Categories
Uncategorized

சந்திரோதயம்-2

Free Download WordPress Themes and plugins.

சந்திரோதயம்-2

சந்துரு வந்துக் கூறியவுடன் எதை எதிர்பார்த்தாலும் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முகக் குறிப்பிலிருந்தே தெரிந்தது. அவன் அதிர்ந்து நின்ற அந்த ஒரு நொடியை பயன்படுத்திக்கொண்ட ராஜேந்திரன் “ஏன்டா? என் பெண்ணை என்கிட்ட இருந்து பிாிச்சதும் இல்லாம இப்ப என்னோட குழந்தையை 2 குழந்தைகளுக்கு அம்மாவாக்கிட்டியே! அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா? இதைத் தெரிஞ்சுகிட்டும் இத்தனை நாள் எங்ககிட்ட சொல்லாம வேற இருந்திருக்க… உனக்கெல்லாம் என்ன நெஞ்சழுத்தம்?”, என தான் பிடித்த சந்துருவின் சட்டையை உலுக்கிக் கொண்டிருந்தார்.

அவரது கையை தட்டி விட சந்துருவுக்கு ஒரு நொடி போதாது. இருப்பினும் திருமணத்திற்கு முன்னர் அவர் கூறிய சபதமும், அதன் ஏமாற்றமுமே கோபத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து இருந்த ஒரே காரணத்தினாலும், அவரது வயதிற்கு மரியாதை அளித்தும் சந்துரு அமைதியாக நின்றிருந்தான்.

ஆனால் ஜானகி அவ்வாறெல்லாம் இல்லாமல் தனது கணவரை பிடித்து தள்ளி விட்டவர் “இப்ப வருணாக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கு அப்படிங்கிறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே! அதுவும் ரெண்டு சிங்க குட்டிங்க பிறந்து இருக்காங்க… இதுல எதுக்கு மாப்பிள்ளை சட்டையை பிடிச்சு உலுக்கனும்? என்ன இருந்தாலும் அவர் நம்ம மருமகன் அந்த மரியாதை கொடுத்து பழகுங்கன்னு உங்களுக்கு ஆயிரத்தெட்டு தடவை சொல்லிட்டேன். கொண்டிமாடா மட்டுமில்லாமல் பேசாம போய் எல்லாருக்கும் தர்றதுக்கு ஸ்வீட், சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு வாங்க”, என தன் கணவரை வெளியேற்ற முயற்சி செய்தார்.

ஆனால் ராஜேந்திரன் மனமோ சந்துரு பிரசவ வார்டில் இருந்து வந்து கூறிய “வருணாவுக்கும், எனக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து இருக்காங்க”, என்றதுடன் ராஜேந்திரனை நோக்கியவாறே “அதுவும் ரெண்டு பசங்க”, எனக்கூறியதிலேயே உழன்று கொண்டிருந்தது.

ஏனெனில் திருமணத்திற்கு முன்னர் சந்துருவுடன் தனித்துப் பேசிய ராஜேந்திரன் அவனது எந்தவித சமாதானத்திற்கும் உடன்படாமல் தன்னுடைய பிடியிலேயே இருந்தவர் இறுதியாக அவன் அலுத்துப்போய் கூறிய “எனக்கெல்லாம் பொண்ணு பிறந்து அவ வளர்ந்து லவ் பண்ணி, அதுவும் அவளுக்கு பிடிச்ச மாதிரி பையன் நல்லவனா இருந்து, அவங்க வீட்டிலேயும் ஏத்துக்கிட்டாங்கன்னா எந்த வார்த்தையும் பேசாமல் கல்யாணம் பண்ணி கொடுத்திடுவேன்”, என்றதில் தன்னுடைய புத்தியை கிரிமினலாக யோசிக்க முயற்சி செய்து “ஓ”, எனக் கூறினார்.

அவர் உரைத்த “ஓ”விலேயே ஏதோ வில்லங்கம் வரப்போகிறது என்று எதிர்பார்த்த சந்துருவிடம் “அப்ப உனக்கு பொண்ணுங்க தான் பிறக்கும்… வரிசையா பொண்ணுங்களா பிறந்து அத்தனையும் லவ் மேரேஜ் தான் பண்ணிக்கணும், என்னோட வயித்தெரிச்சல் சாபம் உன்னை சும்மா விடாது. இதை நீ ஒத்துக்குறியா?”, என சிறுபிள்ளைத்தனமாக கூறி அவனுக்கு இந்த ஆள் என்ன லூசா என்ற எண்ணத்தையும், சிரிப்பையும் ஒருங்கே தோற்றுவித்தார்.

ஆனால் தன்னுடைய சிரிப்பையும், எண்ணத்தையும் வெளியில் காட்டாத சந்துரு “கண்டிப்பா! நீங்க சொல்ற மாதிரியே நடக்குறதுக்கு நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்”, என பதில் கூறி அவரது திருப்தியான இகழ்ச்சி முறுவலை பெற்றுக் கொண்டே தன்னுடைய திருமணத்திற்கான சம்மதத்தையும் பெற்றான்.

இப்பொழுது ராஜேந்திரன் தன்னுடைய சபதம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதே என்ற தன்னுடைய இயலாமையைதான் சந்துருவை கோபமாக திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் வாய்விட்டு பேசியவர் அதன் பின்னர் எதுவும் பேசாமல் ஓரமாக சென்று அமர்ந்துகொண்டார்.

அவரது அமைதியைக் கண்ட ஜானகி மகளையும், பேரன்களையும் பார்த்துவிட்டு வெளியில் வந்த பின்னர் அவரிடம் நேராக சென்று “ஏதாவது கோணங்கித்தனம் பண்ணி வைச்சீங்களா? நீங்க சந்தோசப்படாம அமைதியா இருக்குறத பார்த்தா எனக்கு ரொம்பவே சந்தேகமா இருக்கு. அவளுடைய வாழ்க்கை இதுதான் ஆயிடுச்சி. இதுக்கு மேல அதில் ஏதாவது குழப்பத்தை உண்டு பண்றேன்னு கோக்குமாக்கு செஞ்சீங்க என் மாப்பிள்ளை வீட்டுக்கு வீட்டோட மாமியாரை போயிடுவேன்… ஞாபகம் வெச்சு நடந்துக்கோங்க”, என மிரட்டல் விடுத்துவிட்டு தன்னுடைய சம்பந்திகளிடம் அளாவளவ சென்றுவிட்டார்.

அனைவரும் சென்று குழந்தைகளை பார்த்து வந்த பின்னரும் ராஜேந்திரன் தான் இருந்த இடத்தை விட்டு அசையாமல் எதையோ பறிகொடுத்தது போன்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட ஜானகி “இந்த மனுசனுக்கு எவ்வளவுதான் புத்தி சொன்னாலும் புரிய மாட்டேங்குது… சம்பந்தி வீட்டுக்காரங்க முன்னாடி இப்படி நடந்துக்கிறாரே!”, என தன்னுடைய மனதில் புலம்பிக் கொண்டிருந்த வேளையில்

சந்துருவின் அப்பா ராகவன் ராஜேந்திரனை நெருங்கி “என்னாச்சு சம்பந்தி! இப்படி உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க? வருணா உங்கள ரொம்ப நேரமா கேட்டுட்டு இருக்காப்ல… உள்ளே வந்து குழந்தைகளை பார்த்துட்டு உங்க பொண்ணையும் பாருங்க”, எனக் கூறியதற்கு அவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்த ராஜேந்திரன் தன்னுடைய மொபைல் ஒலி எழுப்பியதில் அதனை எடுத்துப் பார்த்தார்.

அழைப்பது தன்னுடைய இளைய மகன் என தெரிந்ததும் காலை அட்டென்ட் செய்தவர் அந்தப் பக்கம் இருந்த அவன் கேட்டதற்கு பதிலாக “ஆமா! ரெட்டை பசங்க பிறந்திருக்காங்க”, எனக் கூறினார். மறுபுறம் இருந்த ஆகாஷ் “நான் தான் சொன்னேன் இல்லையா அப்பா? கல்யாண விஷயத்துல பழிவாங்கினதோட இல்லாம அக்கா இதுலயும் ஏமாத்திட்டா..

அவ மேல எவ்ளோ பாசம் வச்சு இருந்தீங்க… உங்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் போச்சு… ஆரம்பத்துல இருந்து அவ மேல மட்டும்தான் நீங்க அளவுக்கதிகமான பாசம் வச்சு இருந்தீங்க. அதனால இப்ப இதையும் அனுபவிங்க”, என நொந்து இருந்தவரை மேலும் நோகடிக்குமாறு தூண்டிவிட்டான். சிறுவயது முதலே வருணா பெண் குழந்தை என்றும், வீட்டில் முதல் குழந்தை என்பதாலும் சற்று அளவுக்கதிகமான செல்லமே அவளுடைய பெற்றோரிடம் கிடைத்தது. அவளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிறந்த ஆகாஷினால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு விதை பொறாமை அவளது மேல் இருந்தது.

அதனால் தான் வருணாவின் திருமணத்திற்குப் பின்னர் ராஜேந்திரனை அவ்வப்பொழுது இப்படி வார்த்தைகளால் தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். அவனது பொறாமையால் ஏற்பட்ட வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத ராஜேந்திரன் “நீ சொல்றது சரிதான்”, என ஒத்துக்கொண்டு “சரி! நான் போய் பசங்களை பார்த்துட்டு, உங்க அக்காவையும் பார்த்துட்டு அப்புறமா கூப்பிடுறேன். நீ நேரா நேரத்துக்கு சாப்பிடு… உனக்கு செலவுக்கு ஏதாவது வேணும்னா அப்பாகிட்ட சொல்லு. உடனே போட்டு விடுறேன்”, என பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னுடைய மகனுக்கு நீ தான் இனிமேல் எனக்கு முக்கியம் என்பதை உணர்த்த ஆரம்பித்தார்.

மகனிடம் பேசி முடித்தவுடன் தனது அருகில் நின்றிருந்த ராகவனைப் பார்த்து “நான் போய் பாத்துட்டு வர்றேன். நீங்களும் வர்றீங்களா?”, என பெயருக்கான ஒரு புன்முறுவலுடன் கேட்டதற்கு அவரோ “நீங்க போய் பார்த்துட்டு வாங்க சம்பந்தி! நான் சொந்தக்காரங்க எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிட்டு வர்றேன்”, என நகன்றுக்கொண்டார்.

வருணாவும்,குழந்தைகளும் இருந்த அறைக்குள் சென்ற ராஜேந்திரன் முதலில் கண்டது தொட்டிலில் இருந்த இரு குழந்தைகளைதான். தொட்டில்களின் அருகே வேகமாக சென்ற இரு குழந்தைகளின் முகத்தையும் உற்று உற்று நோக்கினார். அவர் அவ்வாறு பார்ப்பதை பார்த்து ” என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க?”, என வருணாக் கேட்டாள்.

மனதில் தோன்றியதை மறைக்க விரும்பா ராஜேந்திரன் ” குழந்தை சங்க யார் ஜாடையில இருக்காஙகன்னு பாா்க்குறேன்”, எனக் கூறியதும்”உங்களை மாதிரியே இருக்குற மாதிரி தெரியுது”, என்று சந்துரு சிரிப்புடனே கூறினான்.

“அப்படிதானோன்னு திரும்பத் திரும்ப பார்த்துகிட்டு இருக்கேன்”, என அலுத்துக் கொண்ட ராஜேந்திரன் வருணாவின் புறம் திரும்பி “உன் புருஷனும், நீயும் பசங்களைப் பெத்ததுனால ரொம்ப புண்ணியம் செஞ்சதா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க… ஆனா அப்படி எல்லாம் தப்புக்கணக்கு போடாதீங்க”, என சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் மூத்த மகன் வீல் என்று கத்த ஆரம்பித்தான்.

என்னதான் மருமகன், மகள் மேல் கோபம் இருந்தாலும் கத்துவது பேரன் ஆயிற்றே! அப்பாசத்தில் ராஜேந்திரன் தன்னாலேயே மூத்த குழந்தை என்று அடையாளம் கூறப்பட்டவனை தன்னுடைய கையில் ஏந்தினார். ஆனால் அவனோ அழுகையை நிறுத்துவதற்கு பதிலாக தன்னுடைய சிறு தொண்டையிலிருந்து பெரும் குரலை எழுப்பி அக்கட்டிடத்தையே அதிரச் செய்து கொண்டிருந்தான்.

மாமனாா் கையிலிருந்து அவனை வாங்கிய சந்துரு தனக்கு தெரிந்த வகையில் சமாதானப்படுத்த முயன்ற பொழுதும் அவனது அழுகை மேலும் அதிகரிக்கவே செய்தது. கட்டிலிலிருந்து எழ முடியாத காரணத்தினால் வருணா “அம்மாவை கூப்பிடுங்க, இல்லைன்னா நா்ஸ் யாரையாவது கூப்பிடுங்க… இல்லை குழந்தைய என்கிட்ட கொடுங்க”, என பதற்றத்துடன் கூற ஆரம்பித்த பொழுது உள்ளே நுழைந்த நா்ஸ்

“என்ன ஆச்சு? ஏன் குழந்தை வெளியில கேட்குற அளவுக்கு குழந்தை அழுகுறான்”, எனக் கேட்டவாறே தன்னுடைய கைகளில் குழந்தையை வாங்கிக் கொண்டார். அடுத்த நொடியிலேயே அவனது அழுகை நின்று தன்னுடைய குட்டி கண்களை சிறிதளவு திறக்க முடியாமல் திறந்து பார்த்து அந்த நர்ஸின் முகத்தை கண்டவன் புன்னகையுடன் உறங்க ஆரம்பித்தான்.

“என்னடா இது இந்தம்மா வந்து தூக்குனதும் அழுகையை நிறுத்திட்டான்”, என எண்ணிய ராஜேந்திரன் மீண்டும் அவரது கைகளில் குழந்தையை வாங்கினார். அவர் வாங்கியது மட்டுமே அவரது ஞாபகத்தில் இருந்தது. ஏனெனில் அடுத்த நொடியில் அவன் தனது அழுகுரல் என்னும் அலாரத்தை ஆரம்பித்துவிட்டான்.

அதில் பயந்து போனவர் மீண்டும் நர்சிடம் தந்தவுடன் அழுகை நின்றுவிட்டது. என்ன இது என தன்னுடைய மகளிடம் வினவியவரின் மனம் மீண்டும் எதையோ சிந்திக்க ஆரம்பித்தது. அவர் கேட்டதற்கு பதிலாக “அது ஒன்னும் இல்லைப்பா… லேபர் ரூம்ல பிறந்ததிலிருந்து இப்படிதான் பண்றான். யாராவது லேடிஸ் தூக்கி வச்சா மட்டும்தான் அழுகாமல் இருக்கான். இல்லைன்னா வீல்வீல்ன்னு கத்துறான். சின்னவன் அப்படி இல்லை. யார் தூக்கி வைச்சாலும் அமைதியா இருக்கான். இவனுக்கு நான் தூக்கி வைக்கனும் இல்லைன்னா அம்மா, அத்தை யாராவது தூக்கி வைக்க சொல்றான்”, என சிரித்துக்கொண்டே வருணா பதில் கூறினாள்.

வருணாவின் பதிலை கேட்டவுடன் ராஜேந்திரன் முகம் பிரகாசமாக ஒளிர ஆரம்பித்தது. அவரது சந்தோஷத்தை கண்ட சந்துரு மனுசன் ஏதோ இடக்குமடக்கா கணக்கு போட்டுட்டாரு என எண்ணிக்கொண்டு வருணாவிடம் தன்னுடைய கண்களால் அவளது அப்பாவின் முகத்தை காண்பித்து நக்கல் செய்து கொண்டிருந்தான்.

இவ்வாறாக ராஜேந்திரனின் கணக்கிடல்களுடனும், வருணா, சந்துருவின் மூத்தமகன் செய்த அலப்பறைகளுடனும் ஏழு நாட்கள் கழிந்த பின்னர் தன் இரு குழந்தைகளையும், தனது மனைவியையும் சந்துரு நேராக தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கே அழைத்துச் சென்றான்.

வருணாவின் அம்மா கூட “நாங்க இங்க ஒரு வீடு வாடகைக்கு பார்த்து இருக்கோம் மாப்பிள்ளை… நாங்களே ஒரு மூணு மாசமா வைச்சிருந்து பிறகு அனுப்புறோம்”, என கேட்டதற்கு “இல்லத்தை அதெல்லாம் சரிப்படாது. ஒரு குழந்தைன்னா நீங்க சமாளிச்சுடலாம. ரெண்டு பேரையும் சமாளிக்கிறது உங்களுக்கு கஷ்டம்.அதோட மாமாவையும் நீங்கதான் பாா்த்துக்கணும். எங்க நான் கூட இருக்கேன். நீங்களும் அப்பப்ப வந்துட்டு போங்க”, என தன்னுடைய மனைவியை அனுப்ப விரும்பாததற்கு மேல்பூச்சாக பூசி சந்துரு மறுத்துவிட்டான்.

சந்துரு பேசியதற்கு ராஜேந்திரன் எதுவும் மறுத்துக் கூறுவாா் என ஜானகி அவா்புறம் திரும்பி பார்க்க அவரோ எதுவும் கூறாமல் ” என்னைக்கு பெயர் வைக்கிறது? 16வது நாள் வைக்கிறீங்களா? இல்லை முப்பதாவது நாள் வைக்கிறீங்களா?”, என சந்துருவிடம் கேட்டார்.

சந்துருவும் “பெரியவங்களா நீங்களும், அப்பாவும் இருக்கீங்க மாமா! நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க எப்ப வைக்கலாம்னு… அப்போவே வச்சுக்கலாம். ஆனால் பசங்க ரெண்டு பேருக்கும் “ஆ” எழுத்துல வைக்கணும்னு நானும் வருணாவும் முடிவு பண்ணிருக்கோம்”, என மறுமொழி கூறியதற்கு ராஜேந்திரன் பதில் எதுவும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு வெளியேறிவிட்டார்.

அதன் பின்னர் தினமும் மகளின் வீட்டிற்கு வந்து தன்னுடைய பேரன்களை உற்று உற்று கவனிக்க ஆரம்பித்தார். அவர் கவனித்த வரையில் மூத்தவன் யாரேனும் பெண்கள் தூக்கி வைத்திருந்தால் மட்டுமே அமைதியாக இருந்தான். அது யாராக இருந்தாலும் சரி. ஆனால் இளையவன் யார் வைத்திருந்தாலும் அமைதியாக இருந்தான். இதையெல்லாம் கண்ட அவருக்கு தன்னுடைய இளைய பேரன் மேல் ஒரு தனி பாசம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

அதனை தன்னுடைய செயல்கள் மூலம் அவ்வப்பொழுது காட்டிக் கொண்டிருந்தார். இரு குழந்தைகள் இருக்கும் இடத்தில் சிறியவனுக்கு மட்டும் தினந்தோறும் ஏதேனும் உடையோ, இல்லை என்றால் அவனது தொட்டிலில் கட்ட விளையாட்டுப் பொருட்களையோ வாங்கி வந்த வண்ணமாக இருந்தார்.

இதனை கண்டு கொண்ட வருணத ஒரு நாள் “என்னப்பா சின்னவனுக்கு மட்டும் வாங்கிட்டு வர்றீங்க? பெரியவனுக்கும் வாங்கிட்டு வர வேண்டியதுதானே! இல்லைன்னா சும்மா வாங்க”, என ஒரு நாள் பொறுத்துக் கொள்ள முடியாமல் கேட்டுவிட்டாள். வாங்கிட்டு வந்துட்டா போச்சு என்றவர் மறுநாள் அவனது தொட்டிலில் கட்ட ஒரு பார்பி டால் வாங்கிக்கொண்டு வந்தார்.

அதனை கண்ட சந்துருவிற்கு கோபம் வந்துவிட்டது. இருப்பினும் மாமனார் செய்யும் சிறுபிள்ளைத்தனங்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பாமல் வருணாவிடம் “அதை வாங்கி ஒரு ஓரமா வச்சிட்டு வீட்டுக்கு யாராவது வந்தா அவங்களுக்கு கொடுக்கலாம்”, என கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.

ஆனால் ராஜேந்திரன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பார்பி டாலை தன்னுடைய மூத்த பேரனின் கையில் கொடுத்தவர் “உன் பையன் பொண்ணுங்க தூக்கி வச்சிருந்தா அமைதியா இருக்கான். அதனால்தான் அவனுக்கு இந்த பொம்மை வாங்கினேன். சின்னவரு கையில பிடிக்க முடியலைன்னாலும் பக்கத்துல கார் சத்தத்தையும், இல்லை கிலுகிலுப்பை சத்தம் கேட்டா அமைதியா இருக்கான்”, என மருமகன் இல்லாத தைரியத்தில் மகளிடம் தன்னுடைய பேரனை குறித்து குறை கூறுகின்றோம் என்ற எண்ணமே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்.

இவரை எல்லாம் திருத்தவே முடியாது என முடிவு கட்டிக் கொண்டு வருணாவும் அதன் பின்னர் அவரிடம் பேச்சு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தது போன்றே முப்பது நாட்கள் கழித்து பெயர் சூட்டும் விழா உறவினர்கள் அனைவரையும் அழைத்து நடத்த ஏற்பாடு செய்தனர்.

இரு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உடைகள், நகைகள் என்று வாங்கிக் கொண்டுவந்த ஜானகி ராஜேந்திரன் சபையில் வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தனர். புண்ணியாதானம் முடிந்தவுடன் தன்னுடைய அப்பா, அம்மாவின் மடியில் மூத்தவனை இருத்திய சந்துரு அவனுக்கு ஆரோகன் எனும் பெயரைக் கூறவும் அவர்களும் அவ்வாறே மூன்று முறை தங்களது மூத்த பேரனுக்கு சிவனின் மற்றொரு பெயரான ஆரோகன் என்னும் நாமத்தை அவனது செவியில் உரைத்தனா்.

தங்களுடைய இளைய மகனை ராஜேந்திரன் ஜானகியின் தம்பதியினர் கையில் தந்த வருணா அவனுக்கென்று தாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த பெயரை கூற வாய் திறந்த பொழுது அவளை தன் கையை காட்டி தடுத்து நிறுத்திய ராஜேந்திரன் “என் பேரனுக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு ஏற்கனவே செலக்ட் பண்ணிட்டேன்”, எனக் கூறி கோபத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும், நிறைந்த ஒளிக்கும் பெயர்பெற்ற முனிவர் பெயரான “ஆத்ரேயன்” என்பதனை இளையவனின் காதில் உரக்கக் கூறினார்.

இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவர் கூறிய பெயர் மற்றவர்களுக்கு பிடித்து இருந்த காரணத்தினால் அனைவரும் அமைதி காத்தனர்.

பெயர் வைக்கும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் வருணா தன்னுடைய அப்பாவிடம் தனிமையில் “அப்பா! நீங்க பேர் செலக்ட் பண்ணி இருந்தீங்கன்னா அதை முதலிலேயே சொல்லிருக்கலாம் இல்லையா? எதுக்கு எல்லார் முன்னாடியும் வச்சு சொல்றீங்க? மத்தவங்க எங்களைதானே தப்பா நினைப்பாங்க”, என வருத்தத்துடன் பேசினாள்.

“நமக்குள்ளே இருக்கிற சண்டை, சச்சரவு வெளியிலிருந்து வர்றவங்களுக்கு தெரியுற மாதிரி நடக்கலாமா? அதுதான் பண்ணிட்டீங்க… அதோட இல்லாம ஒரு கோபமான முனிவர் பேரை என் பையனுக்கு வச்சிருக்கீங்களே! உங்களுக்கே இது நியாயமா இருக்கா?”, என மேலும் தன்னுடைய ஆதங்கத்தை வருணா கொட்டிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த சந்துரு

“விடு வருணா! நல்ல போ்தானே வச்சிருக்காரு… அந்த முனிவரைப் பத்தி நான் இப்பதான் கூகுள்ல பாா்த்துட்டு வர்றேன். அவா் ரொம்ப புத்திசாலி. அதனால நம்ம பையனும் புத்திசாலியாதான் வரணும்னு மாமா இந்த பேரு வச்சிருக்காங்க”, என தன்னுடைய மாமனாருக்காக தாங்கி பேசினான்.

இருவா் பேசியதற்கும் எதுவும் பதில் கூறாது ராஜேந்திரன் அதன் பின்னர் வந்த நாட்கள் அனைத்திலும் தன்னுடைய இளைய பேரனுடனே நீண்ட நேரத்தை செலவிட ஆரம்பித்தார். ஆரோகன் தன்னுடைய அம்மா, இல்லை பாட்டி பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்க ஆத்ரேயன் அனைவரிடமும் ஒட்டிக்கொள்ள பழகியிருந்தான்.

ஆரோகன் கலகலப்பான பேர்வழியாக பழக ஆரம்பித்தாலும் தன்னை சுற்றி பெண்டிர் கூட்டம் நிறைந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டான். ஆத்ரேயன் யார் தூக்கி வைத்தாலும் அமைதியாக சென்று அவர்களிடம் அமைதியாக இருப்பவன் தன் குடும்பத்து உறுப்பினர்கள் இருக்கும் இடத்தில் இருக்கவே விரும்பினான்.

இரட்டை குழந்தைகள் என்றாலும் உருவத்திலும், குணத்திலும் முற்றிலும் வேறுபட்டவர்களாகவே அவர்கள் இருந்தனர். ஒரு சில விஷயங்களில் வேறுபட்டு இருந்தவர்களை முற்றிலும் வேறுபட வைத்த பெருமை ராஜேந்திரனையேச் சேரும். ஆத்ரேயனுக்கு எப்பொழுதும் முனிவர்களை பற்றி மட்டுமே கதைகளை கூறிக்கொண்டிருக்கும் அவா் ஆரோகனிடம் “போ!உங்க அம்மாகிட்டயோ, பாட்டிகிட்டயோ கதை கேளு”, என சற்று வெறுப்பு காண்பித்தார்.

இச்செயலுக்கு உரமிடுவது போல் ஆகாஷும் மறைமுகமாக அவ்வப்பொழுது ராஜேந்திரனுக்கு ஆதரவாக பேசுவது போன்று வருணாவிற்கு எதிராக தூண்டி விட்டுக்கொண்டிருந்தான். ஆத்ரேயனுக்கும், ஆரோகனுக்கும் ஒரு வயதை நிறைவடைந்திருந்த நிலையில் ஆகாஷின் திருமணமும் அப்பொழுது நடைபெற்றதால் முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட இயலவில்லை.

அதன்பின்னர் வந்த நாட்களும் இருவரது சுட்டித்தனங்களுடனும், மாறுபட்ட குணங்களுடனும் வருணா தன்னுடைய நாட்களை தொலைக்க ஆரம்பித்திருந்தாள். அத்துடன் மட்டுமின்றி ஆரோகன் அவர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் எந்த வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கின்றனரோ அங்கே மட்டுமே விளையாட செல்வான். அதனை வருணாவிடமும் உரைத்துவிட்டு செல்லமாட்டான்.

கதவு சிறிதாக திறந்திருந்தாலும் உடனே அடுத்தவர்களின் வீட்டினுள் நுழைந்து விடுவான். ஆத்ரேயன் தன்னுடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி இவர்கள் இல்லாமல் எங்கும் வெளியில் செல்ல விரும்புவதுமில்லை, செல்வதுமில்லை. ஆரோகன் சிறு குழந்தை என்று முதலில் கண்டு கொள்ளாமல் விட்ட வருணா ஒருநாள் தன்னுடைய அப்பாவின் குத்தல் பேச்சுகளால் இப்படிதான் வருவானோ என தனக்குள்ளேயே கவலைப்பட ஆரம்பித்து விட்டாள்.

இதையெல்லாம் கவனிக்க நோ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த சந்துரு ஒருநாள் வருணாவை அழைத்து “எது நடக்கனும்ன்னு இருக்கோ ஒருநாள் அது நடக்கும். தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காத. பொண்ணுங்கன்னா நிறைய கிரியேட்டிவிட்டியோட விளையாடுவாங்க அதனாலதான் ஆரோகன் அவங்களோட சேர்ந்து விளையாடு நான். நீ கவலைப்படாதே!”, என தன்னுடைய மனைவியை ஆறுதல் படுத்தினான்.

இரண்டாவது பிறந்தநாள் விழாவிற்கு சந்துரு நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் இருக்கும் வாலன்டியா்ஸ் அனைவரும் வந்திருந்த பொழுது ஆரோகன் பிறந்தநாள் கேக்கை வெட்டி முதல் துண்டை தனது வீட்டிற்கு எதிர்த்த வீட்டிற்கு புதிதாக குடி வந்திருப்போரின் சிறு குழந்தை ஒன்றிற்கு ஊட்டிவிட ஓடிவிட்டான்.

அவனும், ஆத்ரேயனும் கேக் வெட்டியதும் மாற்றி மாற்றி ஊட்டிவிட வேண்டும் என ஒரு மாதமாக அவர்களை தயார்படுத்தி இருந்த வருணாவிற்கு ஆத்ரேயன் இதனை எவ்வாறு எதிர்கொள்வானோ என்ற பயமே முதலில் மேலோங்கியது. ஆனால் ஆத்ரேயன் தன்னுடைய அம்மாவை சமாதானப்படுத்தும் விதமாக “ஆரோக்கு அந்த பாப்பா கிழவி பிரண்டாம்(கோ்ள் ஃப்ரண்ட்) சூர்யா சித்தப்பா சொன்னாரு”, என கூறி தன் கையில் வைத்திருந்த கேக்கை வருணாவிற்கு ஊட்டி விட்டான்.

அவன் ஊட்டிய கேக்கைவிட கிழவி ப கேர்ள் பிரண்ட் என்பதை கிழவி பிரண்டு என அவன் கூறிய விதம்தான் அன்றைய பிறந்த நாளின் சிறப்பாக அமைந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரன் வருணாவிடம் “அடுத்த வருஷம் உன் மூத்த பையன் ஸ்கூல்ல எ பொண்ணுங்க இருக்கிற கிளாஸ்க்கு தான் போவேன்னு சொல்லப்போறான்.ஏதாவது கோ- எஜூகேஷன் ஸ்கூல் பக்கத்துல இருக்கான்னு பார்த்து இப்பவே தயார் பண்ணிக்கோ”, என.

நக்கலாக முடித்துவிட்டு அங்கிருந்து அகன்றார் ஏற்கனவே சந்துரு கூறியிருந்த வாா்த்தைகளால் ராஜேந்திரனின் குத்தல் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விட்டு இருந்த வருணா இதனையும் அதன் போக்கிலேயே விட்டு விட்டாள்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த ஆரோகனின் கேர்ள் ஃ ப்ரண்ட்களின் எண்ணிக்கை மட்டும் நிமிடக் கணக்கில் வளர்ந்துகொண்டே வந்தது. அவன் தன்னுடைய பெண் தோழிகளுடன் மூன்று வயதில் உட்கார்ந்து கொட்டம் அடித்துக் கொண்டிருக்க ஆத்ரேயனோ மிகவும் பொறுப்பாக தன் அம்மா செய்யும் வேலைகளில் சிறு சிறு வேலைகளை செய்ய கற்றுக் கொண்டிருந்தான்.

இவ்விரு துருவங்களையும் வேறுவழியின்றி மூன்று வயது முடிந்தவுடன் பள்ளியில் சென்று சேர்த்தனர். பள்ளிக்கு செல்லும் முன்னர் அங்க தன்யா இருப்பாளா? பாலா இருப்பாளா? அந்த ரோடு ஆப்போசிட்ல ஒரு அபார்ட்மெண்ட்ல புதுசா ஒரு பாப்பா வந்து இருக்காளே அவ ஸ்கூலுக்கு வருவாளா? என ஆரோகன் கேள்விகளால் படுத்தி எடுத்துவிட்டு இவர்கள் அனைவரையும் விட இன்னும் நிறைய பெண்கள் உன் வகுப்பில் படிப்பார்கள் என வருணா சமாதானப்படுத்திய பின்னரே பள்ளிக்குச் சென்றான்.

தன்னுடைய தாத்தா கூறிய குருகுல கதைகளை கேட்டு அதைப் போன்றே ஒரு குருகுலத்திற்குதான் தானும் செல்கின்றோம் என்ற எண்ணத்துடன் அறிந்தும், புரிந்தும், அறியாமலும், புரியாமலும் ஆத்ரேயன் பள்ளிக்கு சென்றான். முதல் மூன்று மாதங்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி இரட்டையரின் பள்ளி வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் மதிய வேளையில் பள்ளி முதல்வரிடம் இருந்து சந்துருவிற்கும், வருணாவிற்க்கும் அலைபேசி அழைப்புகள் பறந்து வந்தன.

அவர் அலைபேசியில் கூறியதைக் கேட்டு அதிர்ந்த வருணாவும்,சந்துருவும் பள்ளியை அடைந்து அவரை சந்தித்த பின்னர் பிரின்ஸிபல் கூறியதில் வருணா “என்னது?”, என தன் நெஞ்சில் கையை வைத்து அமர்ந்துவிட்டாள்.

வருணாவை திகைக்க செய்த விஷயம் ஆபத்தானதா? இல்லை அழகானதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *