Categories
Uncategorized

உயிரில் உறைந்த நேசம்-16

Free Download WordPress Themes and plugins.

உயிரில் உறைந்த நேசம்-16

ஆஷிர்யா கிளம்பி வந்தவுடன் “புஜ்ஜுமா மம்மாகிட்ட சொல்லிட்டு வாங்க, நாம ஷாப்பிங் போய்ட்டு வரலாம்”, என்று சிவாக் கூறியதும் “மம்மா நான் அம்பா கூட ஷாப்பிங் போயிட்டு வரேன்”, என தன் முகத்தை பார்த்து மலர்ச்சியுடன் கூறிய ஆஷிர்யாவிடம் சரி என்பதை தவிர வேறு பதில் கூற வர்த்தினியால் இயலவில்லை.

சிவா ஆஷிர்யாவுடன், எழிலையும் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டான். மூவரும் வெளியில் சென்ற பின்னும் வர்த்தினி தான் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஸ்ரீநிதி வந்து “அம்மு வா சாப்பிடலாம்”, என்று அழைத்த பின்தான் ஆஷிர்யா எதுவும் உண்ணவில்லை என்பதே ஞாபகத்திற்கு வந்தது.

” அண்ணி புஜ்ஜுமா எதுவும் சாப்பிடலையே!”, என்ற வர்த்தினியின் பரிதவிப்புடன் கூடிய குரலுக்கு “அம்மு சிவாக்கு அவனோட பொண்ணை பார்த்துக்க தெரியும். நீ அவன் மேல கொஞ்சம் நம்பிக்கை வை. இப்ப வந்து நீ சாப்பிட்டு முடிச்சுட்டு அந்த வக்கீலுக்கு போன் பண்ணி நாம என்ன டாக்குமெண்ட்ஸ் கொண்டு வரணும்னு கேட்டுட்டு அதெல்லாம் எடுத்து வை”, என்று மூர்த்தி சற்று அதட்டலாகக் கூறியதில் அமைதியாக தன்னுடைய உணவை முடித்தாள்.

வர்த்தினி சாப்பிட்டு முடித்ததும் மூர்த்தி கூறியபடி வக்கீலை அழைத்து கொண்டு செல்ல வேண்டியவற்றை கேட்டு தெரிந்து கொண்டதுடன் அவற்றை எடுத்து வைக்க அறையினுள் சென்று விட்டாள். வர்த்தினியின் தலை மறைந்த அடுத்த நொடியில் மங்களாம்மா மூர்த்தியை பிலு பிலுவென பிடித்து கொண்டார்.

” என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? ஆளாளுக்கு என் பொண்ணை அரட்டுறீங்க. அவளே ஏகப்பட்ட கவலையில் இருக்கா. உங்களுக்கும், உங்க மருமகனுக்கும் இது வீடுன்னு ஞாபகம் இருக்கட்டும். உங்க அருமை எருமையும் இன்னிக்கு அதிகமாகவே சவுண்ட் விடுறான்”, என்று மூர்த்தியிடம் கூறியவர் ஸ்ரீநிதியின் பக்கம் திரும்பி “உன் புருஷன் இனி என் பொண்ணை ஏதாவது சொன்னான் சோத்துல பேதிமருந்தை கலந்துடுவேன்னு சொல்லு”, என்று சொல்லிவிட்டு வர்த்தினியை சமாதானப்படுத்த கிளம்பியவரை மூர்த்தி “மங்களா கீழ வரைக்கும் நாம போய்ட்டு வரலாம். ஸ்ரீநிதி வர்த்தினி கூட இருப்பா”, என வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

கீழே வந்தவுடன் மங்களாம்மா பேச ஆரம்பிக்கும் முன்பே மூர்த்தி “மங்களா உனக்கு அம்முவை சிவாக்கு கல்யாணம் பண்ணி வைக்குற எண்ணம் இருந்துச்சுன்னா நாங்க பேசுறதை கண்டுக்காத. அம்முக்கு இன்னிக்கு சிவா பேசுனது அதிர்ச்சியெல்லாம் இல்லை. அதையும் தாண்டி வேற ஏதோ கோபம் இருக்கு. அதனாலதான் இப்படி அமைதியா இருக்கா”, என்று பேசி முடித்துவிட்டார்.

காரில் சென்று கொண்டிருந்த ஆஷிர்யாவின் ஆனந்தத்தை அளவிட முடியாத அளவிற்கு இருந்தது. மூவரும் கீழிறங்கி வந்ததும் காரின் அருகே சென்றதும் “அம்பா நாம கார்லயா போகப்போறோம்?”, என்று சிவாவிடம் கேட்ட ஆஷிர்யாவின் குரலில் இருந்த மகிழ்ச்சியை கண்ட எழில் கூட “ஹேய் சில்வண்டு! கார்ல போறதுக்கு ஏன் நீ இந்த அளவுக்கு எக்ஸ்பிரஷன் காட்டுற?”, என்று நக்கலாக கேட்டான். “டேய்” என்று சிவா அதட்டும்பொழுதே “அச்சோ எலி மாமா நான் இதுவரைக்கும் கார்ல போனதே இல்லை. மம்மா கூட ஆக்டீவால தான் போயிருக்கேன். அதுவும் மம்மா ரொம்ப ஸ்லோவாதான் கூட்டிட்டு போவாங்க”, என்று ஆஷிர்யா கூறியதைக் கேட்ட இருவருக்கும் மனம் கனத்து போனது.

ஆஷிர்யா கூறியது என்னவோ குழந்தைக்குரிய குதூகலத்துடன்தான் கூறினாள். ஆனால் அதனைக் கேட்ட சிவாவிற்கு தான் குற்ற உணர்ச்சி குன்றாக உயர்ந்துவிட்டது.

சிவாவின் முகவாட்டத்தை கண்ட எழில் “மாப்ள உன் பொண்ணு செம உஷார். அதனால உன்னோட சிவாஜி எக்ஸ்பிரசன் எல்லாம் என்னோட தங்கச்சி உன்னை அடி வெளுப்பா அப்போதைக்கு காமிச்சுக்கோ”, என்றுக் கூறி சிவாவின் மனதை திசை திருப்பிவிட்டான்.

அதில் தெளிந்த சிவா” என்னோட புஜ்ஜுமா இனிமே கார், பைக் ரெண்டுலயும் அம்பா கூட அடிக்கடி போகலாம்”, என்றுக் கூறி ஆஷிர்யாவை முன் சீட்டில் அமரவைத்து பெல்ட் மாட்டிவிட்டு டிரைவர் இருக்கையில் வந்து அமர்ந்து காரை கிளப்பியவன் மனதில் அப்பொழுதே வர்த்தினியையும் ஆஷிர்யாவையும் தன்னுடன் அழைத்து செல்லும் வெறி ஏற்பட்டது.

ஆஷிர்யாவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆம்பியன்ஸ் மாலுக்கு நேராக காரை செலுத்திய சிவா ஆஷிர்யாவின் பக்கம் திரும்பி “புஜ்ஜுமா உங்களுக்கு என்ன பிடிச்சாலும் அம்பாகிட்ட உடனே சொல்லிடனும். நான், எலி மாமா, தாத்தா, பாட்டி வாங்கி தந்தா மம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க”, என்றுக் கூறியே மாலினுள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த கடைகளில் ஆஷிர்யாவிற்கும், வர்த்தினிக்கும் தேவையானவற்றை வாங்கி முடித்து பில் போடுவதற்காக காத்திருந்த வேளையில் எழில் மெதுவாக சிவாவின் கையை சுரண்டி கொண்டிருந்தான்.

” டேய் எருமை இப்ப எதுக்கு சொறிஞ்சு விடுற? புஜ்ஜும்மா சாப்பிட்டதுல கொஞ்சம் பாப்கார்ன் மிச்சம் இருக்கு. அதை வீட்டுக்கு போறப்ப தாறேன். அது வரைக்கும் எந்த சேட்டையும் செய்யாம இரு”, என்ற சிவாவின் மிரட்டலில் எழில் தன்னுடைய தலையிலேயே அடித்துக் கொண்டான்.

மாப்ள அந்த அடிதடி அரங்கநாயகிக்கும், இந்த சிலுப்பி சில்வண்டுக்கும், ஏன் ஸ்ரீக்கும் கூட வாங்கி குவிச்சியே! நீ பிறந்ததுல இருந்து உன்னோட பீடிங் பாட்டிலை பிடுங்கி குடிச்சு, பால்வடியும் முகத்தோட இருக்குற பச்சமண்ணு உன் ப்ரண்டுக்கு ஒரு சாதாரண பைஜாமா கூட வாங்கி தர தோணலையே?”, என்று வராத கண்ணீரை சுrண்டி விட்டுக்கொண்டே பக்கம் பக்கமாக டயலாக் பேசிய எழிலை சிவா அடக்கும் முன்னே “எலி மாமா நீங்க அம்பாவோட பாலை பிடுங்கி குடிசீங்களா?”, என்று ஆஷிர்யா ஒரு வித முறைப்புடன் கேட்டாள்.

“எஸ் சில்வண்டு! பால் மட்டுமா? பெரும்பாலும் இவனோட சாப்பாட்டையும் நான்தான் காலி பண்ணுவேன்”, என்று மிகவும் பெருமையாகக் கூறிய எழில் ஆஷிர்யா தனக்கு ஆப்படிக்கப் போவதை அந்த நொடியில் உணரவில்லை.

ஷாப்பிங் முடித்துவிட்டு மேலும் சிறிது நேரம் மாலினுள்ளேயே சுற்றிவிட்டு மூவரும் வீட்டை அடைந்த பொழுது மதிய உணவிற்கான நேரம் நெருங்கியிருந்தது.

வீட்டினுள் நுழைந்ததும் ஆஷிர்யா நேராக வர்த்தினியிடம் சென்று இடுப்பை கட்டிக் கொண்டு “மம்மா நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். இன்னிக்கு அம்பா என்னை தூக்கி வச்சுக்கிட்டே மால் புல்லா சுத்துனாங்க .எனக்கும், உங்களுக்கும் நிறைய ஷாப்பிங் பண்ணுனோம்”, என்று தன்னுடைய சந்தோசத்தை கண்கள் மின்னக் கூறிய பொழுது சிவாவின் கூரிய விழிகள் வர்த்தினியின் உணர்வை கணக்கெடுக்கும் வேலையை கனகச்சிதமாக செய்து கொண்டிருந்தன.

ஆனால் உன்னை விட நான் எமகாதகி என்பது போல் வர்த்தினி ஒரு புன்னகையை தவிர வேறு எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. சிவா வர்த்தினியின் முகபாவனையை கண்ட எழில் தான் “இதுக்கு மேல இருந்தா சாப்பாடு போடாமலே விரட்டிடுவா இந்த அம்மு. அதுக்கு முன்னாடி சாப்பாடு கேட்டுடனும்” என்று எண்ணிக்கொண்டு “என்னை பெத்த தாயே! உன் பேத்திக்கு பசிக்குமே? அதனால சாப்பாடு எடுத்து வைமா. அப்படியே எல்லோருக்கும் எடுத்து வச்சுட்டா உனக்கும் வேலை முடிஞ்சிடும்”, என்றுக் கூறி தன்னுடைய தலையாய கடமையை செய்ய ஆயத்தப்படுத்திக் கொண்டான்.

அனைவரும் சாப்பிட அமர்ந்த பின் தங்களுக்கு தேவையானவற்றை பரிமாறிக் கொண்டனர். திடீரென வர்த்தினிக்கும், சிவாவிற்கும் இடையில் அமர்ந்திருந்த ஆஷிர்யா “அம்பா நீங்க மம்மா பக்கத்துல உக்கார்ந்துக்கோங்க”, என்று கூறிவிட்டு சிவாவிற்கும், எழிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் வந்தமர்ந்ததோடு இல்லாமல் எழிலை நோக்கி “என் அம்பா சாப்பாடை இனிமே நீங்க எடுத்து சாப்பிட்டா தாத்தாகிட்ட சொல்லி உங்களை சியாச்சென் பார்டர்ல போட்டுட்டு வர சொல்லிடுவேன்”, என்று மிரட்டிவிட்டு மூர்த்தியை நோக்கி “தாத்தா போட்டுடலாம்தானே?”, என்று வேறு கேட்டுவைத்தாள்.

” கண்டிப்பா குட்டிம்மா”, என்று மூர்த்தி கூறியதில் இதுக்கு மேலும் இங்கே இருக்கணுமா என்று எழில் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். சிவாவிற்கு ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவில்லை. அவனது சந்தோசத்திற்கான காரணத்தை அறிந்த எழில் “அம்மு உன் பொண்ணு உன்னைவிட பத்து மடங்கு பெரிய ரௌடியா வருவா. ரௌடி குடும்பம் ரொம்ப நல்லா இருங்க”, என்று வாழ்த்திவிட்டு தன்னுடைய சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்துவிட்டான்.

சாப்பாட்டிற்கு பின் ஆஷிர்யா உறங்க சென்றதும் “வக்கீல் சொன்னது எல்லாம் எடுத்துகிட்டியா வதும்மா?”, என்ற சிவாவின் கேள்விக்கு “எடுத்துக்கிட்டேன்”, என்று கூறிய வர்த்தினியின் குரலில் இருந்த கலக்கம் புரிந்து தன்னுடைய தோளில் அவளை சாய்த்து கொண்டு “நீ எதுக்கும் கவலைப்படாதே. மாமா கூடவே இருப்பாங்க, நீங்க எல்லோரும் நாளைக்கு டெல்லிக்கு வந்துடுங்க. நான் நாளைக்கு வர முடியாது அதனால எழில் வருவான் .நான் இருக்கேன் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்”, என்று கூறிய சிவாவின் இறுதி வார்த்தைகளில் தலையை விலுக்கென்று நிமிர்ந்து நோக்கிய வர்த்தினியின் பார்வையின் அர்த்தம் சிவாவிற்கு சுத்தமாக புரியவில்லை.

” ஓகே! நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்குறேன் “,என்று கூறிவிட்டு வர்த்தினி எழுந்ததும் “நாங்களும் கிளம்புறோம், புஜ்ஜுமா எழுந்ததும் கால் பண்ணு”, என மூவரும் டெல்லிக்கு கிளம்பிவிட்டனர்.

மறுநாள் வேலை முடித்து வந்தவுடன் குர்கானுக்கு கிளம்பி வந்த எழிலுக்கே ஆஷிர்யாவின் குதூகலத்தை பார்த்து கண்கள் கலங்கிவிட்டன. குர்கானை தாண்டி எங்கும் சென்றிடாத ஆஷிர்யாவிற்கு இன்றைய டெல்லி பயணமும் ,அதனை அடுத்து ஒரு வார காலத்திற்கு சிவாவுடன் தங்கி ஊர் சுற்ற போவதும் மிகவும் பெரிய விஷயமாகவே தெரிந்தது.

அந்த மகிழ்ச்சியை தன்னுடைய பேச்சின் மூலமாகவும், செயல்கள் மூலமாகவும், டெல்லி வந்து சேரும்வரை எழிலுடன் வம்பிழுத்துக் கொண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். எழில் தன் வீட்டிற்கு முன் வந்து காரை நிறுத்துவதற்கும் சிவா வந்து சேரவும் சரியாக இருந்தது .

வீட்டிற்குள் வந்த பின்பும் வர்த்தினி அமைதியாகவே காணப்பட்டாள்.” என்ன ஆச்சு அம்மு ஏன் இப்படி இருக்க?”, என்ற மங்களம்மாவின் கேள்விக்கு “நான் இன்னும் புஜ்ஜுமாகிட்ட என்ன காரணத்துக்காக ஊருக்கு போறேன்னு சொல்லலைமா”, என்று வர்த்தினி பதில் கூறி கொண்டிருக்கும் பொழுதே ஆஷிர்யா அவளது மடியில் வந்து அமர்ந்துகொண்டாள்.

அதோடு மட்டுமல்லாமல் “மம்மா நீங்க ஊருக்கு ஏன் போறீங்கன்னு எனக்கு தெரியும் .நீங்க இப்ப கோர்ட்க்கு போனால்தான் நான் உங்க கூடவே இருக்க முடியும். சோ நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க .நான் அம்பா கூட சமத்தா இருக்கேன்”, என்று கூறி வர்த்தினிக்கு அதிர்ச்சியை அளித்தாள்.

“புஜ்ஜு உனக்கு எப்படி தெரியும்?”, என்ற வர்த்தினிக்கு பதிலாக “அம்பா மாலுக்கு கூட்டிட்டு போனப்ப சொன்னாங்க”, என்று ஆஷிர்யா கூறியதிலேயே புரிந்தது சிவா அன்று வெளியே அழைத்து சென்றதன் காரணம்.

” சரி நேரமாகிடுச்சு எல்லோரும் தூங்குங்க. சிவா நீ மேல இருக்குற ரூமில் போய் படுத்துக்கோ!”, என்றுக் கூறிவிட்டு மூர்த்தி மற்றவர்களிடமும் கண்ணை காட்டிவிட்டு நகர்ந்துவிட்டார்.

ஆஷிர்யாவுடன் அமர்ந்திருந்த வர்த்தினியின் அருகில் வந்தமர்ந்த சிவா ஆஷிர்யாவை தூக்கி தன்னுடைய மடியில் இடப்பக்கம் அமர்த்திக்கொண்டவன் வர்த்தினியின் தலையை பிடித்து தன்னுடைய மடியில் சாய்த்து கொண்டு தலையை மெதுவாக தடவிகொடுக்க ஆரம்பித்துவிட்டான்.

ஆஷிர்யா உறங்கியதால் மெதுவான குரலில் “அம்மு எல்லாம் நன்மைக்கே! இப்ப இந்த கேஸ் முடியலைன்னா காலத்துக்கும் அவன் இதை வச்சு ஏதாவது பிரச்சினை செய்வானோனு ஒரு பயமிருக்கும். இது இதோட முடிஞ்சா நம்ம புஜ்ஜுமாக்கும் அந்த கொடுமையான ஞாபகங்கள் எதுவும் இல்லாமலே போயிடும். நீ உன்னோட பயத்தை, கலக்கத்தை கொஞ்சமா காட்டினாலும் அது அவனுக்கு பலமாயிடும். நம்ம பலவீனம் எதிரிக்கு எப்பவும் தெரிய கூடாது .உனக்கு துணைக்கு நாங்க எல்லோரும் கூடவே இருக்கோம். புஜ்ஜுமாவை நான் என்னோட உயிரா பார்த்துப்பேன். என் மேல கொஞ்சம் நம்பிக்கை வைடி”, என்று சிவா கூறிக்கொண்டிருக்கும்பொழுதே “சரி மாமா”, என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு வர்த்தினி உறங்கிவிட்டாள்.

தன்னுடைய இரு தேவதைகளும் மடியை மெத்தையாக்கி உறங்கிக் கொண்டிருந்ததை கண்ட சிவாவிற்கு வாழ்வு முழுமை பெற்றதாகவே தோன்றியது.

விடிந்ததும் எழுந்து ஹாலுக்கு வந்த நால்வரின் கண்களுக்கும் வர்த்தினியையும், ஆஷிர்யாவையும் மடியில் தாங்கிய நிலையில் அமர்ந்தவாறே உறங்கிக்கொண்டிருந்த சிவாவை கண்டதும் அந்த காட்சி கவிதையாகவே தோன்றியது.

சிறு சத்தத்திற்கும் விழிப்புடன் இருந்து பழகிய சிவா இவர்களின் காலடி ஓசையில் உடனடியாக விழித்துவிட்டான் .ஆனால் அசந்து உறங்கிய அம்மாவும், மகளும் அவனை அசைய விடாதவாறு படுத்திருந்தனர்.

” வதும்மா எழுந்துக்கோங்க இப்ப கிளம்ப ஆரம்பிச்சாதான் பிளைட்க்கு கரெக்ட் டைம்க்கு போக முடியும் “,என்று ஒருவாறு கெஞ்சி வர்த்தினியை எழுப்பி அவள் சென்றதும் ஆசுவாசமாக மூச்சு விட்ட சிவாவின் முன்பு கைகளை கட்டியபடி எழில் முறைத்து கொண்டிருந்தான்.

” டேய் இந்த மாதிரி முறைச்சா என் பொண்ணுகிட்ட சொல்லி உன்னை ஏதாவது பார்டர்ல போய் விட்டுடுவேன் போ போய் வேலையை பாரு”, என்று எழிலை விரட்டிய சிவா தன் செல்ல பொண்ணை எழுப்பி அவனே தயார் செய்தான்.

அனைவரும் கிளம்பி ஏர்போர்ட் செல்லும் நேரத்தில் எழில் வர்த்தினியிடம் “அம்மு குட்டிம்மாவை பத்திரமா பார்த்துக்க அந்த தடி தாண்டவராயன்கிட்ட சொல்லிட்டு போ”, என்று மிகவும் சின்சியராக சொல்லி சிவாவின் உச்சபட்ச கடுப்பிற்கு ஆளானான்.

” என்னைவிட நந்து மாமா புஜ்ஜுமாவை தன்னோட உயிரா பார்த்துப்பாங்க. யாராவது உங்க உயிர் பத்திரம்னு அவங்ககிட்டேயே சொல்வாங்களா?”, என்று கூறி வர்த்தினி சிவாவின் மேல் தன்னுடைய நம்பிக்கையின் அளவை உணர்த்திவிட்டாள். வர்த்தினியின் வழக்கு வெற்றியுடன் வாழ்க்கையும் வென்றிடும் என்ற எண்ணமே அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசத்தை உண்டாக்கியது.
உதிரம் சேரா
உறவின்
உள்ளமதில்
உதித்த
உணர்வின்
உத்திரவாதம்
உயிரில்
உறைந்த நேசத்தில்
உரமேற்றியதோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *