Categories
Uncategorized

வெற்றிவேல்-7

Free Download WordPress Themes and plugins.

வெற்றிவேல்-7

ரமேஷ் சந்தோஷத்தில் கத்தியது வெற்றிக்கும் மகிழ்ச்சியை அளித்தது. தன்னுடைய தோல்வியை பெரிதாக கண்டுகொள்ளாதவனாக “கங்கிராட்ஸ் அண்ணே! எவ்வளவு ஈஸியா வின் பண்ணிட்டீங்க”, என மனமார பாராட்டினான்.

அவன் அவ்வார்த்தைகளை கூறி முடித்த அடுத்த நொடியில் ரங்கநாயகி குமுதாவிடம் “உன் புருஷன் இதுக்கு கூட லாயக்கில்லை”, என நக்கல் குரலில் கூறியதும் வெற்றி ரமேஷின் அருகில் குனிந்து “உங்க பொண்டாட்டிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்… இப்ப குமுதாகிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறாங்க”, என முணுமுணுத்தான்.

வெற்றிவேல் கூறியதைக் கேட்ட ரமேஷ் குமுதாவின் முகத்தைப் பார்த்துவிட்டு “அப்படி தெரியலையே தம்பி! நீதான் அடி வாங்குவ போல இருக்கே!”, எனக் கூறியதற்கு “உங்களுக்கு இன்னும் என் பொண்டாட்டி எப்படின்னு தெரியலைண்ணே!”,என்று வெற்றி பதில் கூறும்பொழுதே குமுதா வெற்றியின் அருகில் வந்து நின்று கொண்டு அவனது தோளின் மேல் தன் கையை வைத்தவள் ரங்கநாயகியை பார்த்து “இப்போ உனக்கு என்ன வேணும்”,என்று தெனாவட்டாக வினவினாள்.

அவளது கேள்வியில்தான் ரமேஷும் வெற்றி கூறியது உண்மை என புரிந்து கொண்டான். அப்போதும் ரங்கநாயகி அடங்காமல் “எல்லாத்துலயும் தோத்துப்போறது பெருமையா?”, என ஒரு வார்த்தையை வீசினாள்.

அப்பொழுதும் குமுதா தன்னுடைய கட்டுப்பாட்டை இழக்காமல் “அதுல என்னதான் தப்புன்னு சொல்லு”, என தன் அக்காவிடம் பொறுமையை இழுத்துப் பிடித்தவளாக வினவினாள். அவளது கேள்வியில் ரங்கநாயகி குதூகலமாக “என்னடி இப்படி பேசுற? எதிலுமே ஜெயிக்காதவன் எப்படி உன்னை வச்சு வாழப் போறான்?”, என்றதும் குமுதா பதிலளிக்க ஆரம்பித்தாள்.

“சரி இப்ப மாமா ஜெயிச்ச உடனே சந்தோஷமா கத்துனாா். இதே மாதிரி அவரோட ஆஃபீஸ்ல ஏதாவது ஒரு ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ணிட்டு சந்தோஷமாக கத்தி இருக்காரா?”, என வாிசையாகக் கேள்விகள் எழுப்பினாள்.

“அவங்க எல்லாம் சேர்ந்து ப்ரொஜெக்ட் முடிஞ்சதும் டிரீட் வச்சு கொண்டாடுவாங்க”, என குமுதாவின் கேள்வியின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் அப்பொழுதும் ரங்கநாயகி சிறிது கர்வமாகவே பதிலளித்தாள்.

“சரி உன்னோட வழிக்கே வர்றேன்… இந்த சந்தோசத்தை பார்த்து உன் மனசு சந்தோஷமா இருக்குது இல்லையா? இப்ப என் புருசன் தோத்துப் போனதனாலதான் மாமா ஜெயிக்க முடிஞ்சுச்சு. இவர் ஜெயிச்சிருந்தா நீ இந்நேரம் மாமாவை போட்டு சாகடிச்சுருப்ப… என் தங்கச்சி புருஷன் கிட்ட தோத்து போயிட்டீங்களேன்னு அவரை அசிங்கப்படுத்தி இருப்ப. அந்த மாதிரி கேடுகெட்டதனம் எதுவுமே நடக்காமல் இருப்பதற்கு என் புருஷன் தோத்துப் போறதுல எனக்கு சந்தோசம்தான்”, என ஒரே வார்த்தையில் குமுதா முடித்து விட்டாள்.

அவள் பேசியது புரியாத ரங்கநாயகி அப்பாவனையை தன் முகத்தில் காட்டியதும் அந்நேரம் மேலே வந்த அலமேலு “என்ன மருமகளே! உங்க அக்காவுக்கு மூளை ரொம்ப கம்மியா இருக்கே!”, என்று சிரிப்புடன் வினவினார்.

அலமேலுவை கண்டவுடன் ரமேஷிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுத்திய தன்னுடைய மனைவியை அவ்விடத்திலேயே அறைந்திடும் எண்ணம் ஏற்பட்டது.

அவனது முகத்தைக் கண்ட அலமேலு “நீ எதுக்கு ராஜா இதுக்கெல்லாம் வருத்தப்படுற? பேசுறவங்க பலவிதம் பேசிக்கிட்டே இருப்பாங்க. அது சொந்தமாக இருந்தாலும் சரி, வெளியில் இருக்குறவங்களா இருந்தாலும் சரி கண்டுக்காம நம்ம வேலையை மட்டும்தான் நாம பார்க்கணும். என் பையனுக்கு அந்த புத்தி இருக்கு. என் மருமகளுக்கும் அந்த புத்தி இருக்கு. அதனால அதை நினைச்சு நானும் வருத்தப்பட மாட்டேன்”, என ரமேஷிற்கு ஆறுதல் உரைத்த அலமேலு ரங்கநாயகியின் புறம் திரும்பி

“என் மருமககிட்ட கேட்ட கேள்வியை இப்ப நீ என்கிட்ட திரும்பக் கேளு”, என அதிகாரமாக உரைத்தார். அலமேலு வந்தவுடன் ரங்கநாயகிக்கும் மனதில் சிறிது பயம் துளிர்த்தாலும் அவரேக் கூறியவுடன் “நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு? என் தங்கச்சி மேல இருக்கிற அக்கறைலதானே நான் கேட்டேன். ஏதாவது ஒரு விஷயத்தில் தோத்து ஒரு விஷயத்துல ஜெயிச்சா பரவாயில்லை. எல்லாத்துலயும் தோத்துகிட்டே இருக்கிறவரு உங்க காலத்துக்கு பின்னாடி எப்படி என் தங்கச்சியை வச்சு வாழ்க்கை நடத்தப் போறாரு?”, என வினவினாள்.

அவளின் கேள்விக்கு பதிலாக “ஏன்மா ஒருத்தன் ஜெயிக்கிறதுலயும், தோக்குறதுலயும்தான் அவனோட வாழ்க்கை இருக்கா?”, என அலமேலு சந்தேகம் கேட்டார்.

“ஆமா அத்தை! இப்ப இருக்கிற போட்டி நிறைஞ்ச உலகத்துல நாம ஜெயிச்சா மட்டும்தான் நம்ம வாழ்க்கையை தக்க வச்சுக்க முடியும். இல்லைன்னா நம்மளை அடிச்சு போட்டுட்டு போய்கிட்டே இருப்பாங்க”, என தன் மனநிலையை ரங்கநாயகி உரைத்ததும் வெற்றி, அலமேலு, குமுதா மூவரும் வாய் விட்டு நகைக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் சிரிப்பில் கடுப்பான ரங்கநாயகி “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீங்கெல்லாம் சிரிக்கிறீங்க?”, எனக் கேட்டாள்.

அவளது கடுப்பினை உணர்ந்துகொண்ட அலமேலு “நீ நினைக்கிறது ரொம்ப தப்புமா… வாழ்க்கை அப்படிங்கிறது அடுத்தவங்களை மனசு நோகடிக்காமல் வாழறதுலதான் இருக்கு.

என்னோட பையனுக்கு எல்லாத்துலயும் ஜெயிக்கிற திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்னை தோற்கடிச்சவனை மனசார பாராட்டி அவனோட சந்தோசத்தை தன்னோட சந்தோசமா நினைக்கிற நல்ல மனசு இருக்கு. என் பையன் சொத்துசுகம் எதுவும் சேர்த்து வைக்க தேவையில்லை.

நீ சொன்ன மாதிரி எங்க காலத்துக்கு அப்புறமும் இதே மனசோட அவன் வாழ்ந்தா போதும். என்னோட மருமகளுக்கும் அவனை புரிஞ்சிக்கிற அளவுக்கு நல்ல மனசு இருக்கிறதோட அவனோட திறமையை மட்டும் பார்க்காத அளவுக்கு அன்பு இருக்கு. இந்த அன்பு மட்டுமே நாம கடைசி மூச்சு விடுற வரைக்கும் நிலைச்சு இருக்கும். வேற எதுவுமே நிரந்தரம் கிடையாது.

அதை இப்போதைக்கு நீ புரிஞ்சுக்கலைன்னாலும் நீயும் ஒரு குழந்தைக்கு அம்மா ஆனதுக்கப்புறம் யாராவது ஒருத்தர் உங்க பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து இருக்கீங்க அப்படின்னு பாராட்டுறப்ப உனக்கு புரியவரும்.நீ இந்த வீட்டுக்கு எப்ப வேணும்னாலும் வரலாம். எத்தனை மாசம் வேணும்னாலும் இருந்து விருந்தாடிட்டு போகலாம். ஆனா உன் தங்கச்சி வாழ்க்கை வீணா போய்டுமோ அப்படிங்கிற சந்தேகமில்லாமல் உள்ள வா!”, என என நீளமாகப் பேசியவர் வேறு எதுவும் கூறாமல் வெற்றியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே இறங்கிவிட்டார்.

அலமேலு இறங்கிச் சென்ற பின்னர் அனைவரிடமும் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது. சிறிது நேரத்திற்கு பின்னர் ரமேஷும், வெற்றியும் ஒரேநேரத்தில் சாரி கூறிக்கொண்டனர். அதன்பின்னர் ரங்கநாயகியை பார்த்த வெற்றி ” மதினி! அம்மா பேசுனது எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க.

அம்மா எப்பவுமே இப்படித்தான். அவங்க அரை நிமிஷத்துக்கு ஒரு தடவை எனக்கு 6,000 கவுண்டர் கொடுப்பாங்க. ஆனா மத்தவங்க ஒரு வார்த்தை சொன்னாலும் சிண்டை பிடிச்சு ஆஞ்சுடுவாங்க. நீங்க குமுதாவோட அக்காவா இருக்க போய் பேச்சோடு விட்டுட்டாங்க”, எனக்கூறி நிறுத்தியவன் அவளது முகத்தில் ஏதேனும் வருத்தம் நிலவுகிறதா எனக் கண்டான்.

ஆனால் ரங்கநாயகியின் பாவனையோ நான் கூறியதில் என்ன தப்பு உள்ளது என்பதாகதான் இருந்தது. அதனை கண்ட ரமேஷ் வெற்றியிடம் “விட்டுத் தள்ளு வெற்றி! அவ என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டா. அவ பிறந்தது இந்த கிராமத்தில்தான்… ஆனால் சென்னை வந்ததுக்கப்புறம் அவளோட நடவடிக்கை ஒட்டுமொத்தமா மாறிப்போச்சு. நீ அதெல்லாம் கண்டுக்காத. நீ எப்பவும் போலயே இரு”, என்று என அவனது தோளில் கை போட்டவாறு கூறினான்.

அதற்கு பதிலாக சிரித்த குமுதா “நீங்க வேற மாமா! உலகமே அழிஞ்சாலும் என் புருஷன் துளியளவும் மாற மாட்டாரு .அவரு அவராதான் இருக்கிறதை விரும்புவார். எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு”, என தன் கணவனின் சார்பாக பதிலுரைத்தாள்.

குமுதா கூறியதைக் கேட்டவுடன் ரங்கநாயகி “குமுதா! இப்ப பேசறதுக்கு எல்லாமே நல்லா இருக்கும். ஆனா வாழ்க்கை போகப் போக ஒரு கட்டத்துல உனக்கும் வெறுப்பு வர ஆரம்பிக்கலாம்.அப்பவும் இதே மாதிரி நீ இருக்க முடியுமா?”, என தன்னுடைய மௌனத்தை கலைத்து வினவினாள்.

அதற்கு குமுதா பதிலளிக்கும் முன்னர் வெற்றி முந்திக்கொண்டு “மதனி இது நிஜமாவே உங்களோட தங்கச்சி மேல இருக்கிற அக்கறையால வந்த கவலையா? இல்லை மனசு ஓரத்துல இருக்குற பொறாமையால வந்த சந்தோஷத்துல வந்த கவலையா?”, எனக் கேள்விக் கணைகளை வீசினான்.

அவன் கேட்டதில் ரமேஷும், குமுதாவும் தங்களுக்கு வந்த சிரிப்பை வாயினுள் அடக்கிக்கொண்டு மௌனம் காத்தனர். ரங்கநாயகியோ “என் தங்கச்சி மேல இருக்குற அக்கறைலதான் நான் கேக்குறேன். எனக்கு ஒன்னும் அவ மேல பொறாமை எல்லாம் கிடையாது. பொறாமைப்படுற அளவுக்கு அவ வாழ்க்கை ஒன்னும் அமோகமா இல்லை”, என தனது கழுத்தை முறித்துக் கொண்டு கூறினார்.

“ரொம்ப சந்தோசம் மதினி! என் பொண்டாட்டியை நான் அமோகமா வச்சிருக்கேனா இல்லையான்னு சொல்லி நானே குழப்பத்துல இருந்தேன். நீங்க அந்த குழப்பத்தை தீர்த்து வச்சிட்டீங்க. கும்மு! எனக்கு இப்போ ஒரே குதூகலமா இருக்கு”, என வெற்றிக் கூறியதும் அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை குமுதா வெளியிட்டால்.

அவளது சிரிப்பை படு கேவலமாக பார்த்த ரங்கநாயகியை கண்டவன் “மதினி! எங்க அம்மா டயலாக் பேசுற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் கிடையாது. சாதாரண மனுஷன். ஏதாவது ஒன்னுல ஜெயிக்கிற அளவுக்கு திறமையும் இல்லாத ஒருத்தன். ஆனால் எங்க அப்பா, பாட்டி, தாத்தா சம்பாதிச்சு வச்ச நிலங்களையெல்லாம் அழியவிடாம அதுல லாபத்தைக் கொண்டு வந்துகிட்டுதான் இருக்கேன்”, என அவன் கூறியதும்

ரங்கநாயகி “உங்க மனசுக்கு நீங்க திருப்தியா வாழ்றீங்க! ஆனா ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் உங்களை பத்தி கேவலமா பேசுறாங்க. அதை நினைச்சு கொஞ்சம்கூட கவலைப்படமாட்டீங்களா?”, என வினவினாள்.

அவளது கேள்வியை கேட்ட வெற்றி அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து “அடுத்தவங்க என்ன பேசுவார்களோ அப்படிங்கிற எண்ணம்தான் நிறைய பேரோட கனவுகளை கொன்னுடுது. பேசுறவங்க யாரும் 100% சரியானவங்க கிடையாது. மத்தவங்க பேசுறதை விட்டுட்டு உங்களோட மனசாட்சி என்ன சொல்லுதோ அதை மட்டும் கேட்டு நடக்கணும். இதுதான் என்னோட அம்மா எனக்கு சொல்லித்தந்த ஒரு சின்ன கருத்து.

அதைதான் நானும் இன்னிக்கு வரைக்கும் கடைபிடிச்சிட்டு விட்டு வர்றேன். எனக்கு வாழ்க்கையில பெருசா சாதிக்கணும்னு இலட்சியம் எதுவுமே கிடையாது. என்னால யாராவது ஒருத்தரோட முகத்துல சிரிப்பு கொண்டு வர முடிஞ்சா அதுவே பெரிய சாதனைதான்”, என வெற்றிவேல் உரைத்து முடித்ததும் தன்னுடைய அக்கா, மாமா இருவரும் இருப்பதை கண்டு கொள்ளாமல் குமுதா அவனது கன்னத்தில் முத்தமிட்டு இருந்தாள்.

வெற்றி பேசியதிலேயே தன்னுடைய கவனத்தை வைத்திருந்த ரங்கநாயகி தன் தங்கையின் செயலில் “அடிப்பாவி! என்னடி பண்ற?”, என அதிர்ச்சியில் கூவியிருந்தாள்.

“ஒரு முத்தம் கொடுத்தேன் என் புருஷனுக்கு. இதுல என்ன தப்பு இருக்கு? மனுஷன் முதல் நாள் என்கிட்ட என்ன சொன்னாரோ அதை ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே இன்னிக்கு உனக்கு சொல்றாருன்னா இது எத்தனை தடவை படிச்சு படிச்சு மனப்பாடம் பண்ணி வைச்சிருப்பாா்”, என தன் அக்காவிடம் கூறிவிட்டு “ஏன் மாமா! அத்தை சொல்லித்தந்த டயலாக்கை வார்த்தை மாறாமல் அப்படியே சொல்லிட்டு நீங்க ஹீரோ பேர் வாங்க நினைக்கிறீங்களோ”, என தன் கணவனை கலாய்க்க ஆரம்பித்திருந்தார்.

வெற்றி கூறியதிலேயோ இல்லை அலமேலு பேசி சென்றதிலேயோ ரங்கநாயகி இதெல்லாம் நம்மால் முடியுமா என சிந்திக்க ஆரம்பித்திருந்தாள். அதற்கு மேலும் இப்பிரச்சினையை நீடிக்காமல் அனைவரும் கீழே இறங்கி சென்று அவரவர் அறையில் தூங்கச் சென்றனர்.

தங்களின் அறைக்குள் நுழைந்த வெற்றி குமுதாவை தன்னுடைய கைக்குள் கொண்டு வந்தவனாக “கும்மு! உங்க அக்கா செஞ்ச வேலையால மாமனை பத்தி ஒரே பெருமையா பேசிட்டே!”, என்றதும் ” பெருமையா பேசுனதும் மாமனுக்கு என்ன பாட்டு ஞாபகம் வந்துச்சு?”, என குமுதாவும் குறும்புடன் வினவினாள்.

தோல்வி மீது
தோல்வி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
ஜெயிச்சவனை சேரும்

பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
அகப்பையால் அடிக்கும்
தெய்வம் என்பது உண்மை
அல்லவோ

தாயிடம்
மிரட்டல் கண்டேன்
தாரத்திடம் தாரை
தப்பட்டை கிழிய
கண்டேன்

என வெற்றி கர்ண கொடூரமானக் குரலில் பாடியது இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அனைவரையும் எழும்பச் செய்தது.

அவனது பாடலை கேட்ட ரங்கநாயகிக்கும், ரமேஷுக்கும் புன்னகை மனதிலிருந்து பூத்தது. அப்புன்னகையில் வெற்றிவேலின் வெற்றி விண்மீன்களாக மின்னியது.

பாடலைப் பாடிய வெற்றி வெற்றிகரமாக அவனது தாரம் என்னும் தெய்வத்திடம் தாரை தப்பட்டை கிழிந்த பின்னரும் மறுநாள் அலமேலுவிடம் அவரது மருமகள் அவனை வீழ்த்தியக் கதையை வெற்றிகரமாக முழக்கமிடுவான் என்று நம்புவோமாக!

வாழ்வில் தோல்விகளும், வெற்றிகளும் வெளிச்சம் கொண்டு வருவதில்லை. தூய மனமும், மற்றவரிடம் புன்னகை பூக்கச் செய்திடும் பெருமனமுமம் மட்டுமே மாசற்ற வாழ்வின் மகத்துவம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *