Categories
Uncategorized

உயிரில் உறைந்த நேசம்-15

Free Download WordPress Themes and plugins.

உயிரில் உறைந்த நேசம்-15

நாட்கள் நாடித்துடிப்பாக நகர்ந்த பொழுதும் வர்த்தினியின் முடிவினைப் பற்றி எதுவும் தெரியாமல் அனைவரும் அமைதி காத்த வண்ணம் இருந்தனர். பல வருடங்கள் காத்திருப்பில் இருந்த சிவாவிற்கு இந்த குறுகிய காலத்தில் அவனுடைய பொறுமை வர்த்தினியால் ஒவ்வொரு நொடியும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

சிவா தினமும் குர்கான் வந்து செல்வதை தன்னுடைய வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். சிவா வீட்டினுள் நுழைந்த அடுத்த நொடியில் வர்த்தினிக்கு மறந்து போன அனைத்து வேலைகளும் ஞாபகத்தில் வந்து அந்த நேரத்தில் தான் முடிக்க வேண்டியதிருக்கும்.

சிவாவும் வர்த்தினி தன்னிடமிருந்து விலகிச் செல்லவே இவ்வாறெல்லாம் நடந்துக் கொள்கிறாள் என்பதை அறிந்திருந்தாலும், குர்கான் வந்து செல்வதை நிறுத்தவில்லை. தன்னுடைய வரவிற்காக தினமும் ஆவலுடன் காத்திருக்கும் ஆஷிர்யாவிற்காக சிவா வர்த்தினியிடம் பேசிட எண்ணிடும் பொழுதெல்லாம் வர்த்தினியின் ஒதுக்கம் சிவாவின் பொறுமையை அனலில் அணைத்திட செய்து கொண்டிருந்தது.

சிவாவின் உரிமையான பார்வையில் இருந்த வேறுபாடே வர்த்தினியை சிவாவிடமிருந்து ஒதுங்கி செல்ல செய்தது. அதுவுமில்லாமல் சிவா ஆஷிர்யாவிடம் பேசும்பொழுதெல்லாம் “நாம நம்ம வீட்டுக்கு போனதும் உனக்கு என்ன என்ன வேணுமோ அதெல்லாம் அம்பா செஞ்சு தரேன்”, என்றுக் கூறுவது வர்த்தினியின் சாம்பல் நிற வஸ்துவில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தது.

மூர்த்தியும், மங்களாம்மாவும் வர்த்தினியிடம் அவளது முந்தைய வாழ்க்கையை பற்றியோ, அவளது தனிமையை பற்றியோ எவ்வித கேள்விகளும் கேட்காமல் தங்களின் துணை இனிவரும் காலங்களில் எப்பொழுதும் உண்டு என்பதை தங்களது செயல்களில் உணர்த்திய வண்ணம் இருந்தனர்.

அன்றைய காலைப் பொழுதே சிவாவினை அழைத்த அட்வகேட் “சார்! வர்த்தினி மேடம் கிட்ட இன்னிக்கு பேசியே ஆகணும். அப்பதான் அவங்களால கிளம்பி வர முடியும். நீங்க என்ன சொல்றீங்க?”, என்றுக் கேட்டார். “ஓகே கோபி! சொல்லிடலாம், சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கால் பண்ணி சொல்லிடுங்க. அப்புறம் குழந்தையை கூட கூட்டிட்டு வரணுமா?”, என்று சிவா கேட்டதிற்கு “இல்லை சார்! பதினொறு வயசுக்கு மேல இருந்தாதான் குழந்தைங்களை கேட்டு முடிவெடுப்பாங்க. வர்த்தினி மேடமோட குழந்தை சின்னப்பொண்ணு. அதனால கூட்டிட்டு வர தேவையில்லை .அதோட கஸ்டடி நமக்கு கிடைச்சாலும் ராஜேஷ் வந்து குழந்தையை பார்க்கறதுக்கு பெர்மிஷன் கொடுத்துதான் ஜட்ஜ்மென்ட் கிடைக்கும்”, என்று வக்கீல் கூறிய விஷயங்களைக் கிரகித்துக் கொண்ட சிவா “ஓகே கோபி! கேர்ரி ஆன்”, என்றுக் கூறிவிட்டு தன்னுடைய அலுவலைக் கவனிக்க சென்றுவிட்டான்.

வக்கீல் வர்த்தினியிடம் பேசும்பொழுது தான் தன்னுடைய அம்முவின் அருகில் இருக்கவேண்டும் என்றெண்ணியே சிவா மாலை ஆறு மணிக்கு மேல் அழைப்பெடுக்குமாறு கூறியிருந்தான். ஆனால் அன்றே முடிக்க வேண்டிய சில வேலைகளின் காரணமாக அன்றைய தினம் சிவாவினால் குர்கான் செல்ல இயலவில்லை. அதனால் ஏற்படப் போகும் நன்மைகள் பற்றி தெரிந்திருந்தால் அந்த நேரத்தில் தனக்கு நேர்ந்த தேவையில்லாத டென்ஷனை சிவா தவிர்த்திருப்பானோ?

அன்றைய நடுஇரவில் வீட்டிற்கு வந்த சிவா முதலில் அழைத்தது மூர்த்திக்குதான். ஏனென்றால் அவரிடமிருந்து சிவாவிற்கு எண்ணற்ற அழைப்புகள் வந்திருந்தன. சிவாவின் அழைப்பை ஏற்ற மூர்த்தி “மாப்பிள்ளை நாளைக்கு காலையிலே வா பேசிக்கலாம். இப்போதைக்கு எதையும் யோசிக்காமல் தூங்கு. நீ வர்ரப்ப எழிலும், அவன் சம்சாரமும் வருவாங்க”, என்று சிவாவை பேச விடாமலே பேசி முடித்துவிட்டார் .

“சரி மாமா”, என்றுக் கூறி சிவாவும் அழைப்பை துண்டித்து விட்டு எழிலுக்கு கால் செய்தான் .அப்பொழுதுதான் கனவில் காஜல் அகர்வாலுடன் கதகளி ஆடிக் கொண்டிருந்த எழிலுக்கு கர்ண கொடூரமாக கத்திய கைப்பேசி கனகச்சிதமாக தன்னுடைய வில்லன் வேலையை செய்தது.

எழிலின் “ஹல்லோவ்வ்” என்ற குரலில் இருந்த கடுப்பை கண்டுகொள்ளாத சிவா “டேய் எலி! உடனே இங்க கிளம்பி வா! வர்ரப்ப ஸ்ரீக்கு என்னை பார்க்க போறதா ஒரு நோட் எழுதி வச்சுட்டு வா! நான் இன்னும் அஞ்சு நிமிசத்துல உன் வீட்டு முன்னாடி இருப்பேன். அப்புறம் மொபைலை சுவிட்ச் ஆப் பண்ணிட்டு திரும்ப தூங்கலாம்னு நினைச்ச அடுத்த செகண்ட்ல போன வாரம் நீ கத்ரீனா கைப் கூட ஆல்ப்ஸ் மலையில டான்ஸ் ஆடுற மாதிரி கனவு கண்டுட்டு தான் ஸ்ரீ கூட ரெண்டு நாள் பேசவே இல்லைனு ஸ்ரீக்கு போன் பண்ணி இப்பவே சொல்லிடுவேன்”, என்று கூறி விட்டு சிவா கால் கட் செய்யும் முன் “டேய் வீட்டுக்கு வெளிய வந்துட்டேன்”, என்று எழில் அழுகுரலில் கூறி முடித்திருந்தான்.

சிரித்துக் கொண்டே இணைப்பை துண்டித்த சிவா தன்னுடைய உடையை மாற்றிக்கொண்டு எழிலின் வீட்டிற்கு முன் வந்தபொழுது எழில் தன்னுடைய இரவுடையை கூட மாற்றாமல் கேட்டை பிடித்து தொங்கியவாறு தூங்கிக் கொண்டிருந்தான்.

சிவா காரை நிறுத்தியவுடன் அந்த சத்தத்தில் கண்விழித்த எழில் வேகமாக வந்து காரில் ஏறியவுடன் “டேய் துரோகி நீயெல்லாம் நண்பனாடா? கத்ரீனா கைப் கூட டான்ஸ் ஆடுனதை மறந்து காஜலோட சேர்ந்து கதகளி ஆடிட்டு இருந்த என்னை பத்ரகாளிகிட்ட மாட்டிவிட்டுடுவேனு மிரட்டி கூட்டிட்டு போறியே! இதுக்காகவே நாளைக்கு அம்முகிட்ட உன்னோட லவ் ஸ்டோரிய சொல்லி அடி வாங்கித் தரலைனா நான் எழில் இல்லடா!”, என்று ஒப்புதல் வாக்குமூலத்தோடு இன்று விளையாட்டாகக் கூறிய விஷயத்தை நாளை தன்னையும் அறியாமல் செயல்படுத்த போகும் நிகழ்வையும் வீர வசனமாக உரைத்துக் கொண்டிருந்தான்.

எழில் மூச்சு வாங்க பேசிமுடிக்கவும் சிவா தன்னுடைய காரை மூல்சந்த் பராத்தவால (இங்கு லச்சா பராத்தா செம டேஸ்ட்டியா இருக்கும். மூல்சந்த் பிளைஓவெர்க்கு கீழ இருக்கு ஷாப்) முன்பு நிறுத்தவும் சரியாக இருந்தது. சிவா காரை நிறுத்திய இடத்தை பார்த்ததும் எழிலின் கண்கள் நண்பனை பாசத்துடனும் பராத்தவை பேராசையுடனும் பார்த்தன.

” டேய் மாப்ள உன்னோட நல்ல மனசை புரிஞ்சிக்காம திட்டிட்டேன் டா. நீதான் உண்மையான நண்பேன்டா!”, என்று எழில் பாசமழை பொழிந்து கொண்டிருக்கும் பொழுதே வெண்ணெயுடன் கூடிய லச்சா பராத்தாவை எழிலின் கையில் தந்து சிவா தன் நண்பனின் வாயை தற்காலிகமாக அடைத்தான்.

இருவரும் உண்டு முடித்து வெளியே வந்து காரில் ஏறியவுடன் சிவாவின் முகத்தையே திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் இருந்த எழிலை நோக்கி “என்னடா?”, என்று சிவாக் கேட்டதும் “டேய் மாப்ள! கோபப்படாம நாளைக்கு டிபென்ஸ் காலனில இருக்குற சலீம்ஸ் கெபாப்க்கு கூட்டிட்டு போய்டுடா. இந்த பராத்தாக்கு அந்த சிக்கன் கெபாப் காம்பினேஷன் செமயா இருக்கும்”, என்று ரசனையுடன் கூறிய எழிலை “எல்லாம் வாங்கி தாரேன். இன்னும் ரெண்டு மணி நேரத்துல குர்கான் கிளம்பணும். போய் ஸ்ரீயை எழுப்பி கிளம்பி வந்து சேர். அப்புறம் குட்டிம்மா கூட வம்பிழுக்கமா இருக்குறதுக்குத்தான் இந்த சாப்பாடு. மீறி வம்பிழுத்த காஜலோட கதகளி ஆடுனதை சொல்லி உன்னை கருவாடு ஆக்கிடுவேன், ஜாக்கிரதை!”, என்று எழிலை மிரட்டிவிட்டே சிவா தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

வெளியில் நிதானமாகக் காட்டிக் கொண்டாலும் வர்த்தினியின் மனநிலையை எண்ணி சிவாவிற்கு சற்று கலக்கமாக தான் இருந்தது. வீட்டிற்குள் வந்தவனின் எண்ணங்கள் வர்த்தினியையும், ஆஷிர்யாவையும் மட்டுமே சுற்றிய வண்ணம் இருந்ததால் இருள் கலைந்து ஆதவனின் அருளைக் கண்டிடும் முன்பே சிவா தன் உறக்கத்தை துறந்து எழில் வீட்டு அழைப்பு மணியை தொல்லை செய்து கொண்டிருந்தான்.

இரவில் சாப்பிட்ட லச்சா பராத்தாவின் லஜ்ஜையால் நெடுநேரம் அவஸ்தைப்பட்டு பிறகு உறங்கிய எழிலுக்கு அழைப்பு மணியின் சத்தம் அபஸ்வரமாகத்தான் ஒலித்தது. ஆனால் உடனடியாக எழுந்து வேகமாக வந்து கதவை திறந்து விட்டவன் “மாப்ள அஞ்சு நிமிசத்துல அசுர வேகத்துல வந்துடுவேன். ஸ்ரீ சிவாக்கு காபி போட்டுக் கொடு”, என்று தன்னுடைய மனைவிக்கு கட்டளையிட்டு விட்டு தயாராகி வருவதற்கு எழில் ஓடிய வேகத்தில் அதுவரை இருந்த மன இறுக்கம் தளர்ந்து சிவாவிற்கு அவனது இதழ்கள் குறுநகையை குத்தகைக்கு எடுத்திருந்தன.

எழிலின் வேகத்தை கண்ட ஸ்ரீநிதியும் “இப்ப என்ன விசயத்துல இவர் உங்ககிட்ட மாட்டிருக்கார் அண்ணா?”, என்று சிவாவிடம் கேட்டதற்கு “அதெல்லாம் ஒண்ணுமில்லைமா! நீ கிளம்பி வாம்மா, நாம போற வழியில எதாவது குடிச்சிக்கலாம்”, எனக் கூறி விட்டு அங்கிருந்த டீவியை இயக்குவதற்கும், எழில் கிளம்பி வரவும் சரியாக இருந்தது.

” அதைக் கண்ட சிவா என்னடா குளிச்சியா? இல்லை தண்ணிய தலையில தெளிச்சுகிட்டு வந்துட்டியா?”, என்று நக்கலாகக் கேட்டுவிட்டு தன்னுடைய காரை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான். அவன் கூறியதற்கு பதில் எதுவும் கூறாமல் சிவாவின் பின்னே அமைதியாக சென்ற எழிலை ஏதோ விசேஷ ஜந்து போன்றே ஸ்ரீநிதி நோக்கினாள். இருந்தும் ஒன்றும் பேசாமல் மூவரும் குர்கானுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் வந்தடைந்தனர்.

வர்த்தினியின் வீட்டிற்கு முன் அழைப்பு மணியை அழுத்திய சிவாவின் மனக்கலக்கம் இவர்களை கதவு திறந்து வரவேற்ற மூர்த்தியின் முகத்தை கண்டு இன்னும் அதிகமாகியது. “மாமா அம்முவும், குட்டிம்மாவும் எங்கே?”, என்று சிவாக் கேட்டதற்கு “குட்டிம்மா இன்னும் தூங்குது மாப்ள. அம்மு எழுந்தாச்சு, உள்ளே வந்து பேசு”? என்று கூறிய மூர்த்தியை தொடர்ந்து உள் நுழைந்த மூவரும் சோஃபாவில் அமர்வதற்கும், வர்த்தினி அனைவருக்கும் காபி கொண்டு வரவும் சரியாக இருந்தது.

சிவாவின் கண்கள் வர்த்தினியின் முகத்தில் இருந்த இறுக்கத்தை கண்ட நொடியில் அளவில்லா வேதனையை பிரதிபலித்தன .”குட்டிம்மா எப்ப எழுந்துப்பாங்க அம்மு ?”,என்ற சிவாவின் கேள்விக்கு “இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் மாமா. நைட் தூங்குறப்ப ரொம்ப லேட் ஆயிடுச்சு”, என்று மரத்து போன குரலில் கூறிவிட்டு அங்கிருந்து நகரச் சென்ற வர்த்தினியை “அம்மு இங்க உட்கார். ஸ்ரீயும், மங்களாவும் சமையல் பார்த்துப்பாங்க”,என்ற மூர்த்தியின் குரல் அமைதியாக அமரச் செய்தது.

” மாப்ள குட்டிம்மாவோட கஸ்டடி கேஸ்க்கு அம்மு கோர்ட்க்கு போக வேண்டியதிருக்கு. நேத்து சாயங்காலம் வக்கீல் போன் பண்ணியிருந்தார். அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை கோர்ட்க்கு போகணும்”, என்று மூர்த்திக் கூறியதும் அதுவரை அமைதியாக இருந்த எழில் “அம்மு நீ இதுக்கா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வச்சிருக்க .நான் கூட யாராவது ஒருத்தன் மண்டையை உடைச்சிட்டு அம்மாகிட்டயும், அப்பாகிட்டயும் திட்டு வாங்கிருப்பனு நினைச்சேன்”, என்றுக் கூறி மூர்த்தியின் முறைப்புக்கு ஆளானான்.

எழில் பேசியதில் வர்த்தினியின் முகத்திலும் சிறிது மாற்றம் ஏற்பட்டதோடு “ஆம் இதற்காக ஏன் நான் கவலைப்பட வேண்டும்?”, என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது. இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சிவா “அம்மு நீ எதுவும் யோசிக்க வேண்டாம். நாங்க எல்லாம் உன்கூட இருக்கோம்”, என்றுக் கூறியதற்கு சரி என தலையாட்டியவள் “நான் அதுக்காக கவலைப்படல மாமா. புஜ்ஜும்மாவை கூட கூட்டிட்டு போனால் அவளுக்கு தேவை இல்லாத டிப்ரெசன். இந்த வயசுலேயே இதெல்லாம் அவ பார்க்கணுமே அப்படிங்கிற கவலைதான்”, என்று தன்னுடைய மன வருத்தத்தின் காரணத்தை கூறிய வர்த்தினியை பார்த்து புன்னகைப் புரிந்த சிவா “அம்மு குட்டிம்மாவை நான் பார்த்துக்குறேன். நீ மாமா, அத்தை கூட போய்ட்டு வா”, என்று மிக எளிதாக தீர்வைக் கூறினான்.

ஆனால் வர்த்தினியோ “இல்லை மாமா! அவ பெண் குழந்தை. நான் இந்த உலகத்துல எந்த ஆம்பளையையும் நம்பறதா இல்லை. அதுவுமில்லாம அவதான் என்னோட உயிர்”, என்று ஏதோ வேகத்தில் தன் மனதில் இருந்ததை உளறியதில் சிவாவின் காதல் கொண்ட நெஞ்சம் அவனது கண்களில் கடலளவு வேதனையை காட்டியது.

வர்த்தினி கூறியதை கேட்ட அனைவரும் அதிர்ந்த நிலையில் இருந்த பொழுது “ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மு நீ பேசுறதைக் கேக்குறப்ப. இதோ இந்த சிவா மேல நம்பிக்கை வச்சு உன்னோட அம்மாகிட்ட எனக்கு அம்முவை கல்யாணம் பண்ணித்தாங்க அத்தை. நான் அவளை லவ் பண்றேன்னு இவன் கேட்டப்ப உங்கம்மா இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னிக்கு இந்த நிலைமை உனக்கு வந்திருக்காது. நீ பிறந்த நிமிசத்துல இருந்து உன்னை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்குற இவனுக்கு இதை விட வேற அவமானம் இல்லை. இதோ இப்ப கூட அவனோட வாழ்க்கையே நீயும், குட்டிம்மாவும் மட்டும்தான் அதைப் புரிஞ்சுக்கோ”, என்று சிவாவின் வேதனையை கண் கொண்டு காண இயலாமல் அவனது காதலை, காத்திருத்தலை மிகவும் எளிதாக எழில் தன்னுடைய ஆவேசத்தில் கூறி இருந்தான்.
எழில் பேசியதை உள்வாங்கிய வர்த்தினியால் தன்னுடைய செவித்திறனையே நம்ப முடியவில்லை. “நண்டு மாமா எழில் அண்ணா சொல்றது நிஜமா?”, என்று வர்த்தினி சிவாவை நோக்கிக் கேட்டதில் “டேய் கிளம்புடா! இவ உன்னை எல்லாம் நம்ப மாட்டா”, என்று எழில் கூறியதையும் காதில் வாங்காத சிவா அந்த நொடியில் தன் அம்மு பேசிய வார்த்தைகளின் வீரியத்தில் இருந்து மீண்டவன் நன்றாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு “ஆமாம்”, என்று மிகவும் தெளிவாகக் கூறினான்.

அதிலேயே அங்கிருந்தோர்க்கு புரிந்து விட்டது இனி சிவா பார்த்துக் கொள்வான் என்று. வர்த்தினியிடம் பதில் கூறிவிட்டு எழிலை நோக்கி திரும்பிய சிவா “என்னோட பொண்ணை நான் பார்த்துகிறதுக்கு உன் தங்கச்சி கிட்ட நான் பெர்மிஷன் கேட்கலை. இன்போர்மஷன் தான், நீ இதுக்காக எல்லாம் டென்ஷன் ஆகாம அத்தை சமைச்சுட்டாங்களானு பாரு”, என்று மிகவும் கேசுவலாக கூறிவிட்டு வர்த்தினியை நோக்கி “உனக்கு ஏதாவது கேட்கணும்னா என் பொண்ணு எழுந்துக்குறதுக்கு முன்னாடியே கேளு. என் செல்லம் எழுந்ததும் நாங்க ஷாப்பிங் போகணும்:, என்றுக் கூறியதில் வர்த்தினியின் ஆத்திரம் அளவுக்கதிகமானது.

” நீ எப்ப அம்மாகிட்ட பேசுன?”, என்ற வர்த்தினியின் கேள்விக்கு ஒரு விரக்தியான புன்னகையை அளித்த சிவா “நீ படிச்சு முடிச்சதும் அம்மாக்கு கொஞ்சம் சீரியசா இருந்துச்சு. அதனால நானே வந்து பொண்ணு கேட்டேன். சாதி விட்டு சாதியெல்லாம் கல்யாணம் பண்ணி தர முடியாதுனு சொல்லிட்டாங்க .அதோட அம்மாவுக்கும் போன் பண்ணி பேசிருக்காங்க”, என்று மிகவும் எளிதாகக் கூறிவிட்டு அமைதியாகிவிட்டான்.

வர்த்தினியால் தன்னுடைய அம்மாவா இப்படி எல்லாம் பேசியது என்பதை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதைவிட சிவாவின் காதல் அளவுக்கதிகமான மன உளைச்சலைக் கொடுத்ததோடு அல்லாமல், தன்னிடம் காதலைக் கூறாமல் தன்னுடைய அம்மாவிடம் கூறிய சிவாவின் மேல் கட்டுக்கடங்காத கோபத்தையும் ஏற்படுத்தியது.

வர்த்தினி தன்னுடைய கோபத்தை கொட்ட வாய் திறப்பதற்கும் “அம்பா” என்று ஆஷிர்யா வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. எழுந்ததும் தன்னை மட்டுமே தேடி வரும் மகள் இன்று சிவாவை பார்த்தவுடன் தன்னை மறந்ததும் வர்த்தினியின் சிவா மீதான கோபத்தை கொழுந்து விட்டெரியச் செய்தது.

” ஆஷிமா குட் மார்னிங் செல்லம், சாரி டா நேத்து அம்பாக்கு நிறைய வேலை, அதனால தான் வர முடியல”, என்று ஆஷிர்யாவிடம் அவள் கேட்கும் முன்பே காரணம் கூறிய சிவாவை “ஐ மிஸ் யூ அம்பா!”, என்றுக் கூறி சிவாவின் கழுத்தைக் கட்டிக் கொண்ட ஆஷிர்யாவின் குரலில் இருந்த ஏக்கம் கேட்போரை கண்கலங்கச் செய்தது.

தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை தூக்க கூடாது என்றுக் கூறிய ஆஷிர்யா இன்று தானாகவே வந்து தன்னைக் கட்டிக் கொண்டதில் சிவாவின் மனதில் வர்த்தினி பேசியதால் ஏற்பட்ட வேதனை பனித்துளியாக கரைந்து போனது.

” மீ டூ செல்லம்! நீங்க இப்ப பாட்டி கிட்ட போய் குளிச்சுட்டு வாங்க. நாம ஷாப்பிங் போய்ட்டு வந்து டெல்லிக்கு போக பேக் பண்ணுவோம்”, என்று சிவாக் கூறியதும் “நாம எல்லாம் ஒரே வீட்டுல இருக்கப் போறோமா அம்பா?”, என ஆஷிர்யா கேட்டதும் சிவாவின் பார்வை வர்த்தினியை நோக்கியதோடு இல்லாமல் “ஆமாம் செல்லம்”, என்று பதில் கூறியது.

ஆஷிர்யா மங்களாம்மாவுடன் சென்றதும் “அம்மு இவ்ளோ நாள் உன்னோட இஷ்டத்துக்கு தனியா இருந்த இனிமே நீயே நினைச்சாலும் தனியா இருக்க முடியாது. உங்க மூணு பேருக்கும் டிக்கெட் போட்டுடுறேன். என் பொண்ணு என்கூடதான் இருப்பா. நீ வந்ததும் நம்ம மேரேஜ் அதையும் ஞாபகம் வச்சுக்கோ. வேற எதாவது கோபப்பட்டு கத்துறது, அடிக்கிறது எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அடுத்து நம்ம வீட்டுல வச்சுக்கலாம். இப்ப எதையும் யோசிக்காம மாமாவை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம்னு மட்டும் யோசி”, என்று வர்த்தினியிடம் கூறிவிட்டு எழிலின் அருகில் வந்தமர்ந்தவன் “மச்சான் நீ ஒன் வீக் லீவ் போட்டுடு. என் பொண்ணுக்கு பொழுது போகலைனா உன்னை வச்சுத்தான் நாங்க என்டேர்டைன் பண்ணனும்”, என்று தன்னுடைய பிளானை கூறி எழிலை பீதி அடையச் செய்து கொண்டிருந்தான்.

இவை அனைத்தையும் பார்த்த வர்த்தினிக்கு இதில் தன்னால் எதுவுமே செய்ய இயலாதவாறு சிவா செய்து விடுவான் என்பது நன்கு புரிந்தது. வர்த்தினியின் அமைதியான ஆத்திரம் அன்பை பொழியுமா? அடிதடியாகுமா? என்பது சிவாவின் சிற்றிதயம் மட்டுமே! அறியுமோ!
காரிகையின்
கலைந்த
கனவுகள்
காவலனவனின்
காதலில்
கை சேர்ந்திடுமோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *