Categories
Uncategorized

சந்திரோதயம்-4

Free Download WordPress Themes and plugins.

சந்திரோதயம்-4

ஆத்ரேயனின் மாற்றங்கள் மற்றவர்களிடம் பெரிதான பாதிப்பை ஏற்படுத்தாத பொழுதிலும் ராஜேந்திரனிடம் அளவுக்கதிகமான பாதிப்பை ஏற்படுத்தின.

அவனை காணும் நொடியில் எல்லாம் “மகாபாரதமும், ராமாயணமும் உலகமே கொண்டாடுற கதையாய் இருக்கிறப்ப இவன் அதுல வர்ற ஒவ்வொரு சீனுக்கும் புது விளக்கத்தை கொடுத்துட்டு இருக்கானே! பகவானே! ஏன் இப்படி எனக்கு மட்டும் சோதனையை தா்ற?”, என புலம்பிக் கொண்டே இருந்தார்.

பெண்கள் பின்னாடியே சுற்றுகிறான் என்று எண்ணிய ஆரோகன் இப்பொழுதெல்லாம் அமைதியாக தன்னுடைய தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவர் புலம்புவதை மட்டுமே கேட்க ஆரம்பித்திருந்தான்.

தன்னருகில் வந்து அமர்ந்த
ஆரோகனைப் பார்த்த ராஜேந்திரன் பேசாம இவனுக்கு கதையெல்லாம் சொல்லலாமா என யோசிக்க ஆரம்பித்தார். அவரது யோசனையை கண்டுகொண்ட ஜானகி “ஏன் ஒருத்தனுக்கு கதை சொல்றேன்னு சொல்லி கிருஷ்ண பரமாத்மாவை விட பெரிய ஆளாக்கி வச்சிருக்கீங்க… அது பத்தாதா? இவனை விட்டுடுங்க… செய்றதெல்லாம் ஏட்டிக்குப் போட்டியான வேலை. வெட்டியா உட்கார்ந்து புலம்பாம ஆத்ரேயன் மாடி வீட்டுல புதுசா வந்திருக்கிற பாப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்கப் போகணும்னு சொன்னான்.

அவனை கூட்டிட்டு போயி பார்த்துட்டு வாங்க”, என அவருக்கு வேலை ஏவினார். “என்னது மாடிவீட்டில் வந்திருக்கிற பாப்பாவா? அவங்க வந்தது நேத்து காலையிலதானே ஜானு!”, என ராஜேந்திரன் சற்று அதிர்ச்சியுடன் வினவியதும் கிச்சனில் இருந்து வெளிவந்த வருணா “அவங்க டெம்போல இருந்து ஜாமான் இறக்குறப்பவே இவன் போய் அந்த பொண்ணுகிட்ட பிரண்ட் ஆகிட்டான். இப்ப காய்ச்சல்ல ரே!ரே! அப்படின்னு இவனோட பேரை சொல்லி பொலம்புற அளவுக்கு வந்தாச்சு.

அங்க கொஞ்சம் ஃப்ரூட்ஸ் வாங்கி வச்சிருக்கேன். அதை எடுத்துட்டுப் போய் பார்த்துட்டு வாங்க”, என தன்னுடைய பங்குக்கு கூறிவிட்டு சென்றாள். எல்லாம் என்னோட நேரம் என புலம்பிய ராஜேந்திரன் ஆத்ரேயனை மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தன்னுடைய மகன் வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

அவர் மாமா வீட்டிற்கு கிளம்புகிறார் என்பதை அறிந்தவுடன் அவர் அருகில் வந்த ஆத்ரேயன் “தாத்தா! மாம்ஸோட பாப்பாவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க. இந்த வாரம் ஆலியா கூட அவுட்டிங் போறதால அடுத்த வாரம் வந்து அவளைப் பார்க்கிறேன்னும் சொல்லிடுங்க”, என்றதும் ராஜேந்திரன் திகிலடைந்த பார்வை ஒன்றை பார்த்தார்.

அவரது பார்வையை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பாட்டியை அழைத்துக்கொண்டு மேல் வீட்டில் உடம்பு சரியில்லாமல் இருக்கும் தர்ஷினியை காண தன்னுடைய அண்ணனையும் அழைத்துக்கொண்டு ஆத்ரேயன் சென்றுவிட்டான்.

அதற்குப் பின்னரான ஆத்ரேயனின் நடவடிக்கைகளில் இராஜேந்திரன் தன்னுடைய மகன் வழி பேத்தியை அவனது கண்ணில் காட்டாமல் இருப்பதற்காக தீவிர முயற்சிகள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அவனது வயதோ அல்லது குழந்தைத்தனமோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய மற்ற தோழிகளுடன் சேர்ந்து அந்த அபார்ட்மெண்ட் முழுவதும் ஆத்ரேயன் கலக்கிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் இருப்போரை மேலும் கலங்கச் செய்யுமாறு ஒரு நிகழ்வு அதற்கு அடுத்து வந்த சில மாதங்களில் ஏற்பட்டது.

சந்துரு நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வாலண்டியராக இருந்த விக்னேஷின் திருமணத்தில் கலந்துகொண்டு அதற்குப் பின்னான நேரத்தில் பீச் செல்ல முடிவெடுத்து ஒரு பெரும்படையே கடற்கரைக்கு சென்று ஆட்டம் போட்டுவிட்டு எலெக்ட்ரிக் ட்ரெயினில் வீட்டிற்கு திரும்பினர்.

அதில் பொது கம்பார்ட்மெண்டில் கூட்டமாக இருந்த காரணத்தினால் ட்ரெயின் ஆரம்பத்திலேயே இருந்த லேடிஸ் கம்பார்ட்மெண்டில் வருணா தன் இரு மகன்களுடன் ஏறி விட்டாள்.

வருணாவை தொடர்ந்து சில பெண்களும் ஏறியதில் இரண்டு குட்டிகளையும் அவள் சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் சந்துரு அதற்கடுத்த கம்பார்ட்மெண்டில் மீதமிருந்த பையன்களுடன் ஏறிக் கொண்டான்.

ஆனால் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த பின்னர் இறங்கி வந்த வருணாவின் முகம் கோபம், ஆத்திரம் என்ற கலவையான உணர்வை காட்டியது.அதனைப் பார்த்த சந்துருவுக்கு மட்டுமின்றி அவனுடன் இருந்த மற்றவர்களுக்கும் ஆச்சரியமே!

ஏனெனில் வருணாவிற்கு விளையாட்டிற்கு கூட கோபப்பட தெரியாது. கோபமென்ற ஒன்று இல்லாமல் இருக்க போய்தான் சந்துருவின் வீட்டில் சண்டை,சச்சரவுகள் எதுவும் நிகழ்வதில்லை. பொதுவாக சந்துரு கோபப்பட்டாலும் அந்த நேரத்திற்கு அமைதியாக இருந்துவிட்டு சில மணித்துளிகள் கழிந்த பின்னர் தன் கணவனிடம் சென்று

“அப்போ ஏதோ ஹை பிட்சில் பேசிட்டு இருந்தீங்களே ஜி! அந்த மாதிரி பேசினா காதுல கொய்ன்னு கேட்குது… அதனால இனிமே கொஞ்சம் சவுண்ட் குறைச்சு பேசுங்க”, என அதையும் சாதாரணமாக கூறிவிட்டு சென்று விடுவாள். அப்பேற்ப்பட்ட வருணாவின் முகம் கோபத்தை காட்டியதில் ஆச்சரியப்பட்டு நின்றவர்கள் தங்களின் அருகில் வந்தவுடன் என்னாச்சு என்று கோரஸாகக் கேட்டனர்.

சந்துருவிடம் இருந்து கேள்வியை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்த வருணா “ஜி! நம்ம வீட்ல போய் பேசிப்போம்”, என ஒரே வார்த்தையில் முடித்து விட்டாள். அவளது பின்னால் நின்றிருந்த நாகலட்சுமிடம் கார்த்திக்கும், சூர்யாவும் என்னாச்சு என சைகையில் வினவியதற்கு அவள் பதில் கூறு முன்னர் அவர்களின் புறம் திரும்பிய வருணா

“அங்க என்னடா உங்களுக்கு ஜாடை வேண்டிக்கிடக்கு? ! எவனாவது வாயை திறந்தா கொன்னுடுவேன் … வீட்டுக்கு வாங்க! எல்லாருக்கும் இருக்கு கச்சேரி!”, என தன் கட்டுப்பாட்டை இழந்து சிறிது சத்தமாகவேக் கூறினாள். இவ்வளவு கலவரத்திலும் ஆத்ரேயன்,ஆரோகன் இருவரையும் தன்னுடைய இரு கைகளில் பிடித்தவாறு அவர்களை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

முன்னால் வந்த கார்த்திக்கும், சூர்யாவும் “விடுங்க அண்ணி! நாங்க அவங்களை தூக்கிக்குறோம்”, என்று கூறியதும் “ஒன்னும் வேண்டாம். இவனுங்க நடந்தே வரட்டும்”, என பற்களைக் கடித்தவாறு கூறியதிலேயே பிள்ளைகள்தான் ஏதோ சேட்டை செய்துள்ளார்கள் என சந்துரு புரிந்துகொண்டான்.

அவனது எண்ணப்படியே சந்துருவின் அருகில் வந்த சூர்யா “என்னண்ணா அண்ணி இவ்ளோ கோவப்படுற அளவுக்கு இவனுங்க என்னத்த செஞ்சு வச்சாங்க? அப்படியே செஞ்சாலும் அதை எல்லாம் தூசு மாதிரி தட்டி விட்டுட்டு போறவங்க இன்னிக்கு ஏன் புதுசா கோவப்படுறாங்க?”, என வினவினான்.

அவனை மேலும் கீழுமாக பார்த்த சந்துரு “வருணாவைக் கூப்பிட்டு என்ன விஷயம்ன்னு நீ கேட்டதா சொல்றேன். உனக்கு இங்கேயே பதில் சொல்லுவா”, என்றதும் “ஐயா சாமி! உங்க குடும்ப பஞ்சாயத்துல என்னை கோர்த்து விடாதீங்க! ஆள விடுங்க!”, என்றவன் பின்புறமாக இருந்த மற்றவர்களுடன் பேசிக் கொண்டே வந்தான்.

ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவுடன் வருணா வாய்விட்டு எதுவும் சொல்லாமல் சந்துருவின் மடியில் படுத்து அழத்தொடங்கினாள்.

அதுவரை சாதாரணமாக எண்ணிக்கொண்டிருந்த சந்துரு வருணாவின் அழுகையில் பதறிப் போனான்.”வருணா! என்னாச்சு ஏன் அழுகுற? சொல்லுமா! யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணிட்டாங்களா? அப்படியே பண்ணியிருந்தாலும் அங்கேயே நீ அடி வெளுத்துட்டு வந்திருக்க வேண்டியதுதானே! அதுக்கு பின்னாடி வர பிரச்சினையை நான் பார்த்துப்பேன்தானே!”, என சந்துரு பலவிதங்களில் அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே ஏற்கனவே அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சந்துருவின் அம்மா அப்பாவும், வருணாவின் அம்மா அப்பாவும் வெளியே வந்தனர்.

ஹாலுக்கு வந்ததும் அனைவரும் சுற்றியிருக்க மகள் தன்னுடைய கணவனின் மடியில் படுத்து அழுது கொண்டிருப்பதைக் கண்ட ராஜேந்திரன் வேகவேகமாக அவளது அருகில் வந்து “புத்தி கித்தி கெட்டுப் போச்சா? என்ன பண்ணிக்கிட்டு இருக்க? எழுந்து தொலை”, என அவளை உலுக்கி எழுப்பினார்.

அவரது சத்தம் கேட்கும் வரை அமைதியாக அழ மட்டுமே செய்து கொண்டிருந்த வருணா அவரது குரல் கேட்ட நொடியில் ஆவேசம் வந்தவளாக “எல்லாமே உங்களாலதான்! உங்களால மட்டும்தான் இப்படி ஆச்சு”, என கத்த தொடங்கினாள்.

அவளது கத்தலில் பயந்து பின்வாங்கிய ராஜேந்திரனை கண்ட சந்துரு “வருணா! பெரியவங்களை என்ன பேச்சு பேசுற? என்னாச்சுன்னு முதல்ல சொல்லு”, என சற்று குரலை உயர்த்தி கூறினான். அவனின் குரலில் தனது ஆவேசத்தை சற்றே அடக்கிய வருணா ஆத்ரேயனை நோக்கி தன் கைகளை நீட்டியவாறு “இவன் என்ன பண்ணினான் தெரியுமா ஜி?”, என சிறு குழந்தையாக குறை கூற ஆரம்பித்தாள்.

“என்ன பண்ணுனான்? அதை முதல்ல சொல்லு”, என ஜானகியும் அதட்டியதில் தனது அழுகையை முழுதாக நிறுத்திய வருணா ஆத்ரேயன் செய்த செயலைக் கூற ஆரம்பித்தாள். “லேடிஸ் கம்பார்ட்மெண்டில் ஏறுன ஆரம்பத்துல அமைதியா இருந்தான். அந்த ஸ்டேஷன்ல காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஏறுவாங்க உங்களுக்கு தெரியும்தானே! கொஞ்சம் காலேஜ் பொண்ணுங்க அதே கம்பார்ட்மெண்டில் ஏறுனதும் என்ன செஞ்சான் தெரியுமா?

போனவாரம் அழுது அடம் பிடிச்சு அவங்க அருமை தாத்தா வாங்கி தந்த சன் கிளாஸை எங்க வச்சிருந்தான் அப்படின்னு தெரியலை… டக்குனு எடுத்து மாட்டுறான். பேண்ட் பாக்கெட்டுக்குள் அந்த விளையாட்டு கன் இருக்கு இல்லையா? அதை எடுத்து ஷர்ட்டை ஒரு பக்கம் மட்டும் உள்ளே திணிச்சுவிட்டு அந்த கன் தெரியுற மாதிரி வைக்கிறான்.

அது எல்லாத்தையும் விட அடுத்து செஞ்சதுலதான் என் மனசு பதறி போச்சு. அவ்வளவு நேரம் உட்கார இடமில்லாமல் நான் நின்னுகிட்டு இருந்ததுனால ரெண்டு பேரையும் இறுக்கிப் பிடிச்சு நின்னுகிட்டு இருந்தேன். அந்த பொண்ணுங்களை பார்த்த உடனே இதெல்லாம் செஞ்சிட்டு டக்குனு என்ன பிடிச்சு தள்ளிவிட்டுட்டு என் கையில் இருந்து வெளியில் வந்து கம்பி எதையும் பிடிக்காமல் கை ரெண்டையும் பின்னாடி கட்டிகிட்டு நிக்குறான்.

ட்ரெயின் ஆட்டத்துல முன்னாடி வந்து விழுந்துட்டாலோ, இல்லைன்னா கீழே விழுந்தாலோ என்ன ஆகும்? நானும் கூப்பிட்டுகிட்டே இருக்கேன். ஆத்ரேயா! வாம்மா! அம்மா பக்கத்துல வந்து அம்மா கையை பிடிச்சுக்கோன்னு கெஞ்சுறேன். கொஞ்சம் கூட கேட்காமல் அம்மா எல்லார் முன்னாடியும் முழு பேரை சொல்லி கூப்பிடாதீங்க அப்படின்னு சொல்றான்…

அந்த பொண்ணுங்க எல்லாம் இவனை பார்த்து சிரிக்குறாங்க”, என வருணா கூறியதில் அனைவருக்கும் சற்று அதிர்ச்சியே! சிறுக்குழந்தை கம்பியை பிடிக்காமலேயே தாயையும் பிடிக்காமலும் நின்றதில் ஏதேனும் நிகழ்ந்திருந்தால் என்னவாயிருக்கும் என்ற பதட்டம் அனைவருக்கும் இருந்தாலும் சந்துரு “சரி அதுதான் எதுவும் நடக்காமல் நல்லபடியாதானே வந்துட்டான். பிறகு ஏன் நீ அழுகுற?”, எனக் கேட்டதற்கு வருணா பதில் கூறும் முன்னர் அவ்வளவு நேரம் அமைதியாக அம்மா அழுவதையும் பேசுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆத்ரேயன் இப்பொழுது தன் தந்தையிடம் திரும்பி

“அப்பா! அதெல்லாம் இல்லைப்பா… நான் ஸ்டெடியாகதான் நின்னேன். அந்த கோ்ள்ஸ் என்னை பார்த்து சிரிச்சாங்கன்னு மட்டும் அம்மா சொல்றாங்க இல்லையா? அதுல ரெண்டு பேரு வந்து எனக்கு கிஸ் பண்ணிட்டு போனாங்க தெரியுமா? இவ்வளவு கியூட்டா இருக்க அப்படின்னு சொல்லி கொஞ்சுனாங்க”, என தான் போட்டிருந்த சட்டையின் காலரை தூக்கிவிட்டு பெருமையாகக் கூறினான்.

ஆரோகனோ அம்மா அழுவதைத் தாங்காமல் அவளது துப்பட்டாவை பற்றியவாறு அவனது மெதுகுரலில் அழாதிங்கம்மா என முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஆத்ரேயன் கூறியதில் கடுப்பாகி அவனை அடிப்பதற்காக வருணா கை ஓங்கிட ராஜேந்திரன் தன் செல்ல பேரன் அடிவாங்குவது பொறுக்காமல்

“குழந்தை ஏதோ செஞ்சிட்டான்… அதுக்காக அடிக்க செய்வியா?”, என இருவருக்கும் இடையில் வந்தார்.” நான் ஏன் அழுதேன் கேட்டீங்க இல்லையா? ஏன்டா இப்படி பண்றன்னு கேட்டதுக்கு கிருஷ்ணா கோவர்த்தன மலையை எந்த பிடிப்பும் இல்லாமல் ஒத்த விரலில் தூக்கி வச்சுக்கிட்டு நின்னாராம். அதை பார்த்துதான் பிருந்தாவனத்தில் இருந்த எல்லா பொண்ணுங்களும் அவர்கிட்ட மயங்கிட்டாரங்களாம்….

அவா் அம்மா என்ன இப்படியா எல்லார் முன்னாடியும் கீழே போடுன்னு சொன்னாங்க? நீங்கதான் இப்படி சொல்றீங்க? இனிமே இந்த மாதிரி சொல்லாதீங்க அப்படின்னு எனக்கு திரும்ப சொல்றான். அதைக் கேட்டு எனக்கு எப்படி இருக்கும்?”, என வருணா மீண்டும் ஆவேசத்தின் உச்சத்திற்கு செல்ல சந்துரு அவளை கட்டுப்படுத்தினான்.

இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அனைத்திற்கும் தான் கூறிய கதைகள்தான் காரணமா என ராஜேந்திரன் தன்னுடைய பார்வையாலேயே தன் சம்பந்தியிடம் வினவ அவரோ நீங்க நல்லதுக்கு செஞ்சது அவன் இப்படி யூஸ் பண்ணிக்குறான். பெரிய ஆளானா மாறிவிடுவான்”, என சமாதானம் கூறி அழைத்துச்சென்றார்.

வருணாவும் சிறிது நேரத்தில் சமாதானமாகி விட இக்கலவரம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களில் சூர்யா மட்டும் முன்வந்து ஆத்ரேயனை தன்னுடைய அருகில் அழைத்து அவனது காதில் ஏதோ முணுமுணுத்தான். அதனை கண்டுவிட்ட சந்துரு “என்னடா சொல்ற?”, என சூர்யாவிடம் வினவ அவன் “ஒன்னும் இல்லைண்ணா!”, என வருணாவின் ஆவேசத்தை கண்முன்னால் கண்ட பயத்தில் கூற

ஆத்ரேயனோ “அப்பா! பொண்ணுங்க முன்னாடி இப்படி எல்லாம் செய்யக்கூடாது… நாம செய்யணும் ஆனால் நாம செய்றதே தெரியக் கூடாதுடா.. அப்படி இருந்தாதான் கோ்ள்ஸ் இன்னும் நல்லா பாா்ப்பாங்க அப்படின்னு சித்தப்பா சொல்றாரு”, என முழுவதுமாக போட்டு கொடுத்தான்.

ஆத்ரேயன் கூறி முடித்த நொடியில் கிச்சன் வாசலில் இருந்து சூர்யாவை நோக்கி அகப்பை பறந்து வந்தது.

அதற்குப் பின்னரான நாட்களில் வருணா ஆத்ரேயனிடம் சற்று அதிகமாகவே கண்டிப்பைக் காட்டினாள். ரயிலில் நடந்த நிகழ்வில் வருணா கண்ணீர் சிந்தியதைக் கண்ட ஆத்ரேயனும் அவளது ஒருமுறைப்பிற்கு அடங்க ஆரம்பித்திருந்தான். அதெல்லாம் எப்பொழுதாவதுதான்.

ஆனால் முழு நேர வேலையாக தர்ஷினி, ஆலியா என வீட்டின் அருகிலும், பள்ளியில் காவ்யா, சங்கவி தனு என்ற அவனது தோழிகளுடனும் விளையாடுவது மட்டுமே ஆத்ரேயன் செய்து கொண்டிருந்தான். தான் விளையாட செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆரோகனை அழைத்துச் சென்று அவனை ஓரிடத்தில் அமர்த்தி விடுவான்.

இவனது தோழிகள் ஆரோகனிடம் பேசச் சென்றால் “ஆரோக்கு கேர்ள்ஸ் கூட பேசுறது சுத்தமா பிடிக்காது. அப்படி நீங்க போய் பேசினாலும் அவன் அழ ஆரம்பிச்சுடுவான். அதனால அவனை அழ வைக்காம நாம மட்டும் விளையாடுவோம்”, எனக் கூறி திசை திருப்பும் வேலையை ஆத்ரேயன் செய்து கொண்டிருப்பதை பல நாட்கள் யாரும் அறியவில்லை.

ஒரு நாள் ஆலியாவின் அம்மா தான் செய்த பிரியாணியை எடுத்துக்கொண்டு வருணாவின் வீட்டிற்கு வந்தவர் பிரியாணி கொடுத்ததுடன் ஆரோகனைப் பார்த்து “ஆரோ இதுல ஆன்ட்டி மட்டன் பிரியாணியும், சிக்கன் ப்ரையும் வச்சிருக்கேன். சாப்பிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லு…

ஆத்ரேயா எப்பவும் ஆலியா கூட வீட்டுக்கு வர்றான். நீ வர்றதே இல்லை. நீயும் வந்தா அவங்களோட சேர்ந்து விளையாடலாம் இல்லையா?”, என சாதாரணமாக உரைத்தார்.

மட்டன், சிக்கன் என்றதிலேயே ஆரோகனினட முகம் அஷ்ட கோணலாக மாறியது. அத்துடன் நில்லாமல் ஆலியாவுடன் வந்து விளையாடு என்றுக் கூறியவுடன் வேகமாக ஓடிச்சென்று தன் அம்மா துப்பட்டாவின் பின்னால் ஒளிந்து கொண்டான். அதனை பார்த்து சிரித்த ஆலியாவின் அம்மா

“என்ன வருணா இவன் இப்படி ஷை டைப்பா இருக்கான்”, என கேட்டார். “அதெல்லாம் இல்லை, அவன் நான்வெஜ் எதுவும் சாப்பிட மாட்டான். வெஜிடேரியனா இருக்கான்”, என்று வருணா பதில் உரைத்ததும் “சரி! ஆத்ரேயனுக்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கள்”, எனக் கூறி விட்டு வெளியேறிவிட்டார்.

அவர் வெளியேறிய பின்னர்தான் தன்னுடன் அழைத்து வந்த தன்னுடைய மகளை காணோம் என்பதை உணர்ந்து மீண்டும் உள்ளே வந்தவர் “வருணா! ஆலியா எங்கே? என் கூடதான் வந்தா. அதுக்கடுத்து ஆளைக் காணோமே!”, என்றவுடன் “இங்கதான் எங்கயாவது இருப்பா… ஆத்ரேயா எங்க இருக்க? ஆலியா பாப்பாவா அவங்கம்மா தேடுறாங்க பாரு”, என்றவுடன் தங்களின் அறையிலிருந்து வெளிவந்த ஆத்ரேயாவின் கைகளை இறுக்கிப் பிடித்தவாறு ஆலியாவும் வந்தாள்.

வெளியே வந்தவுடன் ஆலியாவிடம் ஏதோ சிறு குரலில் உரைத்த ஆத்ரேயன் அவளுக்கு டாட்டா காட்டிவிட்டு அவர்கள் வெளியேறும் வரை அமைதியாக இருந்தான். அவர்கள் வெளியேறியவுடன் “என்னம்மா இப்படி பண்றீங்க? அதுதான் நான் ஆலியா கூட பேசிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுது இல்லையா? நீங்க ஆத்ரேயா, ஆத்ரேயான்னு கத்துறீங்க? அவங்க அம்மாகிட்ட ஆலியா இங்க விளையாடிட்டு அப்புறமா வரட்டும்னு சொல்லியிருக்கலாம் இல்லையா?”, என அலுத்துக்கொண்டவன் பிரியாணியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“எல்லாம் என் நேரம்டா” என்ற வருணா ஆரோகனிடம் திரும்பி “ஆரோகுட்டி நீ ஏம்மா யார் கூடவும் விளையாடமாட்டேங்குற? எல்லார் கூடவும் விளையாடனும். அப்பதான் உனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க”, என அவனுக்கு எடுத்துரைத்தாள்.

அதுக்கு பதிலாக ஆரோகன் வாய் திறந்து பேசாமல் ஆத்ரேயனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையிலேயே இவன்தான் மிரட்டி வைத்துள்ளான் என உணர்ந்து கொண்ட வருணா தரையில் அமர்ந்தவாறு மகனை தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டு “என்னாச்சு ஆரோ! அம்மாகிட்ட சொல்லு”, என்றவுடன்

” இல்லைம்மா! ஆத்ரேயாதான் சொன்னான். அவன் எந்த கேர்ள்ஸ் கூட பேசுறப்போ நான் அங்க நிக்கக் கூடாது. அவனோட பிரண்ட்ஸ் யாராவது வந்து என்கிட்ட பேசுனா உடனே நான் கத்தி அழ ஆரம்பிச்சுடனும். அவங்களோட அம்மாக்கள் வந்து என்கிட்ட பேசினாங்கன்னா நான் உங்க துப்பட்டாவை பிடிச்சிக்கிட்டு ஒழிஞ்சுக்கணும். இல்லைனா நீங்க செஞ்சி தர்ற பேபிகார்ன் ஃப்ரைல கரப்பான்பூச்சியை வச்சி ஃப்ரை பண்ணி தந்திடுவேன் அப்படின்னு சொல்லிருக்கான்.

அதுதான் அப்படி செஞ்சேன். எனக்கு கரப்பான்பூச்சி எல்லாம் வேண்டாம்மா. அதெல்லாம் பேட்”, என மழலை மாறாமல் உரைத்தவனை எண்ணி ஐயோ என மனம் வருந்தினாலும் ஆத்ரேயனின் கேடித்தனத்தை எண்ணி வருணாவிற்கு ஆத்திரம் அணை உடைத்தது.

உங்களது ஆத்திரங்களோ, அறிவுரைகளோ ஆத்ரேயனின் அட்ராசிட்டிசை அணை போட்டு தடுக்க முடியாது என்னும் விதமாக அவனது வளர் பருவங்கள் அங்கை,மங்கைகள் சூழ அணையா விளக்காக பிரகாசமாக இருந்தது.

அந்த ஆண்டு பள்ளி இறுதி நாட்கள் முடிந்த பின்னர் வந்த விடுமுறையில் சந்துருவின் குடும்பம் சுற்றுலா சென்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஆத்ரேயன் செய்த செயலால் ஒரு குடும்பமே பெரும் துயரத்திற்கு ஆளானது.

அத்துயரத்தினால் ஆத்ரேயனின் அட்ராசிட்டிஸ் முடிவிற்கு வந்தனவா? இல்லையெனில் அதனை காரணமாக வைத்து அதிகமானதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *