Categories
On-Going Novels

அன்பின் விழியில்! பதிவு – 2,3

Free Download WordPress Themes and plugins.

எபி 2

        தாய்,தந்தை,மகன் என வீட்டில் இருந்த அனைவரும் தன்னை தனியே விட்டுவிட்டு சென்றுவிட்ட போதிலும், இது அன்றாடம் நடக்கும் வழக்கம் என்பதால் அதற்கெல்லாம் மனம் தளராத நித்தி, அவளின் அடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கினாள்.

  இங்கொன்றும் அங்கொன்றும் இறைந்து கிடந்த துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போடும் போதே, சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தான் இப்படி தன் துணிகளை அப்படியே எறிந்து விட்டு காலேஜுக்கு போன நியாபகம் அவளின் அனுமதி இல்லாமலே அவளுக்கு வந்தது.அதனோடு கூடவே அவளை தலையில் வைத்து கொண்டாடியவர்களின் நினைவுகளும் வரிசையில் நின்றது.

‘அவங்க மட்டும் இப்போது இருந்தால்? எனக்கு இந்த நிலை வந்திருக்குமா! என்னோட உயிர்னு நான் நினச்சவங்க எல்லாம் என்னை தனியா தவிக்க விட்டுட்டு போனபிறகும் எப்படி என்னால உயிரோடு இருக்க முடியுது? அவங்களோட உயிர் என்கிட்ட இருக்கறதாலதானா!’

      ‘ச்ச! இன்னைக்கு என்ன ஆச்சு எனக்கு! எதுக்கு எனக்கு பழசு எல்லாம் இப்ப நியாபகம் வருது? எனக்கு யாரும் வேணாம்!சரண் மட்டும் போதும்!’ என இவள் எண்ணும் போதே இவள் கண் முன் ஒரு முகம் தோன்றி, “நான் கூடவா வேண்டாம் உனக்கு!” என அதிசயித்தது.

அதற்கு இவள்,”வேணாம்! எனக்கு யாரும் வேண்டாம்!என்னை வேணாம்னு விட்டுட்டு போனவங்களை பற்றி நான் ஏன் நினைக்கனும்?நான் யாரையும் நினைக்க மாட்டேன்,யாருக்காகவும் ஏங்கவும் மாட்டேன்.எல்லாம் இந்த அப்பாவால வந்தது. தேவையில்லாம எதை எதையோ பேசி என் மூடை கெடுத்துட்டார். வரட்டும் அவர்! இன்னைக்கு ஈவ்னிங் நல்லா பூஜை என்கிட்ட இருக்கு!’ என சொல்லிக்கொண்டே செய்ய வேண்டிய அடுத்த வேலைக்கு சென்றாள் நித்யா.

          மதியம் பன்னிரண்டு மணிவரை அவளின் லேப்டாப்பில் இருக்கும் பாடத்தில்  மூழ்கியிருந்த நித்தியை, சரணின் பள்ளி முடியும் நேரம் நெருங்குகிறது என்பதை அவளின் கைபேசி, அலாரம் அடித்து நினைவுபடுத்த, அவனை அழைக்க வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினாள் நித்தி.

         சரணின் பள்ளி இவர்களின் பிளாட்டுக்கு அருகில் தான் உள்ளது. காலையில் தாத்தா,பாட்டியுடன் பள்ளிக்கு செல்வதும், மதியம் தன் அன்னையுடன் வருவதும் அவனது வழக்கம்.

         நித்தியின் ஸ்கூட்டி கட்டிடத்தின் கேட்டை தாண்டி போகும் வரை அவளையே பார்த்துக் கொண்டு வாட்ச்மேனிடம் அவரின் அறையில் நின்றுக்கொண்டு  பேசிக்கொண்டிருந்தவன், அவள் சென்றதும் அவரிடம் விடைப்பெற்று தன் வீடிருக்கும் இரண்டாவது தளத்திற்கு செல்ல தொடங்கினான்.

            ‘இப்ப இவ திரும்பி வந்தவுடனே போய் பேசலாமா…’ என ஆசை அலைபாய, ‘இல்ல, ஈவ்னிங் அத்தை,மாமா வந்தவுடனே போகலாம்!’ என அறிவு அணை போட, ‘ம்ம்ம்ம்… அதுவரைக்குமா இவளை கிட்டக்க பார்க்க காத்துட்டு இருக்கனும்?’  என ஆசை அணைமீற, ‘இப்ப தனியா போய் இவகிட்ட மாட்டினா, உன்மூஞ்சியிலேயே கதவ அடைச்சி சாத்திடுவா!’ என அறிவு அறிவுறுத்த,, ‘இப்ப என்னப் பண்றது?’ என ஆசைக்கும் அறிவுக்கும் இடையே இங்கொருவன் அல்லாடிக் கொண்டிருந்தான்.

   எப்போதும் போல இறுதியில் ஆசை தான் அறிவை  வென்றிடுமா..!?

        பள்ளியிலிருந்து சரணை அழைத்து வந்து, அவனுக்கு உணவுக் கொடுத்து, தானும் உண்டு, அப்பாடா! என்று நித்தி ஹாலில் வந்து அமரவும் அழைப்பு மணி அவளை அழைக்கவும் சரியாக இருந்தது.

       “மம்மி! நானு..! நானு! நான் போய் பாக்கறேன் யாருன்னு?” என்று நித்தியை முந்திக்கொண்டு சரண் கதவுக்கருகில் ஓட,

            “ஹேய்! குட்டி உங்களால லாக் ஓபன் பண்ண முடியாது மா!” என சொல்லிக் கொண்டே பூட்டை திறந்து,கதவில் இருக்கும் சங்கிலியை எடுக்காமலேயே அதை சிறிதாக திறந்து யார் என்று பார்த்த நித்தி, வெளியில் நிற்பவனை பார்த்ததும், கதவை திறக்காமல் அப்படியே அதிர்ந்து நின்றாள்.

  அவள் தன்னை பார்த்து அதிர்ந்து நின்றதை கவனித்தவனும் அதை கண்டுக்கொள்ளாமல், கதவுக்கும் சங்கிலிக்கும் இடையே இருந்த இடைவெளியில் தன் கையை விட்டு, லாக்கை எடுத்து, கதவை திறக்க முடியாது, அதன் முன் வழியை மறைத்தாற்போல் இன்னும் நின்றுக் கொண்டிருந்தவளை பார்த்து,

      “ஹலோ! வழியவிட்டு நகர்தீங்கன்னா கதவை திறக்க வசதியா இருக்கும்! மேடம்க்கு வசதி எப்படி?” என அவளின் வசதி தான் அவனுக்கு மிக முக்கியம் போல வினவினான்.

      அவனின் கேள்வியில் அனிச்சை செயல்போல நித்தியும் வழி விட்டு விலகினாள்.

      அவள் வழி விலகவும் வசதியாக கதவைத்திறந்து , ஏதோ… வீட்டின் உரிமையாளனை போல அமர்த்தலாக உள்ளே வந்தவனை பார்த்த சரண் தன் தாயிடம்,

      “மம்மி…! யாரு இவங்க?” என மேடை ரகசியம் பேச,அதைக்கேட்ட புதியவன்,       

           “சரண்! இவங்க உன்னோட ‘மம்மி’ன்னா, நான் உன்னோட ‘டாடி’!”  ‘இன்னைக்கு திங்கள்ன்னா… நாளைக்கு செவ்வாய்!’ என்று மிக சாதாரணமாக சொன்னான்.

      அவனின் வழக்கத்திற்கு மாறாக,இன்று அவன் தன்னிடம் சகஜமாக பேசியதை நம்ப முடியாது சிலையாக சமைந்தவளை புதிவனின் பதில் உயிர் கொள்ள வைத்து, “யாரு? யாருக்கு டாடி!” என நக்கலாக கேட்கவும் வைத்தது.

        “நானும் இதையே கேட்கலாமல்ல! ‘யாரு? யாருக்கு மம்மின்னு! நீ இவனுக்கு மம்மின்னா, இவனோட டாடி நானா தானே இருக்கனும்?  வேறு  யாருக்கு அந்த உரிமை இருக்கு?” என புதியவன் வியாக்கியானம் பேசினான்.

                          “ஆதரவு  தேவைப்படும் போது, அதைக்கொடுக்காத உறவு, பிறகு உரிமை கொண்டாடிட்டு வரதுல என்ன நியாம் இருக்கு?” என இவள் எரிச்சல் பட,

                  “அந்த நேரத்துல  என்னோட ஆதரவு யாருக்கு முக்கியமா தேவைப்படும்ன்னு யோசிக்கற அளவுக்கு உனக்கு மூளை இல்லைன்னாலும், எனக்கு இருந்தது. அதனாலதான் நான் அப்போ அப்படி நடந்துகிட்டேன்” என்று பதில் வந்தது.

      அவனின் பதிலில் இன்னும் கடுப்பானவள், “ஏன் எதுக்கு அப்படி நடந்துகிட்டீங்கன்னு உங்ககிட்ட யாரும் இங்க விளக்கம் கேட்டு காத்துட்டு இல்ல!” என படபடக்க,

       “ஆனா… நான் கிட்டதட்ட இரண்டு வருஷமா அதுக்குதான், அதான் விளக்கம் கொடுக்கத்தான் காத்துட்டு இருக்கேன்.” என அவன் நிதானமாக அவள் விழிகளையே பார்த்துக்கொண்டு சொன்னான்.

           ம்க்கும். இவர் எப்ப மத்தவங்களுக்கு,அதுவும் எனக்கு புரியறாப்போல பேசியிருக்கார், இப்ப பேச! இவருக்கு இவர் மட்டும்தான் ‘அறிவாளி ஆளவந்தான்’ன்னு நினைப்பு! இந்த முசுடுகிட்ட பேசி ஒருபலனும் நமக்கு கிடைக்கபோறதில்லை, அதனால முடிந்த அளவுக்கு இதை இங்கயிருந்து இப்போதைக்கு சுமுகமா கிளப்பிட்டோம்னா  மத்தத ஈவ்னிங் அப்பா வந்து பாத்துப்பாங்க’ என மனதில் நினைத்த நித்தி,

      “அப்பா வந்தப் பிறகு நீங்க அவர்கிட்ட பேசிக்கங்க..இப்ப சரணை நான் தூங்க வைக்கனும்.அதனால நீங்க…” என இவள் இழுக்க,

      “கொஞ்சநேரம் நான் அவன்கிட்ட பேசிட்டு இருக்கட்டுமா? அப்புறம் அவன் தூங்கட்டும்” என சொல்லி புதியவன்,தன் கைகளை விரித்து  சரணை தன்னிடம் வரும்படி அழைக்க, ‘அவனிடம் போகட்டுமா?’ என சரண் தன் தாயிடம் அனுமதிக் கேட்பதை போல பார்த்தான்.இதைப் பார்த்த அந்த புதியவன்,

     “சரண் குட்டி! டாடி கிட்ட வரதுக்கு கூடவா உங்க மம்மிகிட்ட பர்மிஷன் கேப்பீங்க! உங்க மம்மி ஒன்னும் சொல்லமாட்டாங்க, என்கிட்ட வாங்க.” என்று தான் சரணுக்கு யார் என்பதை மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தி, அவனை தன்னிடம் அழைத்தான்.

 அவனின் பேச்சில் வந்த எரிச்சலை மறைத்து, “இல்லல்ல,. அவன் இப்ப தூங்கலைன்னா சிடுசிடுன்னு பொழுதுக்கும் அழுதுட்டே இருப்பான். அதனால அவன் இப்ப தூங்கட்டும்.நீங்க போயிட்டு அப்பா வந்ததும் வரீங்களா?” என நயமாக மீண்டும் சொன்னாள் நித்தி.

         “சரி! அவன் தூங்கட்டும்.அவன் தூங்கறவரை நான் கொஞ்ச நேரம் இங்கேயே உங்க கூடவே இருக்கட்டுமா?அங்க நம்ம வீட்டுக்கு போனா தனியா இருக்கனும். அம்மாப்பா இப்ப என்கூட வரலை.அங்கபோனா, எனக்கு ஏதேதோ பழைய நியாபகங்கள் எல்லாம் வரும்.அதான் கொஞ்சநேரம் இங்க உங்க கூடவே இருக்கேனே. கொஞ்ச நேரம் தான் .ரொம்ப நேரமெல்லாம் இருக்கமாட்டேன்.ப்ளீஸ், இருக்கட்டுமா?” என பாவமாய் கேட்டான் புதியவன்.

            இப்ப இவள் என்ன பேசுவாள்! எதை சொல்லி இவனை இங்கிருந்து கிளப்புவாள்?அதிர்ச்சியில் அவளுக்கு ‘அடுத்து என்ன சொல்ல!’ என்று தோன்றவில்லை.

 ‘தி கிரேட் சஞ்சய் ஸ்ரீநிவாஸ்’ அவகிட்ட கெஞ்சிட்டு, அதுவும் ப்ளீஸ்ன்னு வேற சொல்லிட்டு இருக்கார்! என்னடா இது  ஒரே அதிசயமா இருக்கு!’ என மனதினுள் நினைத்த நித்தி, அவனுக்கு சம்மதமாய் தன் தலையை ஆட்டி, சரணிடம்,

        “பப்பு! நீங்க அவங்க கூட கொஞ்ச நேரம் விளையாடறீங்களா?” எனக்கேட்டாள்.

      தினமும் இந்த நேரத்தில் வலுக்கட்டாயமாய் தூங்கவைக்கபட்ட சரணுக்கு இன்று அதில் இருந்து விடுதலை கிடைக்கும் போல இருக்கவே,கிடைத்த வாய்ப்பை அப்படியே பற்றி, “ஹேய்… இப்ப நான் தூங்க வேணாமா? டாடி கூட விளையாடட்டா மம்மி? டாடி கூட என்ன விளையாடட்டும்? இங்கயா? இல்ல நாங்க வெளிய போய் விளையாடட்டுமா?டாடி கூட வெளிய போன நீங்க என்னை திட்டமாட்டீங்க தானே! இல்ல, நான் ‘அன்நோன் பர்சன்ஸ்’ கூட போகலை இல்ல, நம்ம டாடி கூட தானே போறேன்! சோ நீங்க என்னை ஒன்னும் சொல்லமாட்டீங்க!” என சரமாரியாய்க்  கேள்விகள் கேட்டு,அதற்கு முக்கியமான கேள்விக்கு பதிலையும் தானே கொடுத்துக்கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை ‘டாடி’ சொல்லி நித்தியை கடுப்பேற்றிய சரண்,  

           “டாடி…! உங்களுக்கு எந்த கேம் பிடிக்கும்? எங்க விளையாடலாம் டாடி?, மம்மிய கூட நம்ம கேம்ல சேர்த்துக்கலாமா?” எனக்கேட்டு வைத்தான்     

      ‘ஆஹா.. இதுக்கு நான் நினைக்கும்  பதிலை கொடுத்தா என் முன்னாடி நின்னுட்டு இருக்கும் டிராகுலா சத்தியமா என் ரத்தத்தை குடிச்சிடும்!’ என அஞ்சிய சஞ்சய்,

          “இப்ப நாம மட்டும் விளையாடலாம் சரண்! மம்மி ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறம் மம்மிய நம்ம கூட சேர்த்துக்கலாம்.ஓகே வா?” என்றான்.

   சரணின் டாடி மழையில் அதுவரை வேண்டாவெறுப்பாக நனைந்துக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் பொறுக்கமுடியாது,“அவன்தான் குழந்தை. தெரியாம உங்களை டாடின்னு சொல்றான், நீங்களும் அதை அப்படியே ஏன் சொல்றீங்க, அவன்கிட்ட நீங்க அப்படி இல்லைன்னு சொல்றதுக்கு என்ன?” என சஞ்சயிடம் காய்ந்தாள்.

         “சரி, நீ சொன்னதை போலவே நான் டாடி இல்லைன்னு சொல்லிடறேன், அப்புறம், அவன் ‘அப்ப யார் என்னோட டாடி?’ன்னு கேட்டா என்ன சொல்வ? யாரைக் காட்டுவ? அதுக்கு ஆளை ரெடி பண்ணிட்டியா!” தான் கேட்பது தவறு எனத்தெரிந்தும் கேட்டான் சஞ்சய்!

              இதற்கு என்ன பதில் சொல்வது எனத்தெரியாது வாழ்க்கையிலேயே முதல் முறையாக கேள்விக்கு பதிலளிக்க முடியாது, ‘இனி இது தொடரும்…!’ என்ற உண்மையறியாது, முழித்துக்கொண்டு நின்றாள் நித்தியலட்சுமி!

          அவளின் திகைப்பை பார்த்த சஞ்சய்,’நம்ம ஆளு முட்டக்கண்ண போட்டு முட்டமுட்டயா முழிச்சிட்டு நின்னாலும் கூட செம்ம க்யூட் தான்! சும்மா சொல்லக்கூடாது என்னோட பேபி செம்ம அழகு!’ என நினைக்கும் போதே அவன் உள்ளிருந்து ஒரு குரல் ‘இது உன் ஞானகண்ணுக்கு இப்பதான் தெரிந்ததா ராசா! அவ அழகுன்னு முன்னாடி எல்லாம்  உனக்கு தெரியலையா?’ எனக்கேட்டு அவனை டிஸ்டர்ப் செய்தது. இதுக்கெல்லாம் டிஸ்டர்ப் ஆகிட்டா அவன் எப்படி சஞ்சய் ஆவான்!

           ‘புத்தருக்கே… அவரோட இருபத்தி ஏழாம் வயசுல தான் ஞானம் கிடச்சுதாம், அதுக்காக அவர்கிட்ட போய் “இப்பதான் உனக்கு ‘ஞானம்’ கிடைச்சுதா… அப்ப இத்தனை நாளாய் ‘அறிவு’ இல்லாமையா  இருந்த?’ன்னு உன்னால  கேட்க முடியுமா…! சில விஷயங்களை எல்லாம் ‘என்ஜாய் பண்ணனும்,என்கொயரி பண்ணகூடாது’ சோ… நீ மூடிட்டு உன்னோட வேலைய பாரு!’ எனக்கூறி மனசாட்சியே…. இன்றி தன் மனசாட்சியை அடக்கிய சஞ்சய்,

            “என்ன கேட்டதுக்கு பதிலை சொல்லாம என்னை ‘சைட்’ அடிச்சிட்டு இருக்க!” என்று நித்தியை மேலும் அதிர்ச்சியடைய செய்தான்.

           ‘என்னடா இது… இந்த ‘சிடுமூஞ்சி குமாரு’, இப்படி பேசுது? புள்ளய அதோட அப்பாடக்கர் கம்பனில போட்டு பிழி பிழின்னு பிஞ்சிட்டாங்களா….! அதான் மூளை கலங்கிப்போச்சா?’ என்று தீவிர யோசனையில்  நித்தி இருக்கும் போதே…

             “டாடி…! விளையாட போகலாமா…?” என சரண் ஒரு கேள்வியை கேட்டு அங்கிருந்த இருவரின் பேச்சுக்கும், நினைப்பிற்கும் தடை விதித்தான்.

          சரணின் அழைப்பு, சஞ்சயின் பேச்சிற்கு தடைவிதித்த போதும், அவனின் ஆழ்ந்த பார்வைக்கு எந்த தடையையும் விதிக்க முடியவில்லை. ’நான் கேட்ட வினாவிற்கு எப்போது விடையளிக்க போகிறாய்…?’ என்று அவனின் விழி அவளை விசாரிக்க தவறவில்லை.

        ‘போடா டேய்! நீ வாயால் கேட்டாலே உன்னையெல்லாம் நான் ஒரு மனுஷனா மதிக்கமாட்டேன்! இந்த அழகுல கண்ணால கேள்வி கேட்டா… நாங்க பதில் சொல்லிடுவோமா!’ என நினைத்து எதிர் பார்வை பார்த்தாள் நித்தி,.

         அவளின் பார்வையில் இருந்து அவள் மனதை அறிந்தவனோ,  ‘உன்கிட்ட பதிலை வாங்காம உன்னை விடமாட்டேன்!’ என தன் எண்ணத்தை அவளுக்கு தெரிவித்து, அங்கிருந்து செல்ல விருப்பமற்று அப்படியே நின்றான்.

அவனுக்கு ‘அவள் கடந்த இரண்டாண்டுகளில் ஒரு நொடியாவது தன்னை பற்றி ஏதாவது எண்ணியிருப்பாளா?’ என்பதை அறிய ஆவல் அதிகமாக இருந்தது.

‘அவளின் வாழ்க்கையில் தனக்கு இந்த நொடிவரை ஒரு சிறு இடம் கூட இல்லை! தன்னை அவள் ஒரு பொருட்டாய் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்!’ என்பது நிச்சயமாக இவன் அறிந்த ஒன்றுதான்! இருந்தாலும் ஆசை யாரை விட்டது?

பல நேரங்களில் நாம் நம்அறிவு சொல்லும்படி நடந்திருந்தால் எவ்வளவோ அனர்த்தங்களை தடுத்திருக்கலாம். ஆனால் ஆசைக்கொண்ட மனதின் அறிவு, எங்கே வேலை செய்கிறது?

விழிவழியே விசாரணையை தொடுத்த தந்தையோ,தற்காலிகமா விசாரணையை தள்ளிவைத்து மகனுடன் விளையாட அங்குள்ள பூங்காவிற்கு செல்ல,விடையளிக்க மறுத்த தாயோ செல்லும் அவர்களை தடுக்கும் வழியறியாது தனித்து நின்றாள்.

 

எபி 3

           மாலையில் தாயும் தந்தையும் சேர்ந்தே வீடு வருவது, அவர்களின் வழக்கம்தான் எனினும்,அன்று தாய்க்கு மறைத்து, ஒன்றை தந்தைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நித்தி, தந்தையை பேசி மூலம் தொடர்பு கொண்டாள்.

        அவள் சொல்ல விழையும் விடயம் அவளின் தந்தைக்கு, சொல்ல வேண்டியவனே எப்போதோ அதை சொல்லிவிட்டான் என்பதை இவள் அறிவாளா?

       “அப்பா… அப்பா! இங்க அந்த ‘கரிசட்டி’ வந்திருக்கு பா. இப்போதான் நம்ம வீட்டுக்கு வந்து என்னோட பேசிட்டு, நம்ம சரண் கூட விளையாட போறேன்னு வெளிய பார்க்குக்கு கூட்டிட்டு போயிருக்கு. நீங்க இன்னைக்கு அம்மாவ கூட்டிட்டு வராம சீக்கிரம் இங்க வாங்கப்பா. அம்மா வருவதற்குள்ள நாம அதை இங்க இருந்து ஓட்டி விட்டுடலாம்” எனப் படபட பட்டாசாய் பொறிந்தாள் நித்தி.

  “என்னடாம்மா… என்ன சொல்ற?அது என்ன கரிசட்டி! யாருடா அது?” என அவளின் தந்தையின் கேள்வியிலும் உஷாராகாத நித்தி,

        “அதான்-பா அந்த சிடுமூஞ்சி!” என்று அப்போதும் வந்தவனின் நிஜ பெயரை சொல்லாது, அவனுக்கு இவள் வைத்த பட்டப்பெயர்களையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

         என்ன நித்தி! லஞ்ச் முடிந்து இங்க பாங்க்ல கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க-மா. இப்ப போய் எதை எதையோ சொல்லி, விளையாடிட்டு இருக்க. ஒழுங்கா சொல்ல வந்ததை சொல்லுடாம்மா. எனக்கு நிறைய வேலை இருக்கு” என தன் தந்தை வழக்கத்திற்கு மாறாய் சலித்துக்கொள்ளும் போதுதான் தன் தவறை உணர்ந்தாள் நித்தி.

       ஆத்திரத்திலும் அவசரத்தும் தானே நம் மனதினுள் உறைந்திருப்பவை எல்லாம் உருகி, வெளியே வருகின்றது!‘

         ஐயையோ…. நான் மனசுல அவனுக்கு வச்ச  பெயர்களை எல்லாம் அப்பாகிட்ட உளறிட்டேனே…! இப்போ என்ன சொல்லி சமாளிக்கறது!’ என முதலில் திகைத்த நித்தி,

  “அப்பா… பக்கத்து வீட்டுக்காரங்க வந்திருக்காங்க-பா.” என மிக மெதுவாக சொன்னாள்.

   “யார்டா… யாரோட வீட்டுக்காரங்க வந்திருக்காங்க!”என தெரிந்தோ தெரியாமலோ,அப்போதும் தவறாகவே ஈஸ்வரன் கேட்க,

     அப்பாவின் இந்த கேள்வியில் அதிர்ந்த நித்தி, ”சஞ்சய் வந்திருக்காங்க-பா!” என சொல்ல வந்ததை ஒரு வழியாய் சொல்லி முடித்தாள்.

         “யாரு… சஞ்சுவா வந்திருக்கான்..? அவன் கூட வேற யார் யார் ம்மா வந்திருக்காங்க?” என வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை குசலம் விசாரிப்பதை போல குஷியாக விசாரித்தார்.

            ஏற்கனவே தனக்கு வேண்டியவர் அவனுடன் வராததால் கோபத்தில் இருந்தவள் அப்பாவின் விசாரணையில் இன்னும் கடுப்பாகி, “ம்ம்ம்ம்…. அவன் கூட யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு எனக்கு தெரியாது-பா. யார் வந்தாலும் வரலைன்னாலும் நமக்கென்ன-பா வந்தது?” என சிடுசிடுத்தாள்.

      “அவனை நான் எப்படி வேணும்ன்னாலும் சொல்லலாம்.நீ எப்படி அவன்னு சொல்லலாம்?என்னடாம்மா! புது பழக்கமெல்லாம் கத்துட்டு வரீங்க போல இருக்கு!” என அவளின் ‘அவன்’ பதத்தால், ஒரு தந்தையாய் கண்டித்தார்.

   “ஸாரிப்பா!  அவர்…ன்னு சொல்லும் போது ‘டங்கு ஸ்லிப்’ ஆயிடிச்சி! இப்ப நீங்க இங்க வரீங்களான்னு கேட்டேனே…. அதுக்கு முதலில் பதிலை சொல்லுங்க. அப்புறம் என்னை திட்டலாம்.”

            “இல்லடாம்மா! இப்போ இங்கயிருந்து என்னால நகர கூட முடியாதே–டா. பாத்துக்கலாம். எது வந்தாலும் நாம பாத்துக்கலாம். நான் எப்போதும் வரும் நேரத்துக்கே அம்மாவ கூட்டிக்கிட்டே வரேன்.கொஞ்சம் வேலை இருக்கு நித்தி. அதனால இப்ப போனை வைக்கறேன்-டா?” என வேகமாக கூறி மகளிடமிருந்து தப்பித்தால் போதுமென பேசியை துண்டித்தார்  ஈஸ்வரன்.

       ‘என்ன இவர் மேட்டரோட சீரியஸ் தெரியாம பட்டுன்னு பேசி, பொட்டுன்னு போனை வச்சிட்டார்! கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது இந்த பரமுக்கு. எல்லாம் மிசஸ்.பரமு கொடுக்குற இடம்.’ என மனதினுள் தாயையும், தந்தையும் தாளித்துக்கொண்டிருந்தாள் நித்தி.

          அங்கே போனை வைத்த ஈஸ்வரனும் மனதினுள் தாளித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால்… வேறொருவனை! அப்போதும் திருப்தியடையாத அவர், போனில் அவனை அழைத்து,

       “டேய்! இங்க வரப்போறேன்னு சொன்ன. ஆனா எப்போ வருவேன்னு சொல்லலை. இன்னைக்கு காலையில்தான் நீங்க இங்க இந்த வாரம் வரப்போறீங்கன்னு தகவல் கிடைத்தது.உடனே உன்னை போன்ல பிடிக்க நினைத்தா  லைன் கிடைக்கலை.சரி நைட் பேசிக்கலாம்னு இருந்தேன்.ஆனா நீ என்னடா இப்ப இப்படி திடுதிப்புன்னு இன்னைக்கே வந்து குதிச்சிருக்க! இதெல்லாம் நல்லாவாடா இருக்கு? இப்ப, சீனியும் பத்துவும் கூட வரலையா? அவங்க எப்போ வராங்க?” எனக்கேள்வி மேல் கேள்வி கேட்டு எதிர் முனையில் இருப்பவரை துளைத்தெடுத்தார்.

         ‘ஆங்… நான் வெளிய வந்த ஐந்தே நிமிஷத்துல மாமாக்கு நியூஸ் போயாச்சா?என் ‘குஷ்புஇட்லி’ செம்ம பாஸ்ட் தான்!’ என எண்ணியவன்,” நான் ஈவ்னிங் உங்களுக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு தான் சொல்லலை மாமா. அதுக்குள்ள உங்க பொண்ணு உங்ககிட்ட சொல்லியாச்சா? அம்மாவும், அப்பாவும் இப்ப என்கூட வரலை அவங்க நம்ம ஊரில் இருக்கும் கோவிலுக்கு போயிட்டு, நாளை மறுநாள் தான் வருவாங்க மாமா” என்றது எதிர்முனை.

         “சஞ்சு! நானும், உன்னோட அத்தையும் வரவரைக்கும் நீ நித்திகிட்ட எதையும் சொல்ல வேணாம். உங்க அத்தைகிட்ட கூட நான் எதையும் சொல்லலை.சீனியும், பத்துவும் வந்ததும் நாம விஷயத்தை பேசிக்கலாம் என்ன…?”

    “அப்போ இன்னும் ரெண்டு நாள் காத்துட்டு இருக்கனுமா நான்! அதெல்லாம் முடியாது.சாயங்காலம் நீங்க வந்ததும், நாம விஷயத்தை பேசிடலாம்.” எனப்பிடிவாதமாய் கூறினான் சஞ்சய்.

       “டேய்… ஏன்டா இவ்வளவு அவசரப்படற! ஆரம்பத்திலேயே நித்தி வேணாம்ன்னு சொல்லிட்டா அப்புறம் நம்மால ஒன்னும் பண்ண முடியாது. அவ யார் சொன்னா கேப்பாளோ… அவங்க வரட்டும் அப்புறம் நாம இந்த விஷயத்தை ஆரம்பிக்கலாம். நான் சொல்றதை கேளுடா!” என்று ஈஸ்வரன் சொல்ல,

          “எல்லாம் அவங்க கொடுத்த இடம் தான்! எப்பவும் இவ பேச்சுக்கு அவங்களுக்கு தலையாட்டி தான்  வழக்கம். இப்ப மட்டும் இவளை என்ன சொல்லிடப் போறாங்க! அவங்ககிட்டயும் இவ ரெண்டு வருஷமா பேசாம தானே இருக்கா? இப்ப மட்டும் அவங்க சொன்னா கேட்டுப்பாளா!” என சஞ்சய் கேட்டான்.

    “உன்னோட அவசரத்துக்கு இங்க ஒன்னும் வேலை நடக்காது. இவ்வளவு நாள் பொறுத்திருந்ததை போல இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துகிட்டு தான் இருக்கனும்.நான் ஈவ்னிங் வரும் போதே அத்தைகிட்ட நீ வந்திருக்கேன்னும், மத்தவங்களும் இங்க வரப் போறாங்கன்னும் சொல்லி அழைச்சிட்டு வரேன். அப்புறம் மீதிய பாத்துக்க வேண்டியது உன்னோட சாமார்த்தியம்” எனப் பெரும் பொறுப்பை சஞ்சயின் தலையில் கட்டினார் ஈஸ்வர

      “அதெல்லாம் எங்க அத்தையை சமாளிக்க எங்களுக்கு நல்லாவே தெரியும். அத்தைப்பொண்ணை சமாளிக்கறதை நினைச்சா தான், லைட்டா பாடி ஷிவர் ஆகுது!” என்றான் பாவமாய்.

            “இதையெல்லாம் நீ முன்னாடியே யோசிச்சியிருக்கனும் மாப்பிள்ளை! ஆல்ரெடி வச்சிகிட்ட ஆப்புக்கு இப்போ ஒன்னும் பண்ண முடியாது. அடியோ… ஓதையோ எது கிடைச்சாலும் ஏத்துக்க வேண்டியது தான். வேற வழியே இல்லை!” என்று மேலும் அவனை நடுங்கவைத்துவிட்டே போனை வைத்தார் ஈஸ்வரன்.

    தன்னுடைய உரையாடலை முடித்துக்கொண்டு பணியில் ஈடுபட்ட ஈஸ்வரனுக்கு அடுத்த ஒரு மணி நேரம் வரை மூச்சு விடுவதற்க்கு கூட நேரமின்றி போனது.

     அதன் பிறகு, அவருக்கு கிடைத்த சிறிது ஓய்வையும் அவரின் செல்ல மகள், பேசியில் பேசிய பேச்சு களவாடி விட்டது.அப்போதுதான்  அவசரத்தில் அவர் கவனிக்காது விட்ட, ‘கரிசட்டி!’ ‘சிடுமூஞ்சி!’ இவ்விரண்டும் அவர் கண்முன்னே வந்து நின்றது.

         ‘நித்திம்மா… உனக்கு என்னோட மாப்பிள்ளை முகம், ‘கரிசட்டி’ போலவா-டா இருக்கு! என்னதான் அவன் கொஞ்சம் கறுப்புன்னாலும், அதுக்காக ‘கரிசட்டியா?!’

       ‘சஞ்சு… இந்த பெயர் உனக்கு தேவையாடா? நாளைக்கு என்ன வேணும்ன்னாலும்  நடக்கலாம்ன்னு முன்னாடி நீ உஷாரா ஒழுங்கா இருந்திருந்தா, இந்த பெயரெல்லாம் உனக்கு கிடைச்சியிருக்குமா!’

         ‘அய்யோ! என்னால சிரிப்பை அடக்கமுடியலையே.  நீ காட்டும் கெத்துக்கு, இந்த பெரு ஹாஹா… மரண அடிடா மாப்ள!’ என மனதினில் தன் மகளிடம், மாப்பிள்ளையிடமும் பேசிமுடித்த ஈஸ்வரன்,

          இன்னும் சிறிது நேரத்திற்கு பிறகு,நேரில் தன் மனையாளிடம் எப்படி பேச்சை தொடங்குவது?. என்று எண்ணலானார்.

       தன் மாமனிடம் பேசி முடித்த சஞ்சய்யும், அதே தான் நினைத்துக்கொண்டிருந்தான்.’அத்தையை எப்படியாவது பேசி சம்மதிக்க வச்ச்சிடலாம், ஆனா இந்த குஷ்பு இட்லியை தான் எப்படி கரைட் பண்றதுன்னு தெரியலை! பேசி கரைட் பண்ற மாதிரியா நாம முன்னாடி அவ கிட்ட நடந்தோம்! ஒன்னும் பேசவே முடியாதபடில அப்ப அவகிட்ட அடிக்கடி வாயவிட்டு வச்சியிருக்கோம். அவ நம்மகிட்ட இப்ப சாதாரணமா பேசறதே ரொம்ப கஷ்டமா இருக்கும் போல! இதுல, நான் என்னோட ஆசைய அவகிட்ட எப்படி சொல்றது? அவ அதை எங்க சரியாய் புரிஞ்சிக்கறது!’

          ‘இப்ப உங்கண்ணுக்கு குஷ்பு இட்லியா தெரியறவ, முன்னாடி ஏன்-பா வேற மாதிரி தெரிந்தா? இனி நீ செத்தடா சஞ்சய்! என்னென்ன பிலிம் காட்டின அவகிட்ட! இப்ப அவ காட்டப்போறா. நல்லா பாத்து ரசி!’ என அவன் மனசாட்சி வேறு அவனை வெறுப்பேற்றியது.

           இப்படித்தான் உள்ளே இருந்துக்கொண்டு உடையவரின் தவறை அடிக்கடி சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பதால் தான், இதை அதான் மனசாட்சியை, இப்போது அதிகமானவர்கள் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை போல!

            ஒரு உயிர், தன்னுடைய வளமான வாழ்க்கையில் முதலடியை இன்று எடுத்து வைக்க போவதை எண்ணி ஆனந்தமாய் அந்திமாலைக்கு காத்திருக்க, மற்றொரு உயிரோ… இங்கே வந்தமர்ந்துக்கொண்டு தன்னுயிரை வாங்கும் அந்த இன்னொரு உயிரை இங்கிருந்து அனுப்ப வழிப்பார்த்து மாலைக்கு காத்திருந்தது.

          இப்படி ஏதோ ஒருஎதிர்பார்ப்பில், ‘எப்போது வரும்…? என்ற ஆவலில் இரு உயிர்கள் காத்துக்கொண்டிருந்த மாலையும், தன்னுடன் மாற்றத்தை அழைத்துக்கொண்டு வந்தே விட்டது.அம்மாற்றம்… யாரின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரப்போகிறது!?

      வீட்டிற்கு வரும் வழியிலேயே ஈஸ்வரன் தன் மனைவியிடம் சஞ்சய் வந்திருக்கிறான் என்றும், அவனின் இப்போதைய மாற்றத்தையும் ஆசையையும் கூறி, ‘அடுத்து என்ன செய்யலாம்?’  என்ற ஆலோசனையையும் கேட்டார்.

     அதற்கு ஈஸ்வரி, ”அவன் மட்டும் ஆசைப்பட்டா போதுமாங்க? இப்படித்தான் முன்னாடியும் ஆசைப்பட்டாங்கன்னு நாம சேர்த்து வச்சது என்ன ஆச்சு? இப்ப அவன் ஆசை மட்டும் போதாதுங்க. எல்லோருடைய ஆசையும்,முக்கியமா ஆசியும் வேணும்ங்க.அப்ப தான் இனி எந்த பிரச்சனையும் வராதுன்னு நான் நினைக்கிறன்.போன தடவை நாம பட்டதே போதும்! அதனால நாம இழந்ததும் போதும்!” என்று தன் முடிவை கூறினார்.

        “ஈஸ்வரி! எதையும், எதையும் இணைச்சி முடிச்சி போடற நீ. இயற்கையா நடந்த இழப்புக்கு நாம மத்தவங்களை குறை சொல்லக்கூடாது. போனதையே நினைத்துக்கொண்டிருந்தால், நாம இங்க வாழமுடியாது.” எனக்கண்டித்தார் ஈஸ்வரன்.

            “இயற்கையா நடந்த இழப்புக்கு மத்தவங்களை போல, நான் யார்  மேலயும் பழிப்போடலங்க! புரிஞ்சிக்காம விட்டுட்டுப் போனவங்களை பத்தி தான் நான் கவலைப்படறது.மறுபடியும் சேர்ந்து, மீண்டும் ஒரு பிரிவுன்னா என்னால தாங்கவே முடியாது. அதான் சேர்வதற்கு முன்பே எல்லாத்தையும் தெளிவா பேசிக்கலாம்ன்னு சொல்றேன்.”

           “சஞ்சய் ஆசை எந்த தடங்கலும் இல்லாம சுமுகமா நிறைவேறிட்டா, என்னைவிட சந்தோஷப்படறவங்க வேற யார் இருக்க போறாங்க? இது மட்டும் நடந்துட்டா ‘சரணின் எதிர்காலத்தை பற்றிய என்னோட பயமும் போகும்” என்று நான்கையும் ஆராய்ந்தறிந்து அவருக்கு பதிலளித்தார் ஈஸ்வரி.

          “சஞ்சய் ஆசை, உன்னோட பயம்,சரணின் எதிர்காலம் இப்படி எதையெதையோ யோசிக்கற நீ, இதில் உன் பொண்ணோட விருப்பம் முக்கியம்னு ஏன் யோசிக்க மாட்டேங்கற! அவ இதுக்கு சம்மதிப்பாளா? அவளோட சம்மதம்தான் இங்க ரொம்ப முக்கியம்” எப்போதும் போல் இப்போதும் தன் மகளின் விருப்பமே முக்கியம் என்றார் ஈஸ்வரன்.

         “இதில் அவளோட விருப்பத்தை கேட்காம நாம எப்படிங்க முடிவெடுக்க முடியும்? நமக்கு பிறகு சரணுக்கு இவள் துணையா இருப்பா. ஆனா, இவளுக்கு யார் இருப்பா? இந்த கவலை எனக்கு இல்லைன்னா நீங்க நினைக்கறீங்க? சரணுக்காக அவள் தனியாவே இருந்துடுவாளோன்னு நான் எத்தனை நாள் தவிச்சிருக்கேன்னு தெரியுமா உங்களுக்கு? என்னை என்ன அவ்வளவு சுயநலவாதியாவா நினைச்சிட்டீங்க!” என வேதனையுடன் கேட்டவர் மேலும்,

        “உங்களுக்காவது அவ மகள். ஆனா, எனக்கு அவள் அம்மாங்க! இப்பல்லாம் அவ என்னை எப்படி பொத்தி பொத்தி பாத்துகறான்னு எனக்கு தெரியாதுன்னா நீங்க நினைக்கறீங்க?”

     “ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி வரைக்கும்தான் நான் அவளுக்கு அம்மாவா இருந்தேன். அது கூட பெயருக்குத்தான் நான் அவ அம்மாவா இருந்திருக்கேன். ஆனா இப்ப அவதான் எனக்கு அம்மாவா இருக்கா. அவ இனியாவது சந்தோஷமா பழைய நித்தியா கவலை இல்லாம இருக்கனுங்க.”

         “நீங்க சொன்னது மட்டும் நடந்தா, அவ கண்டிப்பா நல்லா இருப்பாங்க. அவளை தலையில் தூக்கி வச்சிக் கொண்டாடறவங்க அங்க இருக்காங்க. அவங்ககிட்ட போய்ட்டா அவளுக்கு என்னோட நினைப்பு கூடவராது.” என முதலில் தன் மகளை பெருமையாய் பேசிக்கொண்டிருந்த ஈஸ்வரி, பிறகு ஒரு தாய்க்கே உரிய பொறாமையில் பேசினார்.

        மனைவியின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தவரும்  அதை ஆமோதிப்பதை போல சிரித்தார்.

         “அப்ப நாம இப்போதைக்கு எதையும் ஆரம்பிக்கவேணாம். எல்லோரும் வந்ததும் பொறுமையா பேசிக்கலாம்ன்னு சஞ்சுகிட்ட சொல்லிடட்டுமா ஈஸ்வரி?”

      “ஆமாங்க, அதான் சரியா வரும். நாம எதை செய்தாலும் எல்லோரும் கலந்து ஆலோசித்து இந்த முறை, பொறுமையா செய்யலாம்” என முடித்தார் ஈஸ்வரி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *