Categories
Uncategorized

வெற்றிவேல்-4

Free Download WordPress Themes and plugins.

வெற்றிவேல்-4

துரைசாமியை முதல் நாள் அழைத்து தரகர் பேசிக் கொண்டிருந்த பொழுதே அவரிடமிருந்து போனை பிடுங்கியவர் “மச்சான்! நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? அது எனக்கு தெரியாது. நாளைக்கு மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்து உறுதி செஞ்சுட்டு போயிடுங்க. இல்லைனா எங்க பொண்ணு வீட்டுல எனக்கும், என் பொண்டாட்டிக்கும் எதை கலந்து வைப்பான்னு தெரியாது.

காலகாலத்துல வந்து பேசி முடிங்க. மீதி விவரம் எல்லாம் நீங்க பொண்ணுகிட்ட கேட்டுக்கோங்க”, என ஒருவர் படபடவென பொரிந்து விட்டு இறுதியாக “நான் சொல்ல மறந்துட்டேனே! என் பேரு ரங்கசாமி! என் நம்பர் சொல்றேன் எழுதிக்கோங்க”, என்று உரைத்ததுடன் தன்னுடைய அலைபேசி எண் மற்றும் முகவரியையும் சேர்த்து தந்தார்.

அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த அலமேலுவிற்கு சிரிப்பு வந்தாலும் இந்த அளவிற்கு ஒரு பெண் தன் மகனுக்காக துணிகிறாள் என்றால் அவளே சிறந்த துணையாகவும் இருப்பாள் என முடிவுசெய்து துரைசாமியிடம் “இங்கப் பாருங்க மாமா! நாளைக்கு நாம போறோம், பேசி முடிக்கிறோம்”, என உறுதியாகக் கூறிவிட்டார்.

அலமேலுவின் முடிவினை மாற்றினால் தன் பூலோக வாழ்விற்கு முடிவு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் துரைசாமி மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெற்றியை ஒரு பாவப்பாா்வை பார்த்துவிட்டு மறுநாள் மனைவி, மகனுடன் கிளம்பியவர் இப்பொழுது பெண் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.

இவர்கள் வருவதற்காகவே ஆவலுடன் வாசலிலேயே காத்திருந்த ரங்கசாமி “மச்சான்! வந்து என் உசுர காப்பாத்திட்டீங்க… உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்”, என துரைசாமியை நீண்டநாள் தெரிந்தவர் போல் வேகமாக கட்டிப்பிடித்துக் கொண்டார்.

அவரின் பேச்சினை கேட்டு வெற்றி அலமேலுவிடம் “அம்மா! இந்த பிள்ளை வீட்டுக்கு வந்துருச்சுன்னா உன்னையும், அப்பாவையும் வீட்டைவிட்டு துரத்திடும்”,என முணுமுணுத்ததும் அவனைப் பார்த்துவிட்டு “என்னையும், உங்க அப்பாவையும் தொரத்தி விடுதோ இல்லையோ உன்னை போட்டு மொத்தாம இருந்தா சரிதான்னு சொல்லி நான் குலதெய்வத்தை வேண்டிட்டு இருக்கேன்”, என சிரிப்புடனே பதிலளித்தார்.

வாசலிலேயே இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரங்கசாமியின் மனைவி சகுந்தலா “எல்லாத்தையும் வாசலுல வச்சு இந்த மனுஷனுக்கு பேசிடனும்.நீங்க முதல்ல வாங்க அண்ணே!வாங்க மதினி! நீங்களும் வாங்க மாப்பிள்ளை”, என வெற்றியையும் சேர்த்து மரியாதையாக உள்ளே அழைத்துச் சென்றார்.

இங்கேயும் கும்பல் இருக்குமோ என எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் வந்த வெற்றிக்கு அங்கிருந்த நான்கைந்து பேரை பார்த்தவுடன் “அப்பாடி பரவாயில்லை கூட்டத்தை கம்மியாதான் கூட்டிருக்காங்க”, என்ற எண்ணமே மனதில் உதித்தது.

அனைவரும் உள்ளே வந்து அமர்ந்ததும் தன் சொந்த பந்தங்களை அறிமுகப்படுத்திய ரங்கசாமி மனைவியிடம் “குமுதாவை கூட்டிட்டு வா!”, என்றார்.

சகுந்தலா உள்ளே சென்றவுடன் துரைசாமியிடம் திரும்பியவர் “மச்சான்! எனக்கு ரெண்டுமே பொண்ணுங்கதான். மூத்தவளை கட்டிக்கொடுத்து மெட்ராஸ்ல இருக்கா. அவ புருஷன் லொட்டு லொட்டுன்னு அந்தப் பொட்டியை தட்டிட்டு இவளையும் அதே வேலைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாரு.

இப்ப நம்ம மாப்பிள்ளையை கேட்டது சின்னவளுக்குதான். காலேஜுக்கு போய் படிச்சதோட சரி! அதை வச்சி வேலைக்கு போகணும்னு கனவுலயும் நினைக்காதவ மாப்பிள்ளையை எங்கப் பார்த்தா? எப்படிப் பார்த்தா அப்படிங்கிற கதையை அவளே உங்களுக்கு சொல்லிடுவா. ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த தரகர் வந்தப்ப மாப்பிள்ளை போட்டோவை பார்த்த அந்த நிமிசத்துல இருந்து வீட்ல ரணகளம் பண்ணிட்டு இருக்கா.

இவரை எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா உங்க ரெண்டு பேரையும் உசுரோட விட மாட்டேன்னு மிரட்ட வேற செய்றா… உங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ! தயவுசெஞ்சு மாப்பிள்ளைக்கு இவளையே கல்யாணம் பண்ணி வச்சிடுங்க”, என அவர் பேசியதில் குடும்பமே லூசா இருக்குமோ என வெற்றி எண்ணிக் கொண்டிருக்க துரைசாமியோ அகமகிழ்ந்துப் போனார்.

ஏனென்றால் அவரது குழந்தை பிள்ளைக்கு இப்படி ஒரு தீவிர ரசிகை என்ற எண்ணம்தான் அவரது மனதில் உதித்தது.அதனால் கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரை தன் தோளில் இருந்த துண்டினால் துடைத்து விட்டுக் கொண்டு ” மாப்ள! என் மருமகளை இப்பவே வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுறேன்”, என உறுதியளித்தார்.

வெற்றிதான் இடைமறித்து “முதல்ல குமுதா வந்து என்னை கேள்வி கேட்டு கும்மி எடுக்கட்டும் பிறகு முடிவு பண்ணலாம்”, என உரைத்ததுடன் ரங்கசாமிபுறம் திரும்பி “மாமா! முதல்ல சாப்பிடுறதுகு ஏதாவது கண்ணுல காட்ட சொல்லுங்க. ஆரம்பத்திலேயே பஞ்சாயத்து தொடங்கிடிடா காப்பி தண்ணி பஜ்ஜி, சொஜஜி எதுவும் சாப்பிட முடியாம போயிடும். அதனால சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் நான் பொண்ணை பார்க்கிறேன்” எனக் கூறினான்.

அவன் கூறியதில் ஏதோ பெரிய நகைச்சுவை கேட்டது போன்று அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டு தன் மனைவியை அழைக்க வாய் எடுத்த ரங்கசாமி தின்பண்டங்கள் உடன் தன் மகளை வருவதை பாா்த்து பீதியாகிவிட்டாா்.

என்ன செய்வாளோ என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கையில் நேரடியாக வெற்றிவேலின் அருகில் வந்தவள் “நீங்க கேட்ட பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் இதுல இருக்கு. சாப்பிட்டு முடிச்சிட்டு கேள்வியைக் கேட்க ஆரம்பிங்க”, என கெத்தாக உரைத்தாள்.

குமுதாவை பார்த்தவுடனேயே அலமேலு, துரைசாமி ஏன் வெற்றிக்குமே பிடித்துவிட்டது. கிராமப்புறங்களில் இருக்கும் அந்த எளிய அலங்காரத்துடன் செயற்கை பூச்சுகள் ஏதுமின்றி சற்று பூசிய உடல்வாகுடன் இருந்தவளின் புறத்தை விட அவள் பேசிய பேச்சில் சூதுவாது எதுவுமின்றி வெளிப்படையாக பேசுபவள் என்று தெரிந்ததிலேயே அவர்களுக்கு பிடித்துப்போனது.

குமுதா வைத்த தட்டை பார்த்த வெற்றி “அதுவும் சரிதான்! எப்படி சமைக்கிறீங்கன்னு பார்த்துட்டா மாப்பிள்ளை விருந்துக்கு வரலாமா வேண்டாமான்னு நானும் முடிவு பண்ணலாம்”, என கூறிக்கொண்டே தனக்கு முன்னால் இருந்த பலகாரங்களை வாய்க்குள் திணிக்க ஆரம்பித்தான்.

அவனது செய்கையில் தலையில் அடித்துக்கொண்ட அலமேலு “நீ இப்படி வந்து உட்காரு குமுதா!”, என தன் மருமகளாகப்போகிறவளை தனது அருகில் அமர வைத்துக் கொண்டவர் “நீ எப்பமா இந்தப் பயலை பார்த்த? எதனால உனக்கு இவனை பிடிச்சி போச்சு?”, என்றதும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே “அதுவா அத்தை! இப்ப மார்கழி போச்சு இல்லையா? அப்ப உங்க மகன் பஜனை கோஷ்டியோட வந்து ஒரு பாட்டுப் பாடுனாரு. அதுல விழுந்ததுல என்னால எந்திரிக்கவே முடியலை”, என நமட்டுச் சிரிப்புடன் கூறியதில் வாயில் வைத்திருந்த பஜ்ஜியை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் வெற்றி திருதிருவென முழித்தான்.

அவள் கூறியதிலேயே தான் பாடிய பாடலை கேட்டுவிட்டுதான் இந்த ராட்சசி தன்னைத் தேடினாலா என வெற்றி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே “அது என்ன பாட்டுமா?”,என அலமேலு ஆவலுடன் வினவினார்.

ஏனெனில் வெற்றி மார்கழி பஜனைக்குப் போகிறேன் என்று கூறியதும் இவனுக்கு என்ன தெரியும் என எண்ணி ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தவரை கண்டுகொள்ளாத வெற்றி பஜனை கோஷ்டியுடன் சுற்றியிருக்கும் கிராமங்களில் அந்த மாதம் முழுவதும் பஜனை செய்திருந்தான்.

ஆனால் பஜனையில் திருப்பாவை பாசுரம் பாடிடாமல் தன்னுடைய சொந்த பாசுரத்தை பாடியிருந்ததால் அதனை அறிந்திடாத அலமேலு தெரியும் நிலையில் என்ன செய்வாரோ என பதறிய வெற்றி “குமுதா! நீ என்னை கும்முறதெல்லாம் தனியா இருக்குறப்போ மட்டும் செஞ்சுக்கோ! கூட்டத்துல வச்சு கும்முற வேலையெல்லாம் வேண்டாம்”, என அந்த நொடியிலேயே குமுதாவிடம் சரண்டர் ஆனான்.

இவன் உன் காலுல விழுறத பார்த்தா எக்குத்தப்பா எதையோ இழுத்து வச்சிருக்கான் போல இருக்கு. நீ கல்யாணம் முடிஞ்சு வந்த மறுநாளே அத்தைகிட்ட என்ன விஷயம்னு சொல்லு மருமகளே! ரெண்டு பேரும் சேர்ந்து மொத்திடுவோம்”, என அப்பொழுதே வெற்றியை அடிப்பதை பற்றி அலமேலுவும், குமுதாவும் திட்டமிட ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களின் பேச்சை கேட்டு தலையில் அடித்துக்கொண்ட சகுந்தலா “நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி உறுதி பண்ணிக்கலாம். இன்னைக்கு நாள் வேற சரி இல்லாம இருக்கு”என இடை புகுந்தார். “நாளும்,கிழமையும் நம்ம மனசுலதான் இருக்கு சகுந்தலா!”, என்ற பதில் குமுதாவின் வாயில் இருந்து வந்ததை கேட்ட வெற்றி “நமக்கு மரியாதை இதை விட கேவலமா இருக்கும் போல இருக்கே”, என எண்ணமிட்டுக் கொண்டே “குமுதா சொல்றது சரிதான் அத்தை”, என அப்பொழுதே அவளுக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்து விட்டான்.

அன்றே பாக்கு, வெத்தலை மாற்றி நிச்சயத்தையும், திருமணத்தையும் அடுத்தடுத்த நாட்களில் நடத்துவதாக முடிவு செய்துவிட்டனர். கிளம்பும் நேரத்தில் குமுதாவின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்ட வெற்றி ” நீ மிஸ்டு கால் தருவியா இல்லை கால் பண்ணி பேசுவியா?”, என்றக் கேள்வியை அவளிடம் வீசினான்.

“அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற ஊருக்கு போனை வேற போட்டு பேசிகிட்டு இருக்கேன்… எங்க அப்பாவோட டிவிஎஸ் ஃபிப்டி எடுத்துக்கிட்டு நேரா உங்களை பாா்க்குறதுக்கு வந்துருவேன். அதனால டெய்லி காலைல பெருமாள் கோவிலுக்கு நீங்களே வந்துடுங்க”, என அவள் கொடுத்த பதிலில் துரைசாமி தன் மகனின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கப் போவதை உணர்ந்தார்.

குமுதாவின் அதிரடி பேச்சுகளுடனும், வெற்றியின் கலகலப்புடனும் அவர்களின் திருமண நாள் மிகவும் விரைந்து அவர்களை வந்து சேர்ந்தது. திருமணம் முடிந்த பின்னர் வெற்றியின் வீட்டில் காலடி வைத்த குமுதாவின் அகமகிழ்ச்சி முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது.

அன்றைய முதலிரவில் வெற்றி குமுதா தங்களின் அறையினுள் வந்ததும் அவளின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து “குமுதா என்ன ஆனாலும் சரி அலமேலு கிட்ட நான் திருப்பாவை பாடாம

“மேகத்தை பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூவை தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்”

இந்த ஜீன்ஸ் பட பாட்டை பாடுனேன்னு சொல்லிடாதே. நீ சொல்ல மாட்டேன்னு என் தலையில் அடிச்சு சத்தியம் பண்ற வரைக்கும் நான் எழுந்திருக்கவே மாட்டேன்”, என அவளுடைய பாதங்களை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“அச்சோ! மாமா! எந்திரிச்சு தொலைங்க. மானத்தை வாங்குறீங்க”, என அவள் கூறிய பின்னர்தான் எழுந்தான். இருந்தாலும் எழும்பொழுது ஒரு சந்தேகத்துடனேயே “சொல்ல மாட்டதானே!”, எனக் கேட்டதற்கு அவனைப் பார்த்து தலையை சொரிந்தவள் “வந்து அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்தீங்க இல்லையா? அன்னிக்கு சாயங்காலமே அத்தைக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்”, என வாயில் அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினாள். ராட்சசி என்றவன்”நீ என் காலுல பதிலுக்கு விழுந்து நான் உன் காலுல விழுந்ததை திரும்பக் கொடு”, என அவளிடம் வம்புக்கு நின்றான்.

“விடுங்க! விடுங்க! காலம்பூரா விழப்போறீங்க. இன்னைக்கு ஒருநாள் விழுந்ததுல ஒன்னுமாகாது. காலையிலயும், சாயங்காலமும் மறக்காம தினமும் விழுந்துடுங்க”, என அவனிடம் வாயாடியவளை தன் பக்கமிழுத்த வெற்றி ஒரே தாவலில் அவளது வாயையும், ஐம்புலன்களையும் அடக்கியாள ஆரம்பித்துவிட்டான்.

மறுநாள் விடிந்து வெளியே வந்த வெற்றியை ஹாலில் இருந்த டிவி அவன் பஜனையில் பாடிய பாடலை பாடி வரவேற்றது. அதிலேே அவனுக்கு புரிந்து போனது அலமேலு தன்னை வைத்து செய்யப்போகிறார் என்று. இருப்பினும் தன்னுடைய கெத்தை சிறிதும் விடாமல்

“என்ன அலமேலு! காலங்காத்தால ஒரே டூயட்டா போகுது”,என நக்கலுடன் வினவினான். அந்த டூயட் நீ பாடுன கொடுமையை தாங்க முடியாமல் என் மருமக இந்த வீட்டுக்கு வந்ததனாலதான் ராசா பாடுது”, என அவரும் பதிலுக்கு கொடுத்து அன்றைய நாளினை அனைவரும் கலகலப்புடன் நகர்த்தினர்.

அனைத்தும் சுலபமாக நடந்தால் வாழ்வில் சந்தோசம் மட்டும்தானே நிலைத்திருக்கும். துக்கத்தையும் சிறிது அனுபவிக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் எழுதப்படாத விதி! அந்த விதிக்கு ஏற்றவாறு குமுதாவிற்கும் வெற்றிக்கும் இடையில் குழி தோண்டிட நினைத்து இரு குள்ள நரிகள் அவனது வீட்டில் வந்து குதித்தனர்.

குள்ளநரிகள் குழப்பத்தை ஏற்படுத்துவார்களா? இல்லையெனில் வெற்றியும், குமுதாவும் குள்ள நரிகளை தோண்டி புதைத்திடுவார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *