Categories
Uncategorized

கல்கி-2

Free Download WordPress Themes and plugins.

கல்கி-2

கல்கியின் வார்த்தைகளில் கலங்கி நின்ற சங்கருக்கு வேறு காரணம் ஏதேனும் காட்டி அவளை பயணிக்க விடாமல் செய்தால் என்ன என்ற எண்ணம் ஒரு நொடி உதித்தது.

ஆனால் அவனது நல்ல நேரம் தேவையில்லாத உரண்டை நமக்கெதுக்கு என்று அடுத்த நொடியில் தன்னுடைய வேலையை கவனிக்க சென்றுவிட்டான். சங்கர் கல்கியை தடுத்து நிறுத்தியிருந்தால் அவனது தலை இரண்டாகியிருக்கும்.

செக்கின் செய்து விமானத்தில் தன்னுடயை இருக்கையில் அமர்வதற்கு முன் கல்கிக்கு அடுத்த ஏழரை ஆரம்பமாகியிருந்தது. பின்புற சீட்டில் அமர்பவர்கள் ஒவ்வொருவராக முன்னேறிக் கொண்டிருந்த வேளையில் கல்கிக்கு முன்பாக சென்ற குடும்பத்தின் தலைவர் திடீரென்று நின்றதோடு இல்லாமல் தன்னுடைய மகனை போட்டோ எடுத்தார்.

அவரது மகனுக்கு பின்புறம் தான் கல்கி நின்று கொண்டிருந்தாள். அதனால் தானும் அந்த போட்டோவில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என உணர்ந்த கல்கி, “எக்ஸ்க்யூஷ்மீ! என்ன பண்றீங்க?”, என்று சற்று அதட்டலாகவே கேட்டாள்.

அவரதுக் கெட்ட நேரம் நரம்பற்ற நாவை அடக்க இயலாமல், “என்னம்மா ஓவரா சவுண்ட் விடுற? என் போன், என் மகன், நான் போட்டோ எடுக்குறதுல உனக்கு என்ன கேடு வந்துச்சு?”, என்று வாயை விட்டார்.

“உங்க பையனுக்கு பின்னாடி நிக்குறதால நானும் அதுல விழுந்திருக்க சான்ஸ் இருக்கு. அதனால நீங்க பார்மட் பண்ணுங்க”, என்று கல்கியின் குரல் அமைதியாக கூறினாலும், அதில் நீ செய்தே ஆக வேண்டும்! என்ற கட்டளை இருந்தது.

அப்பொழுதும் அடங்காமல், “நீ என்ன பெரிய கிளியோபாட்ராவா? உன் மூஞ்சி அதுல தெரிஞ்சா சொத்தா குடிமுழுகிப் போய்டும்?”, என்று தேவையில்லாமல் அவர் எகிறிக் கொண்டிருக்கும் பொழுதே அவரது கையிலிருந்த மொபைலை ஒரே நொடியில் கல்கி பறித்திருந்தாள்.

இவர்கள் அமராமல் வழக்காடுவதைக் கண்ட ஏர்ஹோஸ்டஸ் விரைந்து வந்து, “மேடம் இஸ் தேர் எனி இஸ்ஸு?”, என்று கேட்கவும், “எஸ்”, என்ற கல்கி மேலே எதுவும் கூறாமல் அந்த நபரின் மொபைலை அசால்ட்டாக ஓபன் செய்து கேலரியில் அவர் எடுத்திருந்த புகைப்படத்தை எடுத்து ஹோஸ்டஸிடம் காட்டினாள்.

அதில் கல்கியின் பாதியளவு புகைப்படம் விழுந்திருந்தது. ஹோஸ்டஸ் என்னக் கூறுவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த மனிதர், “ஏய்! என்னோட போனைக் கொடு…”, என்றுக் கத்த ஆரம்பித்திருந்தார்.

அதற்கெல்லாம் அசராத கல்கி, “தந்துடுறேன்”, எனக் கூறிக்கொண்டே மொபைல் மெமரி, மெமரி கார்டு என மொத்ததையும் பார்மட் செய்து விட்டே தந்தாள். அதில் அவர் மேலும் எகிற ஆரம்பித்ததும் கல்கி வாயைத் திறக்கும் முன் இவர்கள் வழக்காடிக் கொண்டிருந்த இடத்தின் அருகிலிருந்த சீட்டில் அமர்ந்திருந்த அந்த மலேசிய தம்பதியினர்

“வெரி குட் ஜாப் யங் லேடி”, என்றதுடன் ஹோஸ்டஸிடம், “அவரை ஏர்போர்ட் போலீஸ்ல ஹாண்ட் ஓவர் செய்ங்க”, என்றும் கூறினர். அதை கேட்டதும் அதுவரை அமைதியாக நின்றிருந்த அவரது மனைவி, “சாரி”, என்றுக் கூறிவிட்டு கணவரை இழுத்துக் கொண்டு தங்களின் சீட்டிற்கு விரைந்தார்.

அனைத்து கலவரங்களும் கட்டுக்குள் வந்ததும் சிங்காரச்சென்னையை நோக்கி சீராக பறந்து சென்ற விமானத்தில் பலரது பேச்சிலும் கல்கியே பிரதானமாக இருந்தாள்.

சங்கரை எதிர்த்து பேசியதாகட்டும், இப்பொழுது ஒருவரின் தவறை மிகவும் அழுத்தமான முறையில் கண்டனம் தெரிவித்ததாகட்டும் அவளின் துணிச்சல் சிலரால் பாராட்டப்பட, வேறு சிலரால், “வாயும், கையும் ரொம்ப நீளம்…. என்னத்த வளர்த்துருக்காங்க?”, என்று ஏசப்பட மொத்தத்தில் கல்கி கல்லாக அரைபட்டுக் கொண்டிருந்தாள்.

இவர்களின் எந்தவித கருத்துகளை பற்றி கவலைப்படாமல் தன் கையிலிருந்த ஆண்டோனியா பிரசேரால்(Antonia Fraser) எழுதப்பட்டிருந்த வாரியர் குயின்ஸ்(Warrior Queens) புத்தகத்தில் கண்களை பதித்திருந்த கல்கிக்கு அதில் இடம்பெற்றிருந்த பெண்களைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் வைராக்கியத்தை மேலும், மேலும் விதைத்துக் கொண்டிருந்தது.

வாரியர் குயின்ஸ் படித்துக் கொண்டிருந்தவள் எந்த நாட்டின் மட்டுமின்றி, எந்த வீட்டிற்கும் ராணியாக, ஏன் இளவரசி கூட இல்லை…

கல்கி பச்சிளங்குழந்தையாக தென்காசியிலிருக்கும் அகல் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டவள். அவ்வில்லத்தை நடத்தி வரும் பிரியாம்மா தயவில் அங்கிருக்கும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் உணவும், உலகை எதிர்காலத்தில் உறுதியுடன் எதிர்நோக்க ஏட்டுக் கல்வியும் பாதுகாப்புடன் கிடைக்கின்றது.

பிரியாம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள் அனைவருமே மிகவும் நல்ல நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். கல்கியும் தனக்கு பிடித்த துறையில் M.Phil., முடித்துவிட்டு, வெளி உலக வேலைக்கு செல்லாமல் தனியார் கல்லூரி ஒன்றில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டே முனைவர் பட்டத்திற்கான(Ph.D.,) ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு நாள் மாலை இவளிடம் வந்த பிரியாம்மா, “கல்கி! டாக்டரேட் வாங்குனதுக்கு அப்புறம் டீச்சிங் லைன் போறியா? இல்லை பீல்ட் ஒர்க் பண்ணப் போறியா?”, என்று கேட்டார்.

பிரியாவிற்கு சுத்தி வளைத்து பேசும் பழக்கம் எப்பொழுதுமில்லை. அதையே தன்னிடம் வளர்பவர்களுக்கும் கற்று தந்திருந்தார். அவரது தைரியம்தான் கல்கியிடமும் இடம் பெற்றிருந்தது.

பிரியா கேட்டதும், “இல்லை பிரியாம்மா! நான் பீல்ட் ஒர்க் பண்ணனும். அதுதான் என்னோட லட்சியம்….

இந்த துறையிலே வேலை கிடைக்குறதுக் கஷ்டம் தான்….. ஆனால் ஒரு வாய்ப்பு கிடைச்சதுன்னா நான் விடமாட்டேன். நான் படிச்சதோட மதிப்பு தெரிஞ்சவங்க, இந்த நாட்டை நேசிக்கிறவங்க கண்டிப்பா என்னை மாதிரி ஆட்களை வேலைக்கு எடுப்பாங்க”, என்று கண்களில் கனவு மின்ன பேசிக் கொண்டிருந்த கல்கியை பெரியவர் ஆதுரத்துடன் நோக்கினார்.

அவள் கூறியதை முழுமையாகக் கேட்டவர், “கல்கி யாரும் படிக்க விரும்பாத ஒரு துறையை நீ படிக்க ஆசைப்பட்டப்ப உனக்கு ஸ்பான்சர் பண்ணுனவங்க எந்த வார்த்தையும் சொல்லாம ஒத்துக்கிட்டாங்க. இப்ப அவங்களுக்கு உன்னோட படிப்பு மூலமா உதவி தேவைப்படுது…..

அதனால உனக்கு அங்க வேலைக்கு போக இஷ்டமிருந்தா போகலாம். யோசிச்சு ஒரு வாரத்துல முடிவை சொல்ல சொல்லிருக்காங்க. உன்னோட ரெஸ்யூம் ஏற்கனவே நான்தான் அவங்களுக்கு அனுப்பியிருந்தேன். இப்ப உன்னோட முடிவை யோசிச்சு சாதகம், பாதகம் எல்லாம் பார்த்து வர சனிக்கிழமை சொல்லு. நான் அவங்ககிட்ட அதுக்கப்புறம் சொல்றேன்”, எனக் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

பிரியாம்மா கூறியதைக் கேட்டதும் உடனே சரி என்று கூறிட விழைந்த கல்கியை பிரியாவின் வார்த்தைகள் நிதானிக்கச் செய்தன. அவ்வாறு அவள் யோசித்து முடிவெடுத்ததில் சனிக்கிழமை காலையே பிரியாம்மாவின் அறைக்கு வந்தவள்,

“காலை வணக்கம் பிரியாம்மா! நீங்க அன்னிக்கு சொன்ன ஜாப் ஆபர் பத்தி கொஞ்சம் டீடெயில்ஸ் தெரிஞ்சா என்னோட முடிவை நான் சொல்றேன்மா”, என்று கூறியதில் பிரியா மெச்சுதலான பார்வையை கொடுத்தார்.

“கேளு கல்கி”, என்றதும், “இந்த ஜாப் என்னோட துறைக்காக கொடுக்குறாங்களா? இல்லை நாம ஸ்பான்சர் பண்ணி படிக்க வைச்சதால நம்மகிட்ட வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங்களான்னு தெரியனும்….

அப்புறம் ஜாப் லொகேஷன்… என்ன காரணத்துக்காக அவங்களுக்கு இந்த டிபார்ட்மென்ட் ஆளு தேவை? இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் ஈஸியா முடிவைச் சொல்ல முடியும்”, என்ற கல்கியின் தெளிவான கேள்விகள் பிரியம்மாவிற்கு மிகுந்த ஆசுவாசத்தை அளித்தது.

தான் வளர்த்தவர்கள் பணத்திற்காக எந்த முடிவையும் எடுக்காமல் நன்மை, தீமையை ஆராய்ந்து முடிவெடுப்பதில் கிடைக்கும் நிம்மதியே அந்த ஆசுவாசத்திற்கு காரணம்.

“சரி கல்கி! நீ கேட்டதை எல்லாம் சொல்லிட்டு உன்னைக் கூப்பிடுறேன்”, என்றவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்கியை வரவழைத்தார். அவளது கேள்விகளுக்கான பதில்கள் அவளுடைய மெயிலுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

அதனை படித்துவிட்டு அவளது முடிவையும் மெயில் மூலமாகவே அனுப்பக் கூறியிருந்தார்கள். அவர்களின் பதிலில் முழுதாக திருப்தியுற்ற கல்கி தனக்கு வேலையில் சேர விருப்பம் என்பதை தெரிவித்துவிட்டு எப்பொழுது சேர வேண்டும்? எங்கே சேரவேண்டும்? என்ற விவரங்களைக் கேட்டு மெயில் அனுப்பினாள்.

அதன்படி சென்னையில் நிறுவன பங்குதாரருடன் ஒரு இன்டெர்வியூ அட்டென்ட் செய்துவிட்டு அதற்கடுத்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தததோடு, பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்திருந்தனர். அந்த ஏற்பாட்டினால் தான் கல்கி கல்லை கட்டிக் கொண்ட முகபாவனையுடன் சென்னைக்கு சென்றுக் கொண்டிருக்கின்றாள்.

சென்னை ஏர்போர்ட்டை அடைந்ததும் அங்கிருந்த ரெஸ்ட் ரூமினுள் சென்று தன்னை ரெப்ரஷ் செய்து கொண்டவள், வேகமாக வெளியே வந்து டாக்ஸி இருக்கும் பக்கம் நகரத்தொடங்கியதும் தன் பெயர் தாங்கிய அட்டையை பிடித்துக் கொண்டிருந்தவரைக் கண்டாள்.

அதனைக் கண்டதும் கண்கள் ஆச்சரியத்தில் விரியவே செய்தன. ஆனால் அதனை வெளிக் காட்டினால் கல்கியின் கெத்து என்னாவது?

எனவே எந்த உணர்வையும் காட்டாமல் அவர் அருகினில் சென்றவள், “வணக்கம்! நான்தான் கல்கி…”, என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். இவளது வணக்கத்திலேயே அகமகிழ்ந்தவர்,

“வாங்கம்மா! பிரயாணம் நல்லபடியா இருந்துச்சா?”, என்றதோடு அவ்ளதுக் கையில் இருந்த பேக்கை வாங்க முயன்றார். “நல்லா இருந்துச்சு” என்று கூறிவிட்டுப் பேக்கை தன்னுடைய கையில் உறுதியுடன் பிடித்துக் கொண்டு

“என்னோட வேலைகளை நான்தான் செய்யணும்… அடுத்தவங்க கிட்ட என்னோட சுமையை தர்றதுல விருப்பம் கிடையாது”, என்று நிமிர்வுடன் கூறினாள். கல்கியின் நிமிர்வில் எதுவும் கூற முடியாமல்

“வாங்க கார் அந்த பக்கம் நிறுத்தியிருக்கேன்”, என்று கூறியதோடு அங்கே வழிநடத்தி செல்லும் வழியாவும், “இந்தம்மா இப்படி இருந்தா இங்க இருக்குற நிலைமைக்கு எப்படி தாக்கு பிடிக்கும்?”, என்று எண்ணியபடியே வந்தார்.

காரில் ஏறியமர்ந்ததும், “சீட் பெல்ட் போட்டுக்கோங்கம்மா! கண்ணன் தம்பி சீட் பெல்ட் போடாம வண்டி ஓட்டவே விடமாட்டார்”, என்று ஏதோ ஒரு கண்ணனை பற்றி பெருமையாக பேசியதை கவனியாமல் தன்னுடைய சிந்தனையில் உழன்ற கல்கி சட்டென நிமிர்ந்தாள்.

அவள் அவரிடம் பெயரை கூறிய பொழுதே அவரது டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, எம்பிளாய் கார்டு எல்லாம் சரி பார்த்திருந்தாள். ஆனால் தன்னுடைய பிளைட் லேட்டாக வந்தும் இவர் எப்படி சரியாக காத்திருந்தார் என்பது அவளுக்கு ஐயமாக இருந்தது…

வயதில் சற்று முதியவராகவே தெரிந்ததில், “தாத்தா”, என்று அவரை அழைத்தாள். “சொல்லுங்கம்மா”, என்றவரிடம்

“நான் இப்பதான் வருவேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? இல்லைன்னா காலையிலிருந்து காத்துகிட்டு இருக்கீங்களா?”, என்றாள். “இல்லைம்மா! கண்ணன் தம்பிதான் பிளைட் லேட் தாத்தான்னு சொல்லி இப்ப மதுரையில இருந்து கிளம்புனதும் என்னை அனுப்புச்சு…..

பேராண்டி எல்லா விசயத்திலும் கெட்டிக்காரன்… உங்க முதலாளியே தம்பி சொன்னா கேட்டுப்பார் தெரியுமா?”, என்று கல்கி கேளாத கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் அவளின் காதில் கேளாமலே சென்றன.

ஒரு வழியாக சென்னையின் சீரற்ற ட்ராபிக்கை நீந்தி அண்ணா நகரிலிருந்த அலுவலகத்தை அடைந்ததும், “ரெண்டாவது மாடியில ஆபீஸ் இருக்கும்மா… அங்க போய் உங்க பேரைச் சொல்லுங்க”, என்று கூறிவிட்டு டிரைவர் காரை பார்க்கிங்கில் விடச் சென்றுவிட்டார்.

அந்த அலுவலகக் கட்டிடத்தைக் காணும் பொழுது எந்தவித ஆடம்பரமும் இன்றி சாதாரணமாகவே இருந்தது. முக்கியமாக இரண்டாவது மாடிக்கு செல்ல லிப்ட் எல்லாம் இல்லை. படிகளில் ஏறிச் சென்று அங்கிருந்த அமைப்பினைக் கண்டதும் இவ்வளவு நேரம் இருந்த யோசனைகள் மாறி மனம் தெளிவுபட ஆரம்பித்திருந்தது.

அந்த தெளிவுடனே அங்கிருந்த ரிஷப்சனிஸ்டை அணுகியவள், “ஹெலோ! குட் ஈவினிங்… ஐ ஆம் கல்கி”, என்று கூறியவுடன்,

“வெல்கம்! மிஸ் கல்கி ப்ளீஸ் வெய்ட் பார் பியூ மினிட்ஸ் ….”, என்று கூறிவிட்டு இன்டர்காமை அழுத்தியவள், “மிஸ் கல்கி இஸ் ஹியர்”, என்றுவிட்டு அடுத்த நொடியே, “ஓகே தயா!”, என வைத்தாள்.

“மிஸ் கல்கி! அந்த லாஸ்ட் ரூம்ல உங்களுக்கு இன்டெர்வியூ… மிஸ்டர் அண்ட் மிசஸ் தயா போத் ஆர் வெயிட்டிங் போர் யூ….”, என்று அனுப்பி வைத்தாள்.

“பார்ட்னர் ஒருத்தர் இன்டெர்வியூ பண்ணுவாங்கனு சொல்லிட்டு இப்ப என்ன ஜோடிப்புறாக்கள் வெய்ட் பண்றதா சொல்றாங்க….. வேலைக்கு ஆளெடுக்குறாங்களா? இல்லை வேற ஏதாவது வில்லங்கமா? எதுவா இருந்தாலும் அவங்க கேள்வியை பொறுத்து பதில் சொல்லு கல்கி… உன்னாலே முடியும்!”, என்று தனக்குத் தானே மனதினுள் பேசிக் கொண்டே சென்ற கல்கி அந்த அறையின் முன் வந்து நின்றவள் மெதுவாக கதவை தட்டியதும்,

” கெட் இன் கல்கி”, என்று மிகவும் வித்தியாசமான குரல் வந்தது…..

உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த இருவரை பார்த்தவள் பொதுவாக, “குட் ஈவினிங் மேடம் அண்ட் மிஸ்டர் தயா!”, என்றாள். அவளது வணக்கத்தில் வித்தியாசத்தைக் கண்ட இருவரில் தயா தான் முதலில் வாயைத் திறந்தார்.

“குட் ஈவினிங் கல்கி! இந்த மேடம் எம் டி சீட்ல உட்கார்ந்து இருக்குறதால மேடம்ன்னு சொல்லிட்டு என்னை தயான்னு சொல்லிட்டியே டூ பேட்….”, என்று கூறினார். “அப்படியில்லை மிஸ்டர் தயா! அவங்களோட நேம் தெரிஞ்சிருந்தா அதைச் சொல்லிக் கூப்பிட்டிருப்பேன்…. அது தெரியல அதான் மேடம்”, என்றதும்,

“ஏன் எல்லோருமே மிசஸ் தயானு தான் சொல்லுவாங்க… நீயும் அப்படி சொல்லலாமே!”, என்ற தயாவின் கேள்வியில் ஒரு நொடி தயங்கியவள்,

“ஏன் எப்பவுமே அப்பா, ஹஸ்பன்ட் நேம் வச்சுதான் பொண்ணுங்களை அடையாளப்படுத்தணுமா? அவங்களோட தனி அடையாளம் இதுல அழிஞ்சுடுதே… சோ எனக்கு அப்படி கூப்பிட இஷ்டமில்லை”, என்ற கல்கி தனக்கு அடுத்து ஏற்பட்ட நிலையை கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *