Categories
Rajeswari Sivakumar Uncategorized

அத்தியாயம் – 2

Free Download WordPress Themes and plugins.

எபி 2

அங்கே மாப்பிள்ளை அவனின் வீட்டையே ரணகளப் படுத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில் மணமகளும் அவள் பங்கிற்கு இங்கே அவளின் வீட்டாரை போட்டுப் படுத்திக்கொண்டிருந்தாள்.
சுமார் ஒரு மணிநேரமாய் அவளின் அன்னை, இந்த கல்யாணத்தை ஏன் இவ்வளவு அவசரமாக செய்யவேண்டியுள்ளது… என்பதை அவளின் இருகாதிலும் இரத்தத்தை வடியவைத்து, அப்போது தான் சொல்லி முடித்தார்.
அவ்வளவையும் ஆர்வமின்றி விதியே என கேட்டு முடித்து, “ம்மா… இன்னும் படிப்பை கூட முழுசா முடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு காலேஜ்க்கு போனா கேவலமா இருக்கும்மா! நீ யாரை சொல்றியோ… அவங்களையே நான் கல்யாணம் பண்ணிக்கறேன் ஆனா அது ஒரு ஆறுமாசம் கழிச்சிப் பண்ணிக்கறேன்-ம்மா! என்னோட பிஜிய கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு பண்றேன்-ம்மா. ப்ளீஸ்… ம்மா! ப்ளீஸ்… இப்ப வேணாம். புரிஞ்சிக்கோ ம்மா!” என அன்னையை கெஞ்சிக்கொண்டிருந்தாள் லக்ஷ்மி ப்ரியா!
“விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பான்னு சொன்ன கதையால்ல இருக்கு இது! இவ்வளவு நேரமா அவ தொண்டை தண்ணி வத்த பேசினதை காதில் வாங்கினியா இல்லையா லக்ஷ்மி நீ!” என அவளை பார்த்து கேட்ட பாட்டியை கொலைவெறியுடன் வெறித்தாள் ப்ரியா!
எல்லோரும் அவளை பிரியா என அழைக்க, பாட்டி மட்டும் எப்போதும் ‘லக்ஷ்மி’ என்று அழைப்பார்கள். அதற்கே கோபம் கொண்டு காளியவதாரம் எடுப்பவள், இன்று அவர், அவளுக்கு எதிரணியில் கூட்டு சேர்ந்ததால் மேலும் கடுப்பானாள்.
அவளுக்கு மேல் கடுப்பான அவளின் அன்னை, “பிரியா… ஆறுமாசம் வரைக்கும் எல்லாம் அவங்க காத்துட்டு இருக்க மாட்டாங்க. இன்னும் மூனு மாசத்துக்குள்ள பையனுக்கு கல்யாணத்தை முடிக்கனும்னு அவங்க அவசரப்படறாங்கன்னு சொன்னதை கேட்டும்,நீ லூசாட்டம் பேசிட்டிருக்க!”என்று எரிந்து விழுந்தார்.
தான் ஒருமணிநேரமாய் சொன்னதை கேட்டபிறகும் இவள் இப்படி பேசினால் பாவம் அவரும்தான் என்ன செய்வார்!
மருமகளின் கோபத்திலிருந்து தன் பேத்தியை காப்பாற்ற எண்ணிய தனம் பாட்டி”இவளையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சி, நீ ஏன் பேசிட்டிருக்க சரளா! நாம வலை வீசி தேடினாலும் இப்படி ஒரு சம்மந்தம் நமக்கு கிடைக்குமா?இப்பவே பையன் லட்சத்துக்கும் மேல சம்பாதிக்கிறான்.பார்க்கறதுக்கும் நல்லா கண்ணுக்கழகா லட்சணமா இருக்கான்., ஒருகெட்ட பழக்கமும் இல்லை.குடும்பமும் நல்லவங்க, நமக்கு தெரிந்தவங்க. இப்படி எல்லா தகுதியும் இருக்கிறவங்க, நம்மகிட்ட வலியவந்து பொண்ணு கேட்கும் போது, நாம ஏன் அதை தட்டி கழிக்கனும்?நாளைக்கு இவ ஒழுங்கா நடந்துக்கறதுக்கு நான் பொறுப்பு! நீ போய் ஆகவேண்டிய வேலைய பாரு.” என கூறி,சரளாவை உள்ளே அனுப்பினார்.
தன்னை அலட்சியப்படுத்திய பாட்டியை முறைத்து, ”அந்த பையனை உனக்கு அவ்வளவு பிடிச்சியிருந்தா… நீயே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே!” என சீறினாள் பிரியா.
“அடிக்கழுதை! வர வர உனக்கு வாய் ரொம்ப அதிகமா போயிடுச்சி.” என பேத்தியை செல்லமாக வைத பாட்டி, அவளை அருகில் வர சொல்லி கண்காட்டினார்.
அவரை முறைத்துக்கொண்டே அருகில் வந்தவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு,“என்னப்பா! ஏன் உனக்கு இப்ப கல்யாணம் பண்ண பிடிக்கலைன்னு சொல்லு. நீ சொன்னாதானே தெரியும்” என மெதுவாக பேச்சை தொடங்கினார்.
“எனக்கு… இன்னும் ரெண்டு மாசம் காலேஜ் இருக்குல்ல பாட்டி! கல்யாணம் முடிச்சி படிக்க போறது எனக்கு ஒருமாதிரி இருக்கு. எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க.” என அவளும் மெதுவாக முணுமுணுத்தாள்.
“இனி தினமும் காலேஜுக்கு போக தேவையில்லைன்னு போனமாசம் நீ தானேடம்மா சொன்ன!” என பாட்டி பாயிண்ட்டை பிடித்தார்.
“ஆமா… டெய்லி போகவேணாம்… ஆனாலும் சில நாள் போகும்போது எனக்கு ஒருமாதிரி இருக்கும் தானே? அவசரமா கல்யாணம் பண்ணிகிட்டேன்னு என்னை எல்லோரும் ஒருமாதிரி பாத்து, குசுகுசுன்னு எதையாவது பேசுவாங்க பாட்டி!” எனக் கலக்கமாய் கேட்டாள்.
“யாரோ நாலு பேரு பேசப்போற அந்த சில நாளுக்காக நமக்கு கிடச்ச நல்ல சம்மந்தத்தை விட்டுடலாமா குட்டி!கல்யாணம் முடிச்சி பையன் வெளிநாடு போகும்போது நீயும் கூடவே போய் உன்னோட மேல்படிப்ப அங்கேயே படிக்கலாமே. உன்னோட ஆசையும் அதுதானே லக்ஷ்மி! எங்க எதிர்பார்ப்புக்கும், உன்னோட ஆசைக்கும் பொருத்தமான இடமா இது இருக்கறதால தான் நாங்களும் அவசரமா கல்யாணத்தை வைக்க சம்மதிச்சோம்.” இப்படி… பேத்தியிடம் நயமாக பேசி-பேசியே அவளை நாளை நடக்க இருக்கும் விசேஷத்திற்கு சம்மதிக்க வைத்தார்.
ஒருவழியாய் அவரிடம் தன் சம்மதத்தை சொன்னாலும் பிரியாவிற்கு ‘படிப்பை முடிக்காது கல்யாணம் பண்ணிக்கொள்வதா…!’ என்று ஒரே கலக்கமாகவே இருந்தது.மேலும் புது இடம், பழகாத மனிதன்…,பழக்கப்படாத சூழல், புதிய பொறுப்புக்கள்.. என்ற நினைப்பே அவளுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது.
‘இதுவரை பார்த்து பழகியிராத ஒருவனுடன், கல்யாணத்திற்கு பிறகு அவனுடைய வீட்டில்தான் இருக்க வேண்டும்!!’ இது ஆண்டாண்டுகாலமாய் வழக்கத்தில் இருக்கும் வழக்கமான ஒன்றுதான்! ஆனால் எது ஒன்றும் நம் மனம் பார்க்கும் விதத்தில்தானே இருக்கிறது.ஒரு புது மனிதனை புருஷனாய் ஏற்பதற்க்கும்,நண்பனாய் நம்பி நம்பிக்கை வைப்பதற்க்கும் அம்மனிதனும், இவளின் மனதும் துணை செய்ய வேண்டுமல்லவா…!
‘திருமணத்திற்கு பிறகு இவளும் அவனும் மட்டும், ஃபாரின் போகும்வரை அங்கே சென்னையில் தனித்திருக்கவேண்டும்!’ என்பதை பாட்டியின் மூலம் அறிந்தவள் ‘தன்னால் புதிய பொறுப்புகளை சரியாக செய்ய முடியுமா?’ என இன்னும் குழம்பிப்போனாள்
இவளின் வயதும், திருமணத்திற்கு தயாராகாத இவளின் மனநிலையும் ‘இந்த திருமணம் வேண்டுமா! வேண்டாமா?’ என இவளை முடிவெடுக்கவிடாது அலைக்கழித்தது.
’வேண்டாம்..!’ என இவள் அழுத்தி சொன்னால்… தங்களுக்கு எவ்வளவுதான் பிடித்திருந்தாலுமே இவளின் மறுப்பை குடும்பத்தார் ஒத்துக்கொள்வார்கள்தான்… என்றாலும் வேண்டாம் என இவளால் அழுத்தியும் சொல்லமுடியாது, ‘வேண்டும்’ என ஆசையாகவும் சொல்லமுடியாது, என்ன சொல்வது… எதை செய்வது என தெரியாது திகைத்து நின்றாள்.
இப்படி ஏற்கனவே, ‘திருமணம் செய்யலாமா…, இல்லை… ‘வேண்டாம்னு நாளைக்கு வரப்போகும் மாப்பிள்ளை கிட்ட தனியா சொல்லிடலாமா…?’ என அலைபாய்ந்துக்கொண்டிருந்த பிரியாவை, பெண் பார்க்கவந்த ஹரி மேலும் குழப்பிவிட்டான்.
இருவீட்டு பெற்றோர்களும் மிக்க ஆவலுடனும்,மணமகன் கடுப்புடனும், மணமகள் கலக்கத்துடனும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த அந்த நன்நாளும் இனிதே விடிந்தது.
காலையில் ‘பெண்பார்க்க எங்கு போகவேண்டும்…?’ என்ற ஹரியின் கேள்விக்கு கிடைத்த பதிலில் அவன் இன்னும் நொந்துப்போனான்.
“என்னது… வத்தலகுண்டா…” என ஷாக்கானவன், பத்து நிமிடம் கழித்துதான் அதிலிருந்து தெளிந்தான்.அதற்குள் அவனின் அம்மா பெண்ணைப்பற்றியும்,பெண்ணின் பெற்றோர் பற்றியும்,அவர்களின் வீடு,குடும்பம், சொந்தங்கள்… என அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார்கள். அன்று பெண்ணைப்பற்றி தெரிந்துக்கொள்ள கிடைத்த நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டான் ஹரி!
என்னத்தான் ஹரிக்கு திருமணத்தை பற்றி கலர்கலராய் கனவுகள் இல்லை என்றாலும் அதைப்பற்றிய சாதாரண ஆசைக்கூடவா இருக்காது! இருந்தது… அவனுக்கும் ஆசை இருந்தது.ஆளை அடித்து வீழ்த்தும் அழகுக்கு ஆசைப்படாவிட்டாலும் ஒருமுறை பார்த்தால் திரும்ப பார்க்கவைக்கும் அழகு, இப்போதிருக்கும் நாகரிகத்திற்கேற்ப ‘அல்ட்ரா மாடர்ன்’ வேண்டாமென்றாலும், சபை நாகரிகம் தெரிந்த படித்த பெண்… இப்படித்தான் அவனின் ஆசை இருந்தது.
ஆனால் பெண்ணின் ஊரைக்கேட்டதும், அவனின் ஆசை ஆட்டம் கண்டது. ‘சரியான பட்டிக்காட்டை தன் ஜாதகத்திற்க்காக அன்னை, தன் தலையில் கட்ட நினைப்பதாய் இவனாக ஒன்றை எண்ணிக்கொண்டு, தலைகீழாய் நின்றேனும் இந்த கல்யாணத்தை நிறுத்துவது!’ என முடிவெடுத்துவிட்டான். எடுத்த முடிவில் இவனால் நிலையாக இருக்க முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *