Categories
Uncategorized

உயிரில் உறைந்த நேசம்-13&14

Free Download WordPress Themes and plugins.

உயிரில் உறைந்த நேசம்-13

உள்ளம்
உணர்ந்த
உண்மையை
உதடுகள்
உதிர்த்திடும்
பொழுது
உறைந்த
நேசத்தின்
உன்னதம்
உரைத்திடுமா?
உறவு
உடைந்திடுமா?

வர்த்தினியின் மனதை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பது சிவாவிற்கு மட்டுமல்ல, மூர்த்திக்கும் நன்கு புரிந்தது .ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ள இயலாத மங்களாம்மா “அம்மு நீயும், குட்டிம்மாவும் டெல்லிக்கு வந்துடுங்க ராஜாத்தி. இங்க எதுக்கு தனியா இருக்கணும்? நீ வேலைக்கு போறப்ப குட்டிம்மாவை நானும், மூர்த்திப்பாவும் பார்த்துப்போம்”, என்று வர்த்தினியின் தாடையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தார்.

” இத்தனை வருஷம் நான் தனியாக தானே இருந்தேன் மா. அப்ப எல்லாம் பின்னாடி இருந்து என்னை கண்காணிச்சு பாதுகாத்த மாதிரியே இப்பவுமே இருந்துடுங்க மா”, என்று கூறிய வர்த்தினியின் வார்த்தைகளில் தன்னை தனியாக தவிக்க விட்டுவிட்டார்களே என்ற கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஸ்ரீநிதியை தவிர அங்கிருந்த அனைவருக்கும் வர்த்தினியின் பதிலில் எந்த வித வியப்பும் ஏற்படவில்லை. வர்த்தினிக்கு அனைவரும் வந்தவுடன் உணர்ச்சி மேலீட்டால் எதுவும் விளங்கவில்லை என்றாலும் சிறிது நேரத்திலேயே தெளிந்துவிட்டாள்.

அதுவும் சிவாவின் தலை முடி வெட்டப்பட்டிருந்த விதத்திலேயே அவன் ராணுவம் சார்ந்த வேலையில் இருப்பதையும் புரிந்து கொண்டாள். அந்த நொடியிலேயே வர்த்தினிக்கு தெரிந்துவிட்டது. வர்த்தினியும், ஆஷிர்யாவும் சிவாவின் கண்காணிப்பில் தான் இருந்துள்ளார்கள் என்று.

ஆனால் வர்த்தினிக்கு இன்னும் தெரிய வேண்டிய பதில்கள் இருந்தன. சிவா வாய் திறந்து கூறினாலொழிய அந்த பதில்களை வர்த்தினியால் அறிந்துகொள்ள முடியாது. வர்த்தினிக்கு சிவாவே கூறிட வேண்டும் என்ற எண்ணம்.
ஆனால் சிவாவிற்கு வர்த்தினியை தான் பாதுகாத்து வந்த விஷயத்தை கூறும் பொழுது அவள் கேட்கும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில் வர்த்தினியின் கோபம் எந்த அளவிற்கு செல்லும் என்று தெரிந்த காரணத்தினால் இப்பொழுது எதுவும் கூறிட வேண்டாம் என்ற எண்ணமே தோன்றியது.

ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்த பொழுது வர்த்தினியின் அருகில் வந்த ஆஷிர்யாவை சுட்டிக் காட்டிய சிவா “இந்த குழந்தையை எல்லோர்கிட்ட இருந்தும் ஒதுக்கி வச்சு என்ன சாதிக்கப் போறீங்க வதும்மா?”, என்றுக் கேட்டதும் விலுக்கென்று நிமிர்ந்து சிவாவைப் பார்த்த வர்த்தினியின் கண்களுக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் சிவா பஸ்பம் ஆவது நிச்சயம்.
இந்த முறைப்புக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் எனும் விதமாக சிவாவும் வர்த்தினியை அழுத்தமான பார்வையால் பார்த்தபடி இருந்தான்.” ஆஹா! ரெண்டும் முட்டிகிட்டா பெரிய பிரச்சினை ஆயிடுமே!”, என்று தன்னருகில் அமர்ந்திருந்த ஸ்ரீநிதியிடம் முனங்கிய எழில் “ஹே அம்மு! உன்னை டெல்லிக்கு தானே வர சொல்றோம். அதுக்கு ஏன் நீ கொல்கத்தா காளி அவதாரம் எடுக்குற. இந்த குட்டி ரௌடியும் அப்படியே உன்னை காபி அடிக்குது பாரு”, என்று நிலைமையை சகஜமாக்குகிறேன் எனும் பேர்வழியில் தனக்கு தானே ஆப்பை தேடிக் கொண்டான்.

” டேய் எருமை”, என ஸ்ரீநிதி, ஆஷிர்யா தவிர்த்து அனைவரும் எழிலை நோக்கி கொலைவெறி தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்தனர். “சரி சரி தெரியாம சொல்லிட்டேன் விட்டுடுங்க”, என்று உடனடியாக எழில் சரண்டர் ஆனதை கண்ட ஆஷிர்யா “மம்மா இனி இந்த எலி மாமா என்னை குட்டி ரௌடினு சொன்னால் அவங்களுக்கு கராத்தே பஞ்ச் கொடுக்கட்டுமா?”, என எழிலை முறைத்துக் கொண்டே வர்த்தினியிடம் கேட்டாள்.

“இதுக்கெல்லாம் நீ பெர்மிஷன் கேட்கவே வேண்டாம் ஆஷிமா .தப்பு செஞ்சா கண்டிப்பாக தட்டிக் கேட்கணும் .அதனால் இந்த எலியை நீ என்ன செய்யணும்னாலும் தாத்தா, பாட்டி, மம்மா, நான் எல்லோரும் உனக்கு சப்போர்ட் பண்ணுவோம்”, என்று சிவாக் கூறியதும் “சரியா சொன்ன மாப்பிள்ளை. குட்டிம்மா தாத்தா உனக்கு களரி கத்து தாறேன் செல்லம் “,என்று மூர்த்தியும் ஆஷிர்யாவிற்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்தார்.

அதைக் கேட்ட ஆஷிர்யாவிற்கு தனக்கு சாதகமாக பேசவும், தன்னுடைய மம்மாவை தவிர சொந்தங்களும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அவளுடைய முகத்திலேயே காட்டிக் கொடுத்தது .யார் என்ன பேசினாலும் சிவாவின் பார்வை வர்த்தினியின் மேல்தான் இருந்தது.

வர்த்தினியும் சிவா தன்னை பார்ப்பதை உணர்ந்துதான் இருந்தாள். அனைவரும் தன்னை காண வந்திருக்கும் பொழுது சிவாவின் மனைவியும், அவனது குழந்தைகளும் வராமல் இருந்தது சிவா தன் குடும்பத்திற்கு விருப்பமில்லாமல் தான் தன்னை காண வந்துள்ளான் என வர்த்தினி எண்ணிக் கொண்டாள்.

திடீரென்று ஞாபகம் வந்தவளாக “மூர்த்திப்பா தில்ஜீத் மாமாவும், தேவி அத்தையும் ஏன் வரலை?”, என்று வர்த்தினிக் கேட்டதும் சிவா தன்னால் முடிந்த அளவு வர்த்தினியை முறைத்தான்.”அம்மாவும், அப்பாவும் இறந்து ஏழு வருஷம் ஆயிடுச்சு”, என்று சிவாக் கூறியது வர்த்தினிக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் “ஓ “என்றதுடன் முடித்துக் கொண்டாள்.

மூர்த்தி, மங்களா தம்பதிகளிடம் பாசமிருந்தாலும் வர்த்தினிக்கு சிவாவின் அம்மா தேவியின் மேல் அளவுகடந்த பாசம் இருந்தது .எதற்கெடுத்தாலும் அதை செய்யாதே,இதை செய்யாதே என்று கூறிய தன் அம்மாவை விட அதற்கானக் காரணத்தை கூறி வழிநடத்திய தேவி அத்தைதான் வர்த்தினியின் ரோல் மாடல்.

தன்னுடைய அம்மா இறந்த பொழுது தெரியாத வலி இப்பொழுது சிவாவின் அம்மா இவ்வுலகத்தில் இல்லை என்பதை அறிந்த பொழுது வர்த்தினிக்கு மிகவும் நோகச் செய்தது. அதனால் தான் தன்னுடைய உணர்ச்சியை கூட வர்த்தினியால் வெளிக்காட்ட இயலவில்லை.

” ஏனக்கு ஏன் மாமா சொல்லல?”, என்று வர்த்தினி சிவாவிடம் கேட்டதற்கு “அதை விடு அம்முமா! முடிஞ்சதை பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இனி நடக்குறதை பற்றி யோசிப்போம்”, என்று சிவா பேச்சை திசை மாற்றிவிட்டான்.” சரி ஏன் நீ உன்னோட குடும்பத்தை கூட்டிட்டு வரலை? அவங்களுக்கு என்னை பார்க்க வர்ரது பிடிக்கலையா?”, என்று வர்த்தினி கேட்ட கேள்வியில் சிவாவிற்கு அவளது மனம் தனிமையில் தன்னை தானே தாழ்த்திக் கொண்டிருப்பது நன்கு புரிந்தது.

” ஹாஹாஹா”, என சிரித்த சிவா “என்னோட குடும்பம் மொத்தமும் இங்க இருக்கறப்ப வேற யார் வரணும்னு நீ எதிர்ப்பாக்குற?”, என்று கேட்டதும் ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்த வர்த்தினிக்கு புரிந்ததும் ஏன் என்று கண்களாலேயேக் கேட்டாள் .”தோணலை”, என்று சிவா பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது அதுவரை இவர்கள் பேசுவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஆஷிர்யா சிவாவின் அருகில் சென்றவள் “அம்பா நீங்க தனியாவா இருக்கீங்”, என்றுக் கேட்டாள்.

” ஆமாம் ஆஷிமா”, என்று சிரித்துக் கொண்டே சிவா கூறியதும் அதிலிருந்த வலியும், வேதனையும் வர்த்தினிக்கு நன்கு புரிந்தது.” உங்களுக்கு பயமா இருக்காதா அம்பா?”, என்று ஆஷிர்யா மறுபடியும் சிவாவிடம் கேட்டதற்கு இதுவரை அமைதி காத்ததே பெரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்த எழில் “அச்சோ சில்வண்டு! உன்னோட அம்பா இந்தியன் ஆர்மில லெஃப்டினண்ட் கர்னல். அவனுக்கு பயமா இல்லையானு கேக்குறீயே?”, என்று கூறிவிட்டு தான் ஏதோ பெரிய ஜோக் கூறியதை போல் சிரித்து கொண்டிருந்தான். எழிலின் வார்த்தைகளை கேட்டதில் ஆஷிர்யா சிவாவை பிரமிப்புடன் பார்த்தாள் என்றால் வர்த்தினி பெருமை கலந்த பயத்துடன் தான் பார்த்தாள்.

“அப்படின்னா நீங்க இங்கேயே இருக்கீங்களா அம்பா? யாரோ நைட் எல்லாம் வந்து கதவை தட்டுறாங்க டோர் பெல் அடிக்காம.அதனால் மம்மா பயந்துகிட்டு தூங்காம அழுதுகிட்டே இருக்காங்க”, என்று வர்த்தினி தூங்காமல் பட்ட அவஸ்தையை ஆஷிர்யா கூறிய பொழுது அந்த பிஞ்சு மனம் அடைந்த வேதனையும், ஆஷிர்யாவின் பொறுப்பும் மற்றவர்களை விட வர்த்தினியை மிகவும் தாக்கியது.

அதுவரை ஆஷிர்யாவை தூக்காமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சிவா ஆஷிர்யாவை தூக்கி தன்னுடைய மடியில் அமர்த்திக் கொண்டவன்” அம்பா இருக்குறவரைக்கும் இனிமே நீங்க பயப்பட வேண்டாம் ஆஷிமா. யார் உங்களை பயமுறுத்துனாங்களோ அவங்களையும் நான் கவனிச்சுக்கிறேன் .நீங்க இதை பத்தியெல்லாம் கவலைப்படாம கேந்திரிய வித்யாலாயால சேர்ந்து நியூ பிரண்ட்ஸ் கூட விளையாடுறதை பத்தியும், தாத்தாகிட்ட களரி கத்துக்கிட்டு எலி மாமாவை எப்படி அட்டாக் பண்ணலாம்கிறதையும் மட்டுமே யோசிக்கணும்”, என்று முதலில் சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசியவன் இறுதியாக ஆஷிர்யாவின் மூடை மாற்றும் விதமாக பேசி முடித்தான்.

அதுவரை அவனது மடியில் அமர்ந்து அவனது கையில் புதைந்திருந்த தனது கைகளை விடுவித்துக் கொண்ட ஆஷிர்யா “அம்பா யாராவது டச் பண்ணுனா எனக்கு பிடிக்காது. இனிமேல் என்னோட பெர்மிஷன் இல்லாமல் என்னை தூக்காதீங்க”, என்றுக் கூறிவிட்டு வர்த்தினியின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள். ஆனால் வர்த்தினிக்கு இது எதுவும் மனதில் பதியவில்லை.

சிவா பாதுகாப்பேன் என்றுக் கூறியதில் ஏதோ மறைமுக குறிப்பு இருப்பதைப் போன்றே வர்த்தினிக்குத் தோன்றியது. ஆஷிர்யா கூறியதில் சிவாவின் மனம் சுணங்கினாலும் இன்றைய நிலையில் பெண் குழந்தைகளுக்கு இது போன்ற முன்னெச்சரிக்கை பழக்கங்கள் இருப்பது அவசியமாயிற்றே என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்ட சிவா தன்னை சிந்தனையுடன் உற்று பார்த்துக் கொண்டிருந்த வர்த்தினியை கண்டுவிட்டு மூர்த்தியிடம் திரும்பி “மாமா உங்க அருமை பொண்ணு ரொம்ப யோசிக்குறா. ஆனால் ஆஷிமாவோட மனசையும் நினைப்புல வச்சு முடிவு எடுக்க சொல்லுங்க”, என்று கூறிவிட்டு “எழில் நீ என்கூட வா, நாம லஞ்ச் வாங்கிட்டு வரலாம்”, என எழிலையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.

செல்லும் முன் மூர்த்தியிடம் கண்களால் எதையோ உரைத்துவிட்டே வெளியேறினான் .”டேய் மாப்ள! இப்ப எதுக்கு லஞ்ச் வாங்க போறோம்னு என்னை வெளியே கூட்டிட்டு வந்துருக்க. வர்ரப்ப அப்பாகிட்ட கண்ணை வேற காட்டிட்டு வர. அம்முவை சமாதான படுத்தாம யாரோ மாதிரி ஒதுங்கி இருக்க, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”,என்று எழில் வரிசையாக அடுக்கிய கேள்விகளுக்கெல்லாம் எதுவும் பதில் கூறாமல் காரை ஸ்டார்ட் செய்தான் சிவா.

“டேய் நான் கேட்குறதுக்கு பதில் சொல்”, என்று எழில் கேட்டதற்கு அவனை திரும்பி பார்த்துவிட்டு வழியில் கவனம் செலுத்திய சிவாவின் இதழ்களில் அடக்கப்பட்ட சிரிப்பே இருந்தது .”மச்சான் நாம அங்க உட்கார்ந்து இருந்தால் உன்னோட அருமை தங்கச்சி இந்நேரம் உன்னோட மண்டையை பொளந்துருப்பா “,என்று சிவாக் கூறியதில் அதிர்ந்த எழில் வேகமாக தன்னுடைய மொபைலை எடுத்து கூகிள் ஆண்டவரிடம் தன்னுடைய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிட்டான்.

” என்னடா நான் சொன்னதுக்கு இந்நேரம் நீ உன்னோட ஹாஸ்பிடல்ல உனக்கு ஒரு பெட் ஏற்பாடு பண்ணாமல் மொபைலை நோண்டிகிட்டு இருக்க? அம்மு மேல இருக்குற பயம் போயிடுச்சோ?”, என்று சிவா நக்கலாக கேட்டதற்கு சற்றும் அலட்டிக்கொள்ளாத எழில்” சிவா நீ நேராக மெஹ்ருலி ரோட்ல இருக்குற தி ஹெல்மெட் சோன்க்கு போ”, என்று சிவாவிற்கு ஆணையிட்டான்.
” எதுக்குடா இப்ப ஹெல்மெட் வாங்கப் போற?”, என்று எழிலின் பதில் என்னவாக இருக்கும் என அறிந்து கொண்டே சிவா சிரிப்பை மென்றவாறுக் கேட்டான்.
“அது ஒண்ணுமில்லை மாப்ள! ஒரு குடும்பத்துல யாராவது ஒருத்தர் மட்டும் ரௌடியா இருந்தால் நம்பி போகலாம். நீ ஏற்கனவே முரட்டு பீஸ், இந்த அம்மு உன்கிட்ட மட்டும்தான் முறைச்சுப்பா, வேற யாராவது உன்னை பேசுனால் கண்டிப்பா கட்டையை வச்சு போட்டு தள்ளிடுவா, உங்க ரெண்டு பேரையும் விட உங்க அருமை பொண்ணு அந்த சில்வண்டு எலி மாமா அப்படினு கூப்பிடுறப்பவே எனக்கு கிலி ஆகுது. என்னோட அப்பா அம்மா எப்படி எனக்கு அப்படிகிறதுனு குட்டிம்மாக்கு டியூசன் எடுப்பாங்க.சோ ஒரு தீவிரவாத கும்பல் கிட்டே இருந்து என்னை நானே காப்பாத்திக்கணும்.அதனால் என்னோட பாதுகாப்புக்கு தேவையான அத்தனை உபகரணங்களையும் நான் வாங்கியே தீரணும்”, என்று மிகவும் தீவிரமாகக் கூறிய எழிலின் குரலில் உண்மையான பயம் இருந்தது.

எழில் கூறியதைக் கேட்டு சிவா எந்த பதிலும் கூறாமல் தாபாவிற்கு சென்று வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்து, அவற்றை வாங்கிக் கொண்டு வந்தவன் எழிலிடம் “மச்சான் நீயே டிரைவ் பண்ணு”, என்று கூறிவிட்டு அமர்ந்து விட்டான். எழிலும் சிவாவின் அமைதியைக் கலைக்கவில்லை.

சிவாவும், எழிலும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் எழிலின் கையை பிடித்த சிவா அவனது மொபைல் வாய்ஸ் ரெகார்டரில் இருந்து ஒரு பைலை ஓபன் செய்து ஒலிக்க விட்டான். அதைக் கேட்ட எழிலுக்கு சகலமும் அடங்கிவிட்டது. பின்னே எழில் பேசிய அனைத்தும் ரெகார்ட் செய்யப்பட்டிருந்ததை அறிந்து எழிலால் எப்படி நிம்மதியாக மூச்சு விட முடியும்.

” டேய்ய்ய்ய்ய்ய் ஏன்டா? ஏன்? நான் நீ பிறந்து தொலைச்சதுல இருந்து உனக்கு பிரண்டா இருக்கறதை தவிர வேற எந்த பாவமும் பண்ணலையே?”, என்று புலம்பிய எழிலை கைகாட்டி நிறுத்திய சிவா “அம்முவும், குட்டிம்மாவும் டெல்லிக்கு வர்ரதுக்கு முன்னாடியே எங்க கல்யாணம் முடியனும்.அப்படி கொஞ்சம் லேட் ஆனாலும் அதுவரைக்கும் அவங்க குர்கான்ல தான் இருக்கணும். அதுக்கு தேவையான விஷயங்களை நீ தான் பார்த்துக்குற. இல்லைனா இதை மூர்த்தி மாமாகிட்டயும், குட்டிம்மாகிட்டயும் கொடுத்துடுவேன்”, என்று மிரட்டுகிறானா, இல்லை எதற்கு இதை தன்னிடம் கூறுகிறான் என எழிலுக்கு புரியாதவாறு கூறிவிட்டு வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்.

சிவாவை தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த எழிலும், சிவாவும் கண்ட காட்சியில் அதிர்ந்து உறைந்துவிட்டார்கள். வர்த்தினிக்கு தெரிய விடக்கூடாது என்று நினைத்து அவர்கள் மறைத்த விஷயம் அறிந்து உக்கிர காளியாக அமர்ந்திருந்தவளை உச்சி குளிர செய்வானா சிவா?

உயிரில் உறைந்த நேசம் -14

சிவாவும், எழிலும் வீட்டினுள் நுழைந்தவுடன் கண்டது கண்ணீருடன் வர்த்தினியை நோக்கி கை நீட்டி பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை தான். அங்கிருந்த சூழ்நிலையை பார்த்தவுடன் சிவாவின் கண்கள் ஆஷிர்யாவை தான் முதலில் தேடின.

அங்கு ஆஷிர்யாவும், மங்களாம்மாவும் இல்லை என்பதை கண்ட பின்தான் வர்த்தினியின் அருகில் சென்றவன் “என்ன ஆச்சுமா? யார் இவங்க?”, என்று கேட்டான். வர்த்தினி சிவாவிற்கு பதில் கூறும் முன்பே அந்த பெண் மலையாளம் கலந்த தமிழில் “கேக்குறானே! சொல்லு உன்னை மாதிரியே ஒருத்தனை விட்டு இவளோட புருஷனை சாகுற அளவுக்கு அடிக்க வைச்சேன். அதனால் அவனோட பொண்டாட்டி நியாயம் கேட்டு வந்துருக்கானு சொல்லு”, என்று வர்த்தினியை பார்த்து கத்த ஆரம்பித்து விட்டாள்.

அதற்கெல்லாம் அசராத வர்த்தினி சிவாவை திரும்பி கூட பார்க்காமல் அந்த பெண்ணிடம் இன்னும் என்ன கூறவேண்டுமோ சொல் என்ற தோரணையில் பார்வையை செலுத்தி கொண்டிருந்தாள்.” என் ஏட்டனுக்கு இருக்குற செல்வாக்குக்கு அவர் அப்படி தான் நடந்துப்பார். உனக்கு இஷ்டமில்லன்னா பேசாம போக வேண்டியதுதானே! ஆள் விட்டு அடிப்பியோ! என்னை மாதிரி பணபலம் இருக்குறவங்ககிட்ட மோதுனா உன்னோட நிலைமை என்ன ஆகும்னு நான் காமிக்கிறேன்”, என்று தெனாவட்டாக வர்த்தினியை நோக்கி பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணை பார்க்க எழிலுக்கு பாவமாக இருந்தது.

” சும்மா இருக்குறவங்கள சொறிஞ்சு விடுதே இந்தம்மா. இது பேசுன பேச்சுக்கு ஒட்டு மொத்த வம்சமும் அழுகுற அளவுக்கு செய்வாங்கனு தெரியாம சீரியல் டயலாக் எல்லாம் பேசுது”,என்று எழில் தன்னருகில் இருந்த ஸ்ரீநிதியிடம் புலம்ப ஆரம்பித்திருந்த வேளையில், வர்த்தினி சிவாவின் பக்கம் பார்வையை திருப்பி இருந்தாள்.

” நீ அந்த அனித்தை என்ன பண்ணுன மாமா ?”,என்று வர்த்தினி கேட்ட பின்தான் சிவாவிற்கும், எழிலுக்கும் அந்த பெண் அனித்தின் மனைவி என புரிந்தது. வர்த்தினி கேட்டதிற்கு தான் செய்ததை அப்படியே கூறிவிட்டான் சிவா.

சிவா சொல்லியதை கேட்டதும் “உனக்கு அறிவிருக்கா? இல்லையா மாமா?”, என்று வர்த்தினி வள்ளென்று விழுந்தாள். “என்னங்க நீங்க அந்த லேடிக்கு பரிதாபம் பார்த்தீங்க. ஆனா அம்மு அண்ணாவை எதுக்கு திட்டுறா?,என்று ஸ்ரீநிதி எழிலிடம் சந்தேகம் கேட்டதற்கு “உனக்கு இன்னும் அவ கேட்டதுக்கான அர்த்தம் புரியலை. அக்கட சூடுமா இப்ப”, என்று எழில் கூறியதின் அர்த்தம் அடுத்த நொடியில் ஸ்ரீநிதிக்கு விளங்கிவிட்டது .

ஆம் வர்த்தினி அங்கு சிவாவை உலுக்கி கொண்டிருந்தாள்.” நீ அவனை தண்டிக்கிறப்ப ஏன் என்னை கூட்டிட்டு போகலை ?இன்னோரு தடவை அதே மாதிரி செய். நான் பார்க்கணும். அவன் வலியில துடி துடிக்கிறதை பார்க்கணும்”,என்று அசால்ட்டாக சிவாவிடம் கூறிவிட்டு எழிலின் பக்கம் திரும்பிய வர்த்தினி “டேய் அண்ணா! எனக்கு ஹாட் சாக்லேட் பட்ஜ் வித் நட்ஸ் போட்ட ஐஸ்கிரீம், பிளஸ் மெக்ஸிகன் கார்ன் வாங்கிக்கோ. இவளோட புருஷன் அடி வாங்கி அழுகுறதை வேடிக்கை பார்க்கிறப்ப சாப்பிடணும்”, என்று கட்டளையிட்டதை பார்த்து அனித்தின் மனைவிக்கு சற்று கிலியேற்பட்டு விட்டது.

பணத்தில் பிறந்து ,வளர்ந்து யாரையும் பணமிற்கும் திமிரில் துச்சமாக நடத்தி பழகிய அவளுக்கு வர்த்தினி, சிவாவின் தைரியம் புதிது.

“என்ன பயமுறுத்துறீங்களா? என்னோட அப்பா கிட்ட சொன்னா உங்களை இருக்குற இடமே தெரியாம செஞ்சுடுவார்”, என்று மனதில் இருந்த பயத்தை மறைத்து கொண்டு மீண்டும் திமிராக பேசிய அனித்தின் மனைவியை கண்டு எழில் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

வர்த்தினி சிவாவை திரும்பி பார்த்த பார்வையில் சிவா தன்னுடைய மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தவன் “அனித் இப்ப எங்க இருந்தாலும் அவனை அள்ளிக்கிட்டு வந்து நம்ம இடத்துல போட்டுடுங்க”, என்றுக் கூறிவிட்டு சோஃபாவில் அமர்ந்திருந்த மூர்த்தியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

” ஏய் என்ன பண்ற?”, என்று அலறிய அனித்தின் மனைவியை கை காட்டி நிறுத்திய வர்த்தினி “உன்னோட அப்பாவை கூப்பிட்டு என்ன கிழிக்க முடியுமோ அதை கிழிச்சுட்டு அப்புறம் பேசு. இப்ப முடிஞ்சா உன்னோட அருமை புருஷனை காப்பாத்திக்கோ!”, என்று வாசலை நோக்கி கையை காட்டிவிட்டு அமைதியாக நின்று கொண்டாள்.

எதுவும் செய்ய இயலாத அனித்தின் மனைவி வெளியேறியதும்தான் எழில் அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளியிட்டான். அதனைக் கண்ட சிவா “டேய் மாப்ள! இப்ப உன் தொங்கச்சி வந்து கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் அதுக்குள்ள நிம்மதி மூச்சு விடுற”, என்று சிரிக்காமல் கூறி எழிலின் இதயத்துடிப்பை தாறுமாறாக ஏற்றிவிட்டான்.

எழிலின் முகத்தில் இருந்த பீதியை திருப்தியாக பார்த்தவாறே “அம்மு எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வை. மாமாவும் ,அத்தையும் நேரத்துக்கு சாப்பிடணும். நான் குட்டிம்மாவையும், அத்தையையும் கூப்பிட்டு வரேன்”, என்று கூறிவிட்டு வர்த்தினியின் தாக்குதலில் இருந்து தற்காலிகமாக தப்பித்து ஓடிவிட்டான்.
அறைக்குள் நுழைந்த சிவா அங்கு கண்ட காட்சியில் வர்த்தினியின் பிடிவாதத்தை எப்படியாவது தகர்த்தெறிந்து விட்டு விரைவில் தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்ற முடிவை திடப்படுத்தி கொண்டான். சிவா உள் நுழைந்ததும் கண்டது தன்னுடைய சிறு வயது புகைப்படங்களை ஆசையுடன் மங்களாம்மாவிடம் காட்டிக் கொண்டிருந்த ஆஷிர்யாவை தான்.

ஒவ்வொரு போட்டோவையும் காட்டி கண்களில் மின்னல் மின்ன அதைப் பற்றி ஆஷிர்யா கூறிய பொழுது இத்தனை வருட ஏக்கத்தையும் ஒரே நாளில் தீர்த்துக் கொள்வது போலிருந்தது.” அட ஆஷிமா பாட்டிக்கு மட்டும்தான் உங்க போட்டோஸ் காமிப்பீங்களா? அம்பாக்கு காமிக்க மாட்டிங்களா?”, என்று கேட்டுக் கொண்டே தன்னருகில் வந்த சிவாவை பார்த்தவுடன் ஆஷிர்யா தன்னுடைய முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.

” என்னாச்சு குட்டிம்மா? ஏன் உங்களுக்கு கோபம்?”, என்று சிவா தன் முன்னால் பதட்டத்துடன் மண்டியிட்டு அமர்ந்ததும் ஆஷிர்யா “நீங்க ஏன் அம்பா வெளியே போனீங்க? நீங்க போனதும் ஒரு பேட் லேடி வந்து மம்மா கூட சண்டை போட்டாங்க தெரியுமா?”, என்று தன் மனக்கிலேசத்தை கூறினாள்.” சாரி ஆஷிமா அந்த டைம்ல நான் வெளியில் போனது தப்புதான். இனிமே ஆஷிமாவையும், வதும்மாவையும் தனியா எந்த பாதுகாப்பும் இல்லாமல் விட்டுட்டு போக மாட்டேன்”, என்று சிவா உறுதி கூறியதும் “ஓகே”, என்று உடனடியாக ஆஷிர்யா ஒத்துக் கொண்டாள்.

” ஓகே! இப்ப நாம சாப்பிட போகலாம்”, என்று கூறி ஆஷிர்யாவையும், மங்களாம்மாவையும் அழைத்துக் கொண்டு சிவா ஹாலிற்கு வந்த பொழுது அனைவரும் கீழே சாப்பிட தயாராக அமர்ந்திருந்தனர். “மம்மா”, என்று ஓடி வந்து வர்த்தினியைக் கட்டிக்கொண்ட ஆஷிர்யா வர்த்தினியின் முகத்தில் ஏதேனும் வேதனையின் சாயல் தெரிகிறதா என்பதை தான் முதலில் ஆராய்ந்தாள்.

” என்னாச்சு புஜ்ஜும்மா? மம்மா முகத்துல என்ன தேடுறீங்க?”, என்று புன்னகை முகமாக வர்த்தினி கேட்ட பின் தான் ஆஷிர்யா நிம்மதியாக சாப்பிட அமர்ந்தாள். திட்டமிட்டோ, திட்டமிடாமலோ ஆஷிர்யா தங்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருக்குமாறு சிவா அமர்ந்திருந்தான்.

தன்னுடைய பிளேட்டில் வைக்கப்பட்ட உணவை எடுத்து வழக்கம்போல் தன்னுடைய மம்மாவிற்கு ஊட்டுவதற்கு நிமிர்ந்த ஆஷிர்யா தன் முன்னால் உணவுடன் நீட்டப்பட்டிருந்த சிவாவின் கையை பார்த்து திகைத்துவிட்டாள். இதற்கு முன் தன்னுடைய மம்மாவை தவிர வேறு யாரும் ஊட்டியதில்லை என்பது ஒரு காரணம், மற்றும் ஒரு ஆண் ஊட்டுவதை சாப்பிடலாமா? கூடாதா? என அறியாததும் சேர்ந்து ஆஷிர்யா வர்த்தினியை நோக்கினாள்.

வர்த்தினி தலையாட்டியதும் ஆஷிர்யா சிவா ஊட்டியதை சமர்த்தாக வாங்கிகொண்டாள். “ஆஷிமா அப்படியே கொஞ்சம் எழில் மாமவைப் பாருங்க”, என்று சிவா கூறியதைக் கேட்டு எழிலை பார்த்த ஆஷிர்யாவிற்கு சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை.

அங்கு எழிலோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் முன்னால் இருந்த அனைத்து வகை உணவுகளையும் ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தான் .சிரித்துக் கொண்டிருந்த ஆஷிர்யாவின் காதில் சிவா ஏதோ கூறியதும் ஆஷிர்யா உடனடியாக மூர்த்தியின் பக்கம் திரும்பி “தாத்தா எலி மாமா சிக்கன் தில்ரூபாவை எனக்கு கொஞ்சம் கூட வைக்காமல் சாப்பிட்டுட்டாங்க பாருங்க”, என்றுக் கூறிவிட்டு சாப்பிட தொடங்கிவிட்டாள்.

இதைக் கேட்டதும் சாப்பிட்டு கொண்டிருந்த சாப்பாடு அப்படியே வாயில் வைத்தவாறும், கையில் எடுத்த சாப்பாட்டுடனும் எழில் “அட பிசாசே”, என்ற லுக்கை கொடுத்துக்கொண்டு இருந்தான். “ஏன்டா ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்த்துக்க வேண்டாமா? குட்டிம்மாக்கு தராமல் அப்படி என்னடா உனக்கு சாப்பாடு கேட்குது?”, என்று மூர்த்தி பொரிந்து தள்ள ஆரம்பித்ததும் தன்னை சுற்றி அனைவரையும் பார்த்த எழில் “குட்டிம்மா நீ ரொம்ப நல்லாவே பெர்பார்ம் பண்ற!”, என்றுக் கூறிவிட்டு தன்னுடைய வேலையை ஆரம்பித்தான்( அதாங்க சாப்பிடுற வேலை).

அனைவரும் ஏதோ ஒரு மோனநிலையில் சாப்பிட்டு முடித்தவர்கள் வர்த்தினியும், ஸ்ரீநிதியும் ஒதுக்கி வைத்து விட்டு வரும்வரை அமைதி காத்தார்கள். வர்த்தினி வந்தமர்ந்ததும் மூர்த்தி தான் “அம்மு நீ இப்ப உடனே முடிவு எடுத்து எங்ககூட கிளம்பனும்னு நான் சொல்லமாட்டேன். ஆனாலும் இனி உன்னை தனியா விட நாங்க விரும்பல .அதனால எப்ப கிளம்பனும்னு அப்படிங்கிற முடிவு மட்டும் நீ எடு. இதை நான் ரகுவோட இடத்துல இருந்து சொல்றேன்”, என்று வர்த்தினியிடம் அழுத்தமாக கூறிவிட்டு அமைதியாகிவிட்டார் .

மூர்த்தியை எதிர்த்து பேசவும், அவர் கூறியதை மறுக்கவும் வர்த்தினிக்கு தோணவில்லை. ஆனாலும் தான் தெரிந்து கொள்ள வேண்டியதிற்கு பதில் வேண்டும் என்பது வர்த்தினியின் முகத்திலேயே தெரிந்தது. அதனைக் கண்ட சிவா “அம்மும்மா என் கூட கொஞ்சம் வாங்க”, என்று அந்த ஹாலினை ஒட்டி இருந்த சிறிய பால்கனிக்கு அழைத்து சென்றான்.

அங்கு சென்றும் சில நொடிகள் அமைதிக் காத்தவன் “அம்மு நீ என்ன யோசிக்குறன்னு புரியுது .ஆனால் இப்ப எதுக்குமே நான் பதில் சொல்ல முடியாது. நீ நம்ம வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் உன்னோட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்றேன். இப்போதைக்கு குட்டிம்மாவை யோசிச்சு பாரு. இந்த ஒரு நாளிலேயே குழந்தையோட முகத்துல வர்ர அந்த சந்தோசம் அதுக்காக கொஞ்சம் உன்னோட முடிவை சீக்கிரமா எடு. அதுவும் இல்லாமல் எங்களுக்கு உங்க ரெண்டு பேரோட பாதுகாப்பும் முக்கியம், ப்ளீஸ்”, என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

“என்னடா மாப்ள ஓடிவரத பார்த்தால் அடி பலமோ!”, என்று உள்நுழைந்த சிவாவை பார்த்து கேட்ட எழில் சிவாவின் கையில் அவன் ஆட்டிக்கொண்டிருந்த மொபைலை பார்த்ததும் அமைதியாகி விட்டான். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த வர்த்தினி “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”, என்றுக் கூறியதே அங்கிருந்தவர்களுக்கு பெருத்த நிம்மதியை அளித்தது. பலவருடங்கள் கழிந்த நிலையில் வந்தவர்களுடன் சந்தித்த ஒரே நாளில் மனம் மாறி வருவாள் என்பது எதிர்பார்க்க இயலாத ஒன்று என்பது அனைவர்க்கும் புரிந்தது.

“ஓகே அப்பா! நீங்களும், அம்மாவும் இங்கேயே இருங்க. அம்முவும், குட்டிம்மாவும் வர்ரப்ப அவங்களோட ரூம் எல்லாம் பக்காவா நான் ரெடி பண்ணி வச்சிடுறேன்”, என்று எழில் கூறியதை கேட்டு மூர்த்தி எழிலை மிகவும் பாசமாக ஒரு பார்வை பார்த்து வைத்தார் .ஆனால் சிவாவோ முறைத்துக் கொண்டிருந்தான்.

” சரி நாங்க கிளம்புறோம். ஹேய் சில்வண்டு! உனக்கு ஏதாவது வேணும்னா உன்னோட அம்பாவுக்கு கால் பண்ணு”, என்று கூறிவிட்டு “பை பை”, என்று எழில் மிகவும் அவசரமாக வெளியேறிவிட்டான். அனைவரிடமும் விடைபெற்று வந்த ஸ்ரீநிதியும், சிவாவும் காரில் ஏறியவுடன் எழில் மிகவும் தீவிரமாக தன்னுடைய மொபைலில் தலையை புதைத்துக் கொண்டான்.

சிவா தன்னை முறைப்பது தெரிந்தும் தலையை நிமிர்த்தவில்லை. நிமிர்ந்தால் தன்னை நிமிர்த்திவிடுவான் என்பது அறியாதவனா எழில். ஆனால் அவனது தர்மபத்தினியோ “ஏங்க அத்தை, மாமாவை இங்க விட்டுட்டு வந்ததுக்கு நிஜமான காரணம் என்னங்க?”, என்று எழிலின் மௌனவிரதத்தை உடைக்கும் விதமாக கேட்டு அவனது முறைப்பை சம்பாதித்துக் கொண்டாள்.

” அது உனக்கு தெரியாதாமா? மூர்த்தி மாமாவோட பனிஷ்மெண்ட்ல இருந்து தற்காலிகமா தப்பிக்கத்தான்”, என்று சிவாக் கூறியதும் “அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. எல்லாம் அம்மு ,குட்டிம்மா பாதுகாப்புக்குத்தான்”, என்று கூறினாலும் “எமகாதகன் நம்ம பிளான் எல்லாம் கண்டுபிடிச்சுடறானே!”, என்று தான் உள்ளுக்குள் எண்ணிக்கொண்டிருந்தான்.

எழிலின் பதிலைக் கேட்டும் சிவா எதுவும் கூறாமல் இருந்தது எழிலுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது .”சிவா அம்முகிட்ட நீ உன்னோட லவ்வை சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு அப்புறம் உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போ. அதுவரைக்கும் அவங்க என்னோட வீட்டுல தான் இருப்பாங்க”, என்றுக் கூறிவிட்டு அமைதியாகிவிட்டான்.

ஆனால் சிவாவின் எண்ணமோ தன்னுடைய காதலை எவ்வாறு உரைப்பது என்பதிலேயே இருந்தது .எழில் கூறியதும் சரிதான் என்று தன்னை தேற்றிக் கொண்ட சிவா அந்த நொடியில் அறியவில்லை. தன்னை காதல் உரைத்து கைபிடிக்கக் கூறிய தன்னுடைய ஆருயிர் நண்பனே அவனது நீண்ட நெடிய தவத்தை சிதற செய்வான் என்று. அறிந்திருந்தால் பின்னால் ஏற்பட போகும் விளைவுகளை சந்திக்க தயாராகியிருப்பானோ?.

கார்கில் காக்க
கல்லறை காணவும்
கிஞ்சித்தும்
கிலியில்லா
காவலனவன்
காதலை
கவியேற்றிட
கலங்குவது
கோழைத்தனமோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *