Categories
Uncategorized

அத்தியாயம் – 5

Free Download WordPress Themes and plugins.

அத்தியாயம் – 5

அவளை எப்படியாவது தன்னை திரும்பி பார்க்க வைத்து விட வேண்டும் என்கிற வலுவான எண்ணத்துடனும், உற்சாகத்துடனும் பைக்கை செலுத்த ஆரம்பித்தான்.

தன்னை சுற்றிலும் நடந்து கொண்டிருந்தவைகளை கண்டு கொள்ளாது வழக்கம் போல காதில் மாட்டி இருந்த ஹெட் போனில் இருந்து துள்ளலான பாடல் ஒலிக்க, அவனை அறியாமலே அந்த பாடலை பாடிக் கொண்டு அவளது மருத்துவமனை முன் சென்று நின்றான்.

பைக்கை நிறுத்திவிட்டு, உயரமான கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே சென்றவன் படியில் ஏறும் போது எதிரே வருபவரை கவனியாது நேரே சென்று மோதினான்.

தீபக்கிடம் இருந்து அழைப்பு வந்ததால் அவசரமாக லிப்டில் இருந்து வெளியேறியவள், வேகமாக படியிறங்க, எதிரே வந்தவன் வழியை கொடுக்காது மோதி வைத்தான்.

மோதிய அதிர்வில் கீழே விழப் போனவளின் இடையை பற்றி நிறுத்த முயற்சிதான். அவனது கரம் இடையில் பதிந்ததும் கொதித்து போனவள் “எருமை மாடு மாதிரி வந்து மோதுரீங்களே வெட்கமா இல்ல?” என்று சீறிக் கொண்டே அவனிடமிருந்து விலகினாள்.

அவளது கோபத்தில் சற்று ஜெர்கானவன் “இனம் இனத்தோடு தான் மோதும் மேடம்” என்றான் குறுநகையோடு.

அவளோ அவனிடம் பேச விரும்பாமல் “காது தான் செவிடுனா கண்ணும் குருடு போல இருக்கு” என்று கடித்து துப்பிவிட்டு நகர்ந்தாள்.

சிறிதும் அலட்டிக் கொள்ளாது அவள் வழியை மறித்து “உங்களை தான் பார்க்க வந்திருக்கேன் மிஸ். மௌ..னி..கா” என்றான் கேலியாக.

கண்களில் சீற்றத்துடன் திரும்பியவள் “என்னை எதுக்கு பார்க்கணும்? நீங்க பேஷண்ட்டா?” என்றாள் கடுமையாக.

அவளது கோபத்தை ரசித்தபடி “பேஷண்ட்டா இருந்தா நல்லா தான் இருக்கும். அடிக்கடி பார்க்க வரலாமில்ல” என்றான் .

ஏனோ அவனை பார்த்தாலே அத்தனை எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

‘ச்சே..சரியான வழிசல் கேஸ்’ என்று முணுமுணுத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.

அதை கேட்டவன் லேசாக முகத்தை சுருக்கிக் கொண்டு கார் கண்ணாடியின் அருகே குனிந்து லேசாக தட்டி அவள் திறந்ததும் “ஹலோ தொமுக மேடம்! ரொம்ப பந்தா பண்ணாதீங்க. முன்ன பின்ன வழிசல் கேசை நீங்க பார்த்ததே இல்ல போல” என்றவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காட்பரி சாகலேட்டை எடுத்து நீட்டினான்.

அவனை முறைத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தவள் ஜன்னலை மூடத் தொடங்கினாள்.

“நல்ல விஷயம் பேசும் போது ஸ்வீட் கொடுக்கணும்னு டிவியில சொல்லி இருக்காங்க. ஆனா நான் இப்போ எதுவும் நல்ல விஷயம் பேச போறதில்லை என்றாலும் ” என்று மேலும் பேச போனவனை கை நீட்டி தடுத்தவள் “கதவிலிருந்து கையை எடுங்க” என்றாள் கடுப்பாக.

அவளது கடுகடு முகத்தை பார்த்ததும் கையை எடுத்தான். அவசரமாக கதவை மூடிவிட்டு காரை வேகமாக கிளப்பிக் கொண்டு சென்றாள். அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் தாடையை தேய்த்தபடி ‘ஓவரா சீண்டிட்டோமோ’ என்று எண்ணிக் கொண்டே பைக்கில் ஏறி அமர்ந்தான்.

காரில் சென்று கொண்டிருந்தவளுக்கோ சொல்ல முடியாத எரிச்சல் மண்டியது. சிறுவயதில் இருந்து தனித்தே வாழ்ந்து பழகியவளுக்கு நிறைய பேசுபவர்களை கண்டால் அலர்ஜி. அவர்கள் இருக்கும் திசை பக்கமே செல்ல மாட்டாள். ஆனால் இந்த இரண்டு நாளாக இவனிடம் சிக்கிக் கொண்டு தலைவலியே வந்துவிட்டது. எங்கிருந்து வந்தான் இந்த இம்சை என்று அவனை அர்ச்சித்துக் கொண்டே தீபக் தனக்காக காத்திருந்த ஹோட்டலுக்கு சென்றாள்.

ஹோட்டல் பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளை மெல்லிய இசை வரவேற்றது. தீபக்கை கண்களால் தேடிக் கொண்டே மெல்ல நடந்தாள். அவனிருந்த மேஜையை கண்டு கொண்டதும் நேரே சென்றமர்ந்தாள். எதிரே இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அவளது செயலை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிற்கு ஏதோ டென்ஷனில் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

“என்ன பிரச்சனை மௌனி?”

தண்ணீர் பாட்டிலை கீழே வைத்தவள் கார்த்திக்கை பார்த்த அன்றிலிருந்து நடந்தவைகளை மெல்லிய குரலில் கூறினாள்.

அதை சிரிப்புடன் கேட்டுக் கொண்டவன் “இதை தான் தலையால தண்ணி குடிக்க வைக்கிறதுன்னு சொல்வாங்க போல” என்றான் கிண்டலாக.

எரிச்சலுடன் அவனைப் பார்த்து “ம்ச்…எப்படி தான் ஒரு மனுஷனால இவ்வளவு பேச முடியுதோ?” என்றாள்.

கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக இருந்தவன் “சரி விடு மௌனி! நான் உன்னை கூப்பிட்ட விஷயத்தை சொல்றேன்” என்றான்.

லேசாக தலையில் அடித்துக் கொண்டவள் “அதை மறந்தே போயிட்டேன். நீ சொல்லு” என்றாள் அவன் முகம் பார்த்து.

சற்றே யோசனையுடன் “எங்கம்மாவோட பிரெண்ட் பையன் டெல்லியில் டாக்டராக இருக்கான் மௌனி. அவங்க அந்த காலத்திலேயே காதல் திருமணம் பண்ணினவங்க. எங்கம்மா மூலியமா உன்னை பத்தி தெரிஞ்சு பெண் கேட்கிறாங்க. உன்னோட பதில் என்னன்னு தெரிஞ்சுகிட்டு மேற்கொண்டு முடிவு பண்ணலாம்னு அம்மாவுக்கு யோசனை” என்றான்.

அதுவரை கார்த்திக் ஏற்படுத்திய எரிச்சலில் இருந்து விடுபட்டவள் தீபக்கின் பேச்சில் அதிர்ந்து இதென்ன புது பிரச்சனை என்று மௌனமாக அவனை பார்த்தாள்.

“அம்மா தான் என்னை பேச சொன்னாங்க மௌனி. உன்னோட விருப்பத்துக்கு  தான் இங்க முக்கியத்துவம். நீ சொல்கிற பதிலை வைத்து அம்மா அவங்க பிரெண்ட் கிட்ட பேசுவாங்க” என்றான்.

கண்களை அழுந்த மூடியவளின் இமைகள் பாரம் தாங்காமல் வலித்தது. அன்னை, தந்தையை இழந்து மாமனிடம் வளர்ந்தவளுக்கு உண்மையான அரவணைப்பு கொடுத்தது தீபக்கின் அன்னை தான். மகனின் தோழியாக மட்டும் பார்க்காமல் தனது மகளை போலவே அன்பை காட்டுவார்.

அவரிடம் திருமணம் வேண்டாம் என்று எப்படி உரைப்பது என்று குழம்பி அவனிடமாவது தன் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ளலாமா என்று யோசித்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “என்ன மௌனி?” என்றான் மென்மையாக.

“இதுவரை என்னோட திருமணத்தை பத்தி நான் எதுவும் யோசிச்சதில்லை தீபக். பல வருஷங்களுக்கு பிறகு இப்போ தான் சுதந்திர காற்றை அனுபவிச்சிட்டு இருக்கேன். நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ அதை செய்ய யாருடைய உத்தரவிற்காகவும் நிற்க வேண்டிய நிலை இப்போ தான் விலகி இருக்கு.  இந்த நேரத்தில்  திருமணம் எனக்கு என்ன வச்சிருக்கு என்று எதுவும் சொல்ல முடியாது” என்றாள் நெற்றியை அழுந்த தேய்த்தபடி.

அவளின் முன்னே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கையில் கொடுத்தவன் “உன்னோட மனநிலை எனக்கு நல்லாவே புரியுது மௌனி. ஆனா எத்தனை நாளைக்கு நீ தனிச்சே வாழ்ந்திட முடியும்? அம்மா உனக்கு நல்லவொரு வாழ்க்கையை அமைச்சு கொடுக்கத் தான் பார்ப்பாங்க. இந்த மாப்பிள்ளை எப்படி என்னன்னு எல்லாம் நான் உனக்கு விசாரிச்சு சொல்லிடுறேன். சோ நீ ரொம்ப மனசை அலட்டிக்காம இரு” என்றான் நல்ல நண்பனாய்.

மெல்ல விழியுர்த்தி அவனை பார்த்தவள் “எனக்கு கல்யாணம் வேண்டாம் தீபக்” என்றவள் வழக்கமான தனது மௌனத்தை தொடர்ந்தாள்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க, அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனமில்லாமல் எழுந்து கொண்டவன் “ஓகே மௌனி! உன் விருப்பம் தான். சாயங்காலம் அம்மாவை வந்து பார்த்து நீயே இதை சொல்லிடு” என்றான்.

பெருமூச்சுடன் எழுந்து “ம்ம்..சரி தீபக்” என்று கூறிவிட்டு ஹோட்டலை விட்டு வெளியேறினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ‘நல்ல வாழ்க்கை அமையனும் அவளுக்கு’ என்று வேண்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவளை சீண்டுவதற்காகவே தனது வேலையை விட்டு வந்தவன் அதை முடித்ததும் அலுவலகத்திற்கு சென்றான்.

தனது ப்ரோக்ராமை முடித்துக் கொண்டு வெளியே வந்த கிரி “மச்சி! திடீர்னு எங்கடா போன?” என்றான்.

அவன் தோளில் கையை போட்டு இழுத்துக் கொண்டே காண்டீனிற்கு சென்று நாற்காலியில் அமர்ந்தவன் “எனக்கு லவ் வந்துடுச்சு மச்சி” என்றான்.

ஆ..வென்று வாயை திறந்து கொண்டு பார்த்தவன் “என்னடா இது! என்னவோ பார்சல் வந்த மாதிரி சொல்ற?” என்றான்.

அவனது முதுகில் ஓங்கி அடித்து “உண்மையா மச்சி! நானெல்லாம் லவ் பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல” என்றான் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி.

அவன் அடித்ததில் முதுகை தடவியபடி “டேய்! டோர் க்ளோஸ் பண்ணுடா முடியல. நீ லவ் பண்ற சரி. அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுதா?”

விட்டத்தை பார்த்துக் கொண்டே “அதெல்ல்லாம் இன்னும் யோசிக்கலடா. ஆனா பொண்ணு செம சூப்பரா இருக்கா. என்ன ஒன்னு என்னை மாதிரி பேச மாட்டேன்றா” என்றான்.

அவனது அலப்பறைகள் தாங்காது பொறுத்து பொறுத்து பார்த்தவன் “டேய்! நிறுத்து! முதல்ல யார் அந்த பொண்ணு? உனக்கு எத்தனை நாளா பழக்கம்? அதை சொல்லு?” என்றான்.

கனவில் மிதந்த விழிகளுடன் “நேத்து தான் பார்த்தேன் டா. உண்மையை சொல்லனும்னா அவ மேல எனக்கு செம கடுப்பு. நாம எங்க போனாலும் பொண்ணுங்க தானா வந்து பேசி நம்மள சுத்துவாங்க. ஆனா இவளை நானா தேடி போயும் போடா போக்கத்தவனேன்னு சொல்லிட்டா” என்றான் பெருமையாக.

அவனது வீணா போன பெருமையை கண்டு கொலைவெறியாகி போனவன் இரு கைகளையும் அவன் கழுத்தில் வைத்து நெறித்து “நேத்து பார்த்த ஒரு பொண்ணுக்கு தான் இவ்வளவு பில்டப்பா?” என்றான் கடுப்பாக.

“அதென்ன அப்படி ஈஸியா கேட்டுட்ட…ஒரு நிமிஷம் முன்னாடி பார்த்தா கூட மனசை தட்டி உள்ளே உட்காரனும். இவ தான் நமக்குன்னு தோணனும். சில பேருக்கு காலம் காலமா வாழ்ந்தா கூட அந்த ஒட்டுதல் வரதில்லை” என்றான் சீரியசான குரலில்.

அவனது உளறல்களை கண்டு மேலும் கடுப்பான கிரி “அடேய்! இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரி சொல்லு! அந்த பொண்ணு என்ன பண்ணுது? எங்கே பார்த்தே? எப்படி பார்த்தா?” என்று கேள்விகளை அடுக்கினான்.

“பொறுமையா கேளுடா! ஒரே நேரத்தில் இத்தனை கேள்வியை கேட்டா நான் எப்படி பதில் சொல்றது? அதிலும் ஒரு காவியத்தை அவ்வளவு ஈஸியா சொல்லிட முடியுமா?”

அவனை நாலு அப்பு விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு முறைத்தவன் “என்னது காவியமா? மச்சி நீ போற ரூட் நல்லாயில்லை! நீ சொல்லு! அது காவியமா இல்ல மரண மொக்கையான்னு நான் சொல்றேன்” என்றான் எரிச்சலுடன்.

அவனது குரலில் இருந்த எரிச்சலையோ, கடுப்பையோ கண்டு கொள்ளாது கனவில் மிதந்தபடி அன்னைக்காக அவளை பார்க்க சென்றதில் இருந்து அவளது உதாசீனம் அவனை பாதித்தது வரை சொன்னவன். இப்போது அவளை சீண்டி விட்டு வந்தது வரை கூறி முடித்தான்.

சிறிது நேரம் அவனை அமைதியாக பார்த்து தொண்டையை கனைத்து உமிழ் நீரை வாய்க்கு கொண்டு வந்து காறி துப்புவது போல வந்து “ஏண்டா இதெல்லாம் ஒரு கதைன்னு வந்து என்கிட்டே சொல்ற பாரு…இதுல காவியமாம். அவ உன்னை செருப்பை கழட்டி அடிக்காம விட்டாளே” என்றான் புசுபுசு வென்று மூச்சு விட்டுக் கொண்டே.

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் “எதுக்கு மச்சான் நீர் யானை மாதிரி மூச்சு விடுறே? நீ வேணா பாரு நானும் அவளும் சேர்ந்து டுயட் பாடுவோம் என் ப்ரோக்ராம்மில்” என்று மேலும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றினான்.

சேரை பின்னுக்கு தள்ளி எழுந்தவன் “நீ டுயட் பாடு பாடாம போ…ஆனா இன்னொரு தடவை இந்த காவியத்தை என் கிட்ட சொல்லிடாத” என்று கூறி வேகமாக வெளியேறினான்.

அவனை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுந்தவன் “இப்போ எதுக்கு இவன் இவ்வளவு கோபப்படுறான்? என் காதல் கதை என்ன அவ்வளவு மொக்கையாவா இருக்கு?” என்று முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான்.

கார்த்திக்கின் வீட்டில் மனைவியிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார் மாறன். காந்திமதியோ அவரிடம் பேசாமல் தவிர்க்க முயன்றார்.

“நேத்து என் தங்கச்சி என்ன சொன்னா காந்தி?”

அவர் கேட்டது காதில் விழுந்தாலும் சோர்ந்த முகத்துடனே காதில் விழாத மாதிரி அங்கிருந்து செல்ல முயன்றார்.

“உனக்கு நான் கேட்டது காதில் விழுந்துதுன்னு தெரியும் காந்தி. அவ என்ன பிரச்னையை கிளறி விட்டுட்டு போனா. அதை சொல்லு” என்றார்.

அதுவரை மனதிற்குள் குமுறி கொண்டிருந்தவர் “நம்ம பையன் பார்க்கிற வேலைக்கு எவனும் பொண்ணு கொடுக்க மாட்டானாம். உங்க தங்கச்சி சொல்லிட்டு போறா” என்றார்.

அதை கேட்டு கோபமானவர் “ஏன்? அவன் வேலைக்கு என்ன குறை?”

“நீங்களும் நானும் தான் மெச்சிக்கணும். யாரை கேட்டாலும் சட்டுன்னு ஆர்ஜேவா அப்படின்னு முகம் சுளிக்கிறாங்க” என்றார் வருத்தத்துடன்.

“இன்னைக்கு இருக்கிற சூழ்நிலையில் இந்த வேலையில் ஒன்னும் குறையில்ல காந்தி. மற்றவங்க சொல்றாங்கன்னு நம்ம பிள்ளையை நாமே குறைச்சு எடை போட கூடாது”.

“அதுகில்லைங்க…அவனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கலேன்னா என்ன பண்றது?”

“நீ தேவையில்லாம கவலைப்படுற காந்தி. அதெல்லாம் அவனுக்கு ஜாம்-ஜாம்னு கல்யாணம் பண்ணி வைப்போம்”.

“இவன் வாய்க்கு வர பொண்ணோட இருந்து பிழைக்கணுமே என்று தான் கவலையா இருக்குங்க” என்றார் மெல்லிய குரலில்.

“அதை விடு காந்தி! உனக்கு காதுல என்ன பிரச்சனை? இப்போ நல்லா தானே கேட்குது? ஆனா சில சமயம் சுத்தமா நாங்க பேசுறது உனக்கு கேட்கவே மாட்டேங்குதே ஏன்?” என்றார்.

உதட்டை பிதுக்கி “தெரியலங்க! இந்த மாதிரி அமைதியா இருந்தா எல்லாமே காதுல விழுது. சின்ன சின்ன சத்தம் கூட நல்லா கேட்குது. ஆனா இந்த பையன் வந்து டிவியை அலற விட்டு, மியுசிக் சிஸ்டத்தை அலற விட்டாலே எனக்கு காது வலிக்க ஆரம்பிச்சிடுது. அப்புறம் தலைவலி வந்து சுத்தமா எதுவுமே கேட்க மாட்டேங்குது” என்றார்.

“அவன் வந்தா நான் சொல்றேன் காந்தி. நீயே அவன் கிட்ட சொல்லி இருக்கலாமே. அவன் புரிஞ்சுகிட்டு இருப்பானேம்மா”.

சோர்வான முகத்துடன் “இல்லைங்க! அவன் இதை புரிஞ்சுக்க மாட்டான். சின்ன வயசிலேயே காதுல ஸ்பீக்கரை கட்டிக்கிட்டு பிறந்தவன். அவனால என்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியாது”.

“நீ விடு காந்தி! நான் சொல்கிறபடி அவனுக்கு சொல்லி இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரேன்”.

மெல்ல எழுந்தவர் “அவனுக்கு பொண்ணு பார்க்கலாமாங்க. கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு நாம தனியா போயிடலாம்” என்றார்.

அதை கேட்டு சிரித்த மாறன் “நீ தப்பிச்சுக்க கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணை மாட்டி விடலாம்னு நினைக்கிறியே”.

அவர் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு “சத்தியமா முடியலங்க! நானும் பல விதமா சொல்லி பார்த்துட்டேன் சத்தமா வைக்காதடான்னு. ஆனா இப்படியே போனா என் காது சுத்தமா போயிடும். அதுக்கு தான் சீக்கிரம் கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு நாம இங்கே இருந்து கழண்டுக்கலாம்” என்றார்.

மாறனுக்கு மனைவியின் புலம்பலை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. அவருமே கார்த்தியின் அளப்பரைகளை கண்டு நொந்து தான் போயிருந்தார்.

“அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமே காந்தி” என்றார் யோசனையுடன்.

சற்று யோசித்து “அவனை மாதிரியே நிறைய பேசுற பொண்ணா…அவளும் ஒரு ஆர்ஜேவா பார்த்து கட்டி வச்சிடுவோம். அப்புறம் அவன் பாடு பக்கத்தில் வீட்டில் இருக்கிறவங்க பாடு” என்றார் சீரியசாக.

சுதாரவி

2 replies on “அத்தியாயம் – 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *