Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 8

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 8

கதவைத் திறக்கும் சப்தம் கேட்டதும், தலையிலிருந்த கிளிப்பைக் கழற்றுவதைப் போல தலையைக் குனிந்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் சுமித்ரா.

“கிஷோர், கிளம்பியாச்சாம்மா?” – கங்காதரன்.
“ம், நீங்க சாப்டீங்களாப்பா?” எனக் கேட்டவள் நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்க்கவேயில்லை.

“சாப்பிட்டேம்மா! உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன். சரிம்மா, நீ படு. காலைல பேசுவோம்” என்றதும், சுமித்ரா வேகமாகத் தனது அறைக்குச் சென்று கதவை மூடினாள்.

அத்தனை நேரம் கட்டுப்பாட்டிலிருந்த மனம், தனிமையில் குமுறத் துவங்கியது. ஷவரிலிருந்து பொழிந்த நீரோடு, அவளது கண்ணீரும் சேர்ந்து வழிந்தோடியது. ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். பதினைந்தே நாள்களில், தனது வாழ்க்கையின் பாதையே மாறிப்போனதை எண்ணிக் குமுறினாள்.

அடுத்து என்ன என்று யோசித்தவளுக்கு, எதுவுமே புரியவில்லை. மூளையே மரத்தது போல எதையும் யோசிக்கும் திறனை இழந்தவளானாள். மனம் முழுவதும் வெறுமையே மேலோங்கியிருந்தது.

பெற்றவள் இருந்திருந்தால், சொல்லாமலேயே என் மனத்தைப் புரிந்து கொண்டிருப்பாள். யாரிடமும் சொல்லி ஆறுதல் தேடக்கூட இயலாத நிலையில் தன்னை நிறுத்திவிட்ட கடவுளிடமே, அந்த ஆறுதலைக் கேட்டாள்.

அந்தநேரத்தில், தனக்கு உதவவே விஜய்மித்ரனை கடவுள் அனுப்பி வைத்ததாக நம்பினாள்.
************

எப்போதுமே இரவு பயணத்தின் போது தன்னிடம் வளவளத்துக் கொண்டே வரும் முதலாளி, இன்று அமைதியாக வருவதைக் கவனித்த டிரைவர், அவனைத் திரும்பிப் பார்த்தார்.

விஜய்மித்ரன் வெளியில் தெரிந்த இருளை வெறித்துக் கொண்டு வந்தான். அவனது நினைவுகளை சுமித்ராவே நிறைத்திருந்தாள்.

கலைந்த தோற்றமும், சிவந்த மூக்கு நுனியுமாக பாதுகாப்பற்ற நிலையில் விழிகளில் தெரிந்த பய உணர்வுடனும், லாபியில் அவள் நின்றிருந்த காட்சியே மீண்டும் மீண்டும் அவனுக்குள் தோன்றி இம்சையளித்தது.

எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருபவளை, அந்த நிலையில் கண்டவனுக்கு இதயத்தைக் கசக்கிப் பிழிந்ததைப் போல வலித்தது.

கிஷோரைச் சந்தித்த முதல் பார்வையிலேயே, அவனிடத்தில் ஏதோ ஒரு நெருடல் தோன்றியது. ப்ரொஃபசரோ, அவனைப் பற்றி உயர்வாகச் சொன்னதுடன், “இந்தத் திருமணம் தான் என்னுடைய கௌரவம். இது நல்லபடியாக முடிந்தால், எனக்குப் பெரும் நிம்மதி” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும், அவன் சுமித்ராவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். தந்தையின் வார்த்தைகளால், அவளது முகத்தில் பிரதிபலித்த புன்னகையிலிருந்து, ‘நிச்சயமாக அவரது சந்தோஷத்திற்காக மட்டுமே, அவள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறாள்’ என்று நினைத்தான். இன்று நடந்த நிகழ்ச்சி, அதைத் தெளிவாக்கிவிட்டது.

பெருமூச்சுடன் தலையைக் கோதிக்கொண்டவன், ‘அவள் வீட்டிற்கு அழைத்தபோது, தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், புரஃபசரிடம் என்னவென்று பேசுவது? நான் அவருடைய மாணவன் மட்டுமே. ஒரு ஆசிரியரிடத்தில், மாணவன் கொண்டிருக்கும் அபிமானம் என்ற அளவில் மட்டுமே தனக்கு உரிமை இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் எந்த அளவிற்குத் தலையிடமுடியும்?’ என நினைத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றான்.

என்னவானாலும், நடந்த விஷயம் எதையும் சுமித்ரா, தன் தந்தையிடம் கூறப்போவதில்லை என்று உறுதியாக நம்பினான்.

காலையில் சுமித்ரா எழும்போதே தலைப் பாரமாக இருந்தது. ஷவரில் நனைந்ததும், தலையைத் துவட்டாமலும் இருந்ததில் தலைப் பாரமாகியிருந்தது.

நெற்றியைப் பிடித்தபடியே எழுந்தவள், குளியலறைக்குள் நுழையும் போது ஹாலில் கேசவ்நாத்தின் குரல் கேட்பதை உணர்ந்தாள். உடலில் ஒரு இறுக்கம் பரவ சிலநொடிகள் அசையாமல் நின்றவள், சுதாரித்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் அணியும் உடையுடன் வெளியே வந்தவளை, “குட்மார்னிங் சுமிம்மா!” என்றார் கேசவ்நாத்தின் முகத்தில் எதையோ அறிந்துகொள்ளும் ஆர்வம் தென்பட்டது.

அவரை ஆழ்ந்த பார்வை பார்த்தவள், “குட்மார்னிங் அங்கிள்!” என்றாள்.

பெரியவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, சமையலுக்குக் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் அவள். கை தனக்குப் பழக்கமான வேலையைச் செய்துகொண்டிருக்க, மனம் முன்தினம் நிகழ்ந்த கசப்பின் மிச்சங்களை மென்று கொண்டிருந்தது.

மரத்திருந்த நினைவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற்றுக் கொண்டிருந்தன.

“ஏன்? அவன் பிடிச்சிட்டு இருக்கும்போது நல்லாயிருந்ததா…” அவன் சொன்ன வார்த்தைகள் நினைவிற்குவர, நெஞ்சில் எழுந்த கோபத்தின் வேகத்தில் கத்தியை உபயோகிக்க, அதன் கூர் முனை தனது வேலையைக் காட்டியது

விரலை வெட்டிக்கொண்டதில் துடித்துப் போனவள், “ஆஹ், அப்பா!” என்று அலறினாள்.

“சுமிம்மா!” என்று பதறியபடி ஓடிவந்தார் கங்காதரன்.

காயத்திலிருந்து இரத்தம் பெருகிக்கொண்டிருக்க வலியிலும், மனத்தின் வேதனையிலும் அவளது விழிகள் கண்ணீரைப் பொழிந்தன.

“என்னம்மா நீ! பார்த்துச் செய்யக்கூடாதா?” என்ற கங்காதரன் விரலை அழுத்திப் பிடித்தபடி குழாயைத் திறந்துவிட்டார்.

“நீங்க விட்டுடுங்கப்பா! நான் பார்த்துக்கறேன்” என்றவள் வம்படியாக அவரை அங்கிருந்து அனுப்பினாள்.

ஷெல்பிலிருந்த பேண்டேஜை எடுத்து விரலில் சுற்றிக்கொண்டு, வேலையைத் தொடர்ந்தாள்.
யாரோ வந்திருப்பதாக கங்காதரன் வெளியில் செல்ல, சமையலறைக்கு வந்தார் கேஷவ்நாத்.

“சுமிம்மா! எதுக்கு இப்போ ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற. ஒரு நாளைக்கு வெளியே சாப்பிட்டுக்கலாம்” என்றார்.

“வேணாம் அங்கிள்! வலியைத் தாங்கிக்கறதெல்லாம் எனக்குப் புதுசில்ல” என்றவளை, திகைப்புடன் பார்த்தார் அவர்.

“சுமித்ரா!” எனத் தயக்கத்துடன் அழைத்தார்.

திரும்பி அவரைப் பார்த்தவள், “நீங்க இவ்ளோ காலைல வீட்டுக்கு வந்திருக்கீங்கன்னா, புரிஞ்சிக்கமுடியாதவ இல்ல அங்கிள்! அப்பாகிட்ட இதுவரைக்கும் நான் எதுவும் சொல்லல. இனியும், சொல்லமாட்டேன்” என்றவளைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“ரொம்பச் சாரிம்மா!” என்றார் வருத்தத்துடன்.

“நீங்க ஏன் அங்கிள் ஃபீல் பண்றீங்க? நான் உங்களைத் தப்பா நினைக்கல.”

நெற்றியைத் தடவிக்கொண்டவர், “நேத்து, அவன் செய்த பைத்தியக்காரத்தனத்தை என்கிட்டயே சொல்றான். கோபத்துல, நானே அவனை அறைஞ்சிட்டேம்மா!” என்றார்.

விரக்தியாக முறுவலித்தவள், “தப்பு செய்ததுக்கு அப்புறம் கிடைக்கிற தண்டனையால, நடந்ததெல்லாம் இல்லன்னு ஆகிடுமா?” என்றவள் ஷெல்பில் எதையோ எடுப்பதைப் போலத் திரும்பிக் கொண்டாள்.

அவளது வார்த்தையில் தெரிந்த வேதனை, அவளது மனத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது.

“என்னப்பா நீயும் இங்கேயே வந்து நின்னுட்ட” என்றபடி அங்கே வந்தார் கங்காதரன்.
“அடடா! என் மருமக கஷ்டத்தோட சமைக்கிறாளே… வேணாம், ஹோட்டல்ல பார்த்துக்கலாம்னு சொன்னேன். அதைக்கூட கேட்கக்கூடாதா?” என்றார் சிரிப்புடன்.

“உன் மருமகளை, நீ கேட்கற. நான் என்னப்பா சொல்லப்போறேன்…” என்ற தந்தையை ஆழ்ந்து பார்த்தாள் அவள்.

இருவரும் மாறி மாறி ஒரே விஷயத்தைத் தனக்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்பது, ஒரு வகையில் அவளுக்கு எரிச்சலையே உண்டாக்கியது. எதை உறுதிபடுத்த இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று சலிப்பாக இருந்தது.

“டிஃபன் ரெடியாகிடுச்சிப்பா! சாப்பிடலாம். வாங்க அங்கிள்!” என்று இருவரையும் அழைத்தாள்.

காலை உணவிற்குப் பிறகு, “இன்னைக்கு கேப்ல போகவேணாம்மா! என்னோடவே ஆஃபிஸுக்கு வந்துடு” என்றார் கேஷவ்நாத்.

அவரை நிமிர்ந்து பார்த்தவள், “ம்” என்றாள்.

சொல்லச் சொல்லக் கேட்காமல் தந்தைக்கு மதிய உணவைத் தயார்செய்து ஹாட்கேஸில் வைத்துவிட்டே கிளம்பினாள்.

ஒரு பூங்காவின் அருகில் காரை நிறுத்திய கேஷவ்நாத், தயக்கத்துடன் அவளைப் பார்த்தார். அவர் தன்னிடம் பேச முற்படுவார் என்று அறிந்திருந்த சுமி, அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவர், “சுமி” என்று அழைத்ததுதான் தாமதம், “ப்ளீஸ் அங்கிள்! நீங்க ஏதாவது பேசி என்னைக் கன்வின்ஸ் பண்றேங்கற பேர்ல, நடந்ததைத் திரும்ப திரும்ப நினைச்சிப் பார்க்க வைக்காதீங்க. என் மனசை இரணமாவே வச்சிக்க எனக்குப் பிடிக்கல. மறக்கணும் எல்லாத்தையும் மறக்கணும். ஆனா, உங்க பிள்ளை செய்த காரியம் அவ்வளவு சீக்கிரம் மறக்காது. நாலு அறை அறைஞ்சாகூட தாங்கிக்கலாம் அங்கிள்!

ஆனா, வார்த்தையால அடிச்சா… மனசை உடைச்சிட்டா அதுக்குப் பின்னால வாழ்க்கையே நரகமா தான் இருக்கும். என்னால எங்க அப்பாவோட மனசை காயப்படுத்தற எந்த விஷயத்தையும் செய்யமுடியாது. இந்தக் கல்யாணம் தான் எனக்குச் சந்தோஷம்னு வார்த்தைக்கு வார்த்தைப் பேசறவர்கிட்ட, கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு சொல்ற தைரியம் எனக்கு இல்ல.

அன்னைக்கு உங்களை வேணாம்னு சொல்ல ஒரு காரணமும் இல்ல, அதனால தான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்னு உங்க பிள்ளைகிட்டயே சொன்னேன். அதுக்காக, அன்பு என்ற பெயர்ல அவர் என்மேல செலுத்துற ஆதிக்கத்தை என்னால ஏத்துக்கமுடியாது. அவரோட இந்தப் பொஸசிவ்னெஸ் எனக்குப் பயத்தைத் தான் கொடுக்குது. வாழ்க்கையை நேர்மையா, இருக்கறதை வச்சி சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படுறவ நான். இப்போ, என்னோட மிச்ச வாழ்க்கையை எப்படிக் கடக்கப் போறேன் எனக்கே தெரியல” என்றவள் ஈரம் படர்ந்த இமைகளை நாசூக்காக ஒற்றிக்கொண்டாள்.

“நான் உன்னைக் கன்வின்ஸ் பண்ணணும்னு நினைச்சிப் பேசவரலைமா. அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் சுமி! அவன் உன்கிட்ட ஹார்ஷா நடந்துட்டிருந்தா தயவுசெய்து மன்னிச்சிடு. இந்த பப்… டிஸ்கோலாம் நீ வளர்ந்த சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்தாத விஷயம்தான். ஆனா…” என்றவரை இடைமறித்தாள் சுமித்ரா.

“ஒரு நிமிஷம் அங்கிள்! நானும் இதே அஹமதாபாத்லதான் பிறந்து வளர்ந்தேன். நான் பப்புக்கும், டிஸ்கோதேவுக்கும் போகாம இருக்கலாம். ஆனா, கேள்விப்படாதவ இல்ல. நீங்க சொல்றது மாதிரி இது ஹைகிளாஸ், மிடில் கிளாஸ் பிரச்சனையில்லை. மனசு சம்மந்தபட்ட விஷயம்” என்றாள் கோபத்துடன்.

‘உன் மகன் இன்னும் என் மனத்தைத் தொடவில்லை’ என்பதைத்தான் அவள் இத்தனை நாசூக்காகச் சொல்கிறாள் என்பது புரிய அவளை ஆழ்ந்து நோக்கினார்.

‘கிஷோரின் நடவடிக்கை தொடர்ந்து இப்படியே அமையுமானால், சுமித்ராவின் மனத்தில் அவன்மீது ஒரு சதவீதம் கூட அன்பு துளிர்க்காது’ என்ற முடிவுடன் மேற்கொண்டு பேசாமல் காரைக் கிளப்பினார்.

காரிலிருந்து இறங்க முயன்றவளிடம், அவள் பப்பில் விட்டுச் சென்ற கைப்பையைக் கொடுக்க, அவள் மௌனமாக வாங்கிக்கொண்டாள்.

“இவ்வளவு நடந்ததுக்குப் பின்னாலயும், கிஷோர் போன் பண்ணலன்னு தப்பா எடுத்துக்காதே சுமி! அதுக்கும் நான்தான் காரணம். காலைல எழுந்து வந்தவன் ரொம்பப் ஃபீல் பண்ணான்… அதனால தான் நான் வந்தேன். அவனை ரெண்டு நாளைக்கு ஆஃபிஸ் வரக்கூடாதுன்னும் சொல்லிட்டேன்” என்றார்.

அவரது பேச்சைக் கேட்டு அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“கண்ணுல படாதது கருத்தைக் கவராதுன்னு சொன்னாலும், மனசுல பட்ட அடி அத்தனைச் சீக்கிரம் மறக்காது அங்கிள்!” என்றவள் கம்பெனியை நோக்கி நடந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *