Categories
Uncategorized

வெற்றிவேல் – 5

Free Download WordPress Themes and plugins.

வெற்றிவேல் – 5

வெற்றிவேல், குமுதாவின் வாழ்க்கை அலமேலுவின் ஆளை அசரடிக்கும் கவுன்ட்டா்களுடனும், துரைசாமியின் கொஞ்சல்களுடனும் குதூகலமாக இருந்தது.

இவர்களின் குதூகலத்தை கண்டு ரங்கசாமியும், சகுந்தலாவும் மிக்க மகிழ்ச்சியுடன் அவ்வப்பொழுது இதனை எல்லாம் தங்களின் மூத்த மகள் ரங்கநாயகியுடன் பகிர்ந்து கொண்டனர். சென்னையில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் பணத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாலும் மனதில் மகிழ்ச்சி என்பதைச் சற்றுக் குறைவாகவே வைத்திருந்த ரங்கநாயகிக்கு குமுதாவின் சந்தோஷ வாழ்வை கேட்டு பொறாமை பொங்கி எழுந்து விட்டது.

அதன் விளைவாகத் தன் கணவனிடம் அம்மா வீட்டிற்குப் போக வேண்டுமென நச்சரித்து அவனையும் இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

தன் அம்மாவின் வீட்டிற்கு வந்த ரங்கநாயகி என்றும் இல்லாத திருநாளாக, “ஏம்மா குமுதாவை எப்ப விருந்துக்கு கூப்பிடப் போறீங்க? சீக்கிரமா கூப்பிட வேண்டியதுதானே”, என நச்சரிக்க ஆரம்பித்தாள்.

அவளை ஏற இறங்கப் பார்த்த அவளது கணவன் ரமேஷ், “என்ன ரங்கா! என்ன ஆச்சு உனக்கு? அங்க என்ன உசுர எடுத்து இங்க அத்தை மாமா உசிரை எடுக்கதான் கூட்டிகிட்டு வந்தியா? அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க.. நிறையச் சொந்தக்காரங்க வீட்டுக்கு விருந்துக்கு எல்லாம் போக வேண்டியது இருக்கும்.

அதை முடிச்சுட்டு இங்க வருவாங்க. உனக்கு அப்படி உன் தங்கச்சியை பாா்க்க ஆசையா இருந்துச்சுன்னா சொல்லு நாம எல்லாரும் சேர்ந்து போய் பார்த்துட்டு வருவோம்”, என்றதும் உடனே கிளம்பிவிட்டாள்.

“வாங்க.. வாங்க.. போகலாம்”, என்றவளின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்ந்த அனைவரும், “இன்னிக்குப் போன் பண்ணி நாளைக்கு வரோம்ன்னு சொல்லிட்டுப் போவோம்”, என அவளை அமைதிப்படுத்தினர்.

அதன்படியே சகுந்தலா குமுதாவிற்கு அழைத்து, “உன் அக்காக்கு என்னமோ உன் மேல பாசம் பீறிட்டு வந்து உன்னை இப்பவேப் பாா்க்கணும்னு துடியாய் துடிக்கிறா. அதனால நாளைக்கு உன்னை பாா்க்க வரலாம்னு இருக்கோம் குமுதா! உங்க மாமியாருக்கும் போன் பண்ணி சொல்லிடுறேன்”, என மகளிடம் உரைத்துவிட்டு சம்பந்தியிடமும் பேசினார்.

மருமகள் வீட்டில் இருந்து வருகிறார்கள் என்பதை அறிந்த நொடியிலிருந்து துரைசாமி தலைகால் புரியாமல் ஆட்டுக்கறி எடுக்கவா? கோழி அடிக்கவா என மனைவியை நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.

“ஏன்தான் இந்த மனுஷன் என்னை இந்த பாடு படுத்துறாரோ”, என்று நடந்து கொண்ட அலமேலு “வெற்றி! உனக்கு என்ன வேணும்னு சொல்லி… அதை எடுத்துடலாம்”, என மகனிடம் கேட்டதற்கு வெற்றியோ, “இந்தச் சாப்பாட்டு விஷயத்துல எல்லாம் என்னை இழுக்காதம்மா… வயித்துப் பசிக்கு ஏதோ ஒன்னு சமைச்சு போட்டாச் சாப்பிடப் போறேன். எதுவா இருந்தாலும் உன் மருமககிட்டக் கேளு… வக்கணையா சொல்லுவா”, எனத் தன் மனைவியை நோக்கி கண்ணடித்தவாறே அவளை வம்பு இழுக்க ஆரம்பித்தான்.

குமுதாவா இதிலெல்லாம் சிக்குவாள்? “அத்தை பருப்பு கடைசல் வச்சு ஏதாவது ரெண்டு காய் செஞ்சாப் போதும். கறி எல்லாம் எடுக்க வேண்டாம்”, எனத் தன் கணவனுக்குத் தானும் சற்றும் சளைத்தவள் இல்லை என அவனைப் பார்த்துக் கண்ணடித்தவாறு அவளும் கூறினாள்.

இவர்களின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த அலமேலு தலையில் அடித்துக்கொண்டு, “ரெண்டும் கண்ணடிக்காம சொல்லித் தொலைய வேண்டியதுதானே! சின்னப் பிள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க”,என இருவரையும் ஒருசேர வைது விட்டு அங்கிருந்து அகன்றார்.

அவர் நகன்றவுடன் தன் கணவனின் அருகில் வந்தவள், “மாமா! எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. என் அக்கா வீட்டுக்காரர் ஒரு புள்ளபூச்சி. மனுஷன் நாம என்ன சொன்னாலும் சரின்னு தலையாட்டுற ஜீவன்! என் அக்கா இருக்காளே எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவா”, என எச்சரிக்கை விடுத்தாள்.

அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாதவனாக, “குமுதா நீ கும்முன்னு இருப்பதற்கான ரகசியம் என்ன”, எனத் தன் மனைவியின் அழகின் ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டான்.

மறு நாளைய விடியலிலேயே குமுதாவின் குடும்பம் அவளின் புகுந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கிராமங்களில் எத்தனை மெத்தப் படித்தவர்களாக இருந்தாலும் வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டால் பண்டைய கால விருந்து உபசாரம் மாறாமல் தடபுடலாகக் கவனிப்பர்.

அதுபோன்றே அலமேலு சம்பந்தி வீட்டினர் என்று எண்ணாமல் தன் வீட்டினர் என எண்ணி காலை உணவை அமர்க்களப்படுத்தி இருந்தார். அவர் செய்து வைத்திருந்த உணவு வகைகளை கண்ட சகுந்தலா, “இவ்வளவு எதுக்கு மதினி செஞ்சீங்க? நான் வந்து செய்ய மாட்டேனா? குமுதா கூடமாட ஒத்தாசை செய்றாளா? இல்லை நீங்களே தனியாக் கிடந்து தவிக்கிறீங்களா?”, எனப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவருக்கு அனைத்தையும் எடுத்து வைக்க உதவினார்.

அம்மாவின் பேச்சை கேட்ட குமுதா சண்டைக்கு வரிந்துகட்டிக்கொண்டு செல்லும் முன்னர் வெற்றியோ, “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க அத்தை? குமுதா செய்ற ஒத்தாசையாலதான் அம்மாவால நிம்மதியா சமையல் செய்ய முடியுது”, என இடைப் புகுந்தான்.

குமுதாவும், அலமேலுவும் வெற்றியின் பதிலில் இவன் ஏதோ வில்லங்கமா சொல்லப் போறான் என்பதை உணர்ந்து அவனது வாயை அடைக்கும் விதமாக ஒருசேர முறைத்துப் பார்த்தனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத வெற்றி தன் மாமியார் நம்பாத பார்வை பார்ப்பதைக் கண்டு, “நிஜமா அத்தை! அம்மா சமைக்கிற சமையல் எப்படி இருந்தாலும் நல்லா இருக்குதே நல்லா இருக்குதேன்னு குறை சொல்லாமல் சாப்பிடுறா… அதுவே அவ செய்ற பெரிய ஒத்தாசை.

அம்மாவும் நாம நல்லா சமைக்கிறோம் அப்படின்னு சொல்லி ஒரு பெருமையான நினைப்புல சமையலைச் சந்தோசமாச் செய்யுது”, என மிகவும் சீரியசான குரலில் கூறி முடித்தான்.

பேச்சும், சிரிப்புமாகக் காலை உணவை முடித்தவர்கள் அருகில் இருந்த கோவிலுக்குச் சென்று வந்தனர். சாப்பிடும் முன்னரே கோவிலுக்குப் போயிட்டு வந்து விடுவோம் எனக் கூறிய சகுந்தலாவிடம் அலமேலு, “குமுதா பசி தாங்கமாட்டா. வயிறு நிறைஞ்ச பின்னாடி போனாதான் சாமியை நிம்மதியா தரிசனம் பண்ண முடியும். அதனால சாப்பிட்ட பின்னாடி கோவிலுக்கு போவோம். எந்த சாமியும் எதுவும் சொல்லாது”, என மறுத்துக் கூறியதில் அனைவரும் உண்ட பின்னரே கோவிலுக்கு கிளம்பினர்.

இந்த ஒரு வார்த்தையில் குமுதாவை அவளது வீட்டில் எப்படி வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்துகொண்ட ரங்கநாயகி மனதில் சிறிது பொறாமை தோன்றினாலும் தன் தங்கைக்கு கிடைத்த நல்வாழ்வை எண்ணி மகிழவே செய்தாள்.

சிறுவயதிலிருந்து அக்கா தங்கை இருவருக்கும் பல விஷயங்களில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் இருவரும் வெளிக்காட்டிடாத பாசப்பிணைப்புடனேயேதான் வளர்ந்தனர்.

ரங்கநாயகியின் திருமணத்திற்குப் பின்னர் வாழும் இடத்தின் சூழ்நிலையோ என்னவோ அவளின் மனதில் தான் உயர்வு என்ற எண்ணம் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்துவிட்டது. அது எப்பொழுது தாய் வீட்டிற்கு வந்து சென்றாலும் பேச்சில் சர்வசாதாரணமாக வெளிப்பட்டுவிடும்.

இப்பொழுதும் தான் மட்டுமே உயர்வு என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே குமுதாவின் வாழ்வை கண்டு எப்படிதான் வாழ்கிறாள் என பார்க்க வந்த ரங்கநாயகி ஆரம்பத்தில் அந்த பொறாமை உணர்வு ஏதேனும் குற்றம் தென்படுகிறதா என்பதை மட்டுமே கவனிக்கச் செய்தது. ஆனால் போகப்போக அலமேலு, துரைசாமி இவர்களின் உபசரிப்பிலும், வெற்றிவேலின் மதினி என்ற அன்பான அழைப்பிலும் சற்று அவளது பிறவி இயல்பு வெளிக்காட்ட ஆரம்பித்திருந்தது.

அனைவரும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சென்று வந்தவுடன் அலமேலு அவர்களை, “நீங்க தோப்புக்கு போய்ட்டு வாங்க… நானும் மதினியும் சேர்ந்து சமைச்சுடுவோம்”, என அவர்களை வெளியே அனுப்பி வைத்தார்.

தோப்பிற்கு செல்லும் வழியிலேயே ராகவனையும், மகேஸ்வாியையும் கண்ட வெற்றி தன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அருகில் வந்த குமுதாவிடம் “குமுதா! பொண்ணுப் பார்க்க போய் என்னை வாத்தியாரம்மா மாதிரி கேள்வி ஒரு பொண்ணு கேட்டதா உனக்கு சொன்னேனே! அந்த பொண்ணு இந்த பொண்ணுதான்”, என தன் மனைவியிடம் பெரும் அறிமுகப் படலத்தை நடத்தினான்.

வெற்றிவேலின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னர்தான் ராகவன் மகேஸ்வரியின் திருமணமும் நடந்தேறியிருந்தது.

வெற்றிவேலை போட்டியில் தோற்கடித்தது பற்றி மட்டுமே சொல்லி மகேஸ்வரியை திருமணம் செய்திருந்த ராகவன் வெற்றிவேலின் பொருளாதாரத்தில் தான் தோற்றுப் போனதை அவளிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த உண்மையின் கடுப்பில் இருந்த மகேஸ்வரி நடுத்தெருவில் வைத்து தன் மனைவியிடமே அவன் எள்ளலான முறையில் அறிமுகப்படுத்தியதும் பொறுத்துக் கொள்ளாமல் பொங்கி எழுந்து விட்டாள்.

குமுதா அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ராகவனிடம் திரும்பி, “நீங்க சொன்னீங்களே! எதுலேயும் ஜெயிச்சது கிடையாது. ஒன்னாங்கிளாஸ்ல இருந்து காலேஜ் போய் படிச்சு முடிச்ச வரைக்கும் எந்த போட்டியிலும் ஜெயிச்சது இல்லை.

ஊருக்குள்ள கபடி, காளை அடக்குறது எது நடந்தாலும் ஜெயிக்க மாட்டான். சரியான தோத்தாங்குளி! அப்பேற்பட்ட ஒரு தோத்தாங்குளியை எந்த கேள்வியும் கேட்காம வாங்க மாப்பிள்ளை அப்படின்னு வரவேற்கவா முடியும்? எல்லாத்தையும் ஜெயிக்குற உங்களை கல்யாணம் பண்ணுறதை விட்டுட்டு இந்தமாதிரி தோத்துப போறவரையா கல்யாணம் பண்ணிப்பேன்… இந்த நியாயத்தை கேட்டீங்களா?”, என நீட்டி முழக்கினாள்.

வெற்றி அறிமுகப்படுத்தியதில் எந்த வித கபடமும் இல்லாமல் சாதாரணமாகதான் அறிமுகப்படுத்தினான். ஆனால் மகேஸ்வரி அதனை ஈறாக்கி, பேனாக்கி தான் ஏதோ உலக சாதனையாளரை திருமணம் செய்து கொண்டது போல் கதையளந்ததில் கடுப்பான குமுதா அவளுக்கு பதிலடி தராமல் அங்கிருந்து நகரக்கூடாது என்ற எண்ணத்துடன் தன் கணவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவனோ ரமேஷின் அருகில் நெருங்கி நின்று கொண்டு, “அண்ணே! இப்ப வேடிக்கை பாருங்க… என் பொண்டாட்டி விட்டு வெளுத்து வாங்கப் போறா. அதுல இழுத்து நீட்டி முழக்கி பேசின இந்த பிள்ளை சிதறு தேங்காய் மாதிரி சிதறப்போகுது. நாம அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம்”, என முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

இதற்கு மேல் இவளைப் பேச விட்டால் ஆபத்து என்றுணர்ந்த ராகவன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்ன பேச்சு பேசுற? வெற்றி என்னோட ஃப்ரெண்டு… நாங்க ரெண்டு பேரும் பிறந்ததிலிருந்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகுறவங்க”, என இடை புகுந்தான்.

ஆனால் அவளோ அதனை காதில் வாங்காமல், “பாருங்களேன்! பிறந்ததிலிருந்து உங்க கூடவே வளா்ந்து எதிலேயும் ஜெயிக்காமலே இருந்திருக்காரு… என்னத்த நான் சொல்றது? இந்த மாதிரி திறமை இல்லாத ஆளை வச்சுக்கிட்டு காலம்பூரா அவரோட பொண்டாட்டிக்கு கஷ்டம்தான்”, என மீண்டும் வாய் விட்டவள் குமுதாவை பார்த்து, “நீயாவது சாமர்த்தியமா இருப்பியா? இல்லை நீயும் இப்படிதானா?”, என்று கேட்டாள்.

வெற்றி இவற்றிற்கெல்லாம் கவலை கொள்ளாமல் குமுதா அவளை வார்த்தையால் விளாசப் போவதை வேடிக்கை பார்க்க ஆவலுடன், கண்களில் மின்னும் மின்னலுடன், நெஞ்சினில் பட்டாம்பூச்சிகள் பறந்திடக் காத்திருந்தான்.

அவனது இத்தனை எதிர்பார்ப்புகளையும் வீணடித்து விடாமல் குமுதா, ” நீதான் அந்த ராமலிங்கபுரத்து ராயல் ஃபேமினியா? உன் புருஷா்ரு ஜெயிச்சார்ன்னு சொல்றியே என்னத்த பெருசா ஜெயிச்சுட்டாரு? ஏதோ இந்தியாவுக்காக விளையாண்டு பெரிய உலகக்கோப்பை எல்லாம் வாங்கிட்டு வந்த மாதிரி ஜெயிச்சாருன்னு சொல்ற… என் புருஷன் தோத்துப் போறதுக்கு நானே கவலைப்படலை.

நீ ஏன் அதை பத்தி கவலைப்படுற? உன் வீட்டு அடுப்பை மட்டும் பாரு… அடுத்த வீட்டு அடுப்புல என்ன நடக்குதுன்னு பார்க்காதே! இன்னொரு வாட்டி என் புருஷனை பத்தி நீ பேசுன கண்ணை நோண்டி, உணக்கையா பேசுற உன் மண்டையை உலக்கையால பொளந்துடுவேன்”, என அவளை அடிப்பது போல் பேசிய குமுதா தன் அருகில் நின்ற தன்னுடைய அக்காவை பார்த்தாள்.

தங்கையின் பார்வையில் என்ன உணர்ந்து கொண்டாளோ ரங்கநாயகி உடனே களத்தில் குதித்து, “என் கொழுந்தனை பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? இரு வீட்டுக்கு போனதும் அலமேலு அத்தைகிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு”, என்று சிறு குழந்தைகள் அம்மாவிடம் கூறி விடுவேன் என மிரட்டுவது போல் மிரட்டினாள்.

அலமேலுவின் கொள்கைகளைப் பற்றி மகேஸ்வரிக்கு தெரியாது. ஆனால் ராகவன் அறிவான். அலமேலுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் அவனை ஊரில் தலைநிமிர முடியாதபடி செய்து விடுவார் என்பதை உணர்ந்து இருந்த காரணத்தினால் தன் மனைவியிடம் மகேசு வா வீட்டுக்குப் போகலாம்! வா வீட்டுக்கு போகலாம்”, என கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.

அவள் அதற்கெல்லாம் அசராமல் அப்படியே நின்று கொண்டிருக்க இது நகன்டு தொலையாது போலிருக்கே என மனதில் எண்ணிய ரமேஷின் வார்த்தைகளை சரியாக தன் மனதில் படித்த வெற்றி, “குமுதா! வா நாம கிளம்புவோம்”, என்ற அடுத்த நொடியில் குமுதாவும், ரங்கநாயகியும் கிளம்பிவிட்டார்கள்.

கிளம்பும் நொடியில் குமுதா அவர்களைத் திரும்பிப் பார்த்து ஒரு ஏளனப் புன்னகையை பரிசாக அளித்ததிலேயே ராகவனுக்கு வாழ்வில் தான் தோற்று கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து போனது.

ராகவனிடத்திலும், மகேஸ்வரியிடத்திலும் வெற்றிவேலின் தோல்வியை விட்டுத் தராத குமுதா அவளது கண்ணெதிரிலேயே அவன் தோல்வியைத் தழுவும் பொழுது இதே போன்று நடந்து கொள்வாளா? இல்லை தோற்றுக் கொண்டே இருக்கும் அவனை மணந்து கொண்டதை எண்ணி மனம் மருகிப் போவாளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *