Categories
Uncategorized

வெற்றிவேல்-2

Free Download WordPress Themes and plugins.

வெற்றிவேல்-2

அலமேலுக் கூறியதில் அதிர்ந்து விழித்த வெற்றிவேல் “என்னை பெத்த தாயே! இனிமே புதுசா எந்த கருமத்தையும் ஆரம்பிக்க மாட்டேன்… இந்த களை எடுக்குறதை வேடிக்கை பார்க்காம கூட சேர்ந்து நானும் களைப்பிடுங்குறேன். எனக்கு வேற ஏதாவது வேலை நீ வைச்சிருந்தாலும் அதையும் சொல்லு. செஞ்சு முடிக்கிறேன்”, என பம்மியவனாக களை எடுப்பவர்களுடன் அவனும் சென்று களை பிடுங்க ஆரம்பித்தான்.

“அது அந்த பயம் இருக்கணும்”, என தன்னைத்தானே மெச்சிக் கொண்ட அலமேலு துரைசாமி வருவதைப் பார்த்து விட்டார். “அவனே இப்பதான் உருப்பட ஆரம்பிச்சிருக்கான். அதுக்குள்ள இந்த மனுஷனை யாரு வர சொன்னது? வீட்ல உட்கார்ந்து இன்னும் விலாவரியா ஊா் கதையை பேச வேண்டியதுதானே!”, என வாய்விட்டுப் புலம்பியவர் அவர் அருகில் வந்தவுடன் “ஏன் மாமா! நான் சித்த நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்ல உங்களை அதுக்குள்ள யாரு தோட்டத்துக்கு வரச்சொன்னது?”, என கோபமாகக் கேட்டார்.

“இவ ஒருத்தி எப்பப் பார்த்தாலும் அந்த ரோட்டுக் கடையில் புரோட்டா கொத்துற சத்தம் மாதிரியே சத்தம் கொடுத்துட்டுருப்பா”, என்ற துரைசாமி “பையனுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்தவ போனையும் சேர்த்து எடுத்துட்டு வந்திருக்கணும்ல… எத்தனை தடவை கூப்பிடுறது? உன்கிட்ட முக்கியமான விஷயத்தை பேசி இப்பவே முடிவு பண்ணனும் அப்படின்னு சொல்லிதான் நானே கிளம்பி வந்துட்டேன்”, என அலமேலுவின் அருகில் அமர்ந்துகொண்டார்.

தந்தை வந்தவுடன் அங்கிருந்து நகர்வதற்கு எத்தனித்து தனது காலை ஒரு அடி முன்னால் வைத்த வெற்றிவேல் தன் அம்மா கூறிய வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலித்ததில் எடுத்து வைத்த காலை அப்படியே பின்வாங்கி வேலை செய்வது போல் குனிந்து கொண்டான்.

தான் வந்தவுடன் மகன் தன்னை நோக்கி வர எத்தனித்ததையும் பின்னர் தயங்கி பின்னோக்கிச் சென்றதையும் கண்ட துரைசாமி தன் மனைவின் புறம் திரும்பி “அலமு! குழந்தையை எதுவும் சொன்னியா? இல்லைன்னா பிள்ளை இந்நேரம் நான் வந்து உட்கார்ந்த வேகத்துக்கு என் மடியில ஓடி வந்து படுத்துருக்குமே! எதுவும் திட்டி வச்சிருக்கியா என்ன?”, என கோபமாக கேட்டார்.

கண்ணில் கனலுடன் “நாலு கழுத வயசாச்சு. இன்னும் அவனை குழந்தை பிள்ளைன்னு சொல்லிகிட்டு திரியாதீங்க… கல்யாணம் பண்ணி வச்சா அடுத்த 10 மாசத்துல பேரப்பிள்ளை வந்துரும். அவனை கொஞ்சுறதை விட்டுட்டு உருப்படியான வேலையை பாருங்க.

நான் இப்பதான் அது இதுன்னு சொல்லி அவனை மிரட்டி வச்சிருக்கேன்”, என அலமேலு பொரிந்ததும் மற்றதை எல்லாம் விட்டுவிட்டு “என்னது பிள்ளையை மிரட்டுனியா? அவன் குழந்தைடி.. நீ மிரட்டுனுதுல பயந்துருப்பானே! இப்படி எல்லாம் பண்ணாதே! எதுவா இருந்தாலும் அன்பா சொல்லு கேட்டுப்பான்”, என துரைசாமி மீண்டும் மகனுக்கு வக்காலத்து வாங்கியதுடன்,

“அப்படி என்னதான் சொல்லி மிரட்டி வைச்விருக்க”, எனக் கேட்டதும் “ஒன்னும் சொல்லலை. அந்த ராகவன் பையன் இருக்கான் இல்லையா? அவன் வேலை பார்க்குற கம்பெனி நஷ்டத்தில் ஓடுதாம்.அதனால இவனை மினரல் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க சொல்லி ஐடியா குடுத்திருக்கான். அதுக்கு இந்த கிறுக்கு பயலும் சாின்னு சொல்லி கணக்கு போட்டுட்டு இருந்தான். அதெல்லாம் வேண்டாம்ன்கு சாதாரணமா சொன்னா கேட்டாதானே!

அதனாலதான் உனக்கு ஒரு பொண்ணு தகையுற மாதிரி இருக்கு. நீ அந்தக் கம்பெனி இந்த கம்பெனின்கு ஆரம்பிச்சு கோக்குமாக்கு வேலை பண்ணுனா காலத்துக்கு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் அப்படின்னு சொன்னேன். அதை கேட்டுதான் அய்யா இப்படி போய் பம்மிகிட்டு வேலை செஞ்சுட்டு இருக்கார். அதை நீங்க கெடுத்துக் குட்டிச்சுவராக்காம நீங்க வந்த விஷயத்தை முதலில் சொல்லித் தொலைங்க”, என அலமேலு அதட்டலுடன் துரைசாமியை அடக்கினார்.

மனைவி மகனை அடக்கிய விதம் வருத்தம் அளித்தாலும் புது கம்பெனியா என்ற திகில் மனதில் பரவியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் துரைசாமி தன் வந்த வேலையைக் கூற ஆரம்பித்தார்.

“தரகர் போன் பண்ணியிருந்தார். ராமலிங்காபுரத்துல ஒரு பொண்ணு ஜாதகம் நம்ம பயலுக்கு பொருந்திருக்காம்.அவங்க வீட்ல இருந்து எப்ப வர்றீங்கன்னு கேட்டு தரகருக்கு போன் பண்ணிருக்காங்க. நான் உன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன்கு சொன்னேன். பொண்ணு பிகாம் படிச்சிருக்கு. கூட பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு அக்கா. இது தான் கடைசி பெண்”, என வீட்டு நிலவரத்தை துரைசாமி கூறியதும் சற்று யோசித்த அலமேலு “வர்ற வெள்ளிக்கிழமை வர்றோம்ன்னு சொல்லிடுங்க. நானே வெற்றிகிட்ட விஷயத்தை சொல்லுறேன். நீங்க சொல்றேன்னு சொல்லிட்டு சொதப்பி வைங்க… அதனால நீங்க அப்படியே நடையைக் கட்டுங்க. நான் அப்புறமா வரேன்”, என விஷயத்தை உள்வாங்கிய அலமேலு கணவரை அவ்விடத்தில் இருந்து துரத்தி விட்டுவிட்டு மகனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்

ஆரம்பத்தில் அன்னை மிரட்டியதில் வேலை செய்யவென உள்ளே சென்றவன் நேரம் செல்ல செல்ல இயற்கையிலேயே அமைந்த பொறுப்பின் காரணமாக வேலையை மிகவும் நன்றாக செய்து கொண்டிருந்தான். அதனை பார்த்த அலமேலுவிற்கு தன்னை அறியாமல் புன்னகை விரிந்தது.

சிறிது நேரத்தில் வேலை முடிந்து அனைவரும் மேலே ஏறி வரவும் அவர்கள் சிந்திய உழைப்பின் ஊதியத்தை வெற்றிவேல் அளித்ததுடன் தனக்கான ஊதியத்தையும் எடுத்துக்கொண்டான்.

வழக்கமாக யார் யாருக்கு எவ்வளவு தந்தான் என்று ஒரு நோட்டில் எழுதி வைக்கும் பொழுது தன்னுடைய பெயரையும் சேர்த்து எழுதினான். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த அலமேலு “ஏன்டா மவனே! வருமானம் நம்ம வீட்டுக்குதானே வரப்போகுது. அதுல உனக்கு தனியா சம்பளம் வேற கேக்குதா?”, என கேட்டு மகன் கூறப்போகும் பதிலுக்காக ஆவலுடன் அவனது வாயைப் பார்த்தார்.

அலமேலுவின் ஆவலை சற்றும் பொய்யாக்காமல் “என்னம்மா பேசுற? அந்த காலத்திலேயே சொல்லி வச்சிருக்காங்க. ஒரே தாய் வயத்துல பிறந்தாலும் நாம சாப்பிடுற வாயும் வயிறும் வேறதான். அப்படி இருக்குறப்ப அப்பா சம்பாத்தியமும்,உன் சம்பாத்தியமும் எனக்கு உடமைபட்டது ஆகாது. உங்க காலத்துக்கு பின்னாடி இன்னாருடைய மகன் அவங்க சொத்தை அனுபவிக்கிறான் அப்படின்னு சொல்லுவாங்க. இதை விடுத்து நான் சேர்த்து வைத்த சொத்துன்னு சொல்ல மாட்டாங்க.

அது மட்டுமில்லை. நீ திடீர்னு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா வரப்போற பொண்டாட்டிக்கு ஏதோ ஏழெட்டு சவரன்ல காலுக்கு ஒரு கொலுசு, இடுப்புக்கு ஒட்டியாணம் அப்படின்னு வாங்கி தர நினைச்சா அப்ப உன்கிட்ட காசு கேட்க முடியுமா? அதெல்லாம் வேலைக்காகாது. என் கையில காசு இருந்தாதான் கெத்து”, என கூறிவிட்டு தன்னுடைய சட்டையில் இருந்த காலரை தூக்கி விட்ட அவனை முதுகில் செல்லமாக நாலு அடி போட்ட அலமேலு மகன் விளையாட்டாகக் கூறினாலும் தங்களின் பணத்தை அவன் வெட்டியாக செலவழிக்க மாட்டான் என்பதை அறிந்திருந்ததில் மனம் பூரித்துப் போனார்.

அலமேலுவின் மனம் எப்படி பூரியாக உப்பலாம் என வெற்றிவேல் எண்ணினானோ என்னவோ? உடனடியாக அம்மோய், அம்மோய் என அவரது சேலை நுனியை பிடித்து திருக ஆரம்பித்தான்.

“இப்ப என்ன கர்மத்துக்கு இந்த கூத்து பண்ணிக்கிட்டு இருக்க? என்ன விஷயம் சொல்லு”, என அலமேலு வள்ளென்று விழுந்தவுடன் “அப்பா வந்தாரே! என்ன பேசினாரு?”, என வினவினான்.

அவன் வினவியதும் மகனை மேலும் கீழுமாக பார்த்தவர் “ராமலிங்காபுரத்துல ஒரு பொண்ணு தகைஞ்சுருக்கு. வெள்ளிக்கிழமை பொண்ணு பாா்க்க போறோம். இப்ப சொன்னியே கெத்து அந்த கெத்தை அன்னைக்கு கொஞ்சம் நீ காமிச்சா சந்தோசப்படுவேன். அதை விட்டுட்டு அங்கேயும் வந்து இதே மாதிரி கோணங்கித்தனம் பண்ணிட்டு இருந்தா வீட்டுக்கு வந்தவுடனே அகப்பையை எடுத்து சாத்தி விட்டுருவேன்”, என மகனிடம் உரைத்தவர் அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் வெற்றிவேல் வேறு வேறு விதமாக பெண்ணின் பெயரை கேட்டும் அலமேலுக் கூறவில்லை. அவருக்கே அது தெரியாத பொழுது தனக்கு எப்படிக் கூறுவார் என அறியாத வெற்றி ” இந்த அம்மா ஓவரா படுத்துது… முதல்ல என் பொண்டாட்டி வீட்டுக்கு வந்த உடனே உன் மாமியார் சரியில்லை, மாமியார்கிட்ட சண்டை போடுன்னு சொல்லி தூண்டிவிடனும். அப்பதான் இது அடங்கும்”, என தனது மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டான்.

தன்னுள் சூளுரைத்துக் கொண்ட வெற்றி தன்னுடைய மனையாள் தன் அம்மாவுடன் சேர்ந்து கொண்டு தன்னையே தனிக்குடித்தனம் வைக்கும் திறமை மிக்கவளாக இருக்கப் போகிறாள் என்பதை அந்த நொடியில் அறிந்திருக்கவில்லை.

அறியும் நேரத்தில் என்ன செய்திடுவானோ! பாவம். இவ்வாறு பல சிந்தனையுடன் அம்மாவும்,மகனும் வீட்டை அடைந்த பொழுது துரைசாமி தரகரிடம் கூறி வெள்ளிக்கிழமையன்று பெண் பார்க்க வருகிறோம் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். அலமேலு வந்தவுடன் யாரையெல்லாம் உடன் அழைத்து செல்ல வேண்டும் எனக் கேட்டவரிடம்

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மாமா! நாம மூணு பேரும் போய் பார்த்துட்டு வருவோம். அது என்ன பொருட்காட்சியில இருக்கிற பொம்மையா? பொம்பளைப் பிள்ளை. பார்த்து எல்லாம் முடிவாச்சுன்னா உறுதி பண்றன்னைக்கு சொந்தபந்தத்துகிட்ட சொல்லிக்கலாம்”, என ஒரேயடியாக முடித்துவிட்டு மகனிடம் திரும்பியவர்

“ஏன்டா! இந்த மூஞ்சியில வெள்ளை அடிச்சு எதையாவது செஞ்சு கொஞ்சம் பார்க்குற மாதிரி செஞ்சிட்டு வா. தலையை பாரு எப்பப் பாத்தாலும் முள்ளம்பன்றி மாதிரி முடியெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கு. அதெல்லாம் சரி பண்ணிட்டு இந்த பியூட்டி பார்லர்ல போய் ஏதாவது செஞ்சிட்டு வா. நான் வேணும்னா காசு தரேன்”, என நக்கலாக முடித்தார்.

அவரது பேச்சைக் கேட்ட வெற்றிவேல் “என்ன அலமு அழிச்சாட்டியம் ஓவர் ஜாஸ்தியா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகப்போகுது. அதனால நீ என்னோட இமேஜை டேமேஜ் பண்ணாம இருக்கணும். பியூட்டி பார்லர் அதெல்லாம் எதுக்கு? அழகு இல்லாதவங்கதான் அந்த வேலையெல்லாம் செய்வாங்க. பேரழகனா பிறந்த எனக்கு அதெல்லாம் தேவையே கிடையாது.

பொண்ணு என்னை விட கலர் கம்மியா இருந்தா என்ன செய்றது? அதுக்காக ஒரு வாரம் குளிக்காம இருந்து கொஞ்சம் என்னோட கலரை கம்மி பண்ணிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். இதைப் பத்தி உன்னோட ஐடியா என்னம்மா?”, எனக் கேட்டு நங்கென்று கொட்டு ஒன்றை தன்னுடைய உச்சந்தலையில் வாங்கிக்கொண்டான்.

இத்தகைய அலப்பறையுடன் வெள்ளிக்கிழமை அன்று மூவரும் ராமலிங்காபுரத்திற்கு சென்றால் பெண் வீட்டார் ஒரு பெரும் கும்பலையேக் கூட்டி வைத்திருந்தனர்.

அந்தக் கும்பலை பார்த்த வெற்றிவேல் தன்னுடைய அப்பாவிடம் ” அப்பா ஏதோ ஒரு படத்துல சரத்குமாரும் வடிவேலும் பொண்ணு பார்க்க போவாங்களே! இதை பாா்க்குறப்ப அது மாதிரியே இருக்குதானே!”, எனக் கேட்கவும் அவர் பாவமாக அவனை ஒருப் பார்வைப் பார்த்தார்.

இதுக்கு மேல பேசினா இந்த மனுஷன் தாங்க மாட்டார் என எண்ணி அவன் தன்னுடைய வாயை மூடிக் கொண்டான். அமைதி காத்தால் மட்டுமே அகப்பையிலிருந்து தப்பிக்க முடியும் என அவன் அறியாததா?

இவர்கள் சென்று அமர்ந்தவுடன் பெண்ணின் தாயார் தன்னுடைய சொந்தங்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திவிட்டு “எங்க பொண்ணு இருக்காளே அவளுக்கு வெள்ளை மனசு. சூதுவாது தெரியாம வளர்ந்துட்டா. எது நல்லது எது கெட்டதுன்னு நாம சொல்லி தந்தாதான் தெரியும்”, என தன் பெண்ணின் பெருமையை பேச ஆரம்பித்துவிட்டார்.

அலமுவிற்கு அவரது அந்த அதிகப்படியான பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. இருப்பினும் பெண்ணை பார்க்கலாமே என அமைதிக் காத்தார். இவர்கள் பார்க்க வேண்டிய பெண் தன்னுடைய கையில் காப்பியுடன் வந்து முதலில் அலமேலுவிற்கும் துரைசாமிக்கும் கொடுத்துவிட்டு வெற்றிவேலின் கையில் தராமல் அவனது முன்னாலிருந்த டேபிளில் அதை வைத்து விட்டு எடுத்துக்கோங்க என கொஞ்சலாகக் கூறியபின் தனது தாயின் அருகே சென்று நின்று கொண்டாள்.

ஏனோ வெற்றிவேலுக்கும் அவளது செய்கைகளை பார்த்தவுடன் மனதில் சற்று ஏமாற்றமே பரவியது. அவன் அந்த காபி டம்ளரை தன் கையினால் கூட தொடவில்லை. ஏனெனில் அதற்கு முன்னரே பெண்ணின் அம்மா “எங்க பொண்ணு உங்ககிட்ட கொஞ்சம் கேள்வி எல்லாம் கேட்கணும்னு சொல்றா”, என்றவுடன் வெற்றிவேல் அப்பெண்ணைப் பார்த்து “கேளும்! கேட்டுத் தொலையும்”, எனக் கூறினான்.

அதனை எல்லாம் கண்டுகொள்ளாத அப்பெண் அதற்கடுத்துக் கேட்ட கேள்விகளும், அதற்கான பதிலை தெரிந்து கொண்ட பின்னர் அவள் கூறிய வார்த்தைகளிலும் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் வெற்றிவேலே வெடித்துவிட்டான்.

அவள் என்னதான் கேட்டாலோ? பெண்பார்க்க பல வண்ணக் கனவுகளுடன் சென்றவன் கழனி தண்ணி குடித்து கொம்பினால் முட்டித் தள்ளும் காளையாக மாறியதன் காரணம் என்னவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *