Categories
On-Going Novels Sudha Ravi

அத்தியாயம் – 10 (1)

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 10 (1)

ஸ்டீபன் கூறியதற்காக ஓய்வெடுக்க அறையில் படுத்தவளுக்கு உறக்கம் வர மறுத்தது. அமித்தை பார்த்தது பழைய நினைவுகளை கிளறி விட்டது. கண்களை மூடினால் சிறுவயது நியாபகங்கள் நெஞ்சை அழுத்தியது. எத்தனை சந்தோஷமான நாட்கள் அவை. கவலை என்ற ஒன்றை அறியாத வயது. அன்பான குடும்பத்தில் ஆசை மகளாய் அன்று சுற்றி வந்தவள் இன்று பழி வெறி கொண்டு ஆயுதமெடுத்து வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலை என்ன?

அன்று நடந்தவைகள் எல்லாம் கண்முன்னே வந்து போக, உடலெல்லாம் வியர்த்து வழிய எழுந்தமர்ந்தாள். ‘முடியாது! என்னால் உறங்க முடியாது! என்று பகை முடிக்கிறேனோ அன்று தான் உறக்கம் என் கண்களைத் தழுவும்!’ என்று உறுதி எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

முகம் கழுவிக் கொண்டு வந்தவள் ஒரு பக்கம் மேப்பை பிரித்து வைத்துக் கொண்டு, மற்றொரு பக்கம் லாப்டாப்பை ஆன் செய்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள். அவளது மனம் அடுத்த கட்ட நடவடிடிக்கையைத் திட்டமிடத் தொடங்கியது. பக்காவாக ஒரு திட்டம் ரெடியானதும் அலைப்பேசியை எடுத்து தகவல்களைத் திரட்டத் தொடங்கினாள்.

“பரீன்! நீ தான் அடுத்த டார்கெட்!” என்று அவனது புகைப்படத்தை பார்த்துக் கூறினாள்.

தனது முடிவைத் தேடி பரீன் பெங்களுர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். துமாக்குறு மற்றும் சுற்று வட்டாரத்தில் எதிரியைத் தேடிக் கொண்டிருக்கும் சமயம் அவன் பெங்களூரில் அமித்தை போட்டிருக்கிறான். ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு விதம். எதிரி எப்படிப்பட்டவன் என்று எந்தவித தடயமும் இல்லாது கண்ணைக் கட்டிக் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

‘எப்படி யோசித்தாலும் இந்த திடீர் எதிரி எங்கிருந்து வந்தான்? அவனது நோக்கமென்ன? எதற்காக பசவப்பாவின் ஆட்கள் அனைவரையும் குறி வைக்கிறான்?’ என்று பலவாறு யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் மனதிலும் அந்த முகம் தெரியாத எதிரி மீது எல்லையில்லா கோபம் இருந்தது.

போதை மருந்து கடத்தலில் ஈடுப்பட்டிருந்தாலும் தனது ஆட்கள் அவற்றை உபயோகிக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தான் பசவப்பா. பரீன் மட்டும் அவனுக்குத் தெரியாமல் அவ்வப்போது சிறிய அளவில் எடுத்துக் கொள்வது உண்டு. இன்று அவனது மனநிலைக்கு தேவைப்படும் போல் தோன்றியதால் வீட் எனப்படும் போதை வஸ்து சிகரெட்டை புகைக்க ஆரம்பித்தான்.

மெல்ல-மெல்ல அது  அவனை இழுத்துக் கொள்ள தனது இருக்கையில் சாய்ந்தமர்ந்து கொண்டான். கண்கள் செருகிக் கொள்ள போதை அவனை இழுத்துக் கொள்ள ஆரம்பித்தது. அரைகுறை மயக்கத்துடனே பெங்களூரை சென்றடைந்தான்.

எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள உயர்ந்து நின்ற அபார்ட்மென்ட்களைத் தாண்டி தனித்தனி வீடுகளாக இருந்தப் பகுதிக்குள் நுழைந்து ஒரு வீட்டின் முன்பு நின்றது. டிரைவர் பரீனை எழுப்ப தள்ளாடிக் கொண்டே எழுந்தவன் கார் கதவை அறைந்து சாத்திவிட்டு வீட்டிற்குள் சென்று அங்கிருந்த சோபாவில் அப்படியே விழுந்தான்.

டிரைவரைப் பார்த்து “நீ போ! ஒரு பத்து மணிக்கு வந்தா போதும்” என்று கூறியவன் கால்களை நீட்டி சோபாவிலேயே படுத்துவிட்டான்.

 ஆட்டோமாடிக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான் டிரைவர்.

அவனது கார் அந்தத் தெருவை தாண்டும் நேரம், தேன்மொழியின் கார் நுழைந்தது.

ஆங்காங்கே வாக்கிங் போய் கொண்டிருந்தவர்களும், பேப்பர் போடும் பையன்களைத் தவிர அதிக நடமாட்டமில்லாது இருந்தது. பரீன் இருந்த வீட்டை விட்டு சற்றுத் தள்ளி காரை நிறுத்திவிட்டு அதில் அமர்ந்தபடியே அங்குள்ள நிலைமையை ஆராய்ந்தாள். எந்த அரவமும் இருப்பது போல் தெரியவில்லை.

மெல்ல காரிலிருந்து இறங்கி அவனது வீடு நோக்கி சென்றாள். அவனது வீட்டின் வெளிக் கேட்டை திறந்து கொண்டு உள்ளே செல்லும் போது  அவளது பார்வை நாலாப்புறமும் சுழன்றது. வாயிற் கதவின் அருகே சென்றவள் சிறிது நேரம் உற்று கவனித்து விட்டு எந்த சப்தமும் இல்லாததால், தனது பேன்ட் பையிலிருந்து சாவிகள் அடங்கிய வளையத்தை  எடுத்தாள்.

சாவி துவாரத்தின் வழியே செலுத்தி முயற்ச்சித்து ஒரு சாவி சரியாக பொருந்திப் போக  “கிளிக்” என்று சப்தம் எழுப்ப, கதவை உள்ளே தள்ளிக் கொண்டு செல்லும் போது உஷாராக காலை வைத்தாள். கதவின் பின்னே அவன் நின்று கொண்டிருக்க கூடுமோ என்று. ஆனால், அவனோ அங்கே சோபாவில் உருண்டு கிடந்தான்.

அவனை அப்படிப் பார்த்ததும் ‘நமக்கு அதிக வேலை வைக்க மாட்டான் போல இருக்கே’ என்றெண்ணிக் கொண்டு கதவை அழுத்திச் சாத்தி விட்டு மெல்ல அவன் அருகே சென்றாள்.

கால்களை அழுந்த பதிய வைத்து அவன் தீடீரென்று தாக்கினால் சமாளிக்கும் வகையில் அடியெடுத்து வைத்தாள். அதற்கெல்லாம் அவசியமின்றி அவன் முற்றிலுமாக போதையில் இருந்தான்.

அவன் முகத்தை திருப்பி அப்படியும், இப்படியுமாக அசைத்து பார்த்துவிட்டு, வீட்டின் மற்றப் பகுதிகளை ஆராய்ந்து விட்டு வந்தாள். எவரேனும் மறைந்திருகிறார்களா என்று பார்த்து விட்டு வந்தாள். எவரும் இல்லை என்று தெரிந்ததும். தனது தோளில் தொங்கியப் பையிலிருந்து தாம்புக் கயிறை எடுத்தவள் அதில் சுருக்கு முடிச்சு போட்டு சீலிங்கில் இருந்த கொக்கியில் மாட்டினாள்.

அப்போதும் அவன் அசைவின்றி மயக்கத்திலேயே இருந்தான். அதைக் கண்டு அவன் முகத்தில் தட்டி “டேய்! என்னடா நீ! கொஞ்சம் கூட போராடாம சாவப் போற” என்று அவன் முகத்தை நன்றாக அறைந்தாள்.

அவள் அறைந்ததில் சிறிது அசைவு வந்தது அவனிடம் “நன்ன சத்ரு யாரு?” என்றான் முனகலுடன்.

அதைக் கேட்டவள் “உன் சத்ரு உன் முன்னாடியே தாண்டா நிற்கிறேன்” என்று கூறியவள் அவனது கழுத்தில் கயிறை கட்டினாள்.

பின்னர் அவனை எழுப்பி சோபாவில் சாய்வாக அமர வைத்துவிட்டு மெல்ல கயிறை கிணற்றில் தண்ணீர் இழுப்பது போல் இழுக்க ஆரம்பித்தாள். அவனது உயரத்திற்கும், உடல் எடைக்கும் அவனோடு இழுப்பது சிரமமாக இருந்தது. கயிறு மேலே இழுபட-இழுபட அவனது கழுத்து இறுக்கப்பட்டது. அவனது உடல் துடிக்க ஆரம்பித்தது. விழிகள் மேலே செருகி உயிருக்குப் போராட ஆரம்பித்தான்.

தனது காரியத்திலே கண்ணாக இருந்தவளின் பார்வை அவனது உயிர்த்துடிப்பதை கல்லாக இறுகி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது காதில் அம்மாவின் வார்த்தைகள் ஒலித்தது. ‘நாம வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் அடுத்த உயிர்களுக்கு பாதுக்காப்பைத் தரனும். நம்மால முடியலேன்னாலும் மற்றவர்களின் உதவியுடன் அதை செய்யணும்’ என்பார்.அப்படிப்பட்ட உங்களுக்கு ஏன்-மா அந்தக் கொடுமை நடந்தது. உங்களுக்கு இருந்தது உயிர் இல்லையா? இதோ இன்னைக்கு துடிதுடிக்கிறானே இவனும் தானே காரணம் என்றெண்ணியவள் வெறி கொண்டு வேகமாக இழக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரம் நன்றாக இறுக்கப்பட்ட கயிறு அவனது கதையை முடித்தது. கயிற்றிலிருந்து கையை எடுத்தவள் அவன் அருகே சென்று பார்த்து இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

மடமடவென்று கயிற்றை அவிழ்த்து பையில் வைத்துக் கொண்டு வீட்டின் கதவை திறந்து வெளியேறினாள். வேகம் வேகமாக தெருமுனையை நோக்கிச் சென்றாள். பரீனை விட்டு-விட்டு சென்ற டிரைவர் தக்ஷாவின் உத்தரவுபடி அவனோடு பாதுக்காப்பாக இருப்பதற்காக திரும்பி வந்து கொண்டிருந்தான். அவனுடன் இன்னும் இரு ஆட்களும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *