Categories
Uncategorized ஷெண்பா

அத்தியாயம் – 7

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 7

“ஹலோ அங்கிள்!” என்ற கிஷோர் சாவியைச் சுழற்றிக் கொண்டே வந்து அவரருகில் அமர்ந்தான்.

வெளியில் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த கங்கதரன், “வாப்பா!” என்றவர், “சுமிம்மா, கிஷோர் வந்தாச்சு. நீ ரெடியா?” என்று குரல் கொடுத்தார்.

“வரேம்ப்பா!” என்றவள், “வாங்க கிஷோர்! அஞ்சே நிமிஷம்” என்று அறைக்குள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

“வாவா…” என்றவன் கங்காதரனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“சாரி! ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா” எனக் கேட்டுக்கொண்டே வந்தவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்தான்.

ரோஜா நிற அனார்கலி சுடிதாரில் தேவதையாக வந்து நின்றவளை, அவன் விழுங்கி விடுவதைப் போலப் பார்க்க, அவள் கண்களை உருட்டிக் காட்டினாள்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு எழுந்தவன், “ஓகே அங்கிள்! நாங்க கிளம்பறோம். பதினோரு மணிக்கெல்லாம் சுமியைக் கொண்டுவந்து விட்டுடுறேன். கூடக் கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா பயந்துடாதீங்க” என்றான்.

கங்காதரன் திகைப்புடன் அவனைப் பார்க்க, “என்னது டின்னர் முடிக்க நடுராத்திரி ஆகுமா என்ன? இதை ஏன் முதல்லயே சொல்லல… அங்கிள் வரேன்னு சொன்னாங்களே எங்கே…” என்று படபடத்தாள் சுமித்ரா.

கிஷோருக்கு கடுகடுவென வந்தது.

“எல்லாத்துலயும் டௌட்டா உனக்கு… இந்தா போன் நீயே அப்பாகிட்ட கேட்டுப்பாரு…” என்று அவளை முறைத்தவன் கங்காதரனின் பக்கமாகத் திரும்பினான்.

“என்மேல நம்பிக்கை இல்லன்னா, டின்னரைக் கேன்சல் பண்ணிக்கலாம் அங்கிள்!” என்றவன் தலையைக் கோதிக்கொண்டு அவருக்கு முதுகு காட்டி நின்றான்.
சுமித்ரா தயக்கத்துடன் தந்தையைப் பார்க்க, “அப்படி நாங்க எதுவும் சொல்லலையே கிஷோர். நீ இந்த வீட்டு வருங்கால மாப்பிள்ளை. உன்மேல நம்பிக்கை இல்லாமலா, என் பொண்ணை உனக்குக் கல்யாணம் செய்துகொடுக்கச் சம்மதம் சொன்னேன்” என்று நிதானமாகப் பேசினார்.

அவர் பக்கமாகத் திரும்பியவன், “சாரி அங்கிள்! உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை சுமிக்கு இல்லையே…” என்று கூறியபடி அவளைப் பார்த்தான்.

சுமித்ராவின் முகம் லேசாக கறுத்தது. அவனது இந்தப் பேச்சை அவளால் சகிக்க முடியவில்லை. அவனது நடவடிக்கை அற்பத்தனமாக தெரிந்தது அவளுக்கு. ஆனால், தந்தைக்காக அமைதியாக இருந்தாள்.

மகளின் முகத்தைப் பார்த்தே அவளது மனநிலையை உணர்ந்துகொண்ட கங்காதரனுக்குச் சங்கடமாக இருந்தது.

கிஷோரை சிறுவயதிலிருந்தே அவருக்குத் தெரியுமாதலால்… அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருந்தார். மூக்கிற்கு மேலே கோபம் வரும். ஆனால், அடுத்த நொடியே அதை மறந்துவிட்டு அவர்களிடம் நட்பு பாராட்டுவான். ஆனால், அவரறியாத அவனது மறுபக்கத்தை தனது மகள் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.

“அம்மாடி! கிளம்பு. நேரமாகுது” என்று மகளைச் சமாதானமாகத் தட்டிக்கொடுத்து அனுப்பினார்.

வழக்கமான புன்னகையைத் தொலைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுமித்ரா.

‘இப்போதெல்லாம் அடிக்கடி இப்படிச் சந்தோஷத்தைத் தொலைத்துவிட்டு, அதைத் தேடி ஓடுவதையே வழக்கமாக்கிக் கொண்டதாக’ தோன்றியது அவளுக்கு.

“சுமி டார்லிங்! இந்த டிரெஸ் உனக்குச் சூப்பராயிருக்கு” என்றான்.

அவனது பேச்சு மனத்திற்குள் இருந்த எரிச்சலை மேலும் கிளப்பிவிட, வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.

காரை ஓரமாக நிறுத்தியவன், “சுமி! என் மேல கோபமா? சாரி சாரி சாரி… இனிமேல் இப்படி எதுவும் நடக்காது. கொஞ்சம் சிரியேன். ப்ளீஸ்மா!” என்று கெஞ்சலாகச் சொன்னான்.

அவள் அமைதியாக இருக்க, “சுமி ப்ளீஸ்… உன்னைக் கோச்சிக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்டான்.
விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

“சுமி! ஒரு தடவை எனக்கு எக்ஸ்க்யூஸ் கொடுக்கக் கூடாதா…” என்றான்.

சட்டென திரும்பிப் பார்த்தவள், “நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்க ஓவர் ரியாக்ட் பண்றீங்க கிஷோர்! உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்லை” என்றவளுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது.

அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்கிட்ட கோச்சிக்க உரிமை இல்லையான்னு கேட்கறீங்களே… அதே உரிமை எனக்கு இல்லையா…?” என்று கேட்டாள்.

அவளது பதிலைக் கேட்டதும் அவனுக்கு உச்சி குளிர்ந்து போனது.

“இருக்குன்னு தானே நானும் சொல்றேன். உனக்கு என்மேல; எனக்கு உன்மேல. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல யாரும் கிடையாது” என்றான்.

அவனது பதிலிலிருந்த முழு அர்த்தத்தையும் உணராமல், மெலிதாகப் புன்னகைத்தாள்.

அந்த ஆடம்பர ஹோட்டலின் முன்பாகக் காரை நிறுத்தினான். வேலட் பார்க்கிங்கிற்கு சாவியைக் கொடுத்துவிட்டு, அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“சுமி டூ மினிட்ஸ் ரிசப்ஷன்ல உட்காரு. அப்பா வந்தாச்சான்னு கேட்டுட்டு வரேன்” என்றவன் சற்று நகர்ந்து சென்றான்.

போனை எடுத்து தந்தைக்கு அழைத்தவன், “அப்பா! எங்கே இருக்கீங்க… எங்கே இருந்தாலும் உடனே கிளம்பி ஹோட்டலுக்கு வரீங்க. ஏனா…? நீங்க ஏன் வரலைன்னு சுமி கேட்டா…” என்றவன் நடந்ததைச் சொல்லிவிட்டு, “இப்போ என் வாழ்க்கையே உங்க கைலதான் இருக்கு. அரைமணி நேரத்துல வரீங்க. டின்னரை முடிச்சிட்டு நீங்க கிளம்பிடுங்க…” என்றவன் போனை அணைத்துவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

“கிளம்பற நேரத்துக்கு யாரோ வந்துட்டாங்களாம். ஹாஃபனார்ல வந்துடுவாங்க. அதுவரைக்கும் நாம இங்கேயே வெயிட் பண்ணுவோம்” என்றான்.

அவளும் சரியென தலையை ஆட்டினாள்.
பத்து நிமிடம் அவள் அமர்ந்திருந்த நேரத்திற்குள் கிஷோருக்கு இரண்டு மூன்று போன் வரவும் அவன் எழுந்து சென்று பேசிக்கொண்டிருந்தான். அவளுக்கு வெட்டுவெட்டென்று அமர்ந்திருக்க, சங்கடமாக இருந்தது.

எழுந்து அவனருகில் சென்றவள், “கிஷோர்! வரும்போது ஆப்போசிட்ல ஒரு புக் ஷாப் பார்த்தேன். கொஞ்ச நேரம் அங்கே போய்ட்டு வரலாமா? எனக்கும் கொஞ்சம் கலெக்‌ஷன்ஸ் வாங்க வேண்டியிருக்கு” என்றாள்.

அவனுக்கோ புத்தகங்கள் என்றாலே அலர்ஜி.

“நீ வேணா போய்ட்டு வந்துடேன். அப்பா வந்துட்டா நான் உனக்குக் கால் பண்றேன்” என்றான்.

சரியென்றவள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையைக் கடந்துவரவே ஐந்து நிமிடங்கள் ஆனது.
புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவள், தனக்குப் பின்னால் வந்து நின்றவனைக் கவனிக்கவில்லை.

“கடைக்கு வந்தா புக்ஸ் மட்டும்தான் பார்க்கணும்னு இல்லை மேடம்! கொஞ்சம் அக்கம் பக்கமும் திரும்பிப் பார்க்கலாம்” என்றான் மித்ரன்.

அவனது குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள், “ஹலோ நீங்க எங்கே இந்தப் பக்கம்? இன்னைக்கு ஊருக்குக் கிளம்பறேன்னு சொன்னீங்க” எனக் கேட்டாள்.

“ம், கிளம்பிட்டே இருக்கேன். எதிர் ஹோட்டல்லதான் தங்கியிருக்கேன். பவி சில புக்ஸ் கேட்டா அதான் இங்கேயே வாங்கிட்டு போயிடலாம்னு வந்தேன். நீ என்ன இந்தப் பக்கம்?”

“கிஷோரோட டின்னருக்கு வந்தேன். அங்கிளுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கோம்” என்றாள்.

“ஓஹ்! குட்” என்றான்.

“இஃப் யூ டோண்ட் மைண்ட். நீங்களும் எங்களோட டின்னருக்கு ஜாயின் பண்ணிக்கோங்களேன் விஜய்!” என்றாள்.

“நீ கேட்டதே போதும்மா. ட்ராவல் இருக்கறதால, ஏழு மணிக்கெல்லாம் லைட்டா சாப்டுட்டேன்.”

மித்ரன் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொண்டதும், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
மீண்டும் போக்குவரத்து நெரிசல் இரண்டு நிமிடங்கள் நின்றவன், “இப்படியே நின்னா நின்னுட்டே இருக்கணும். வா” என்று வேகமாக அவளது கரத்தைப் பற்றி மறு பக்கத்திற்கு அழைத்து வந்தான்.

“ஹப்பா! கொஞ்சம் விட்டிருந்தா என்ன ஆகி இருக்கும்?”

“இன்னும் அங்கேயே நின்னுட்டிருந்திருக்கணும். சிக்னல் போட்டாலும் நிற்காம போறாங்க. அப்போ நிக்கிறவங்க அங்கேயே இருக்கமுடியுமா?” எனக் கேட்டான்.

“அதுக்காக இப்படித்தான் ஓடிவரணுமா… ஒரு நிமிஷம் எனக்குக் கண்ணைக் கட்டிடுச்சி…” என்றாள்.

சிரித்துக்கொண்டே, “ஓகே. ரிலாக்ஸ்! உன்னோட கிஷோர் வெயிட் பண்ணிட்டிருப்பார் கிளம்பு” என்று அவளை அனுப்பிவிட்டு, ஹோட்டலின் பக்கவாட்டிலிருந்த லிஃப்டை நோக்கி நடந்தான்.

சுமி ரிசப்ஷனிற்குச் சென்ற அதேநேரம், கேஷவ்நாத்தும் அங்கே வந்து சேர்ந்தார். மூவருமாக ஏதேதோ பேசிக்கொண்டே டின்னரை முடித்தனர். கிஷோர் சிரித்துப் பேசியபோதும் ஏதோ இறுக்கமாகவே இருப்பதைப் போல, சுமித்ராவிற்குத் தோன்றியது.

அடுத்த சில நிமிடங்களில் கேஷவ்நாத் கிளம்பிவிட, தாங்களும் கிளம்பிவிடுவோம் என்ற நினைப்புடன் கிஷோரைப் பார்த்தாள். அவனோ, ஹோட்டலின் பக்கவாட்டை நோக்கி நடந்தான்.
புரியாமல் அவனைப் பின்தொடர்ந்த சுமித்ரா, அவன் சென்ற இடத்தைப் பார்த்ததும் கால்கள் தள்ளாட, தயங்கி நின்றாள்.

“சுமி!” என்று கையை நீட்டியவன், அவள் திகைத்து நிற்பதைக் கண்டதும், “என்ன?” என்றான்.

“இதென்ன கிஷோர்… நைட் பப்புக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றவளது முகம் சுணங்கியது.

“ஏன்? வந்தால் என்ன?” என்றான்.

“என..க்கு இதெல்லாம் பழக்கமில்ல” என்றாள்.

அவளது கண்களை ஊடுருவியவன், “பழகிக்க” என்றபடி அவளது கரத்தைப் பற்றி விறுவிறுவென உள்ளே இழுத்துச் சென்றான்.

திகைப்பும், தவிப்புமாக அவன் பின்னால் செல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
வெளியில் அமைதியாகயிருந்த அந்த இடம் இப்போது, ஏதோ பாதாளக் குகை போலக் காட்சியளித்தது. வண்ண வண்ண விளக்குகளும், இசையென்ற பெயரில் காதைக் கிழிக்கும் இரைச்சலும் அவளது அச்சத்தை அதிகரித்தன.

கீழேயிருந்த கதவு ஒன்றைத் திறந்து உள்ளே சென்ற பின்பே வெளியே பார்த்தது எதுவுமே இல்லை என்பதைப் போலிருந்தது. பிரம்மாண்டமான அந்த அறையின் தரைத் தளம் முழுவதும், விளக்குகள் மின்னிமின்னி மறைந்து கொண்டிருந்தன.

போதையும், கூத்துமாக அந்த அறையே அவளுக்குப் பயங்கரமாகத் தெரிந்தது. இங்கேயே நின்றால் தனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் என்ற முடிவுடன் கிஷோரைப் பார்த்தாள்.

“கிஷோர்! ப்ளீஸ் கிளம்பலாம். எனக்கு இந்த ஸ்மெல்லும், இடமும் குமட்டிகிட்டு வருது” என்றாள்.
திரும்பி அவளைப் பார்த்தவன், அந்தப் பக்கமாக வந்த வெயிட்டரை அழைத்து, ஒயின் டம்ளரை எடுத்து உறிஞ்சியவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

ஒரே மடக்கில் வாயில் சரித்துக்கொண்டு, “மொடா குடிகாரன்னு நினைச்சிடாதே. அக்கேஷனா தான்” என்றவன் யாரையோ தேடினான்.

“ஹாய் கிஷோர்!” என்று சப்தம் வந்த திசையைப் பார்த்துக் கையை அசைத்தவன், “வா சுமி! என் ஃப்ரெண்ட்ஸ் அங்கேயிருக்காங்க” என அழைத்துச் சென்றான்.

அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் பலியாட்டைப் போலச் சென்றாள் சுமித்ரா.

அவனது நண்பர்கள் கிட்டதட்ட பத்துபேர், தங்கள் மனைவிகளுடன் வந்திருந்தனர். எல்லோருமே பணத்தில் புரளுபவர்கள் என்பது அவர்களைப் பார்த்தபோதே தெரிந்தது. முகமும், கையும் மட்டுமே தெரிய உடையணிந்திருந்த சுமிக்கு, அங்கிருந்த நவநாகரீக மங்கைகளைக் கண்டு கூச்சகமாக இருந்தது. அவர்கள், அவளைப் பார்த்து ஏதோ கிசுகிசுக்க, ‘அங்கிருந்து ஓடிவிடலாமா!’ என்றிருந்தது.

“நம்மகூட டின்னர் சாப்பிடுறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டியேடா” என்றான் ஒருவன்.

அப்போதுதான் சுமிக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

“சாரி ஃப்ரெண்ட்ஸ்! அடுத்தமுறை கட்டாயம் உங்க ஆசையை நிறைவேத்திடுறேன்” என்றவன் சுமியின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டான்.

“கிஷோர்!” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், உதடு பிரியாமல் அழைத்தாள்.

நிச்சயமாக அவளது குரல், அவனுக்குக் கேட்காமலிருக்க வாய்ப்பேயில்லை. இருந்தும் அவன், அவள்புறமாகத் திரும்பவேயில்லை. அவள் அவனது கரத்தை விலக்க முற்பட, அவனது பிடி இன்னும் இறுக்கமானது. அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நான்காவது பெக்கை குடித்துக் கொண்டிருந்தான் அவன்.

பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்ட முயல்குட்டியைப் போல, மனத்திற்குள் துடித்துக் கொண்டிருந்தாள். தனது வலியைக் காட்டி எல்லோரின் பார்வைக்கும் காட்சிப்பொருளாக்கிக் கொள்ள விரும்பாதவளாக, பற்களைக் கடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அங்கே நிலவிய கூச்சலும், அவர்களது சிரிப்பும் அவளுக்கு நாராசமாக இருந்தது.

“என்ன கிஷ்! உன் ஃபியான்ஸி பேசமாட்டாங்களா?” எனக் கேட்டாள் ஒருத்தி.

“அப்படியெல்லாம் இல்ல. அவளுக்குத் தலைவலி” என்று சமாளிப்பாகச் சிரித்தான்.

‘கிஷ்ஷாம் கிஷ்! கிஷோர்ன்னு கூப்பிட்டா வாய் சுளுக்கிக்குமா இவளுக்கு!’ என எரிச்சலாக வந்தது அவளுக்கு.

ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், இன்னும் சற்றுநேரத்தில் கிளம்பிவிடலாம் என்று நினைத்தவளது எண்ணத்தில் இடிவிழுவதைப் போல, நான்கைந்து ஜோடிகள் டிஸ்கோ ஸ்டேஜை நோக்கி நடந்தனர்.

“ஹேய் கிஷோர்! எங்ககூட சாப்பிடத்தான் வரல. அட்லீஸ்ட், ஸ்டேஜுக்காவது வரலாமில்ல” என்று ஒருவன் குரல் கொடுக்க, மற்றவர் அதை வழிமொழிந்தனர்.

அவனும் மறுக்கமுடியாமல் எழ, சுமித்ரா அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

“சுமி! கம்” என்றான்.

“நான் வரல” என்றாள்.

“என்னை அவமானப்படுத்தனும்னே ஒவ்வொரு வேலையும் செய்வியா” என்றான் கோபத்துடன்.

“நீங்கதான், என்னை அசிங்கப்படுத்தறீங்க” என்றவளுக்கு விழிகள் தளும்பின.

அவனுக்குள்ளிருந்த சாத்தானும், உள்ளே சென்றிருந்த போதையென்ற மிருகமும் அவனது நிதானத்தை இழக்க வைத்தது.

“நீ அழுதாலும் எழுந்து வர்ற” என்று அவளது கரத்தைப் பற்றி இழுத்தான்.

அவனது வலிமைக்கு முன்னால், அவளது மென்மையான தேகம் போராட முடியாமல் தவித்தது.

வலியில் முகத்தைச் சுருக்கியவள், “கையை விடுங்க கிஷோர்!” என்றாள்.

“ஏன்? அவன் பிடிச்சிட்டிருக்கும்போது நல்லா இருந்ததா” கிண்டலாகக் கேட்டவனை இமைக்க மறந்து பார்த்தாள்.

அவளது ஸ்தம்பித்த பார்வையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, டிஸ்கோ ஸ்டேஜிற்கு இழுத்துச் சென்றான்.

அவளது கரத்தைப் பிடித்திருந்த அவனது கரங்கள் அவளது இடையில் பதிய, அவனை ஓங்கி அறையவேண்டும் என்று எழுந்த வேகத்தை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“கிஷோர்! என்னோட பொறுமைக்கும் அளவிருக்கு” என்றவளது குரல் தழுதழுத்தது.

“அதையேதான் டார்லிங் நானும் சொல்றேன்” என்றவன் வேகமாக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான்.

எங்கிருந்து தான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ, அவனை உதறித் தள்ளிவிட்டு ஒரே ஓட்டமாக வாசலில் வந்தே நின்றாள்.

எவ்வித இரைச்சலும் இல்லாம, உடலைத் தழுவிய தென்றல் காற்றும் அவளுக்குப் பெரும் ஆறுதலாக இருக்க, கண்களும் கசிந்தன. கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். பத்தரை ஆகியிருந்தது.

‘தன்னைத் தேடிக் கிஷோர் வருகிறானா!’ என்று திரும்பிப் பார்த்தாள். இவ்வளவு நடந்த பிறகும் அவளது பேதை மனம் அவன் வருவான் என்று நம்பினாள். ஆனால், அவன் வரவேயில்லை.
மனத்திலிருந்த ஆற்றாமையும், அவன் கொடுத்த ஏமாற்றமும் கண்ணீராக ஊற்றெடுத்தது.

‘இப்போது, வீட்டிற்கு எப்படிச் செல்வது? தனது கைப்பையை பப்பின் உள்ளேயே விட்டுவிட்டு வந்துவிட்டது புரிந்தது. மீண்டும் உள்ளே சென்று எடுத்துவர, சுத்தமாகத் தைரியமில்லை.
கிஷோர் அவளைத் தேடி வராததிலிருந்தே, தன்மீது பெரும் கோபத்திலிருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

ஏதேனும் டாக்ஸி கிடைத்தால் சென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன், ஹோட்டலின் லாபியை நோக்கி நடந்தாள். அவள் அங்கிருந்த பார்க்கிங் வேலட்டில் சென்று விசாரித்துக் கொண்டிருக்க, “மித்ரா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

விஜய்மித்ரனைக் கண்டதுமே, அவளது மனத்திற்குள் பெரும் நிம்மதியாக உணர்ந்தாள்.

அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், “வீட்டுக்குத் தானே… நான் டிராப் பண்ணிடுறேன்” என்றான் இறுகிய குரலுடன்.

வேண்டாம் என்று மறுக்கவோ, இவன் எப்படித் தன் மனத்தைப் படித்தான் என்று எண்ணிப் பார்க்கவோ அப்போது அவளால் முடியவில்லை.

அவன் டிரைவர் சீட்டின் பக்கத்துச் சீட்டில் அமர்ந்துகொள்ள, அவள் பின்னால் உட்கார்ந்தாள்.
வீட்டிற்கு வரும் வரை இருவருமே எதுவுமே பேசவில்லை. மௌனமாகவே வீட்டு வாசலில் அவளை இறக்கிவிட்டான்.

பின்னாலேயே அவனும் இறங்கி நிற்க, “உள்ளே வாங்களேன்” என்றாள்.

“இருக்கட்டும். நான் இப்படியே கிளம்பறேன். அப்புறம், சாருக்கு விளக்கம் சொல்லணும்” என்றவனது முகத்தைப் பார்க்க முடியாமல், தலையைக் குனிந்துகொண்டாள்.

திரும்பி இரண்டடி நடந்தவளை, “மித்ரா!” என்றழைத்தான்.

அவள் நின்றதும் அவளருகில் சென்றவன், “வைர ஊசிங்கறதுக்காக யாரும் கண்ணுல குத்திக்கமாட்டாங்க. உனக்குப் புரியும்னு நினைக்கறேன்” என்றவன் அவளது பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *