Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 22

அத்தியாயம் 22:

“அம்மா டிரைவிங் லைசன்ஸ் வச்சிருக்க தானே” என்று துருவ் முன்னால் சென்றுக் கொண்டிருந்த மஹதியைப் பார்த்தவாறேக் கேட்டான்.
“எப்படியோ உன் அப்பா காசுக் கொடுத்து வாங்கிட்டார் டா. அதை ஏன் இப்போ கேட்கிற?” என்று யோசனையுடன் கேட்டவர், அவன் விஷம புன்னகையைப் பார்த்ததும்,
“உதைப் பட போற. வீட்டில் போய் என்னை விட்டுட்டு அப்புறம் போய் லவ் பண்ணு” என்று பதறினார். அவன் சிரித்துக் கொண்டே,
“லைசன்ஸ்க்கு பூஜை போட்டது போதும். அப்படியே யு டர்ன் போட்டு திலகா ஆன்ட்டி காலில் விழு. நான் போய் அவங்க பொண்ணுட்ட பேசிட்டு வரேன்” என்று காரை நிறுத்தினான்.
“ஏ!!! அப்போ கையெடுத்து கும்பிடாத சொன்னியே டா” என்று அதே பதட்டத்துடன் அன்பரசிக் கேட்க,
“நான் இருக்கும் போது கும்பிட்டால், அம்மாவை விட்டு கொடுக்கிறவனுக்கு எப்படி பொண்ணு தரதுன்னு அங்கிள் ஆன்ட்டி யோசிப்பாங்களே” என்று மேலும் சிரித்தான்.
“அடப்பாவி!!! அது சென்டிமென்ட் சீன் இல்லையாடா?” என்றுக் கேட்கும் போதே, அவன் காரில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டான். அவனை நன்றாக திட்டியபடியே, அன்பரசியும் அனைத்து கடவுள்களையும் வேண்டி, காரை இயக்க ஆரம்பித்தார்.
சிக்னலுக்காக நின்றிருந்த வண்டியில், மஹதியின் பின்னால் அமர்ந்துக் கொண்டான். கண்ணாடி வழியாக அவன் நடந்து வந்ததையும், தன் வண்டியில் ஏறியதையும் பார்த்துக் கொண்டே இருந்தவள், அமைதியாகவே வண்டியை செலுத்தினாள். முதலில் தோளில் கைப்போட்டவன், சற்று தூரம் சென்றதும் அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டான். அவள் தோள் வளைவில் முகத்தைப் பொருத்தி, காதோரமாக,
“யோசிச்சு பார்த்தால் மிராக்கிளா இருக்கு. இத்தனை வருஷங்களா உன் மேல் இருக்கும் லவ் கொஞ்சம் கூட குறையல. சொல்ல போனால் அதிகமாகிட்டே போகுது” என்று ஹஸ்கி குரலில் கிசுகிசுக்க, கூச்சத்தில் மஹதிக்கு கைகள் தடுமாற, பின்னால் அமர்ந்திருந்தவன் வேகமாக அவள் கைகளை இருபுறமும் எட்டி பிடிக்க, இப்போது மேலும் நெருக்கமாக அவனுக்குள் அவள் இருக்க, ஒரப்பார்வையில் அவனை முறைத்தவள், வண்டியை நிறுத்த முயற்சித்தாள்.
ஆனால் முடியாமல் வண்டி அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்து, சீறிப் பாயவும், அவன் கைகளிலே அடித்து விட்டு, பயத்தில் கண்களை இறுக மூடினாள். ஏதோ பாலத்தில் ஏறுகிறோம் என்று மட்டும் புரிந்தது. வண்டி நின்ற உணர்வில் கண்களை திறந்தால், பாதிக்கு மேல் இன்னும் கட்டப்படாத பாலத்தில் இருவர் மட்டும் தனித்து இருந்தனர். அவன் வண்டியை விட்டு இறங்கி சென்று பாலத்தின் கீழே செல்லும் வாகனங்களை பார்த்தப்படி நிற்க, மஹதியும் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு, அவனருகே அந்த பாலத்தின் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
“என் மஹா, எங்கே போக போறான்னு இருப்பேன். ஆனால் அடித்து பிடித்து ஓடி வரணும்ன்னா உன் அத்தை பையனோ, ஒரு அமெரிக்க மாப்பிள்ளையோ தேவைப் படுறான் இல்ல” என்று தன்னை எண்ணி நகைத்தவன்,
“சங்கீத்க்கும், எனக்கும் ப்ராப்ளம் இல்லன்னா நிச்சயமா சொல்லிருப்பேன் மஹா. அட்லீஸ்ட் நீயாவது சொல்ல மாட்டியான்னு தான் அடிக்கடி கேட்பேன்.. நீ..ம்ஹூம்” என்று மேலும் சிரித்து, அவளைப் பார்க்க அனைத்தையும் காதில் வாங்கினாலும், எந்த பிரதிபலிப்பையும் காட்டாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
அவளருகே வந்து இருபுறமும் கைகளை ஊன்றி குனிந்தவனை விழியெடுக்காமல் பார்த்தவள், அவன் சரியாக முத்தமிட முயற்சிக்கும் போது, கைவளைவில் தப்பித்து ஓட முயற்சிக்க, அவளை நிறுத்தி வைக்க முற்பட்ட போது அவளின் துப்பட்டா மட்டும் இப்போது அவன் கைகளில் சிக்கிக் கொண்டது.
துப்பட்டாவின் ஒரு புறத்தை பிடித்தப்படி மஹதி நிற்க, அவன் வேகமாக இழுத்த வேகத்தில் அவன் மேலேயே வந்து விழுந்து, அவனை நிமிர்ந்து காதலுடன் பார்க்க, அவள் விழிகளையை இமைக்காமல் பார்த்தவன், சட்டென்று இதழில் தன் இதழ் பதித்து விட்டு அவளைப் பார்த்தான்.
அவள் மறுப்பாக தலையை இருபுறமும் ஆட்ட, அவனும் விடாமல் மீண்டும் மீண்டும் இதழில் மட்டுமே முத்தத்தை பதித்தப்படியே இருந்தான். எண்ணிக்கையின்றி முத்த மழை தொடர்ந்த போது அவளே ஒரு கட்டத்தில் உள்ளங்கையால் தடுத்து, “போதும் துருவ்” என்றாள்.
உள்ளங்கையிலும் இதழை பதித்தவன், அப்படியே அவள் கையை விடாமல் தன்னருகே இழுத்து, இடையில் கைப்போட்டு, அவளையும் தன்னருகே அமர்த்தி, அவனும் அமர்ந்தான். கீழே சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சாலையோர விளக்கின் உபயத்தால் ஒளிரும் முகத்தையும், வெட்கத்தில் நொடிக்கொரு தடவை சிமிட்டும் கண்களையும் ரசித்தவாறே,
“என்னிடம் நேரடியாக பேச உனக்கு என்ன கஷ்டம்? ஏன் யாரோ ஒருத்தி மாதிரி மெசேஜ் எல்லாம்…” என்றான்
“நாம் அன்னைக்கு நைட் நல்லாதானே பேசினோம். நீ சொல்லாமலேயே போயிட்ட. என்ன பிரச்சனை தெரியல. எங்கேயாவது பார்ப்போமான்னு எத்தனை நாள் நினைத்திருக்கேன் தெரியுமா?”
“ஹோ உனக்கு யாரும் எதுவும் சொல்லவே இல்லையா?” என்றான்.
“ம்ஹூம்… சினிமாவில் வர மாதிரி நீயும் லெக்சரரா வருவ. நான் சைட் அடிக்கலாம்னு எல்லாம் கனவு கண்டு இருக்கேன்”
“அடிப்பாவி என்னை சைட் அடிக்க தான் இந்த கோர்ஸ் செலக்ட் பண்ணியா? உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா” என்றான் சிரிப்புடன்.
“நான் கோர்ஸ் செலக்ட் பண்ணும் போது என் மைண்ட்ல அது மட்டும் தான் இருந்தது” என்று மஹதி புன்னகைக்க, அவள் இதழை இரு விரலால் குவித்து,
“ஃப்ராடு ஃப்ராடு” என்று சிரிக்கவும்,
“ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த ஷீட்டிங் ஸ்பாட்ல தான் பார்த்தேன். நீ பேசவே இல்ல. எனக்கு ரொம்ப நாள் கழித்து பேசற தயக்கம் மட்டும் தான் இருந்தது. பட் நீ அப்படி இல்லைன்னு தெரிந்து கார்த்திக்கிடம் கேட்டேன் அவன் தான் சொன்னான். அப்புறம்…” என்று யோசித்தவள்,
“இப்போ பொண்ணு பார்க்கலாம் வராங்க சொன்னதும் நீ எனக்கு வேணும். நீ மஹதியை லவ் பண்ணாலும் சரி. அந்த யாரோ ஒருத்தியை லவ் பண்ணாலும் சரின்னு நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன்” என்று புன்னகைத்தாள்.
அதற்கும் விரிந்த புன்னகையை பதிலாகக் கொடுத்தவன்,
“அது எப்படி? மஹதி எனக்குள்ள இருக்கும் போது யாரோ ஒருத்தி வருவா” என்று கேள்வியிலேயே பதிலை சொல்ல, மஹதியும் ஆச்சரியத்தில் விழிகளை விரிக்கும் போது,
“இப்பவும் அந்த அன்நௌன் பர்சன் 80 வயது பாட்டியா இருந்திருந்தாலும் எனக்கு ஸ்பெஷல் தான். பட் மஹா வேற. என்னை விட்டு பிரித்து பார்தத்தில்லை. எனக்குள் ஒருத்தி” என்றான்.
“ஹோ எனக்குள் ஒருத்தியை தான் இவ்ளோ டார்ச்சர் பண்ணுவியா?”
“வொர்க்ல 100% பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்ப்பது ஒரு தப்பா? அடுத்த ப்ராஜெக்ட்ல என்னோட டீம்ல இருந்தாலும் அப்படிதான்” என்று புன்னகைக்க,
“அடுத்த ப்ராஜெக்ட் உன்னோடவா?” என்று ஒரு கும்பிடு போட்டவள், “குமரன் கூடவே குப்பைக் கொட்டிக்கிறேன் ஆளை விடு” என்று சொல்லவும் சிரித்தான்.
“கேட்கவே மறந்துட்டேன். எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்றாள்.
“ஃப்லிம் இன்டஸ்ட்ரீல யார் நல்லவங்க தெரியாது. எப்பவும் கேர்ள்ஸ்க்கிட்ட கேர்ஃபுல்லா இருக்கணும். இல்லனா செக்சுவல் ஹாரஸ்மென்ட்ன்னு அப்படியே மாத்திடுவாங்க. அப்படிதான் சங்கீத் மாட்டிக்கிட்டு உங்க ஃபேமிலியே கஷ்டபட்டீங்க” என்றதும், எதற்கு சம்மந்தமின்றி பேசுகிறான் என்று யோசித்தவாறே தலையசைத்தாள்.
“அன்னைக்கு ரெக்கார்டிங் ஸ்டுடியோல நடந்த பிரச்சனையில் அந்த பொண்ணை பற்றின விஷயங்களை எதற்கும் கேதர் பண்ணி வை. பின்னால் ஏதாவது ப்ராப்ளம் பண்ணினால் நம்ம கையில் ஏதாவது இருக்கணும் இல்லன்னு சொன்னேன். அதற்காக கார்த்திக் தான் ஒருத்தனை அழைச்சிட்டு வந்தான். இந்த நம்பரை பற்றியும் கண்டுபிடின்னு என் ஃபோனையும் வாங்கி கொடுத்தான்”
“ஹோ அவ்ளோ ஈசியா கண்டுபிடிச்சிடீங்களா?”
“இல்லை. உங்க லோகேஷன்ல இருந்து மேசேஜ் வர்துன்னு சொல்லவும், நீயா இருப்பியோன்னு ஒரு டவுட் வந்தது. இதை கார்த்திக்கிட்ட சொன்னால் பிரச்சனையாகிடும்னு அவனிடம் சொல்லாமல், இந்த நம்பரின் டீடெய்ல்ஸ் மட்டும் வாங்கினேன். நீயா தான் இருப்பியோன்னு பல ஆங்கிள யோசித்தாலும், அந்த நைட்டி போட்ட பாட்டிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்ன்னு புரியவே இல்ல. அப்புறம் தான் ஒருவேளை என் அம்மாவோட வேலையோன்னு அப்படி எல்லாம் பேசினேன். ஏன்னா நெட்வொர்க் லொகேஷன் மாத்துறதும் ஈஸி. நாம் ஃபோன்ல பேசிட்டு இருக்க இரண்டு வருஷமும், நான் அம்மாவிடமும் பேசுறதே இல்ல தானே. நான் அன்னைக்கு கான்ஃப்ரன்ஸ் ஹாலில் ஃபோனையே உற்று பார்த்தது, கடத்த போறேன் சொன்னது, ஆணாக இருந்தாலும் சரி நேரில் பார்க்கணும் சொன்னது, எல்லாமே என் அம்மாவை அந்த இடத்தில் நினைத்து தான்”
“பேக்ரவுண்ட்ல இவ்ளோ நடந்திருக்கா? நான் வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டேன்” என்று சிரித்தவளிடம்,
“நைட்டி போட்ட பாட்டியோட பக்கத்து வீட்டில் எங்க யூனிட் பையன் ஒருத்தன் இருக்கான். அவன் தான் சொன்னான். பாட்டி மதுரை மேரேஜ்க்கு போனதை, சோ ரிலேட் பண்ணியாச்சு. நீயும் ஹரியும் மேரேஜ்ல பண்ணின அனிமேஷன் வொர்க், அன்ட் எனக்கு அனுப்பின பர்த்டே அனிமேஷன் வொர்க் இப்படி நிறைய இருந்தாலும், எல்லாமே கெஸ் தான். நீ அந்த கார்டுக்கு கொடுத்த ரியாக்சன் வச்சு தான், கன்ஃபார்ம் பண்ணினேன்”
“போட்டு வாங்கியிருக்கீங்களா? நானாதான் மாட்டிக்கிட்டேன்னா?” என்று கவலையாக சொல்ல, அந்த நேரம் அலைபேசி சிணுங்கியது.
“இவன் எதுக்கு கூப்பிடுறான்” என்று சொல்லியபடியே ஒருகையை அவள் தோளில் போட்டப்படி பேசினான்.
“டேய் என்னடா நடக்குது இங்கே? நான் ஒருத்தன் என்கேஜ்மென்ட் முடிந்து உட்கார்ந்திருக்கேன். உங்க கல்யாண தேதி பற்றி சீரியஸ் டிஸ்கஷன் போகுது” என்றான் மறுமுனையில் கார்த்திக்.
“அதுக்கெல்லாம் லக் வேணும்டா” என்று சிரித்தவன்,
“சரி என்ன பேசிக்கிறாங்க. அம்மா வந்துட்டாங்களா?” என்றான் ஆர்வம் குறையாமல்
“ம்ம்..இரண்டு பேருமே அவங்க முறைப்படி தான் மேரேஜ் பண்ணணும்னு பிடிவாதமா இருக்காங்க. கஷ்டம் தான். எப்படியும் உங்க மேரேஜ் முன்னாடி எனக்கு கல்யாணம் ஆகிடும்” என்று கார்த்திக் சிரித்தப்படி சொல்லவும்,
“ஒழுங்கா அவங்களுக்குள்ள கன்வீன்ஸ் ஆகிட்டால் மஹதியை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவேன். இல்லனா இப்படியே ஓடி போயிடுவோம் சொல்லு” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி மஹதியிடம் அடியைப் பெற்றுக் கொண்டான்.
“அடப்பாவி!!! உங்களை சேர்த்து வைத்த பாவத்துக்கு மொத்து வாங்கி கொடுக்காமல் இரண்டு பேரும் வீட்டுக்கு வாங்க. உங்களால மட்டும் தான் உங்க பேரண்ட்ஸை சமாளிக்க முடியும்”
சிரித்துக் கொண்டே அலைபேசியை துண்டித்தவன், “வீட்டுக்கு போகணுமா?” என்று சலிப்பாகக் கேட்க, மஹதி சிரித்தப்படியே எழ, அவள் கையை பிடித்து நிறுத்தினான்.
“பெட்ரோல் காலியாகிற வரை ஒரு லாங்க் டிரைவ் போலம்னு தான் வந்தேன் மஹா. அட்லீஸ்ட் கூடுவாஞ்சேரி வரையிலாவது போய்ட்டு வரலாம்” என்று சொல்லவும், மஹதி தலையசைக்க, உற்சாகமாக எழுந்தவன், மீண்டும் அவள் இதழில் முத்தத்தை பதிக்க,
“பேசாமா வா துருவ்” என்று அதட்டினாலும், மனதினுள் ரசித்தப்படியே வண்டியை எடுத்தாள்.
“ஆமா உனக்காக இவ்ளோ பண்ணியிருக்கேன். நீ ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டியா?” என்று மஹதி கேட்கவும், அருகே வந்தவன்,
“சொன்னால் திட்ட மாட்டியே” என்று புதிராக சொல்லவும், அவளும் ஆர்வமாக தலையசைத்து, “சொல்லு” என்று அவனை ஊக்கினாள்.
“டெல்லியில் ஒரு கம்பெனியில் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி ஜாப் கிடைக்கலன்னு கவலையா சொன்னியே, அதில் நீயும் ஒன் ஆஃப் த டாப்பர்” என்றான்.
அவனை முறைத்தவள், அவனை ஏற்றிக் கொள்ளாமல், சர்ரென்று வண்டியை எடுத்து சென்று விட்டாள்.
“ஏ!!!” என்று பின்னால் துரத்தியப்படியே இருந்து கத்தி, பேசாமல் நின்று விட்டான். பாலம் முடியும் வரை சென்றவள் மீண்டும் வண்டியை திருப்பி அவனை நோக்கி வர, புன்னகையுடன் நின்றிருந்தான்.
“அந்த ப்ராஞ்ச்ல ஹாலிவுட் ப்ராஜெக்ட்க்கு அனுப்பிடுவானுக. நீ சென்னை ப்ராஞ்ச்க்கு வருவ நினைத்து, உனக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டு சென்னையில் இருக்கேனே!! அது புரியலயா டி லூசு” என்று சொல்லவும் மனம் சற்று அமைதியானாலும், அவள் மனம் கொதித்ததை வண்டியின் உறுமல் சத்தம் சொல்ல,
“ப்ளீஸ் மஹா. திரும்ப சண்டை வேணாம். இப்போவும் ஒரு ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு செலக்ட் பண்ணியிருக்காங்க. அவார்டு கிடைக்குதோ இல்லையோ, நிச்சயமா உங்க 4 பேருக்குமே நல்ல ஃப்யூச்சர் இருக்கு” என்று அவன் குழுவையே சேர்த்து சொல்லி, அவன் கெஞ்சவும்,
“நீ தான் பைத்தியம் மாதிரி எல்லாத்தையும் விட்டன்னா… நானும் விடணுமா? சரி முடிந்ததை பேசி ஒண்ணும் ஆகப் போறதில்ல. பட் நான் நல்ல சேலரி வாங்கிற வரை கல்யாணத்தை தள்ளி வச்சிக்கலாம்” என்று அவனை ஏற சொன்னாள். நொடிக்குள் மீண்டும் இதழில் இதழ் பதித்து எடுத்தவன்,
“லிவ் இன் கூட ஓகே தான்” என்றதும், மீண்டும் அவனுக்கு அடி வைத்து, அரும்பிய புன்னகையை அவனறியாதவாறு முகத்தை திரும்பிக் கொள்ள, அவனும் மறுபுறம் வந்து தலை சாய்த்து அவள் முகத்தை பார்த்து புன்னகைக்க, கண்டுக்கொண்டவனின் நெஞ்சிலேயே சிவந்திருந்த தன் முகத்தை மறைத்தாள். ஸ்கூட்டியில் அமர்ந்திருந்தபடியே தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் உச்சந்தலையில் இதழ் பதித்தவன்,
“கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி தான் இருப்பியா மேடம்” என்றான் போலியான கவலைக் குரலில்.

அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானே
-(கவிஞர் வைரமுத்து)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 21

அத்தியாயம் 21:

சங்கீத் பிரச்சனைக்கு பின் இன்றுதான் திலகாவின் முகத்தில் மலர்ச்சியைப் பார்க்கிறாள். இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையாக வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றெண்ணினாள் மஹதி. மௌனமாகவே தன் சம்மதத்தை தெரிவித்து விட்டு, அன்னை கொடுத்த புதுப்புடவையில் தன்னை அலங்கரித்து விட்டு அனைவரும் குழுமியிருந்த ஹாலுக்கு வந்தாள்.
“பாட்டி காலில் விழுந்து கும்பிடும்மா” என்ற அன்னையில் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து பாட்டியின் ஆசீர்வாதத்திற்கு பின் எழுந்த போது,
“மாப்பிள்ளையை கொஞ்சம் நிமிர்ந்துப் பார்.. நம்மளை பார்க்க மாட்டாளான்னு ஏக்கமா பார்க்கிறார்” என்று ஸ்வாதி சொன்னதும் நிமிர்ந்தவள் பார்வையில் விழுந்தது துருவ் பிரதீப். அவன் அன்னையுடன் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தான்.
ஸ்வாதி என்ன செய்கிறாள் என்று திரும்புவதற்குள்… அவள் “துருவ்!!!!” என்றுக் கத்தியபடி அவனருகே சென்றாள். துருவ் பார்வையும் இவள் மீதே இருந்தது. அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியாமல் அவள் திரும்ப முற்படும் போது, “மஹதி!!!!” என்ற அவள் தந்தையின் குரல் வாசலில் இருந்துக் கேட்டது.
விருந்தினர்களுடன் அளாவிக் கொண்டிருந்தவர்,
“உன் ஆஃபீஸ்ல இருந்துடா” என்று சொல்ல, அங்கே பூங்கொத்துடன் ஒருவன் நின்றிருந்தான். அலுவலகத்தில் சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு இதுபோல் வாழ்த்து செய்திகள் வீடு தேடி வருவது வழக்கம் தான். ஏற்கனவே இருமுறை வந்திருப்பதால், வீட்டினர் அனைவரும் அவள் வேலை திறமையைப் பற்றி பெண் பார்க்க வந்திருந்தவர்களிடம் கூறி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவளுக்கு மட்டும் குழப்பமாக இருந்தது. நான்கு மாதங்களாக அலுவலகத்திற்கு செல்லாதவர்களுக்கு எப்படி அனுப்புவார்கள்? என்று யோசித்தப்படியே வாசலை நோக்கி செல்ல ஆரம்பித்தாள். ஒரே நொடியில் அவளிடம் கொடுத்து விட்டு வந்தவன் கிளம்பி விட, உள்ளே இருந்த வாழ்த்து அட்டையை எடுத்தாள்.
Thanks for everything
அவனே தான். தன்னை கண்டுபிடித்து விட்டான். என்ற அவன் புறம் திரும்பிய போது அவனும் அவளை மட்டுமே பார்த்திருந்தான். இருவருமே தங்கள் காதலை பரிமாறி கொள்ளாமலேயே ஒருவர் மனதை இன்னொருவர் நன்கு அறிந்து கொண்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. வீடே சந்தோஷத்தில் குழுமியிருக்க,. தன் மனதிற்கு பிடித்தவன் வந்து நாளை முதல் வரிசையில் அமர்ந்து திருமண நாளன்று நின்றால்? என்னால் இவனை எந்த தயக்கமும் இல்லாமல் தாலிக் கட்டிக் கொள்ள முடியுமா?
அதுவும் அவன் பின்னாலேயே சுற்றி சுற்றி நானும் உன்னை விரும்புகிறேன்.. அடுத்த அடியை நீதான் வைக்கணும் என்று எவ்வளவோ விஷயங்களில் புரியவைத்தும், இன்று மனதை மாற்ற முயற்சிக்கும் போது வந்து நின்றால்? என்ன செய்வது?
“என்னடா?” என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்த அவள் தந்தை கேட்க, சட்டென்று அந்த கார்டை மறைத்தவள், பூங்கொத்தை மட்டும் தந்தையிடம் நீட்டினாள்.
இவள் மறைக்க முற்பட்டதையும், இருவரின் பார்வையையும் பார்த்த சங்கீத், வாழ்த்து அட்டைக்காக கையை நீட்டினான். ஆம் சங்கீத்தை திலகா இன்றுதான் வீட்டுக்கு அழைத்துள்ளார்.
எந்த தயக்கமுமின்றி சங்கீத்திடம் கொடுத்தாள். துருவ் தான் முறைத்தான். இன்று வீட்டில் அனைவரும் இருப்பர் என்று தெரிந்தே இப்படி கார்டு அனுப்பினால் என்ன செய்வது? என்பது போல் இருந்தது இவளது பார்வை.
சங்கீத் வாழ்த்து அட்டையைப் பார்த்தான். நிமிர்ந்து இருவரையும் சந்தேக கண்ணோடு பார்த்தான். பின் எதுவும் பேசாமல் மாப்பிள்ளை வீட்டாரின் அருகில் அமர்ந்து விட்டான்.
எல்லாவற்றையும் யோசித்து தன் தங்கையையே சிறிது நேரம் பார்த்தான். இவர்கள் எல்லாம் ஹாலில் இருக்க அவள் மட்டும் அதே பெரிய ஹாலின் மற்றொரு மூலையில் இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தாள். அவள் முகத்தில் எந்த குழப்பமும் இல்லாமல், அவள் கையில் இருந்த சிற்றுண்டியை காலி செய்தாள்.
“எல்லாருக்கும் பிபி ஏத்திட்டு கூலா இருக்கிறதே இவ வேலை” என்று முணுமுணுத்த சங்கீத்,வந்திருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தான்.
அந்த கூட்டத்தில் இருந்து துருவ் மட்டும் தனியே வந்து, அவள் இருந்த டேபிளின் எதிரே அமர, மஹதி மற்ற அனைவரையும் பார்த்தாள். அவரவர் பேச்சு மும்முரத்தில் இருக்க, மாப்பிள்ளை என்று சொல்லப்பட்டவன் அடிக்கடி இவளைப் பார்த்தான்.
“அவங்க எல்லாம் போகட்டும். நாம் பேசிக்கலாம்” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள்.
“என்ன பேசணும்? நான் ஜஸ்ட் விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்” என்றதும்,
“அப்படியா பாஸ்??? வாய் மட்டும் தான் அப்படி சொல்லுது” என்று கொஞ்சமும் அசராமல் புன்னகையுடன் அவள் சொல்லவும், யாருமறியாமல் அவள் கையை பற்றி, மூடியிருந்த விரல்களை ஒவ்வொன்றாக பிரித்தவன்,
“சரி, என் கண் என்னெல்லாம் சொன்னதோ அதையெல்லாம் சொல்லு” என்று ஹஸ்கி குரலில் சொன்னான்.
“நீ எதுவும் சொல்லவே மாட்ட இல்ல?” என்று கோபமாகச் சொன்னவள், எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தாள்.
சின்க்கில் தண்ணீரை திறந்து முகத்தில் தண்ணீரை அடித்து, வாய்க்குள்ளேயே அவனை வறுத்துக் கொண்டிருந்த போது, எதிரே கைகளை கட்டியபடி நின்றிருந்தான். அவளும் அவனை போலவே கைகளை கட்டியபடி நின்று,
“நீ அடிக்கடி கேட்ப இல்ல. டூ யூ லவ் மீ மஹதி? அப்படீன்னு… எனக்கு எந்த கேள்வியும் இல்ல. உனக்கு என்னை பிடிச்சிருக்கு. நீ என்னை லவ் பண்ற. பட் உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டம் இல்ல” என்று நிறுத்தியவள், அவன் அமைதியான புன்னகையைப் பார்த்து, மேலும் கோபமடைந்தவளாக,
“எனக்கு கல்யாண பேச்சு நடந்தால் மட்டும் ஓடி வருவ. நாளைக்கே என்னை யாரோ மாதிரி ட்ரீட் பண்ணுவ.போதும்” என்று, கடைசி வார்த்தையை மிக அழுத்தமாக சொல்ல, புன்னகையுடன் அமைதியாக நின்றிருந்தான்.
சங்கீத் உள்ளே வரவும்,திகைத்த மஹதி, பின் தண்ணீர் க்ளாஸை துருவிடம் நீட்டி,
“தண்ணீர் கேட்டு வந்தார்” என்று சமாளிக்க முயற்சித்தாள். ஆனால் துருவ் பிரதீப்போ அவள் நீட்டிய க்ளாஸை வாங்காமல், அதே போஸிலேயே நின்று அவளை கூர்மையான விழிகளால் நோக்கியவன்,
“நான் என் மஹாவிடம் பேச மட்டும் தான் வந்தேன்” என்று சொல்லி வெளியேற முயன்ற போது, சங்கீத்திடம் திரும்பிய மஹதி,
“எனக்கு அந்த பையனை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குன்னு அம்மாவிடம் சொல்லு சங்கீத்” என்றவள் பார்வை துருவ் மீதே இருக்க, அவன் வழக்கமான குட்டிப் புன்னகையுடன் வெளியேறினான் என்றால் சங்கீத் மேலும் அதிர்ச்சியடைந்தான்.

“வெளியில என்ன நடக்குது தெரியுமா?” என்ற கேள்வியுடன். அனைத்தும் புரிந்தாலும் இவ்வளவு நாள் தவிக்க விட்டதாலோ என்னவோ இவளுக்கும் ஈகோ தலைதூக்க,
“இந்த மாதிரி மண்ணுளியோட ஒருநாள் இருக்க முடியாது” என்று வெளியேறி அவள் அறைக்குள் செல்ல முயல, “நீ வந்தவன் முகத்தைக் கூட பார்க்கல டி” என்றான் அவளை பின் தொடர்ந்த சங்கீத்.
நடக்கும் கூத்துகளையெல்லாம், அமைதியாக வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த துருவை ஒன்று வைக்கலாம் என்று தோன்றியது.
.
“நாங்க எல்லோரிடமும் கலந்து பேசி சொல்றோம்” என்று திலகா சொல்லவும் அதை ஏற்றுக் கொள்வது போல் அவர்கள் வெளியேற, அங்கே ஒரு நிசப்தம் நிலவியது.
அன்பரசி எழுந்து நின்று, இந்த மாதிரி தருணத்தில் தானும் மஹதியைப் பெண் கேட்டதற்காக, அங்கிருந்த அனைவர்களிடமும் கண்கள் கலங்க மன்னிப்பும் கோரினார்.
துருவ் வேகமாக வந்து, “வேண்டாம் அம்மா. எனக்காக எதுவும் கேட்க வேண்டாம்” என்று கையைப் பிடித்துக் கொண்டான்.
திலகாவைப் பார்த்து, “சாரி ஆன்ட்டி” என்று வெளியேறினான்.
சற்று நேரம் கழித்து கீழே இறங்கி வந்த மஹதிக்கு,
“துருவ், என் பையன் திலகா. என் மகனுக்கு உன் மகளை கொடுப்பியா” என்று ஜெயந்தி கேட்டது காதில் விழுந்தது. திலகா தன் மகளையே பார்த்து அமைதியாக இருந்தார். செந்தில், அன்பரசியும் எனக்கு சகோதரி தான் என்று உடனேயே சம்மதித்து விட்டார். திலகாவை தான் அனைவரும் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர்.
மஹதி, இந்த பேச்சில் எல்லாம் கலந்துக் கொள்ளாமல், சங்கீத்தை அழைத்து தனியாக வந்தாள்.
“என்னை எங்கேயாவது கூட்டிட்டு போ. விட்டால் அழுதிருவேன். பட் அவனை ஏற்றுக் கொள்ளவும் முடியல” என்று அவன் தோளில் சாய்ந்தாள்.
“இந்த ஈகோ ரொம்ப நாள் நிலைத்து இருக்காது மஹதி. இங்கே இருந்து யோசி” என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியதுடன்,
“நீ அவன் சைடும் யோசிக்கணும். ஏழுவருஷமா அவன் அன்பரசி அத்தையோடவும் பேசல. வீட்டுக்கும் போகல. ஏதோ ஒரு வகையில் நாமளும் காரணமாகிட்டோம். அத்தையும் மகன் சொன்னதும் அடுத்த ஃப்ளைட்ல ஓடி வராங்க. இப்படி ஒரு குடும்பத்தை விடுறதுக்கு ஒரு அண்ணனா எனக்கு மனசு வரல” என்று உள்ளே சென்று சாவியுடன் வந்தவன்,
“நீயே ஒரு ரவுண்ட் போயிட்டு வா. அப்புறம் வந்து சொல்லு” என்று இரு சக்கர வாகனத்தில் ஸ்டான்ட் எடுத்து திருப்பியும் கொடுத்தான்.
“அவள் சென்றதும் உள்ளே வந்தவனிடம் திலகா,
“ஏ!! அவளை வண்டியை எடுக்க விடுறதில்ல. நீ ஏன் கீ கொடுத்த?” என்று பதறவும்,
“அதெல்லாம் கேர்ஃபுல்லா வருவா மா” என்று சோஃபாவில் அமர்ந்தவன், ஜெயந்திக்கு கண்ஜாடை காட்டி, துருவ் பிரதீப்க்காக பேச சொன்னான்.

எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல்,வண்டியை செலுத்தியவளுக்கு,
“நான் என் மஹாக்கிட்ட பேச தான் வந்தேன்” என்ற துருவ் குரல் மிக அருகில் ஒலிப்பது போல இருக்க, ‘என் மஹா வா?’ என்றவளுக்கு தன்னையுமறியாமல் புன்னகை அரும்ப, அதே நேரம் கவனமின்மையால் வண்டி தடுமாற, ஓரமாக சென்று நிறுத்தினாள்.
மாலை நேர தெரு விளக்குகளின் ஒளியில் ஸ்கூட்டியில் சாய்ந்து தனியே நின்றிருந்தவள், காலையில் இருந்து நடந்தவை மட்டும் அல்லாமல், அவனின் பார்வையில் கலந்திருந்த காதல், அலுவலகத்தில் திட்டினாலும், அவள் மேல் காட்டிய அக்கறை, எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைத்து, தன் உள்ளங்கையை மூடி. மூடி திறந்து புன்னகையுடன் நின்றிருந்தாள்.
தன் அருகே கார் நிற்கவும் நிமிர்ந்து பார்க்க, ஓட்டுநர் இருக்கையில் துருவும் அருகில் அன்பரசியும் அமர்ந்திருந்தனர்.
“உன்னை ஸ்வாதி மேரேஜ்ல கேம்ல பார்த்தப்பவே, என் மகனின் மனசை பற்றி தெரிந்து கொண்டேன்மா” என்றார் அன்பரசி. துருவ் பிரதீப்பை கவனமாக தவிர்த்து அன்பரசியை மட்டும் பார்த்து புன்னகைத்தாள்.
சில நொடிகளிலேயே அன்பரசியிடம் தலையசைத்து விடைபெற்று வண்டியை எடுத்து, தன் வீட்டின் தெருவிலிருந்து மெயின் ரோட்டிற்கு வந்து விட்டாள். அவனும் விடாமல் அவளை பின் தொடர்ந்தான்.

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா – (கவிஞர் கபிலன்)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 20

அத்தியாயம் 20:

“ஃப்ளவர்ஸ் அப்படி ஒண்ணும் அட்ராக்டிவா இல்லையே” என்றான் துருவ். அவர்களின் ஸ்டுடியோவின் ஒர் இடத்தில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்க, கேமரா மேன் அருகே க்ரேனில் அமர்ந்திருந்தான். க்ரேன் அந்த கட்டிடத்தின் முதல் தளத்திற்கு நேராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
“சார்!! கேமரா வழியா பாருங்க” என்று செயற்கையாக செய்த பூக்களைக் காட்டி உதவி கலை இயக்குநர் ஒருவன் சொல்ல, கேமரா வழியாகப் பார்க்க, அதில் அவன் கண்டுக் கொண்டது மஹதியை.
கார்த்திக் எங்கே என்று விசாரித்து உள்ளே வந்துக் கொண்டிருந்தவள் பூக்களுடன் வந்த ஒரு பெண்ணின் கையை தெரியாமல் தட்டி விடவும், அவள் மீதே பாதி பூக்கள் விழ, கேமரா வழியாக கண்டுக் கொண்டிருந்தவனுக்கோ அந்த இடமே ஏதோ சோலைவனமாக காட்சியளித்து, ஒரு தேவதை போல் மஹதியைக் காட்டியது.
கேமரா வழியாக ஒருவன் தன்னை ரசிக்கிறான் என்று அறியாதவளோ, பூக்கள் கீழேக் கொட்டியதற்கு அந்த பெண்ணிடம் வருத்தம் தெரிவிக்க, அவளோ மஹதிக்கே சமாதானம் சொல்லி கார்த்திக் மேல் அறையில் இருப்பதாகச் சொல்லி அனுப்பினாள். வளைந்தார் போல் இருந்த அந்த படிக்கட்டுகளில் அவள் ஏற, ஏற துருவ் கேமராவில் இருந்து கண்களை எடுக்கவே இல்லை.
மஹதி, படிக்கட்டுகளின் முடிவில் இருந்த அறையை நோக்கி செல்லும் போது,
“க்ராஃபிக் டிஸைனர் சார், இது வி.ஆர்(virtual reality) கேமரா இல்ல” என்ற கேமரா மேன் குரலில் திரும்பிப் பார்த்தாள். இவள் திரும்புவதை அறிந்த துருவ், வேறுபுறம் பார்வையை திருப்பினான்.
அந்த இடம் முழுவதும் ஹாரிஸின் அழகான காதல் பாடல் வேறு நிறைந்திருந்தது. துருவ் அங்கே இருப்பதை அப்போது தான் கவனித்த மஹதி, கதவை திறப்பதற்காக கைவைத்து விட்டு கதவை திறக்காமல் நின்று அவனையேப் பார்த்தாள். சில நொடிகள் கடந்திருக்கும் அவன் திரும்பவே இல்லை.
இனி எங்கு காண முடியுமோ என்ற தவிப்பு அவளுக்குள் வர, அவனைப் பார்த்துக் கொண்டே அவனை நோக்கி நடந்தாள். அவள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து, அவளைப் பார்த்து ஆத்மார்த்தமாய் ஒரு புன்னகையை சிந்தினான். அந்த தளத்தின் முடிவில் இருந்த க்ரில் கம்பியை பிடித்தபடி அவளும் சிறு புன்னகையை உதிர்த்தாள்.
இத்தனை நாள் அவன் சொல்லாத வார்த்தைகளுக்கெல்லாம் அந்த புன்னகையும் அவன் பார்வையும் எதையோ சொன்னது போல் இருந்தது. அதே நேரம் சற்று நேரம் நீடித்திருந்த அவர்கள் புன்னகை நமக்குள் பேச எதுவும் இல்லை என்பதை சொன்னதாகவும் பட்டது. அவன் எதையும் பேச முயற்சிக்கவில்லை என்பதை உணர்ந்தவளும் அமைதியாக மீண்டும் கார்த்திக் இருப்பதாக சொன்ன அறைக் கதவை திறக்கும் போது,
“எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே” என்ற வரிகள் காதில் விழ மீண்டும் திரும்பி துருவைப் பார்த்தாள். அவன் தான் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த பாடலோடு இயைந்து பாடினான். அவன் கண்களை நேனோ செகண்ட் பார்த்தவள், உடனடியாக முகத்தை திருப்பி தனக்குள் சிரித்தபடியே உள்ளே வந்தவளை வியப்புடன் ஏறிட்டான் கார்த்திக்.
“ஹாய் கார்த்திக், நான் இன்னும் இந்த ப்ராஜெக்ட்ல இருக்கேனா” என்று உற்சாகமாக கேட்டவளைப் பார்த்து சிரித்தவன்,
“நீ பண்ணின வொர்க்கை நீதான் கம்ப்ளீட் பண்ணணும் சொல்லி, உன்னை வரவழைத்ததே, உன் லீட் தான்” என்றான்.
“அப்படியா?” என்று சிரித்தவளிடம்,
“இப்போ வெளியில் நடந்த சீனை, அங்கங்கே மானே தேனே போட்டு, என் படத்துக்கு யூஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன். காப்பிரைட்ஸ் கேட்க மாட்டியே” என்று கேட்க, டேபிளில் கடை பரப்பி வைத்திருந்த ஃபைல்களை எல்லாம் எடுத்து அவன் தலையில் போட்டாள். கண்ணாடியிலான கதவின் புண்ணியத்தில் துருவ் உள்ளே நடந்ததை பார்த்து சிரிக்க,
“ஹே லூசு!! அவன் இப்பவும் உன்னை தான் பார்க்கிறான். இன்னும் நீங்க லவ் பண்லன்னு சொன்னால் சின்ன குழந்தைக்கூட நம்பாது” என்று கார்த்திக் சொல்லவும் வெட்க புன்னகையுடன் அமர்ந்தவள்,
“இன்னைக்கு எப்படியாவது பேசுறேன்” என்றாள்.
“அதை செய். நம்ம பாட்டி சொந்தத்தில் உனக்கு பையன் பார்க்கிறதா உன் அருமை அத்தை காலையில் தான் சொன்னாங்க. சீக்கிரம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொன்னவன் அவள் அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் வேலைகளை பட்டியலிட்டான்.
அவளும் தன்னை மூழ்கடித்துக் கொண்டு நிமிர்ந்துப் பார்க்கையில் நேரம் மாலையை கடந்திருந்தது.
ஒரு வாரம் இவளும் வேலைக்காக வந்து செல்ல, அந்த டீமில் உள்ள அனைவரையும் பார்த்து விட்டாள். துருவை தவிர. அவ்வப்போது தொலைபேசியில் அனைவரிடமும் வேலை சம்மந்தமாக உரையாடுவான். அப்போது அமைதியாக அவன் குரலை மட்டும் கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கும் போது,
“நீங்க என்ன சொல்றீங்க மஹதி?” என்று இடையிட்டு அவளை நிகழ்வுக்கு கொண்டு வருவான். அவன் வராத காரணத்தை எப்படி யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. கார்த்திக்கும் வரவில்லை.
ஒரு விடுமுறை நாளில் கார்த்திக்கு அழைத்தாள்.
“அடப்பாவி!!! என் நம்பர் எல்லாம் உனக்கு தெரியுமா?” என்று கிண்டலடித்தான்.
“ஈவ்னிங் ஏதோ பொண்ணு பார்க்க வரதா சொல்றாங்க. நீ கூட சொல்லவே இல்ல”
“இந்த வயசில எல்லார் வீட்டிலும் நடக்கிற விஷயம் தானே” என்றான் கூலாக. அவனே துருவை பற்றி பேசுவான். அப்படியே எதேச்சையாக கேட்பது போல் பேச வேண்டும் என்றெண்ணினால், இவன் பொறுப்பு பொன்னம்பலமாக பேச, தலையில் அடித்துக் கொண்டாள்.
“கல்லை எடுத்து மண்டைய உடைச்சிடுவேன். அவன் எங்கேன்னு சொல்லு” என்று கடுப்படித்தாள்.
“சி.சி.எல். வரபோகுது இல்ல. சேப்பாக்கம் ஸ்டேடியம்ல சார் சில சினி ஆக்டர்ஸ்க்கு ட்ரையினிங் கொடுக்கிறான்”
‘வேலையை விட அவ்வளவு முக்கியமா?’ என்று கேட்டபடியே தன் ஸ்கூட்டியை எடுத்து, ஸ்டேடியத்திற்கு விரைந்தாள்.
CCL நடைபெறுவதையொட்டி ஆங்காங்கே வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் நடிகர்கள்.
“ஹோய்! இங்கே என்ன பண்ற?” என்றுக் கைகளில் இருந்த பந்தை ஒரு சுழற்று சுழற்றி விட்டு பவுலிங் போட்டான்.
“நீ இங்கே இருக்கிறதா கார்த்திக் சொன்னான்” அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு மட்டும் வந்தது. அவனோடு விளையாடுவன் ஓரிரு படங்களில் நடித்த இளம் நடிகன்.
“டேய் ஒழுங்கா பால் போடுடா… என்ன பொண்ணு வரவும் சீன்னா?” என்றான் கோபமாக.
“ஒழுங்கா விளையாட தெரியாமா நீ போடுற சீனை விடவா?… ”
“என்னடா இது போறேன்னு சொன்னவன் திரும்பவும் ஓடிவந்து பால் போடுறேன்னு சொன்னப்பவே நான் யோசிச்சேன்… இந்த பொண்ணுக்குக்காகதானா?”
இப்போது நக்கல் சிரிப்பை உதிர்ப்பது இவள் முறையாயிற்று. நண்பனை முறைத்து விட்டு,
“ஆமா, நீ ஏன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்க?” என்று மீண்டும் பந்தை சுழற்றினான்.
“உனக்கெல்லாம்?..” என்று தலையில் அடித்துக் கொண்டவள், படிக்கட்டுகளில் போய் அமர்ந்தாள்.
அவர்களுக்காக சாஃப்ட் டிரிங்க் எடுத்து வந்த பையனிடம், “இங்கே கேன்டீன் எங்கே இருக்கு?”என்றாள். அப்போதுதான் காலையில் சாப்பிடவே இல்லை என்பதே ஞாபகம் வந்தது.

“இப்போ கேன்டீன்லாம் க்ளோஸ் மேடம்… மேட்ச் நடக்கும் போதுதான் ஓப்பன் பண்ணுவாங்க… இங்கே ப்ராக்டிஸ் பண்ண வர ஆக்டர்ஸ்க்காக அவங்க நடிகர் சங்கத்திலிருந்து கேட்sடரிங் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க”
“ஓ” என்றவள், “சரி ஒரு கூல்ரிங்க்ஸ் எடுத்துக்கலாமா?” என்று கையை நீட்ட, அவன் வேகமாக ட்ரேயை பின்னுக்கு எடுத்துக் கொண்டு,
“மேடம் இது விஐபிஸ்க்கு” என்றுச் சொல்ல, துருவ் பிரதீப்பும் இந்த காட்சியை சற்று தூரத்தில் இருந்துப் பார்த்து சிரிக்க, அவன் வீசிய பந்தை சிக்ஸருக்கு விலாசி விட்டு அவன் நண்பன் அவனைப் பார்த்து சிரிக்க,
”துருவ்க்கு தர வேண்டியதை எனக்கு கொடுங்க” என்று எடுத்துக் கொண்டாள்.
“பணம் கொடுத்திருப்பாளோ? எப்படி கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தாங்க” என்ற யோசனையுடனே அவளை நோக்கி வந்தவன், அவனை கடந்து செல்ல போன பையனை நிறுத்தி தனக்கான கூல்ட்ரிங்க்ஸ் கேட்டப்போது, இப்போது அவனுக்கு தராமல் காரணத்தைச் சொல்ல, இவள் அவனை பார்த்து நாக்கை துருத்தி சிரிக்க, ஒருவித புன்னகையுடனே இவள் அருகில் வந்து அமர்ந்தான்.
“டேஸ்ட் பார்க்கணும்” என்று.
“இரு. லாஸ்ட்டா ஒரு ட்ராப் தரேன்” என்று அவள் மூச்சுவிடாமல் குடிக்க, “க்ளாஸ்ல ஒட்டியிருக்கிறது வேணாம்… உன்…” என்று அவள் உதட்டை கைக்காட்ட, அதிர்ச்சியில் வாயில் வைத்திருந்த பழச்சாறு உள்ளே இறங்காமல் சதி செய்து அதை தொடர்ந்த இருமலில், அவன் முகத்திலும் சில துளிகள் பட்டுவிட்டது.
“ரிசர்வ்டு பண்ணின இடம் உனக்கு கிடையாது?” என்றாள் வரவழைத்த தைரியத்துடன்.
“யாருக்கு ரிசர்வ் பண்ணியிருக்காங்க. உன் பாய்ஃப்ரெண்ட்க்கு தானே” என்று அவள் தோளைப் பற்றி மேலும் நெருக்கமாக அமர்ந்தவன், அவள் திகைப்பையும், படப்படப்பையும் ரசித்து விட்டு தள்ளி அமர்ந்தான்.
“இவ்ளோ பயம் இருக்கிறவ ஏன் கேர்ள்ஃப்ரெண்ட்ன்னு சொன்ன?” என்று மேலும் சிரிப்பாக கேட்டான். துருவ் கேர்ள்ஃப்ரெண்ட் என்று சொல்லிதான், இந்த பழச்சாறையே வாங்கினாள்.
“பசியில் பொய் சொல்லிட்டேன் இதுக்கெல்லமா இபிகோ செக்க்ஷன் கேட்ப?” என்று அசராமல் அவள் பதிலளிக்க, அதற்கும் சிரித்தவன், எழுந்து நின்று, “பொய் தானா?” என்று ஏக்கமாகக் கேட்டு அவளின் கண்களை ஊடுருவி ஆழமாகப் பார்த்தான்.
அவன் கண்களை துளைத்து விடுவது போல் கூர்மையாக பார்த்துக் கொண்டே எழுந்தவள், அவன் நிற்பதைப் பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்து விட, இவனும் பின்னாலேயே நடந்தான். அடர்த்தியான பின்னல் அவள் நடைக்கேற்ப அசைந்தாட அதை ரசித்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்தவன், திடீரென்று அவள் கையை பிடித்து இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் தோள் மேல் இடித்து, தன் நெற்றியை ஒரு முகச்சுளிப்பால் தேய்த்தவளை முழுவதும் தேய்க்க விடாமல் .கையை பற்றி இழுத்துக் கொண்டே ஸ்டேடியத்தின் உள்புறம் அழைத்துச் சென்று ஒரு தூணில் சாய்ந்தபடி நிற்க வைத்து, அவனும் அருகே நிற்க, இவளருகே நிற்பனை பார்த்து ஒருபுறம் திகைப்பாக இருந்ததென்றால், அவன் மூச்சின் வெப்பக்காற்றும் ஏதேதோ செய்தது.
அவள் தலைக்கு வெகு அருகே சுவற்றில் ஒருக்கையை வைத்திருந்தவனை ஒருவித நாணத்துடன் நிமிர்ந்துப் பார்த்தால், அவன் பார்வையோ வேறு எங்கோ இருந்தது.
ஒருவேளை கார்த்திக் வந்து விட்டானா? என்று அவளும் அவன் பார்வை போன திசையைப் பார்க்க எக்கிப் பார்க்க, அவன் தோளளவு இருந்த அவள் உயரம் சற்று வளர்ந்து அவன் இமைகள் வரை உயர, தன் உதட்டுக்கு வெகு அருகிலே இருந்த அவள் கன்னத்தைப் பார்த்தவன், கண்களை மூடி அவள் கன்னத்தில் முதல் முத்திரையை பதிக்க போக, அவள் சட்டென்று ஏதோ மாற்றத்தை உணர்ந்து திரும்பிய வேகத்தில் இதழில் பதிந்தது.
அதிர்ந்தவள் “டேய்!!!” என்று அவனை பின்னே தள்ளி விட, அவன் புன்னகையுடனே, “ஜீஸ் நல்லாருந்தது” என்று சொல்லவும், “ஹய்யோ” என்று தலையில் அடித்துக் கொண்டவளிடம்,
“ஏய் கேடி!!! நீதான் காட்டின “ என்று அவள் தாடையை அழுத்தி பிடித்து தன்புறம் திருப்பிக் கேட்டான்.
“வீட்டுக்கு போனவளை கைப்பிடித்து இழுத்து வந்துட்டு…” என்று அவள் முறைத்துக் கொண்டு, அவன் கையை தட்டி விட,
“அங்கே என் கேர்ள்ஃப்ரெண்ட்…. ”
“உன் கேர்ள்ஃப்ரெண்ட் வந்ததுக்கு நான் என்ன பண்றது?” என்று அவள் முடிக்க விடாமல் அவசரமாக சொன்னதும், குறும்பாக சிரித்து,
“என்ன பண்றது? எல்லோரும் உன்னை மாதிரி நல்லப் பொண்ணா இருப்பாங்களா?” என்றான்.
“என்னை எப்போ உன்னோட கேர்ள்ஃப்ரெண்ட் லிஸ்ட்ல சேர்த்த?”
சிரித்தப்படியே, “நான் எங்கே சேர்த்தேன்? நீயா க்யூவை ஸ்கிப் பண்ணி வந்துட்ட ” என்றவனை முறைத்தவள்,
“க்யூவா? நினைப்புதான்.யாரையாவது கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா? ”
“எங்க அம்மாவுக்கு இல்லாத கவலை உனக்கெதுக்கு?.. கண்டிப்பா பண்ணிப்பேன். எங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி டவுரி, அழகு எல்லாம் சேர்ந்து ஒரு பொண்ணை பார்ப்பாங்க… அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க்கிட்டு… ஒரு வருஷம் ஃபுல்லா ஹனிமூன் போவேன்… செலவு அவ அப்பா தலையில் கட்டிட வேண்டியதுதான்”
அவனை எரிச்சலுடன் பார்த்தவள்… “இதெல்லாம் ஒரு பொழப்பு’ என்க..
“என்ன பண்றது?… லவ் விட எனக்கு ரொமான்ஸ் நல்லா வருதே. வருது தானே?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டவனை முறைத்தவள்,
“உன் கேர்ள்ஃப்ரெண்ட் வந்தா எனக்கென்ன? நான் போகணும்” என்று கிளம்பும் போது,
“லூசு, எங்கே சொல்லவிட்ட? சங்கீத் வந்து இருக்கான்” என்று கையைப் பிடித்து நிறுத்தினான்.
“அண்ணனா?” என்று அதிர்ந்தவள், “வேற வழி இருக்கா?” என்று விழிகளை விரித்துக் கேட்டாள்.
“மேட்ச் நடக்கும் போது தான் ஓப்பன் பண்ணுவாங்க” என்று சொல்லி விட்டு, “நாம ஸ்வாதி மேரேஜ்ல மொட்டை மாடியில் ஒளிந்து இருந்து தான் ஞாபகம் வருது” என்று புன்னகைத்தான்.
“ஹோ அதெல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றாள் இகழ்ச்சியான முறுவலுடன்.
“ஏன் உனக்கு இல்லையா?” என்று எதிர் கேள்வி கேட்டதுடன், அவன் பார்வையும் அவளுக்கு ஒரு மாதிரியாக தோன்ற, பார்வையை திருப்பி சங்கீத்தை தேடினாள். அவன் இவர்களுக்கு எதிர்புறமாக சென்று விடவும் தன் அருகில் இருந்த துருவ் கையை தட்டி விட்டு நடந்தாள்.
“ஏதோ பேசணும் சொன்னமாதிரி இருந்ததே?” என்றவனுக்கு,
“உன்கிட்ட பேசி ஒண்ணும் ஆக போறது இல்ல? என்று வேகமாக நடக்க, அவளோடு இணைந்து நடந்தவன்,
“சரி இன்னைக்கு க்ளியர் பண்ணிடலாம்மா? நீ என்னை லவ் பண்றியா?” என்று அவள் முன்னால் சென்று அவளுக்கு இணையாக ரிவர்ஸில் நடந்தான்.
“இல்ல. இல்ல. இல்ல. உன்னை போய் யாராவது லவ் பண்ணுவாங்களா?” என்று கத்தினாலும், அவனாக சொல்வான் என்று மனம் எதிர்பார்த்தது என்னவோ உண்மை தான்.
கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களா உன்னையே சுற்றி வரும் பார்வை உனக்கு தெரியலையாடா’ என்று விழிகள் அவனை ஏக்கமாக பார்த்து விட்டு,
‘எவளோ ஒருத்தி முகம் காட்டாமல் பேசுறாளாம் அவளை லவ் பண்றாராம். இந்த ஜென்மத்தில் நீ அவளை கண்டுபிடிக்க முடியாதுடா’ என்றெண்ணியபடியே அவனை முறைக்க வீட்டில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

”என்னடி பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னதும் இரும்மா வந்திடுறேன்னு கிளம்பி போனவ இன்னும் ஆளையே காணோம்… என்ன விஷயம்? என்று தாய்க்கு உரிய பதைப்பில் திலகா கேட்க,
“வரேன்” என்று சொல்லிவிட்டு, நடக்க ஆரம்பித்த போது, கையை மட்டும் அவள் நடப்பதை தடுப்பது போல் நீட்டினான். அவள் நிற்கவும்,
“பதில் சொல்லு மஹா” என்றான். என்னடா சொல்லணும்? உனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் என் மனசு புரிய போறதில்ல என்று மனதிற்குள்ளேயே திட்டியவள்,
“எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ண போறாங்க” என்று சொல்லும் போதே அவளின் குரல் பாதி உள்ளே சென்று விட,
“கங்கிராட்ஸ் மஹா” என்று வாழ்த்துவதற்கு கையை வேறு நீட்டினான்.

காதல் இங்கே ஓய்ந்தது.. கவிதை ஒன்று முடிந்தது..
தேடும்போதே தொலைந்தது- (இயக்குநர் செல்வ ராகவன்)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 19

அத்தியாயம் 19:

சௌகார்பேட்டை திருமணம் என்றாலே இளையவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பர். அங்கு நடைபெறும் திருமணம் ஒன்றுக்கு அன்னை, தந்தை இருவரும் வருகைப் புரிவதாக சொல்ல, துருவும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தான்.
அலுவலகத்தின் உள்ளே போய் விட்டால், அவனுக்கு உலகமே மறக்கும் அளவுக்கு வேலைகள் இழுத்துக் கொள்ளும். ஞாயிற்றுக் கிழமைக் கூட சில இயக்குநர்கள் அழைத்து விடுவார்கள். ஆனால் இன்று முன்பின் அறிமுகமில்லா ஒரு திருமணத்திற்கு தனிமையில் வந்து மாட்டிக் கொண்டது போல் இருந்தது. தனிமையில் அவனுடைய முகம் தெரியாத நட்பின் ஞாபகம் வந்து விட்டது. கார்த்திக் கூடக் கேட்டு விட்டான்.
“மெசேஜ் வராதுன்னு சொல்லிட்டு மொபைலையே வெறிச்சு பார்த்தா என்னடா அர்த்தம்” என்று.
“அடிக்சன்” என்று புன்னகைத்தான், இருவருடங்களுக்கு முன் முதன் முதலில் பேசிய போது, ஏதோ காதலனுடன் சண்டை போடுவது போல் தான் ஆரம்பித்தாள்.
அது தற்செயலாக அவளுக்கு தவறான நபர் என்று தெரிவது போல், சில மன்னிப்புக்களைக் கேட்டு, அன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளை மட்டும் பேசினர். பின் போகப் போக உப்புச் சப்பில்லாத விஷயங்களை வெகு நேரம் பேசினர். நன்றாக பேச ஆரம்பித்த பின், அவன் தான் சொன்னான்.
“இனிமேல் நாம் நண்பர்கள். ஆனால் நானோ நீயோ உன்னைப் பற்றியோ என்னைப் பற்றியோ எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டாம்” என்று.
காலையில் அவன் தந்தையுடன் அந்த முகமறியா நட்பைப் பற்றி பேசும் போது,
“நீ தவறான ரூட்ல போயிருக்க” என்று சொல்லி, அவனின் யூகம் தவறு என்பதற்காக பெரிய விளக்கமே கொடுத்தார்.
‘கடத்த போறேன் வேற சொல்லி வச்சிருக்கேன். எப்படி எல்லாவற்றையும் சரி செய்வது? ஒரே ஒரு பதில் வந்தால் போதும்’ என்று அவ்வப்போது கைபேசியையே பார்த்தான்.
“என்ன துருவ்? நாங்களும் உன்னை இப்படி ஏதாவது விஷேஷத்தில் தான் பார்க்க முடியுமா” என்று வந்தமர்ந்தார் ரத்தூர்.ஹிந்தியிலேயே தொடர்ந்தது இவர்களது உரையாடல்கள். “டாட்” என்று புன்னகைத்தவனிடம்,
“வேலை வேலைன்னு புனே பக்கமே வரது இல்ல. நிஜமாவே வேலையா இல்லை அவாய்ட் பண்றியானு உனக்கு மட்டும்தான் தெரியும். உன்னை ஏதாவது சொன்னால் நீதான் நான் அப்படி இல்லன்னு ப்ரூவ் பண்ணணும். அதை விட்டுட்டு?” என்று தோளில் கைப்போட்டப் படிக் கேட்டார்.
“எப்படி டாட் ப்ரூவ் பண்றது? பெட்ரூம் கேமா வச்சிருப்பாங்க? நீங்க நம்பின மாதிரி அவங்களும் நம்பியிருக்கணும்” என்று விரக்தியாகச் சொல்ல, அவன் கைகளை பற்றியவர்,
“உன் ஜெயந்தி அம்மா சொந்த ஊரை விட்டு சென்னை வந்ததே அன்பரசி அழுகையைப் பார்த்து தான். உனக்கு தெரியும் தானே நீ 8த் படிக்கிறப்ப உன் அம்மா நேஷனல் லெவல இன்டீரியர் டெகரேஷனுக்காக அவார்ட் எல்லாம் வாங்கியிருக்கா. இருந்தும் உன்னிடம் ஹெல்ப் கேட்கிறான்னா” என்றதும், அவருக்கு பதில் சொல்லாமல் வரவேற்பிற்காக நின்றிருந்த மணமக்களைப் பார்த்தான்.

கார்த்திக்கின் நிச்சயதார்த்த்திற்கு வந்த அன்பரசி, விடாமல் அழுக, அப்பொழுதும் அவன் மன்னிக்க வில்லை. காலப் போக்கில் மறந்து, அன்று பெரிதாக தோன்றிய விஷயம் இன்று ஒன்றுமே இல்லாததாக தோன்ற,
“உன்கிட்ட பேசாமல் எங்கே போக போறேன்?” என்று அன்பரசியை அன்பாக அணைத்திருந்தான். ஆனாலும் முன்பு போல் இல்லாமல் ஏதோ ஒரு தயக்கம் இருந்துக் கொண்டே தான் இருந்தது. அதை நன்கு அறிந்த ரத்தூர், இப்போது மனைவிக்காக பேசுகிறார்.
அன்றைய நிகழ்வுகளின் தாக்கத்தில் உதட்டோர முறுவலுடன் அமர்ந்திருந்த துருவ் பிரதீப்பிடம்,
“நீ அந்த பொண்ணை லவ் பண்றியா?” என்று அவர் நேரடியாகக் கேட்டதும், ஒருவித அதிர்வுடன் பார்த்தான்.
அவனுக்கே எப்படி இதை விளக்கமாகச் சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை அவன் தந்தையிடம் மஹதி விஷயம் தவிர அனைத்தையும் பகிர்ந்திருக்கிறான்.

அவன் பதில் சொல்வதற்குள், மணமக்களின் பின்னால் இருந்த திரையில் ஓடிக் கொண்டிருந்த காட்சிகள் அவனை ஈர்த்தது.
“இது வீடியோக்ராபர் பண்ணதா?” என்றான் ஆச்சரியத்துடன். அதற்குள் மகனும், கணவனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அன்பரசியும் வந்துவிட்டார் அவர்களிடம்.
“என்னடா ரெக்ரூட்டிங்கா? கல்யாண பொண்ணு மல்ட்டி மீடியா படிச்சிருக்கா. இந்த பொண்ணை தான் உனக்கு பேசலாம் நினைச்சோம். நீதான் காதில் போட்டுக்கவே இல்லையே” என்றார் அன்பரசி.
“அம்மா!!! இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த பொண்ணுக்கு மேரேஜ். நீ பாட்டுக்கு எதையாவது சொல்லிட்டு இருக்காதே” என்றவன் கல்யாண பெண்ணின் திறமையை மனதிற்குள்ளேயே வியந்து விட்டு, பின்னால் இருந்த எல்.ஈ.டி திரையை பார்த்து,
“நைஸ் வொர்க்” என்றான்.
“கார்த்திக் கல்யாணம் முடிஞ்சதும் உனக்கு பொண்ணு பார்க்கணும்ன்னு அக்கா சொல்லிட்டு இருந்தாங்க. தமிழ் பொண்ணு ஒகே தானே உனக்கு” என்றதும்,
“எனக்கு ஓகே” என்று ரத்தூர் சொல்ல, அன்பரசி அவரை முறைக்க, இருவரையும் பார்த்த துருவ் சிரித்தான். ஏனோ இந்த வயதிலும் குறையாத காதலுடன் இவர்கள் இருப்பதைப் பார்த்ததும், அவனுக்கு மஹதி ஞாபகம் தான் வந்தது.
இருந்தாலும் நேரில் பார்த்ததில் இருந்து சற்று அசைத்து தான் பார்க்கிறாள். அவளுக்கு இனி என் வாழ்வில் இடமில்லை. அவளால் அடைந்த அவமானம் போதும் என்றுதான் இருந்தான். இப்போது அவள் கண்ணீருடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய காட்சியை கேமரா உதவியுடன் பார்த்த மனம் சற்று வலிக்க தான் செய்தது.
“இன்னா செய்தாரை ஒறுத்தல்ன்னு ஒரு குறள் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதை நினைக்கும் போது உன் ஞாபகம் தான்டா வருது” என்றார் அன்பரசி.
“அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லமா” என்று நிறுத்தி சற்று இடைவெளி விட்டவன்,”சங்கீத் ஆஃபீஸ்க்கு வந்திருந்தான்” என்றான்.
“தேங்க்ஸ் சொல்லவா” என்றார் அன்பரசி ஆர்வமாக.
“அவனா? சொல்லிட்டாலும்..” என்று சிரித்தவன்,
“அப்படிதான் வந்திருப்பான் போல. ஆனா ஈகோ இடம் கொடுக்காமல் திட்டிட்டு போனான்” என்றான் சிரிப்பை நிறுத்தாமல்.
“மற்றவங்களுக்காக இவ்வளவு யோசிக்கிற உனக்கு நல்ல வாழ்க்கை தான் அமையும்” என்று மனதார வாழ்த்தினார். அன்பரசி இப்படிச் சொல்லவும்,
‘மஹதியிடம் பேசி விடலாமா?’ என்று ஒரு நிமிடம் யோசித்தான்.
அன்று ஒரு நாள் மாலையில் கார்த்திக்கை கோயிலில் சந்திக்க போகிறாள் என்றதும், அடித்து பிடித்து ஓடி வந்தான். கார்த்திக் ஏதோ சொல்ல, மஹதி அவனை பார்த்த பார்வை இன்றும் அவன் மனதில். சற்று தடுமாறியவன் மீண்டும்,
‘வேண்டாம்!! அன்று சங்கீத் சொன்ன சொற்கள் எல்லாம் உண்மையாகி விடும்’ என்று விட்டு விட்டான். ரத்தூர் அவன் தோளை தட்டி,மேடைக்கு அழைத்துச் சென்றார்.
மேடையில் புகைப்படங்கள் எடுத்த பின், மணப்பெண் சோஹனிடம் “நீங்க பண்ண வொர்க்கா? ரொம்ப நல்லாருக்கு” என்று பின்னால் இருந்த எல்.ஈ.டி திரையைக் காட்டி துருவ் பிரதீப் கேட்க,
சோஹன் மறுப்பாக தலையசைத்து, “என் ஃப்ரெண்ட்” என்று சொல்லி விட்டு, மணமக்களை வாழ்த்த வந்த வேறொருவரிடம் பேச ஆரம்பித்தாள். இப்போது திரையில் சாரட்டில் மணமகன் மணமகளை அழைத்துச் செல்வது போல் இருந்தது. அதைப் பார்த்த துருவ் பிரதீப்,
“இதுவும் நல்லாருக்கு. ஆனா உங்க இரண்டு பேர் முகம் மாதிரி இல்லையே” என்றான் ஆராய்,ச்சியுடன்.
“இது சும்மா மாடல் வச்சு பண்ணது” என்றதும் புன்னகையுடன் விடைப்பெற்று கீழே இறங்கி வந்து அமர்ந்தான். மீண்டும் அந்த காட்சியைப் பார்த்தான். அந்த மணமகன் உருவம் நெருக்கமான முகம் போல் அவனுக்கு தோன்றியது. சற்று நேரம் யோசித்து உற்று பார்த்தவன்,
“ஹோ மை காட்!!! என் ஃபோட்டோவை மாடலா வச்சு பண்ணியிருக்காங்க” என்று இருக்கையை விட்டே எழுந்து விட்டான்.
மணப்பெண்ணிடம் சென்று கேட்க, அவள் ஒரு அறையை சுட்டிக்காட்டினாள். அந்த அறையை நோக்கி செல்ல செல்ல, யாராக இருக்கக் கூடும் எதிர்பார்ப்பு அவனுக்குள் அதிகமாகியது.
‘ஒருவேளை அந்த முகமறியா நட்புக்கு இதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ?’ என்றுதான் முதலில் நினைத்தான்.

கூடல் நகரான மதுரையில் அரண்மனை போல் தோற்றமளித்த மண்டபத்தில் மணமகள் அறையில், காயத்ரியின் காலை எடுத்து தன் மடியில் வைத்து பெடிக்யூர் என்ற பெயரில் அவளை ஒரு வழி செய்தாள் மஹதி.
“என் காலை ஏன் தொடுற? வேண்டாம்” என்று தயக்கத்துடன் மறுத்தாலும், மஹதி விடவில்லை. காயத்ரியின் மணாளனை பார்த்ததிலிருந்து, அவருடைய ஆளுமை, தானே முன்நின்று திருமண வேலைகளை செய்வது, பெண்களிடம் கண்ணியப் பார்வை, தெளிவான திட்டமிடல் இதெல்லாம் தன் தோழியின் வாழ்க்கையைப் பற்றி கவலையை சற்று தள்ளியது.
அவளின் மாமியார் ஒவ்வொரு நகையையும் எத்தனை சவரன் என்று குடைந்தாலும், அவர் மகன் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியும் வந்தது. இப்படி ஒருவனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சிறு வயதில் நினைத்திருக்கிறாள். ஆனால் இந்த குணநலன்களை எல்லாம் எதிர்பார்க்காமலே எப்படி தான் மனதிற்குள் வந்தானோ அந்த நல்லவன்? என்று துருவையும் நினைத்தாள்.
“ஹ்ஹ்ம்.. உன் லவ் ஸ்டோரியை சொல்லு. ஃபர்ஸ்டவே இரண்டு பேரும் தனியா நைட் டிராவல் பண்ணியிருக்கீங்க. செம ரொமான்ஸ்னு சொல்லு” என்று சொல்லவும் நிமிர்ந்துப் பார்த்து பொய்யாக முறைத்தாள்.
“ஆமா!! நான் தான் நாய்குட்டி மாதிரி அவன் பின்னாடியே சுத்திருக்கேன். அவனுக்கும் அப்போ இன்ட்ரஸ்ட் இருந்திருக்கும் போல. இப்போ சான்ஸ் இல்ல” என்று சலிப்புடன் சொல்ல,
“ஹே உன் சேஃப்டிக்காக, வேணும்னே காரை ரிப்பேராக்கிட்டு வந்துருக்காரு. அது மட்டுமா நீ அடித்தாலும் பேசாமல் வாங்கிட்டு நிற்கிறாரு. நீ கொலஸ்ட்ரால் ஏறி போய் வண்டி ஸ்டேண்ட் போடாமல், கீழே விழுந்ததற்கு துடிச்சு போய் ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கார். ஒண்ணுமில்லன்னா சொல்ற”
“அவன் ஃபோன்ல இருக்க பொண்ணு தான் வேணும்னு இருக்கான். நீ வேற”
“யாருக்காவது ப்ராப்ளம் வந்தால் நாம் ஈஸியா சொல்யூசன் சொல்லுவோம். பிரச்சனையை தள்ளி வைத்து பார்க்காமல், நமக்கு வந்தால் யோசிக்க தெரியாமல் தடுமாறுவோம். துருவ் மஹதியை தான் லவ் பண்றார்”
“ஒருநாள் நீ ஸ்பெஷல்ன்னு சொன்னான். இன்னொரு நாள் நான் அவன் பக்கத்திலேயே இருந்து பார்த்தேன். என் மெசேஜை அவன் எப்படி மிஸ் பண்ணினான்னு”
“ஹே!!! சில்லியா இருக்கு. இப்போ ஹரி பேப்பர் போட்டால் நாம் அவனை மிஸ் பண்ண மாட்டோமா?” என்று சர்வ சாதாரணமாக ஒரு உதாரணத்தை சொல்லவும், ஆழ்ந்த யோசனையுடன் நிமிர்ந்துப் பார்த்தாள்.
காயத்ரி, தன் கையில் இருந்த சமோசாவை அவளுக்கு ஊட்டி விட, அதை மென்றபடியே அந்த அறையிலுள்ள பால்கனிக்கு சென்றாள்.
“ஏன்டி உன்னைய நம்பி சுடுதண்ணியை காலில் ஊத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்” என்ற புலம்பல்கள் அவள் காதை சென்று அடைய புன்னகைத்தாள்.

அப்பொழுது தான் ஹரி அவளுக்கு அழைத்தான். இவள் எடுத்து காதில் வைத்ததும்,
“ஹே மஹி!!! உன் ஆளு சூப்பர்டி” என்றதும், வாயில் இருந்த சமோசா மூச்சுக்குழலில் சிக்கிக் கொள்ள, இருமிக் கொண்டே இருந்தாள்.

சற்று நேரத்திற்கு முன் சென்னையில், துருவ் கதவில் கைவைக்க போக, அது திறந்துக் கொண்டது. உள்ளே ஹரி லேப்டாப்புடன் அமர்ந்து இருந்தான்.
“ஹாய், தமிழா?” என்றுக் கேட்டு ஹரியிடம் தன்னை அறிமுகப் படுத்தி கொண்டவன்,
“இந்த அனிமேஷன் வொர்க் நீங்கதான் பண்ணீங்களா” என்று அந்த அறையில் இருந்தே தெரிந்த மேடையை சுட்டிக் காட்டினான்.
“ஆமாம்” என்றவனிடம்
“இதற்கு முன் நீங்க என்னை பார்த்து இருக்கீங்களா?” என்ற துருவ்க்கு மறுப்பாக தலையசைத்த ஹரியிடம்,
“வெல். அப்புறம் எப்படி என் முகத்தை மாடலா வச்சு பண்ணியிருக்கீங்க?”
ஹரிக்கு கோபம் வந்து விட்டது.
“சார்!! நான் ஏன் உங்களை வச்சு பண்ண போறேன். உங்க மனபிரம்மைக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது”
“நீங்க சொல்ற கதையெல்லாம் அனிமேஷன்ஸ் க்ராபிக்ஸ் தெரியாதவங்க நம்புவாங்க” என்றதும், துருவ் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தான் ஹரி.
ஏதோ சற்று புரிவது போல் இருந்தது. ஏனென்றால் நேற்று இரவு முழுக்க இதே இடத்தில் அமர்ந்து இதை செய்ததே மஹதி தானே!!! ஆனாலும் முன்பின் தெரியாதவனிடம், ஒரு பெண்ணை பற்றி எப்படி சொல்வது என்று யோசித்து,
“சார்!! நான் சொல்றது தான். இதுக்கு மேலே பதில் சொல்ல முடியாது” என்றான் அழுத்தமாக.
ஹரியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே, அவன் அருகே இருந்த ஒரு சுருட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளை தாளை எடுக்க, அதில் துருவ் முகம் வரையப்பட்டு இருந்தது. ஹரி வெளிறிய முகத்துடன் துருவைப் பார்க்க, அவன் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் வெளியே வந்து விட்டான்.
‘ஒருவேளை இதை செய்தது மஹதிதானோ’ என்ற சந்தேகம் ஏற்பட, கார்த்திக்கை அழைத்தான்.
அவன் மறுபுறம் கைபேசியை எடுத்ததுமே,
“மஹதி எதுக்கு 2 டேஸ் லீவு கேட்டாங்க” என்றான்.
“டேய்!! ஃபோன் பண்ணினால் ஹலோ சொல்ற வரை வெயிட் பண்ணணும். வேற யாராவது அட்டென்ட் பண்ணியிருந்தால், மகனே சேந்தமங்கலமே சேர்ந்து செஞ்சிருவாங்க பார்த்துக்கோ”
“ஊருக்கு போயிருக்கியா?” என்றான் அமைதியாக.
“ஸ்வாதி வீட்டுல ஒரு ஃபங்க்ஷன். அதான் வந்திருக்கேன். மஹதி ஃப்ரெண்ட் மேரேஜ்ன்னு மதுரை போயிருக்கா. விரட்டி விட்டு என்னடா அக்கறை?” என்றான் கார்த்திக்.
“ஒரு படம் ரிலீஸ் பண்ண முடியாமல் இருக்கு. இன்னொரு படம் ரிலீஸ் டேட் ஃபிக்ஸ் பண்ணி இருக்கு. உனக்கு யார் லீவு கொடுத்தா?” என்று துருவ் பிரதீப் கேட்க,
“நைட் ஃப்ளை ஏறுறேன்டா. இம்சை” என்று சொல்ல, மறுமுனையில் துருவ் சிரித்துக் கொண்டான். அந்த படத்தில் கதாநாயகிக்கு பிண்ணணி குரல் பெண் துருவ் பிரதீப்பால் சென்று விட, டிவி ரியாலிட்டி ஷோவில் பாடகி வாய்ப்பு தேடி வந்த ஒரு புதுப் பெண்ணை அவனே தேர்ந்தெடுத்து, இதோ இறுதி கட்ட வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
துருவ் பிரதீப் பேசியதை கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்த ஹரி, உடனேயே மஹதிக்கு அழைத்து விட்டான்.
“ஏ லூசு!! உன் ஆளு செம” என்றதும், சமோசாவை விழுங்கிக் கொண்டிருந்தவளுக்கு புரை ஏறியது. ஒருவாறாக அனைவரையும் சமாளித்து இருமிக் கொண்டே தனியே வந்தவள்,
“என்னடா சொல்ற?” என்றாள். அங்கே ஹரி, க்ராஃபிக்ஸ் டீம் லீடை அறை விட்டதாக சொன்னது, காயத்ரி யாரவன் என்றுக் கேட்டதற்கு மறுத்து பேசாதது, இப்போது அவன் தோழி ஒருத்தியின் திருமண வரவேற்பிற்காக மஹதி செய்த க்ராஃபிக்ஸில் அவன் படத்தை மாடலாக வைத்தது என்று அனைத்தையும் சரியாக பொருத்திக் கொண்டான்.
“நான் உனக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்துட்டா என்ன பண்றதுன்னு நான் பண்ணதா சொல்லிட்டேன். பட் அவருக்கு உன் மேலே சின்னதா சந்தேகம் வந்துருக்கு. இன்னும் என்னெல்லாம் பண்ணிருக்க” என்று இங்கு நடந்த அனைத்தையும் அவளிடம் விவரிக்க, என்ன ஆகுமோ என்று இவளுக்குள் தான் பயபந்து உருண்டது. இனியும் தாமதிக்காமல் அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.
அவனாக கண்டுபிடித்தால் குடும்பத்தில் அனைவரிடமும் சொல்லி, அவன் கோபத்தை தீர்த்துக் கொள்ளக் கூட வாய்ப்பு உண்டு.
“நீ எப்போ வர? காயத்ரி திட்டிட்டே இருக்கா”
“மேரேஜ் 7.30க்கு முடிந்ததும் உடனே பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறி மார்னிங்க் வந்து விடுவேன்” என்றான்.

கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
– (கவிஞர் கண்ணதாசன்)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 18

அத்தியாயம் 18:

அந்த கல்லூரியில் தான் இளங்கலை படித்ததாக சொல்லியிருக்கிறான் துருவ்.
லைப்ரரியில் எடுத்த புத்தகத்தில் அவனுடைய பெயர் ஓரிடத்தில் பேனாவால் எழுதப்பட்டு இருக்க, அந்த பெயரை விரல்களால் வருடியவளுக்கு, அவனுடைய நினைவுகள் வந்தது. இன்னும் என்னை ஞாபகம் வைத்திருப்பானா? ‘இந்நேரம் படித்து முடித்து இருப்பான். எங்கே இருப்பான்? வெளிநாட்டிலா? இந்தியாவிலா?’
எப்படி இருக்கிறானோ? என்று யோசித்தவள், லைப்ரரியனிடம் அவனைப் பற்றிக் கேட்க, அவர் கதை கதையாக சொன்னார். இவனுக்காகவே அன்றிலிருந்து அந்த கல்லூரியின் அலுவலக ஆட்கள் வரை நட்பு பாராட்டினாள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அவனைப் பற்றி சொல்லும் போது, அவளுக்கு சுவாரசியமாக இருக்கும். சலிக்காமல் கேட்டுக் கொண்டிருப்பாள்.
அவன் தந்தை புனேவில் பெரிய தொழிலதிபர் என்பது ஞாபகத்திற்கு வர, இரவு 6 மணியிலிருந்து 8 வரைதான் அவர்கள் கேம்பஸின் கம்ப்யூட்டர் லேப் பிரவுசிங்க்காக திறந்து வைக்கப்படும். அன்றிலிருந்து தினமும் ரத்தூர் என்ற அவனது தந்தையை பற்றி தேடுவது தான் அவள் முதன்மையான வேலையாக இருந்தது.
ஒரு வழியாக தேடி கண்டுபிடித்தாலும், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று புரியாமல் தவித்தாள். மஹதியின் சிறு வயதில், ஸ்வாதி கார்த்திக் உடன் பேசும் போது, நான்கில் ஒரு வார்த்தை துருவ் பற்றியதாக இருக்கும், இப்பொழுதெல்லாம் அந்த பெயர் இவர்கள் வாயில் இருந்து வர தவமாய் இருக்கிறாள். அவர்களும் இவளை சோதித்தனர்.
அவனை எங்கேயாவது பார்த்திட மாட்டோமா என்று நிறைய நாட்கள் ஏங்கியிருக்கிறாள். அவனுடன் பேசிய நிமிடங்கள் இன்று வரை அவள் உள் மனதின் பொக்கிஷங்கள்.

ஆனால் சற்றும் எதிர்பாராமல் அவனை சந்தித்தது, டைடல் பார்க் அருகே நடந்த அந்த ஷீட்டிங் ஸ்பாட்டில் தான். முதலில் சற்று திகைத்தவன் பின் அவளை முறைத்து விட்டு, அவளுக்கு முன்னே படிகட்டுகளில் இறங்க ஆரம்பித்தான். அவனை பின் தொடர்ந்தவளுக்கு அவனின் விலகல் ஏன் என்று புரியவில்லை
கீழே பஸ்டாப்பில் டைரக்டர் ஹீரோயின் சம்மந்தபட்ட காட்சிகளை விளக்கி கொண்டிருந்தார். அவரருகே கையில் க்ளாப் போர்டுடன் நின்றிருந்தான் கார்த்திக். உன்னிப்பாக நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
ஹீரோயினிடம் பேசிவிட்டு, கார்த்திக்கிடம் திரும்பியவர் எதுவோ சொல்ல, வேகமாக தலையசைத்தான். சிறுவயதில் அடித்துக் கொண்டோம் என்பதால் எதிரிகள் இல்லையே. அவனைப் பார்த்ததும் நின்றவள், அந்த காட்சியை 4, 5 முறை எடுக்கும் வரை நின்றாள். ஏற்கனவே மாநிறமாக இருந்தவன் வெயிலில் இன்னும் கருப்பாக தெரிந்தான். வேலையும் நிறைய போல. சற்று அலுப்பாக இருந்தவன் சரியாக க்ளாப் அடிக்கும் போது அவளைப் பார்த்து விட்டான்.
அவனுக்கே அது சற்று மதிப்பு குறைவாய் தோன்றியிருக்கும் போல… பெரிய கல்லூரியில் பி.இ முடித்துவிட்டு… அவன் நண்பர்கள் ஐடி கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்கி கொண்டிருக்கும் போது தான் மட்டும் இப்படி இருக்கிறோமே என்று. அதிலும் டைடல் பார்க என்பதால் காலையில் இருந்து நிறைய நண்பர்களை பார்த்து விட்டான். வேறொருவனிடம் க்ளாப் போர்டை தந்து விட்டு, அவள் நிற்கும் இடத்திற்கு வந்து விட்டான்.
அதற்கு நேர் மாறாக இருந்தான் துருவ். வெயிலில் நின்றால் கூட அவன் நிறத்தின் பளபளப்பு சற்றும் குறையாது, அவன் சரும பொலிவைப் பார்த்தால் பெண்களுக்கே சற்று பொறாமை வந்து விடும்.
“என்ன அத்தை பையன விட்டு என்னை சைட் அடிக்கிற” என்று அவளருகில் நின்றிருந்த துருவ் கேட்டான்.
“அவனை அடிக்கடி பார்க்கலாம்.. உன்.. சாரி உங்களை தான் பார்க்க முடியாது” என்று வெட்கபடாமல் பதிலளித்தாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்த கார்த்திக்,
“ஏ வாலு! டெல்லியில் இருந்து எப்போ வந்த? டெல்லில ஏதோ பெரிய கம்பெனியில் இன்டர்வியூன்னு அத்தை சொன்னாங்க்” என்றான்.
“அது ஊத்திக்குச்சு” என்று கொஞ்சமும் கவலைபடாமல் சொன்னவள்,
“ஒழுங்கா சாப்பிடுறியா. டல்லா இருக்கியேப்பா?” என்று கரிசனத்துடன் கேட்க,
அதெல்லாம் மூணு நேரமும் நல்ல சாப்பாடு மஹதி… அது ஒண்ணுதான் என்று கவலையுடன் சொல்ல,
“சரி இன்னைக்கு ஒருநாள் எங்களோட சாப்பிடலாம் வா”
அவன் மறுப்பாக தலையசைக்க, இவள் பிடிவாதமாக நிற்க, கடைசியில் இவள் அன்புதொல்லையால் சிறிய இடைவேளை விட்ட டைரக்டரிடம் சொல்லிவிட்டு அவளுடன் கிளம்பினான்.
“இவ என் ஸ்கூல் ஃப்ரெண்ட் நிரஞ்சனா” என்று அறிமுகப்படுத்தி விட்டு, தோழியிடமும் அறிமுகப்படுத்தி பேசிவிட்டு,
“ஹோ அத்தை பையனா” என்று அவளை ஓட்டிவிட்டு உணவருந்த அமர்ந்தனர்.
“நீ பார்த்த வளர்ந்த புள்ள நல்லா சம்பாதிக்குதுன்னு உன்னை சொல்லியே திட்டுறார்” என்று சற்று கவலை தோய்ந்த குரலில் கார்த்திக் சொன்னப் போது, இவளுக்குமே பாவமாகதான் இருந்தது.
“ஜெயந்தி அத்தை என்ன பண்றாங்க ..”
“உங்க ஜெயந்தி அத்தை அனுப்புற பணத்தில் தான் லைஃபை ஓட்டிட்டு இருக்கேன். முன்னாடி வொர்க் பண்ணின டைரக்டரோட மகன் ப்ரோடியூசர்.. போன்னு சொல்லவும் போனேன்.. அவன் முழுக்கதையும் கேட்டு நல்லா இல்லைன்னு அனுப்பிட்டான்.. அப்புறம் பார்த்தால் அவனே டைரக்டரா அந்த படத்தை பண்ணிட்டான் . திரும்ப க்ளாப் அடிக்க வந்துட்டேன்” என்று கார்த்திக் சொல்ல அவன் சொன்ன படம் சற்று திரைக்கதை சொதப்பலாக இருந்தாலும் நல்ல கதைக்கரு என்றெண்ணி கொண்டாள்.
“ஏன் உன் ஃப்ரெண்ட்க்கு சினிமாவில் நண்பர்கள் இருப்பார்களே” என்று கேட்கும் போதே கார்த்திக் பின்னால், இவளை முறைத்தப் படியே வந்து நின்றாள்.
‘முறைப் பையனே சும்மா இருக்கான். இவன் ஏன் முறைச்சு முறைச்சு பார்க்கிறான்’ என்று குழப்பத்துடன் பார்க்க, இவள் கண்கள் போன திசையைப் பார்த்து கார்த்திக்கும் திரும்பினான்.
கார்த்திக்கிடம், “இது வச்சிருக்க ஃபுட் கூப்பன்ல சாப்பிட்டே தான் ஆகணுமா?” ‘பெட்ரோமாக்ஸே தான் வேணுமா’ மாடுலேஷனில் கேட்டதும், இவளுக்கு கோபம் வர,
“உங்களை யாரும் விருந்துக்கு அழைக்கல. பெஸ்ட் ஃப்ரெண்ட் சான்ஸ் கிடைக்காமல் கஷ்டப்படுறாரேன்னு கவலை இல்ல. வந்துட்டாரு” என்றாள். கார்த்திக்கை கோபத்துடன் துருவ் பார்க்க,
“மஹதி, நான் தான் வரச் சொன்னேன். டிராஃபிக்ல ஆஃபீஸ் ரீச் ஆக 3 மணி ஆகிடும். அதான் சாப்பிட கூப்பிட்டேன்” என்று கார்த்திக் சொல்ல, கார்த்திக் கையில் ஏதோ ஒரு சாவியைக் கொடுத்து விட்டு, அமைதியாகவே நகர்ந்தான். உள்ளம் கனற்று கொண்டிருந்தது.
“ஏன் இப்படி பண்ற மஹதி? நாளைக்கு எனக்கு பர்த்டே.இன்னைக்கே அட்வான்ஸ் விஷஸ் சொல்லி, ஒரு பைக் வாங்கிக் கொடுத்தான். அதை கூட நிம்மதியா கொடுக்க முடியாத மாதிரி பண்ணிட்ட” என்று ஒட்டுமொத்த தவறையும், அவள் மேல் சுமத்தி விட்டு கார்த்திக்கும் விரைய, இங்கு என்ன நடந்தது? என்று ஆராய மனமின்றி, மஹதியும் சோர்ந்து போய் அமர்ந்தாள்.

மறுநாள் சரியாக 1 மணி ஆன போது அவனை சந்திக்கும் ஆவல் வர, நேற்று சண்டையில் ஆரம்பித்ததை இன்று சமாதானத்தில் முடிப்போம் என்ற முடிவுடன், நிரஞ்சனாவுக்கு அழைத்து “ஷீட்டிங் பார்ப்போம் வா” என்றாள்.
“நேத்து வந்த பொண்ணு செகண்ட் ஹீரோயினா? ஃபீமேல் லீட் இன்னைக்கு தான் வந்திருக்காங்க. எங்க ஆஃபீஸே இங்கே தான் இருக்கோம். என் டீம் பசங்க ஈஈஈன்னு நிற்கிறானுக.” என்று மறுமுனையில் சொல்லவும், புன்னகையுடன் கிளம்பினாள்.
அங்கே துருவை எதிர்பார்த்து வந்தவளுக்கோ ஏமாற்றம். அவன் இல்லை. கார்த்திக் இருந்தான்.
கிடைத்த இடைவேளையில் மஹதியைப் பார்த்து கை அசைத்து அருகில் வந்தான் கார்த்திக்.
“உன் ஃப்ரெண்ட் இல்லாமல் தனியா இருப்பது பெரிய விஷயம்?” என்று கார்த்திக்கை கிண்டல் செய்வது போல், துருவை பற்றி அறிய முயற்சித்தாள்.
“கிராஃபிக்ஸ் டிஸைனர்க்கு இங்கே என்ன வேலை? கேமரா மேனோட டிஸ்கஷன்க்கு வந்திருப்பான்” என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி நின்றிருந்த யூனிட் ஆட்களை பார்த்திருந்தான்.
அப்போது நிரஞ்சனா, கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, அப்போது தான் மஹதிக்கு ஞாபகமே வந்தது. இவள் சொல்ல முற்ப்பட்ட நேரம் இயக்குநரின் அழைப்பில் ஓடி விட்டிருந்தான். சில காட்சிகள் திரும்ப திரும்ப எடுக்கபட, ஒரு கட்டத்தில் சலிப்படைந்தவள், தனியாக சென்று அங்கிருந்த படிக்கட்டுகளில் அமர, மீண்டும் கார்த்திக் வந்தான். இப்போதும் அவனுடைய பிறந்த நாளை மறந்து விட்டவள், துருவ் மூலமாக எதுவும் முயற்சிக்கவில்லையா என்றுக் கேட்டாள்.
“அவனுக்கு என் மேல் நம்பிக்கை வரப்ப நிச்சயமா ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கிறான். இன்னும் நான் கத்துக்கணும் நினைக்கிறான் போல” என்று நட்பை விட்டுக் கொடுக்காமல் பேச, அவளுக்கு கோபம் வந்து விட்டது.
அவனைப் பற்றி ஏதாவது சொன்னால், இவனுக்கும் கோபம் வந்து விடும் என்று அமைதியாகவே விடைப் பெற்றாள். அப்போது அவனுடைய பிறந்த நாள் ஞாபகம் வர, அலுவலகத்தில் விடுப்பு எடுத்து விட்டு நேரே சங்கீத்தின் அலுவலகத்திற்கு தான் சென்றாள். இன்று எப்படியாவது யாரிடமாவது வாய்ப்பு வாங்கி கொடு என்று தவமாய் தவமிருக்க, கார்த்திக்கை காதலிக்கிறாள் என்று தவறாக நினைத்து விட்ட சங்கீத், தன் அன்னை திலகாவிடம் இது குறித்து விவாதித்தான்.
“கார்த்திக் நம்ம வீட்டு பையன். எனக்கு பரிபூரண சம்மதம்” என்று சொல்லியதும், தன்னுடைய நட்பில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கு அழைத்து பேசினான் சங்கீத். நிறைய தயாரிப்பாளர்கள் புது இயக்குநர் வேண்டாம் என்று சொல்லி விட்டனர்.
கிட்டதட்ட மதியம் ஆரம்பித்த தேடல் இரவாகியும் முடிவுக்கு வரவில்லை. இரவு உணவு வேளையின் போது தன் இயக்குநரிடன் பேசிக் கொண்டிருந்தவன் தற்செயலாக புது இயக்குநர் வாய்ப்பு பற்றி கேட்க, அவர் தான் தயாரிப்பாளரை தேடுவதை விட, இப்போது உச்சத்தில் இருக்கும் சில நடிகர்களிடம் முயற்சி செய்தால் போதும். நல்ல கதையாக இருந்தால், அவர்களே க்ரூ ரெடி பண்ணி கொடுத்துடுவாங்க என்று சொன்னதுடன், ஒரு கதாநாயகனின் பெயரை சொல்லி, நேற்றுக் கூட நல்ல ஸ்க்ரிப்ட் கேட்டார் என்று சொல்லி விட, உற்சாகத்துடன் கார்த்திக்கு அழைத்து, பிறந்த நாள் வாழ்த்துடன் விஷயத்தை கூறினாள்.
மறுமுனையில் கார்த்திக்கும் எவ்வளவு சந்தோஷத்தில் இருப்பான் என்பதை அலைபேசியின் வாயிலாகவே அவளால் உணர முடிந்தது. அன்றைய இரவு இனிதாக செல்ல, காலையில் மஹதியை அழைத்து கோயிலுக்கு வர சொன்னான் கார்த்திக்.
“உன் அத்தம்மா கோயிலுக்கு போயிட்டு போக சொல்றாங்க. நீயும் வடபழனிக்கு வா மஹதி” என்றதும், அவளால் மறுக்க முடியவில்லை. ஆனால் உடனேயே குமரனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்து விடவும், தன்னுடைய முதல் வேலை என்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக போயிற்று.
துருவுக்கு சென்னையில் தனியாக வீடு இருக்கிறது. அந்த வீட்டில், அவனுடன் தான் கார்த்திக்கும் தங்கியிருந்தான். நேற்றிலிருந்து நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சங்கீத் அளவிற்கு திரைத்துறையில் நணபர்கள் இல்லை. வேலையை முடித்துக் கொடுப்பதோடு சரி. யாருடனும் நெருங்கி பழக மாட்டான். கார்த்திக் குளியலறையில் இருக்கும் வேளையில் மஹதி தன் சூழலை சொல்வதற்காக, அலுவலகத்தில் இருந்து அவனை அழைக்க, எடுத்து பேசியது துருவ் தான்.
கார்த்திக் வெளியே வந்ததும், “ஏன் மஹதியை கோயிலுக்கு வர சொன்ன?” என்றான்.
“நேத்து அம்மா, திலகா அத்தைட்ட பேசும் போது, இந்த படம் முடிந்ததும் இரண்டு பேருக்கும் கல்யாணம்ன்னு பேசிக்கிட்டாங்களாம்” என்று வெட்கத்துடன் சொன்னவன், “அவகிட்ட இதைப் பற்றி பேசலாம்ன்னு நினைக்கிறேன்” என்று கேசுவலாக சொன்னதும், ஒரு நிமிடம் திகைத்து நின்ற துருவ்,
”ஈவ்னிங் வரேன்னு சொன்னா” என்று மட்டும் சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு சென்றான்.
மாலை நேர மஞ்சள் வெயிலில் முகத்தில் அடிக்க, கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தாள் மஹதி. கார்த்திக் இன்னும் வரவில்லை. கதை சொல்வது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லையே. அந்த நடிகருக்கு பிடிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் நிற்க, கார்த்திக் முக மலர்ச்சியோடு வந்தான். அவன் முகமே அங்கு நடந்ததை விவரிக்க,
“கங்க்ராட்ஸ்” என்றாள்.
“தேங்க்ஸ் மஹி. தேங்க் யூ சோ மச்” என்று சந்தோஷத்தில் திக்கு முக்காடினான்.
“சாரி கார்த்திக்!! மார்னிங் வர முடியல” என்று பேசியப்படியே நடந்த போது,
“பரவாயில்ல” என்றவன், “மஹதி! இந்த மன்த் என்ட் பூஜை போட போறாங்க. படத்தை 6 மாசத்தில் முடிச்சிடுவேன். அப்பா என்னை நேற்றுக் கூட திட்டினாரு. இப்படி பொறுப்பில்லாமல் ஊர் சுத்திட்டு இருந்தால் எப்படிடா மஹதி வீட்டில போய் கேட்பேன்னு… இன்னைக்கு அவர்க்கிட்ட சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவார்” என்று அவன் சொன்னப் போதுதான் அவளுக்கு சட்டென்று துருவ் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
“வேண்டாம்! அப்புறம் இந்த கையை விடவே கூடாதுன்னு தோணும்” இப்படி மறைமுகமாகக் கூட காதலை சொல்வார்களா? முன்னப்பின்ன காதலிச்சிருந்தா தெரிந்திருக்கும். நமக்கென்ன தெரியும் என்று எண்ணியவளின் விழிகள் அவளையுமறியாமல் துருவை தேடி அவனைக் கண்டுக் கொண்டது. அவனும் இவளையேத்தான் பார்த்து, அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டே இருந்தான்.

துருவைப் பார்த்தவள், கார்த்திக்கு தக்கப் பதில் சொல்லாமல், “ஏன் அவன் இப்படி பேசுறான்?” என்றுக் கேட்டதும், கார்த்திக் அப்போது தான் துருவைப் பார்த்தான்.
இவன் எப்போது வந்தான்? என்றெண்ணியபடி, மஹதியின் புறம் திரும்ப, இருவரும் ஒருவரையொருவர் நிமிடங்கள் கடந்தும் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
கார்த்திக் மஹதியை தான் திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் பெரியவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தான். அதே நேரம் மஹதியை மறுக்கவும் அவனுக்கு ஏதும் காரணங்கள் இல்லை. இப்பொழுது மனம் சற்று ஏமாற்றமடைந்தது என்னவோ உண்மை. அதை மறைத்து,
“நீ எப்படிடா இங்கே?” என்றான்.
“குட் நியூஸ் சொல்லிருக்க. நேரில் பார்க்கணும் தோணுச்சு. கங்கிராட்ஸ் டா” என்று கைக் கொடுத்து தோளில் தட்டி அருகில் நிற்கும் மஹதியைப் பார்க்க, அவள் சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து விட்டு வேறுபுறம் திரும்பினாள்.

“முருகனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்துடுறேன்” என்று துருவ் செல்ல, கார்த்திக் மஹதியை உற்று நோக்க, அவள் செல்லும் அவனையே பார்த்து நின்றிருந்தாள்.
“ஸ்வாதிக்கா மேரேஜ்ல பார்த்தப்ப நல்லா பேசுவான். இப்போ என்னவோ தெரியல. அவாய்ட் பண்றான்” என்று சொல்லு போதே. அவள் கண்கள் கலங்கி விட, கார்த்திக் அறியாமல் மறைக்க எண்ணிய முயற்சி வீணானது. இதற்கு மேல் ஒருவன் அவள் காதலைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பானா?
“உனக்கு தெரியாதா?” என்று கேட்டு மடமடவென்று ஸ்வாதி கல்யாணத்தில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
தன்னால் ஒருவன் உறவுகளை விட்டு தனித்து இருக்கிறானா? என்பதே அவளுக்கு பேரதிர்ச்சியாக, கார்த்திக் அதனால் தான் சங்கீத்திடன் நேரடியாக எந்த உதவியும் பெற தயங்குகிறான் என்றும் புரிந்தது.

‘அந்த பாவம் தானோ என்னவோ? சங்கீத்தை எங்கள் வீட்டில் இருந்து பிரித்ததோ!!! என்று இப்போதும் கூட நினைப்பாள்.
சங்கீத் தன் உடன்பிறந்த சகோதரனாக இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களை பேச தயக்கம். என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அதற்காக ஒருவனை வீடு வாசல் இன்றி தவிக்க விடுவதற்கு, நாம் காரணம் ஆகலாமா? என்ற இந்த சிந்தனையே, வீட்டினரிடமிருந்து அவளை ஒதுக்கியது.
“ஏன்டி நாலு கேள்வி கேட்டால் ஒரு கேள்விக்கு பதில் சொல்ற என்னாச்சு?” என்று பின்னாடியே வந்து பார்த்தும் அவனிடம் சரியாக பேச வில்லை..
“என்னாச்சு ?” என்று திலகாவும் கேட்டு கேட்டு அலுத்து விட்டார்.

துருவை எப்படியாவது இதிலிருந்து வெளிகொண்டு வரவேண்டும். முதலில் அவனை மனது விட்டு பேச வைக்க வேண்டும். நிறைய யோசித்தாள்… கார்த்திக்கை தவிர யாரும் அவனருகில் நெருங்க கூட முடியாது. அதுவும் நான் போய் நின்றால் அவ்வளவுதான்.. நிச்சயமாக அவன் கோபத்தை எல்லாம் என்னிடம் தான் காட்டுவான்.
அவன் இன்றும் என்னைக் காதலிக்கிறானா? அவனைப் போல் வெளிப்படையாகக் கேட்கவோ, ஆமாம் என்றுச் சொல்லவோ தயக்கமாக இருந்தது. முதல்நாள் எதுவுமே தோன்றவில்லை.
இரண்டாவது நாள் ஒரு புதிய நம்பரில் இருந்து பேசிப் பார்த்தால். என்ன?.. ஏன்று மட்டும் யோசித்தாள். மனதை இறுக்கமாக வைத்திருக்கும் சிலர் தன்னை அறியாத மூன்றாம் நபரிடம் மனம் விட்டு பேசுவர் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருந்தாள்.
அப்பொழுதுதான் அவன் பிறந்த நாள் வந்தது. கல்லூரி லைப்ரரியனிடமிருந்து வாங்கிய மெயில் ஐடியில், அவனுக்காகவே ஒரு வாழ்த்து செய்தியை தயாரித்தாள். அவளை பொறுத்துவரை அனிமேஷனில் முதல் ப்ராஜெக்ட் அது தான்.
பின்னர் காயத்ரியிடம் கேட்டு, அவளுடைய சொந்தத்தில் உள்ள வயதான பாட்டியின் அடையாள அட்டையை பயன்படுத்தி அவனுக்கு பேசுவதற்காக மட்டுமே மொபைல்,சிம்கார்ட் எல்லாம் புதிதாக வாங்கினாள்.
காயத்ரியும் கார்த்திக்காக என்றெண்ணி, “என்னை எதிலும் மாட்டி விட மாட்டியே” என்று தன் பாட்டியின் தகவல்களை கொடுத்தாள். முதல் பாலே சிக்ஸர்க்கு அனுப்பிவிடுவது போல் நன்றாக யோசித்து களத்தில் இறங்க வேண்டும். ஏனென்றால் அலட்சியம் அவன் பிறவிகுணமாயிற்றே!

வேண்டி மாட்டிக்கொண்டேன்.. உன்னில் மாட்டிக்கொண்டேன்
கவிதைக்குள் குழப்பம் போல.. உன்னில் மாட்டிக்கொண்டேன்
-(கவிஞர் மதன் கார்க்கி)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 17

அத்தியாயம் 17:

மறுநாள் காலை கல்யாணம் என்பதால் அங்கு வேலை செய்ய வந்த சிலர் அந்தாக்சரி ஆரம்பிக்க, வீட்டினரும் சிலர் இணைந்துக் கொண்டனர். அதில் கலந்து கொள்ளும் நாட்டமின்றி, தனிமையில் அமர்ந்திருந்த மஹதியை பார்த்த ஜெயந்தி, அந்த கூட்டத்திலிருந்து தனியே வந்து, அவள் முகத்தைப் பார்த்து “என்னடா” என்று வினவ,
“சங்கீத்தை பிரிந்து இரண்டுநாள் கூட ஆகல அத்தம்மா. அதுக்குள்ள மிஸ் பண்றேன்” என்று அவர் மடியில் தலை சாய்த்து படுத்தாள். உண்மையில் அவளுக்கு ஏதோ இனம்புரியா கவலை வந்தது. அதற்கு சங்கீத் தான் காரணமாக இருப்பான் என்று அவளாகவே காரணம் சொல்லிக் கொண்டாள்.
“அவன் எப்பவும் ஊருக்கு வரமாட்டேன்னு ஒரு ரீசன் வச்சிருப்பான். இப்போ யுனிவர்சிட்டி எக்ஸாம் வேற. கிளம்பிட்டேன்னு கால் பண்ணான். நாளைக்கு அவனோட சரிக்கு சரியா ஆட்டம் போடணும் தானே. போய் படு” என்று அழைத்தவரிடம், “நீயும் வா அத்தம்மா” என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள,
“அது சரி.இன்னைக்கு தூங்கினா கதை கந்தல் தான். நீ போய் தூங்குடி என் ராசாத்தி” என்று பேசிக் கொண்டே அறை வரைக்கும் வந்து ஸ்வாதி அறையின் கதவை தட்டினார். ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து தட்டியும் தூங்கவில்லை.
“நாங்க எல்லாம் அந்த காலத்துல கல்யாணம்ன்னா ஒருவாரத்துக்கு பயத்துல தூங்க மாட்டோம். நல்லவன் தானான்னு கவலை ஒரு பக்கம், பிறந்த வீட்டை விட்டு போறோமேன்னு கவலை ஒரு பக்கம்ன்னு…கீழே இந்த கத்து கத்துறப்ப இவளுக்கு எப்படி தூக்கம் வருதோ?” என்று மகளை கடிந்துக் கொண்டவரிடம்,
“விடுங்க அத்தம்மா. நான் கீழே வந்து படுத்துக்கிறேன்” என்றாள் தூக்க கலக்கத்திலேயே.
“கீழே ஆளுங்க வேலைப் பார்க்கிறாங்க.உன்னை தூங்கவிடமாட்டாங்கடா. நீ போய் கார்த்திக் ரூம்ல தூங்கு”
‘கார்த்திக்கா’ என்று தயங்கியவளிடம்,
“அவனும் அக்கா கல்யாணத்தை வச்சிக்கிட்டு நைட் தூங்க மாட்டான். துருவும் காலையில் தான் தூங்க வருவான். நான் சொல்லிக்கிறேன். போ” என்றார். இவள் தான் துருவ் பிரதீப் இதே அறையில் தான் தங்குவானா? என்று மேலும் தயங்கி நின்றாள்.
“வேணாம் அத்தம்மா” என்றவளுடன், “அவன் சும்மா வம்பிழுப்பாடா. அதுக்கு போய் பயந்துக்கிட்டு” என்று சொல்லும் போதே, அவளன்னை திலகா,
“அண்ணி, ஒன் அவர் தூங்கிட்டு வரேன்” என்று சொல்லியபடியே வரவும், இருவரையுமே கார்த்திக் அறைக்கு அனுப்பி விட்டு ஜெயந்தி வேலையைப் பார்க்க சென்று விட்டார். மஹதியும் தன் அன்னை இருக்கும் தைரியத்தில் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.
அந்த பெரிய கட்டிலில் இவள் ஒருபுறமும், திலகா ஒருபுறமும் உறங்க இவள் விழித்தபடி, கோடைகாலத்தில் மெதுவாக சுழலும் மின்விசிறியை பார்த்திருந்தாள். ஸ்வாதி அறையில் ஏசி இருக்கும். ‘இங்கே துருவ் தங்கியிருந்தால் நிச்சயமாக ஏ.சி.இருந்திருக்கும்’ என்று எப்படியோ தேடி ஏ.சியை ஆன் செய்து விட்டாள்
பின் சிறிது நேரத்திலேயே குளிரவும், இழுத்து போர்த்தி நன்றாக உறங்கி விட்டாள். காலையில் எழுந்ததும், சங்கீத் வந்திருப்பானே’ என்று ஓடிவர, அவனை சுற்றி நின்று ஜெயந்தியும், திலகாவும் திட்டிக் கொண்டிருந்தனர்.

கதவை திறந்து தன் தங்கையை காண ஆவலுடன் ஓடி வந்த அவனை வரவேற்க ஆளின்றி நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாளே என்று கதவை வேகமாக தட்டினான்.
ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். அந்த அறையில் இருந்து வெளியே வந்தது துருவ்.
“ஹோ சாரி! நான் என் தங்கையை தேடிவந்தேன்” என்று ஸ்வாதியின் அறைக்கு செல்ல, அவளோ இப்போது தான் வருவதா என்று கடிந்து கொள்ள, அவளிடம் பேசிவிட்டு,மஹதி எங்கே என்று வினவினான்.
“தெரியலயே. இங்கே வரலயே” என்றதும், மீண்டும் போய் திலகா முன் நிற்க, கார்த்திக் ரூம்ல தான்டா தூங்கிட்டு இருக்கா.. ஏஸியை அதிகமா வச்சிட்டு நடுங்கிட்டு இருந்தா. நல்லா போர்த்திவிட்டு தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு, ஏதோ ஒரு பொருளை குறிப்பிட்டு,
“அண்ணி! மண்டபதுக்கு அனுப்பீட்டீங்களா” என்றார். இவர்கள் வேலை செய்வதை பார்த்து விட்டு, மீண்டும் மாடியேறி மேலே வந்தான் சங்கீத். கார்த்திக் அறையில் தட்ட போக, அது அவசியமின்றி திறந்துக் கொண்டது. உள்ளே அந்த பெரிய கட்டிலில் துருவ் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான்.
இவள் எங்கே சென்றிருப்பாள்? என்று சலிப்புடன் கண்களை சுற்றி வந்தவன், திடீரென்று திகைத்து துருவ் அருகில் இருந்த போர்வையை சற்று விலக்கி பார்த்தான். அங்கே, மஹதி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, இவனுக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை. துருவ் அருகே சென்றவன், “டேய்” என்று, நன்றாக உறங்கியவன் முகத்தில் ஒரு குத்துவிட்டான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த துருவ், அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தான். இரவு முழுவதும் தூங்காமல் இருந்தவனுக்கு முற்றிலும் தூக்கம் கலையவில்லை. கண்களை தேய்த்து அவன் கண்ணை திறக்க முயற்சித்த அடுத்த நிமிடத்தில் மீண்டும் ஒரு குத்துவிட,
அதேநேரத்தில் தன் சகோதரி மகள் திருமணத்திற்காக வந்த அன்பரசி, ஜெயந்தியிடம் நலம் விசாரித்து விட்டு, மகன் துருவ் பிரதீப் சிங்கை தேடி மேலே வந்தார். சங்கீத் தன் மகனை அடிப்பதைப் பார்த்து விட்டு,
“டேய் யார்டா நீ? ஏன் என் பையனை அடிக்கிற?” என்று ஆவேசமாக உள்ளே நுழைந்தார்.
“நீங்க தான் இந்த தறுதலை பெற்றவங்களா? இவன் பண்ணி வச்சிருக்க வேலையை பாருங்க” என்று அருகில் படுத்திருந்த தன் தங்கையை காட்டினான். இவ்வளவு நேரமும் ஏதோ போர்வை இருக்கிறது என்று நினைத்திருந்த அன்பரசிக்கு, சங்கீத் சொல்லவும் தான் போர்வைக்குள் இருந்த உருவம் புலப்பட, ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி தன் வாயை பொத்தி, அதை வெளிக்காட்டாமல் கலக்கத்துடன் துருவை பார்க்க, அவனுக்கு இன்னும் அருகில் ஒரு உருவம் இருப்பது புலப்படவில்லை. கதவை திறந்து போட்டு படுக்கவும் கல்யாண வீட்டில் ஏதாவது திருடு போய்விட்டதோ, என்று யோசிக்க ஆரம்பித்து,
“இப்ப என்னாச்சு மா” என்றான் கூலாக.
“என்னாச்சா?” என்று அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்தவர், “இது ஒண்ணும் அமெரிக்கா இல்லடா. சேந்தமங்கலம்” என்று சொன்னவர், தன் முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்கும் போது தான், தான் செய்த விபரீதத்தை உணர்ந்தான்.
திலகா மூன்று மணிக்கு எழுந்து, வெளி தாழ்ப்பாளை போட்டு விட்டு செல்லவும், ஐந்து மணிக்கு மொட்டை மாடியில் இருந்து கீழே வந்த துருவ், கார்த்திக் வெளியே சென்றிருக்கான் என்றெண்ணிக் கொண்டு, படுக்கையில் வந்து விழுந்து விட்டான். ஒட்டடை குச்சி போல் இருந்தவள் தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி படுத்திருந்ததால், அவனுக்கு மஹதி படுத்திருந்தது தெரிந்திருக்கவும் இல்லை. திருமண வீடாக இருப்பதால் ஏதாவது வைத்திருப்பார்கள் என்று நினைத்து ஒரு ஓரமாக படுத்துக் கொண்டான்.
சங்கீத் தோன்றிய வார்த்தைகளால் அவனை வறுத்துக் கொண்டிருக்க, அன்பரசியோ தலையில் அடித்து அடித்து அழுதுக் கொண்டிருந்தார். இருவரையும் மாறி மாறி பார்த்தவன், எதுவும் பேசாமல் தன் துணிமணிகளை எடுத்து டிராவல் பேக்கில் அனைத்தையும் திணித்து விட்டு, சங்கீத்தை காண்பித்து,
“அவனை விடுங்க. உங்களுக்கு என்னை தெரியாதா?” என்றுக் கேட்டு விட்டு, அவரின் அதிர்ந்த முகத்தை கண்டுக் கொள்ளாமல் வெளியேறி விட்டான். இந்த ரணகளத்திலும், குதுகலமான கனவுகளுடன் உறங்கி கொண்டிருந்தாள் மஹதி.
மண்டபத்திற்கு தேவையான பொருட்களை சரிப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தி, கையில் பையுடன் வந்தவனை பார்த்து விட்டு,
“அம்மாவை பார்க்கலயா துருவ்” என்றார். அவரிடம் பதில் சொல்லாமல் வெளியேற போனவன், பின் திரும்பி வந்து, “ஸ்வாதிட்ட சாரி சொல்லிடுங்கம்மா” என்று அவர் அழைக்க, அழைக்க நிற்காமல் சென்று விட்டான்.
சற்று நேரத்திலேயே பின்னாலேயே ஓடிவந்த அன்பரசியிடம் என்னவென்று வினவ, அவர் அழுதுக் கொண்டே நடந்ததை சொல்லிவிட்டு, “நான் போய் அவனைப் பார்க்கிறேன்” என்று ஓட்டமும் நடையுமாக விரைந்தார்.
ஜெயந்தி அதிர்ச்சியில் நிற்க, அன்பரசி பேசியதை அரைகுறையாய் கேட்ட திலகாவும் அதிர்ச்சியுடன், “ஹய்யோ மஹதி” என்று ஓலமிட்டு, தன் மகளை காண செல்ல முற்பட,
“ஏய் திலகா. ஒண்ணும் நடக்கல” என்று திலகாவின் வாயை மூடி, “இது கல்யாண வீடு. நம்ம மூச்சு விட்டாலும் நம்ம பொண்ணுக்குதான் கெட்ட பெயர். பேசாம இரு” என்றபோது,
“நான் அப்பவே சொன்னேனே அண்ணி. அந்த ஓடுகாலி மகனையெல்லாம் வீட்டில் சேர்க்காதீங்கன்னு” என்று ஜெயந்தியின் தோளில் குலுங்கி அழ,
“போதும் நிறுத்துங்க” என்றார் அன்பரசி. எதையோ மறந்து விட்டு எடுக்க வந்தவர் திலகாவின் பேச்சில் கோபமுற சொன்னார்.
“அன்பு சண்டை வேணாம்டா” என்று ஜெயந்தி அவர் கையை பிடிக்க,
“இன்னும் எத்தனை நாளைக்கு அக்கா இப்படி சொல்வாங்க? அவனும் தெரியாமல் தான் ..” என்று மேலும் அழுகை வர பாதியிலேயே நிறுத்தி விட்டார். அப்போது ஸ்வாதி மேலிருந்து,
“அம்மா! நான் குளிச்சிட்டேன். யாராவது குளிக்கணும்ன்னா இந்த பாத்ரூம்க்கு வர சொல்லுங்க” என்று சத்தமாக சொல்ல, தன் மகளின் திருமணத்தில் இப்படி நடக்கிறதே என்று சோகத்தை வெளிப்படுத்தியவாறு அவர் பார்க்க, திலகாதான், ஸ்வாதியின் சந்தோஷம் தங்களால் கெட்டுவிடக்கூடாது என்று முன்னே வந்து, “நீ போய் தலையை காய வைடா. வரேன்” என்று அனுப்ப முற்படும் போது,
“அன்பு சித்தி!” என்று ஆர்ப்பரித்தவள், “எப்போ வந்தீங்க?” என்றாள் குதூகலமாக.
விரக்தி கலந்த சிரிப்பை அவளறியாமல் உதிர்த்து விட்டு, ஸ்வாதியிடன் கடமைக்கு சென்று பேசினார் அன்பரசி.
சங்கீத் வந்ததும், திலகா மஹதியை பற்றிக் கேட்க,
“பாம் வெடிச்சா கூட தூங்குவா போல” என்று திட்ட,
“அவளுக்கு தெரிய வேணாம். சின்ன பொண்ணுடா” என்று திலகா சொன்னபோதே, ஜெயந்தி சங்கீத்தை திட்ட, வெளியில் பூட்டி விட்டு வந்து விட்டு யாரிடமும் சொல்லாமல் விட்ட திலகாவோ தன் தவறை அறியாமல்,ஜெயந்தியிடம் தன் மகனுக்காக பரிந்துக் கொண்டு வந்தார்.
“மஹதிக்கு ஒண்ணுன்னா இவன்தான் பார்க்கணும்” என்று.
ஜெயந்திக்கு துருவ் இன்னொரு மகன் போல். தன் மகனின்றி மகளின் திருமணம் நடக்கிறதே என்ற கவலை இருந்தாலும், ஸ்வாதி திருமணமும் மாப்பிள்ளை வீட்டாரும் நன்றாக அமைந்ததில் சற்று ஆறுதலாக இருந்தது.
திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே, “ஒரு வாரமா லீவ் போட்டேன் , நிறைய வேலை இருக்கு. நாங்க கிளம்புறோம் அண்ணி” என்று சிடுசிடுத்த முகத்தோடு திலகா வந்து நிற்க,
“பசங்களுக்கு லீவுதானே விட்டுட்டு போலாமே.” சொல்லி முடிப்பதற்குள்,
“போதும் அண்ணி ஒருவாரம் இருந்ததற்கு எங்களுக்கு கிடைத்தது போதும்” என்று சொல்லிவிட்டு, பின் அன்பரசி மேல் உள்ள கோபத்தை இவர் மேல் எதற்கு காட்டிக் கொண்டு என்று நினைத்த திலகா,
“உங்க தம்பி இரண்டு நாள் இருப்பார். நாங்க போறோம். ஸ்வாதி சென்னையில் தானே ஃப்ளைட் ஏறுவா. அப்போ பார்க்கலாம் அண்ணி” என்று தன் பிள்ளைகளை கிளப்ப தயாரனார். ஜெயந்தியும், அந்த பக்கம் அழுதுக் கொண்டே போன அன்பரசியையும், இந்த பக்கம் முறுக்கிக் கொண்டு செல்லும் திலகாவையும் நிறுத்தி வைக்க வழி தெரியாது செய்வதறியாது நின்றார்.
மேளசத்தங்களுக்கு இடையேயும், பரப்பரப்பான பந்தியிலும், இளைஞர்களுக்கு மத்தியிலும், கார்த்திக்கு அருகிலும், வரவேற்பறையிலும், அமர்ந்திருந்தவர்களிலும் துருவை தேடி தேடி கண்கள் சலித்து விட, கடைசியாக வீடு வந்ததும்,நேரே மொட்டை மாடிக்கு சென்றுதான் பார்த்தாள். இரவு முழுவதும் இங்குதான் இருந்திருப்பான். இப்போது வந்து அந்த இடத்தைப் பார்த்தால், அது என்ன கூகுளில் தேடியா சொல்லும்?

திலகா மட்டும் கிளம்பினால் கூட மறுத்திருப்பாள். ஆனால் ஆருயிர் அண்ணன் சங்கீத்தும் அல்லவா கூட செல்கிறான். அதனால் வேறு வழியின்றி கிளம்பி விட்டாள். அன்று நடந்தது அவளுக்கு தெரியவில்லை. ஆதலால், அந்த கோடை விடுமுறை நன்றாகவே கழிந்தது. விடுமுறை முடிந்து ரிசல்ட் எல்லாம் வந்ததும்,
“நான் விசுவல் ஆர்ட்ஸ் படிக்க போறேன்” என்று மஹதி சொல்லும் வரை.
ஒட்டுமொத்த குடும்பமும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்து, அவன் படித்ததையே படிக்கிறாள் என்றால் என்ன நடந்தது? என்று ஆளாளுக்கு குழம்பி தவிக்க,
“உன் இன்ஜினியரிங் கட் ஆஃப்க்கு நல்ல காலேஜ்ல கிடைக்குமே”
“விசிவல் ஆர்ட்ஸ்ன்னா ஸ்கோப் இருக்குமா?”என்று செந்திலில் ஆரம்பித்து, நேற்று திருமணமான சின்ன பெண் ஸ்வாதி வரை யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை அவள்.
சங்கீத் தான், “நான் பேசி பார்த்துட்டேன். அவ மனசுல ஒண்ணுமில்லம்மா..நிஜமாகவே கோர்ஸ்ல ஆசைப்பட்டுதான் கேட்கிறா.. நம்ம ஏதாவது சொல்ல போய் ஆப்போசிட் ரியாக்ஷன் ஆகிடும். அவ இஷ்டபடி எதுவோ படிக்கட்டும்” என்று தீர்ப்பு சொல்லிவிட, அனைவரும் உடன்பட்டனர்.
அவள் மனம் தடுமாறி விடக்கூடாது என்று அதன் பின் திலகாவும், சங்கீத்தும் அவளுடைய உற்ற நண்பனுக்கு இணையாகினர்.
இவளுக்கும் எந்த தடுமாற்றமும் இல்லை. அவனை சந்தித்தது கூட நினைவடுக்கின் மூலைக்கு சென்று விட்டு புது நண்பர்கள், படிப்பு என்று பிஸியாக இருந்தாள். டெல்லியில் மேற்படிப்புக்கு சேரும் வரை.

உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன்
-(இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 16

அத்தியாயம் 16:

அன்றைய நாளில்…

“உன் அம்மாவா அது?” அன்பரசியிடம் பேசி வைத்த பின் துருவ் கேட்டான்.
“சாரி”
“நீ என்ன பண்ணுவ. நான் உன்னோடு பேசவும் தான் கோபப்பட்டு இருப்பாங்க” என்றவன், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கண்டுக் கொள்ளாமல் வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல் உண்டாலும் ஒல்லியாக இருக்கும் அவளை ரசனை கலந்த புன்னகையுடன் பார்த்தான்.
“ஹலோ !!! உங்க பார்வையே சரியில்லயே?” என்று பஜ்ஜியை வாயில் வைத்தபடியே சொன்னாள்.
“உன்னை மாதிரி ஸ்கூல் பெண்ணை சைட் அடிக்கிற எனக்கு ஐடியா இல்ல” என்றதும்,
“ம்ம்க்கும்.. வாய் மட்டும் தான் அப்படி சொல்லுது” என்று வாய்க்குள்ளேயே முனகிவிட்டு சாப்பிடுவதிலேயே மும்முரமாக இருந்தாள்.
“என்ன சொன்ன?” என்று அருகில் வந்து விட்டான்.
“நான் ஸ்கூல் முடிச்சிட்டேன்னு சொன்னேன்” என்று அவள் கண்களை சிமிட்ட,
“அப்போ சைட் அடிக்கலாம்னு சொல்றியா?” என்று விஷம புன்னகையுடன் அவன் கேட்க, முதன் முதலில் ஒரு ஆண் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு மட்டுமே அவளுக்கு. வெட்கம் கலந்த புன்னகையுடன் பார்த்து விட்டு, அவன் கைகளை பற்றினாள். அவனுக்குள்ளும் இதுவரை இல்லாமல் அந்த நொடி ஒரு எதிர்பார்ப்பு வந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவளோ காலி தட்டை கையில் கொடுத்து, அவனது எதிர்பார்ப்பை புஷ்வாணமாக்கி விட்டு, வெளியே ஓடி வந்தாள்.
அவள் வெட்கத்துடன் ஓடுவது போல் தான் இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த துருவ், “நாளைக்கு மேரேஜ் முடிஞ்சதும், அவங்க அவங்க ஊருக்கு போயிடுவோம்” என்று சொன்னதும் நின்று திரும்பிப் பார்த்தாள். ஏனோ இனம் புரியா கவலை இருவரையும் சூழ்ந்து கொண்டது.
“என்ன துருவ்? கார்த்திக் நீ சாப்பிட வரல சொன்னான்” என்று கேட்டுக் கொண்டே வந்த ஸ்வாதி, இருவரையும் பார்த்து விட்டு,
“ஓ மஹதி எடுத்து வந்து கொடுத்துட்டாளா?” என்று பதிலையும் சொல்லிக் கொண்டாள். ‘அவ எங்கே கொடுத்தா? அவளே சாப்பிட்டு போறா’ என்ற மனதில் சொன்ன துருவ், ஸ்வாதியைப் பார்த்து சிரித்து வைத்தான்.

நிறைய உறவினர்கள் கூட்டம் கூடி அரட்டை அடித்த படி இருக்க, ‘மணி பத்தரை ஆகிடுச்சு நீ போய் படு ஸ்வாதி’ என்று உறவுக்கார பெண்ணொருத்தி சொல்ல, மணியைக் கேட்டதும் அவளுக்கு, அவன் ஞாபகம் வந்தது.
பதினொரு மணிக்கு ஸ்வாதியோடு சிலர் அவள் அறைக்கு சென்றனர். மற்றவர்களோ இத்தனை நாள் காணாத உறவினர்களுடன் சிறிதும் களைப்பின்றி பேசிக் கொண்டே இருந்தனர்.
அவர்களிடமிருந்து பிரிந்து படிக்கட்டுகளில் ஏறியவள், முதல் தளத்தில் உள்ள அறைக்கு செல்லாமல், மொட்டைமாடிக்கு சென்றாள். அவன் சொன்னதிலிருந்து, இன்றுதான் கடைசி என்ற நினைவிலேயே இருந்தவள், பதினெட்டு வயது தான் ஆகிறது என்ற மனதில் கட்டளையும் மீறி வந்து விட்டாள்.
கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவன், இவளை பார்த்ததும் சிறு புன்னகையுடன் திரும்பிக் கொண்டான். அவனருகே வந்தவள்,
“இன்னைக்கு வொர்க் இல்லையா?” என்றாள்.
“ஜாப் தேடணும். அதை பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்”
“ஏன் உங்க அப்பா பிஸினஸையே பார்க்கலாம் தானே”
“ஹே!!மல்ட்டிமீடியா படிச்சிருக்கேன். சம்மந்தமே இல்லாமல் டைல்ஸ் கம்பெனியில் போய் குப்பை கொட்ட சொல்றியா?” என்று சிரித்தவன்,
“என் புள்ளைங்கள எல்லாம் தாத்தா பிஸினஸை பார்த்துக்கோன்னு மிரட்டினா. அவ்ளோதான்”
“ம்ம்க்கும். நீயே யு.எஸ் ல படிக்கிற. இதில் நான் உன் பிள்ளைகளை சேந்தமங்கலத்தில் பார்த்து திட்டிட்டாலும்” என்று அவளிடம் ஒரு இன்ஸ்டென்ட் பதில் வந்தது. சட்டென்று அவளை திரும்பி ஒரு ஆழமானப் பார்வை பார்த்தான்.
“ஏன் அப்படி பார்க்கிறீங்க?” என்றாள் ஒன்றும் புரியாமல்.
சிரித்துக் கொண்டே,”ஒண்ணுமில்லை” என்று தலையசைத்தான்.
“எனக்கு சரியா சொல்ல தெரியல. பட் நாம யாருக்கும் தெரியாமல் இங்கே வந்து பேசிக்கிறது தப்புன்னு தோணுது. என் அத்தை எனக்கு அம்மாவை விட ரொம்ப க்ளோஸ். அம்மா ஜாப்ல இருக்கிறதால, லீவ்ன்னா இங்கேதான் வருவேன். அத்தை எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. அவங்களுக்கு கூட தெரியாமல் இங்கே நான் வந்திருக்கேன்.” என்று வேறு எங்கோ பார்த்தப்படி சொல்லும் போதே,
“அப்புறம் ஏன் வந்தாய்?” என்றான். கோபப் படுகிறானோ என்று வேகமாக திரும்பி அவனை நோக்கினாள். அவன் கண்களிலும் இதழிலும் ஒரு சேர புன்னகையைக் கண்டாள்.
கண்கள் கூட இவ்வளவு பேசுமா? இத்தனை வருடங்களில் முதன்முதலில் கண்டுக் கொண்டதே அவன் கண்களில் மட்டும் தான். சில நொடிகள் பேச்சின்றி அவனையே நோக்க, கண்களை பெரிதாய் விரித்து புருவத்தை உயர்த்தி என்னவென்று இயம்பினான்.
தன் ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் அவன் கண்களுக்கு நேராக, ஒரு அளவீடு போல் காட்டிய மஹதி,
“கொஞ்சம் கம்மியா ரியாக்ஷன் கொடுங்க துருவ். ராத்திரி நேரம் பயமா இருக்கு இல்ல” என்றாள்.
“உன்னை…” என்று செல்லமாக முறைத்தவன், அளவீடு காட்டிய விரல்களை பிடித்து தன் கரத்திற்குள்ளேயே சிறிது நேரம் வைத்திருந்து, விட்டுவிட்டான். கண்களை மட்டும் அவளை விட்டு விலக்காமல் இருந்தான். அவள் அவளுடைய பள்ளி மற்றும் நண்பர்கள் பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அதையெல்லாம் அவன் எங்கே கவனித்தான்? பின் அவள் ஏதோ கேட்கும் போது,
“ஃபர்ஸ்ட் உன்னை பார்த்த போது மெச்சூரிட்டி இல்லாத குட்டி பெண் டைப்ல தான் என் மைன்ட்ல ஃபிக்ஸ் ஆன.. இப்போ என் மனது அதை டெலீட் பண்ணுதோ” என்று அவள் கேட்ட கேள்விக்கு துளியும் சம்மந்தமின்றி பதில் சொல்லும் போதே ஒரு புன்னகை அவன் இதழில்.
இவளும், அந்த வார்த்தைகளை உள்வாங்கி,ஆராய்ச்சிசெய்து ஜாக்கிரதையாய் ஒரு சின்னதாய் ஒரு புன்னகையை சிந்தினாள்.
“நாளைக்கு என் அண்ணனும் வருவான். மதியம் பக்கத்துல இருக்க ஃபால்ஸ் போகலாமா கேட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாக அவள் திரும்ப கேட்க, ஆமோதிப்பாக தலையை அசைத்தான்.
அன்றிரவுக்கு பின் இவனுட இரவு நேரங்களில் இருக்கவேண்டிவருமோ என்றெண்ணி, இப்பொழுதெல்லாம் குர்தி அணிகிறாள்.
அவனை சந்திக்க நேரிடுமோ என்று, ஸ்வாதியின் துப்பட்டா ஒன்றை எடுத்து தன்மேலே போட்டுக்கொண்டு வந்தாள். இப்போதோ காற்றில் பறக்கும் துப்பட்டாவை இழுத்து பிடிப்பதே பெரிய வேலையாக இருந்தது.
அவள் தன்னிடம் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தவன் அவளருகில் வர, துப்பட்டா வீசும் காற்றின் விளைவால் இப்பொழுது அவன் சட்டை மேல் போய் ஒட்டிக் கொண்டு, வராமல் இருக்க, ”சாரி சாரி சாரி” என்று பல சாரிகளை அவனுக்கு சொல்லிவிட்டு, காற்று சற்று ஓய்ந்ததும், துப்பட்டாவை சுருட்டி பிடித்து கொண்டவளிடம், நேராக கைக்கட்டி நின்றவன்,
“உனக்கு என்ன பிரச்சனை?” என்றான். இவளுக்குள்ளோ ஏதோ தடுமாற்றம்!!! இதுப் போல் யாரிடமும் தனியாக பேசியதில்லை என்பதாலா? தெரியவில்லை. அதனால் அமைதியாகவே இருந்தாள். அவனும் அவள் அருகாமையை மட்டும் ரசித்தானோ என்னவோ அமைதியாகவே கீழே பரப்பரப்பாக இருக்கும் உறவினர்களை பார்த்தப் படி சுவரில் சாய்ந்து நின்றான்.
சற்றுநேர அமைதிக்கு பின், இந்த வயதில் இதுதான் பாதுகாப்பு என்று நினைத்த மஹதி,”ஓகே. நான் தூங்க போறேன். இனி நாம் எப்பவுமே ஃப்ரெண்ட்ஸ்?” என்று கை நீட்ட, அவள் கையை பார்த்து,
“வேண்டாம். அப்புறம் இந்த கையை விடவே கூடாது தோணும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கன்னத்தில் கைவைத்து கீழே பார்க்க ஆரம்பித்தான். அவளுக்கு சத்தியமாக அதன் உள் அர்த்தம் புரியவில்லை. அவனுடன் பேசும் நிமிடங்கள் மட்டும் அவளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும் காரணமும் அறியவில்லை. ஆனால் நாளை திருமணம் முடிந்ததும் பிரிய போகிறோம் என்றெண்ணிய போதே மனம் பாரமாக இருந்தது. இந்த நிமிடமே அனைத்தையும் பேசி தீர்க்க ஆசை இருந்தாலும் வார்த்தைகள் வரவில்லை.
நீண்ட நேரம் இருவருமே அவரவர் கண் போன திசையில் எதையோ பார்த்து, மௌனமாகவே அருகருகே நின்றிருந்தனர்.
திடீரென்று அவள் பக்கம் திரும்பி, “இன்னும் போகல?” என்றதும், அவன் விழிகளுக்குள்ளே மூழ்கி விடுபவள் போல் ஆழமாக அவனை நோக்கியவள், எதுவும் சொல்லாமல் கீழே இறங்கி விட்டாள். அவள் படிக்கட்டுகளில் இறங்கும் வரை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.

இருவரும் கவிதையில் வரிகளை போலே
                 நினைவிலே நிற்கிறாய் அழகிய தீவே
– (கவிஞர் நா.முத்துகுமார்)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 15

அத்தியாயம் 15:

மஹதிக்கு சங்கீத்திடமிருந்து ஃபோனில் வந்த செய்தி இதுதான்.
“நம்ம குடும்பத்தையே பழிவாங்க துருவ், சங்கவையை யூஸ் பண்ணிக்கிட்டான்”.
“இன்னைக்கு ஃபைனல் ஹியரிங்க். இன்னைக்கு நமக்காக அன்பரசி அத்தையோட ஃப்ரெண்ட் தான் ஆர்க்யூ பண்ண போறதா சொல்றாங்க”
“மெயின் கேமே இனிதான்” என்ற துருவ் பேசிய வரிகள் சரியாக ஞாபகத்திற்கு வந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்,
“தப்பா எடுத்துக்காதீங்க. எங்களுக்கு சினிமா எல்லாம் ஒத்து வராது” என்று சங்கவையின் அப்பா சங்கீத்திடம் சொல்ல, அவன் வேக வேகமாக ஐந்து இலக்கத்தில் ஒரு தொகையை எழுதி காசோலையை அவரிடம் நீட்டினான். அதை சற்று நிமிடங்கள் பார்த்தவர்,
“என் பெண்ணை சம்மதிக்க வைக்கிறேன்” என்றார் முகம் மலர. சங்கீத்தும் சந்தோஷத்துடன் தயாரிப்பாளரை அழைத்து நடந்த விஷயத்தை சொன்னான். கோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகளை விட, அழகான ஒரு பெண்ணை தன் படத்தில் ஒப்பந்தம் செய்ததில் அவருக்கும் மகிழ்ச்சியே.
“நான் உங்களோட பேசணும்” என்று சங்கவை சொன்னதும், திரும்பிய சங்கீத்திடம்,
“என் அப்பாவுக்கு சில பணத் தேவைகள் இருக்கு. அதற்காக இந்த ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன். எனக்கு படப்பிடிப்பு நடக்கிற இடத்தில் நீங்க தான் பாதுகாப்பு தரணும். இதற்கெல்லாம் சம்மதம்னா நாளைக்கே உங்களோட வரோம்”
“நான் தான் கேமரா மேன். நான் இல்லாமல் ஒரு சீன் கூட இருக்காது. என்னை நம்பி வரலாம்” என்று சங்கீத் சொன்னதும் அமைதியாக புன்னகைத்தாள் சங்கவை.
“ஒன் ஸ்டில் ப்ளீஸ்” என்று அவன் கேமராவை தூக்கி, கெஞ்சுவது போல் கேட்க,
“பர்சனலாவா? அஃபீஸியலாவா?” என்று கைகளைக் கட்டி சாய்ந்து நின்றபடி கேட்டாள். உதட்டோரம் இருந்த புன்னகையே மறைபொருளாக அவள் சம்மதத்தை தெரிவிக்க,
“இவ்ளோ ஷார்ப்பா இருக்க. என்ன படிச்சிருக்க?” என்றான் புன்னகை மாறாமல்.
“படிச்சாதான் ஷார்ப்பா இருக்க முடியுமா? அதெல்லாம் எனக்கு வராது” என்று அழகான விரல்களை குவித்து விரித்தபடி அவள் சொல்ல, அன்றிலிருந்து ஆரம்பித்தது அவர்களது காதல் கதை.

முதல்படம் வெளிவருவதற்கு முன்பே அவளது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. நிறைய பெண்களின் முகப்பு படம் அவளுடையதாக இருந்தது.
ஒரே படத்தில் வேலை செய்வதால் சங்கீத் – சங்கவை காதல் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. தயாரிப்பாளரும் படத்திற்கான விளம்பரம் என்று தன் யூனிட் ஆட்களை வைத்தே சிலப் புகைப்படங்களை வெளியிட வைத்தார். திலகா கண்ணிலும் சிலப் படங்கள் விழுந்து, ஷீட்டிங்க் என்று ஓடிக் கொண்டிருந்தவனை,
“என்னடா?” என்று நிறுத்தி வைத்து கேள்வி கேட்டார். அவன் பதில் சொல்லாமல் சிரிக்க,
“நம்ம வீட்டிலேயும் பொண்ணு இருக்கு” என்றார். ஆனால் படப்பிடிப்பு முடிந்து இரண்டே மாதத்தில் போலீஸ் உடன் இவர்கள் வீட்டுக்கு வந்தார் சண்முகம்.
“இவன்தாங்க. இவனை பிடித்து விசாரிங்க” என்று கத்தினார். சங்கவை காணாமல் போய்விட்டாள். அதற்காக நடந்த விசாரணைக்காக குடும்பமே கோர்ட்க்கு அலைந்தது. ஆனாலும் அவளை காணவில்லை. எங்கெங்கோ தேடி தேடி சலித்து விட்டனர்.
கோர்ட்டில் வெளிவந்த சில உண்மைகள் சங்கீத் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. சங்கவை அபார்ஷன் செய்ததாக கோர்ட்டில் சமர்பித்த ஆதாரங்கள் அது. பல பிரச்சனைகள் இருக்க சங்கவையின் தந்தையோ சங்கீத்திடம் நஷ்ட ஈடுக் கேட்டார்.
சங்கீத் சம்பாத்தியம் மட்டுமின்றி திலகா செந்திலின் வருமானமும் சேர்ந்து சென்று விட, அதன்பின், திலகா மகனிடம் பேசவே இல்லை. செந்திலும் நன்றாக திட்டி விட்டார்.
மஹதி தான் இருவருக்கும் இடையில் தவித்தாள். ஏதாவது பேசினாலே இருவருக்கும் சண்டை வரவும், வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான். திலகா மனதினுள் கவலைப் பட்டாலும், அவனை வீட்டுக்கு வர சொல்லவில்லை. மகள் பேசுவது தெரிந்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருந்தார்.
ஆறு மாதங்களாகி விட்டது.

கோர்ட்டில் அன்பரசியின் வக்கீல் தோழி சமர்ப்பித்த ஆதாரங்களில் சங்கவையின் கருகலைப்புக்கும், சங்கீத்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.
மீடியா துறையினர் அனைவரும் இதை வெளிச்சம் போட்டு காட்ட, திலகா, செந்தில் மகனை நினைத்து, பெருமிதம் கொண்டனர். ஒரு சாதாரண குடும்பத்து பெண் திரைத்துறையில் சாதிக்க முடியாதா? என்று ஏதோ சங்கீத் தான் பணம் கொடுத்து தீர்ப்பை விலைக்கு வாங்கியதாக சோஷியல் மீடியாக்கள் கொந்தளித்தன.
அன்று சங்கீத் ஒரு படத்திற்காக வெளியூருக்கு சென்று விட்டு வந்த போது, ஒரு வாரம் சங்கவை அவன் அழைப்பை ஏற்கவில்லை. பின் ஒருநாள் அவளே அழைத்து, நேரில் வர சொன்னாள்.
“என் அப்பானு ஒருத்தன் இருக்கானே. அவனே ஃபனான்ஸியர்னு ஒருத்தனை கூட்டி வந்து…” என்று நிறுத்தியவள்,
“நல்ல பொண்ணுனா சூஸைட் பண்ணிப்பாங்களாம். அப்படி சொல்லி திரும்பவும் வரான் அந்த ராஸ்கல். எனக்கு தெரியல சங்கீத். நான் உயிரோடு இருப்பது தப்பா?” என்று இரண்டே வரியில் பத்து நாட்கள் கதையை அவள் சொல்ல, உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தவன், கண்கள் கலங்க அவளை அணைத்திருந்தான்.
‘என் கேமரா தான் அவள் முகத்தை முதலில் கண்டுக் கொண்டது’ என்ற குற்ற உணர்ச்சியில்,
“இல்லடா. தப்பு செய்தவனே உயிரோடு சுத்தும் போது உனக்கென்ன” என்று கண்ணீர் வழிய நின்றவளின் முகமெங்கும் முத்தமிட்டான்.
இப்போது கோர்ட்டில் சங்கீத்தை முறைத்துக் கொண்டே சென்று காரில் ஏறியவளைப் பார்த்த சங்கீத், ‘ஏன் அவள் கடைசி வரை என்னை புரிந்துக் கொள்ளவே இல்லை’ என்ற கவலையில், கோபத்துடன் துருவ் பிரதீப்பின் அலுவலத்திற்கு விரைந்தான்.
“டேய்!! கார்த்திக் மூலமா என் கேரியரை காலி பண்ண. இப்போ ஏன்டா எங்க லைஃப்ல விளையாடுற. அவளுக்கு என்ன நடந்திருந்தால் உனக்கென்ன? அவளுக்கு என்ன ஆனாலும் பார்த்துக்க நான் இருக்கேன்” என்று சட்டையை பிடித்தான்.
அவன் பிடியிலிருந்து கூலாக தன்னை விடுவித்துக் கொண்ட துருவ்,
“உன்னை மாதிரி ஒருத்தன் கிடைக்க அந்த பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும். ஆனா அவ அப்பாவோட சேர்ந்து உன்னை ஏமாற்றி பணம் வாங்கியிருக்கா. இன்னும் உன் பெயரை சொல்லியே நிறைய இடத்தில் பணம் வாங்கியிருக்கா” என்றான்.
“எனக்கு எல்லாம் தெரியும்” என்றதும், துருவ் அதிர்ச்சியாக,
“அவளுக்கு சரியா நடிக்க வரலன்னு இரண்டு டைரக்டர் ரிஜெக்ட் பண்ணின அப்சப்ட்ல, கிடைச்சவனை வைத்து பணம் சம்பாதிக்க நினைச்சிருக்கா. அதுவும் அவள் என்னை காதலிக்கவே இல்லைன்னும் எனக்கு தெரியும்டா” என்றான் சங்கீத்.
“முட்டாள் முட்டாள்!! தெரிந்தே போய் விழறது நீ மட்டுமா தான் இருப்ப”
“அவ பெயரை ஏன்டா கெடுத்து வச்சீங்க?” என்று மீண்டும் துருவிடம் மல்லுக் கட்டி நின்றான் சங்கீத்.
“திருந்தாத ஜென்மங்களை ஒண்ணும் பண்ண முடியாது” என்று தலையை சலிப்புடன் இருபுறமும் ஆட்டியவன்,
“கோர்ட்ல பார்த்தியா அவளை? அவ கேரளாவில் ட்ரை பண்ணிட்டு இருக்கா போல. அங்கேயே வீடும் வாங்கிட்டா. இன்டீரியர் டெக்கரேஷன்க்கு எங்க அம்மா ஆஃபீஸ்க்கா வருவா? என் அம்மாவோட எம்ப்ளாயி ஆன்லைன் டிஸ்கஷன்க்கு என்னிடம் வந்தா. வீடியோ வில அவ ஃபேஸ் பார்த்ததும், நானும் கார்த்திக்கும் ஸ்டேட் விட்டு ஸ்டேட் கடத்தி கோர்ட்ல நிறுத்திட்டோம்”
“எப்படியாவது என் காதலை புரிஞ்சிப்பான்னு நினைச்சேன். குறுக்கே புகுந்து ஆட்டத்தை கலைச்சிட்டீங்க. உங்களை என்ன பண்றது?” என்று சிரித்துக் கொண்டேக் கேட்டான்.
அவள் காதலே பொய் என்பதைக் கண்டுக் கொண்ட பின், வாழ்க்கையிலேயே தோற்றது போல் அவமானப் பட்டான் தான். மற்றவர்களின் கிண்டலுக்கு பயந்தும், திடீரென்று சோஷியல் மீடியாவில் கிடைத்த புகழை விட மனமின்றியும், அவளையே திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருந்தான்.
இதுவரை மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே வந்த போது, துருவ் பிரதீப்பை திட்டுவதா? நன்றி சொல்வதா என்று சங்கீத்க்கே தெரியவில்லை.
அவன் மனதை நன்றாக புரிந்த துருவ், அவனை அணைத்து, தோளை தட்டி புன்னகைத்தான்.
“மஹதி கல்யாணம் முடிந்ததும் டீல் பண்ணலாம் நினைத்தேன்” என்று மட்டும் சொல்லி சங்கீத் வெளியேறினான்.
அதுவரை சகஜமாக இருந்த துருவ் பிரதீப் மஹதியை பற்றி பேச ஆரம்பிக்கவும், அமைதியாக வெளியே பார்த்தான். ஸ்வாதியின் திருமணத்தில் பார்த்த குட்டிப்பெண் மஹதியை மனதிற்குள் டி.பியாக(Display Picture) வைத்துள்ளான் என்பது அவன் மட்டுமே அறிந்த இரகசியம்.

இதயம் எழுதும் இனிமையே… இன்பம் வேறேது
கனவில் வளர்ந்த கவிதையே… என்றும் மாறாது
– (கவிஞர் வாலி)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 14

அத்தியாயம் 14:

எட்டு வருடங்களுக்கு முன்…. ஸ்வாதியின் திருமணத்திற்கு முதல் நாள்….

இதுதான் வாழ்வின் போக்கிஷ நிமிடங்கள் என்று உணராமலே சில நிமிடங்களை கடந்திருப்போம். அப்படி தான் துருவ்க்கும் தோன்றியது. அன்றைய இரவில் இம்சை ராணியாக தெரிந்தவளை இன்று மனம் தேடியது. ஆனால் இரண்டு நாட்களாக கண்ணில் படாமல் சோதித்தாள். யாரிடமும் கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது.
அவன் கல்லூரியில் விடுமுறை எடுத்தால், தன் நண்பர்களிடம் சொல்லி, அவர்களின் லேப்டாப் வழியாக வீடியோ கால் போட சொல்லி, வகுப்பில் நடப்பதைக் காட்ட சொல்வான். இன்று நொடிக்கொரு தடவை மாடிப் படிக்கட்டுகளையே பார்த்தவன், ஒரு கட்டத்தில் லேப்டாப்பை மூடி வைத்து விட்டான்.
இப்படியே அவள் கண்ணில் படாமல் இருக்கவும், துருவ் பிரதீப்பிற்கு மனம் சோர்ந்து விட்டது. நேரே சமையலறைக்கு சென்று, “அண்ணா காஃபி” என்று சோர்வாக சொன்னவன் கண்ணில், சமையல்காரர்களுடன் அரட்டை அடித்தபடி வடையை விழுங்குபவள் விழவும், காஃபி குடிக்காமலே புத்துணர்ச்சி வந்து விட்டது.
“மதியம் 1 மணிக்கு காஃபியா? லஞ்ச் ரெடியாகிடுச்சு. முதலில் சாப்பிடுங்க” என்று கண்டிப்பு கலந்த அக்கறையுடன் சொல்பவளைப் பார்த்து, அவன் இதழோரத்தில் ஒரு முறுவல் தோன்றி மறைந்தது. அதற்குள் சமையல்காரரே,
“இல்லமா! தம்பி என்னமோ பாராசூட்ன்னு சொல்லும். இதோ இரு தம்பி. காஃபி போடுறேன்” என்று சொல்ல,
“பாராசூட்டா?” என்று அவனைப் பார்த்தவளிடம், புன்னகையுடன் “ஜெட்லேக்” என்றான். அவனைப் பார்த்து பற்களை நறநறவெறு கடித்தவள்,
“தெரியலன்னா இப்படிதான் சிரிப்பீங்களா? அவருக்கு சொல்லி தர மாட்டீங்களா?” என்று சொல்லி விட்டு, காஃபி டம்ளருடன் வெளியே வந்தவருக்கு பாடமே எடுத்தாள்.
அவளெதிரே அமர்ந்து, ‘அனைவரிடமும் இயல்பாக பழக எப்படி இவளால் முடிகிறது?’ என்றெண்ணிய படியே காஃபியை பருகினான்.
சற்று நேரத்தில் சமைக்கப்பட்ட பதார்த்தங்கள் வெளியே வர, ஒரு பதார்த்தத்தை கையில் எடுத்த துருவ், “ஏய் என்ன உட்கார்ந்திருக்க? வெளியே வந்து சர்வ் பண்ணு” என்று அவள் கையில் கொடுத்தான்.
“ஹலோ!!! என்னால நடக்க முடியாது” என்று கையில் வாங்காமலே, காலை சுட்டினாள்.
அப்போது தான் ஞாபகம் வந்தவனாக, “அன்னைக்கு எப்படி இறங்கின?” என்றான்.
“நீ உன் பாட்டுக்கு போயிட்டு கேள்விய பாரு. ஆக்சுவலி மேலே ஏற தான் ட்ரை பண்ணேன். ஸ்லிப் ஆகி சருக்கிட்டே வந்து கீழே விழுந்துட்டேன்” என்று அவள் சொன்ன விதத்தில் சிரித்து விட்டான். இவள் முறைப்பையும் பொருட்படுத்தாமல்
”எப்படி எல்லோரையும் சமாளிச்ச?” என்றான்.
“தெரிந்தே ஆகணுமா?” என்று இழுத்தவள், எதுவும் சொல்லாமல் குட்டிப் புன்னகையை உதிர்த்து விட்டு, ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி, கடந்து சென்று விட்டாள்.
பந்தி பரிமாறும் போது அவள் இலை அருகே ஒரு வாலியை வைத்துக் கொண்டு நின்றவன்,
“சொல்ல மாட்ட?” என்றான் யாரும் அறியாமல். அவன் கண்கள் பந்தியை கவனித்துக் கொண்டுதான் இருந்தது.
“என்ன சொல்லணும்? ஹ்ம்ம்ம்” என்று யோசித்தவள், “உங்க வீட்டில் உன்னை நல்லாதான் வளர்த்துருக்காங்க” என்று விட்டு, சாப்பிடுவதில் கவனமாக இருக்க, தனக்குள் சிரித்தவன், ‘உன்னை’ என்று தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைக்க, அதைப் பார்த்த கார்த்திக், ‘என்னடா நடக்குது இங்கே’ என்று அருகில் வந்தான்.
எதையும் விசாரிக்காமல்,
“உன்னால யாரையும் வம்பிழுக்காமல் இருக்க முடியாதா டீ லூசு” என்றான் மஹதியிடன்.
“ஹலோ நான் வம்பிழுத்தேனா?” என்று கார்த்திக்கிடம் சண்டைக்கு நின்றவள், சற்று தலைசாய்த்து பின்னால் நின்றவனைப் பார்த்து, ‘சொல்லட்டுமா?’ என்பது போல் பார்க்க, துருவ் கண்களாலேயே கெஞ்சினான்.
“எக்ஸ்ட்ரா வடை கேட்டால், உன் ஃப்ரெண்ட் கிச்சன்ல போய் வாங்கிக்க சொல்றார். நீ சமையல்காரர்களோடு சேர்ந்து கீழே ஊற்றிய தண்ணியில், நான் வழுக்கி விழுந்த கதையை, அவரிடம் சொல்லலயா?” என்கவும் சற்று தள்ளி நின்ற ஜெயந்தி,
“ஏன் டா புள்ளைக்கு அடிபட்டதுக்கு நீதான் காரணமா” என்று கார்த்திக்கிடம் கேட்க,
‘நான் சொல்லட்டுமா?’ என்று கண்களாலே கேட்டான் துருவ். புன்னகையுடன் இவள் தலையசைக்க, ‘நான் தான் கெஞ்சணும்!!! இங்கே எல்லாம் தலைகீழ்’ என்றெண்ணி இவளைப் பார்த்துக் கொண்டே நகர, சாம்பார் வாலி எதிரே வந்த திலகா மேல் மோதி, அவர் சேலையெல்லாம் சிந்தி விட்டது.
தூரத்தில் இருந்து இவர்கள் கண்ஜாடைகளை கவனித்து, இவன்தான் தன் மகளிடம் வழிகிறான் என்ற நினைப்பில் அவர்களை நோக்கி வந்தவர், ஏற்கனவே இருந்த கோபத்தில் துருவ் பிரதீப்பை ஓங்கி ஒரு அறை விட்டார்.
“எங்கே பார்த்துட்டு வருவ” என்று.
“திலகா, இது அன்பரசி பையன்” என்று ஜெயந்தி ஓடி வந்தார். அறை வாங்கிய வேகத்தில் மொத்த சாம்பாரையும், அந்த பெண் மேல் ஊற்றும் அளவுக்கு கோபம் வந்தது துருவ் பிரதீப்பிற்கு. அதற்குள் ஜெயந்தி வந்து சமாதானப் படுத்தவும் அமைதியானான்.
“யாரா இருந்த என்ன அண்ணி. கல்யாணம் முடியும் வரை ஒழுங்கா இருந்துட்டு போக சொல்லுங்க” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு, மஹதியையும் ஒரே பார்வையில் கண்டித்து விட்டு சென்றார். கையிலிருந்த வாலியை வைத்து விட்டு விறு விறுவென்று அறைக்குள் சென்று விட்டான் துருவ்.
அதற்கு மேல் மஹதிக்கும் சாப்பிட மனம் இல்லை. அவன் மனமுடைந்து சென்றதையே நினைத்திருந்தாள். இந்த சம்பவம் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தவர்கள் மட்டுமே அறிந்ததால், மற்றவர்கள் கவனத்துக்கு செல்லவில்லை. வழக்கம் போல் ஆடல் பாடல் என்று ஒரு பிரிவினர் கலக்கிக் கொண்டிருந்தனர். மஹதியால் எதிலும் ஈடுபட முடியாமல், லேசாக ஊன்றி ஊன்றி நடந்து வந்து கார்த்திக்கிடம்,
“உன் ஃப்ரெண்ட் சாப்பிட்டாரா?” என்றாள்.
“துருவ் ஆ? இல்ல. எனக்கு அடுத்தடுத்து வேலை வந்துட்டே இருக்கு.ஒரு தடவை போய் கூப்பிட்டு வந்தேன். வரல” என்று சொல்லி விட்டு நிமிடத்தில் கல்யாண வேலையில் பரபரப்பானான்.
அங்கிருந்த சமையல்காரர் உதவியுடன், மாலை சிற்றுண்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த பஜ்ஜியுடன், துருவ் தங்கியிருந்த அறைக்கு சென்றாள்.
ஜெயந்தியின் மடியில் படுத்துக் கொண்டு, மொபைலில் அன்பரசியுடன் வீடியோ காலில் இருந்தான்.
இவள் நகர முற்பட்ட போது, இவளைப் பார்த்து விட்ட ஜெயந்தி,
“மஹதி, அம்மா கொடுத்து விட்டாளா?” என்று கேட்டு விட்டு, இவள் பதில் வருவதற்குள்,
“பார்த்தியா? இதான்டா திலகா. உன்னை அடிச்சாலும் கொடுத்தனுப்பி இருக்கா பார்” என்றார். அவன் சலிப்பான முகத்துடன் அவளைப் பார்த்தாலும், கை செவ்வனே அவள் முகத்தை அன்னைக்கு காட்டியது.
“ஹாய் மஹதி” என்று அன்பாக அழைத்த அன்பரசி முன்,
“ஹாய் ஆன்ட்டி, எப்போ வரீங்க?” என்றாள் சம்பிரதாயமாக. அன்பரசியின் காதல் கதையை பற்றி பாட்டிகளின் வழி கேள்விபட்டிருந்தாலும், இன்றுதான் அவரை பார்க்கிறாள்.
“இங்கே மாமாவுக்கு வேலைடா. நைட் ஃப்ளைட் ஏறிடுவோம்” என்று பேச ஆரம்பித்தார். இதற்கிடையில் ஜெயந்தி மொபைல் முன் முகத்தைக் காட்டி விடைப்பெற்றதும்,
“துருவ் எல்லாம் சொன்னான்மா. உன் கால் வலி எப்படி இருக்கு?” என்று அன்பரசிக் கேட்டதும் தூக்கி வாரி போட அவனைப் பார்த்தால், அவனிடத்தில் குறுஞ்சிரிப்பு மட்டுமே.

கண்கள் எழுதும் ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே– (கவிஞர் தாமரை)

Categories
K. Kokila On-Going Novels

அத்தியாயம் – 13

அத்தியாயம் 13:

“ஓகே கார்த்திக் நான் இந்த ப்ராஜெக்ட்ல இருந்து விலகிக்கிறேன். உன் மாமா பொண்ணை வச்சு, நீ முடிச்சிக்கோ” என்றான் துருவ் பிரதீப்.
“டேய் என்னடா நினைச்சிட்டு இருக்க. அவளுக்கு ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் டா.. இன்னும் ஸ்டுடியோ கூட அவளுக்கு பழகல. இதுல… நீ தான் அவளுக்கு சொல்லி தரணும்”
“சங்கீத் இந்த ப்ராஜெக்ட்ல வரக்கூடாதுன்னு நான் சொன்னதுக்கு வேகமா தலையாட்டினவன், அவன் சிஸ்டரை எதுக்கு கொண்டு வந்த?” தீர்க்கமாக இருந்தது அவன் பார்வையும்.
“இது ப்ரோடியூசரோட…” என்று கார்த்திக் ஆரம்பிப்பதற்குள்ளேயே, கை நீட்டி நிறுத்தியவன்,
“நீ சொன்ன பொய்யை தானே, நானும் நம்பி இன்டர்வியூ பண்ணினேன்” என்றான் துருவ் பிரதீப். கார்த்திக்கின் அமைதியைப் பார்த்தவன்,
“ஏன் உன் மாமா பொண்ணுக்கு, ஊர் உலகத்துல வேற யாரும் கிடைக்கலயா?” என்று மேலும் வார்த்தைகளை விட,
“துருவ்வ்வ்வ்” என்று கத்திய கார்த்திக்,
“ச்ச்சே!! என்னலாம் பேசுற தெரியுதா? நீ அவளை லவ் பண்றன்னு எனக்கும் தெரியும்” என்றதும், கோபத்துடன் டேபிளில் இருந்த பீங்கான் கப்பை அவன் மேல் விட்டெறிந்தான். அது சில்லு சில்லாய் சிதறி கீழே விழ, அவனைக் கோபத்துடன் பார்த்த கார்த்திக், எதுவும் சொல்லாமல் வெளியேறினான்.
இரண்டே நாட்களில் வேறு ஒரு ப்ராஜெக்ட்டில் இருந்தாள் மஹதி.
உதவி இயக்குநர் தான் சொன்னான்.
“இது கூவம் ப்ரிட்ஜ் பழைய ஃபோட்டோ. எங்க ஹீரோ – வில்லன் மோதல், கார் சேஸிங்க். இந்த பாலத்தில் தான் நடக்கணும்னு டைரக்டர் முடிவு பண்ணிட்டார்” என்றான்.
“ஒகே ஷீட் பண்ணின வீடியோ கொடுங்க” என்றாள். அவர்களோ, “நீ முதலில் ட்ரை பண்ணு. தரோம்” என்றனர்.
இந்த அறைக்கு வந்ததிலிருந்து அவளும் பலமுறை அந்த இயக்குநரின் முந்தைய படங்களைப் பற்றி பாராட்டி விட்டாள். அந்த இயக்குநரிடமிருந்து ஒரு நன்றியோ தலையசைப்போ புன்னகையோ வரவில்லை. அமைதியாக கன்னத்தில் கைவைத்து திரையை பார்த்தப்படி இருந்தார். இந்திய அளவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அவர் பார்வையை வைத்து என்ன யூகித்தானோ, அந்த உதவி இயக்குநர் தான் அவரின் குரலாக, இவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
சில மணி நேரங்கள் அவருடன் போராடினாள் என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்னதான் எதிர்பார்க்கிறார் என்பதை வாயை திறந்து சொன்னால் தானே தெரியும்? கோடைக் காலமா? குளிர் காலமா இரவா? பகலா? எதையும் சொல்லாமல் திரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். எதிர்பார்த்தது திரையில் வரவில்லை போலும். எழுந்து வந்து மஹதியை ஒரு அறை விட்டார். அதிர்ந்து விட்டாள்.
‘அடிக்க எல்லாம் செய்வாங்களா’ என்று திகைத்தவள் எதிரே துருவ் வந்து நிற்கவும், வேகமாக தான் இயக்குநரிடம் வாங்கியதை அவனுக்கு கொடுத்து விட்டு,
“நான் இன்னைக்கு லீவ். நாளையிலிருந்து உன் ப்ராஜெக்ட் தான். வொர்க் அஸைன் பண்ணி வை” என்று ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
அனைவரும் அவனையேப் பார்க்க, அவன் அப்படி ஒரு சம்பவமே நடவாதது போல், க்ராஃபிக்ஸ் காட்சிகளுக்கு உதவலானான். மஹதி உருவாக்கிய காட்சிகளை உற்றுப் பார்த்த துருவ், தன் விரல்களில் வித்தையால் புறாக்களை இடையில் பறக்க விட்டான்.
இயக்குநர் முகம் சற்று திருப்தியாக, சுற்றி நின்றிருந்தவர்கள்,
‘அடப்பாவிங்களா!! புறாவுக்கு அக்கப்போரா’ என்று முணுமுணுத்தனர்.

மாதங்கள் விரைவாக நகர்ந்துக் கொண்டிருந்தது. அன்றைய நாளிற்கு பின் முடிந்தவரை துருவ் கண்ணில் தனியாக மாட்டாமல் வேலை செய்துக் கொண்டிருந்தாள் மஹதி.
அன்று, கார்த்திக் டீம் அனைவரும் அந்த அறையில் இருக்க, கார்த்திக் புறம் திரும்பாமல், மற்றவர்களிடம் வேலை நிமித்தமாக துருவ் பேசிக் கொண்டிருக்க,
“டேய் ரொம்ப பண்ணாத. நான் தான் கோபப் படணும். அந்த சைக்கோக்கிட்ட ஏன் மஹதியை மாட்டி விட்ட?” என்று கார்த்திக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
அவர்களிடம் பேசிக் கொண்டே டேபிளில் இருந்த மொபைலை எடுத்து வாசித்தவன், எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல், மீண்டும் அவர்களுடன் படத்தைப் பற்றிய விவாதத்தை தொடர்ந்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ!!! இந்த படத்துக்கு டைரக்டர் நான்” என்று விடாமல் மீண்டும் அனுப்ப, இப்பொழுது மெலிதாய் ஒரு முறுவல் அவனிடத்தில். அந்த முறுவலைப் பார்த்த தைரியத்தில்,
“அப்போ பேசமாட்ட?” என்று அனுப்ப, பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் அனைவருக்கும் விடைக் கொடுத்தான். கார்த்திக் செல்லாமல் அறையிலே இருக்கவும், நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான்.
அவன் புன்னகை தந்த பலத்தில், “உண்மையை சொல்லு. மெசேஜ் வரவும் அந்த அன்நவுன் நம்பர் னு தானே வேகமா பார்த்த” என்றான் கார்த்திக்.
துருவ், அவனிடம் அந்த நம்பரில் வரும் செய்திகளை அவ்வப் போது பகிர்ந்து கொள்வான். துருவ், கார்த்திக்கு பதிலாக மறுப்பாக தலையசைத்தான். அன்றைய சண்டையை மறந்து இயல்பாக இருவரும் பேச ஆரம்பித்ததை இருவருமே உணரவில்லை.
“அந்த நம்பரில் இருந்து இனி மெசேஜ் வராது” என்றான் துருவ்.
“ஏன் என்னாச்சு?”
“என்னை பற்றி அவங்களோ, அவங்களைப் பற்றி நானோ தெரிந்துக் கொள்ளவே கூடாதுன்னு சொல்லிதான் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அப்படியே இருந்திருந்தால் நாங்க கன்டினியூ பண்றதுல, எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. பட் அவங்க என்னை பற்றின எல்லா விஷயமும் தெரிந்தவங்க. என் மேல் உள்ள பரிதாபத்தில் பேசியிருக்காங்க. ஃபோன் கூட ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க” என்றான்.
“ஏய் யார்டா அது?” என்று கார்த்திக் ஆர்வமாகக் கேட்க,
“இந்த உலகத்திலேயே என் மேலே அதிக அக்கறை இருக்கிறவங்க செய்த வேலை அது” என்றவனிடம்,
“சாரி!! அன்னைக்கு நீ கோவில நடந்துக்கிட்டதை வச்சு, மஹதியை லவ் பண்றேன்னு தப்பா நினைத்து….ரியலி சாரிடா” என்றான் கார்த்திக். அவன் அதை மறுக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
“லீவ் இட்” என்று திரும்பும் போது,
“கல்யாணம் பண்ற ஐடியா இருக்கு இல்ல?” என்று கண்களில் குறும்புகள் மின்னக் கேட்டான் கார்த்திக்.
“ஏன் இல்ல? என் அம்மா பார்க்கிற பொண்ணை நிச்சயமா பண்ணிப்பேன்” என்று சொல்லும் போது, அதை காதில் வாங்கியபடியே உள்ளே நுழைந்தாள் மஹதி.
என்ன விஷயம்? என்பது போல் துருவ் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். வாய் திறந்து எதுவும் கேட்காமல், அலைபேசியை எடுத்து,
சொல்லும்மா” என்று காதில் வைக்க, அவன் பேசுவதை குழப்பத்துடன் பார்த்தாள் மஹதி. ஏனென்றால் சென்ற நிமிடம் வர அவன் வீட்டுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறான் என்றுதான் நினைத்திருந்தாள்.
இப்போது கார்த்திக்கும் திரும்பி மஹதியைப் பார்த்தான். அவள் மனநிலை எப்படி இருக்கிறதோ என்று.
‘நான் தான் அவசரப்பட்டு மஹதி மனதை கெடுத்து விட்டேனோ’ என்ற குற்ற உணர்வு அவனிடத்தில்.
அச்சூழலை மாற்ற எண்ணிய மஹதி, “டைட்டில என் பெயர் போடுவீங்களா டைரக்டர் சார்?” துருவ் பிரதீப்பின் வீல் சேரை பிடித்த படி நின்றிருந்தவள், அதில் பியானா வாசிப்பது போல் தாளமிட்ட படியே. கேட்டாள். என்னை எதுவும் பாதிக்கவில்லை என்றுக் காட்ட முயற்சித்தாள்.
“வி.எஃப்.எக்ஸ் ல போடுவாங்க. அத்தை, மாமாகிட்ட சொல்லிடு”
“க்ராஃபிக்ஸ் டைரக்டர்ன்னு உங்க ஃப்ரெண்ட் பெயரை கொட்டை எழுத்துல போட்டு இருப்பீங்களே. அதைப் பார்த்து கூடவே அவங்க பிபி எகிறுமே” என்று அவள் புன்னகையுடன் கேட்க, இவர்கள் சம்பாஷணைகளை அமைதியாகப் பார்த்த துருவ், அவர்களை நோக்கி வந்து, மஹதியிடம், “என்ன?” என்றான்.
“எனக்கு 2 நாள் லீவு வேணும். அப்ளை பண்ணி 2 டேஸ் ஆச்சு. நீங்க அப்ரூவ் பண்ணல” என்று மஹதி சொன்னதும், நின்றபடியே குனிந்து கணிணியை தொடுதிரை செயலியால் தொட்டவன், அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போது விடுமுறை விண்ணப்பத்தில் இருந்த அப்ரூவ் பட்டனை க்ளிக் செய்து விட்டு நிமிர்ந்தான்.
மஹதி முகம் மலர, “தேங்க்ஸ்” என்று வெளியே செல்ல முயன்ற போது,
“ஹலோ மேடம்!!! கொஞ்சம் உட்காருங்க” என்றான் சற்று கடுமையாகவே.
“ம்ம்க்கும். அவன் இரண்டு நாளா லீவ் அப்ளிகேஷன அப்ரூவ் பண்ணாமல் இருக்கும் போதே உஷாராயிருக்க வேணாமா?” என்று கைகளை மூடி வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் கார்த்திக்.
மஹதிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக உட்கார சொல்கிறான்? என்று யோசித்தப்படியே அமர்ந்தாள்.
”அன்னைக்கு அப்படியே நேர்மாறா யோசிச்சு பாரு. நீ அந்த இடத்தில் இருந்தால் என்ன பண்ணுவ?” என்றான் நேருக்கு நேராக அவள் கண்களைப் பார்த்த படி.
அவளுக்குமே நன்றாக புரிந்தது. அத்தனை பேர் முன்னிலையில் அவனை அடித்தது எவ்வளவு பெரிய தவறு என்று.
அவள் அன்று இருந்த கோபத்தில், அப்படி செய்து விட்டாள். அவளுக்கே மனம் சமாதானம் ஆகாமல் தான், அவன் கண் முன்னால் வருவதையே தவிர்த்துக் கொண்டிருந்தாள். இப்போது எதுவும் சொல்ல முடியாமல் அருகில் அமர்ந்து இருந்த கார்த்திக்கை பாவம் போல் பார்த்தாள். எப்படியாவது காப்பாற்று என்பது போல் கண்கள் யாசிக்க,
‘போம்மா போ. என்னை காப்பாற்றிக்கவே வழியைக் காணோம்’ என்று அவனும் கண்களாலேயே சொல்ல
அவனை முறைத்து விட்டு, மீண்டும் துருவைப் பார்த்தாள். அவன் இவளை மட்டுமே பார்த்திருந்தான்.
“உங்களுக்கு மட்டும் தான் தன்மானம்,ரோஷம் எல்லாம் இருக்குமா? உன்னை ஃபயர் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்? பெருசா எந்த திறமையும் இல்லாமல் நீ இந்த டீம்க்கு வந்தது ப்ரோடியூசர் விருப்பம் எல்லாம் இல்லை. அவரை கன்வின்ஸ் பண்ணது உன் அருமை அத்தை பையன்” என்றதும், இவளுடைய தன்மானமும் சீண்டிவிடப்பட, மீண்டும் கார்த்திக்கை முறைத்தாள்.
“இப்பவே இந்த ப்ராஜெக்ட்ல இருந்து க்யிட் பண்ணிக்கிறேன். என்னை மாதிரி திறமை இல்லாத ஆளை வச்சிக்கிட்டு நீங்க கஷ்டப்பட வேணாம். ப்ளீஸ் என்னை எங்க கம்பெனிக்கே அனுப்பிடுங்க” என்று சொல்லும் போதே அவள் கண்கள் பனிக்க, கன்னத்தில் கை வைத்து அவளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன், பின்,
“ஓ.கே!! உங்க கம்பெனிக்கு மெயில் பண்ணிடுறேன்” என்று கணிணி புறம் திரும்பினான்.
“டேய் இன்னும் ஒரே மாசம் தான்டா இருக்கு. இப்போ போய் மஹதியை அனுப்புற?” என்று கார்த்திக் கோபமாகக் கேட்க,
“நீ பேச வேண்டியது அவங்கக்கிட்ட” என்று கனத்த மனத்துடன் வெளியே சென்றுக் கொண்டிருந்த மஹதியை சுட்டிக் காட்டிவிட்டு, கணிணியை நோக்கி கண்களை திருப்பினான் துருவ்.
“உன்னையெல்லாம்…” என்று சொல்லிவிட்டு மஹதியை பின் தொடர்ந்தான்.
இங்கு வரும் போது பலவித குழப்பங்களுடன் பெரிதாக விருப்பமின்றிதான் நுழைந்தாள். ஆனால் இன்று வெளியே செல்லும் முடிவை தானே எடுக்கும் சூழ்நிலை வந்த போது, யாரேனும் பூட்டிய அறைக்குள் விட்டால் ஓவென்று அழலாம் போல் இருந்தது.
துருவ், முதன்முதலில் டைட்டில் டிஸைனுக்காக அவளை திட்டிய அன்றுக் கூட, அவள் பெரிதாக வருந்தவில்லை. ஏனோ அவன் அருகாமையே போதுமானதாக இருந்ததோ என்னவோ.
“ஏய் மஹதி!!! அவன் உன்னை போக சொல்லல” என்று மஹதியை நிறுத்திச் சொன்னான் கார்த்திக்.
“நான்தான் வேஸ்ட்ன்னு சொல்றாங்க இல்ல. நான் இங்கே இருந்து என்ன பண்ண போறேன்”
“கேம் டிஸைன்ல இருந்த உன்னை சினிமா அனிமேஷன்க்கு கொண்டு வந்தது முழுக்க முழுக்க நான்தான். பட் நீ சங்கீத் கூட சேர்ந்து பண்ணின ஃபிலிம் எல்லாமே நல்லா இருந்தது. நான் எதிர்பார்த்தை விட நல்லாவே பண்ணிருக்க. அது மட்டும் இல்லாமல் பேசி பழகுவீங்கன்னு” என்று அவன் நிறுத்த, இப்பொழுதும் கண்களில் இருந்து வெளியே வர துடித்த நீரை அடக்கியபடி விரக்தி புன்னகையுடன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு, அவனைக் கடந்து சென்றாள்.

சென்னையிலுள்ள பிரபலமான தொழில்நுட்ப பூங்காவில் வேலை செய்வது மஹதிக்கு சற்று பெருமையாகத் தான் இருக்கும். அந்த வளாகத்தை அணுஅணுவாக ரசிப்பவள், இன்று அலுவகலகத்தின் உள்ளேக் கூடச் செல்லாமல், அங்கிருந்த காஃபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள்.
“ஹே எப்படிடீ இருக்க? 4 மன்த்ஸ் ரொம்பவே கஷ்டபட்டேன்” என்று அவளை தேடி வந்த காயத்ரி அவளைக் கட்டிக் கொள்ள, ஹரியும்,
“ஹே மஹி!!! ரொம்பவே மிஸ் பண்ணேன்” என்று வந்து விட்டான். அவர்களுக்கு பதில் சொல்லாமல் மஹதி புன்னகைக்க,
“என்னடி ரொம்பவே சைலன்ட் ஆகிட்ட” என்று கேட்டுவிட்டு, காதில் ரகசியகமாக
“கார்த்திக் பண்ண மேஜிக்கா” என்றாள்.
“காயூ, நான் எப்பவும் சொல்றது தான். கார்த்திக் எனக்கு அத்தை பையன் மட்டும் தான். வேற எதுவும் எங்களுக்குள்ள இல்ல” என்று அவள் உறுதியாகச் சொல்ல, அதற்குள் தூரத்தில் இருந்து பார்த்த குமரனும் இவர்கள் அருகில் வந்துவிட்டார்.
“மஹதி எப்படி இருக்கீங்க? நல்ல ஃபீட்பேக் வந்திருக்கும்மா. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்?” என்று கேட்டுக் கொண்டே எதிரே அமர்ந்தார்.
“நல்லா இருக்கேன் குமரன். இப்போ என்ன ப்ராஜெக்ட் போகுது?” என்று வினவ, அவரும் பதில் சொல்லி பேசிக் கொண்டிருந்தார்.
“ஆறு மாதம்ன்னு சொல்லிட்டு 4 மாதத்திலேயே அனுப்பிட்டாங்களேம்மா. என்னாச்சு?” என்று குமரன் தன் சந்தேகத்தை கேட்க, நிமிர்ந்து ஹரியையும், காயத்ரியையும் பார்த்தவள்,
“நிறைய பேருக்கு முன்னாடி க்ராஃபிக்ஸ் டீம் லீடை அறைஞ்சிட்டேன். அதான் வெளியே அனுப்பிட்டார்” என்று மஹதி சர்வசாதாரணமாகச் சொல்ல, ஹரியும், காயத்ரியும் பொங்கிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்க முயற்சிக்க, குமரன் மூவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, எழுந்து சென்று விட்டார்.
ஹரி, அவர் செல்லும் வரை காத்திருந்து, “சூப்பர் மஹதி!! குமரனையே கதிகலங்க வச்சிட்டியே” என்று கையைக் கொடுத்தான். அவன் கையை தட்டி விட்ட காயத்ரி,
“கார்த்திக்கை லவ் பண்ணல ஒகே. அப்படீன்னா யாரை லவ் பண்ற?” என்ற போது,
“அடப்பாவிங்களா!!! அப்போ நான் மட்டும் தான் சிங்கிளா” என்றான் ஹரி.
அப்போது, சங்கீத்திடம் இருந்து அழைப்பு வரவும் அவர்களை விட்டு சற்று நகர்ந்தவள், அவன் சொன்ன விஷயத்தில் அதிர்ச்சியானாள்.

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுது
கிழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
–(கவிஞர் மதன் கார்க்கி)