Categories
On-Going Novels Sudha Ravi

அத்தியாயம் – 15

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம்- 15

அடிம்போலோவுடன் நேரத்தை செலவிட வேண்டி இருக்கிறதே என்கிற வெறுப்புடனே சுற்றிக் கொண்டிருந்தான் ஆஷிஷ். சினாரும், கரனும் அங்கு தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஆஷிஷிடம் நெருங்க முயலவில்லை. அவனை எதிரியைப் பார்ப்பது போல தான் பார்த்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை ட்ரெக்கிங் செல்வதற்கான ஆயத்தங்களுடன் ஹோட்டலை விட்டு கிளம்பினாள். ஹோட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் ஏறி குதிரை மூக்கின் ட்ரெக்கிங் பகுதிக்கு சென்று இறங்கினாள். அவளைப் போல வந்திறங்கிய மற்றவர்களுடன் ஒன்றாக மலை ஏற ஆரம்பித்தனர். ஒரு சிலர் குழுவாக வந்திருக்க, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே சென்றனர். இவளைப் போன்று தனியாக வந்தவர்களில் ஓரிருவர் இவளை அணுகி பேச முயல, இவளோ அவர்களிடம் பேச விருப்பமில்ல்லாததை முகத்தில் காட்டி விட்டு முன்னேறினாள்.

மதியம் வரை அனைவருடனும் ஒரே பாதையில் அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தாள். குதிரை மூக்கின் டாப் வியுவை நெருங்க ஒரு மணி நேரம் இருந்த நிலையில் மெல்ல எவரும் அறியாமல் பாதை மாற ஆரம்பித்தாள். எவரிடமும் பேசாமல் பின்தங்கி வந்து கொண்டிருந்ததால் அவளது இருப்பை யாரும் கண்டு கொள்ளவில்லை. அது அவளுக்கு வசதியாகப் போனது. ட்ரெக்கிங் கைட் அங்குள்ளவற்றை பற்றி விளக்கிக் கொண்டு முன்னே சென்றிருக்க, இவள் மெதுவாக நழுவி காட்டுப் பாதையில் வேகம்-வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் தன்னை தேடுவதற்குள் அதிக தூரத்தை கடந்து விட வேண்டும் என்கிற வேகம் இருந்தது. உள்ளே செல்ல –செல்ல வெளிச்சம் குறைந்து மரங்களின் ஊடே தெரிந்த காட்டின் அழகை ரசித்தவாறே உஷாரான நிலையில் சென்று கொண்டிருந்தாள்.

சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்களால் அடைய முடியாத இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல பையிலிருந்து குதிரை மூக்கின் வரைப்படத்தை எடுத்தவள், தான் எங்கிருக்கிறோம் எந்த பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்று குறித்துக் கொண்டு கண்களையும், காதுகளையும் சுற்றுபுறத்தை ஆராய விட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

இங்கும் காட்டு மிருகங்களின் நடமாட்டம் இருப்பதால் எந்த நேரம் எந்த மிருகம் வந்து தாக்கும் அபாயம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தவள் ஆதலால் ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்துடன் எடுத்து வைத்தாள்.

பசவப்பாவின் சரக்கு கூடாரங்கள் இருக்கும் திசையை நோக்கி செல்ல ஆரம்பித்திருந்தாள். மெல்ல மாலை மங்கி இருள் கவிழ ஆரம்பித்தது.

காலையில் அழகாக தெரிந்த காட்டுப் பகுதி இப்போது பயத்தை ஏற்ப்படுத்தியது. ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி முன்னேறிக் கொண்டிருந்தாள். பசவப்பாவின் கூடாரங்கள் இருக்கும் என்று அவள் போட்டிருந்த பகுதிக்கு நூறடி முன்பே தன்னை சுதாரித்துக் கொண்டவள், இனி ஒவ்வொரு அடியும் கவனத்துடன் வைக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொண்டாள்.

சிறிது தூரம் கடந்ததும் அவள் எதிர்பார்த்தபடி அந்த எல்லையை காவல் காத்துக் கொண்டிருந்தவர்களின் பார்வையில் விழுந்தாள். அடுத்த நிமிடம் இரண்டு பேர் அவளை நோக்கி துப்பாக்கியோடு ஓடி வர ஆரம்பித்தனர்.

தன்னை நோக்கி ஓடி வருபவர்களை கண்டு பயந்து ஓடுவது போல் ஓட ஆரம்பித்தாள். சிறிது நேரம் அவர்களின் கையில் அகப்படாமல் போக்கு காட்டியவள் தானே அவர்களிடம் சிக்கினாள். முதலில் ஆணென்று நினைத்தவர்கள் அவள் பெண் என்றதும் சுவாரசியமாக ஆராய தொடங்கியது.

“ஏண்டா! இவளை அங்க கொண்டு போனா கருப்பனுக்கு தான் விருந்து வைக்கணும். அவனோ சோலிய முடிச்சிட்டு தான் பார்ப்பான்” என்றான்.

“ஆமாம்-டா! இவ யாரு என்னன்னும் தெரியாதே? நாம கொண்டு போகாமலும் இருக்க முடியாதே” என்றான் மற்றொருவன்.

“சரி! வா! இவ தலையெழுத்து இங்கே வந்து சாவனும்னு இருக்கு” என்று கூறியபடி அவளது கையைப் பற்றி தர-தரவென்று இழுத்துச் சென்றனர்.

கூடாரங்கள் இருந்த பகுதியில் நுழைந்ததும் சரியாக அடிம்போலோ வெளியே வந்தான்.

அவனது கண்கள் எதிரே வந்தவர்களிடம் சென்று நின்றது.

அவனைக் கண்டதுமே உள்ளுக்குள் குளிரெடுக்க இருவரும் துள்ளிக் கொண்டிருந்தவளை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றனர்.

நேரே வந்து அவர்கள் எதிரில் நின்றிருந்தவனின் பார்வை அங்குலம் அங்குலமாக அவளை அளந்தது.

“ஹூ ஆர் யு?” என்றான் கனமான குரலில்.

அவளோ பயந்த குரலில் “சார்! சார்! நான் ட்ரெக்கிங் வந்தேன். வழி மாறி போச்சு” என்றாள் கண்ணீருடன்.

அவன் மெல்ல அவளைப் பிடித்திருந்த ஆட்களிடம் கையை விலக்கிக் கொள்ள சொன்னான். அவர்கள் கையை எடுத்தும் அவசரமாக பாய்ந்து அவன் அருகில் சென்று நின்று கொண்டாள்.

அதைப் பார்த்ததும் காடே அதிர “ஹாஹா…ஹாஹா” என்று சிரிக்க ஆரம்பித்தான். அவளைப் பிடித்தவர்களும் அவனுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரிப்பு சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த ஆஷிஷின் பார்வையில் அடிம்போலோ அருகில் நின்ற வந்தனா பட்டாள்.

அவளைப் பார்த்ததுமே ‘ஆபத்திற்குள் தலையை கொடுத்திருக்கிறாள்’ என்று தோன்றினாலும், அவளது தைரியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

ஆஷிஷை கண்டதும் அவள் இதழில் ஏளனமான புன்னகை வந்து போனது.

அவனும் அதை கண்டுகொண்டாலும், அதையும் மீறி அவனது பார்வை அவள் இதழில் அதிக நேரம் நின்று மீண்டது.

“என்ன நடக்குது இங்கே” என்றான் ஆஷிஷ்.

அவளைப் பிடித்து வந்தவர்கள் செய்தியை உரைக்க, தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டவன் அவர்களிடம் அவளது பையை ஆராயும்படி கூறினான்.

அனைவரின் முன்பும் அவளது பை கொட்டி கவிழ்க்கப்பட்டது. அதிலிருந்து உணவு பொருட்களும், குடிநீரும், பெண்களுக்கே உரித்தான மேக்அப் ஐட்டங்களும் இருந்தது.

அதைக் கண்டதும் அவள் உயரத்திற்கு குனிந்த அடிம்போலோ “காட்டுல எதுக்கு மேக் அப்? மிருகங்களை மயக்கவா?” என்று கேட்டு இடி-இடியென சிரித்தான்.

அவன் சிரித்துக் கொண்டிருக்கும் போதே கீழே கிடந்த பொருட்களை மீண்டும் பையில் வைக்க சொல்லிவிட்டு அவர்களிடம் “இவளை என் கூடாரத்தில் கொண்டு கட்டிப் போடுங்க. காலையில் ட்ரெக்கிங் ஸ்பாட்டில் கொண்டு விட்டுடலாம்” என்று உத்தரவிட்டான் ஆஷிஷ்.

அதைக் கேட்டதும் சிரிப்பை நிறுத்திய அடிம்போலோ நிதானமாக ஆஷிஷை ஆராய்ந்து விட்டு “அவள் இன்றிரவு என்னோடு இருக்கட்டும்” என்றான் கூர்மையான குரலில்.

அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாது “நீ எங்கள் விருந்தாளி தான் என்பதை அடிக்கடி மறந்து போயிடுற அடிம்போலோ. இங்கே இப்போ நான் வைத்தது தான் சட்டம்” என்றான் அழுத்தமான குரலில்.

அவன் சொன்னதைக் கேட்டவன் மெல்ல அருகில் சென்று நின்று கொண்டிருந்த ஒருவனிடமிருந்து அலைப்பேசியை எடுத்து பசவப்பாவை அழைத்தான்.

“சொல்லு அடிம்” என்றான்.

“ம்ம்…உன்னோட விருந்தோம்பல் அவ்வளவு தானா பஸ்வப்பா? நான் யார் என்று உனக்கு தெரியுமில்லையா? உன்னோட ஆட்களே என்னை மரியாதை குறைவா நடத்தலாமா?” என்றான் கடுமையாக.

அதைக் கேட்டதுமே “அடிம்! போனை ஆஷிஷ் கிட்ட கொடு” என்றான் எரிச்சலுடன்.

அவன் கையிலிருந்து போனை வாங்கியதும் “அவன் என்ன சொன்னாலும் நீ கேட்கணும் ஆஷிஷ்” என்றான்.

“நாயக்..” என்று ஆரம்பித்தவனை தடுத்து நிறுத்தி “அந்த பொண்ணு ஒரு வேலை உளவு பார்க்க வந்தவளா இருக்கலாம் ஆஷிஷ். அவன் கிட்ட விட்டா நமக்கு வேலை மிச்சம்” என்றான் பசவப்பா.

அங்கு நடக்கும் ஒவ்வொரு தகவலும் யாராவது ஒரு ஆள் மூலம் பசவப்பாவிற்கு உடனடியாக சென்று விடும்.

“ஒருவேளை அவனோட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திட்டா?”

“என்ன பேசுற ஆஷிஷ்! கேவலமா யோசிக்கிற! நீ எதையும் கண்டுக்காம சரக்கை அடிச்சிட்டு உன் கூடாரத்தில் போய் படு” என்று கூறி விட்டு போனை அனைத்தான்.

ஆஷிஷின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அடிம்போலோ அவனருகில் சென்று தோளை தட்டிக் கொடுத்து “நைட் விருந்து வேணும். காட்டில் என்னென்ன கிடைக்குதோ அடிச்சு போட்டு விருந்து வை” என்று கூறி விட்டு அவளது கையை உடும்பு பிடியாக பற்றி தர-தரவென்று தனது கூடாரத்திற்கு இழுத்துச் சென்றான்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் தோள்களை குலுக்கிக் கொண்டு ‘நிச்சயம் அவளுடைய நிமிர்வை பார்த்தா இவனை முடிசிடுவான்னு நினைக்கிறேன். ஆனா, இங்கே இருந்து எப்படி தப்ப போறான்னு தான் பார்க்கணும்’ என்று யோசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

எதிரே அகப்பட்டவர்களிடம் அன்றைய இரவிற்கு தேவையானவற்றை செய்ய சொல்லி உத்தரவிட்டு விட்டு தனது கூடாரத்திற்குள் நுழைந்தான்.

அதே நேரம் சினாரும்,கரனும் மிகுந்த உற்சாக மன நிலையில் இருந்தனர்.

“இந்த கருப்பன் கேடி-டா! அந்த ஆஷிஷ் பயலை கண்ணுல விரலை விட்டு ஆட்டுறான்” என்றான் கரண்.

“ஆமாம்! எனக்கும் இப்போ தான் திருப்தியா இருக்கு. என்ன ஆனாலும் சரி…இன்னைக்கு இவனை கருப்பன் இருக்கிற கூடாரத்துக்கு கிட்ட விடவே கூடாது” என்றான் சினார்.

அதே நேரம் தனது கூடாராத்திற்கு இழுத்துச் சென்றவளை அங்கிருந்த ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டு விட்டு எதிரே இருந்த பெட்டியின் மீது அமர்ந்து அவளை நோட்டம் விட ஆரம்பித்தான்.

வெளியில் இருந்தவரை கண்ணீருடன் இருந்தவள் கூடாரத்திக்குள் சென்றதும் எதுவுமே நடக்காத மாதிரி சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது செயல் புரியவில்லை.

மெல்ல தனது கனத்த தொண்டையை கனைத்து “நீ யார்?” என்றான்.

அவனைக் கண்டு சற்றும் அஞ்சாமல் விழிகளை நேருக்கு நேர் சந்தித்து “ட்ரெக்கிங் வந்தவள்” என்றாள்.

பக்கத்திலிருந்த சிறிய பெட்டி ஒன்றிலிருந்து சுருட்டை எடுத்து பற்ற வைத்தவன் “அது நீ சொல்கிற கதை. நான் கேட்கிறது உண்மையை” என்றான்.

அவனை பார்த்து சிரித்தவள் “பரவாயில்லை உனக்கு கூட மூளை இருக்கு” என்றாள் நக்கலாக.

தனது கருத்த உருவத்தை லேசாக உலுக்கி அவளை ஆழ்ந்து பார்த்தவன் “ம்ம்..” என்று உறுமிக் கொண்டவன் “உன்னோட இந்த தைரியம் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க ஊர் பெண்கள் எல்லாம் கத்தி அழுது ஆர்பாட்டம் பண்றாங்க. அதைப் பார்த்து அலுத்துப் போயிருந்தேன்” என்றான் அவளது முகத்தை ஆராய்ந்தபடி.

அதைக் கேட்டதும் கண்களை இறுக மூடித் திறந்தவள் “அவங்க எல்லாம் மிருகங்களை கூண்டில் மட்டுமே பார்த்தவங்க” என்றாள்.

மெல்ல எழுந்தவன் அவள் எதிரே வந்து நின்று அவளது முகவாயை இறுகப் பற்றி “சொல்லு நீ யார்?” என்றான்.

அவன் பற்றியதில் அதிக வலியைக் கொடுத்தாலும் “என்ன சொல்ல சொல்ற?” என்றாள்.

மேலும் அழுந்தப் பற்றி முகத்தின் முன்னே குனிந்தவன் “உன்னை போலீஸ் உளவு பார்க்க அனுப்பி இருக்காங்களா?” என்றான்.

அவனது கையின் வலிமையில் முகம் சிவந்து கன்னிப் போக “நீ எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில் தான்” என்றாள்.

அவளது முகவாயிலிருந்து கையை இறக்கியவன் கழுத்தில் கையைப் பதித்து “உங்க ஊர் போலீசுக்கு என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. அதனால தான் இப்படியொரு விருந்தை அனுப்பி இருக்காங்க” என்றவன் அவள் கன்னத்தோடு கன்னம் உரசச் சென்றான்.

அவனது நோக்கம் புரிந்தவள் அவனது கன்னம் முகத்தருகே வந்ததுமே நறுக்கென்று பற்களை அழுந்தப் பதித்து கடித்து விட்டாள்.

அதில் சட்டென்று அவளை உதறியவன் வலியில் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அவனது அறையில் உதடுகள் கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அந்நேரம் சினாரும், கரனும் ஆஷிஷை கூடாரத்தின் உள்ளே வர விடாமல் தடுக்க முயற்சிக்க, அவர்களை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவனின் பார்வையில் அவளது முகத்தில் வழிந்த ரத்தம் பட்டது.

அப்பொழுதும் அவள் சிறிதும் கவலைப்படாமல் மிகச் சாதரணமாக இருந்தாள்.

ஆஷிஷ் அனுமதியில்லாமல் கூடாரத்தில் நுழைந்ததும் கடுப்பானவன் அவன் பின்னே நுழைந்த சினாரையும், கரனையும் பார்த்து கத்தினான்.

“என்னோட அனுமதி இல்லாம எதுக்கு எல்லோரும் உள்ளே வரீங்க?”

சினார் தயங்கித் தயங்கி “ஆஷிஷ் எங்களை தள்ளிட்டு உள்ளே வந்துட்டான்” என்று கூறிக் கொண்டிருக்கும் போது ஆஷிஷ் அவள் அருகே சென்று நாற்காலியில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட ஆரம்பித்தான்.

அதைப் பார்த்ததும் மேலும் ஆத்திரமடைந்த அடிம்போலோ வேகமாக அவனை நெருங்கி காலால் ஓங்கி உதைத்தான். அதில் ஆஷிஷ் உருண்டு விழ, மேலும் அவனை நெருங்கி உதைக்க முயற்சி செய்தான் அடிம்.

இதைப் பார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தவர்கள் யார் பக்கம் செல்வதென புரியாமல் நின்றனர்.

அடிம் மீண்டும் உதைப்பதற்கு காலை தூக்கியதும் அதைப் பிடித்து ஒரு இழுப்பாக இழுத்து கீழே தள்ளினான்.

அடிம்போலோ கீழே விழுந்ததும் அவனைப் பிடிக்க பாய்ந்தான் சினார். கரனோ ஆஷிஷிடம் சண்டயிட ஆரம்பித்தான்.

இவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்க, வதனா அவசரமாக கை கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தாள்.

அங்கே ஓரமாக வைக்கப்பட்டிருந்த மெஷின் கண்ணை கையில் எடுத்துக் கொண்டவள் எவரும் எதிர்பார்க்காத வண்ணம் படபடவென்று கூடாரத்திற்குள் சுட ஆரம்பித்தாள்.

சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் அடிம்போலோவை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு கூடாரத்தை விட்டு இருளான பகுதியில் கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினாள்.

அடிம்போலோ ரத்த வெள்ளத்தில் விழுந்ததையும் அவனது உயிர் பிரிந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் நிலைமையை உணர்ந்து கொண்டு அவளைப் பிடிப்பதற்கு பாய்ந்தார்கள்.

நிமிட நேரத்திற்குள் அந்தப் பகுதியே கலவர பூமியானது. ஆளுக்கொரு திசையில் கைகளில் பெரிய-பெரிய டார்ச் லைட்டுகளுடன் ஓட ஆரம்பித்தனர்.

சினாரும், கரனும் “உன்னால தான் இதெல்லாம் “ என்று முறைத்துவிட்டு அவளைத் தேடி ஓட ஆரம்பித்தனர்.

ஒரு நிமிடம் நின்று யோசித்தவன் பின்னர் தானும் ஒரு திசையில் ஓட ஆரம்பித்தான். அவனது மனமும் வேகமாக இருக்கும் நிலையை கணக்கிட ஆரம்பித்தது.இவர்கள் கையில் சிக்காமல் அவள் தப்பிக்க வேண்டும். அதே சமயம் பசவப்பா தன்னை போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் பசவப்பாவின் ஆட்கள் ஆஷிஷையும் சேர்த்து தேட ஆரம்பித்திருந்தனர். அடிம்போலோவின் இறப்பு செய்தியைக் கேட்டதும் உச்சபட்ச அதிர்ச்சிக்கு சென்றான் பசவப்பா. அவனை கொன்றவளை பிடிக்கும் ஆவேசம் எழுந்தாலும், ஆஷிஷின் மீது கொலைவெறியே எழுந்தது. அவனைப் பிடித்து வந்து தன் முன் நிறுத்த வேண்டும் என்று கட்டளையிட்டான்.

சீற்றம் கொண்ட வேங்கையென நடக்க ஆரம்பித்தவன் இதுவரை நடந்த கொலைகளை பற்றி எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றையும் ஒன்றோடு ஒன்று இணைத்து பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு, நடந்த அனைத்துக் கொலைகளுக்கும் காரணம் இந்தப் பெண் தான் என்பதை புரிந்து கொண்டான்.

உடனடியாக குதிரை மூக்கு பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து ஹோட்டல்களில் தங்கி இருந்த பெண்களைப் பற்றி விசாரிக்க சொல்லி உத்தரவிட்டான். அதோடு, வந்த  பெண்ணுக்கும் ஆஷிஷிற்கும் முன்னமே தொடர்பிருக்குமோ? ஆஷிஷ் தான் எனது கையாள்களைப் பற்றி அனைத்து தகவல்களையும் அவளுக்கு கொடுத்திருப்பானோ? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மனமோ எரிமலையென கொதிக்க ‘எங்கே தவறினேன்’ என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

விருந்து என நினைத்து அவன் அணைக்க,

விஷமாய் மாறி அவள் உயிர் குடித்தாள்!

ஆண்டாண்டாய் காத்திருந்த அகோர பசி,

அதனிரையை புசியாது அடங்கிடுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *