Categories
Uncategorized

அத்தியாயம் – 10

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 10

தன்னிடம் வெறுப்புடன் பேசி விட்டு சென்றவன் மலரின் முன்பு கண்ணீருடன் நின்றதை கண்டதும் கார்த்திகாவின் மனது பற்றி எரிந்தது. அத்தை மகளான தனக்கு இருக்கும் உரிமையை விட, மாமன் மகள் இரெண்டாம் பட்சம் தான் என்று இத்தனை நாள் எண்ணி இருந்தாள். ஆனால் இன்றோ தன்னை விட அவனுக்கு அவள் முக்கியமாக போய் விட்டாள்.

எப்படியாவது விஜயனே அவளை வெறுக்கும் படி வைக்க வேண்டும் என்று மனதில் கருவிக் கொண்டாள். இங்கே அவள் ஒன்றை மறந்து விட்டாள். தனது செயல்களுக்கு மலரிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை எனும் போது அவள் மீதான அன்பு கூடிக் கொண்டு தான் போகுமே தவிர குறையாது.

‘நான் இந்த வீட்டில் கல்யாணம் பண்ணி வந்த பிறகு உன் கண் முன்னாடியே அவரோட வாழறேண்டி. நீ தினம் தினம் பார்த்து பார்த்து சாகனும்டி. அதுக்காகவே உனக்கு கல்யாணம் ஆக விடாம தடுக்கிறேன்’ என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அப்போது அவளை இடித்துக் கொண்டு அங்கே வந்த பவானி “வழிவிடு! எப்பவும் அடுத்தவங்க வழியில் இடைஞ்சலா நிற்கிறதே உன் வேலையா போச்சு” என்று கடுப்படித்துக் கொண்டு தோட்டத்துக்கு சென்றாள்.

மலரும் அண்ணனும் நிற்கும் இடத்திற்கு சென்றவள் “என்ன அண்ணனே பண்ணி வச்சிருக்கே? நீ எப்படி அவளை கட்டிக்க சம்மதம் சொல்லலாம்? இதோ நிற்கிறாளே இவளுக்கு கேட்க நாதியில்லேன்னு தானே எல்லோரும் அவ வாழ்க்கையை ஏலம் போடுறீங்க?” என்றாள் கோபமாக.

தங்கையின் கேள்வியில் அதிர்ந்தாலும் “பவானி! நீ இதில தலையிடாதே! சின்ன பொண்ணு பேசாம இரு!” என்றான்.

அவனை கூர்ந்து பார்த்தவள் “யாருன்னே சின்ன பொண்ணு? இவளுக்கும் என் வயசு தானே அப்போ நான் கேட்கலாம்” என்றாள் அழுத்தமாக.

“நான் கிளம்புறேன் பவானி. இனிமே பேச எதுவுமில்ல. பேசாம போ” என்றான் எரிச்சலாக.

“நில்லுங்க அண்ணா! அவ பாட்டுக்கு அட்டூழியம் பண்ணுவா நாம எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போகனுமா? இது உங்க வாழ்க்கை அண்ணா. இதோ இவளுக்கு தனக்கு ஒன்னு வேணும்னு கேட்க கூட தெரியாது. நீங்க மலரை விட்டுட்டு அவளை கல்யாணம் பண்ணினா சத்தியமா உங்க கிட்ட என் உசுரு இருக்கிற வரை பேச மாட்டேன் சொல்லிட்டேன்” என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.

அதைக் கண்டு பதறிய மலர் “என்ன பேசுற பவானி? அவங்க மேல எந்த தப்பும் இல்ல. குடும்பத்துக்காக தன்னோட ஆசையை விட்டுக் கொடுக்கிறாங்க. நீ அவங்களுக்கு பக்கபலமா இருக்கணும் பவானி” என்றாள் அழுகையுடன்.

அவளை முறைத்துக் கொண்டே “தியாகச் செம்மலே! உன்னளவிற்கு நான் நல்லவ இல்ல. என்னால இதை மன்னிக்க முடியாது. அண்ணா நான் விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க. நிச்சயமா உங்க கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டேன். அவளையும் அண்ணியா ஏத்துக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அவள் சென்றதும் இருவருக்கும் மூச்சு முட்டுவது போலிருந்தது. அந்த சூழலே அனலில் நிற்பது போல் தோன்றியது. ஒருவர் மீது ஒருவர் ஆசை வைத்தது பாவமென்றால் விருப்பமே இல்லாத ஒருத்தி அதை உடைத்து பார்க்க நினைப்பது எத்தகைய பாவம்? சற்று நேரம் அப்படியே நின்றவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்றான்.

மலரோ அங்கிருந்த படியில் அப்படியே அமர்ந்து விட்டாள். இனி, வரும் நாட்களில் இந்த வீட்டின் நிம்மதி பறி போகும் என்பதற்கு சாட்சியாக பவானி பேசி விட்டு சென்றிருக்கிறாள். அவர்களின் திருமணத்திற்கு தன்னால் இங்கிருக்க முடியுமா? அவர்களின் வாழ்க்கையை கண் கொண்டு பார்க்க முடியுமா? அதை தன்னால் தாங்க இயலுமா? என்று எண்ணி நடுங்கினாள்.

போக்கிடத்திற்கு கூட வழியில்லாமல் போன தன் நிலையை எண்ணி கலங்கினாள்.

பிரபாவும் தனது அண்ணன் மகளை எண்ணி ஒருபுறமும், தன் மகனின் திருமண வாழ்வை எண்ணி சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். தனது மகனின் திருமணத்தை தன் விருப்பத்திற்கு ஏற்ப செய்ய இடமில்லாமல் என்ன வாழ்க்கை இது? இந்த வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டு வந்தது முதல் மாமியாரின் பேச்சை மீறி எதையும் செய்து விடவில்லை. தனக்கான மரியாதை எங்கேயும் தரப்படவில்லை என்று தெரிந்தாலும் இது தான் பெண்களின் வாழ்க்கை என்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

அந்த வீட்டில் சமையல்கட்டு தான் அவரது நிரந்தர இடம். அங்கே கூட அங்கம்மாளின் ஆதிக்கம் தான். அவர் சொன்னவற்றை மட்டுமே சமைக்க முடியும். மொத்தத்தில் அந்த வீட்டின் அடிமையாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். கணவரின் அன்பிருந்தாலும் அன்னையை மீறி அவரால் எதுவும் செய்து விட முடியாது. அதிலும் அலமேலு விஷயத்தில் அங்கம்மாள் அதி தீவிரமாக இருப்பார்.

இப்போது பிரபாவின் எண்ணமெல்லாம் விஜயன், கார்த்திகா திருமணத்திற்கு முன்பு மலரின் திருமணத்தை முடித்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்பது தான். கார்த்திகா திருமணமாகி வந்துவிட்டால் மலரின் நிலை இங்கு கவலைக்கிடமாக மாறி விடும் என்று எண்ணி இதை யோசித்தார். ஆனால் தன் எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.

எப்படியாவது அனைவரையும் சமாதானம் செய்து அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

தண்ணீர் குடிக்க உள்ளே நுழைந்தவன் அன்னை அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு மனம் வருந்தினான்.

“அம்மா! ஏன் இருட்டில உட்கார்ந்திருக்கீங்க?” என்றவன் குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அருந்த ஆரம்பித்தான்.

கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்தவர் “என் பிள்ள வாழ்க்கையே இருட்டாகப் போகுது. நான் இருட்டில் உட்கார்ந்திருந்தா என்ன?” என்றார் சோர்வாக.

குடித்து கொண்டிருந்த தண்ணீர் செம்பை கீழே வைத்து விட்டு அன்னையின் அருகில் சென்றவன் “அம்மா! தயவு செஞ்சு கலங்காதீங்க! இன்னும் எதுவும் கெட்டுப் போகல. நான் மாமா வந்ததும் பேசி பார்க்கிறேன்” என்றான்.

அதுவரை இருந்த சோர்வு நீங்கி விரிந்த விழிகளுடன் “அவர் ஒத்துக்குவாரா விஜயா? பொண்ணுக்காக பார்ப்பாரா?” என்றார் பதட்டமாக.

“இல்லம்மா! அத்தையை விட மாமா தெளிவா யோசிப்பார். விரும்பாத மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க நிச்சயம் ஒத்துக்க மாட்டார். நீங்க அமைதியா இருங்க” என்றான்.

“எல்லாம் கூடி வந்தா நம்ம குலதெய்வத்துக்கு பொங்க வைப்போம் விஜயா” என்றார் சற்றே உற்சாகமான குரலில்.

அன்னையை உற்சாகப்படுத்த கூறினாலும் அவன் மனதில் உறுதியாக அது நடந்து விடும் என்று தோன்றவில்லை. மூன்று பெண்களும் தங்களின் ஆசைக்கு விஷத்தை வைக்கவே முயற்சிப்பார்கள் என்றே தோன்றியது. அதை வெளிக்காட்டாது “ம்ம்..சரிம்மா” என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றான்.

எண்ணங்கள் அவனை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தது. மலர் பெற்றோர் இன்றி அடைக்கலமாக தங்கள் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவள் மீதான அன்பு மலரத் தொடங்கி இருந்தது. ஆரம்பத்தில் பவானியிடம் காட்டும் அக்கறை போன்றிருந்தது வளர வளர அவள் மீதான ஈர்ப்பாக மாறியது. அவளது மென்மையான சுபாவமே காதல் கொள்ள வைத்தது. அதிர்ந்து பேசாத குணமும், அன்பாக நடந்து கொள்ளும் விதமும் அவனது மனதை புரட்டி போட்டது.

தங்களது ஆசைக்கு பாட்டியிடம் இருந்து தான் எதிர்ப்பு வரும் என்று நினைத்தான். ஆனால் கார்த்திகா தங்கள் வாழ்வில் குறுக்கே வருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுடனான திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாலும், அவளை மனைவியாக எண்ண முடியவில்லை. அதிலும் அவள் நடத்திக் கொண்டிருக்கும் நாடகத்தை நினைத்து வெறுப்பு தான் வந்தது.

எப்படியாவது மாமாவிடம் பேசி அவருக்கு புரிய வைத்து இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று யோசித்தான். அதே நேரம் அன்னையும், மகளும் சதியாலோசனையில் இறங்கி இருந்தார்கள்.

“இங்க பாருடி நாளைக்கு அப்பா வந்தவுடனே அவர் கண்ணுல நீ பட்டுடாதே. நான் முதல்ல அழைச்சிட்டு போய் எல்லா விஷயத்தையும் சொல்லி சரி பண்ணிடுறேன். அதுக்கு பிறகு நீ அவரை பார்க்க வா” என்றார் அலமேலு.

“அப்பா ஒத்துக்குவாராம்மா?”

“ம்ம்..அவரை ரொம்ப யோசிக்க விடக் கூடாடி. நான் ஒன்னு சொல்றேன் கேளு. நீ வந்து அப்பாவை பார்க்காதே. படுக்கையிலேயே இரு. கிணத்துல விழுந்ததுல உடம்புல அடின்னு சொல்லிடுறேன். அப்போ தான் பதறி போவாரு” என்று மகளுக்கு தவறான வழியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அலமேலு.

அவர் சொன்னதைக் கேட்டதும் “ஆமாம்ம்மா இப்படி பண்ணினா தான் அப்பா பயந்து போய் ஒத்துக்குவார்” என்றாள் உற்சாகமாக.

சற்றே யோசனையுடன் மகளை பார்த்தவர் “அதுக்கு முன்னே நமக்கு ஒரு வேலை இருக்கு கார்த்தி. உங்க கல்யாணத்துக்கு முன்னே அந்த குட்டியை இங்கிருந்து விரட்டி விட்டுடனும். அப்போ தான் உன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்” என்றார்.

“என்ன சொல்றம்மா?”

“ஆமாடி! அவளுக்கு ஏதாவதொரு மாப்பிள்ளையை பார்த்து ஒட்டி விட்டுடுவோம்”.

“வேண்டாம்மா! அவ இந்த வீட்டுலையே இருக்கனும்மா! நாங்க வாழறதை பார்த்து அவ வயிறு எரிஞ்சு சாகனும்” என்றாள் இறுகிய குரலில்.

மகளை முறைத்தவர் “புரியாம பேசாதே கார்த்தி! விஜயன் விருப்பபட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அரை மனசா இருக்கிற ஆம்பளையை கைக்குள்ள போட்டுகிறது ரொம்ப கஷ்டம். அதுவும் அவன் விரும்பின பொண்ணு முன்னாடி இருக்கும் போது. அதனால அவளை தாட்டி விட்டா தான் உன் வாழ்க்கை சரியா போகும்” என்றார்.

“இல்லம்மா! எனக்கு என் வாழ்க்கையை காப்பாத்திக்க தெரியும். மாமாவை எப்படி என் பின்னாடி சுத்த வைக்கனும்னு தெரியும். ஆனா அவ அதெல்லாம் இங்கிருந்து பார்க்க்கனும். அதனால அவ கல்யாண பேச்சை எடுக்காதீங்க. அப்படியே வந்தாலும் அதை எப்படியாவது தடுத்திடுங்க” என்றாள்.

மகளின் முகத்தை வழித்து நெட்டி முறித்தவர் “இப்போ தாண்டி என் பொண்ணுன்னு நிரூபிக்கிற. நீ பாட்டுக்கு அவ பின்னாடி சுத்திட்டு இருந்தியேன்னு கவலையா போச்சு. என்ன இருந்தாலும் மாமனை கட்டிக்கிட்டு இங்கே ஆட்சி செய்ற மாதிரி வருமா சொல்லு” என்றார்.

“ம்ச்…எனக்கு அப்போ புரியலம்மா. இப்போ தான் தெரியுது. நீ சொன்ன மாதிரி வெளில கட்டி கொடுத்தா இந்த மாதிரி இருக்க முடியாது. அதுவும் இங்கே பாட்டி எனக்கு தான் ஆதரவா இருப்பாங்க. அத்தையும் ஒரு ஊமை. நான் தான் ராணி மாதிரி இருப்பேன் இங்கே” என்றாள்.

“இனி, உன்னைப் பத்தி எனக்கு கவலையில்ல கார்த்தி. உங்கப்பாவை ஒத்துக்க வச்சிட்டா போதும்” என்று கூறி நிம்மதியாக தலையை சாய்த்தார்.

ஒரு திருமண பந்தத்திற்கு தேவை இரு மனங்களின் அன்பு. ஆனால் இங்கு நடப்பதோ விருப்பமில்லாமல் ஒருவனை அந்த பந்தத்திற்குள் நுழைக்க முயலுகிறார்கள். தாலியை கட்டி விடலாம் ஆனால் வாழ்க்கையை அவன் தானே வாழ வேண்டும். அதை அந்த பிடிவாதக்காரி உணரவில்லை. அவனை மிரட்டி தாலி கட்டிக் கொண்டாள் வாழ்ந்து விடலாம் என்று பைத்தியகாரத்தனமாக எண்ணுகிறாள்.

அவளின் அர்த்தமற்ற பிடிவாதத்தால் கெடப் போவது அனைவரின் நிம்மதியும் என்பதை அவள் உணரவில்லை. உணரும் போது அனைத்தும் கடந்து போயிருக்கும்.

விடியலுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் காத்திருந்தனர்.

விடிந்ததும் தில்லையும், விஜயனும் வயலுக்குப் போய் விட, அங்கம்மாள் மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஸ்டேஷனுக்கு போன வில்லு வண்டி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினார் சண்முகம்.

மாப்பிள்ளையின் தலை தெரிந்ததும் “அலமு! மாப்பிள்ளை வந்தாச்சு பாரு” என்று குரல் கொடுத்தார்.

தோளில் துண்டை உதறி போட்டுக் கொண்டு உள்ளே வந்தவர் பவ்யமாக நின்று கொண்டிருந்த அங்கம்மாளிடம் “நல்லா இருக்கீங்களா?” என்றார்.

“நல்லா இருக்கேன் உட்காருங்க மாப்பிள்ளை” என்று கூறினார்.

அவர் அமரவும் சமயலறையில் இருந்து அவசரமாக தண்ணீர் செம்புடன் வந்த பிரபா “வாங்க அண்ணா” என்றார்.

“ம்ம்…நல்லா இருக்கியாம்மா” என்று கேட்டுவிட்டு தண்ணீரை அருந்தினார்.

அதற்குள் அலமேலு அறையிலிருந்து வேகமாக அங்கே வந்தார்.

“வாங்க…வந்துடீங்களா?” என்று கேட்டவரின் குரலில் அழுகையின் சாயல்.

பிரபாவிற்கும், அங்கம்மாளிற்கும் எதற்கு இந்த அழுகை என்று புரியாமல் பார்த்தனர்.

சண்முகமோ “பிள்ளை எங்க அலமு உறங்கராளா?” என்றார்.

அதைக் கேட்டதுமே விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார்.

சண்முகத்திற்கு ஒன்றும் புரியவில்லை “என்னாச்சு அலமு எதுக்கு அழுகுற?” என்று அதட்டினார்.

“நீங்களே வந்து பாருங்க உங்க பிள்ளைய” என்று புடவை தலைப்பால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

சண்முகத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அங்கம்மாளும் இவ ஏன் இப்படி கண்ணை கசக்குறா கார்த்தி நல்லாத்தானே இருந்தா என்று யோசித்தார்.

அழுகையுடன் கணவரை கூட்டிக் கொண்டு அறைக்கு சென்றார். அங்கு கார்த்தி நலிந்து போய் படுத்திருப்பதை கண்டதும் பதறி போனவர் “என்னாச்சு கார்த்திக்கு?” என்றார் கோபத்தோடு.

ஓவென்று அழுகையுடன் “கிணத்துல குதிச்சிட்டாங்க” என்றார்.

“என்னது!”

“ஆமாங்க! மாமனை கட்டிக்கணும்னு அம்மா கிட்ட சொல்லி இருக்கா. அதுக்கு அம்மா உங்கப்பா விஜயனுக்கு கொடுக்க விரும்ப மாட்டாங்கன்னு சொன்னாங்க. அதனால கிணத்துல குதிசிட்டா” என்று தனது கதையை எடுத்து விட்டார்.

மகளின் நிலை கண்டு கலங்கி போய் நின்றார் அந்த தந்தை. அதன் பின்னே உள்ளே நாடகத்தை அவர் அறியார்….

1 reply on “அத்தியாயம் – 10”

Enna Aniyayam Sudhama… Pennukku penthan ethiriya? Yen ipdi rendu perum seyyaranga? Ithula Malar Vijay rendu peroda life m la poguthu… Shanmugatha vera ippo thisai thiruppa poranga… Angamma Alamelu Karthika epdi irukka koodathukaranthukku example. Prabha Bhavani Malar ivenga epdi irukananumkarathuku example… Konjam pathu pannunga sudhama…. Malar pavam.. vijayan illenalum avala veliyila kondu poidunga…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *