Categories
Uncategorized

புதுமுகம்

Free Download WordPress Themes and plugins.

புதுமுகம்

ஆழ்ந்த அமைதியும், அழகிய சூழ்நிலையும் நிறைந்திருந்த அவ்வறையில் குழுமியிருந்தோரின் முகத்தில் பல்வித உணர்வுகள் வர்ணஜாலங்களாக பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

அனைவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த சாரு நிசப்தத்தை கலைக்கும் விதமாக தன் தொண்டையை கனைத்துக் கொண்டு “எல்லோரும் இப்படி ஒவ்வொருத்தரோட மூஞ்சியையும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம்?”, என வினவியவுடன் மற்றவர்களும் தங்களது திருவாய் மலர ஆரம்பித்தனர்.

அதில் முதலாவதாக லாரா “என்ன சாரு இப்படி கேட்டுட்டே? இத்தனை வருஷம் சீனியர் நாம இருக்குறப்ப நம்மளுக்கு மேல நம்மளை விட வயசுல குறைஞ்சவங்க வர்றதை உன்னால மட்டும் ஏத்துக்க முடியுதா? அதுவும் இந்த ஆர்கனைசேஷன்ல சேர்ந்து ஒரே மாசத்துல இவ்வளவு பெரிய பிரமோஷன் வாங்குனதை யாராலும் ஏத்துக்க முடியலை”, என பொரிந்து தள்ளவும் பிலோவும், நீபாவும் அதற்கு ஒத்து ஊதினர்.

“சரி! ஏத்துக்க முடியலை… அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? இது மேல இருந்து வந்த கட்டளை. நாம நாலு பேரும் சாதிக்க முடியாததை அந்த புது ஜீவன் ஒரே மாசத்துல சாதித்ததை நம்மளுக்கு பிடிக்கலைனாலும் பாராட்டிதான் ஆகணும்”,எனக்கூறிய சாரு “இப்படியே பேசிட்டு இருக்காம நாளைக்கு வரப் போற அந்த புது ஜீவனை சந்தோசமா வரவேற்கிறோமோ இல்லையோ சங்கட படுத்தாமல் சில பல கேள்விகள் கேட்க நாம ரெடியா இருக்கணும்”, என்று மீண்டும் கூறியவுடன் அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

இவர்கள் அனைவரையும் பொறாமை கொள்ள வைத்த ஜீவன் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய வேலையை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி எவ்வித தொய்வும் இன்றி செவ்வனே செய்து கொண்டிருந்தது.

தான் செய்யும் வேலையால் மற்றவர்கள் தன்னை கண்டு நடுங்க வேண்டும் என்ற எண்ணமே அந்த ஜீவனின் சகல அணுக்களிலும் உறுதியாக ஒலித்துக்கொண்டிருந்ததை அதன் முகமே பிரதிபலித்தது.

மறுநாளைய விடியலில் மற்றவர்கள் கூடி தன்னை கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை உணராமல் உள்ளே நுழைந்த ராணாவை மற்றவர்கள் ஆரம்பத்தில் இகழ்ச்சியாக வரவேற்றனர். உங்களை விட நான் ஒன்றும் குறைந்த நிலையில் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக ராணா அவர்கள் எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த உடன் அனைவரிலும் மிகவும் மூத்தவரான லாராவுக்கு கோபம் பொங்கி விட்டது.

” என்ன இப்பதான் ஜாயின் பண்ணி இருக்க, சீனியருக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு உனக்கு தெரியாதா?”, என எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டவரிடம் “பல வருஷத்துக்கு முன்னாடி ஜாயின் பண்ணி உங்களால சாதிக்க முடியாததை நான் ஒரே மாசத்துல சாதித்து இருக்கேன்.

அப்படின்னா உள்ள நுழைஞ்ச உடனே நீங்க எல்லாரும் எந்திரிச்சு நின்னு எனக்கு மரியாதை கொடுக்கணும். உங்க எல்லாரையும் விட தலைமை போஸ்ட்ல இப்போ உட்கார்ந்து இருக்கிற எனக்கு இன்னும் மரியாதை கொடுக்காம இப்படி பேசுறீங்களே!”, என இழுத்த ராணாவை கண்டு மற்றவர்களின் முகத்தில் சிந்தனை கோடுகள் வர ஆரம்பித்தன.

மீண்டும் லாரா பதில் கூறும் முன்னர் நிலைமையை தன் கையில் எடுத்துக் கொண்ட சாரு “ஓகே! ராணா உன்னை பத்தி நீ கொஞ்சம் எங்களுக்கு டீடைல்ஸ் சொல்லு”, என்றதும் “என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் கிடையாது. உங்களுக்கே தெரியும். வேலைக்கு சேர்ந்த ஒரே மாசத்துல ஒட்டு மொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்கிற மாதிரி செஞ்ச பெருமை எனக்கு இருக்கு. அது மட்டும் கிடையாது. என் பேர கேட்டாலே உலகமே நடுங்குது.

இதுக்கும் நான் யாரையும் மிரட்டலை. திட்டல, எதுவும் செய்யலை. ஆனால் செய்யவேண்டிய வேலையை கரெக்டா செஞ்சிட்டு இருக்கேன்”, என்ற ராணாவின் பேச்சில் திமிர்த்தனம் நன்றாகவே வீசியது.

அதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சாரு “உன்னைவிட இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் பல சாதனை செஞ்சவங்கதான். இதோ இங்கே இருக்காங்களே லாரா ,இவங்க காலராவை பரப்பி பல உயிரை பிடிச்சவங்க. இந்த பிலோ பிளேக் நோய் பரப்புவதில் நம்பர் ஒன். இதோ இருக்காளே நிபா, இவ நிபா வைரஸ் அப்படிங்கற பேர்ல பலரை ஆட்டி படைச்சா.

இவங்க எல்லாரையும் விட சார்ஸ் அப்படிங்கற பேரோட வந்த நான் உலகத்தையே ஆட்டங்காண வச்சேன். எங்க எல்லாரையும் விட நீ எதுல மிஞ்சிட்ட?”, என அவ்வளவு நேரம் பொறுமையாக பேசிக்கொண்டிருந்த சாரு எனும் சார்ஸ் வைரஸ் ராணா எனும் கொரானாவை பார்த்து கேள்வி எழுப்பியது.

“நீங்க சொன்னீங்களே! காலரா அது இப்போ ஒருத்தர உங்களால அப்படி பண்ண முடியுமா? முடியாது. அதே மாதிரி நீங்க சொன்ன ஒவ்வொரு கதையும் என்னைக்கோ கல்லறை கட்டியாச்சு. நான் அப்படி இல்லை. நேருக்கு நேர் பார்த்துட்டாலே நான் அவங்கள ஆக்கிரமித்து விடுவேன் அப்படின்னு அலறியடித்து ஒவ்வொருத்தரும் ஓடி ஒளியறாங்க.

நீங்க செஞ்சதெல்லாம் ஒவ்வொரு குறிப்பிட்ட ஏரியால மட்டும்தான் செய்ய முடிஞ்சது. ஆனால் என்னை பார்த்து உலகமே நடுங்குது”, என்று ராணா தன் தற்பெருமைகளை அள்ளி வீசியதில் கடுப்பான மற்றவர்கள் உடனடியாக சாரு கொண்டு வந்து வைத்த கை கழுவும் சோப்பை வைத்து கைகழுவிவிட்டு அங்கிருந்த சானிடைசரை வைத்து கைகளை சுத்தம் செய்தவுடன் முகமூடிகளையும் அணிந்துகொண்டு நின்றனர்.

அவர்களைப் பார்த்து சிரித்த கொரானா “இது என்ன? புதுசா ஏதோ காமெடி பண்றீங்க? என்னை பார்த்து உங்களுக்கும் பயம் வந்திருச்சா?”, என்றவுடன் ” உன்னை பார்த்து நாங்க பயந்துபோய் செய்யலை. இது அத்தனையும் செஞ்சு மக்கள்தான் உன்னை துரத்திகிட்டு இருக்காங்க. அதை உணர்த்துவதற்குதான் இதை செஞ்சோம்.

இயற்கையை அளிக்கிற மனுஷங்களுக்கு புத்தி புகட்ட தான் கடவுள் நம்மளை பல ரூபத்தில் படைக்கிறார் அத நாம பெருமையா நினைக்கக்கூடாது. அப்படி பெருசா நீ நினைக்கிற இந்த தற்பெருமையே உன்னை தலைகீழா தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு ஒகொரானா ல்லாமல் செய்துவிடும்.

நம்மளோட நோய் பரப்பும் சங்கத்தில் நீ பெரிய ஆளா இருந்தாலும் எங்களுக்கு கல்லறை கட்டிய அதே ஆட்கள் உனக்கும் கட்டுவாங்க அப்படிங்கிற நம்பிக்கையோட உன்னை வரவேற்கும் மீட்டிங்கை முடிச்சிட்ட நாங்க கூடிய சீக்கிரம் உனக்கு முடிவுகட்ட மீட்டிங்லயும் இதே மாதிரி வந்து கலந்துப்போம்”, எனக்கூறிவிட்டு அனைவரும் ராணாவை கண்டுகொள்ளாமல் வெளியேறியதில் கொரானா தன்னுடைய கடைசி நாளினை எண்ணி பயந்து திருதிருவென்று முழித்துக்கொண்டு பீதியடைந்த புது முகத்துடன் தனித்து நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *