றான்ம்மா! வந்ததுமே உன்னை விசாரித்தான்” என்றார்.

“அந்தப் பயம் இருக்கட்டும்” என்றவள் இருவருக்கும் உணவு தயாரிக்கச் சென்றாள்.
வெஜிடபிள் குருமாவையும், சப்பாத்தியையும் ருசித்து உண்டவன், இரண்டு சப்பாத்தியுடன் எழுந்து கொண்டான்.
“போதும் மித்ரா! இப்பவே ஹெவியாகிடுச்சி. உனக்காகத்தான் சாப்பிட்டேன்” என்றவன் எழுந்து சென்று கையைக் கழுவிக்கொண்டு வந்தான்.

கங்காதரனும் உணவருந்திவிட்டு வர, இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டான்.

பின் சீட்டில் தலை சாய்த்து அமர்ந்திருந்த விஜய்மித்ரனுக்கு, முதன்முதலில் சுமித்ராவைச் சந்தித்த நாள் நினைவிற்கு வந்தது.

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு…

அந்த வருடம்தான் கங்காதரன், அந்தக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்திருந்தார். அந்தக் கல்லூரியில் தமிழும் ஒரு பாடம் என்பதால், அவரிடம் சில மாணவர்கள் தமிழ் கற்கவென வீட்டிற்கு வந்திருந்தனர். அதில் விஜய்மித்ரனும் ஒருவன்.

பிறப்பால் தமிழனாக இருந்தாலும், அவனுக்குத் தமிழ் பேச மட்டுமே தெரியும். அதனால், தமிழ் பயில்வதற்காக கங்காதரனின் வீட்டிற்கு வந்திருந்தான். அவளுக்குப் பத்துப் பதினோரு வயதிருக்கும். கன்னத்தில் கைவைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

எழுந்து அவளருகில் சென்றவன், “ஹாய் பார்பி!” என்று பிரியமுடன், அவளது கன்னத்தைத் தட்டினான்.

விழிகளை உயர்த்தி பார்த்தவள், “ஹாய்!” என்றாள்.

“ஏன் டல்லாயிருக்க?” எனக் கேட்டான்.

அவனது முகத்தையே பார்த்தவள், “உங்களுக்கு அம்மா இருக்காங்களா?” எனக் கேட்டாள்.

“ம், இருக்காங்களே” என்றான்.

“எங்கே இருக்காங்க?” எனக் கேட்டாள்.

அவனும் சிரித்துக்கொண்டே, “ஜெய்பூர்ல” என்றான்.
“எங்க அம்மா சாமிகிட்ட இருக்காங்க” என்றவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

“இன்னைக்கு எங்க அம்மாவுக்கு டெத் டே” என்ற அச் சிறுபெண்ணின் கண்கள் கண்ணீரைச் சிந்தின.

அவனுக்குப் பரிதாபமாக இருந்தாலும், “ஹேய் பார்பி! டோண்ட் வொர்ரி. உன் அம்மா சாமிகிட்ட இருந்தாலும், அங்கேயிருந்து உன்னைப் பார்த்துட்டே இருப்பாங்க. நீ சிரிச்சா சிரிப்பாங்க. நீ அழுதா, அவங்களும் அழுவாங்க. இங்கே உன் கண்ணை நான் துடைச்சிவிட்டேன். உங்க அம்மா அழுதா, யாரு துடைச்சிவிடுவாங்க?” எனக் கேட்டான்.

யோசித்தவள், “தெரியலையே…” என்றாள் பரிதாபமாக.

“பார்த்தியா உனக்குத் தெரியல. அதனால, நீ அழவேகூடாது. ஓகே” என்று தனது வலது கரத்தை அவளுக்கெதிரில் நீட்டினான்.

கண்களை உருட்டி, எங்கோ பார்த்தபடி யோசித்தவள், “ஓகே” என்று அவனது கரத்தில் அடித்தாள்.

“குட் கேர்ள்!” என்று அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “உன் பேர் என்ன?” எனக் கேட்டான்.
“சுமித்ரா!” என்றாள்.

“வாவ்! சூப்பர் பேரா இருக்கே. இனி, உன்னை நான் மித்ரான்னு கூப்பிடுவேன் ஓகே…”

“ஹய்யா! எங்க அம்மா என்னை மித்ரான்னு தான் கூப்பிடுவாங்களாம். நீங்களும் அப்படியே கூப்பிடுறீங்க” என்றாள் குதூகலத்துடன்.

“பார்த்தியா… உங்க அம்மாதான் என்னை, உனக்குப் ஃப்ரெண்டா அனுப்பியிருக்காங்க…” என்றவன், “என் பேர் என்ன தெரியுமா?” எனக் கேட்டான்.

“ம்ஹும்…” எனத் தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்தாள்.

“விஜய்மித்ரன். எல்லோரும் என்னை மித்ரன்னு கூப்பிடுவாங்க” என்றான்.

“அப்போ, நான் உங்களை விஜய்ன்னு கூப்பிடட்டுமா? எனக்கு அந்தப் பேர் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் உற்சாகத்துடன்.

சிரிப்புடன், “தாராளமா கூப்பிடு பார்பி!” என்றான்.
தனது அரிசிப் பற்கள் தெரிய அவள் நகைத்தது இப்போதும், அவனது கண்முன்னே தெரிந்தது.
கூடவே கிஷோரின் முகமும் நினைவில் வர, பெருமூச்சுடன் அவனது நினைவுகளை ஒதுக்கித் தள்ளினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *