Categories
On-Going Novels ஷெண்பா

அத்தியாயம் – 9

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 9

விழுந்த அறையில் பொறி கலங்கிப் போனான் கிஷோர்.

“என்னடா! வலிக்குதா? நல்லா வலிக்கட்டும். எவ்வளவு திமிரு இருந்தா சுமிகிட்ட அப்படி நடந்துட்டிருப்ப! அவள் ஏதோ நல்லப் பொண்ணா இருக்கப் போய் அவங்க அப்பாகிட்ட எதுவும் சொல்லல. சொல்லியிருந்தா… எல்லாம் நாசமாகியிருக்கும்…” என்று ஆங்காரத்துடன் கத்திய மந்த்ரா, சட்டென தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

“என் கண்ணு முன்னால நிக்காதடா! போ இங்கயிருந்து…” என்று ஆத்திரத்துடன் கத்தினார்.

“அம்மா நான்…” என்றவனை, அவர் முறைத்த முறைப்பில் அப்படியே அடங்கிப் போனான்.

“இதுதான் முதலும் கடைசியும். நீ சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் அவளை இந்த வீட்டு மருமகளாக்க சம்மதிச்சேன். நீ தொடர்ந்து இப்படிப் பொறுக்கித்தனம் பண்ணிட்டிருந்தா, நானே கல்யாணத்தை நிறுத்திடுவேன்” என்ற அன்னையை ஆச்சரியமும், திகைப்புமாகப் பார்த்தான்.

“உங்க அப்பா சொன்னாருன்னு வீட்லயே இருக்காம, போய் முதல்ல அவகிட்ட மன்னிப்பு கேளு. அப்புறம், மன்னிப்புகூட கேட்கத் தெரியாத முட்டாள்ன்னு முடிவுகட்டிடப் போறா”
இவ்வளவு பேச்சிற்கும், அவன் மௌனமாக நின்றிருந்தான்.

சோஃபாவில் ஒரு பக்கமாக அமர்ந்து ஆப்பிள் ஒன்றைக் கடித்தபடி இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள் மிதுனா.

“எல்லாத்துக்கும் இப்படி மண்ணு மாதிரி நிக்காதேடா. எரிச்சலா இருக்கு. என்னோட எல்லா பிளானையும் சொதப்பிடுவ போலயிருக்கு” என்ற அன்னையைப் புரியாமல் பார்த்தான்.

“பிளானா?” என்றான்.

மிதுனா, அன்னையைப் பார்த்து விழிக்க, சமாளித்துக்கொண்டார் மந்த்ரா.

“அவளை நம்பி புது பிஸினஸுக்கு எவ்வளவு பிளான் பண்ணி வச்சிருக்கேன். நம்ம ஜெய்பூர் பிசினஸ் வளரணும்னா, அதுக்குச் சுமிதான் உதவ முடியும்” என்றவர், “இப்பவே எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணுமா? உங்க கல்யாணம் நல்லபடியா முடியட்டும். அப்புறம், எல்லாத்தையும் சொல்றேன்” என்றார்.

“சரிம்மா! நான் கிளம்பறேன்” என்றான்.

“ம்ம்… அவகிட்ட பக்குவமா பேசு. முகத்தைத் திருப்பிக்கமாட்டா. இருந்தாலும், கோபமிருக்கும்… கவனமா பேசு” என்றார்.

“சரிம்மா!” என்றவன், சகோதரியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

“என்னம்மா! திடீர்னு மருமக மேல பாசம் பொங்கி வழியுது” எனக் கேட்டாள் மிதுனா.

“நாய் வேஷம் போட்டா, குலைச்சித்தானே ஆகணும்” என்றார்.

வாய்விட்டுச் சிரித்தவள், “அன்னைக்குச் சுமியை நாய்ன்னு சொன்னீங்க. இன்னைக்கு உங்களையே சொல்லிக்கிறீங்க” என்ற மகளை எரித்துவிடுவதைப் போலப் பார்த்தார்.

“எனக்குன்னு வந்து பிறந்திருக்கீங்க பாரு ரெண்டு இரத்தினங்க. அந்தக் கங்காதரன் ஒண்ணைப் பெத்தாலும், முத்து மாதிரி பெத்திருக்கான். கொஞ்சம் விட்டிருந்தா, உன் தம்பி எல்லாத்தையும் குழிதோண்டி புதைச்சிட்டு வந்திருப்பான். அவனைக் கல்யாணம் முடியிற வரைக்கும் கொஞ்சம் கண்ட்ரோல்லயே வைக்கணும்” என்றார்.

‘அடுத்து, தான் என்ன செய்ய வேண்டும்’ என்ற பலமான யோசனையுடன், அந்த அறைக்குள்ளேயே நடந்துகொண்டிருந்தார்.
‘அவ்வளவு சீக்கிரம் உன்னை கை நழுவ விட்டுடமாட்டேன் சுமித்ரா. நீ பொன் முட்டையிடும் வாத்து… அவசரப்பட்டு உன்னைத் தப்பிக்க விட்டுடுவேனா?’ என்று மனத்திற்குள் வஞ்சத்துடன் உருப்போட்டுக் கொண்டிருந்தார்.

*************

கம்ப்யூட்டரில் ஒரு ஆடையை வடிவமைத்துக் கொண்டிருந்தவளது மொபைல் ஒலிக்க, எண்ணைப் பார்க்காமலேயே எடுத்து, “ஹலோ!” என்றாள்.

சீறலான மூச்சுடன், “மித்ரா!” என்றான் அவன்.

அந்த ஆழ்ந்த குரல் அவளது உடலில் ஒரு சிலிர்ப்பை உருவாக்க, மெல்ல எழுந்து வராண்டாவில் வந்து நின்றாள்.

“சொல்லுங்க விஜய்! வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டீங்களா?” எனக் கேட்டாள்.

வழக்கமான மலர்ச்சியைத் தொலைத்த அவளது குரலைக் கேட்டவன், நெற்றியைத் தடவிக்கொண்டான்.

“ம், மார்னிங் வந்துட்டேன்” என்றான்.

அவன் மௌனமாக, அவளுக்கு என்ன பேசுவதென புரியவில்லை.

தொண்டையைச் செருமிக் கொண்டவள், “எனக்கு ஆஃபிஸ் டைம், வைக்கட்டுமா!” எனக் கேட்டாள்.

சுறுசுறுவென கோபம் பொங்க, “அப்பாகிட்ட பேசினியா?” என்றான்.

கண்களை அழுந்த மூடித்திறந்தவள், “என்ன பேசணும்?” என்று கேட்டாள்.

“படிச்ச முட்டாள்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் நேர்ல பார்க்கறேன்…” என்றவனது குரலில் அப்பட்டமான கோபம் தெரிந்தது.

அவளது மௌனம், அவனது கோபத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றியது போலானது.

“உனக்குன்னு ஒரு மனசு இல்லயா? அப்பாவுக்காகன்னு எவ்வளவு நாளைக்குப் பிரச்சனைகளை மறைச்சி சமாளிப்ப. கடைசியில, நீ உன்னையே தொலைச்சிட்டு தேடப்போற பாரு” என்றான் ஆத்திரத்துடன்.

இமையோரம் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “ஆஃபிஸ் டைம்ல ரொம்ப நேரம் பேசமுடியாது விஜய்! நான் ஈவ்னிங் பேசறேன்” என்றவள் போனை அணைத்தாள்.

‘அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவியவனுக்கு, சிறு நன்றியைக்கூட சொல்லவில்லை. இன்று, அவனது அக்கறைக்கும், அன்பிற்கும் மறைமுகமாக மூடுவிழா செய்தாகிவிட்டது. பாவம், என்னால் அவனுக்கு எந்தப் பிரச்சனையும் வரவேண்டாம்’ என நினைத்துக் கொண்டே தனது கேபினுக்குத் திரும்பினாள்.

இங்கே, மித்ரனுக்குச் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது.

‘அளவிற்கு மீறி உரிமை எடுத்துக்கொண்டால், இப்படி அவமானப்பட வேண்டியது தான். தன் வாழ்க்கையின் மீது அவளுக்கே அக்கறையில்லாத போது, எனக்கென்ன கவலை!’ என்று கோபத்துடன் நினைத்தவன், அவளது மொபைல் எண்ணை அழித்தான்.

மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற, ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்ற ஒருமணி நேரத்தில், மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த மகனை வியப்புடன் பார்த்தார் வித்யா. அதிலும், கடுகடுவென்ற முகத்துடன் தரையை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவனைப் புரியாமல் பார்த்தார்.

“மித்ரன்!” என்று அவனது தோளில் கைவைத்தார்.

“ப்ளீஸ்மா! நான் கொஞ்சநேரம் தனியா இருக்கணும்” என்றவன் எழுந்து தனது அறைக்குச் செல்ல, அவனை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் வித்யாவதி.

“ஹாய் மம்மி!” என்றபடி துள்ளிக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தான் இந்தர்.

மம்மி, டம்மின்னு ஏன்டா என் உயிரை வாங்கற? என்ற வழக்கமான பல்லவி எதையும் பாடாமல் தீவிர யோசனையுடன் இருந்த அன்னையின் அருகில் சென்று அமர்ந்தான்.

“எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு யோசனை?” என்று அன்னையின் தோளைத் தட்டினான்.
“என்னடா! இன்னைக்கு ஊரைச் சுத்தக் கிளம்பலையா?” என்றார் எரிச்சலுடன்.

“ஊர் சுத்தறதுன்னா அவ்வளவு ஈசியா இருக்கா உங்களுக்கு. எங்கே இந்த வேலையெல்லாம் விட்டுட்டு, ஒரே ஒரு நாள் ஊரைச் சுத்தி வாங்க பார்ப்போம். அப்போ தெரியும் கஷ்டம். சும்மா ஊரைச் சுத்தறேன்னு சொல்லாதீங்க…” என்றவனைத் தலைவிதியே என்பதைப் போலப் பார்த்தார்.

“அவனைப் பெத்த அதே வயத்துல தான், உன்னையும் பெத்தேன். அவன் என்னடான்னா ஓவர் பொறுப்பா இருக்கான். நீ பொறுப்புன்னா… கிலோ என்ன விலைன்னு கேட்கற!” என்று அலுத்துக்கொண்டார்.

“மம்மி! பொறுப்புங்கறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?” என்று ஆரம்பித்தவனை, “ஐயா சாமி! தெரியாம சொல்லிட்டேன். முதல்ல நீ கிளம்பு” என்றார் கடுப்புடன்.

“ம்ஹும்! இப்படிப் பேசவிடாம அடக்கி அடக்கியே, உன் புகழை வளரவிடாம தடுக்கறாங்கடா இந்தர்” என அவனுக்கே சொல்லிக் கொண்டான்.

“ஆமாம், பேசவிடாம அடக்கி அடக்கித்தான் இவ்ளோ பேச்சு பேசிட்டு திரியற. என் வாயைக் கிளறாம கிளம்பு” என்றார்.

“ஓகே ஓகே கூல்டவுன் மம்மி!” என்று எழுந்தவன், ஏதோ நினைவு வர மீண்டும் அதே நிலையில் அமர்ந்தான்.

“ஆமா, நான் வரும்போது என்னவோ யோசிச்சிட்டிருந்தீங்களே… என்ன அது?” எனக் கேட்டான்.

மூத்த மகனின் மீதிருந்த கவலையில் நடந்ததை இளையவனிடம் சொன்னார்.

தாடையைத் தடவி யோசித்தவன், “ஆஹ்! ஒருவேளை இப்படியிருக்குமோ…” என கண்களை விரித்து புன்னகையுடன் சொன்னான்.

“எப்படி?”

“இந்த வீட்ல விளக்கேத்த, ஒரு விடிவெள்ளியைப் பார்த்துட்டாரோ?” என்றான்.

“சேச்சே! அப்படி ஏதாவது இருந்தா, என்கிட்ட சொல்லியிருப்பான்” என பெரிய மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

“இப்படித்தான் எல்லா அம்மாவும் ஏமாந்து போறது… தலை போற வேலையா இருந்தாலும், ஆஃபிஸ் போன ஒருமணி நேரத்துல அண்ணன் எப்போ வீட்டுக்கு வந்திருக்கார்? சொல்லுங்க பார்ப்போம்” என்றான்.

அப்போதும், வித்யாவதி நம்பாத பாவனையுடனேயே பார்த்தார்.

“சரி, மேலே போன அண்ணன் ஈவ்னிங் வரைக்கும் வராம அதே மெண்டாலிட்டியோட வந்தா, நான் சொன்னதை நம்பறீங்களா” எனக் கேட்டான்.

“எனக்கென்னவோ நம்பிக்கையே இல்லை” என்றார் அவர்.

“இதுக்கு மேல ஆர்கியூ பண்ண நான் ரெடியா இல்ல. அண்ணன்…” என்றவன் அப்படியே நிறுத்திவிட்டு மாடிப்படியையே பார்த்தான்.

அங்கே, சற்று நேரத்திற்கு முன்பு பார்த்தது உண்மைதானா என்பதைப் போன்று எப்போதும் போல உற்சாகத்துடன் இறங்கி வந்துகொண்டிருந்தான் மித்ரன்.

“அம்மா! தாத்தா கால் பண்ணாங்க. நம்ம வீட்டுக்குத்தான் வந்துட்டிருக்காங்களாம். நான் ஸ்டேஷனுக்குப் போய் ரிசீவ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றபடி கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் செல்வதையே இந்தர் வெறித்துப் பார்க்க, “நான் சொல்லல… அவன் என் பிள்ளைடா…” என்று பெருமிதத்துடன் சொல்லிவிட்டுச் செல்லும் அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான் இந்தர்.

“இன்னைக்கு தப்பா தெரியறதெல்லாம் ஒரு நாளைக்கு சரின்னு தோணும் அன்னைக்குப் புரியும் இந்த இந்தரோட கணக்கு” என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு தாத்தாவின் வருகைக்காக காத்திருந்தான்.

***************
“சுமி மேடம்! சாப்பிட வரீங்களா?” என்று கேட்டாள் உடன் பணிபுரியும் பெண்.

“ம், நீங்க போங்க. பத்து நிமிஷத்துல நான் வரேன்” என்ற சுமி விட்ட வேலையைத் தொடரலானாள்.

வேலையில் மூழ்கியவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

மீண்டும் அந்தப் பெண் அவளை அழைக்க வர, “சாரி பிங்கி! வேலை இன்னும் முடியல. முடிச்சிட்டா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். நீங்க சாப்பிடுங்க” என்றதும் சிரித்தபடி தலையாட்டிக் கொண்டே சென்றாள் அவள்.

மேலும் அரைமணி நேரம் கழிந்த பின்பே வேலையை முடித்துவிட்டு கைவிரல்களை நெட்டி முறித்தாள். வேலை நேரத்தில் தெரியாத மனச்சோர்வு, இப்போது மீண்டும் தலைகாட்ட அமைதியாக சிலநொடிகள் அமர்ந்திருந்தாள். அவன் பேசிய வார்த்தைகள் மீண்டும் அவளது நினைவிற்கு வர, நெஞ்சம் துவண்டு போனது. தொய்ந்த மனத்துடன் நெற்றியைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவள் கேபின் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவள், விழிகள் விரிய எழுந்து நின்றாள்.

கதவை மூடிவிட்டு உள்ளே வந்தான் கிஷோர்.

தன்னைக் கண்டதும் தடுமாறுவாள், அழுவாள் என்று அவன் நினைத்துக்கொண்டிருக்க, நிதானமாக தன்னை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்த சுமித்ராவின் விழிகளைச் சந்திக்கமுடியாமல் பார்வையை விலக்கினான்.

“உட்காருங்க!” என்றாள்.

எதுவும் சொல்லாமல் அமர்ந்தவன், “சுமி! நான்…” என்று ஆரம்பிக்க, நிறுத்து என்பதைப் போலக் கையைக் காட்டினாள்.

“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்ல கிஷோர்! மன்னிப்பையும் நான் எதிர்பார்க்கல. இன்னொரு முறை இப்படியொரு விஷயம் நடக்காதுங்கற உத்தரவாதம் மட்டும்தான் எனக்கு வேணும். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற பிரச்சனையால பெரியவங்கள தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாக்க விரும்பல.

நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். நடந்தது, நடந்து போச்சு. விட்ருங்க. நீங்க செய்ததையெல்லாம் நானும் தூக்கிப் போட்டுறேன். ஆனா, என்னோட ஒழுக்கத்தைப் பத்தி பேச, உங்களுக்கு எந்த அருகதையும் இல்ல. ஃப்ரெண்ட்ஷிப்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு!

நட்பைப் பத்தி உங்ககிட்ட போய்ச் சொல்றேன் பாருங்க. அன்னைக்கு ஆரூஷி பத்தி நீங்க பேசினப்பவே, உங்களைப் புரிஞ்சிட்டிருந்திருக்கணும். என்னோட அமைதியை, உங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. அப்படி ஏதாவது ஐடியாயிருந்தா, இந்த நிமிஷத்தோட தலைமுழுகிடுங்க” என்றாள்.
முகத்தில் கோபத்தைக் காட்டாமல், அமைதியாக நிதானமாகப் பேசியவளை அழுத்தமாகப் பார்த்தான்.

“என்னடா நேத்து அமைதியா இருந்தவ, இன்னைக்கு இப்படிப் பேசறாளேன்னு ஆச்சரியமா இருக்கா? முதலையோட பலம் தண்ணியில தான். அங்கே நான் பேசியிருந்தா, என்னை நானே அசிங்கப்படுத்திக்கிறா மாதிரி.”

தீர்க்கமாகப் பேசியவளை உள்ளுக்குள் எரிச்சலுடன் பார்த்தான். பெற்றோரிடம் வாங்கிய அறையில் கன்னம் இன்னமும் விறுவிறுவென இருந்ததை தடவிவிட்டுக் கொண்டான்.

“சுமி! தயவுசெய்து நீ என்னைத் தப்பா நினைக்காதே. நான் உன்னைக் காதலிக்கிறது நிஜம். என்னோட அன்பு நிஜம். நீ எனக்குத்தான் சொந்தம்னு நினைச்சதால, ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். ப்ளீஸ்! எனக்கு ஒரு சான்ஸ் கொடு. இனி, இப்படி எதுவும் நடக்காது” என்றான் கெஞ்சலாக.

“ஒண்ணுமட்டும் புரிஞ்சிக்கங்க கிஷோர்! எங்க அப்பாவோட மனசு கஷ்டப்படக் கூடாதுங்கறதுக்காக என்னோட வாழ்க்கையை நரகமாக்கிக்க நான் முட்டாள் இல்ல. அப்பாவை எப்படிக் கன்வின்ஸ் பண்றதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, உங்களையும், உங்க ஃபீலிங்ஸையும் மதிக்கிறேன். அந்த மரியாதையை, நீங்க காப்பாத்திக்குவீங்கன்னு நம்பறேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

உள்ளுக்குள் எழுந்தப் புகைச்சலைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க, எழுந்து ஜன்னலோரம் வந்து நின்றான்.

“சாப்டீங்களா?” எனக் கேட்டாள்.

கடுப்பை மறைத்துக்கொண்டு, “இல்லை” என்றான்.

“சரி, வாங்க சப்பிடலாம். நானும் இன்னும் சாப்பிடல. ஷேர் பண்ணிக்கலாம்” என்று சொல்லிவிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்தாள்.

‘இவள் எப்படிப்பட்டவள்?’ என்று புரியாமல் பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *