Categories
Uncategorized

கல்கி-1

Free Download WordPress Themes and plugins.

கல்கி-1

மணமணக்கும் மண்ணின் மேல் கொண்ட மீளா மையலினால் மழைத்துளிகள் மல்லிகை மணத்துடன் மனிதர்களின் மனதையும், மண்ணுடன் சேர்த்து குளிர செய்து கொண்டிருந்த தூங்கா நகரத்தில் மகிழ்ச்சியுடன் அனைவரும் ஊர்ந்து கொண்டிருந்தனர்.

மண்ணின் குளுமையும், மக்களின் மகிழ்ச்சியும் தன்னை எந்தவிதத்திலும் பாதித்திடாது என்று இறுகிய முகத்துடன் தனது கையில் வைத்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவளை நோக்கிய டிரைவர், “ஏன் ஆத்தா இப்படி உம்முனு வறீங்க? யாராவது உரண்டைய இழுத்துட்டாகளா? இம்புட்டு இறுக்கமா இருக்குறது பொம்பளைப்பிள்ளைக்கு நல்லா இல்லை ஆத்தா”, என்று மனதில் தோன்றியதைப் பேசினார்.

பாவம் அவரும் என்ன செய்வார்? காலவாசலில் ஏறியவள், “ஏர்போர்ட்”, என்று கூறியதுடன் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டால் மண்மணக்கும் மதுரையையும், மீனாட்சியின் காதலையும், அழகரின் பாசத்தையும் தன் டாக்ஸியில் ஏறுபவரிடம் வாய்மூடாமல் கூறுபவரால் எப்படி அமைதியாக வரமுடியும்?

டிரைவர் பேசியதைக் கேட்டவள் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் இருந்ததில் அந்த வயதான ஓட்டுநர், “இந்தப் புள்ளைக்கு காது கேட்காது போல இருக்கே! மீனாட்சி மாதிரி அம்சமா இருக்கு. இதுக்கு இப்படி ஒரு குறையா ஆத்தா? அந்த சொக்கனும் அழகரும் தான் இந்த புள்ளையப் பாதுகாக்கணும்”, என்று வெள்ளந்தியாக வேண்டிக்கொண்டார்.

சற்று நேரம் கழிந்து ஏர்போர்ட்டில் அவள் செய்யப்போகும் பிரளயத்தை அறிந்திருந்தால் மனிதர் சொக்கனையும், அழகரையும் ‘பார்த்து இருந்துக்கோங்க’ என்று கூறி இருப்பாரோ!

ஏர்போர்ட்டில் இறங்கியதும் தர வேண்டிய பணத்தை தந்துவிட்டு தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு நகர தொடங்கியவளை தடுத்து நிறுத்திய டிரைவர் அவளது முகம் பார்த்து, “சூதானமா போய்ட்டு வா ஆத்தா! அந்த மீனாட்சி உனக்கு நல்ல வழியைக் காட்டுவா. சாப்பிட்டிட்டு உள்ள போ ஆத்தா! நான் வாரேன்”, என்று கூறிச் சென்றுவிட்டார்.

டாக்ஸி டிரைவர் கூறிய வார்த்தைகளுக்கு எவ்வித உணர்வையும் காட்டாமல் ஏர்போர்ட்டின் உள் நுழைந்தவள் போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு தான் செல்ல வேண்டிய விமானத்திற்கான நுழைவு வாயிலுக்கு சென்று காத்திருக்க தொடங்கினாள். விமானத்தினுள் சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டு கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களில் தொலைய தொடங்கியவளின் பொறுமையும் கிளம்ப வேண்டிய நேரத்தில் விமானம் கிளம்பாததால் தொலையத் தொடங்கியது.

11.45 க்கு கிளம்ப வேண்டிய விமானம் ஒரு மணி வரைக்கும் கிளம்பாமல் இன்னும் ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று தாமதித்து கொண்டு எவ்வித காரணமும் கூறாமல் இருந்தால் எருமைக்கே பொறுமை தொலையும் எனும் பொழுது பொறுமை என்றால் என்னவென்று கேட்கும் அவளுக்கு தொலைந்ததில் ஆச்சரியமில்லை. விமானியே வந்து சிறு கோளாறு அதை சரிபடுத்த முயற்சி செய்கின்றோம் அதுவரை வெய்டிங் ஹாலில் காத்திருக்குமாறு கூறிய பொழுது அவரிடம் சென்று நின்றவள் நேம் பேட்ஜில் இருந்த பெயரை பார்த்து விட்டு, “மிஸ்டர் அமர் என்ன கோளாறு என்று விளக்கி கூற முடியுமா?”, என்று கேட்டாள்.

தன்னிடம் கேள்வி கேட்டவளை ஏற இறங்க பார்த்த விமானி தன்னுடைய முகத்தில் புன்னகையை தவழவிட்டபடி, “மன்னிக்கவும் மிஸ் சிறு கோளாறு”, என்று கூறினான். “அந்த சிறு கோளாறுதான் என்னவென்று கேட்டேன்”, என்று நிமிர்வுடன் தெளிவாகக் கேட்டவளை பார்த்து என்ன தோன்றியதோ அந்த விமானிக்கு, “அதைப் பற்றிக் கூறினால் உங்களுக்குப் புரியாது”, என்று சொல்லிவிட்டு நகரத் தயாராகிவிட்டான்.

“மிஸ்டர் அமர்…! எனக்கு புரியாததைப் புரியும்படி விளக்கி கூற உங்களால் இயலாதா ?இல்லை தெரியாதா?”, என்று நக்கல் இழையோடிய குரலில் கேட்டவளின் பிடிவாதம் அமருக்கு புரிந்ததோ என்னமோ அவளது அருகில் வந்தவன், “விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இப்பொழுது புறப்பட்டால் வெடித்து சிதறும் வாய்ப்புகள் அதிகம். அதனால் நாங்கள் மாற்றுவழி ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்”, என்று கூறினான்.

“அது என்ன மாற்றுவழி?”, என்று அவள் கேட்பதற்கும் பிளைட் அட்டெண்டன்ட் ஒருவர் வந்து அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறி வெய்ட்டிங் ஹால் செல்லுங்கள் என்று கூறவும் சரியாக இருந்தது. அதனால் அனைவருடனும் தன்னுடைய பேகையும் எடுத்து கொண்டு வெளியேறி வெய்ட்டிங் ஹாலுக்கு சென்ற பொழுது ஒவ்வொருவரின் புலம்பலையும் கேட்டு இகழ்ச்சியான முறுவலே பூத்தது.

விமானத்தை விட்டு வெளியேறி வெய்ட்டிங் ஹாலிற்கு செல்லும் வழியில் சிலர் விமான பணியாளரிடம், “சார்…! எனக்கு சென்னையில இருந்து மூன்றரை மணிக்கு மஸ்கட் பிளைட். இப்பவே ஒண்ணே காலாச்சு. அந்த பிளைட்டை விட்டுட்டா கம்பெனில புதுசா டிக்கெட் போட்டுத் தரமாட்டாங்க சார். அடுத்து எப்ப சார் பிளைட் கிளம்பும்னு சொல்லுங்க”, என்று பரிதவித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் காணும்பொழுதே தெரிந்தது பட்ட கடனுக்காக மேலும் கடன்பட்டு கடும் வெயிலில் பாலை மணலில் உழைக்கும் வர்க்கம் என்று. “நீங்க சொல்றது புரியுது சார். வாங்க எல்லோருக்கும் லஞ்ச் ஏற்பாடு பண்ணிருக்கோம். நீங்க சாப்பிட்டு முடிக்கிறதுக்கு முன்னாடி வேற ஏற்பாடு பண்ணிடுவோம்”, என்று விமான நிறுவன பணியாளர்கள் தங்கள் பேச்சுதிறமையைக் காட்டி கொண்டிருந்தனர்.

அயல்தேச விமான பயணத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்பாக ஏர்போர்ட்டில் இருக்க வேண்டுமே என்ற அப்பயணிகளின் பரிதவிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் அவர்களை எளிதாக சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்த விமான நிறுவன ஊழியரை அணுகியவள், “இப்ப நாங்க லஞ்ச் முடிக்கிறப்ப இங்க இருந்து கிளம்புறதுக்கு ஆல்டர்நேடிவ் அரேன்ஜ் பண்ணிடுவீங்க?”, என்று மிகவும் அமைதியாகக் கேட்டாள்.

“எஸ் மேடம் கண்டிப்பா”, என்று இன்முகமாக கூறிய அந்த பணியாளரிடம், “ஹூ இஸ் யுவர் ஹையர் அஃபீசியல்? நான் இப்பவே பார்த்தாகணும்”, என்று அதிகாரமாக உரைத்தவளின் குரலில் அங்கிருந்த அனைவரும் சிறிது அரண்டு போகத்தான் செய்தனர்.

“மேடம்…! அவர் கொஞ்சம் பிசியா இருக்கார். நீங்க பர்ஸ்ட் லஞ்ச் முடிச்சிடுங்களேன்”, என்று திரும்பவும் கூறிய வார்த்தைகளையே கூறினார்கள். “உங்க ஹையர் ஆஃபிஸல் இப்ப வந்தாகணும். ‘என்ன ஆத்தா வையும், சந்தைக்கு போகணும், காசு கொடுங்குற’ டயலாக் மாதிரி லஞ்ச் சாப்பிடுங்கனு அதே மோடில் சொல்லிட்டு இருக்கீங்க. இப்ப உடனே வரணும்னு உங்க சீப்க்கு சொல்லுங்க”, என்ற அவளது அதட்டலில் அங்கிருந்த சிலரும் சேர்ந்து கொண்டனர். வேறு வழியின்றி தன்னுடைய மேலாளரை அழைத்தனர் விமான நிறுவன ஊழியர்கள்.

“மேடம்…! எங்க இன்சார்ஜ் ஆஃபீசர் இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவாராம். அதுக்குள்ள லஞ்சை முடிச்சிடுங்க மேடம்”, என்று மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்தவர்களிடம், “எங்க இருக்கார்ன்னு சொல்லுங்க. நானே போய்ப் பார்த்துக்குறேன்”, என்று கூறிவிட்டு அந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் அலுவலக அறையை நோக்கி நடக்கத் தொடங்கியவளை என்ன சொல்லி நிறுத்துவது என்று புரியாமல் முழித்தனர் விமான நிறுவன ஊழியர்கள்.

அறையின் முன் சென்று நின்றவள் பெயருக்கு கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்ததும் அவள் பின்னே வந்தவன், “சார்…! சொல்லச் சொல்லக் கேட்காம வந்துட்டாங்க”, என்று தனக்கு அடுத்து கிடைக்கப்போகும் அர்ச்சனையை மனதில் வைத்து வேக வேகமாகக் கூறினான்.
அவள் நின்ற தோரணையே தன்னை தோரணம் கட்டி தொங்க விட்டு விடுவாள் என்பது அந்த அதிகாரிக்கு தெரிந்து போனது. இருந்தாலும் தன்னுடைய மேனேஜ்மென்ட் வகுப்பில் கற்ற வித்தையை காட்டும் விதமாக, “எஸ் மேடம்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”, என்று ஒன்றுமே தெரியாதவாறு கேட்டான்.

முகத்தில் எவ்வித உணர்வும் காட்டாமல், “யுவர் குட் நேம்”, என்று மட்டும் கேட்டாள். “சங்கர் மேடம்”, என்றதும், “மிஸ்டர் சங்கர்! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில இருந்துகிட்டு தமிழ் பேச வராத உங்களை ஏன் இங்க வேலைக்கு வச்சாங்கன்னு தெரியணும். அதை எப்படி தெரிஞ்சுக்குறதுங்கிற ஹெல்ப் பண்ண முடியுமா?”, என்று கேட்டவளின் தொனியே பீட்டர் விட்டதுக்கு நீ பதில் சொல்லு முதலில் என்பது போன்று இருந்தது.

“ஓஹ்! ஐ நோவ் தமிழ் மேடம்! பட்,”, என்று கூறி கொண்டிருந்தவன் அவளது இகழ்ச்சியான முறுவலில் “இல்லை மேடம் உங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சேன். சொல்லுங்க மேடம்! உங்களுக்கு நான் என்ன ஹெல்ப் பண்ணனும்?”, என்று கேட்டான்.

“மிஸ்டர் சங்கர்…! பிளைட் கிளம்ப வேண்டிய நேரத்தை தாண்டிடுச்சு. அடுத்து எப்ப கிளம்பும்? உங்க ஸ்டாப் சொல்ற மாதிரி நீங்க என்ன அல்டெர்நாட்டிவ் செஞ்சிருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”, என்று கோபம் அடக்கப்பட்ட குரலில் கேட்டாள்.” எஸ் மேடம் வித் ப்ளஷர்”, என்று கூறிய சங்கர், “அதுக்கு முன்னாடி நீங்க லஞ்ச் முடிச்சுட்டு வந்துடுங்க”, என்ற பழைய பல்லவியைக் கூறினான்.

“ஏன் நீங்க கொடுக்குற சாண்ட்விட்ச் சாப்பிட்டதும் மேடம் இனி நாளைக்கு தான் நீங்க கிளம்ப முடியும். வி ட்ரைட் இன் ஆல் வேய்ஸ், சாரி பார் தி இன்கன்வீனியன்ஸ்ன்னு, சொல்றதுக்கா?”, என்ற நெத்தியடியான அவளது பதிலில், “உன்னைப் போல எத்தனை பேரை சமாளிச்சிருப்போம்”, என்ற பாவனையே சங்கரின் முகத்தில் தோன்றியது.

“நோ மேடம்! நாங்க வேற அரேஞ்மென்ட் பண்ணிட்டு இருக்கோம். இன்கேஸ் அப்படி செய்ய முடியாத பட்சத்துல அடுத்த பிளைட் எங்களோடது நைட் ஒன்பது மணிக்கு இருக்கு. அதுல நீங்க போகலாம்”, என்று மின்னாமல் முழங்காமல் ஒரு இடியைத் தூக்கி இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடலாம் என்று எண்ணி கொண்டிருந்தோரிடம் இறக்கிய அந்த சங்கரை கண்களால் பஸ்பமாக்கி கொண்டிருந்தவள் அவனை அடித்து விடக்கூடாது என்று தன்னுடைய கைகளை கட்டுப்படுத்தி பேன்ட் பாக்கெட்டினுள் விட்டுக்கொண்டாள்.

அவள் இங்கு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சிலர் மறுநாளில் செல்லும் விமானத்திற்கு டிக்கெட்டை மாற்றி கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியேற ஆரம்பித்திருந்தனர். வேறு சிலர் அடுத்த விமான நிறுவனத்தை அணுகி அதில் உடனடியாக கிளம்பும் விமானத்திற்கு புக் செய்து கொண்டிருந்தனர்.

இவை அனைத்தையும் பார்வையிட்டவளின் கவனத்தை, “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்”, என்று தன்புறம் திருப்பிய சங்கராகப்பட்டவன், “மேடம்…! நீங்க டிக்கெட் கேன்சல் பண்ணுனா புல் ரீஃபண்ட் கிடைக்க அரேஞ் பண்றேன். அப்படி இல்லைனா ஒன்பது மணிக்கு கிளம்புற பிளைட்ல ஒரு டிக்கெட் கன்பர்ம் பண்ணி தாரேன். டிக்கெட் கான்செல் பண்ணிட்டு நீங்க அடுத்து கிளம்புற ஜெட் ஏர்வேஸ்ல புக் பண்ணிக்கலாம். டெஸிஸின் இஸ் யுவர்ஸ்”, என்று கூறித் தன்னுடைய நிலைமையைத் தானே மோசமாக்கிக் கொண்டான்.

ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் டிக்கெட்டை ஆன்லைனில் செக் செய்ததில் இதற்கு கட்டிய கட்டணத்தை விட இரண்டு மடங்காக இருந்தது. கடைசி நேரத்தில் பதிவு செய்தால் கட்டணங்களின் விலை கடுகில் இருந்து கோபுரம் அளவிற்கு உயர்ந்தே இருக்கும்.

அவளுக்கு பிரச்சினை செய்வதில் விருப்பமில்லை. ஆனால் இவர்களுடைய பொறுப்பற்ற அலட்சிய போக்கினால் தன்னுடைய பிரியாம்மா நான்கு மணிக்கு சென்னையில் தனக்காக மிகவும் முக்கியமான ஒருவருடன் ஏற்பாடு செய்திருக்கும் மீட்டிங்கைத் தாமதப்படுத்துவதே அவளது எரிச்சலுக்குக் காரணம்.

அதற்கு எண்ணெய் ஊற்றியது விமான நிறுவனப் பணியாளர்களின் மேம்போக்கான பேச்சுகள். தன்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று கூறிவிட்டு இனி உன்பாடு என்று அலட்சியமாக நின்று கொண்டிருந்த சங்கரை பார்த்தவள், “எனக்கு ரீஃபண்ட் தேவையில்லை”, என்று கூறிச் சிறிது இடைவெளிவிட்டவள், “ஆனால் ஜெட் ஏர்வேஸ்சில் நீங்களே டிக்கெட் புக் செய்து தந்துவிடுங்கள். அதற்குரிய பணத்தையும் உங்கள் நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படி உங்களால் முடியாத நிலையில் நைட் கிளம்புற பிளைட்ல தான் நான் போகணும்னா, எனக்கு நாலு மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அதே பெர்சன் கூட அந்த மீட்டிங்கை நான் சென்னை போனவுடனே இன்னிக்கே அரேன்ஜ் பண்ணிடுங்க. இட்’ஸ் மை டெஸிஸின். நௌ சாய்ஸ் இஸ் யுவர்ஸ்”, என்று கூறிவிட்டு நீ இதை செய்யாவிட்டால் உதை வாங்குவது உறுதி என்ற பாவனையில் நின்று கொண்டாள்.

அவளது பேச்சினை கேட்டு அருகிலிருந்த சிலரும், “ஆமாம்… அவங்க சொல்றது சரிதான். எங்களுக்கும் இன்னிக்கே போகணும் “, என்று கூற ஆரம்பித்தனர்.

அதிலும் அங்கிருந்த ஒரு மலேசிய தம்பதியினர், “நாங்கள் உங்களோட நாட்டை சுத்திப் பார்க்க வந்தோம். நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் உங்களது நிறுவன சேவையை பாவிக்க தேர்ந்தேடுத்திருக்க மாட்டோம். நாங்கள் இதனை வழக்காகப் பதிவு செய்வோம். எங்களின் விசா இன்றுடன் முடிவடையும். இந்த தாமதித்தனால் எங்களுக்கு எவ்ளோ பெரிய பிரச்சினை காத்திருக்கிறது”, என்று கூறி விவாதம் செய்தனர்.

அனைவரது ஆத்திரத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்தை கண்ட நிறுவன ஊழியர்கள் உடனடியாகக் கூடிப் பேசினர். பின்னர் சில நிமிடங்களில் வந்தவர்கள், “கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும்”, என்று கூறி அனைவரையும் மறுபடியும் செக் இன் செய்யச் சொன்னார்கள்.

அவர்கள் கூறியதும் அனைவரும் கலைய ஆரம்பித்த பின்னும் அவள் மட்டும் நகராமல் அந்த சங்கரிடம், “என்ன உங்க பைலட்ஸ் ரெஸ்ட் எடுத்து முடிச்சதும் சர்வீஸ் பார்த்துட்டோம்ன்னு சொல்லி உடனே கிளப்புறீங்களா?”, என்று கேட்டதும் அந்த சங்கரின் மனம் திக்கென்றானது. ஏனெனில் அதுதான் உண்மை.

அன்று காலை மும்பையில் இருந்து டெல்லி சென்று சென்னை வந்து இறுதியாக மதுரை வந்தடைந்திருந்தனர். மீண்டும் உடனடியாக கிளம்ப வேண்டிய நேரத்தில் பைலட்ஸ் ரெஸ்ட் எடுப்பதற்காக விமானத்தில் கோளாறு என்று தாமதப்படுத்தினர். இதில் இறுதி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்தவர்களுக்கு ரீஃபண்ட் கிடைக்காது.

அது நிறுவனத்திற்க்கு லாபம். நிறைய பேர் ரீஃபண்ட் பெறுவதற்கு டிக்கெட் புக் செய்யும்பொழுது சிறிது எக்ஸ்ட்ரா ஆக செலுத்த வேண்டிய பணத்தை வீண் விரயம் எனச் செலுத்துவதில்லை. அது விமான நிறுவனங்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது.

தான் கூறியதற்கு சங்கரின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தவள், “வாட் எவர் இட் இஸ் யூ ஹாவ் டு ரிப்ளை பார் திஸ் சூன்”, என்று கூறிவிட்டுச் செக் இன் பகுதியை நோக்கிச் சென்றவளை தடுத்து நிறுத்திய சங்கர், “மேடம்…! யுவர் குட் நேம் ப்ளீஸ்”, என்று கேட்டான். அவனைத் திரும்பிப் பார்த்தவள், “கல்கி” என்று கூறியதிலேயே ஒருவித ஆளுமை தெறித்தது.

அதனுடன் விடாமல், “மேடம் சர்நேம்”, என்று இழுத்தான். அவளது கூரிய பார்வையில், “இல்லை மேடம்! உங்களுக்கு காம்பன்சேஷன் பண்றதுக்குத்தான்”, என்று பூசி மெழுகினான்.

அவளது பயண விவரங்களை ஏற்கனவே கண்டிருந்தவன் அதில் சர்நேம் இல்லாமல் அவளது பெயர் மட்டும் இருந்ததைப் பார்த்தவன் அவளை அவமானப்படுத்த எண்ணி இந்த கேள்வியை தொடுத்தான்.

அதற்குப் பதிலாக, “என்னோட டிக்கெட் ஏற்கனவே செக் பண்ணி அதுல இருந்த டீடெயில்ஸ் அப்பவே பார்த்தீங்களே மிஸ்டர் சங்கர்! அதுல சர்நேம் இருக்காதுன்னு பார்த்தீங்களா? இல்லையா?”, என்று கல்கி கேட்டதும், “எஸ் மேடம்! மே பி மிஸ் ஆயிருக்கலாம்ன்னு கேட்டேன்”, என்ற சங்கரின் குரலே ஏளனமாக இருந்தது.

“உங்களுக்கு கல்கிக்கு அர்த்தம் தெரியுமா மிஸ்டர் சங்கர்?”, என்ற கல்கியிடம், “ஓ! நல்லாவே தெரியும், தன்னைத்தானே உளி கொண்டு செதுக்குபவள் என்று அர்த்தம்”, என சங்கர் கூறினான்.

“குட்! அது மத்தவங்களுக்கு. இந்த கல்கி தன்னைத்தானே உளி கொண்டு செதுக்குறதோட அதே உளியால் அடுத்தவங்க மண்டையை பொளக்குறவ. மைண்ட் இட்”, என்று கனலைக் கக்கிவிட்டு சங்கர் தன்னுடைய தலையைத் தடவிக் கொள்வதைத் திருப்தியாகப் பார்த்தவள் செக்கின் செய்யச் சென்றாள்.

கல்கி கரைந்திடும் கல்லா? கண்ணை மூடிக் கொள்ளச் செய்யும் கல்லா?

உளி கொண்டு
உருகிட
ஊருலகம்
உள்ளத்தை
உருக்குலைத்திடலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *