Categories
On-Going Novels

வாழ்வே நீதானடி! அத்தியாயம் – 13

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம்- 13

அவளை மலைப்பாக பார்த்துக் கொண்டே “உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா யோசிக்காம என்னைக் கேட்கலாம் ஹரிணி” என்றான்.

அவளும் மெல்லிய சிரிப்புடன் “வேற வழியே இல்லை அத்தான். நீங்க தான் பண்ணனும். நோ சாய்ஸ்…இப்போதைக்கு என் மனசில் உள்ளதை யார் கிட்டேயும் பகிர்ந்துக்க கூடிய சூழ்நிலையில் இல்லை. உங்களைத் தவிர…அதே சமயம் என்னுடைய எதிர்காலத்தை இந்த விஷயத்துக்காக பணயம் வைக்கவும் தயாராக இல்லை” என்றாள் அழுத்தமான குரலில்.

அவளது பக்குவமான பேச்சு அவனை பிரமிக்க வைத்தது. இந்த சின்ன வயதிற்குள் எத்தனை தெளிவு, உறுதி. இந்த வயது இளைஞர்களுக்கு எல்லாம் இப்படி பட்ட தெளிவும், உறுதியும் இருந்து விட்டால் காதல் பெயரில் நடக்கும் கொலைகளும், தற்கொலைகளும் குறையும் என்று எண்ணிக் கொண்டான்.

அதே சமயம் மனதிற்குள் ஹர்ஷாவிடமும் பேசிப் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. அவன் தான் தனக்கானவன் என்று இவள் உறுதியாக இருக்கும் போது, அவன் அன்னையின் பேச்சைக் கேட்டு உண்மையிலேயே இவளை ஒதுக்கிச் சென்றிருந்தால் எதிர் காலம் பாதிக்கப்படுமே என்று யோசித்தான்.

இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கியபடியே வீடு வந்து சேர்ந்தனர். நிவியோ இருவரின்  முகத்தையும் மாறி மாறி ஆராய்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் என்னவோ இப்போதே தங்களது திருமணத்தைப் பற்றி பேசி முடித்த மாதிரி அவளுக்கு அவ்வளவு டென்ஷன்.

ஹரிணி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது மிக இயல்பாக கனேஷிடமும், கிரியிடமும் வாயடித்துக் கொண்டிருந்தாள்.

இரவு உணவை முடித்துக் கொண்டு கிரி கிளம்பிச் சென்று விட, தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் சென்று படுத்து விட்டாள் ஹரிணி.

மறுநாள் நிவியின் மாமியார், மாமனாரை சென்று பார்த்து விட்டு ஊருக்கு பஸ் ஏறி விட்டாள்.

கிரியின் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட கணேஷிற்கும் அவர்களிடையே வந்த பிரிவு வருத்தத்தை அளித்தது. ஆனால் ஹரிணி தனது முடிவில் தெளிவாக இருப்பதை அறிந்து தேற்றிக் கொண்டான்.

ரெண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு ஹர்ஷாவை அழைத்தான் கிரி.

“சொல்லுங்க கிரி எப்படி இருக்கீங்க?” என்றவனது குரலிலேயே அவனது வருத்தம் தெரிந்தது.

“ம்ம்…நல்லா இருக்கேன் ஹர்ஷா. அப்புறம் எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ணுனீங்க?”

“நல்லா பண்ணி இருக்கேன் கிரி”.

“அடுத்து என்னன்னு யோசனை பண்ணிட்டீங்களா? எதுவும் இண்டர்வியு அட்டென்ட் பண்ணுணீங்களா?”

“இல்ல கிரி…கொஞ்சநாள் அம்மாவோட இருந்து கடையை பார்த்துகிட்டு அப்புறமா வேலைக்கு போகலாம்னு ஒரு எண்ணம்”

“ஒ…அதுவும் நல்லது தான். அப்புறம் சொல்லுங்க..என்னெனவோ கேள்விபட்டேன் உண்மையா?”

தங்களது பிரச்சனையைப் பற்றிக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் “ஆமாம் கிரி. அம்மாவுக்கு எங்க லவ் தெரிஞ்சு போச்சு. அதனால சத்தியம் வாங்கிட்டாங்க” என்றான் பெருமூச்சுடன்.

“அப்போ அம்மா பேச்சைக் கேட்டு உங்க லவ்வை தலை முழுகிட்டீங்க இல்லையா?”

“அப்படி இல்லை கிரி…இப்போ என் குடும்பம் எதிர்காலத்தை பற்றிய பயத்தோட இருக்காங்க. அதனால அவங்க என்னை பிடிச்சு வைக்க முயற்சி பண்றாங்க. எப்படி இருந்தாலும் நான் இப்போவே கல்யாணம் பண்ணிக்க போறதில்லை. அதனால பின்னாடி சமதானப்படுதிக்கலாம் என்கிற எண்ணத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்திட்டேன்” என்று தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தான்.

அவன் தரப்பு வாதம் நியாயமானதாகவே தோன்றி விட “நீ சொல்றது சரி தான் ஹர்ஷா. ஆனா ஹரிணி தான் ஹர்ட் ஆகிட்டா” என்றான்.

“ம்ம்…எனக்கும் புரியுது. ஆனா என் பக்கத்தை அவ யோசிக்கவே இல்லை கிரி. அதுதான் கஷ்டமா இருக்கு” என்றான்.

“விடுங்க ஹர்ஷா! காலப்போக்கில் எல்லாம் சரியாகும். ஆனா எனக்கு உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி இருக்கு அதுக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க”.

“கேளுங்க கிரி”

“உங்க அம்மாவுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்திற்காக ஹரிணியை விட்டு கொடுக்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கானு மட்டும் சொல்லுங்க”.

அவன்  என்ன கேட்கிறான் என்பதை புரிந்து கொண்ட ஹர்ஷா “இந்த ஜென்மத்தில் எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா அது ஹரிணி மட்டும் தான்” என்றான் உறுதியாக.

அவனது கூற்றில் சற்று நிம்மதியான கிரி “இது போதும் ஹர்ஷா. உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளுங்க” என்றான்.

“நிச்சயமா கிரி! உங்களை மட்டும் தான் கேட்பேன். எங்க காதல் வெற்றியடைய நீங்க மட்டும் தான் உதவ முடியும்” என்றான் கிண்டலாக.

“அடபாவிகளா! என்னை மீடியேட்டர் வேலை பார்க்க வச்சுட்டீங்களே” என்றான் அழு குரலில்.

“ஹாஹா கிரி! காதலில் இதெல்லாம் சகஜம் தான்” என்றவன் சற்று நிறுத்தி “எங்களுக்குள்ள இப்போ இந்த பிரிவு கூட நல்லது தான் கிரி. அவளும் நல்லபடியா படிப்பை முடிக்கட்டும். நானும் என் குடும்பத்தை தூக்கி விட கால அவகாசம் தேவைப்படுது. காதலில் இருந்தா என்னால எதையும் சரியா செய்ய முடியாது.அதனால கவலைப்படாமல் இருங்க கிரி. ஹரிணியை என்னைத் தவிர வேற யாரும் கட்ட முடியாது” என்றான்.

அவனது தெளிவான பதிலில் நிம்மதியடைந்தவன் “அது தான் ஊருக்கே தெரியுமே ஹர்ஷா. இந்த ரெண்டு டிசைனும் தான் ஒன்னுக்கு ஒன்னு பொருந்தும்-னு” என்றான் கிண்டலாக.

மெல்லிய குரலில் சிரித்தவன் “ரொம்ப தேங்க்ஸ் கிரி போன் பண்ணினதுக்கு. என்னோட சூழ்நிலையை சரியா புரிஞ்சுக்காம கோச்சுகிட்டு போயிட்டா ஹரிணி. என்னை யாராவது சரியா புரிஞ்சுக்க மாட்டாங்களான்னு தவிச்சுகிட்டு இருந்தேன். இப்போ உங்க கிட்ட பேசியதில் கொஞ்சம் நிம்மதியா இருக்கு” என்றான்.

“சியர் அப் மேன்! இன்னும் இது போன்ற சூழ்நிலைகள் நிறைய வரும் உன் வாழ்க்கையில். நீ உன் எண்ணத்தில் உறுதியாக இருந்தால் எல்லாவற்றையும் முறியடிச்சிடலாம்” என்று அவனை உற்சாகப்படுத்தினான்.

“தேங்க்ஸ் கிரி…சீக்கிரம் என்னோட கடமைகளை எல்லாம் முடிச்சிட்டு அவளை தூக்குறேன்” என்றான்.

“நடத்துங்க…நடத்துங்க…ஆல் தி பெஸ்ட்” என்று கூறி அலைப்பேசியை வைத்தான்.

 

 விடுமுறை முடிந்து கல்லூரி திறந்ததும் ஹர்ஷா ஹாஸ்டலுக்குத் திரும்பினாள். அவளிடத்தில் பழைய உற்சாக துள்ளளோ, விளையாட்டுத்தனமோ எதுவுமில்லை. தானுண்டு படிப்புண்டு என்று இருக்கத் தொடங்கினாள்.

ஹர்ஷாவும் கடையின் வியாபாரத்தை மேம்படுத்த வழிமுறைகளை மேற்கொண்டான். ஆனால் அவனது அன்னையோ கடையை விட்டு-விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதனால் கடையையும் பார்த்துக் கொண்டு வேலைகளுக்கு எழுதி போட தொடங்கினான். சில, பல இண்டர்வியுக்களும் அட்டென்ட் செய்தான்.

இப்படியே ஆறு ஏழு மாதங்கள் கழிந்தது. ஹரிணி அவனது எண்ணங்களை தூர வைத்துவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்த பெரிதும் முயற்சி செய்தாள். சில நேரம் அதில் வெற்றியும் பெற்றாள். பல நேரம் தோல்வியும் கண்டாள்.

ஹர்ஷாவிற்கோ அவளது எண்ணங்கள் மட்டுமே உற்சாக பானமாக இருந்தது. நாளெல்லாம் உழைத்து களைத்து படுப்பவனுக்கு ஹரிணியை பற்றிய எண்ணங்கள் தான் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் ஆசையை தூண்டியது.

சுமார் பத்து மாதங்கள் கடந்த நிலையில் அவன் அப்பளை செய்த மல்டிநேஷனல் கம்பனியொன்றில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. சென்னையில் இருந்த கம்பனியில் உடனே வந்து சேரும் படி ஆர்டர் வந்ததது. அதைக் கண்டதும் அன்னை, தந்தையின் முகங்களில் அத்தனை சந்தோஷம். இதற்காக தானே இத்தனை போராட்டம். எங்கே அவன் பொறுப்பில்லாமல் தனது வாழ்க்கையை அழித்துக் கொள்வானோ? என்று பயந்தவர்களுக்கு வேலை கிடைத்தது மகிழ்ச்சியை கொடுத்தது.

குடும்பத்தினரின் ஆசியுடன் சென்னைக்கு கிளம்பினான். அப்போது அவன் அருகில் வந்த அன்னை கைகளைப் பற்றிக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் பா…பிள்ளைகளை இப்படி பார்க்கத் தான் எல்லா பெத்தவங்களும் ஆசைப்படுவாங்க. உன் கிட்ட சத்தியம் வாங்கினேன்னு உனக்குள்ள கோபம் இருக்கும். காதல் நம்ம வளர்ச்சியை அழிக்க தான் செய்யும். இதை எப்பவும் உன் மனசில் வச்சுக்கோ. உன்னை பெத்த எங்களுக்கு தெரியும். உன் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சு தர. அதனால இப்போ இருக்கிற மாதிரி மனசை எங்கேயும் அலைபாய விடாம கவனமா இரு” என்றார்.

அன்னையின் பேச்சைக் கேட்டவன் மனதிற்குள் ‘நீங்க சொல்கிற அந்த காதல் தான் மா என்னை இன்னும் உயிர்ப்போட வச்சிருக்கு. என் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைன்னா அது ஹரிணியோட மட்டும் தான். அவளை கட்டக் கூடாதுன்னு சத்தியத்தை வாங்கிட்டு எப்படி எனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு தரப் போறீங்க?’ என்றெண்ணியவன் பெருமூச்சுடன் “சரிம்மா” என்றபடி கிளம்பினான்.

அண்ணனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்த சஞ்சய் “அண்ணி கிட்ட சொன்னீங்களா அண்ணா வேலை கிடைச்சதை?” என்று கேட்டான்.

“இல்லடா! அதெல்லாம் வேண்டாம்” என்றான் சோர்வாக.

சஞ்சையோ விடாப்பிடியாக “நீங்க தான் சொல்லக் கூடாது. நான் சொல்லலாம் இல்லையா?” என்றான்.

“இல்ல சஞ்சய்! விட்டுடு! நான் பார்த்துகிறேன். நீ கடையையும், அம்மா, அப்பா ரெண்டு பேரையும் பார்த்துக்க. அதோட படிப்பையும் விட்டுடாதே” என்றான்.

“சரிண்ணா” என்று கூறி ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தான்.

சென்னை சென்று சுமார் ஒரு மாதம் வரை சற்று தடுமாறியவன் பின்னர் தனது கடுமையான உழைப்பாலும், பண்பான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தான். ஒவ்வொரு நாளும் தன்னை மெருகேற்றிக் கொண்டான். அதுநாள் வரை ஏதோ ஒரு வகையில் சண்டையிட்டுக் கொண்டு திரிந்தவன், இப்போதெல்லாம் புன்னகை மன்னனாக மாறி இருந்தான்.

ஆறு மாதங்களில் அவனது திறமையை புரிந்து கொண்ட நிறுவனத்தினர் தேவையான சலுகைகளை அளித்து அவனுக்கான மதிப்பை அளித்தனர்.

ஹரிணியும் படிப்பில் கவனத்தை வைத்து கஷ்டப்பட்டு இறுதி வருட தேர்வுகளை எழுதி முடித்தாள். இங்கே அவளது குணத்திலும் மாறுதல் ஏற்பட்டிருந்தது. துள்ளலும், துடுக்குமாக சுற்றிக் கொண்டிருந்தவள் முணுக்கென்றால் கோபப்பட்டு சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

அவர்களின் பிரிவு இருவரின் குண இயல்புகளையும் மாற்றி இருந்தது.

ஒருவழியாக அவளின் தேர்வுகளை முடித்துக் கொண்டு ஊர் போய் சேர்ந்தாள். தேர்விற்கு முன்பே கேம்பஸ் இண்டர்வியு மூலம் சென்னையில் நல்ல நிறுவனத்தில்  வேலையும் கிடைத்திருந்தது.

இந்த இரண்டு வருடத்தில் கிரிக்கும் திருமணமாகி இருந்தது. ஹரிணியும் அன்னையும், அக்காவும் அவள் கிரியை திருமணம் செய்து கொள்வாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய் இருந்தனர்.

கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவளிடம் மறுநாளே பிரச்னையை ஆரம்பித்தார் ராஜம். கணவரிடம் சொல்லி உடனே ஹரிணிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடித்து விட வேண்டும் என்றார்.

“என்னம்மா இப்போ தானே காலேஜ் முடிச்சு வந்திருக்கா. அதுக்குள்ள மாப்பிள்ளை பார்க்க சொல்ற?” என்றார் ஹரிணியின் தந்தை.

“இவளை எல்லாம் இத்தனை நாள் விட்டு வச்சதே தப்புங்க. நிவி மாதிரி இவ அடக்க ஒடுக்கமா எல்லாம் இருக்க மாட்டா. இவளை எவன் கையிலாவது பிடிச்சு கொடுத்தா தான் நமக்கு நிம்மதி” என்றார் கடுப்பாக.

“என்ன இது ராஜம்! குழந்தையை போய் இப்படி பேசுற?” என்று கடிந்து கொண்டார்.

“குழந்தையாம் குழந்தை. மடியில போட்டு தாலாட்டுங்க. இங்கே பாருங்க நாம செலவு பண்றப்பவே இவ அடங்க மாட்டேன்றா. வேலைக்கு போய் நாலு காசை பார்த்திட்டா நம்ம பேச்சை கேட்கவே மாட்டா சொல்லிட்டேன்” என்றார்.

அதுவரை அன்னையும், தந்தையும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் “ம்மா! வேலைக்கு போன பிறகு இல்ல. இப்போவே சொல்றேன் கேட்டுகோங்க. இன்னும் மூணு நாலு வருஷத்துக்கு நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அப்புறம் இன்னொன்னு நீங்க சொல்றதுக்காக யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என் மனசுக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் பண்ணிக்குவேன்” என்றாள் அழுத்தமாக.

அதைக் கேட்டதும் ரத்த அழுத்தம் உச்சி மண்டைக்கு ஏற “பார்த்தீங்களா-பார்த்தீங்களா! நான் தான் சொன்னேனே. இவ யாருக்கும் அடங்க மாட்டா.சரியான பிடாரி!” என்றார் ஆத்திரத்துடன்.

மகள் பேசியதில் அதிர்ந்து போயிருந்த மணிவண்ணன் சற்று நிதானித்துக் கொண்டு “நிறுத்து ராஜம்” என்று மனைவியை அதட்டி விட்டு மகளின் புறம் திரும்பி “என்ன இது ஹரிணி! உன்கிட்ட இருந்து இப்படியொரு பேச்சை எதிர்பார்க்கல” என்றார் கோபமாக.

தந்தையின் கோபத்தைக் கண்டு அசராமல் “நான் என்னப்பா தப்பு பண்ணினேன். எப்பவும் அம்மா என்னை வீட்டை விட்டு விரட்ட தான் பார்க்கிறாங்க. எனக்கு எது நியாயம்னு படுதோ அதை உடைச்சு பேசுறது தப்பா? அதுக்காக என்னை பத்தொன்பது வயசிலேயே கட்டிக் கொடுத்து அனுப்ப பார்த்தாங்க. அக்கா இருக்கான்னா அது அவளோட குணம். எல்லோரும் ஒரே மாதிரி இருந்திட முடியாது. நான் வெளிப்படையா பேசுறது தப்புன்னா சாரி என்னால மாத்திக்க முடியாதுப்பா” என்றாள் உறுதியாக.

மகள் பேசுவதில் உள்ள நியாயம் புரிந்ததும் சற்று அமைதியானவர் “அதெல்லாம் சரிம்மா…ஆனா அம்மா கிட்ட மரியதையா பேசலாம் இல்லை. உனக்கு என்ன விருப்பம்னு அன்பா பேசினா அவளும் புரிஞ்சுப்பா” என்றார்.

“நீங்க வேறப்பா நான் வாயைத் திறந்தாலே அவங்களுக்கு ஆகாது. இதில அன்பா எங்கே பேசுறது?”

அவள் சொன்னதைக் கேட்டதும் மேலும் ‘தை-தை’ என்று குதித்தவரை அடக்கிவிட்டு மகளிடம் “உன் ஆசைப்படியே ரெண்டு மூணு வருஷத்துக்கு வேலைக்கு போக அனுப்புறோம்மா. அதுக்கு மேல எங்களால அனுமதிக்க முடியாது சரியா?” என்றார்.

கணவர் சொன்னதில் சம்மதப்படாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலைந்தார் ராஜம். இரண்டு நாட்களுக்குப் பிறகு வேறு வழி இல்லை என்றதும் மகளுடன் சாதரணமாக பேசத் தொடங்கினார். ஹரிணியும் புதிய வேலையில் சேருவதற்கான மும்மரத்தில் இருந்தாள். வேலைக்கு கிளம்பும் நாளும் வந்தது. தாயும், மகளும் என்னதான் முறைத்துக் கொண்டிருந்தாலும் கிளம்பும் நேரம் அவளுக்கு விபூதி பூசி நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினார்.

தனது தோழியின் மூலம் சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடுகளை முன்னரே செய்திருந்தாள். முதல்நாளே கிளம்பி தோழி ஏற்பாடு செய்திருந்த அபார்ட்மென்ட்டிற்கு சென்று இறங்கிக் கொண்டாள். தனதறையில் தங்குவதற்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு, மறுநாள் வேலைக்குச் செல்ல வேண்டியவற்றை எடுத்து வைத்துவிட்டு படுத்தாள்.

அங்கு வந்ததில் இருந்தே மனம் ஏனோ ஒருவித தவிப்புடன் இருந்தது. வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. வெகுநாட்களுக்குப் பிறகு மனம் ஹர்ஷவை நாடியது. என்ன பண்ணிட்டு இருப்பான்? வேலைக்குப் போயிருப்பானா? கடையை பெருசாக்கி சூப்பர் மார்கெட் ஆக்கி இருப்பானா?ம்ம்..கடைசியில பொட்டலம் மடிக்க தான் போயிருப்பானா? என்று எண்ணிக் கொண்டே உறங்கினாள்.

மறுநாள் காலை அவசரமாக எழுந்து தயாராகி ஆபிசில் சென்று நின்றாள். மேனேஜர் மீட்டிங்கில் இருப்பதாகவும் சற்று நேரம் காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டாள் ரிஷப்ஷனிஸ்ட். அதன் பேரில் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வேலை பார்க்கும் இரு பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டே அவளை கடந்து சென்றனர்.

“சார் இன்னைக்கு வந்திருக்கிற கெட்டப் செம இல்ல. சான்சே இல்ல! அவர் சிரிக்கிறப்ப கன்னத்துல விழுற குழியில முதல் நாளே விழுந்துட்டேன் யா” என்றாள் ஒருத்தி.

அதை கேட்டதுமே ஹர்ஷாவின் கன்னத்தில் விழும் குழி ஞாபகம் வர, தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *