Categories
Uncategorized

வெற்றிவேல்-6

Free Download WordPress Themes and plugins.

வெற்றிவேல்-6

வெற்றிவேலின் வார்த்தையில் குமுதாவும், ரங்கநாயகியும் அவ்விடத்தை விட்டு நகர்ந்த உடன் ராகவனின் புறம் திரும்பிய வெற்றி “என் பொண்டாட்டி என்னை மாதிரி அமைதியா இருக்க மாட்டாடா நடுரோடுன்னு கூட பாா்க்காம உன்ன அடிச்சு வெளுத்துடுவா. நீ அடி வாங்காம இருக்கணும்னா உன் பொண்டாட்டியோட வாயை அடக்கி வை”, எனக்கூறிவிட்டு ரமேஷ் அழைத்துக் கொண்டு பின் தொடர்ந்தான்.

அங்கிருந்து செல்லும் பொழுது குமுதாவின் மனதில் எதுவும் இல்லாமல் சாதாரணமாக தன் அக்காவுடன் பேசிக்கொண்டே நடந்தாலும் ரங்கநாயகியின் பொறாமை புத்தி சிறிது தலைதூக்க ஆரம்பித்திருந்தது இதனை வைத்து எதுவும் பிரச்சினை கிளப்ப முடியுமா என்று எண்ணி குமுதாவின் புறம் திரும்பியவள்

“ஏன் குமுதா! அவங்க அவ்வளவு பேசுறாங்களே! உனக்கு ஒன்னும் தோணலையா?”, என மெதுவாக தன்னுடைய வார்த்தைகளை வீசினாள். அவளது குறுக்கு புத்தியை புரிந்து கொள்ளாமல் சாதாரணமாக இவ்வளவு நேரம் தன்னை பாசமாக,தன் வாழ்வை எண்ணி பெருமைப்பட்ட அக்கா குதா்க்கமாக எதுவும் வினவுவாள் என நினைக்காத குமுதா “என்ன தோணனும்கா?”, என்றுக் கேட்டாள்.

“இல்லை… உன் வீட்டுக்காரர் எல்லாத்துலயும் தோத்துப் போறது உனக்கு அசிங்கமா இல்லையா? அப்பாடி! ஊருக்கு நடுவிலே நிற்க வச்சு மட்டம் தட்டுறாங்க… இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி இருக்கியே! ஆம்பளை ஒரு விஷயத்துல கூட ஜெயிக்க முடியாதா? என்ன ஒரு அசிங்கம்?

உங்க மாமாவை பாரு… காலேஜ்லயும் அவர்தான் ஃபா்ஸ்ட். இப்ப வேலை பாா்க்குற இடத்திலேயும் அவர்தான் டாப்பு. அவர்கிட்ட ஒரு புரோகிராமை கொடுத்தா அதை எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் முடிச்சுக் கொடுத்துடுவாா்”, என தன் கணவனின் பெருமையை வீசிய ரங்கநாயகிக்கு ஏதோ சாதித்துவிட்ட உணர்வு தோன்றியது.

தான் பேசி முடித்த பின்னரும் குமுதா அமைதியாக நடந்து வருவதைக் கண்ட பிறகுதான் “ஒன்னும் சொல்லாம வர”, என்றாள்.”இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை. நான் நல்லவளா இருக்கேன். நீ சூனியக் கிழவி மாதிரி சகுனி புத்தி பிடிச்சு இருக்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம்”, என அவளின் மூக்கை உடைத்து விட்டு பின்னாடி திரும்பிய குமுதா வெற்றியை பார்த்தவள் “மாமா சீக்கிரமா வாங்க. இந்த அக்கா நச்சரிப்பு தாங்கலை”, என அவ்விடத்திலேயே உரைத்தாள்.

குமுதாக் கூறியதை கேட்ட வெற்றிவேல் வாய் விட்டு நகைக்க ஆரம்பித்து விட்டான். அவனது அருகில் நடந்து வந்த ரமேஷ்க்கும் தன்னுடைய மச்சினிச்சி கூறியதில் சிரிப்புதான் வந்தது. ஆனாலும் சிரித்துவிட்டு மனைவியிடம் பின்னர் பாடுபட வேண்டியதிருக்கும் என்பதனால் அமைதியாகவே நடந்து வந்தான்.

வெற்றி சிரிப்பதை பார்த்து கடுப்பான ரங்கநாயகி “இப்போ உங்க பொண்டாட்டி என்னை குறை சொன்னதும் உங்களுக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வருதோ? அக்காவை இப்படி பேசாதன்னு சொல்லி அடக்கி வைக்காம நீங்க அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்குறீங்களோ?”,என தன் கொழுந்தனிடம் வருத்தம் கூடிய கோபத்துடன் கேட்டாள்.

“அவ அப்படி சொன்னதுதான் மதினி எனக்கு சிரிப்பு வரக் காரணமே! உங்கள வச்சுகிட்டே அவ இப்படி சொல்றன்னா நீங்க இல்லாதப்ப என் பொண்டாட்டி உங்களை பத்தி என்ன என்ன குறை பேசுவான்னு யோசிச்சு பாருங்க… நீங்கதான் தங்கச்சி தங்கச்சின்னு பாசமா பேசிட்டு வர்றீங்க. இது அப்படி இல்லை. எங்க அக்கா அப்படி இப்படின்னு உங்களை பத்தி ஒரே குறைதான் சொல்றா”, என தன் பங்கிற்கு வெற்றி ரங்கநாயகியின் தூபத்தை ஏற்றிவிட்டான்.

அவனது விளையாட்டை புரிந்துகொண்ட ரமேஷ் “ஏன் இந்த வேண்டாத வேலை? என் பொண்டாட்டியை பத்தி உனக்கு தெரியாது. இங்கேயே முடியை பிடிச்சு சண்டை போட்டாலும் சண்டை போடுவா”,என அவனது காதுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக முணுமுணுத்தான்.

“போடட்டும்ண்ணே! நம்மளுக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் வேணும் இல்லையா? என் பொண்டாட்டி என் கூட சண்டை போட மாட்டேங்குறா… எங்க அம்மா நான் எது பேசினாலும் பதிலுக்கு கவுண்ட்டர் கொடுக்கிறாங்க. இதெல்லாம் டெய்லி நடக்கிற சமாச்சாரமா இருக்கு.புதுசா ஏதாவது பார்க்கணும்னு தோணுச்சு. அதான் அக்கா தங்கச்சிக்குள்ள மூட்டி விட்டுருக்கேன். சண்டை போட்டா நாம ஓரமா உக்காந்து வேடிக்கை பார்ப்போம்”, என தன் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டே கூறிய வெற்றியை வியப்பாக பார்த்த ரமேஷ் இது கூட நல்லாதான் இருக்கு என தனது மனதுக்குள் கூறிக் கொண்டான்.

இவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த குமுதாவை பார்த்த ரங்கநாயகி ” ஏன்டி! நான் ஊர்ல இல்லாத நேரத்துல என்னை பத்தி இப்படிதான் இல்லாததும் பொல்லாததும் சொல்லிகிட்டு திரியுறியா?”, என சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பினாள்.

அவளைத் திரும்பிப் பார்த்த குமுதா “அக்கா!என் புருஷனுக்கு பொழுது போகலைன்னா எனக்கும், என் மாமியாருக்குமே சண்டை இழுத்து வைப்பாரு. நீ எனக்கு அக்கா. சொல்லவா வேணும்… அந்த மனுஷன் வீம்புக்காக செஞ்சுகிட்டு இருக்காரு. நீயும் அதை புரிஞ்சுக்காம சண்டைக்கு வர்ற. எங்க தோட்டத்துக்கு வர்றியா? இல்லை நான் நேரா வீட்டுக்கு போய் அம்மாவும், அத்தையும் சமைக்கிறதை சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்கவா?”, என வினவியவள் வெற்றியை திரும்பிப்பார்த்து தன் ஆட்காட்டி விரலால் பத்திரம் காட்டினாள்.

அதற்கெல்லாம் அசருவானா வெற்றி! “மதினி பேச்சை திசை திருப்புறதுல உங்க தங்கச்சியை மிஞ்ச யாராலும் முடியாது. எதுவா இருந்தாலும் மனசுல ஒரு ஓரமா போட்டு வச்சுக்கிட்டு இதை எப்பயாவது ஒரு நாளைக்காவது நீங்க பேசி தீர்த்துடனும்”, என மேலும் தூண்டிவிட்டுவிட்டு ரமேஷை முன்னால் இழுத்துக்கொண்டு நடந்தான். அவன் கூறிய விதத்தில் ரங்கநாயகிக்கே சிரிப்பு வந்துவிட்டது.

அதன் பின்னரான நேரத்தில் தோட்டத்திற்கு சென்றவர்கள் அங்கு சிறிது நேரம் காலாற நடந்து விட்டு கொண்டு சென்றிருந்த நொறுக்கு தீனிகளையும் நொறுக்கி விட்டு மரங்களின் நிழலில் அமர்ந்தனர்.

வெற்றியின் கலகலப்பான சுபாவத்தை கண்ட ரமேஷிற்கு அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது. ரமேஷ் தன்னிடம் ஏதோ கேட்க விரும்புவதையும் அதற்கு தயங்கிக் கொண்டு நிற்பதையும் பார்த்த வெற்றி “என்னண்ணே ஏதோ கேட்கணும்னு நினைக்கிறீங்க… ஆனா என் பொண்டாட்டி அடிக்கு பயந்து பம்முறீங்க… அப்படித்தானே!”, அதனையும் விளையாட்டாகவே வினவினான்.

“அடப்பாவி! உன் பொண்டாட்டிகிட்ட அடி வாங்குற அளவுக்கு என் பொண்டாட்டி என்னை விடுவாளா? அதெல்லாம் அவளுடைய ஏகபோக உரிமை. யாருக்கும் விட்டு தரமாட்டா”, என தன் மனைவியை பார்த்து கண் சிமிட்டிய ரமேஷ் “நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் வெற்றி! தப்பா எடுத்துக்க மாட்டியே?”, என பீடிகையுடன் ஆரம்பித்தான்.

அதற்கு வெற்றி பதில் கூறும் முன்னர் குமுதா முந்திக்கொண்டு “தப்பா எடுத்துக்குறதா?அதெல்லாம் எங்க மாமாவோட அகராதியிலேயே கிடையாது”, என பதிலுரைத்தாள். அவளது பதிலில் தலையசைத்த வெற்றி “என்ன் கேட்கணுமோ கேளுங்க. இதிலென்ன இருக்கு?”, என ரமேஷை ஊக்கினான்.

எப்படி வெற்றி உன்னை நடுத்தெருவில் வச்சு அவங்க அசிங்கப் படுத்துறாங்க. என் பொண்டாட்டி கூட அதை பத்திதான் குமுதா கிட்ட ஏதாவது பேசி இருப்பா. என்ன பேசுனான்னு தெரியலைனாலும் உன்னை ஏதாவது குறைச்சு பேசிருப்பா. அதனாலதான் குமுதாவும் யோசிக்காம பட்டுன்னு அவங்க அக்காவை குறை சொல்லிட்டா. இல்லைனா அக்கா தங்கச்சிக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் வெளியாட்கள்கிட்ட விட்டு தர மாட்டாங்க”, எனக் கேட்டதும் குமுதா அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்.

அவளது சிரிப்பில் ஏதும் தவறாக கேட்டுவிட்டோமோ என ரமேஷ் எண்ணுவதை அவன் முக உணர்வை கொண்டே கண்ட குமுதா “இதே கேள்வியை நான் பலதடவை கேட்டுட்டேன் மாமா! ஒரு பதிலும் வந்தபாடில்லை… இன்னைக்கு நீங்க கேட்டதுக்காச்சும் உங்க தம்பி பதில் சொல்றாரான்னு பார்ப்போம்”, என விளையாட்டாகவே உரைத்தாள்.

அவர்கள் இருவரும் பேசியதும் அமைதியாக இருந்த வெற்றி “இதுல என்ன இருக்கு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசுறாங்க அப்படிங்கிறதனால நமக்கு எதுவும் குறையப்போறது கிடையாது. அவங்க பேசாம இருக்கறதுனால நம்ம உசத்தியாகப் போறதும் இல்லை. யார் என்ன பேசினாலும் அது நம்ம மனசுக்குள்ள போகக்கூடாது. அவ்வளவுதான்.எதை ஏத்துக்கணுமோ அதை மட்டும்தான் மூளையில் ஏத்துக்கணும். தேவையில்லாததை எல்லாம் எடுக்கணும்னு அவசியமே கிடையாது”, என மிகவும் எளிதாக கூறிய வெற்றியின் பதில் அங்கே இருந்த யாருக்கும் திருப்தி இல்லை.

ஏனெனில் அவர்கள் சுற்றிவளைத்து கேட்டது இப்படி அனைத்திலும் தோற்றுக்கொண்டே இருப்பது உனக்கு வருத்தத்தை தரவில்லையா என்பதுதான். அது வெற்றிக்கு புரிந்திருந்தாலும் அதனை கண்டுகொள்ளாதவனாகவே பதிலளித்தான்.

அதற்குமேல் அவனை கேள்விகேட்க விரும்பாததால் சாதாரணமாகவே பேசிக்கொண்டிருந்தனர். திடீரென அங்கிருந்த மாங்கா மரத்திலிருந்து மாங்காய் பறித்துத் தருமாறு ரங்கநாயகி கேட்டவுடன் வெற்றியும், ரமேஷும் பறித்தி தருவதற்காக மரமேறச் சென்றனர்.

வெற்றி கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து இருந்த காரணத்தினால் அவன் எளிதாக ஏறி விடுவான் என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டிருக்க அவனால் சுத்தமாக மேலே ஏற இயலவில்லை. அவனுக்கு முன்னரே ரமேஷ் ஏறி மாங்காய் பறித்து கீழே போட்டதுடன் வெற்றியும் மேலே ஏறுவதற்கு கையை கொடுத்தான்.

ஆனால் வெற்றியோ “அதான் நீங்க ஏறிட்டீங்க இல்லையாண்ணே! இனி நான் வேற எதுக்கு ஏறனும்?”, எனக் கூறி கீழே நின்று கொண்டான். இதனை பார்த்த குமுதா எதுவும் பேசாமல் அந்த மாங்காயையும் சாப்பிடாமல் அமைதியாகவே இருந்து கொண்டாள்.

மேலும் சிறிது நேரம் தோட்டத்திற்குள் உலாவியவர்கள் வீட்டிலிருந்து சாப்பிட வருமாறு அழைப்பு வந்தவுடன் கிளம்பிச் சென்றனர். போகும் வழியிலேயே தன்னுடைய குத்தல் பேச்சுகளால் ரங்கநாயகி குமுதாவை சீண்டிக்கொண்டே கொண்டே வந்தாள்.

அதன் விளைவாக வீட்டிற்கு சென்ற பின்னர் குமுதா சற்று அமைதியாகவே இருந்தாள். அவளது அமைதியை கண்ட ரமேஷ் ரங்கநாயகி குமுதாவிற்கும் வெற்றிக்கும் பிரச்சனையை இழுத்து விட்டுவிடுவாளோ என பயப்பட ஆரம்பித்து விட்டான். அதன் விளைவாக அன்றே கிளம்ப வேண்டும் என அவன் முடிவு எடுத்துக் கொண்ட நேரத்தில் ரங்கநாயகி அலமேலுவிடம்

“அத்தை! எனக்கு இங்க ரொம்ப பிடிச்சிருக்கு. நாங்க இன்னைக்கு இங்கேயே தங்கிட்டு நாளை ஊருக்கு போகட்டுமா?”, என வினயமாக வினவினால். அவளது வினயத்தை அவளது வீட்டினர் உணர்ந்து கொண்டாலும் அலமேலு அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் “அதனாலென்ன நல்லாவே தங்கிடு. ஒருநாள் என்ன ஒரு வாரத்துக்கு கூடத் தங்கு”, என பெருந்தன்மையாக கூறினார்.

சகுந்தலா தன்னுடைய கணவரிடம் “உங்க மக ஒரு நாள் தங்கினாலே ஒரு யுகத்துக்கு கலவரத்தை ஏற்படுத்திடுவா. இதுல ஒரு வாரத்துக்கு தங்குனா அவங்க வம்சத்துக்கும் பிரிவினையை ஏற்படுத்திடுவாளே! இதை எங்க கொண்டு போய் சொல்றது?”, என புலம்ப ஆரம்பித்திருந்தார்.

அவரது புலம்பலை அருகில் இருந்து கேட்ட வெற்றி “அத்தை! நீங்க பொலம்புற அளவுக்கு எல்லாம் இங்கு சீன் எதுவும் கிடையாது. என் பொண்டாட்டி அமைதியா இருக்கான்னா உங்க பெரிய மக அடிவாங்க போகுதுன்னு அர்த்தம். அதுக்கெல்லாம் அசராம நீங்க ஊருக்கு கிளம்புங்க. அண்ணனையும் அண்ணியையும் நாளைக்கு நான் கொண்டுவந்து பத்திரமா விடுறேன்”, என அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.

சகுந்தலாவும், ரங்கசாமியும் கிளம்பிய பின்னர் மொட்டை மாடியில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென தங்களுடைய தோள் வலிமையை பற்றி ஆண்கள் இருவரும் பேச ஆரம்பித்திருந்தனர். உடனடியாக இருவரும் தங்கள் கைகளை வைத்து யார் பலசாலி என தெரிந்துகொள்ள ஆர்வமாக ஈடுபட்டனர்.

வழக்கம்போல் வெற்றி ரமேஷிடம் தோல்வியை தழுவியதும் மனதில் விகல்பம் இல்லாமலே ரமேஷ் “நான்தான் ஜெயித்தேன்”, என கூக்குரலிட்டான்.

அவனது குரலில் அதிக மகிழ்ச்சி அடைந்த ரங்கநாயகி அடுத்து செய்த செயலில் வெற்றிக்கும், குமுதாவிற்கும் விரிசல் விழுந்தது? இல்லையெனில் விரிசலை ஏற்படுத்த நினைத்தவள் விலா எலும்பு உடைந்ததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *