Categories
On-Going Novels Sudha Ravi

அத்தியாயம் – 13

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 13

புனே சென்று அங்கிருந்து லோனாவாலா செல்லும் வழியில் இருந்த கோபோலி என்கிற கிராமத்தை சென்றடைந்தாள் வதனா. கடந்த சில வருடங்களாக அவளது இருப்பிடமாக இருந்து வந்த ஊரைக் கண்டதும் அவளது முகத்தில் நிம்மதி வந்தது.

அவளது வரவிற்காக வாயிலேயே காத்திருந்த அங்கிள் ஸ்டீபன் தோளோடு அணைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

வரவேற்பறையில் இருந்த சோபாவில் பொத்தென்று விழுந்தவள் அழுத்தமாக கண்களை மூடிக் கொண்டாள். அவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, சமயலறைக்குச் சென்று சுட-சுட டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து எழுப்பினார்.

அவர் கொடுத்த டீயை வாங்கி எதிரே இருந்த மேஜை மேல் வைத்துவிட்டு வாஷ் ரூம் சென்று முகத்தை அலம்பிக் கொண்டு வந்தமர்ந்தாள். எதுவும் பேசாது அமைதியாக டீயை அருந்தத் தொடங்கினாள்.

தனது கையிலிருந்த டீயை அருந்திக் கொண்டே அவளை பார்த்துக் கொண்டிருந்தார். முரட்டு ஜீன்ஸ் அவளது உடலைத் தழுவி இருக்க, வெளிறிப் போன சட்டை ஒன்றை அணிந்திருந்தாள். தலையோ ஆண்களைப் போன்று வெட்டி இருந்தாள். கழுத்து, காது என்று எந்த நகையும் அணிந்திருக்கவில்லை. மொத்தத்தில் அவளை முதன்முதலாக பார்க்கும் எவரும் பெண்ணென்று நினைக்க மாட்டார்கள்.

பதினைந்து வருடங்களாக ஒரு சந்நியாசி போல எதற்கும் ஆசைப்படாமல், தனது குறிக்கோளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் அவளைப் பெருமையாக பார்த்தார். அதே சமயம், எப்படி வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு பெண் என்றும் இரக்கமும் பிறந்தது.

டீயை அருந்தி முடித்ததும் அவரை நிமிர்ந்து பார்த்தவள் “ஆஷிஷ் ஏன் என்னை கடத்தி வச்சான்?’ என்றாள்.

கப்பை கீழே வைத்துவிட்டு தோளை குலுக்கியவர் “உன்னை காப்பாத்த நினைச்சிருக்கலாம்” என்றார்.

அதைக் கேட்டதும் சட்டென்று சோபாவை விட்டு எழுந்தவள் “அவன் யார் என்னைக் காப்பாத்த? இன்னொரு முறை என் வழியில் குறுக்கே வந்தால் அவனையும் போட்டுத் தள்ள வேண்டி இருக்கும்” என்றாள் ஆழ்ந்த பார்வையுடன்.

அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு எழுந்தவர் “அவனை குறைச்சு எடை போடாதே” என்றார்.

அவரது பதிலைக் கேட்டு முகத்தில் சூடேற “என்னுடைய எதிரியை முடிப்பதற்கு குறுக்கே யார் வந்தாலும் விட மாட்டேன். அவனை நான் எதுக்கு எடை போடணும். சொல்லி வைங்க உங்க ஆள் கிட்ட….என்னை நெருங்குவது கரண்டை தொடுவது போல” என்று கூறி விட்டு தனதறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

 

தன்னையும் மீறி இதழில் வந்தமர்ந்த புன்னகையை அடக்கிக் கொண்டே ‘பேட்டி!உன் குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு நியாயம் தேடும் முயற்சியில் உன்னை ஈடுபட வைப்பதில் எனக்கு ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. உன்னுடைய வாழ்க்கை அஸ்தமிச்சு போயிடுமேன்னு கவலைப்பட்டேன். ஆனா, ஆஷிஷ் உன்னுடைய வாழ்க்கையில் நுழைந்து என்னுடைய கவலைகளை தீர்த்துட்டான். நிச்சயமா அவன் உன்னை விட மாட்டான்! ‘ என்று கூறிக் கொண்டார்.

அறைக்குள் நுழைந்தவளோ படுக்கையில் விழுந்து கண்களை மூடிக் கொண்டாள். பல நாட்களுக்குப் பிறகு நித்திரை அவளைத் தீண்டியது. உறக்கம் தன்னை தீண்டுவதை விரும்பவில்லை என்றாலும்,  உடல் அசதி அவளது எண்ணங்களை மீறியும் உறங்கச் செய்தது. அடித்து போட்டார் போல் சுமார் மூன்று மணி நேரம் உறங்கி எழுந்தாள்.

மெல்ல கண்களைத் திறந்தவள் ஜன்னலின் வழியே வந்த ஒளியைக் கண்டு மாலை வரை உறங்கி இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டாள். படுக்கையில் இருந்து எழுந்து சென்று குளியறைக்குள் புகுந்து கொண்டாள். நீண்ட நாட்களுக்குப் பின் ஆற அமர குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவள் அங்கிளைத் தேடினாள்.

யாரிடமோ அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவர் சைகையில் அமரும்படி கூறினார். அவரையே பார்த்துக் கொண்டு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தாள். சிறிது நேரம் பேசி விட்டு அலைப்பேசியை அணைத்தவர் எழுந்து சென்று அவளுக்கான உணவை எடுத்து வந்து கையில் திணித்தார்.

தட்டை வாங்கி கையில் வைத்துக் கொண்டு “ நிலைமை எப்படி இருக்கு அங்கிள்?” என்றாள் அவர் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டே.

“முதல்ல சாப்பிடு! அப்புறம் பேசுவோம்” என்றவர் மடிக்கணினியை இயக்கியபடி அமர்ந்து கொண்டார்.

இதற்கு மேல் அவரிடம் இருந்து எதுவும் அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டவள் உணவை சாப்பிடத் தொடங்கினாள். உணவு உள்ளே செல்ல-செல்ல எத்தனை பசியில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டாள். அவர் கொடுத்ததை உண்டு விட்டுஎழுந்து சென்று மேலும் போட்டு சாப்பிட்டு விட்டு அவர் முன் வந்தமர்ந்தாள்.

“இப்போ சொல்லுங்க? என்ன பிரச்சனை?” என்றாள்.

மடிக்கணினியை ஓரமாக வைத்தவர் அவள் பக்கம் திரும்பி “பசவப்பா இப்போ ரொம்ப நெருக்கடியான நிலையில் இருக்கான்” என்றார்.

இதழை வளைத்து “அவனுக்கு இது ஒன்னும் புதுசில்லையே” என்றாள்.

அவரோ மறுப்பாகத் தலையசைத்து “இல்ல பேட்டி! ஒரு பக்கம் நீ! இன்னொரு பக்கம் அடிம்போலோவை தேடி இன்டர்போல் பெங்களூருக்குள் அடியெடுத்து வச்சாச்சு. அவங்க அவனைத் தேடும் போது சிக்கும் ஆதரங்கள் எல்லாம் அவனுக்கு எதிரா திரும்பும். பல பெரிய தலைகள் எல்லாம் இப்போ பயப்பட ஆரம்பிச்சாச்சு. அதுவும் அவனுக்கு ஆபத்து தான்” என்றார்.

சற்று யோசித்தவள் “ஆனா அவன் இதை எல்லாம் சாதரணமா கடந்துடுவான். அவன் பார்க்காததா இந்த பதினைந்து வருஷத்தில்” என்றாள் வெறுப்புடன்.

“நீ சொல்றது சரி தான்! அவன் ஏதோ ப்ளான் செஞ்சு ஆஷிஷை பந்திபூர் அனுப்பி இருக்கான். அவனைத் தொடர்ந்து இன்டர்போல் போயிருக்காங்க” என்றார்.

“ஒ..” என்று யோசித்தவள் “இது அவன் அவர்களை திசை திருப்ப போட்ட ப்ளான். கண்டிப்பா அவங்களுக்கு அங்கே எதுவும் சிக்காது. அதே சமயம் ஒரு பெரிய போர்களத்தை உருவாக்கப் போறான்” என்றாள்.

தலையை ஆட்டி அவளை ஆமோதித்தவர் “இந்த பிரச்சனையில் அவன் உன்னை தேடுவதை விடல” என்றார்.

“ம்ம்..” என்று யோசனையுடன் கூறியவள் அமைதியாக இருந்துவிட்டாள்.

இருநாட்கள் அதிகம் பேசிக் கொள்ளாமல் யோசனையுடனே கழிந்தது. மறுநாள் காலை ஸ்டீபனிடம் பேச ஆரம்பித்தாள். பெங்களூரின் நிலவரங்களைப் பற்றி அறிந்து கொண்டாள்.

சோபாவிலிருந்து எழுந்தவள் “அவனுடைய கையாட்களை இழந்திருக்கான். அந்த வெறி இருக்கும். தேடட்டும்! நான் கிருஷ்ண மந்திர் வரை போயிட்டு வரேன்” என்று கூறி வெளியேறினாள்.

வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை இயக்கி அதில் ஏறி அமர்ந்தவள் கோவிலுக்கு செல்லும் பாதையில் பயணிக்க ஆரம்பித்தாள்.

பத்து நிமிடத்திற்கு பிறகு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தவள் அங்குள்ளவர்களை பார்க்கத் தொடங்கினாள். அவளது விழிகள் மட்டும் வெளியுலகை பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தனது குடும்பத்தை தேடி ஓடிச் சென்றிருந்தது.

தன்னை அறியாமலே கண்களை மூடி அமர்ந்து கொண்டு குடும்பத்தாருடன் இருந்த நினைவுகளை அனுபவிக்கத் தொடங்கினாள். அப்போது அவளது அருகில் “மதுரா!…யாழினி” என்று குரல் கேட்க, தூக்கிவாரிப் போட அவசரமாக கண்களைத் திறந்து சுற்றுப்புறத்தை ஆராயத் தொடங்கினாள்.

அவளது அருகில் சுமார் ஐந்து வயது உள்ள குழந்தையொன்று நின்று கொண்டு வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தக் குழந்தையைத் தேடி வந்த அன்னை “மதுரா! என்னடா இப்படி கையை விட்டுட்டு போகலாமா?” என்று கடிந்து கொண்டாள்.

அன்னையின் கேள்விக்கு பதிலளிக்காமல் வதனாவை நோக்கி கையை நீட்டி “அங்கிள்…தூங்கிட்டு இருந்தாங்க” என்றது.

சங்கடத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்த குழந்தையின் அன்னை “சாரி சார்! உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டா” என்று கூறிவிட்டு குழந்தையின் கையை இழுத்தபடி செல்ல ஆரம்பித்தார்.

அதற்குள் குழந்தையின் தகப்பனும் வந்துவிட “மதும்மா! எங்கடா போன?” என்று குனிந்து தூக்கிக் கொண்டார்.

அந்த தகப்பனின் அழைப்பு அவளது உயிர் வரைத் தீண்ட, அப்படியே சோர்வுடன் கண்மூடி அமர்ந்துவிட்டாள்.

“மதும்மா!”…’இப்படித்தானே அலுவலகத்தில் இருந்து வரும் போதே அழைத்துக் கொண்டு வருவார் தந்தை. ஓடிச் சென்று அவரது கையைப் பற்றிக் கொள்ளும் அக்காளின் நினைவு  இதயத்தில் வலியை ஏற்படுத்தியது.

கலைந்து போன ஓவியங்களாக அவள் மனதில் சில நிகழ்வுகள் வந்து போனது. உறங்கும் போது நெற்றியில் இதழ் பதித்து விலகும் அன்னையின் நினைவு வர நெஞ்சம் பாரமாகிப் போனது. குடும்பம் ஒரு கோவிலாக வாழ்ந்த தங்களது வாழ்க்கையை நிர்மூலமாக்கிய தினம் ஞாபகத்தில் வர உடலும், மனமும் இறுகிப் போனது.

தந்தையும், தாயும் மதுரா என்றழைத்தால் அண்ணன் கௌரவ் யாழினி என்றே அழைப்பான். அத்தனை பாசத்தையும் மனதில் சுமந்து கொண்டு இருந்தவனின் இறப்பு கண்முன்னே வந்து போக, மனதினுள் வெறி ஏறிப் போனது. சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தவள், அவசரமாக எழுந்து கோவிலை விட்டு வெளியேறினாள்.

எப்படி வண்டியை எடுத்தாள் என்ன வேகத்தில் வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளே அறியவில்லை. மனம் முழுவதும் வெறி! வெறி! பசவப்பாவை அந்த நிமிடமே கொன்று போடும் வன்மம் எழ ஸ்டீபனின் முன் சென்று நின்றாள்.

தன் முன்னே வந்து நின்றவளைக் கண்டதும் விழி உயர்த்திப் பார்த்தவர் அவளது கண்களில் தெரிந்து ஆக்ரோஷத்தைக் கண்டு அவளது மன நிலையை உணர்ந்து கொண்டார்.

மெல்ல எழுந்து அவளது தோள்களைப் பற்றி அமர வைத்தவர் “வதனா! ஏன் இவ்வளவு கோபம்” என்றார்.

அவளோ அவரது முகத்தைப் பார்க்காமலே “நான் பெங்களுர் போகணும்” என்றாள் உறுதியான குரலில்.

“இப்போ வேண்டாம்”

தன் முன்பிருந்த மேஜையை ஓங்கி குத்தி “முடியாது! நான் போகணும்!” என்றாள் வெறியுடன்.

“சொல்றதைக் கேள் வதனா! இது சரியான சமயம் இல்லை…உணர்ச்சிவசப்படுவதை விட,  ஒழுங்கா யோசிச்சு காயை நகர்த்தணும்” என்றார் கடுமையாக.

சடாரென்று எழுந்து தனது அறைக்குச் சென்று மேப்பை எடுத்து வந்து அவர் முன் போட்டாள். மடமடவென்று சில, பல இடங்களை புள்ளி வைத்து “இந்த இந்த இடங்களில் தான் பசவப்பாவோட ஆட்கள் இருக்காங்க. மற்ற இடங்கள் எல்லாம் என்னால உள்ளே நுழைய முடியும். அதனால என்னை தடுக்காதீங்க” என்றாள்.

அவள் சுட்டிக் காட்டிய இடங்களை எல்லாம் ஒரு முறை ஆராய்ந்தவர் அவளை நிமிர்ந்து பார்த்து “இந்த இடங்கள் எல்லாம் அவன் உனக்கு விரிக்கும் வலை” என்றார்.

அவர் சொன்னதும் தனது கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவளும் கூர்ந்து பார்க்க, அவர் சொல்வது உண்மை தான் என்று புரிந்து போனது. மேலும் சில வினாடிகள் மேப்பிலேயே கவனத்தை வைத்துவிட்டு நிமிர்ந்தவளின் கண்களில் உறுதி தெரிந்தது.

“நான் குதிரை மூக்கு போக போறேன்” என்றாள்.

அதைக் கேட்டதும் யோசனையுடன் அவளைப் பார்த்தவர் “பசவப்பா பெங்களூரில் இருக்கிறான்” என்றார்.

“தெரியும்…என்னுடைய இலக்கு பசவப்பா இல்லை. அடிம்போலோ!” என்றாள் உறுதியான குரலில்.

அதைக் கேட்டதும் கொஞ்சம் கூட பதறாது “அவன் உன்னுடைய எதிரி இல்லை வதனா” என்றார்.

எழுந்து சென்று அறையை வலம் வந்தவள் “என்னுடைய எதிரிக்கு எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்கணும்”.

“அவன் சர்வதேச குற்றவாளி. அதோட பலம் பொருந்தியவன். அவன் குதிரை மூக்கில் தான் இருப்பான் என்பது என்ன நிச்சயம்?” என்றார் சந்தேகத்தோடு.

“அதை நான் கிளம்பும் முன்பு உறுதி படுத்திக்கிறேன். ஆனா, எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்? ஆஷிஷ் எங்கே இருக்கான்?”

அவளது கேள்வியைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர் “அவன் பந்திபூர்ல இருக்கான்” என்றார்.

சற்று நேரம் யோசனை செய்தவள் “அவனுக்கு நான் அடிம்போலோவை தூக்கப் போற நியூஸ் போகும் படி செய்யுங்க” என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் குழப்பத்துடன் அவளைப் பார்த்து “அவனுக்கு எதுக்கு சொல்லணும் ?” என்றார்.

அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் “எதுக்குன்னு நடக்கும் போது தெரிஞ்சுப்பீங்க” என்றாள் கிண்டலான தொனியில்.

சற்றே குழப்பமான மனநிலையுடன் உள்ளே எழுந்து சென்றார்.

அவளோ மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டவள் அவர் கொடுத்த உணவை உண்டு விட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அரை மணி நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்தவள் பயணத்துக்கு தயாராக வந்திருந்தாள். அவளது கண்களில் ஒருவித தெளிவும், உறுதியும் தெரிந்தது.

அவளை பார்த்தவுடன் மெல்ல அருகில் வந்து “இத்தனை நாள் நீ போராடியது வேற, இப்போ அவன் உன்னை தேடிகிட்டு இருக்கான். இனி, உன்னுடைய ஒவ்வொரு அடியும் மிகுந்த கவனத்துடன் எடுத்து வைக்கணும்” என்றார்.

அவரை கூர்ந்து பார்த்துக் கொண்டே “நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

முன்பே முடிவு செய்யப்பட்ட பயணமாக இல்லாததால் கிடைத்த வண்டியில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தாள். ரயிலிலோ, பேருந்திலோ பயணம் செய்யாது சரக்கு லாரிகளில் பயணித்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறு பையனின் தோற்றத்தில் இருந்ததால் அவளுக்கு எந்த தொந்திரவும் நேராது இருந்தது. பெங்களூருக்குள் நுழையாமல் நேரடியாக குதிரை மூக்கு செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தாள்.

நாளா புறங்களில் இருந்தும் செய்திகளை சேகரித்துக் கொண்டவள் மனதில் என்ன செய்ய வேண்டும் என்கிற திட்டம் உருவாகியது.

பந்திபூர்…

இன்டர்போல் ஆட்கள் ஹசனின் இருப்பிடத்தை சுற்றி வளைத்திருந்தனர். ஆஷிஷ் ஹசனுடன் அவனது அறையில் இருந்தான். இன்டர்போல் நுழைந்ததுமே ஆஷிஷை தொடர்பு கொண்ட பசவப்பா “நீ அங்கிருந்து கிளம்பிடு” என்றான்.

சுற்றிலும் ஆட்கள் தேடுதல் வேட்டையில் இருக்க, தான் எப்படி அங்கிருந்து தப்புவது என்று யோசிக்காமல் ஹசன் முன்பு சென்று நின்றான். அலட்சியமாக அவனை நிமிர்ந்து பார்த்தவன் “என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.

“நான் இங்கிருந்து வெளியேறனும்” என்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்து கிண்டலாக “அதுகென்ன அனுப்பிட்டா போச்சு. மேலே போறதுக்கு நீயே தயாரா இருக்கும் போது நான் மாட்டேன்னா சொல்வேன்” என்றான்.

ஏளனமான ஒரு பார்வையை பார்த்துவிட்டு விழிகளால் அறையை ஆராய ஆரம்பித்தான் ஆஷிஷ்.

அவனது நோக்கத்தை புரிந்து கொண்ட ஹசன் “என்னோட உதவி இல்லாம இங்கிருந்து உன்னால வெளியேற முடியாது” என்றவன் துப்பாக்கியை அவனது முகத்துக்கு நேரே உயர்த்திப் பிடித்திருந்தான்.

அந்நேரம் வெளியில் சண்டை நடப்பதற்கான அறிகுறியாக துப்பாக்கி சத்தம் கேட்க, அதில் சிறிது கவனம் பிசகியவனை பாய்ந்து வளைத்துப் பிடித்திருந்தான் ஆஷிஷ்.

முரட்டு உருவங்கள் இரெண்டும் அறையில் உருண்டு பிரண்டு சண்டையிட, ஹசனின் கையிலிருந்த துப்பாக்கி அறை எங்கும் குண்டை பொழிய ஆரம்பித்தது. இருவருமே பலசாலிகள் ஆதலால் கடும் சண்டை நடந்தது. அறையே போர்களமாக காட்சியளித்தது.

சிறிது நேர போராட்டத்திற்குப் பின் ஆஷ்ஷின் கையில் இடம் மாறி இருந்தது துப்பாக்கி. ஹசனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு எழுந்து நின்றவன் அவனது நெஞ்சில் சரம் மாறியாக குண்டை பொழிந்தான்.

அவனது உயிர் பிரியும் நேரம் உள்ளே வந்த ஹசனின் வலது கையான ராக்கி “ஒ..நீயே முடிச்சிட்டியா?” என்றவன் அலட்டிக் கொள்ளாமல் “சரி சீக்கிரம் என் பின்னே வா” என்றழைத்துக் கொண்டு அறையின் ஒரு மூளைக்கு சென்று நின்றான்.

அங்கே சுவற்றில் கோடிழுத்து லேசாக நெம்பித் தள்ளினான். அதன் பின்னே இருளான பாதை ஒன்று தெரிந்தது. ஆஷிஷைப் பார்த்து “இந்த வழியாக போனால் தேசியச் சாலை வரும். அங்கே உனக்காக ஒரு ஜீப் காத்திருக்கும். ஆனால் போகும் வழி உனக்கு பாதுகாப்பானது இல்லை. காட்டு மிருகங்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது” என்றான்.

அவன் காட்டிய வழியை பார்த்துக் கொண்டவன், அவன் தோளிலிருந்து துப்பாக்கியும், தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டவன் “நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான்.

அபாயத்தைக் கண்டு அஞ்சாமல் செல்லுபவனையே சற்று நேரம் பார்த்திருந்தவன் அக்கதவை அழுந்த மூடி இருந்த இடம் தெரியாமல் அடைத்தான்.

இருளடர்ந்த காட்டு வழி, ஆங்காங்கே நரியின் ஊளைச் சத்தமும், நடப்பதால் எழும் சருகுகளின் ஓசையும் தவிர வேறு எந்த வித ஓசையுமின்றி இருந்தது. காதுகளை கூர்மையாக வைத்துக் கொண்டு தன்னைச் சுற்றித் தெரியும் அசைவுகளை கவனமாக கவனித்துக் கொண்டும் முன்னேறிக் கொண்டிருந்தான். சிறிது நின்றாலும் எந்த காட்டு விலங்காவது அடித்துப் போடும் அபாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தவனின் நடை வேகமாக இருந்தது.

பாதி தூரம் வரை கடந்து விட்டவனின் பார்வை ஓரிடத்தில் கூர்மையாக படிந்து விலகியது. அங்கு பளிங்கு போல இரு ஜோடிக் கண்கள் தெரிவதை கண்டு கொண்டான். அது என்ன விலங்கு என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால், அது அவனை வேட்டையாட பதுங்குகிறது என்பதை உணர்ந்தவன் துரிதமாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டான்.

தன்னைச் சுற்றிலும் பார்வையை ஒட்டியவன் அவசரமாக பக்கத்திலிருந்த மரத்தின் கிளையை உடைத்து கையில் வைத்துக் கொண்டான். அவன் எதிர்பார்த்தபடியே ஓநாய் ஒன்று அவன் மீது பாய்ந்தது. அதை முன்பே உணர்ந்திருந்ததால் தனது கையிலிருந்த கிளையால் அதை ஓங்கி அடித்தான். அதில் ஏற்பட்ட வலியில் அது சுருண்டு விழ, அதை பயன்படுத்திக் கொண்டவன் கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினான்.

சுருண்டு விழுந்த ஓநாயோ எழுந்து நின்று தனது சொந்தங்களை ஊளையிட்டு அழைக்க ஆரம்பித்தது.  அந்த சத்தத்தைக் கேட்டதுமே உள்ளுக்குள் குளிரெடுக்க, அவற்றின் கையில் சிக்கினால் மொத்தமாக கிழித்தெறிந்து விட்டு தான் விடும் என்பதை உணர்ந்து கொண்டு மேலும் வேகத்தைக் கூட்டினான்.

அந்த ஓநாயின் குரலைக் கேட்டு வந்த மற்றவைகளும் அவனைத் துரத்த ஆரம்பித்தது. தன்னை காத்துக் கொள்ள ஓடியவனின் பார்வையில் எதிரே நின்றிருந்த ஜீப் தெய்வமாகத் தெரிந்தது. ஜீப்பில் இருந்தவனும் அவசரமாகக் கதவைத் திறந்து அவனை இழுத்து உள்ளே போட்டான்.

கதவடைக்கப்பட்டதும் பின்னே வெறியோடு துரத்திக் கொண்டு வந்த ஓநாய்கள் அனைத்தும் பாய்ந்து ஜீப்பின் மீதேறி குதிக்கத் தொடங்கியது. ஜீப் டிரைவர் அதைக் கண்டு பயந்து போய் ஸ்டார்ட் செய்து வேகத்துடன் செல்லுத்த ஆரம்பித்தான். அதில் ஜீப்பிலிருந்த ஓநாய்கள் கீழே விழுந்து ஊளையிட ஆரம்பித்தது.

சீட்டில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஆஷிஷ் பின்னே திரும்பிப் பார்த்தான். அங்கு சுமார் பத்து பனிரெண்டு ஓநாய்கள் வெறியுடன் ஜீப்பை பிடிக்க ஓடி வந்து கொண்டிருந்தது. இவற்றிடம் சிக்கி இருந்தால் தன் நிலை என்னவாகி இருக்கும் என்பதை உணர்ந்தவனின் முகத்தில் ஒருவித புன்னகை வந்தமர்ந்தது.

அதைக் கண்டதும் ஜீப்பின் டிரைவர் “என்ன பாஸ் சிரிக்கிறீங்க? எப்பேர்பட்ட ஆபத்திலிருந்து தப்பிச்சு வந்திருக்கீங்க” என்றான்.

அவனை ஒருபார்வை பார்த்து “எனக்கு அபாயங்கள் என்றாலே ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு தான் என் வாழ்நாளோட முக்கியமான தருணத்தை அனுபவிச்சிருக்கேன்” என்றான் சீட்டில் சாய்ந்தபடி.

அவனை பைத்தியக்காரனை பார்ப்பதைப் போல் பார்த்து “அதுசரி அதுங்க கையில கிடைச்சிருந்தா குடலை உருவி இருக்குங்க” என்றான் கடுப்புடன்.

அவனது பேச்சைக் காதில் வாங்காமல் “இப்போ நீ எங்கே போற?” என்றான்.

அவனும் ரோட்டிலிருந்து கவனத்தை திருப்பாது “உங்களை மைசூரில் விட சொல்லி நாயக்கோட உத்தரவு” என்றான்.

அதைக் கேட்டதும் பதில் ஏதும் பேசாமல் கண் மூடி அமர்ந்து கொண்டான். சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்கு பிறகு மைசூரை அடைந்தனர். அங்கு அவன் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது.

அறைக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த அலைப்பேசி அடித்தது.

“சொல்லுங்க நாயக்”

“உன் மேல நம்பிக்கை இல்லாம இருந்தேன். ஆனா, இன்னைக்கு அதில் ஒரு பெர்சென்ட் மாற்றம் வந்திருக்கு” என்றான் பசவப்பா.

தனக்குள் சிரித்துக் கொண்டு “பந்திபூர்ல நிலைமை எப்படி இருக்கு?” என்றான்.

“இன்டர்போல் எல்லா இடங்களிலும் நுழைஞ்சிட்டாங்க. ஆனா, அவங்க தேடி வந்தது அங்கே கிடைக்கல. அதோட அங்கே உள்ள ஆதிவாசிகள் தலைவரை கொன்னுட்டதா சொல்லி ஒரே களேபரம் நடக்குது” என்று கூறி இடி-இடியென நகைத்தான்.

நரியொன்றை வேட்டையாடி கொக்களிக்கும் நீ

வெறிக்கொண்டு வரும் வேங்கையிடம் தப்புவாயா?

ஒன்றின் அழிவில்  இன்னொன்றின் தொடக்கம்,

ஒன்றின் முடிவில்  மற்றொன்றின் முதல்,

அராஜக அரக்கனின் அகோர அழிவில்

அவளின்  அன்பின் தொடக்கம் தொடங்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *