Categories
Uncategorized

உயிரில் உறைந்த நேசம் -19

Free Download WordPress Themes and plugins.

உயிரில் உறைந்த நேசம் -19

வர்த்தினியின் வலிமை நிறைந்த வலியானது சிவாவை அறைய செய்தது. அடிவாங்கிய சிவா இதை எதிர்பார்த்தேன் என்பது போல் நின்றிருந்தது வர்த்தினியின் ஆத்திரத்தை மேலும் கிளறிவிட்டது.

அதே இடத்தில் இருந்தால் தன்னுடைய வார்த்தைகள் கட்டுப்பாடுகளின்றி கண்ணெதிரே இருப்பவனை காயப்படுத்தும் என புரிந்ததால் வர்த்தினி கதவினை திறந்து கொண்டு வெளியேறவும் எழில் கேட்டின் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

நுழையும் பொழுதே வர்த்தினியின் கோப முகத்தை கண்ட எழில் வர்த்தினியை தொடர்ந்து வந்த சிவாவின் முகத்தில் இருந்து எதையும் கண்டறிய முடியாமல் “அம்மு ப்ளீஸ் எதுவா இருந்தாலும் உள்ளே போய் பேசலாம் .எனக்காக ஒரு டென் மினிட்ஸ்”, என்று வர்த்தினியின் கை பிடித்து உள்ளே இழுத்து வந்து அமர வைத்தான்.

“அம்மு நான் சொல்றதை கொஞ்சம் கேளு .சிவா இந்த ஜென்மத்துல இதையெல்லாம் சொல்ல போறதில்லை. இந்த ஒரு வருஷமா தான் நான் இங்க இருக்கேன். ஆனால் சிவா உனக்காக செஞ்ச ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்தப்ப அவ்வளவு பிரமிப்பா இருந்துச்சு”, என்று எழில் கூறி கொண்டிருக்கும் பொழுதே வேகமாக வந்து அவனது வாயை தனது கையால் மூடிய சிவா “மச்சான் என்ன நடந்துச்சுனு தெரியாம நீ இன்னும் ரணகளம் ஆக்காம கிளம்பிடு”, என்றான்.

சிவாவினை முறைத்த வர்த்தினி “நீ சொல்லு அண்ணா உன்னோட மாப்பிள்ளையோட ஜெகஜால வித்தையெல்லாம்”, என்று கூறியதும் சிவாவின் கை தானாக விலகியது.

” நீ சும்மா இருடா மாப்ள எல்லா விஷயத்தையும் சொன்னதும் அம்மு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பா பாரு”, என கூறிய எழில் அறியவில்லை தான் கூற போகும் விஷயங்களினால் தான் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என வர்த்தினி மறுக்க போகின்றாள் என்று .

“சிவாக்கு உன்னை எப்பவுமே ரொம்ப பிடிக்கும் அம்மு. நாங்க டென்த் படிக்கிறப்பதான் நீ உங்கம்மா ஊருக்கு போன .அப்பவே தேவி அத்தைகிட்ட அம்மு காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரணும்னு சொன்னவன்”, என்று எழில் கூறிய பொழுது வர்த்தினி சிவாவை பார்த்த பார்வையில் குண்டூர் குண்டுமிளகாயின் நெடி நன்றாகவே வீசியது.

” அப்புறம்”, என கதை கேட்கும் பாவனையில் வர்த்தினி கேட்டதும் “இங்க அனித் உனக்கு பிரச்சினை பண்றது தெரிஞ்சதும் சுபாவை வேலையில் சேர்த்துவிட்டான். அதோட உனக்கு வீட்டுக்கதவை தட்டி டிஸ்டர்ப் பன்றானு டோர்ல கேமரா பிக்ஸ் பண்ணி ராத்திரியெல்லாம் அதையே பார்த்துகிட்டு இருப்பான்”, என்று எழில் கூறியதில் தன்னுடைய விரலால் தலையில் தட்டிய வர்த்தினி “அன்னிக்கு மாலில் புஜ்ஜும்மா முடியை பிடிச்சு இழுத்தவன், அப்புறம் அவனோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் இவங்களுக்கும் பனிஷ்மென்ட் தந்துட்டாரா உன்னோட எருமை மாப்ள”, என்று நக்கலாக கேட்டாள்.

” ஹேய் அம்மு நீ செம ஷார்ப். அப்படியேதான் நடந்துச்சு”, என்று எழில் ஆர்ப்பரிக்கவும் சிவா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். இருவரையும் ஒரு பார்வை பார்த்த வர்த்தினி “இந்த வாய் சவடால் பேசுற உன்னோட மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்க முடியாது. இப்ப நான் வீட்டுக்கு கிளம்புறேன் .அவனோட பொண்ணை கூட்டிட்டு வந்து இங்க விட்டுடு”, எனக் கூறிவிட்டு பதில் எதிர்பாராமல் வெளியேறிவிட்டாள்.

” டேய் என்னடா இப்படி சொல்லிட்டு போறா? நீ அவளை சமாதானப்படுத்தாம என்னை சைட்டடிச்சிட்டு இருக்குற!”, என்று எழில் பதறவும் அவனை சேர்த்தணைத்த சிவா “போ போய் என் பொண்ணை கூட்டிட்டு வா. அப்படியே இன்னிக்கு சாயங்காலம் ஷாப்பிங் போகணும்னு உன்னோட தொங்கச்சிக்கு சொல்லிடு”, என கூறிவிட்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்டான்.

“என்னை மண்டையை பிச்சுக்க வைக்குறதே இவனுங்க குடும்பத்துக்கு பொழப்பா போச்சு”, என்று புலம்பி கொண்டே தன்னுடைய வீட்டை அடைந்த எழிலிடம் “என்னடா சிவாவை சாப்பிட கூட்டிட்டு வர சொன்னா நீ தனியா வந்துருக்க?”, என்று மங்களாம்மா கேட்ட பின்தான் சிவா வீட்டிற்கு சென்றதற்கான காரணமே எழிலுக்கு ஞாபகம் வந்தது.

” மறந்துட்டேன்னு சொன்னா நமக்கு சோறு கிடைக்காது. அதனால அவன் வரலைன்னு சொல்லிடலாம் “,என்று எண்ணிய எழிலின் மைன்ட் வாயிஸை “எலி மாமா அப்பாவை கூப்பிட மறந்துடீங்களா?”, என்ற ஆஷிர்யாவின் கேள்வி அடக்கியது.

” சில்வண்டு உங்கப்பாதான் உன்னை கூட்டிட்டு வந்து விட சொன்னான்”, என்று எழில் ஆஷிர்யாவிடம் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே “என் பொண்ணை சில்வண்டுன்னு சொன்னா உனக்கு ஒரு மாசத்துக்கு ஜாங்கிரி கட்”, என்று உள்நுழைந்த சிவாவை பார்த்து எழிலுக்கு தான் பதட்டமானது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத சிவா வர்த்தினியின் அருகிலிருந்த சேரில் அமர்ந்து கொண்டு ஆஷிர்யாவை தூக்கி தன்னுடைய மடியில் இருத்தி உணவினை ஊட்ட ஆரம்பித்துவிட்டான். மற்றவர்களினால் சிவா, வர்த்தினியின் முடிவு என்னவென்பதை இருவரின் முக பாவனைகளில் இருந்தும் அறிய முடியவில்லை.

இருந்தும் எந்தவித பேச்சுமின்றி உணவினை முடித்து ஹாலுக்கு வந்தவர்களை “என்ன பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கீங்க?”, என்று மூர்த்தி கேட்டதும் “நாளைக்கு காலையிலே லஷ்மிநாராயண கோவிலுல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் மாமா. விடிகாலையில அஞ்சு மணிக்கு அங்க இருக்கணும் .வீட்டுக்கு வந்துட்டு பத்து மணிக்கு ஸ்கூல்க்கு போகணும் அட்மிஷன் போடுறதுக்கு”, என்று சிவா தன்னுடைய திட்டத்தை கூறிவிட்டு “புஜ்ஜும்மா நீங்க அத்தை கூட போய் தலை சீவிட்டு வாங்க நாம வெளியே போகலாம்”, என ஆஷிர்யாவை ஸ்ரீநிதியுடன் அனுப்பிவிட்டு வர்த்தினியின் பக்கம் திரும்பி அமர்ந்தான்.

” மாமா உங்க பொண்ணுக்கு கொஞ்சம் மந்திரிச்சு விடணும் உங்க பெர்மிசனோட”, என சிவா கூறியதும்” சரி மாப்ள “,என்று மூர்த்தி, மங்களம்மாவுடன் நகர்ந்துவிட்டார். எழில் அங்கேயே அமர்ந்திருப்பதை பார்த்த சிவா “மச்சான் நீதான் நான் செஞ்ச வேலைக்கெல்லாம் துணையா இருந்த அப்படின்னு உன் தங்கச்சி உன்னை அடிச்சாலும் சொல்ல மாட்டேன்”, என்று தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு சொல்லியதில் எழில் அந்த இடத்தை விட்டு காணாமல் போயிருந்தான்.

” பயபுள்ள அடி வாங்குறதுக்கு முன்னாடியே ஓடிட்டான். நான் பாரு அடி வாங்கியும் அசராம உன் முன்னாடி உக்காந்துகிட்டு இருக்கேன்”, என்று நக்கலடித்து கொண்டிருந்த சிவாவை பார்த்த வர்த்தினி வாயை திறக்கும் முன் “எதுவும் பேசாத அம்மு”, என்று சிவா தடுத்து விட்டான்.

வர்த்தினியின் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்து கொண்டவன் “என்னை அடிக்கிறது, மிதிக்குறது எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுல வந்து செய். என்னாலே உன்னையும் ,நம்ம பொண்ணையும் விட்டுட்டு இருக்க முடியாது. இன்னிக்கு ஈவினிங் நமக்கு கொஞ்சம் டிரஸ் எடுத்துட்டு பாப்பாக்கு தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்துடுவோம். நான் இன்னும் சொல்லாம விட்டதை எல்லாம் சீக்கிரமே உன்கிட்ட சொல்லிடுறேன்”, என கூறிவிட்டு அமைதியாகிவிட்டான்.
சிவாவின் வார்த்தைகளில் கட்டுப்பட்டோ, இல்லை தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தியோ வர்த்தினி அதன் பின்னான நிகழ்வுகளில் அமைதியாக ஆனால் புன்னகை முகமாகவே நடந்து கொண்டாள்.

மறுநாளைய விடியல் மனதளவில் துன்பத்தை அனுபவித்த இருவரின் மனதிற்கும் மருந்தானது எனக் கூறினால் மிகையாகாது. லஷ்மிநாராயண் கோவிலில் எளிமையாக திருமணத்தை முடித்தவர்கள் நேராக சிவாவின் வீட்டிற்கு சென்றார்கள்.

காரிலே இருந்து இறங்கியதும் ஆஷிர்யாவை தூக்கி கொண்ட சிவா வர்த்தினியிடம் “வதும்மா நம்மளை வீடியோ அண்ட் போட்டோஸ் எடுத்துக்கலாமா?”, என்று அனுமதி கேட்டான். சிவாவின் கேள்வியில் எழில் தான் கடுப்பாகி” டேய் உன் பொண்டாட்டி புள்ளைகிட்ட கூட பெர்மிசன் கேட்பியாடா?”, என்று அலறினான்.” கண்டிப்பா அவங்க சம்மதம் இல்லாமல் போட்டோஸ் எடுக்க மாட்டேன் எந்த சூழ்நிலையிலும்”, என்று கூறிய சிவாவிற்கு” நாம எடுத்துக்கலாம் மாமா”, என்று வர்த்தினி வார்த்தையால் தந்த அனுமதியை ஆஷிர்யா தன் முத்தத்தின் மூலமாக சிவாவிற்கு அளித்தாள்.

அழகிய தருணங்கள் அழியா படங்களாக உருமாறிய நொடியில் அங்கிருந்த அனைவரின் மகிழ்ச்சியும் மின்னலை போன்று பளிச்சென்று அவர்களின் முகத்தை பிரகாசமடைய செய்தது. வர்த்தினியும், சிவாவும் இணைந்து உள்ளே சென்ற நிமிடம் இருவரின் மனதிலும் ஆத்மார்த்தமான அமைதி தோன்றியது.

இருவரது காலும் வீட்டினுள் வைத்த நொடி எழிலுக்கு கண்ணை காட்டிய வர்த்தினி ஆஷிர்யாவிடம் திரும்பியவள் “புஜ்ஜுமா”, எனவும் “ரெடி மம்மா”, என்றுக் கூறியதும் சிவாவின் இரு தேவதைகளும் அவனது கன்னத்தில் தங்களது முத்தத்தால் அளவில்லா மகிழ்ச்சியை தந்தனர்.

வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த பூஜையறையில் வர்த்தினி விளக்கேற்றியதும் தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள். பூஜையறை இதற்கு முன் உபயோகத்தில் இருந்ததற்கான எவ்வித அடையாளமும் இல்லை.

அவளது பார்வையை உணர்ந்த சிவா “நீங்க வந்துதான் இதை உபயோகப்படுத்தணும்னு நான் இதுவரைக்கும் விளக்கேத்துனது இல்லை. ஆனால் டெய்லி கிளீன் பண்ணிட்டு உங்க பாஜ்ஜிக்கு வார்னிங் கொடுத்தேன் சீக்கிரம் அம்முவை கூட்டிட்டு வாங்கனு”, என்று புன்னகை முகமாக விளக்கவும் “ஓ”, என்ற ஒற்றை எழுத்துடன் வர்த்தினி முடித்துக் கொண்டாள்.

” மாப்ள எதிர்காலம் ரொம்ப பிரகாசமா இருக்கும் போல”, என்று எழில் தான் சிவாவை கிண்டலடித்து கொண்டிருந்தான். மங்களாம்மா வர்த்தினியை கிட்சேனுக்குள் அழைத்து செல்லவும் ஆஷிர்யாவுடன் தங்களது அறைக்குள் நுழைந்த சிவா உடைமாற்றி தேவையான டாக்குமெண்ட்ஸ் எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்ல தயாராகி வரவும் வர்த்தினி செய்த எளிய சமையலுடன் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே “வதும்மா சாப்பிட்டுட்டு ரெடி ஆகிடுங்க. ஸ்கூல்க்கு போய் அட்மிசன் போட்டுட்டு வந்துடலாம்”, எனக் கூறிய சிவா வர்த்தினியின் முகத்தில் வந்து போன கலக்கத்தை கவனிக்கவில்லை. சாப்பிட்டதும் எழுந்து எங்கே செல்வது என வர்த்தினி யோசிக்கையில் “நம்ம ரூம்ல எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க”, என்று அறை வாசலில் விட்டு விட்டு வந்த சிவா மூர்த்தியிடம் “மாமா அம்முகிட்ட பேசிட்டு கெட் டுகெதர்க்கு அரேஞ் பண்ணிடுறேன். நீங்க இங்கயே நாங்க வர வரைக்கும் ரெஸ்ட் எடுங்க”, என்று கூறினான்.

” இல்லை மாப்பிள்ளை நாங்க வீட்டுக்கு கிளம்புறோம் .நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க”, என்று அவர்களுக்கு தனிமை அளிக்கும் பொருட்டு கூறிய மூர்த்தியின் கூற்றை மற்றவர்களும் ஆமோதித்தனர் .வர்த்தினி கிளம்பி வந்தவுடன் காரை கிளப்பியவன் “வதும்மா என்ன ஆச்சு? ஒரு மாதிரி டல்லா தெரியுது முகம்”, என்று கேட்ட சிவாவை ஒரு பார்வை பார்த்த வர்த்தினி ஆஷிர்யாவை கண்களால் சுட்டி காட்டிவிட்டு “ஒண்ணுமில்லை நந்தா”, என்று கூறினாள்.

இருவரின் பேச்சையும் கவனித்த ஆஷிர்யா வர்த்தினியின் முகத்தை திரும்பி திரும்பி பார்ப்பதை உணர்ந்த சிவா “புஜ்ஜுமா அங்கே அட்மிஷன் போடுறப்ப உன்னோட பேரெண்ட்ஸ் நேம் கேக்குறப்ப என்ன சொல்வீங்க செல்லம் ?”,என்று கேட்டதும் ஆஷிர்யா அழகாக “ஹம்ஷவர்த்தினி சிவநந்தன்”, என்று கூறினாள் .

ஆஷிர்யாவிடம் பேசிக்கொண்டே கன்டோன்மென்ட் சதர் பஜாரில் அமைந்திருக்கும் கேந்திரிய வித்யாலயா 1 பள்ளியின் முன் வண்டியை நிறுத்தினான். ஆஷிர்யாவை தூக்கி கொண்டு வர்த்தினியுடன் உள்ளே சென்ற சிவா அட்மிஷன் பார்மில் தேவையானவற்றை நிரப்பி விட்டு அதில் சான்றிதழ்களை இணைக்கும் பொழுதுதான் வர்த்தினி கவனித்தாள் ஆஷிர்யாவின் பிறப்பு சான்றிதழில் தாய் தந்தை பெயராக வர்த்தினி சிவாவின் பெயர் இருந்ததை.

அனைத்து நடைமுறைகளையும் முடித்து விட்டு வெளியில் வந்து காரில் செல்லும் போதும் வர்த்தினி மிகவும் அமைதியாகவே வந்தாள். ஆஷிர்யாவிடம் பேசிக் கொண்டே வந்தாலும் சிவாவிற்கு வர்த்தினியின் அமைதி கலக்கத்தையே கொடுத்தது.

வீட்டிற்கு வந்தவுடன் வர்த்தினி ஆஷிர்யாவிடம்” புஜ்ஜுமா நீங்க எழில் மாமா வீட்டுல கொஞ்சம் நேரம் விளையாடுங்க. அப்பா அப்புறமா வந்து கூட்டிட்டு வருவார்”, என்று கூறி கொண்டிருக்கும் பொழுதே எழில் வந்து சேர்ந்தான் .

எழிலின் கையில் இருந்த சாப்பாட்டு கூடையை பார்த்த சிவாவிற்கு தான் பலத்த அடி வாங்க போவது புரிந்து போனது.” ஓகே அம்மு! நாங்க கிளம்புறோம், நீங்க ரெண்டு பேரும் சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க”, என்று வர்த்தினியிடம் கூறிவிட்டு கிளம்பிய எழிலை தடுத்து நிறுத்திய சிவா அவனது காதருகில் சென்று “மச்சான் எதுக்கும் உன்னோட மெடிக்கல் கிட் எடுத்து ரெடியா வச்சுக்கோ. எப்ப நான் மிஸ்டு கால் தந்தாலும் உடனே கிளம்பி வந்து வீட்டு மாப்பிளையை காப்பாத்திடு”, என சொல்லிய அடுத்த நொடி வர்த்தினியின் அருகில் வந்து அப்பாவியாக நின்று கொண்டான்.

இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்புடன் ஆஷிர்யாவை அழைத்து கொண்டு எழில் வெளியேறிவிட்டான். “சாப்பிடலாமா?”, என்று கேட்ட வர்த்தினியின் கையை பிடித்த சிவா “அம்மு ப்ளீஸ்டி இன்னிக்கு ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் சந்தோசமா பீல் பண்றேன் .நீ இப்படி முறைச்சிகிட்டு இருக்குறது கஷ்டமா இருக்குடி .எந்த கோபமா இருந்தாலும் அடிச்சிடு, அமைதியா மட்டும் இருக்காதே!”, என்று கெஞ்சியதில் சற்றே மனமிளகிய வர்த்தினி” ஓகே”, என்று ஒப்புதல் அளித்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் வர்த்தினியை தன்னுடைய ஓவிய அறையில் விட்ட சிவா “அம்மு இங்க இருக்குற பெயிண்டிங்ஸ் எல்லாம் பார்த்துகிட்டு இரு. நான் ஒரு டென் மினிட்ஸ்ல வரேன்”, என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

அந்த அறையை சுற்றிலும் பார்வையிட்ட வர்த்தினி சிவாவினை எண்ணி பெருமிதப்பட்டு கொண்டாள். அனைத்து ஓவியங்களிலும் வர்த்தினி, ஆஷிர்யா மட்டுமே நிரம்பியிருந்தனர். ஆனால் அவர்கள் உடன் சிவாவும் இருந்தான்.

ஒவ்வொரு ஓவியமாக பார்த்து கொண்டே வந்த வர்த்தினி அந்த குறிப்பிட்ட ஓவியத்தின் முன் அதிர்ச்சியாகி நின்று விட்டாள் .அந்த ஓவியத்தில் இருந்ததை பார்த்த வர்த்தினிக்கு அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகள் தானாகவே நினைவில் வந்தன.

கோவிலுக்கு செல்லும் முன் வர்த்தினியிடம் வந்த சிவா அவளது கையில் பச்சையும் ,சிவப்பும் கலந்த ஒரு புடவையை வைத்தவன் “அம்மு நிஜத்துலதான் இது நமக்கான கல்யாணம். என்னோட மனசளவுல நீ பிறந்த நிமிசத்துல இருந்து என்னோட மனைவிதான்”, என்று கூறி அவளது தலையை தடவிக்கொடுத்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

வர்த்தினி பார்த்த ஓவியத்திலும் இதே காட்சி தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அதிலிருந்த தேதியை பார்த்தவள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டது என புரிந்துகொண்டாள். அதற்கடுத்த இருந்த ஒவ்வொரு ஓவியமும் அவர்களது திருமண நிகழ்ச்சியில் நடைபெற்றவற்றின் நிழலாகவே இருந்தன.

ஆஷிர்யா பிறந்த நொடியில் சிவா தனது ஒரு கையில் குழந்தையுடன், வர்த்தினியை ஒரு கையால் அணைத்தவாறு இருந்த ஓவியத்தை கண்ட நொடியில் வர்த்தினியின் மனதில் மறைந்திருந்த கோபம் மீண்டும் மலையேறிவிட்டது.

வர்த்தினி மலையேறியதை அறியாமல் உள் நுழைந்த சிவா “பொண்டாட்டி என்ன பார்த்து முடிச்சிடீங்களா? நாம இப்போ டெர்ரஸ்ல போய் பேசுவோமா?”, என்று கேட்டதும் அவனை திரும்பி பார்த்த பார்வையில் என்ன உணர்ந்தானோ “ப்ளீஸ் அம்மு”, என்றதும் வர்த்தினி சிவாவின் பின்னே மவுனமாக சென்றாள்.

டெர்ரஸ்க்கு சென்றதும் அங்கிருந்த ஊஞ்சலில் வர்த்தினியை அமர வைத்த சிவா “என்ன கேட்கணுமோ கேளுடி இப்ப:, என்று வர்த்தினியை தன்னுடைய தோளில் சாய்த்து கொண்டு அவளுடைய தலையை தடவிக் கொடுத்தவாறு கேட்டான்.” நீ எதுக்கு அப்பப்ப வாங்க ,போங்கன்னு மரியாதை கொடுத்து பேசுற, சில நேரம் டி போடுற, இல்லைனா வதும்மானு கூப்பிடுற?”, என்று வர்த்தினி கேட்டதும் வாய்விட்டு சிரித்த சிவா தலை நிமிர்ந்த வர்த்தினியின் முறைப்பில் தான் அடங்கினான் .

” அது ஒன்னுமில்ல நம்ம பொண்ணுக்கு அப்பா அம்மாக்கு மரியாதை தரார்னு தெரியனும். நம்மளோட தனிமையிலே எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்கலாம். ஆனால் புஜ்ஜும்மா முன்னாடி நாம ரெண்டு பேரும் எப்படி பேசுறோமோ அப்படிதான் பாப்பாவும் வெளி உலகத்தை பார்ப்பா. எந்த குழந்தையா இருந்தாலும் பெத்தவங்களைதான் தன்னோட ரோல் மாடலா மனசுக்குள்ள பதிய வச்சிருப்பாங்க”, என்று சிவா கூறிய காரணம் வர்த்தினிக்கும் ஏற்புடையதாகவே இருந்தது.

” சரிங்க மேடம்ஜி இது மட்டும்தான் நீங்க கேட்க நினைச்சதா?”, என்ற சிவாவின் கேள்விக்கு தன்னுடைய பார்வையை மட்டும் பதிலாக்கிய வர்த்தினி சிவாவை விட்டு விலகி அமர்ந்து கொண்டாள்.

” புஜ்ஜும்மா பெர்த் செர்டிபிகேட்ல உங்க பேர் எப்படி வந்துச்சு? அதுவுமில்லாம என்னோட நேம் உங்களோட ஆர்மி ரெஜிமெண்ட்ல சேர்க்காமல் இன்னிக்கு எப்படி அட்மிஷன் போட முடிஞ்சது?”, என வரிசையாக வர்த்தினி கேட்ட கேள்வியில் சிவாவின் கை தானாக கன்னத்தை மூடிக்கொண்டது.

” ப்ளீஸ்டி அம்மு கன் தூக்குறவன் கன்னத்துல அடிவாங்குறது கொஞ்சம் பிரெஸ்டிஜ் இஸ்யூ. அதனாலே பதில் சொன்னதுக்கப்புறம் அடிக்க கூடாது”, என்று டீல் பேசிய சிவா வர்த்தினிக்கு தன்னுடைய இளவயதில் இருந்த சிவாவாகவே தோன்றினான்.

” அது நீ குர்கான் கிளம்பி வந்த அன்னிக்கே ஊர்ல போய் ஹாஸ்பிடல்ல நீங்க நேம் தப்பா மென்சன் பண்ணிருக்கீங்கனு சொல்லி முனிசிபாலிட்டிலயும் ஒரு லெட்டர் கொடுத்துட்டு, கோர்ட்லயும் நோட்டரி மூலமா மாத்திட்டேன். அப்பவே நம்ம ரெண்டு பேருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் செர்டிபிகேட் வாங்கிட்டேன். அதுக்கடுத்து ரெஜிமென்ட்ல ரெஜிஸ்டர் பண்றது எதுவும் பெரிய விஷயமில்லையே!”, என்ற சிவாவிற்கு இந்த தடவை கையால் அடிக்காமல் அங்கிருந்த உருட்டு கட்டை ஒன்றை தூக்கி சிவாவின் தலையை பிளப்பதற்கு தயாராகியிருந்தாள் வர்த்தினி.

வர்த்தினியின் கையில் கட்டையை பார்த்த சிவாவிற்கு கபால மோட்சம் கண்முன்னே வந்து சென்றது.” ஹேய் அம்மு அடிச்சிடாத ப்ளீஸ் “,என்று சிவா அலறியதும் “பாக்குறது பவித்ரமான வேலை ,செய்றது எல்லாம் மொள்ளமாறித்தனம்”, என கடுப்புடன் மொழிந்த வர்த்தினி கட்டையை கீழே போட்டுவிட்டு அமர்ந்துவிட்டாள்.

அமர்ந்தவளுக்கு காலையில் நடந்த கல்யாணத்தில் ஒரு கையில் ஆஷிர்யாவை தூக்கி வைத்து கொண்டே அனைத்து சடங்குகளையும் செய்த சிவாவும் அதனை பேருவகையுடன் கண்ட தன்னுடைய மனதின் நிலையும் மேலெழும்பி சிவாவை அடிக்கும் எண்ணத்தை கைவிட செய்தது. (ஹீரோ அடி வாங்குறது அவ்ளோ ஜாலியா இருக்கு).

வர்த்தினியின் முகத்தில் எதையும் கண்டறியா முடியாத சிவா “ஏன் அம்மு இந்த ஹீரோ எல்லாம் ஹீரோயின் என்ன நினைக்குறாங்கனு முகத்தை பார்த்தே கண்டுபிடுச்சுடுவாங்கலாமே? நீ படிக்கிற புக்ல எல்லாம் அப்படித்தான் போட்டிருக்கு. ஆனால் என்னால எதையும் கண்டுபிடிக்க முடியலையே? என்ன ரீசன் அதுக்கு?”, என்று மிகவும் தீவிரமான குரலில் கேட்டான்.

” ஹ்ம்ம் அவங்க எல்லாம் ஹீரோ. நீ வெறும் ஸீரோனு அர்த்தம்”, என்றுக் கூறிய வர்த்தினி திடீரென்று ஞாபகம் வந்தவளாக “உனக்கு தமிழ் படிக்க வராதே? நீ எப்படி அதெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட ?”,என்று சந்தேகத்துடன் கேட்டாள் .

“வது செல்லம் ஒரே நாளுல அடி மொத்தமும் வாங்குனா சரித்திரம் சிவாவை ரொம்பவும் சாதாரணமா பேசிடும். சோ டெய்லி கொஞ்சம் கொஞ்சமா நீ அடிப்பியாம், நானும் வெளியே சொல்லாம கெத்து மைண்டைன் பண்ணிப்பேன்”, என்று சொல்லிய சிவாவின் குரலில் அடி வாங்கபோவதற்கான வருத்தம் சிறிதுமில்லை.

அப்பொழுதும் தெளிவில்லாமல் இருந்த வர்த்தினியின் அருகில் அமர்ந்தவன் “அம்மு நீயும் ,புஜ்ஜும்மாவும் என்னோட உயிர். பொண்டாட்டி பிள்ளையை பாதுகாக்குறதுக்கு செய்ற ஒவ்வொன்னையும் நான் உங்களுக்காக இதெல்லாம் செஞ்சேன் அப்படினு சொல்றதுல காதலும், பாசமும் இருக்காது. நான் செஞ்சதுக்கு எனக்கு பதில் என்ன தரப்போறன்னு வியாபாரமா தான் இருக்கும். நான் சொல்றது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்”, என்று நீளமாக பேசிய சிவா வர்த்தினியின் கையிலிருந்த மோதிரத்தை காட்டி” இதுக்கு அர்த்தம் தெரியுமா அம்மு?”, என்று கேட்டான்.

காலையில் கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டி முடித்ததும் வர்த்தினியின் கையில் மோதிரத்தை மாட்டும்பொழுதே சிவா அந்த மோதிரத்தை காட்டி “இதுல இருக்குறது உனக்கு புரியுதா அம்மு?”, என்று கேட்டிருந்தான். அந்த மோதிரம் இரண்டு வட்டங்களில் அடைபட்ட எஸ் என்ற எழுத்துடன் இருந்தது.

வர்த்தினி யோசித்து பார்த்ததில் எதுவும் பிடிபடவில்லை அதனால் “தெரியலை”, என்று கூறியதும் “இந்த ரெண்டு ரவுண்டும் அண்டத்தை குறிக்குது. இந்த வட்டம் இல்லைனா எஸ்ங்கிற எழுத்து மட்டுமில்லை, அம்மு ,ஆஷிர்யா இல்லைனா இந்த சிவாவும் கிடையாது. நீங்க ரெண்டு பேர்தான் என்னோட மொத்த உலகம்”, என்று நீண்ட சொற்பொழிவாற்றி முடித்தா

இதுதான் சிவா அளவில்லாத அன்பை வர்த்தினியின் ஆரம்ப நாள் முதல் பொழிபவன். வர்த்தினி பிறந்து தளர்நடையிட்ட பொழுதிலிருந்து காலை திருமணத்தில் புடவை கொசுவம் தடுக்கி நடக்க முடியாமல் அவஸ்தைப்பட்ட பொழுது அனைவரும் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் மண்டியிட்டு அமர்ந்து புடவை மடிப்பை சரிசெய்து விட்டவன்.

ஆனால் சிவா தன்னையறியாமல் செய்திடும் இந்த சிறு சிறு செயல்களே அவன் மேல் வர்த்தினியின் கோபத்தை கொழுந்துவிட்டெறிய செய்தன. வர்த்தினியின் மோன நிலையை சிவாவின் “அம்முஉஉஉ”, என்ற அலறல் தான் விழித்தெழ செய்தது.

” என்ன?”, என்று கேட்டவளை “அம்மு என்கூட ஒர்க் பண்றவங்க எல்லோருக்கும் ஒரு கெட் டுகெதர் வைக்கணும் .உனக்கு ஓகேன்னா மத்த அரேஞ்மெண்ட்ஸும் செஞ்சிடலாம்”, என்று அடுத்த அடிக்கு தயாராகவே சிவா வர்த்தினியிடம் கேட்டான். “ஓகே இந்த வீகென்ட் வச்சுப்போம்”, என்று ஒப்புதல் கூறிய வர்த்தினி மாலை நெருங்கியதை உணர்ந்து “கீழே போகலாம் கொஞ்சம் சாய் குடிச்சிட்டு, விளக்கேத்திட்டு புஜ்ஜும்மாவை கூட்டிட்டு வரலாம்”, என்று கிளம்பியவளின் கையை பிடித்து கொண்டே சிவா கீழிறங்கினான்.

எழிலின் வீட்டை அடைந்தவர்கள் அங்கு கண்ட காட்சியில் கட்டுப்பாடின்றி சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். மூர்த்தியின் மடியில் ஆஷிர்யா அமர்ந்திருக்க மூர்த்தியோ” குட்டிம்மாக்கு இருக்குற திறமை கூட உனக்கு இல்லைடா. களரி சேர்ந்து ரெண்டு நாளுல கத்தியை என்ன லாவகமா பிள்ளை பிடிக்குது. முப்பத்தஞ்சு வயசு முழுசா முடிஞ்சும் மூக்கு முட்ட சாப்பிடுறதுல இருக்குற ஆர்வம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்குறதுல இல்லை”, என்று கத்தி கொண்டிருக்க எழிலோ ஷாஹி பிர்னியை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

சிரித்து கொண்டே உள்நுழைந்த சிவாவை கண்ட எழில் வேகமாக தலை முதல் கால் வரை ஆராய்ந்தவன்” மாப்ள எல்லாம் உள் காயமா? எதுவா இருந்தாலும் சொல்லிடு இப்பவே இன்ஜெக்ஷன் போட்டுடலாம்”, என்று கூறி வர்த்தினியிடம் இரண்டு அடிகளை தாராளமாக பெற்றுக் கொண்டான்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் கெட் டுகெதர் க்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை பற்றியும் ஆலோசித்து விட்டு சிவாவும், வர்த்தினியும் ஆஷிர்யாவை கூட்டிக் கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றனர். மூவரும் ஒரே அறையில் தூங்க சென்றது மூவரின் மனதிலும் மகிழ்ச்சியான மனநிலையை தந்தது. ஆஷிர்யா வெளிப்படையாக தன்னுடைய சந்தோசத்தை “அப்பா, மம்மா ஐ லவ் யூ”, என்று கூறி பகிர்ந்து கொண்டாள்.

சிவா வர்த்தினியின் முகத்தை பார்த்ததற்கு “இங்க என்ன வேடிக்கை பேசாம தூங்குங்க “,என்ற பதிலில் புன்னகையுடன் தூங்கிவிட்டான். வர்த்தினிக்கும் மனதிற்குள் மிகவும் நிம்மதியான அமைதி ஒன்று தோன்றியிருந்த காரணத்தினால் மறுநாளைய விடியலில் இருந்து தன்னுடைய குடும்பத்தை குதூகலத்துடனே கவனிக்க ஆரம்பித்தாள்.

எழில் ,ஆஷிர்யா கலாட்டாகளுடனும் வர்த்தினியின் சிவாவிற்கான கவுண்ட்டர்களுடனும் கெட் டுகெதர்க்கான நாளும் வந்து சேர்ந்தது. அன்றைய காலையில் எழுந்ததும் வர்த்தினியிடம் வந்த சிவா அவளது கையில் வைத்த குந்தன் புடவையை பார்த்து வர்த்தினியின் கண்கள் வியப்பில் விரிந்தன.

ஆஷிர்யா கூறிய பொழுது பழைய கசப்பின் எச்சமாக இருந்த நினைவுகளால் வர்த்தினி வாங்க மறுத்துவிட்டு வந்த புடவை தான் இப்பொழுது அவளது கைகளில் இருந்தது.” இது எனக்கு நல்லாருக்குமா மாமா? நான் ரொம்ப கலர் இல்லையே!”, என்று கேட்ட வர்த்தினிக்கு “என் பொண்டாட்டி எனக்கு அப்சரஸ். அதனாலே அவ என்ன கலர் கட்டுனாலும் அழகாதான் இருப்பா. நீ இந்த சேரியை என்ன மாடல்ல கட்ட போறன்னு மட்டும் யோசி, இதுக்கு மேட்சிங் ஜுவேல்ஸ் டிரெஸ்ஸிங் டேபிள் மேல இருக்கு”, என்றுக் கூறிய சிவா ஆஷிர்யாவை தயார்படுத்த சென்றுவிட்டான்.

மாலை விருந்தில் மூவரின் உடையும், அகத்தில் ஏற்பட்டிருந்த ஆழ்மன அமைதியின் விளைவால் முகத்தில் ஏற்பட்டிருந்த புன்னகையும் அழகிய குடும்பமாக வந்திருந்தோரின் கண்களை கவர்ந்திழுத்தன .சிலர் வர்த்தினியிடம் நேரடியாகவே “மேடம்ஜி வந்ததுக்கப்புறம் தான் சாப் சிரிக்கிறார். இல்லைனா ரைபிள்ல இருக்குற புல்லட் மாதிரி யாரை போட்டு தள்ளலாம்னு தான் முகத்தை வச்சிருப்பார்”, என்று கூறி சென்றனர்.

” அவர்கள் நகர்ந்ததும் சிவாவின் காதருகில் நீ என்கிட்ட அடி வாங்குனதை இவங்களுக்கு சொல்லட்டுமா மாமா?”, என்று கூறிய வர்த்தினியிடம் பழைய குறும்பு எட்டி பார்க்க ஆரம்பித்திருந்தது .”தாராளமா சொல்லு, தாய்க்கடுத்து தாரம் ,தப்பு செஞ்சா அம்மா மட்டுமில்லை என்னை அடிச்சு திருத்த என்னோட அம்முவும் இருக்கானு கர்வத்தோட சொல்லிப்பேன் “,என்று சிவா கூறிய பதில் வர்த்தினிக்கு விரிந்த புன்னகையை தந்தது .

அன்றைய கெட் டுகெதர்க்கு பின்னான நாட்கள் நலமாக நகர்வது போன்று தோன்றினாலும் சிவாவினால் வர்த்தினிக்குள் ஏதோ கோபம் கனன்று கொண்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. இவர்களின் பாச பரிமாற்றங்களில் வேறு எவராலும் வித்தியாசத்தை கண்டு கொள்ள முடியவில்லை.

சிவா வர்த்தினியிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே அதற்கான நாளும் தானாகவே வந்தமைந்தது. ஆஷிர்யா மதுராவிற்கு மூர்த்தி ,மங்களாம்மாவுடன் சென்று விட எழில் அவனது மனைவியின் ஊருக்கு சென்றிருந்தான்.

தாங்கள் தனித்திருக்கும் இந்த நேரமே வர்த்தினியின் வெளி தெரியா கோபத்தை அறியும் நேரம் என நினைத்த சிவா “அம்மு இன்னிக்கு நாம டெர்ரஸ்ல உட்கார்ந்து பேசுவோமா?”, என்று கேட்டான்.” வேண்டாம் பெயின்டிங் ரூம்ல உட்கார்வோம்”, என்று கூறிய வர்த்தினி சிவாவினை எதிர்பாராமல் அந்த அறையினுள் நுழைந்து விட்டாள்.

வர்த்தினியை பின் தொடர்ந்து வந்த சிவா அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டு “உனக்கு என்னடி கோபம் இன்னும் மனசுக்குள்ள இருக்கு? கல்யாணம் ஆகி ௪ மாசம் முடிஞ்சிருச்சு இன்னும் ஏதோ என்கிட்ட தெரியாதவன் கிட்ட ஒதுங்குற மாதிரியே தள்ளி போற!”, என்று கேட்டதும் சிவாவின் கன்னம் அடுத்த அடியை வாங்கியிருந்தது.

” என்ன கோபமா? இங்க இருக்குற அத்தனை பெயின்டிங்கிலும் நம்ம மூணு பேரும் சிரிக்குற சிரிப்பை நிஜத்துல இல்லாம போனதுக்கு காரணம் நீ. என்னை லவ் பண்ணுனா என்கிட்ட வந்து சொல்லிருக்கனும் ,ஏன் அம்மாகிட்ட கேட்டு அவங்க முடியாதுனு சொன்னதும் ஒதுங்கி போன நீ அப்படியே போயிருந்துக்க வேண்டியதுதானே !நான் இறந்த காலத்தை நினைக்கல .ஆனால் அப்ப நானும், புஜ்ஜும்மாவும் அனுபவிச்ச அத்தனை கஷ்டத்துக்கும் நீ மட்டும் தான் காரணம். எந்த சூழ்நிலையிலும் தான் மனசார காதலிக்குறவளை போராடியாவது கல்யாணம் பண்ணனும் அதை விட்டுட்டு அம்மா வேணாம்னு சொன்னாங்க, ஆட்டுக்குட்டி வேணாம்னு சொன்னாங்கனு சொல்ற உனக்கு எல்லாம் லவ் ஒரு கேடு! நீ கொடுத்த பாதுகாப்பை விட அதை தள்ளியிருந்து தந்த விதம் தான் உன்னை வெட்டி போடுற அளவுக்கு ஆத்திரத்தை தருது. கண்ட கருமாந்திரம் பிடிச்சவன் எல்லாம் நடுராத்திரி என் வீட்டு கதவை தட்டி என்னை சாகடிச்சதுக்கு நீ மட்டும் தான் காரணம் .இப்ப நமக்கு கல்யாணம் ஆனதால் பட்ட கஷ்டத்தை மறந்துட்டு உன்னை கொஞ்சி குலவனுமா?”, என்று தன்னுடைய ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் அனலாக கக்கிய வர்த்தினியை சிவா புன்னகை முகமாகவே பார்த்திருந்தான்.

” பேசி முடிச்சிட்டிங்களா மை டியர் குடியா ?(பொம்மை)”, என்று கேட்ட சிவா வர்த்தினியை மறுபடியும் தன்னுடன் சேர்த்தணைத்து கொண்டு “பப்பு நான் சொல்றதை கொஞ்சம் அமைதியா கேளு. அதுக்கடுத்தும் உனக்கு கோபம் இருந்தா நீ வைக்குற ரசம் ,சாம்பாரை கண்ணை மூடிட்டு சாப்பிடுறேன்”,( வர்த்தினிக்கு அனைத்து வித சமையலும் நன்றாக வந்தாலும் சாம்பார் சாம்பல் போன்றும், ரசம் விஷம் போன்றே வரும் )என்று அந்த நிலையிலும் அசராமல் பேசினான்.

“அம்மு ஒரு விஷயம் நீ தெளிவா யோசி. நாம எந்த அளவுக்கு மாடர்னா இருந்தாலும் நம்மளோட சில கலாச்சாரத்தை விட்டு வெளிய போக மாட்டோம். இப்ப புஜ்ஜும்மா விசயத்துலயும் நாம அப்படித்தான் நடந்துக்குறோம். அஞ்சு வயசு குழந்தை அம்மாப்பா பேச்சு கேட்கணும்னு எதிர் பாக்குறப்ப இருபது வயசு குழந்தை கேட்டா என்ன தப்பு? நான் உன்னை லவ் பண்ணுறேன் அப்படினு உங்கிட்ட வந்து சொல்லிருந்தாலும் அத்தையோட சம்மதமில்லாமல் நீ என்னை நினைச்சு கூட பார்த்திருக்க மாட்ட. பேன்ட் சர்ட் போடுறதால நீ தமிழ் பொண்ணு இல்லைனு ஆகிடுமா? நம்மளோட கலாச்சாரம் காதல் செய்றதுலயும் கட்டுப்பாட்டோட இருக்க கத்து கொடுத்திருக்கு. பெத்து வளர்த்த அம்மா, அப்பாவை விட வேற யாராலயும் நமக்கு நல்லது நினைக்க முடியாது. இதெல்லாம் மனசுல வச்சுகிட்டுதான் நான் விலகுனேன். நீ குர்கான் வந்ததும் உன்னை நேரா பார்த்திருந்தா என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டு போயிருப்ப. இத்தனை வருஷத்துல நீ உன்னை எந்த அளவுக்கு மோல்டு பண்ணியிருக்கியோ அதுவும் இல்லாம போய் பழசு ,புதுசுனு வாழ்க்கையை வேறுபடுத்தி உன்னை நீயே கஷ்டப்படுத்திட்டு இருந்திருப்ப. என்னோட “உயிருக்குள் உறைந்த நேசம்” நீ அம்மு. அப்படி இருக்கறப்ப பழைய கசப்பை நீ உதறிட்டாலும் அதோட வடு உனக்கு ஏற்பட காரணம் நான் அப்படினு நினைக்காமல் நாம தான் ஆரம்பத்துல இருந்து ஒரே குடும்பம்னு நினைச்சுக்கோ !”,என்று சிவா தன் பக்க வாதத்தை கூறியதும் வர்த்தினி சிறிது யோசனையில் ஆழ்ந்தாள்.

” ஓகே மாமா புரியுது “,என்று கூறிவிட்டு மறுபடியும் அங்கிருந்த ஓவியங்களை தன்னுடைய ஆழ்மனதில் பதிய வைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். ஆத்திரம் குப்பையில் கொட்டும் கழிவாக இருக்க வேண்டுமே தவிர குடும்பத்தை குலைத்திடும் குதர்க்கமாக இருக்க கூடாது என்பதை புரிந்து கொண்ட வர்த்தினி அன்று முதல் முழுவதுமாகவே சிவவர்த்தினியாகவே வலம் வர ஆரம்பித்தாள்.

உடையவனின் உயிரில் உறைந்த நேசம் வர்த்தினியின் உள்ளத்திலும் உருகி ஊர்போற்றும் காவலனின் ஆருயிராக வாழ்ந்திடுவாள் என்று நாமும் நம்பிக்கையுடன் விடைபெறுவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *